ஆசைப்பட்டு வாங்கிய புத்தகங்களில் சில ஒரு சில மென்மையானப் புரட்டல்களுக்கப்புறம் அலமாரியில் பத்திரமாக உறங்குகின்றன. இவையிவை நல்லவை என்று நண்பர்கள் பரிந்துரைக்கும் போது ஆர்வ மிகுதியில் அதன் மேல் காதல் பெருகி சட்டென்று ஃப்ளிப்கார்ட்டுக்குள் புகுந்து பட்டனைத் தட்டி ஆர்டர் செய்துவிடுவது இப்போதெல்லாம் வழக்கமாகிவிட்டது. இதுவரை வாங்கியதெல்லாவற்றையும் முழுசாகப் படிக்காமல் புதுசு புதுசாக புத்தகம் வாங்கும் போது ஒரு வித குற்ற உணர்ச்சி மேலெழுந்து வரும். இனி கையிலிருப்பதைப் படிக்காமல் வாங்கக்கூடாது என்கிற சபதம் குடிகாரன் பேச்சுப் போல இருக்கக்கூடாது என்று வைராக்கியமாக இருந்தாலும் அதுவும் நீண்ட நாட்கள் நிலைப்பதில்லை.
ஒரு மாதம்
முன்பு அலுவல் சம்பந்தமாக டாட்டா கம்யூனிகேஷன்ஸுக்குச் செல்லும்போது
அம்பத்தூர்-ஆவடி சிக்னலில் ரைட் எடுத்ததும் புஸ்தக நெடி பலமாக அடித்தது.
வலதுபுறத்தில் புழுதிப் புகைக்கிடையில் NCBH ன் அச்சுக்கூடமும்
விற்பனைக்கூடமும் சேர்ந்திருந்தது. நா.வானமாமலைப் பற்றிச் சென்ற வாரத்தில்
ஒரு நாள் புத்தகப்பேச்சில் கார்த்தி மிகவும் சிலாகித்துக்கொண்டிருந்தார்.
NCBH தான் வானமாமலையின் பெருவாரியான புத்தகங்களுக்குப் பதிப்பாளர்கள்
என்றும் சொன்னார். சென்ற சனிக்கிழமை அலுவலகத்திலிருந்து சீக்கிரம்
மூட்டையைக் கட்டிவிட்டு NCBH-சிற்கு விஜயம் செய்தேன். ஒரு மணிநேரம் தீராத
ஆசையில் மொய்க்கும் வண்டாய் சுற்றிச் சுற்றி வந்து கீழ்கண்ட புத்தகங்களைச்
சொந்தமாக்கிக் கொண்டேன்.
- இக்கால இலக்கியம் - நா.வா நூல் தொகுப்பு - என்சிபிஹெச்
- உணர்வுகள் சிந்தனைகள் - கட்டுரைத் தொகுதி - நீல பத்மநாபன் - என்சிபிஹெச்
- வரலாறும் வக்கிரங்களும் - டாக்டர் ரொமீலா தாப்பர் தமிழில் நா.வானமாமலை - என்சிபிஹெச்
- தமிழர் வரலாறும் பண்பாடும் - நா.வானமாமலை - என்சிபிஹெச்
- பழங்கதைகளும் பழமொழிகளும் - நா.வானமாமலை - என்சிபிஹெச்
- கம்பரும் ஷேக்ஸ்பியரும் - பேரா. கி. நடராசன் - பாவை பப்ளிகேஷன்ஸ்
- பிசிராந்தையார் - நாடகம் - பாரதிதாசன் - பாவை பப்ளிகேஷன்ஸ்
- காகிதத்தின் கதை - நா.வானமாமலை - என்சிபிஹெச்
- ரப்பரின் கதை - நா.வானமாமலை - என்சிபிஹெச்
- இரும்பின் கதை - நா.வானமாமலை - என்சிபிஹெச்
- தமிழர் நாட்டுப் பாடல்கள் - நா.வானமாமலை - என்சிபிஹெச்
சரியாக அச்சாகியிருக்கிறதா என்று வீட்டிற்கு வந்து ஒரு முறை ப்ரௌஸ் செய்தபோது கிடைத்த சில தகவல்கள் கீழே....
இசை
ரசனை இல்லாத மாந்தர்கள், கொம்பும் வாலும் இல்லாத மிருகங்களுக்குச் சமம்
என்று பர்த்ரு ஹரி கூறுகிறார் - “உணர்வுகள் சிந்தனைகள்”- நீல பத்மநாபன்.
கன்னனுக்குப் பிறகு கொடையில்லை கம்பனுக்கு பிறகு கவிதையில்லை என்று பாரதி பாடினான் - “கம்பரும் ஷேக்ஸ்பியரும்” - பேரா. கி. நடராசன்
யானை தெருக்குப்பைகளை வாரிக்கொண்டிருக்கிறது - (அக்காலத்தில் யானை குப்பை வாரியிருக்கிறது போலும்) - ”பிசிராந்தையார்” - பாரதிதாசன்
ரப்பரின்
கதை - பசங்களை உட்கார்த்தி வைத்து தாத்தா கதை சொல்வது போல
எழுதப்பட்டிருப்பது குழந்தைகளை ஈர்க்கும். சுவாரஸ்யமாக சொல்லியிருக்கிறார்
வானமாமலை.
இவையன்றி ஞாயிறு கையிலங்கிரி கபாலிக்கு அருகில் இருக்கும் கிரி ட்ரேடிங்கில் இரண்டு புஸ்தகங்கள் வாங்கினேன்.
1. ஜெயகாந்தன் முத்திரைக் கதைகள் - கவிதா பப்ளிகேஷன்
2. கம்பன் கவிநயம் - வாரியார் ஸ்வாமிகள் - குகஸ்ரீ வாரியார் பதிப்பகம்.
இந்த
மாதக் கணையாழியில்(ஜூலை’12) அசோகமித்திரனின் கட்டுரையைப் படித்தபின்னர்
இந்தப் ”புத்தகம் வாங்கிப் படிக்கா”க் கலக்கம் அறவே தீர்ந்தது. இத்தாலிய
எழுத்தாளரான ஆல்பர்ட்டோ மொராவியாவின் டூவிமன் நாவலை ஐம்பது ஆண்டுகளுக்கு
முன்னர் வாங்கி இந்த ஜுன் 2012ல் படித்ததாக எழுதியிருக்கிறார் அசோகமித்ரன்.
இக்கலியில் என் கலக்கம் தீர்த்த அவர் வாழ்க!
#வீட்டம்மாவிற்கு
அசோகமித்திரனின் இந்தக் கட்டுரையைக் கண்ணில் காட்டியே இன்னும் கொஞ்சம்
புத்தகம் வாங்கலாம். நேரம் கிடைக்கும் போது படிக்கலாம். ரசிக்கலாம்.
கொண்டாடலாம்.
பட உதவி: lifehack.org
பட உதவி: lifehack.org