Tuesday, April 30, 2013

குருவி ராமேஸ்வரம்


மன்னை தேரடியில் ராஜகோபாலனுடைய விண்ணை முட்டும் கஜப்ரஷ்ட விமானத்தைப் பார்த்து கன்னத்தில் போட்டுக்கொண்டு அக்கணமே அதில் சம்பாதித்த கோடி புண்ணியத்தையும் சட்டைப் பாக்கெட்டில் சாய்த்துக்கொண்டு திருவாரூர் பக்கம் என் டிஸயரைச் செலுத்தினேன். திருவாரூர் தாண்டியிருக்கும் இரண்டு மூன்று சிவத் தலங்களை தரிசிப்பதாக சிவன் போக்கில் சித்தத்தை வைத்தேன். வழியில் கூத்தாநல்லூரில் நான் ஆடிய கிரிக்கெட் டோர்ணமெண்டுகளையும் மட்டையடி நண்பர்களைப் பற்றியும் அது ஏன் குட்டி சிங்கப்பூர் என்று அழைக்கப்படுகிறது என்றெல்லாம் என் மகள்களுக்கு பிரஸ்தாபித்து ரம்பம் போட்டபடியே ஆரூரை அடைந்தேன். வாய்மூடா பேச்சுக்கிடையில் நிறைய “அந்தக் காலத்துல...” சொல்லிவிட்டோமோ என்று சற்றே விசனப்பட்டேன். நிறைய இடங்கள் தரிசாகவும் சில இடங்களில் கல் ஊன்றி ‘நகர்’களாகவும் உருமாறியிருந்தது.

திருவாரூரை நெருங்கும் சமயத்தில் ஆரூரின் அருமை பெருமைகளைப் புரிய வைக்க சில ஆன்மீக ஜல்லியடித்தேன். அந்த ஜல்லியின் சாராம்சம் பின்வருமாறு. ” ’அண்ணாமலையாரே’ன்னு திருவண்ணாமலையை நினைச்சுண்டாலே முக்தி; திருவாரூர்ல பொறக்கணும். அப்பதான் முக்தி; உருண்டு பெரண்டானும் காசிக்குப் போய் பிராணனை விட்டா அது முக்தி. அதாவது காசியில செத்துப்போனா முக்தி”. இதில நினைச்சுக்கறதும் உசுரைக் கையில பிடிச்சுண்டு போய் காசியில ஹரிச்சந்திரா காட்ல எரியறதுக்காக உட்கார்ந்துகரத்துக்கும் சான்ஸஸ் இருக்கு. ஆனா, இன்னாரின்னார் வயித்துல இந்த இடத்துல பொறக்கணும்னுங்கிறது நம்ம கையில கிடையாது. அதுக்கு பகவான் மனசு வைக்கணும். அந்த வகையில திருவாரூர் தனிச்சிறப்பு வாய்ந்தது.”

கமலாலயக் குளக்கரையில் துருப்பிடித்த சைக்கிளுக்கு பாசி பிடித்த அழுக்குத் தண்ணீர் குட்டித் தொட்டியில் பஞ்சர் பார்த்துக்கொண்டிருந்த பெரியவரிடம் “குருவி ராமேஸ்வரம் எந்தப் பக்கம் போணுங்க?” என்று காருக்குள்ளிருந்து குரலை மட்டும் வெளியே துரத்தி விட்டேன். பத்தாவது பொது பரீட்சையில் பத்து மார்க்கு கேள்விக்கு பதில் தெரியாத பையன் போல முழி பிதுங்கி வெளியே வந்து விழுந்துவிடும் தோரணையில் மலங்கமலங்க முழித்தார். பெரியவருக்கு காதில் விழவில்லையோ என்றஞ்சி “கு...ரு....வி.... ரா....மே....” என்று அட்சரம் அட்சரமாக ஆலாபனை செய்ய ஆரம்பித்தவனை “காதுலல்லாம் நல்லா விளுது தம்பி” என்று ராமேஸ்வரத்தின் ”ஸ்”ட்ஜமத்திற்கு விடாமல் என்னை “மே..”விலேயே முறித்தார். பக்கத்து கால் ஆடும் ஸ்டூலில் கசங்கிய ’தந்தி’யுடன் அமர்ந்திருந்த இன்னொரு பெரியவர் “குருவி ராமேஸ்வரமா... அது...” என்று லுங்கியை மடக்கிக்கொண்டு வீராவேசமாக எழுந்து வந்து ”எதிர்த்தார்ப்ல இருக்கிறது தியாகராஜர் கோயிலு... அப்படியே இடது பக்கம் போனா.....” என்று ஆரம்பித்து தீவிரமாக யோசித்தார். கடைசியில் எனது பால் வடியும் முகத்தைப் பார்த்து “இப்பாலகனை வஞ்சிக்க வேண்டாம்” என்று க்ஷன நேரத்தில் மானசீகமாகத் தீர்மானித்து “தெரியலீங்க தம்பி..” என்று அடக்கமாக முடித்துக்கொண்டு கையிலிருந்த தந்தியை மீண்டும் மீட்ட எத்தனித்தார்.

அவர் ஸ்டூலுக்கு விரைவதற்கு முன் “கேகரை எங்கிருக்குத் தெரியுமா?” என்று மின்னல் போல அடுத்த கேள்விப் பந்தை வீசினேன். ’கப்’பென்று சரியாகப் பிடித்துக்கொண்டார். “கேகரையா?.... அப்படிச் சொல்லுங்க.... இடது கைப்பக்கம் திரும்பிப் போயி தேர் முட்டிக்கு முன்னாடி இடது கை பக்கமாவே வர்ற ரோட்ல அஞ்சாறு கிலோமீட்டர் போனீங்கன்னா கேகரை வரும்..” என்று குருவி ராமேஸ்வரத்திற்கு இராமாயண ஜடாயு போல தென் திசையைக் காட்டினார். கேகரையை அடைந்து குருவி ராமேஸ்வரத்திற்கு வழி தேடினோம். நீங்கள் தொலைவதற்கு வேலையேயில்லை. ஒரு நாலு கால் வாகனம் ஆடம்பரமாக இல்லாமல் அடக்கஒடுக்கமாகச் செல்வதற்கு தோதாக கொஞ்சமாக ஒரு சிங்கிள் பெட் பாதை. கொஞ்சம் செம்மண், கொஞ்சம் கப்பி, கொஞ்சம் பள்ளம், கொஞ்சம் கொஞ்சம் தார் ரோடு. இது போன்று இருபது முப்பது குடும்பங்கள் வசிக்கும் கிராமத்திற்குள் கோயில் தேடிப் போனால் கண்டுபிடிப்பது ரொம்ப சுலபம். அதிகம் வீடில்லாத காரணத்தினால் அல்ல. எங்கு ஒரு குளமோ குட்டையோ பார்வைக்கு படுகிறதோ நிச்சயம் அதற்கு சமீபத்தில்தான் கோயில் இருக்கிறது என்றர்த்தம்.

குருவி ராமேஸ்வரத்தை அடைந்து கோயில் வாசலில் வண்டியை நிறுத்தினால் மரக்கதவில் பூட்டு தொங்கியது. எதிர்புறம் அல்லிக்குளம் பூக்காமல் இலையோடு பாசிப் பச்சையில் வெய்யில் பட்டு தகதகத்தது. வாசலிலேயே இருபுறமும் சிவனாரின் மகனார்கள் இருவரும் கோஷ்ட சந்நிதி கொண்டிருந்தார்கள். இடப்புறம் கணேசா வலப்புறம் முருகா. பக்தியில் தெருஜனம் யாரோ குளத்தில் முழுகிவிட்டு ஈரத்துணியோடு ஒற்றைச் செம்பருத்தியைத் தலையில் சூடியிருந்தார்கள். விநாயகரின் தும்பிக்கையில் ஈரம் தெரிந்தது. கோயில் மதிலை ஒட்டினாற்போல இருந்த ஓட்டு வீட்டு சாணம் மொழுகிய வாசலில் ஒரு ஆத்தா புளியம்பழத்தை ஆட்டியாட்டி பார்த்துச் சட்டை உறித்துக்கொண்டிருந்தது. புளியம்பழத்துக்குள் இருக்கும் புளி எப்படி ஓட்டுடன் ஒட்டாமல் இருக்கிறதோ அது போல இந்த லோகாயாத வாழ்க்கையில் வாழக் கற்றுக்கொள்ள வேண்டும் என்று எங்கோயோ படித்தது ஞாபகத்துக்கு வந்தது. நித்தம் நித்தம் அடிபடும் லௌகீக வாழ்வில் தோன்றாதவைகளெல்லாம் இதுபோல பக்தி டூரின் போது ஞாபகத்திற்கு வந்து பல வேதாந்தங்களை ப்ராம்ப்ட் பண்ணும். தொள்ளைக் காது ஆத்தாவின் துணைக்கு கால்சட்டை போடாத ஒரு பையன் அரணாக்கயிற்றோடு அருகில் மண் தரையில் உட்கார்ந்து புளியம்பழத்தை கையால் கசக்கிக்கொண்டிருந்தான். அரையாடையில்லாத பையனால் ஆடை களைந்த புளியம்பழத்தின் புளிப்புக் கண்களின் வழியாக வாய்க்கு ஏறி தாவாங்கட்டையை இறுகி கண்ணிரண்டையும் சிமிட்ட வைத்தது. படிக்கிறபோதே உங்களுக்கு இப்படி புளிக்கிறதே பார்த்தவனுக்கு எப்படியிருக்கும்?

“குருக்கள் வீடு எங்கருக்குங்க?” என்று கேட்டமாத்திரத்தில் எழுந்து வந்து “அந்தோ... கோயிலுக்கு அந்தாண்டை ஒரு ஓட்டு வீடு இருக்கில்ல.. அதான்...” என்று சொல்லிவிட்டு அம்மணப் பையனை தூக்கி இடுப்பில் வைத்துக்கொண்டு பின்னாலையே துரிதகதியில் வந்தார். குறுக்கும் நெடுக்குமாக மூங்கில் ப்ளாச்சு சட்டமடித்த வாசல். பைக்கில் பறந்து விட்டு திரும்பிய இளவட்டப் பையனின் கேசம் போல ஆங்காங்கே சின்னாபின்னமாகக் கலைந்த மேற்கூரை ஓடுகள். ஏதோவொரு மழைக்கால மாமழையில் கலைந்திருக்கக்கூடும். அவ்வீடு மராமத்துக்கு மாமாங்கமாய் காத்திருப்பது தெரிந்தது. வாசல் திண்ணையை மூடியிருந்த மூங்கில் சட்டத்தின் காலுக்கடியில் காவி வெள்ளை பட்டையடித்து குருக்கள் வீட்டைத் தனியாக இனம் கண்டிருந்தார்கள். ”மாமா...” இரண்டு கட்டு தாண்டி கொல்லையில் தெரிந்த துளசிமாடத்துக்கு கேட்கும்படி கூவினேன். முதல்கட்டிலிருந்து ஸ்படிக மாலையை கோர்த்துக்கொண்டே விரிந்த சடையுடன் வளர்ந்த தாடியுடனும் தும்பைப் பூவை பழிக்கும் வெள்ளையில் அரையில் வேஷ்டியுடன் ஒரு வயோதிகர் எட்டிப்பார்த்தார். நானல் போல வளைந்த முதுகில் தொன்னூறின் ஆரம்பத்திலிருக்கும் இருக்கும் ஒன்பதுவை தாங்கியது போல தெரிந்தார்.

“கோயிலுக்கு வந்துருக்கேன். வரேளா?”

“போங்கோ.. வரேன்...” பேசிய போது இரு வார்த்தைகளுக்கிடையில் மூச்சு வாங்கியது. அவர் நடந்து வருவதின் அபாயம் கருதி கோயில் வாசலில் இருந்த குளக்கரை ரேஷன் கடையிலிருந்து பார்வையை அந்தப் பக்கம் வீசிக்கொண்டிருந்தேன். மேய்ந்து ஓய்வெடுத்துக் கொண்டிருந்த ஆட்டுக்குட்டி ம்மேயெழுப்பிச் செல்லமாக என் காலை முட்டியது. காற்றில் அலையும் பக்கோடா பேப்பர் போல ஆடியாடி நடந்து வந்தார். கதவை திறந்து உள்ளே நுழைந்தால் தூரத்தில் விளக்கொளியில் முக்கோணநாதர் தெரிந்தார். முக்கண் நாதரை முக்கோணநாதராக்கிய பெருமையுடையவர்களை போற்றிப் பாராட்ட வேண்டும். நந்திக்கருகில் இருந்த சின்ன மேடையில் தீபாராதனைத் தட்டை எடுக்க குனிந்ததில் எழுந்திருக்க முதுகைப் பிடித்துக்கொண்டார்.

“87 ஆறது” என்றார் தாடிமீசைக்கிடையே புதைந்து கிடந்த காய்ந்த உதடுகளால் சிரித்துக்கொண்டே. சுவற்றைப் பிடித்துக்கொண்டே கர்ப்பகிரஹம் அடைந்து தீபாராதனை காட்டினார். சுயம்பு லிங்கமாம்.

“நமஸ்தே அஸ்து பகவன் விஸ்வேஸ்வரயா.... ஸ்ரீமன் மஹாதேவாய நம:” என்று ருத்ரம் சொல்லி சிவனாரை வணங்கினோம். ஆடிக்கொண்டே நடந்து வந்து அஞ்சனாட்சி அம்மையின் சந்நிதியிலும் தீபாராதனை காட்டினார். “சர்வ மங்கள மாங்கல்யே சிவே சர்வார்த்த.... நமோஸ்துதே”வை கோரஸாகப் பிள்ளைகள் சொல்ல அம்மனை தரிசத்ததில் பரம திருப்தி. நின்ற திருக்கோலத்தில் அம்மனுக்கு பாலும் பழமும் கட்டம் போட்ட மடிசார் கட்டிவிட்டிருந்தார்.

ஒரு தூணில் சாய்ந்து கொண்டார். மூச்சிரைத்ததை ஆசுவாசப்படுத்திக்கொண்டு “ஜடாயு பூஜை பண்ணினதாலே இந்த ஊருக்கு பட்சி ராமேஸ்வரம்னு பேரு. அப்புறம் பட்சி குருவியாயிடுத்து” என்று ஈனஸ்வரத்தில் முணகலாகப் பேசினார். ஸ்தல புராணம் கேட்பதற்கு மேலே பட்டுவிடாதபடி அவரை வளையமாக நெருங்கினோம். பிரகாரம் வழியாக குளித்துவிட்டு புடவையை சுற்றிக்கொண்டு உள்ளே வந்த பாட்டியொருவர் “அண்ணா விபூதி குடு” என்று அவரை நெருங்கினார். வலது உள்ளங்கையில் வாங்கி கை மாற்றாமல் ”சிவ..சிவா”வை உச்சரித்து பட்டையாக நெற்றியில் பூசிக்கொண்டார். நான் பார்த்த கோணத்தில் ஒல்லி கேபிசுந்தராம்பாள் போலத் தெரிந்தார். முகம் தேஜஸாக இருந்தது. “என்னோட தங்கை... சின்ன வயசிலேயே ஆத்துக்காரர் போய்ச்சேர்ந்துட்டார். எங்கூடத்தான் இருக்கா.. நேவேத்தியம் பண்ணித் தரா... விளக்கு மணி குடம் தாம்பாளமெல்லாம் தேச்சுத்தரா... ஏதோ கூடமாட ஒத்தாசையா இருக்கா...”. எண்பது இருக்கும். எண்பது எண்பத்தேழில் அவர்களின் சகோதரபாசத்தைப் பார்க்கையில் மனசு விட்டுப்போச்சு.

”ம்... என்னவோ கத பேசப் போயிட்டோமே... சந்நிதியில நிண்ணுண்டு.... ஜடாயு பட்சி ரூபத்தில் வாழ்ந்த பெரிய தபஸ்வி. தன்னோட காலம் எப்போ முடியும்னு பகவான் கிட்ட கேட்டார். இராவணன் சீதையை சிறை பிடிச்சுண்டு போவான். நீ அப்ப அவனைத் தடுப்பே. அவன் உன் சிறக அறுப்பான். கீழே விழுந்து செத்துப்போவேன்னார். அச்சச்சோ. அப்படின்னா நான் காசி, ராமேஸ்வரம் சேது தீர்த்தங்கள்ல புண்ணிய நீராட முடியாதேன்னு வருத்தப்பட்டாரம். நீ ஒண்ணும் கவலைப் படாதேன்னு பகவானே வெட்டிக் கொடுத்த தீர்த்தம்தான் கோயிலுக்கு வெளியே இருக்கு. நீங்க காரை நிறுத்தியிருக்கேளே.. அதுதான் அந்தக் குளம். இந்த தீர்த்தத்துக்கு பேர் முக்கூடல் தீர்த்தம். திருப்பள்ளியின் முக்கூடல்னு இந்த க்ஷேத்தரத்துக்கு பேரும் உண்டு.” மூச்சு வாங்க கண்கள் தரையை நோக்கித் திரும்பியது. புருவமயிரும் இமை மயிரும் நரைத்திருந்தது. பொருமையாக காத்திருந்தோம். தங்கை பேச ஆரம்பித்தார்.

“97 வரை ஒரு ரூபா பணமும் ஒரு மரக்கா நெல்லும் கொடுத்துண்டிருந்தா. ஏதோ முடிஞ்ச வரைக்கும் ஹோமம் அப்புறம் எதாவது விசேஷத்துக்கு கூட்டிண்டு போவா. காசு வந்துண்டிருந்தது”

தலையை நிமிர்ந்து தங்கையைத் தடுத்தார். “மாமாவுக்கு பசங்க இருக்காங்களா?” என்ற கேள்விக்கு அவரே தொடர்ந்தார்.

“ஒரு பையன் இருக்கான். அவன் திருவாரூர்ல வேலை பார்க்கிறான். எப்பவாவது வந்து எட்டிப் பார்ப்பன். அவனும் என்ன பண்ணுவான் இங்க. தம்படி வரும்படி கிடையாது...” அந்த தங்கைப் பாட்டி அண்ணா தாத்தாவை பாவமாகப் பார்த்தது. ஒரு அரை நிமிடம் கோயிலே நிசப்தமாக இருந்தது. வெய்யில் காய்ந்த பிரகாரம் தாண்டி எங்கிருந்தோ கரைந்த ஒற்றைக் காகத்தின் ஒலி அனைவரின் மௌனத்தையும் கலைத்தது.

“1902ல ஒரு செட்டியார் இந்தக் கோயிலை நான் பார்த்துக்கறேன்னு எடுத்துண்டார். பட்டு வேஷ்டியும் விரலெல்லாம் மோதரமும் ஆள் ஷோக்கா இருப்பார். எடுத்துண்ட ரெண்டாம் நாள் மூலஸ்தானத்துக் கீழே நோண்ட ஆரம்பிச்சார். நேக்கு பயமாப் போய்டுத்து. இதெல்லாம் ஸ்வாமி பார்த்துண்டுருப்பார். வேண்டாம் செட்டியார்வாள்னேன். அவர் கண்டுக்கலை. அரையடி தோண்டியிருப்பான்கள் பள்ளத்துலேர்ந்து இரத்தமா பீறிட்டு அடிச்சுது. பயத்துல அலறியடிச்சு ஓடினான்கள். செட்டியார் விடலை. “டேய்.. எதாவது எலி பெருச்சாளியிருந்திருக்கும் அதான் ரத்தம் தோண்டுங்கடான்னு ஆர்டர் பண்ணினார். சித்த நாழில ஒவ்வொருத்தனும் இடுப்பப் புடிச்சுடுத்து. காலை சுளுக்கிண்டுடுத்துன்னு போய் உட்கார்ந்துட்டன். செட்டியார் இன்னும் விரட்டினார். ஊஹூம். வேலையாகலை. மறுநாள் கார்த்தால நாலு பயலும் வாயிலேர்ந்து ரத்தம் கக்கி செத்துப்போய்ட்டான்.”

மூச்சு விட்டுக்கொண்டார். விபூதி பூசிக்கொண்ட தங்கை கண் மூடி அம்பாள் சந்நிதி முன்பாக வாய் முணுமுணுக்க ஜெபம் செய்துகொண்டு அமர்ந்திருந்தார். அவருக்கு இந்தக் கதை நன்றாகத் தெரிந்திருக்கும். குருக்கள் மாமா தொடர்ந்தார்....

“அப்புறம் ஒரு ஆறு மாசத்துல செட்டியார் பிஸினெஸெல்லாம் நொடிச்சுப் போச்சு. ஓதம் வந்து அவரும் போய்ச்சேர்ந்துட்டார். கோயிலை கோயிலாப் பார்க்கணும். பகவான் இருக்கானான்னு சில பேருக்கு இளக்காரம். இவர் சுயம்போன்னோ. பவர் அதிகம். அதான் ஒடனே காட்டிட்டார்.”

என்னாலான கைங்கர்யத்தைச் செய்தேன். தட்டில் இட்டதைத் தவிர நந்தி தாண்டி நின்றிருந்த குருக்கள் மாமா கையிலும் காகிதத்தைத் திணித்தேன். எங்கோயோ பார்த்துக்கொண்டே நின்றார். “வரேன் மாமா.. நான் அடுத்தது வலிவலம் போகணும்” என்று விடைபெற்றேன். கோயிலுக்குள் ஸ்வாமி முன்னால் அவர் காலில் விழக்கூடாது. முக்கண் நாதருக்கு நமஸ்காரம் செய்யும் போது அவரையும் மானசீகமாக நினைத்துக்கொண்டேன். மனசுக்கு திருப்தியாக இருந்தது. நாங்கள் காருக்குத் திரும்பிக்கொண்டிருந்தோம். கோபுர வாசலைக் கடக்கும் வரையில் அந்த வயோதிக அண்ணாவும் தங்கையும் எங்களை பார்த்துக்கொண்டே நின்றிருந்தார்கள். அடுத்தது எப்போது சேவார்த்திகள் வருவார்கள் என்ற கேள்வி அவர்கள் கண்களில் தேங்கி நின்றதை என்னால் உணர முடிந்தது.

வலிவலம் அடையும் வரை மனக்கண்ணில் முக்கோண நாதரையும் மீறி அக்குருக்கள் ஒரு சித்தர் போலத் தோன்றிக்கொண்டிருந்தார். தங்கையுடன். இப்போதும் தான்.

(விண்ணை முட்டியிருக்கும் கோபுரம் எங்கள் மன்னார்குடி கோபாலனுடையது)

25 comments:

திருவாரூர் சரவணா said...

திருவாரூரில் பிறந்த நகரவாசி நான். நண்பரின் தந்தை ஒருவர் அவர் ஓய்வு பெற்ற பின்பு தன்னுடைய டூவீலரில் திருப்பள்ளி முக்கூடல் உட்பட திருவாரூரை சுற்றியுள்ள சில சிவத்தலங்களுக்கு அழைத்துச்சென்றுள்ளார். எனக்கு திருவாரூரை சுற்றி உள்ள கோவில்களுக்கு தொடர்ந்து சென்று வரலாம் என்று நினைத்தால் நேரம் கிடைப்பதில்லை.

திண்டுக்கல் தனபாலன் said...

குருக்களின் பாசமும், அவர்களின் நிலைமையும் கலங்க வைத்தது...

மாதேவி said...

குருவி ராமேஸ்வரம் தர்சித்துக் கொண்டோம்.

தள்ளாத வயதிலும் இறைதொண்டே என மனதார வாழும் குருக்களின் பண்பு மனதை நிறைத்தது.

அவர்களின் நிலை மனதை வாட்டுகின்றது.

bandhu said...

படித்ததிலேயே சென்று வந்த திருப்தி! அந்த வயதானவர்களுக்கு ஏதாவது செய்யவேண்டும் என்று தோன்றுகிறது.. அந்த கோவிலுக்கு ஒருமுறை சென்று வரவேண்டும்!

வெங்கட் நாகராஜ் said...

நமது கிராமங்களில் இப்படி பல கோவில்கள்..... ஒவ்வொன்றிலும் சுவையான வரலாறு.... அனைத்தையும் தரிசிக்க ஆசை....

உங்கள் பாணியில் ஒரு கோவில் உலா...

இன்று எனது பக்கத்திலும் கோவில் உலா - அப்பக்குடத்தான் கோவில் கொண்ட கோவிலடி....

raamraam said...

super

மோகன்ஜி said...

அன்பு ஆர்.வீ.எஸ்! நலம் தானே? குருவி ராமேஸ்வரம் பதிவு மிக மிக சரளமாய் ஸ்வாமி தர்சனம் அடியவனுக்கும் பண்ணி வைத்தது. ஐந்தாறு வருஷங்களுக்கு முன்னால் திருவாரூர் போன சமயம் இந்தத் தலம் பற்றி கேள்விப்பட்டு செல்ல உத்தேசிருந்த போது மழை பிடித்துக் கொண்டது. பார்க்க முடியவில்லை. உம் கண் வழியே இப்போ பார்த்தாச்சே?

அந்த பெரியவர் கொஞ்ச நாள் மனசில் இருப்பார்.

சாந்தி மாரியப்பன் said...

ஜூப்பரு போங்க. அதுவும் அந்த தொண்ணூறின் ஆரம்பத்து ஒன்பது.. சான்சே இல்லை.

//“அந்தக் காலத்துல...” //

வயசாகுதோல்யோ :-))))

ADHI VENKAT said...

குருவி ராமேஸ்வரத்தை பற்றி தெரிந்து கொள்ள முடிந்தது.

முக்கண்நாதரை மனக்கண்ணால் தரிசனம் செய்து கொண்டோம்...

அண்ணா தாத்தாவும், தங்கை பாட்டியும் மனதில் பதிந்து விட்டார்கள். பகவானுக்கு செய்கிற கைங்கர்யத்தால் அவர்களுக்கு நிம்மதி கிடைக்கட்டும்.

R.SOLAIYAPPAN said...

very super

அப்பாதுரை said...

ஆ! இதென்ன.. காணாமப் போனவங்க திரும்பிவர வாரமா? கவனிக்காம போய்ட்டனே?

சுஜாதா எழுதினாப்புல இருக்கு படிக்கிறப்ப.

RVS said...

@ திருவாரூர் சரவணன்

கருத்துக்கு நன்றி சரவணன். திருவாரூர்-திருத்துறைப்பூண்டி மார்க்கத்தில் நிறைய பாடல் பெற்ற ஸ்தலங்கள் இருக்கின்றன.

RVS said...


@திண்டுக்கல் தனபாலன்
இந்தத் தள்ளாத வயதிலும் விட்டுக்கொடுக்காமல் திரிகாலமும் பூஜை செய்கிறார்.

RVS said...


@மாதேவி
இது ஒரு பூரண அர்பணிப்பு.


RVS said...

@bandhu

கோயிலுக்குள் தண்ணீர்ப் பிரச்சனையிருக்கிறது. கிணறு வற்றிவிட்டது. போர் அமைத்துக் கொடுக்கும் பணியில் ஈடுபட்டிருக்கிறோம்.

RVS said...

@வெங்கட் நாகராஜ்

நிறைய பேர் பதிவுகளைப் படிக்கவில்லை. ப்ளாக் பக்கம் எட்டிப் பார்த்து பலநாட்கள் ஆகிறது தல. நிச்சயம் படிக்கிறேன். நன்றி.

RVS said...


@raamraam

நன்றி ராம்ராம்.

RVS said...

@மோகன்ஜி

அண்ணா! நலமே. அந்தக் கோயிலுக்கு சிறு உதவி புரிவதாக சங்கல்பம் எடுத்துக்கொண்டிருக்கிறோம். ஏற்பாடுகள் ஆகிறது. பகவத் க்ருபை. விசாரிப்புக்கு மிக்க நன்றி. இன்னமும் எல்லோருக்கும் பச்சை மொழகாதான் பிடிச்சிருக்கு போலருக்கு.

RVS said...

@அமைதிச்சாரல்
மனமார்ந்த பாராட்டுக்கு நன்றி. ஆமாம் வயசாகுது. என்னைத் தவிர எல்லோருக்கும். :-)

RVS said...


@கோவை2தில்லி
மிக்க நன்றி சகோ.

RVS said...


@R.SOLAIYAPPAN
Thank you! :-)

RVS said...


@அப்பாதுரை
ஆமா சார்! திரும்பவும் தொடர்ந்து ப்ளாகில் எழுதலாம் என்று விருப்பம். அதென்ன கடைசி வரியில் ஏத்தி விடறீங்க... :-)

Anonymous said...

அண்ணா தாத்தாவும், தங்கை பாட்டியும் மனதில் பதிந்து விட்டார்கள். பகவானுக்கு செய்கிற கைங்கர்யத்தால் அவர்களுக்கு நிம்மதி கிடைக்கட்டும்.

Nice post :)

Karthik...

Anonymous said...

This entry was very interesting. We had a very similar experience at Mozhaiyur near Mayuram in Feb 2013. The 84 year old Gurukkal was performing the poojas sincerely. Invited us for coffee and tiffin. When we gave him some money I did not have the guts to look at his eyes

Venugopal K said...

இன்றுதான் இந்த வலயில் மாட்டினேன்...பலரை படித்ததால் கிடைத்த நடை..(தங்கள் எழுத்தின்)(.நடை என்றால் நளினமும் வேண்டும்..ஒரு கம்பீரமும் வேண்டும்...நடயை பார்ப்பவர் மனத்தில் ஒரு காதல் பிறக்க வேண்டும்..அதாவது..(.உ.ம்) சொல்லவேணுமானால் "வஞ்சிகோட்டை வாலிபன்"படத்தின் போட்டி dance-ல்,
பத்மினி,வைஜெயந்தி நடையில் முறையே 75,25%...)அது இருக்கு...அக்கால எழுத்தாளர்களின் கற்பனை வளமும்,திரு சுஜாதா,+க்ரேஸீ மோஹன் குரும்பின் சாயல்+வயதானவர்களை பார்க்கும் போது,சாதாரண மனிதாபிமானத்தையும் கடந்த ஒரு இனம் புரியாத பரிவு,எல்லாமே இருக்கு.."சுழி சரியாக இருந்து இருந்தால்,தங்கள் வீட்டு வரவேற்பு அறையில்,கேடயமும்,பரிசுகளும் குவிந்து இருக்கும்...பல நூறு புத்தகங்கள் எழுதியதில் வரும் தொகை bank balance-ஐ BSLV போல உயர்த்தி நிறுத்தி இருக்கும்...above all...பல ஆயிரம் வாசகர்கள் மகிழ்ந்து இருப்பார்கள்...இதுவும் அவனின் திருவுள்ளம்...கோபுரத்தின் மேல் உள்ள விளக்காக உயர்த்தா விட்டாலும்,கூடத்தில் இட்ட விளக்காக இல்லையே...குடத்தின்மேல் ஒரு மணையை வைத்து,அதன்மேல் தானே இந்த விளக்கு இருக்கு...யார் கண்டது ???விரைவில் கோபுரம் ஏறினாலும் ஏறும் ....நன்றி...நமஸ்காரம்...அன்புடன் வேணுகோபால்.

ஆடிய பிற ஆட்டங்கள்

Related Posts with Thumbnails