Showing posts with label இசை. Show all posts
Showing posts with label இசை. Show all posts

Tuesday, June 6, 2017

சாரட்டு வண்டில சீரொட்டொளியில

ஆஃபீஸில் இப்படி அப்படி நகரவிடாமல் காலையிலிருந்து ராத்திரிவரை கை ஒழியாமல் வேலை. முகப்பு விளைக்கைத் தூண்டி வண்டியை நகர்த்தும் போது இடது கையால் ஆடியோவைத் தட்டிவிட்டேன். ”சாரட்டு வண்டில சீரொட்டொளியில” என்று ரஹைனாவின் அடிக்குரல் கேட்டது. காற்று வெளியிடை. ரஹ்மான் விருந்து. ஃப்லிம் மேக்கர் மணிரத்னம் படம். திப்புவும் பாடியிருக்கார்.
குதிரையின் குளம்பொலியின் டக்..டக்கை காதுக்கு இதமாக ஸ்பாஞ்ச் வைத்து அமுக்கியது போல ஒரு மென்மையான ரிதமிக் beatல் துவங்கிய பாடல். இனிமையாக இருந்தது. ஆங்காங்கே கொஞ்சம் “A"த்தனமான வரிகள் தூவியிருந்தது. ”மன்மதன் நாட்டுக்கு மந்திரியே..” என்று “அந்தி மழை பொழிகிறது”வில் எழுதிய வைரமுத்து இப்பாடலில் “அவன் மன்மதன் காட்டு சந்தனம் எடுத்து மார்பில் அப்பிக்கிட்டான்...” என்று எழுதியிருக்கிறார். மன்மதனின் நாடு எது? காடு எது?
பொதுவா சண்டித்தனம் பண்ணும் ஆம்பிளையை பொண்ணு கிண்டிக் கிழங்கெடுப்பா.... என்ற வரியில் கிண்டிக் கிழங்கெடுப்பது எப்படி என்று ஆராய்ச்சியில் அலையவிட்டார். இதற்கெல்லாம் சிகரம் வைத்தாற்போல ஒரு வரி....
”இவ குரங்கு கழுத்தில் குட்டியைப் போல தோளில் ஒட்டிக்கிட்டா.....”

ஆஹா! கேட்டதும் நெஞ்சுக்குள் காதல் பூக்குதே!! 

Friday, March 18, 2016

இசையில் தொடங்குதம்மா....

சில நொடிகளில் உங்களைக் கொள்ளையடிக்கப் போகிறது என்பது தெரியாத அடக்கமான தொடக்கம்தான். பாடலை ஆரம்பிக்கும் ஆண் குரலில் இதமான மிளிர்வு. வார்த்தைகளில் ஏதோ ஒரு நளினம். அஜோய் சக்ரபர்த்தியின் "வசந்தம் கண்டதம்மா..."வில் 'க'வுக்கும் 'ண்'க்கும் இடையில் வரும் ப்ருகாவும் அதை வெண்ணையாய் ஈஷிக்கொண்டே தொடரும் கோரஸுக்குப் பிறகு வரும் அடுத்த ப்ருகாவும் தரையிலிருந்து உங்களை வானத்துக்குப் போட்ட ஒரு எஸ்கலேட்டரில் ஜிவ்வென்று சுகமாக ஏற்றுகிறது. தனிமையில் அமர்ந்து கண்மூடிக் கேட்டால் உள்ளுக்குள் உறைந்தும் கரைந்தும் போய்விடுகிறோம்.
"தேய்ந்து வளரும் தேன் நிலாவில்..."என்று வளைத்து குழைந்து பாட ஆரம்பித்து "வானத்தின்..." என்பதில் உசரக்கப் போய் ஒரு சுகமான நிரவல்... அது சொர்க்கத்துக்குப் போகும் பயணத்தைத் துரிதப்படுத்தும் ஆக்ஸிலரேட்டர்.
இரண்டாவது சரண ஆரம்பத்தில் வரும் தந்தி வாத்தியமும் சக்ரபர்த்தியின் குரலும் அமிர்தத்தையும் தேனையும் குழைத்து நெஞ்சினிக்க காதில் பாகாய் ஊற்றுகிறது. அதன் பின்னர் வரும் "உயிர்களே... உயிர்களே.."வில் ராஜாவின் இந்திரஜாலம் தெரிகிறது. சடசடவென்று ஆரோகணத்தில் பிரயாணித்து அப்படியே அசால்ட்டாக ஒரு அரை வட்டமடித்துத் திரும்பி "இன்பத்தைத் தேடித் தேடி"யில் காட்டருவியாகச் சக்ரபர்த்தியை இறங்கவைத்து நம்மைக் கிறங்கடிக்கிறார். அந்தச் சரண முடிவில் இசை போதையேற்றும் ஒரு குட்டி ஆலாபனை வேறு கொசுறாக. கேரள செண்டை பாணியில் பாடல் முழுக்க பின்னணியில் முழங்கும் தாளவாத்தியம் செவிமடுத்த அனைவரையும் அனிச்சையாக காலாட்ட வைப்பது ராஜாவின் சாகசம்! இசை வழி பொம்மலாட்ட வித்தை!!
ராஜா என்கிற ராக்ஷசன்!!
ஆமாம்.. இசையில் தொடங்குகிறது.... இளையராஜாவின் இசையில் தொடங்குகிறது நமது வசந்தம்!!

Monday, February 1, 2016

லா... லா.. லா... நிலா...

”பிரதர் இன் லா... சிஸ்டர் இன் லா.... மதர் இன் லா.. ஃபாதர் இன் லா.. தவிர பாக்கி எல்லா லாவும் போட்டு கவிஞர் இந்தப் பாட்டை எழுதியிருப்பார்”னு வயலின் ஒழுகும் வான் நிலா பாட்டு பற்றி எம்மெஸ்வி எஸ்பிபியிடம் சொன்னாராம். வேற ப்ரோக்ராம்ல பாடும் நிலாவே அதைச் சொன்னது. விஜய்யில் இன்று இளமைத் துடிப்போடு எஸ்பிபி வான் நிலா பாடினார். மனசுக்கு வயசில்லை போல அவரின் குரலுக்கும் வயசில்லை. தேவகானம். காதுகளுக்கு மோட்சம்.

வான் நிலா..நிலா..அல்ல வாசித்த அமல் நரம்பு வாத்தியங்கள் வாசிக்கும் போது நமது நாடி நரம்புகளில் இசை ஊறுகிறது. “வான் நிலா...நிலாவல்ல.. எஸ்பிபி கொல்றான்....” என்கிற சத்யாவின் குறுஞ்செய்தி வந்து பாதி பாட்டில் குத்தியது. சரண “லா..”க்களுள் நுழைந்த எஸ்பிபி தேனை வாயில் தேக்கி வைத்திருந்தார். காதுக்குள் பாய்ந்த அது கள்வெறி ஏற்றியது. சரணங்களின் இறுதிகளில் செவி வழியாக நெஞ்சுக்குக் கொக்கி போடும் ஸோலோ வயலின் ஸோல் டச்சிங். எம்மெஸ்விக்கு சாஷ்டாங்க நமஸ்காரம்.

எஸ்பிபியின் வழுக்கும் குரலில் பாட்டு நம்மை அப்படியே மலர்கள் சூழ்ந்த ஒரு சோலைக்குள் கொண்டுச் செல்ல செல்ல...பரிமளமான புஷ்பக விமானத்தில் அலேக்காகத் தூக்கிக்கொண்டு பறக்கிறது.... ஒரு வித மயக்கம் ஏற்பட்டுக் கிறக்கத்துடன் சொக்கி கண் மூடுகிறோம்... அப்போது வீசு தென்றலாய் அமல் வயலின் வாசிக்கிறார். திரும்பவும் பூமிக்கே திரும்பக்கூடாது...கூடாது..கூடாது... என்று கண் மூடி மேகத்தினுள்ளே புகுந்து....புகுந்து....மேனிக்கு ஜில்..ஜில்..இன்னும் மேலே..இன்னும் மேலே...பஞ்சாய் பறந்து கொண்டிருந்தபோது... ஒரு வயலின் இழுப்பில்.... பட்டென்று கண் திறந்தால்..... கண்ணெதிரே ஸ்வர்க்கம்... கல்பதருவின் கீழே அமர்ந்திருக்கும் எஸ்பிபியைச் சுற்றி கந்தர்வர்கள் கோஷ்டியாய் நின்று கானத்தைக் கேட்டுச் சுகிக்கிறார்கள். அந்தக் கூட்டத்தில் ஒருவனாய் நானும் எட்டிப்பார்க்கிறேன்...... இதைப் படிக்கும் நீங்களும்.. .

”வண்ணம் கொண்ட...” பாடிய பையன் கட்டையெல்லாம் சரியாக எடுத்து ஸ்ருதி பிசகாமல் அக்ஷர சுத்தமாகப் பாடினாலும்.....“ஏதோ.. சரியில்லை.. ஸ்ருதியெல்லாம் இருக்கு... கமகம் இருக்கு... ஆனா.. ஏதோ ஒண்ணு மிஸ்ஸிங்....” என்று புதிராய்ப் பார்த்த சங்கீதாவிடம் சொன்னேன் “எஸ்பிபி.. ஜேசுதாஸ்.. பாடினதை யார் பாடினாலும் அந்தப் பாட்டு ஒரு மாத்து குறைஞ்சா மாதிரிதான் தெரியும்.... சின்னோண்டு கமகம் விட்டுப் போனாலும் பழகின காதுக்குப் பாட்டு ருசிக்காது... அவங்களோட பன்ச் அப்படி....” என்றேன்.

அமலை திரும்பவும் ஃபிடில் வாசிக்கச்சொல்லிவிட்டு பாட்டுத் தலைவன் பாடினான் அந்தப் பாட்டைத்தான்.....

“வண்ணம் கொண்ட வெண்ணிலவே... திரும்பவும் கொல்றான்...” என்று நான் சத்யாவிற்கு மறு ஓலையாக எஸ்ஸெம்மெஸ் தட்டிவிட்டேன்.

சங்கீதத்தை ரசிக்கத் தெரியாதவர்கள் வாலும் கொம்பும் இல்லாத விலங்கினங்கள் என்று பர்த்துரு ஹரி சொன்னாராம். எஸ்பிபியை ரசிக்கத் தெரிந்தவர்கள் யாவரும் மனுஷ்யர்களே!

‪#‎பாடும்_நிலா_பாலு‬

இதோ.. இதோ...

ஆளைச் சக்கையாய்ப் பிழிந்த கெடுபிடியான நாள். லேசாகத் தலை கலைந்து இன் ஷர்ட் அவுட் ஆகி டொய்ங்... என்று தொங்கிப் போய் உள்ளே நுழைந்து, முகம் கை கால் அலம்பி....... டைனிங் ஹாலுக்கு வந்தால் சின்னத்திரையில் எஸ்பிபி அவரது ட்ரேட் மார்க் புன்னகையில் தெரிந்தார். அவர் பாடியது செவி புகுந்ததும் மேனி கொண்ட அலுப்பெல்லாம் அலறியடித்துக்கொண்டுக் காத தூரம் ஓடிவிட்டது. ஜிலீரென்று கரையடைத்துச் சுழித்து ஓடும் காவிரியில் தொப்பென்றுக் குதித்து, தலை தூக்கி நீல வானம் பார்த்தப் புத்துணர்ச்சி. யுகக் கலைஞன்.

சிகரம் அவரது இசையின் சிகரம். ”இதோ... இதோ.. என் பல்லவி...” கேட்ட மாத்திரத்திலேயே சிங்கிளாக வாழ்க்கையை நகர்த்திவிடலாம் என்று அலட்சியமாக நினைப்பவர்களுக்குக் கூட இன்ஸ்டண்ட்டாக டபுளாகி கிரஹஸ்தாஸ்ரமம் புகத் தூண்டும். எஸ்பிபியின் காதல் கொஞ்சும் குழைவு அப்படி. இது வெளியான வருஷத்தில் கட்டிளம் கல்லூரிக் காளையாக (இப்பவும்தான்) சுற்றிக்கொண்டிருக்கும் போது இந்தப் பாடல் கொக்கேன் அபின் கஞ்சா போன்ற லாஹரி வஸ்துகள் சேர்த்து ஊட்டும் போதை. ”கள்”கண்டு சுவை. இதோ.. இதோ.. என்று எஸ்பிபி வெல்லப் பாகாய்ப் பாடும் போது அப்படியே ஓடிப்போய் அந்த மனுஷனை இறுக்கக் கட்டிப் பிடித்துக்கொள்ளலாம் போல இருக்கும். அவர் ”காட் ப்ளஸ் யூ” சொல்லும் போது கூட பாடுவது போலவே இருக்கிறது.

”இதோ.. இதோ..” பாடும் போதெல்லாம் பின்னால் ”உம்....உம்...” என்று கேட்டுக்கொண்டு வரும் ஒரு இழுப்பு வயலின் போதாதா.... உயிரை உறிஞ்சுவதற்கு?

இந்த இதோ...இதோ....வை இதே ராக்ஷசன் பாடிய பாடலின், முதல் வரியின் கடைசியில் போட்டால், முதல் வார்த்தையில் வருமே........ அது... எது? தெரிந்தவர்களுக்கு காயகல்பம் தேவையில்லை. அந்த வார்த்தையை இங்கே கமெண்ட்டிட்டால் போதும்.

‪#‎க்விஸ்‬

Saturday, May 9, 2015

பருகாமலே ருசியேருதே.........

புண்ணிய தீர்த்த ப்ரோக்ஷணம் போல ட்ரிஸ்லிங். ச்சர...ச்சர....ன்னு டயர்கள் ரோட்டை உரசும் சப்தம். மழைக்கு காதல் கவிதைகள் எழுதிப் பழகுபவர்கள் ”சக்கரங்கள்.. சாலைக்குக் கொடுக்கும் இச்..இச்..இச்கள்” என்றும் கவி டச் கொடுப்பார்கள். ஈஸ்வர கடாக்ஷத்தில் வடபழனி சிக்னலருகே கூட வண்டிகள் தேங்கவில்லை. தலைக்கு பாரமாய் இருக்கிறது என்று ஹெல்மெட்டை பெட்ரோல் டாங்கில் கவிழ்த்து ஒரு வீரதீர பராக்கிரமசாலி S போட்டுச் சென்றார். எனக்கு உள்ளுக்குள் ஆடியது. 

புறவுலகின் இத்தகைய ஆட்டங்களிலிருந்து விடுதலையாக 91.1 சுகமாகப் பாடியது. தொன்னூற்றோரு நாட்களுக்கு ரவுண்ட் தி க்ளாக் இளையராஜா பாடல்கள் மட்டும் என்று அறிவிப்பாளர் கதறிக்கொண்டிருந்தார். ”நிலவொன்று கண்டேன் என் ஜன்னலில்..”லில் எஸ்பிபி காதலாகக் குழைந்தார். பாந்தமாக டூயட் பாடிய ஜானகியின் குரலில் டன் டன்னாய் இளமையைக் கொட்டி மொழுகியிருந்தது. முன்னால் முப்பதில் சென்ற ஆட்டோக்காரரை முந்த எண்ணம் வரவில்லை. ”என் வாழ்விலே தீபம் ஏற்று...” என்ற எஸ்பிபியின் சரண முடிவின் போது தபதபத்த தபேலாவுக்கு சிக்னல் போட்டமாதிரி இருந்தது. பாட்டு முடியும் வரை க்ளட்ச் கியரைப் பிடிக்க மனது மறுத்தது. எப்பவோ டிவியில் இந்தப் பாடலைப் பார்த்தது நியாபகம் வந்தது. பிரபு சாரையும் ராதா மேடத்தையும் வெள்ளிப்பனிக் கட்டிகளுக்கிடையில் லாங் ஷாட்டில் ஓடவிட்டே நிலவொன்று கண்டேனை எடுத்திருப்பார்கள். கிளம்பிடலாம் என்கிற மூட் வந்துவிட்டது. 

அந்தப் பாட்டு முடிந்து அரைமணி பல குரல்கள் ஒலித்தன. சலித்துப்போய் அதன் கழுத்தைத் திருகலாம் என்று கையைக் கொண்டு போனபோது “நிப்பாட்டுடா”ன்னு பொடரியில் தட்டுவது போல“கேளடி என் பாவையே... “ ஆரம்பித்தது. திரையில் குறும்பென்று சங்கடங்கள் செய்யும் கார்த்திக்குக்கு பின்னணியில் குறும்பாகப் பாடி எஸ்பிபி உயிர் கொடுத்துக்கொண்டிருந்தார். “ஆண்மைதானே காவல் காக்க வேண்டும்...”மில் என்ன ஒரு கம்பீரம்! ”ஆசையோடு அள்ளிச் சேர்க்க வேண்டும்”மில் என்ன ஒரு நளினம்!! “என் சொர்க்கமே.. என் சொந்தமே...”யில் குரலை வளைத்து வளைத்து ஜாலம் காட்டினார்.

மூஞ்சி கைகால் அலம்பும் போது, சாப்பிடும் போது, தண்ணீர் குடிக்கும் போது என்று ரகசியக் காதலி போல எஸ்பிபி ஞாபகம். பெண்குரலில் பிரபலமாக இருந்தாலும் சிகரத்தில் இது சிகரம். https://www.youtube.com/watch?v=rNIEALvcBQY இதை விட சிகரம் இது https://www.youtube.com/watch?v=sF_cUbV5Bwg

இரவெல்லாம் மழைக் கொட்டித் தீர்க்கும் போது மொட்டை மாடி ஓரக் கொட்டகையில் வரிசையாய் இதுபோல எஸ்பிபி பாட கவுந்தடித்துப் படுத்துக்கொண்டு மழையையே பார்த்துக்கொண்டு.. பருகாமலே ருசியேருதே.........

செல்வமே.. சிவபெருமானே...

புவியீர்ப்பு விசை போல ஹார்மோனியப் பொட்டிக்கென்று ஒரு தனி ஈர்ப்பு இருக்கிறது. வாசலில் கார் துடைத்துக்கொண்டிருக்கும் போது பிடித்து வீட்டுக்குள்ளே இழுத்தது. மார்கழி உத்சவம் ஜெயாவில். உடையாளூர் கல்யாணராமன். வார்த்தைக்கு வார்த்தை குரலில் பக்தியைக் குழைத்துப் பூசுகிறார். மனசு பட்டென்று விட்டுப்போகிறது.

செல்வமே... சிவபெருமானே என்று மாணிக்கவாசகரின் வார்த்தைகளில் கல்லையும் உருக்குகிறார். ”பால் நினைந்து ஊட்டும் தாயினும் சாலப் பரிந்து, நீ, பாவியேனுடைய ஊனினை உருக்கி, உள் ஒளி பெருக்கி....” என்று உடையாளூர் விஸ்தாரமாகப் பாடுவதைக் கேட்போருக்கு கண்களில் நீர் தாரை தாரையாய் வழிகிறது. இதற்கு உருகார்... வேறு ஒரு வாசகத்தும் உருகார்....

வேலவா..வேலவா.. வேல் முருகா வா..வா.. என்ற பாடலில் நம் தோளில் அனாயாசமாகக் காவடி ஏற்றி ஆட விடுகிறார். ப்ரபோ கணபதியில் ஒரு ஸ்திரமான பிடி பிடித்தார். ஞானமுதல்வனுக்கு ஏக மரியாதை.

”நாம சங்கீர்த்தனம் என்பதே நல்ல எக்ஸர்சைஸ் என்கிறார். கையைத் தட்டி ஆடும் பொழுது ஷோல்டர் பெயின் போயிடும்.” ”கையைத் தட்டி என் கூடப் பாடும் போது.. பக்கத்துல இருக்கறவர் என்ன நினைப்பாரோன்னு வெட்கம் வந்ததுன்னா.. கண்ணை மூடிண்டு கையைத் தட்டிப் பாடுங்கோ....” போன்ற நகைச்சுவைகள் இடையிடையே..

ராமா...ராமா.. என்று நாமம் சொல்லடா.. எமன் மிக பொல்லாதவன் விடமாட்டான்... ராம பக்தன் என்று சொன்னால் தொடமாட்டான்.. ஆஹா..ஆஹா.. அற்புதம்..அற்புதம்..

இப்போது விட்டலா..விட்டலா.. பாண்டு ரங்கா.... யதுகுல திலகா... விட்டல..விட்டல்.. ஜெய்..ஜெய்.. விட்டல...

சபரிகிரீசனே பாஹிமாம்... சாந்த ஸ்வரூபனே ரக்ஷமாம்...

காலையிலே இன்னும் ஒரு வாரத்திற்கான பக்தி டோஸ் ஏற்றிக்கொண்டேன்.

மானஸ இசை

”பூப்பூக்கும் ஓசை.... இது நல்லாயிருக்கா..”

“அது போன வருஷம் பாடியாச்சாம்.....”

“மேகம் கருக்குது....மின்னல் அடிக்குது... சக்க்சச்கக்சா...”

“இது வேற க்ரூப் பாடறாங்கப்பா...”

“நன்னாரே...நன்னாரே.....”

“லவ் சாங்கெல்லாம் கூடாது..”

“இது லவ் சாங்கில்லை... குருல ஐஸ்வர்யா ராய்..... மழையில.. “

“ஓ.. அதுவா.... என் ஃப்ரெண்டுக்குப் பிடிக்காது...சொன்னா அழுதுருவாப்பா... ”

“ஐஸ்வர்யா ராயைப் பிடிக்காதா? பாட்டு பிடிக்காதா?”

“அப்பா.. மொக்கை போடாதேப்பா.. உருப்படியா ஒரு பாட்டு சொல்லு...வர்ற கார்னிவலுக்கு பாடணும்..”

“எனக்குத் தெரிஞ்சது இவ்ளோதான்.. நீயே கண்டுபிடிச்சு பாடு... பஸ் வந்தாச்சு... ”
எனக்கும் சின்னவளுக்கும் நேற்று காலையில் நடந்த உரையாடல்.

மீண்டும் நேற்று இரவு.

“அப்பா.. பாட்டு செலக்ட் பண்ணியாச்சு...”

“என்ன பாட்டு?”

”வா....ன்.. மேகம்.. பூப்பூவாய் தூவும்.....”

“புன்னகை மன்னன்...”

“ஆமாம்.. மிஸ்ஸே செலகட் பண்ணிக் குடுத்தாங்க...யூட்யூப்ல போடு.. ட்யூன் கேட்டுக்கறேன்...”

இன்று காலை.

”அப்பா.. மறக்காம ஹாண்ட்ஸ் ஃப்ரீயைக் கையில எடுத்துக்கோ....”

“ஏன்?”

“ஸ்கூல் பஸ் வர்றதுக்குள்ள ஒரு தடவை ரெண்டு தடவை கேட்கணும்... மெட்டு மறக்கக்கூடாது.... “

கையைச் சொடுக்கிக்கொண்டே ஹம்மிங் செய்தாள் சின்னவள். பஜனைப் பாடலோ சினிமாப் பாடலோ... பாடுவதில் டெடிக்கேஷன் இருக்கிறது. அவளது பிஞ்சு விரல்கள் சொடுக்குவதும் கனிவான ஹம்மிங்கும் என்னைத் தரதரவென்று சொர்க்கத்திற்கு இழுத்துச் செல்கிறது.

அடிச் செல்லமே!

‎ராகா மாமா‬

அகாதமியில் சஞ்சய்யின் கச்சேரியில் பக்கத்து சீட்டில் ஒரு ’ராகா’ மாமா ஆம்ப்ட்டார். சாப்பிடாத பேசாத நேரங்களில் “தத்தரின்ன..ன்ன்னா....” என்று வாய்க்கு சங்கீத வேலை கொடுக்கும் யோக்யதாம்சம் நிரம்பியவர் என்று புரிந்துகொண்டேன். அசந்தால் ஐந்து நிமிஷத்தில் அப்போதே கச்சேரி செய்துவிடும் அவசரத்தில் இருப்பவரென்றும் சபாக்களின் வாசலில் பழியாய்க் கிடப்பவர் என்பதும் அவரது ஜதிபாடும் கண் ஜாடையில் தெரிந்தது. சரியாகக் கச்சேரி ஆரம்பிப்பதற்கு ஐந்து நிமிஷம் முன்னாடி “வயறு கிடந்து கத்தறது.. ஒரு வா காஃபி குடிச்சுட்டு ஓடி வந்துடறேன்.. சீட்டைப் பிடிச்சுக்கோங்கோ...” என்று எக்ஸிட்டைப் பார்க்க பின்னால் பாம் வைத்தது போல ஓடினார். 

அந்த சீட்டை நாலைந்து பேர் குறி வைத்து படிப்படியாக முன்னேற “வராங்க....ஹி..ஹி..” என்று எக்கிப் பார்த்தவர் வழுக்கி விழும்படி வாய்வார்த்தையாக வழிந்தோம். கொலைவெறியில் திரும்பினார்கள். பான்ட்டை மேலே தூக்கிவிட்டுக்கொண்டு பீமபலம் பெற்றுத் தெம்பாக நுழைந்தார். ஒரு பாட்டு முடிஞ்சு அடுத்த பாட்டு ஆலாபனைக்காக சஞ்சய் வாயைத் தொறந்தாலே சாம்சங்கைத் தொறந்து குச்சியால் இன்ன ராகமென்று ஆர்வி போல குறிப்பெடுத்தார். சஞ்சய் ஒரு வாய் ஜலம் குடிக்க வாயைத் தொறந்தா என்ன ராகம் எழுதுவாரோ என்று விசனப்பட்டேன்.

இப்படி ஒரு ராகவித்வத் நிரம்பின ஆசாமி பக்கத்துல வந்து உட்கார்ந்துட்டோமேன்னு எனக்கு ரொம்ப வெட்கமாப் போச்சு. தலையை சட்டைக்குள்ள விட்டுக்கலாம் போல பிடிங்கித் தின்றது. விஜய் தான் ஆபத்பாந்தவனாய் காப்பாத்தினான். என்னை விட்டு அவர்கிட்டே இது கேதாரமா கேளு. சிம்மேந்திரமாக் கேளுன்னு அப்பப்போ தூது விட்டமிச்சான். பலே..பலே.. ராகமெல்லாம் பாடாந்திரமா தெரியும் போல்ருக்குன்னு நினைச்சு கொஞ்சமா ஃபூஃபூன்னு சிரிச்சார். ஆனா, தத்துபித்துன்னு ஒரு பாட்டைக் கேட்டப்போ.. “ஊஹூம்... அது ஆபோகி...” என்று ஐயோ பாவி ரேஞ்சுக்கு என்னை பார்த்தார். அதோடு கண்ணை மூடி யோக நிலைக்குப் போய் ரசிக்க ஆரம்பிச்சுட்டார். சஞ்சய் கச்சேரி கண்ணை மூடி ரசித்தால் உவப்பாக இருக்காது. அவரது முகபாவங்களையும் சிக்ஸர் ஃபோர் காட்டும் அம்பயர் சிக்னல்களையும் கண்ணாறக் கண்டு களிக்கவேணும்.

பால்கனியில் இருந்த ஆர்வியின் அருகிலிருந்து கடைசி இரண்டு பாடல்கள் கேட்கலாம் என்று முன்வரிசையிலிருந்து மைக்கேல் ஜாக்சன் நடன அசைவுகளில் சீட்டிலிருந்து வெளியே வந்தேன். ராகா மாமா மூடிய கண்ணை திறக்காமல் காலை சுருக்கிக்கொண்டார். சஞ்சய்யால் எங்கேயே சஞ்சரித்துக்கொண்டிருக்கிறார் என்று உருவிக்கொண்டேன்.

கச்சேரி முடிஞ்சப்புறம் கான்டீன்ல ஒரு கச்சேரி வச்சோம். வல்லபா புக் ரிலீஸ். அப்புறம் ஈரோடு நாகராஜ் வார்த்தை விளையாடினார். தனியாவர்த்தனம். காதுக்கு சுகம். ஆர்வியும் ரங்கநாதன் கணேஷும் சத்விஷயங்கள் பேசினார்கள். வீகேயெஸ்ஸும் நானும் வேலையை கவனித்தோம். வாஷ் பேசின் ஓரமாக வெளிநாட்டவருடன் சம்பாஷித்துக்கொண்டிருந்த ஹிண்டு ராமிலிருந்து காது முடிந்து வயிற்றைக் ரொப்ப வந்த எங்களைப் போன்றவர்களுக்கும் சேர்த்து “தோசை மட்டும்ந்தான் இருக்கு...” என்று பேதமில்லாமல் போர்டை திருத்தினார் ஒரு கண்டிப்பான கான்டீன் ஆசாமி. சீக்கிரத்தில் அகாதமியை விட்டு வெளியே தள்ளி புண்ணியத்தைக் கட்டிக்கொண்டார் அவர்.

வீட்டிற்கு வந்து சேப்பாயியை ஷெட்டில் ஏற்றும் போது என் வயிறு கரடியாய்க் கத்தியது. ராகா மாமா பளிச்சென்று ஞாபகம் வந்தார்.
‪

Wednesday, December 24, 2014

விஜய் சிவா - கச்சிதமான கச்சேரி

நேற்று மாலை ம்யூஸிக் அகாதமி கேண்டீனில் வீகேயெஸ்ஸுடன் வெஜ் ரோலும் ஸ்ட்ராங் காஃபியும் குடித்துவிட்டு அரங்கத்தினுள் சென்றேன். எதிர் டேபிளில் சப்புக்கொட்டிக்கொண்டு ஹார்லிக்ஸ் அல்வா சாப்பிட்டுக்கொண்டிருந்தவரைப் பற்றியெல்லாம் எழுதப்போவதில்லை. அவர் எப்பவோ அல்வா தொட்ட ஆட்காட்டி விரலை விழுங்கியிருந்தார். என்னுடைய உபயதாரர் ரசிக சிரோன்மணி Rajagopalan Venkatramanஏற்கனவே ஆஜராகியிருந்தார். பயபக்தியோடு அவரருகே சமர்த்தாக அமர்ந்துகொண்டேன்.

பாடகர் விஜய் சிவாவின் மடியில் உட்கார்ந்து கன்னத்தைப் பிடித்துக் கொஞ்சுவது போல இரண்டு பக்கமும் இசை பக்தாஸ் அமர்ந்திருந்தார்கள். ரெண்டு தம்பூரா. கடம் சந்திரசேகர சர்மா. வயலின் ஸ்ரீராம்குமார். ம்ருதங்கம் ஜே. வைத்தியநாதன். ஆமாம். முறுக்கு மீசையுடன் பாகவதர் கட்டிங்கில் இருப்பாரே.. அவர்தான்.. மிருதங்கத்துடன் பேசிக்கொண்டே வாசிக்கிறார் போலிருக்கிறது. அதுவும் சகஜமாகப் பேசுகிறது.

ராகமெல்லாம் அக்கக்காகப் பிரித்து விஸ்தரிக்கும்படியான வித்வத் எனக்குக் கிடையாது. சங்கீத ஆர்வமிக்க ஒரு காவிரிக்கரை ஓர பாமரனின் பார்வையில் இந்த கச்சேரியை விவரிக்க இயலுமா என்று பார்க்கிறேன். ராகதாளமெல்லாம் ராஜகோபாலன் எழுதுவார்.

நாமசங்கீர்த்தனம் யார் பாடினாலும் சட்டென்று உள்ளுக்கு இழுத்துவிடும். பதங்கள் சிறுசு. எல்லாமே நாமாவளி டைப். நாமளும் கூடவே “ராதா.. ரமணா... வனமாலி.. கோபாலா.. ” என்று கோரஸாகப் பாடிக்கொண்டே போய்விடலாம். ஆனால் கர்நாடக சங்கீதம் கேட்பதற்கு பொறுமை வேண்டும். ஆலாபனையாக ஆரம்பித்து பதம்பதமாக பாடகர் விஸ்தரித்து பாட்டுக்குள் செல்லும் போது கண்முன்னே ஸ்வர்க்கத்தைக் காட்டுவார்கள். நாமும் கண்ணை மூடிக்கொண்டு அங்கே சிறிது நேரம் சஞ்சரிப்போம். கர்நாடக சங்கீதத்தில் வரும் ப்ருகாக்கள் எனக்கு ரொம்ப பிடிக்கும். அதைப் பாடுவது லேசுப்பட்ட காரியமில்லை என்று அதிசயக்கும் போது ”வம்சம்” பார்க்க யாராவது எழுந்து போனால் வெறுப்பாகிறது.

காதை சிவாவுக்கு கொடுத்துவிட்டு கண்ணையும் கருத்தையும் சிவனேன்னு வாட்ஸப்பில் கொடுத்திருந்த முன்சீட்டு மாமா "will be there by sharp 8:30" என்று டெக்ஸ்டியதை மட்டும் பார்த்துவிட்டேன். அதற்கப்புறம் அவ்வப்போது பளிச்சிட்ட அந்த ஐஃபோனை பார்க்கக்கூடாது என்று சங்கல்பம் செய்துகொண்டு மேடையில் கண்ணைக் குத்தினேன். விஜய் சிவாவின் குரலில் ஒரு டெம்ப்ட்டிங் மிருது இருக்கிறது. தென்றல் நம்மைத் தடவுவது போல ஆலாபனைகளில் கிறங்கடிக்கிறார். கச்சேரியிலிருந்தே நேரடியாக எழுதியிருந்த சில கமெண்ட்டுகளை இங்கே இட்டு நிரப்புகிறேன்.

*
ஊத்துகாட்டின் மரகதமணிமயசேலா...கோபாலா... காலாடாத கை தட்டாத ஜனமில்லை... ஜூலாவில் உட்கார வச்சு வீசி ஆட்டினா மாதிரி பரம சௌக்கியமாக.....அமிர்தமாக பொழியறார் சிவா..
*
Rk shriramkumarன் ஃபிடிலுக்கு... மகுடிக்கு மயங்கின சர்ப்பமா எல்லார் தலையும் ஆடறது...
*
ஃபர்ஸ்ட் கியர் போட்டு செகன்ட் கியர் மாத்தி சடசடவென வேகம் பிடித்து டாப் கியருக்கு லகுவாகப் போகும் விஜய் சிவாவின் இசை வண்டியில் பயணித்துக் கொண்டிருக்கிறேன். இது தரையில் உருளும் வாகனமில்லை. அந்தரத்தில் ஜிவ்வென்று மிதக்கிறது. ஜி... இப்போ காம்போஜி...
*
தமிழ்த் தியாகராஜர் பாபநாசம் சிவனின் "காண கண் கோடி வேண்டும்"மில் மாணிக்கம் வைரம் நவரத்னாவில் நிரவல்.... அகாதமி தகதகவென்று ஜொலிக்கிறது.... வைத்தியநாதன் ம்ருதங்கத்திலும் ஶ்ரீராம்குமார் வயலினிலும் வெளிச்சம் காட்டி இன்னும் மினுமினுக்க வைக்கிறார்கள். இதைக் கூட நான் கண்ணை மூடிக்கொண்டு மெய்மறந்து டைப்புகிறேன்.
*
வைத்தியநாதனின் தனி... விசேஷ லய மிஷின் கன் எடுத்து பரவலா சுட்டா மாதிரி.... தத்திதொம்... அரங்கமெங்கும்..
*
நடுநடுவே வீகேயெஸ்ஸிடமிருந்து வந்து விழுந்த ஆஃப் தெ ஃபீல்ட் கமெண்ட்ஸ்...
Vk Srinivasan இங்கே கேண்டீனில் மேத்தி சப்பாத்தி, சேமியா கிச்சடி, வெஜ் ஸ்பிரிங் ரோல் முடிஞ்சு போச்சு. புதுசா ரவா கிச்சடி ரெடி.
*
Vk Srinivasan வயிற்றுக்கும் காதுக்கும் ஈயப்படுகிறது. சொர்க்கம்.
*
ஆதியந்தமில்லாத சரவெடியை முன்னாலும் பின்னாலும் கொளுத்தி விட்டா மாதிரி கடமும் ம்ருதங்கமும் சேர்ந்து முழங்குகின்றன.... காதுக்கு சுகமாக...
*
இன்னமும் சொல்லவோ.. உன் மனம் கல்லோ பாறையோ... கோபல க்ருஷ்ண பாரதியின் நந்தனார் சரித்திரத்திலிருந்து.... மனசைப் பிடித்து உலுக்குகிறார் சிவா... மாஞ்சியாம்... Rajagopalan Venkatraman சொல்றார்... நான் மாஞ்சு மாஞ்சு போறேன்.. கண்களில் நீர் வரவழைக்கும் கீர்த்தனம்... திருப்புன்கூர் திருத்தலம் கண் முன்னே வருகிறது... சபாஷ்..
*
திருப்பாவையிலிருந்து மாலே மணிவண்ணாவும்... நாம சங்கீர்த்தனமாக நாதபிந்து கலாவும்... கச்சேரியின் துக்கடா டெஸர்ட்ஸ்... ம்.. யம்மி... டேஸ்ட்டி...
*
கச்சேரி பூர்த்தியான பின்னர் நான் ஒரு ஆனியன் ரவாவும் வீகேயெஸ்ஸும் வல்லபாவும் ஸ்ட்ராங் ஹார்லிக்ஸும் குடித்துவிட்டு வந்தோம். இந்த சீசனில் நான் நேரடியாக அனுபவிக்கும் முதல் கச்சேரி.

Wednesday, September 17, 2014

இசை மும்மூர்த்திகள் - திராக்ஷை:வாழை:பலா

தியாகைய்யரின் கீர்த்தனங்கள் திராக்ஷை மாதிரி.... கொத்துலேர்ந்து ஒவ்வொன்னா பறிச்சு அப்டியே வாய்ல போட்டுக்கலாம். ஈஸி. ஷ்யாமா சாஸ்திரியினுடையது வாழைப்பழம்... தோலை பக்குவமா உரிச்சு உரிச்சு சாப்பிடணும். தீக்ஷிதர் க்ருதிகள் மாதுளம் பழம் போல.. பழத்தை உரிச்சு.. பிரிச்சு... முத்துகளைத் தட்டித் தட்டிச் சாப்பிடறா மாதிரி.. கொஞ்சம் மெனக்கெடனும்... ராக ரஸத்தைப் பிழிந்து தருவதால் மும்மூர்த்திகளின் கீர்த்தனங்களைப் பழமாக பாவித்தது அற்புதம்.

கர்நாடிக் ம்யூசிக் கேட்கணும் போல இருந்தது. யூட்யூப் அலசலில் யதுகுலகாம்போஜியில் அமைந்த ஷ்யாமா சாஸ்திரியின் “அம்பா காமாக்ஷி” கேட்க நேர்ந்தது. டி.எம்.க்ருஷ்ணா பாடியது. உருகியது. ஊரடங்கிய பின் கேட்டது சுகானுபவமாக இருந்தது. காஞ்சி காமாக்ஷியின் சன்னிதியில் நேரில் கொண்டு போய் நிறுத்தியது. தாழம்பூ குங்கும வாசனை. யதுகுல காம்போஜி, பைரவி, தோடி மூன்றும் “ரத்ன த்ரையம்” என்று சாஸ்திரியின் பாடல்களில் போற்றத்தக்கவையாம். 

இத்துடன் இணைக்கப்பட்ட சுட்டியில் எழுதியிருந்தவைகளை முதல் பாராவில் தமிழ்படுத்தியிருக்கிறேன். கர்நாடக சங்கீதம் எனக்கு கேள்வி ஞானம்தான்.

http://youtu.be/RfRcP5rHk4g
‪#‎அம்பா_காமாக்ஷி‬

Tuesday, July 29, 2014

நாத வெள்ளம்

"நாதவெள்ளத்தில் நீந்தினேன்” என்று ஆனந்தக் கூத்தாடுபவர்களைப் பார்த்திருக்கிறேன். இன்றைக்கு அந்த நாதவெள்ளம் தன்னோடு சப்ஜாடாக இழுத்துச் சென்றவைகளில் நானும் சுழலுக்குச் சுழல் தக்கையாகச் சுழன்று அடித்துச் செல்லப்பட்டேன். சரி! விஷயம் என்னவென்று சொல்கிறேன்.

காலையில் சட்டென்று கிளம்பி நகரேஷு காஞ்சிக்கு ஒரு அதிரடி விஸிட். சங்கர மடத்தில் காலையில் சந்த்ரமௌளீஸ்வர பூஜை நடந்துகொண்டிருந்தது. கண்குளிரக் கண்டு களித்துக்கொண்டிருந்த பக்தகோடிகளோடு கடையனாய்க் கலந்து கொண்டேன். தசாங்கத்தின் நறுமணத்தோடு சாம்பிராணி புகை சேர்ந்துகொள்ள எந்த நேரத்திலும் பரமேஸ்வரன் பார்வதியோடு ரிஷபாரூடராகக் காட்சி தருவாரோ என்கிற தெய்வமணம் கமழும் பக்திச் சூழ்நிலை.

பூஜைக்கிடையில் ”பீப்பீ..” என்று சீவாளியைப் பரிசோதிக்கும் ஓசை கழுத்தைத் திருப்ப வைத்தது. தொடர்ந்து “டம்..டம்..டப்..” ஒலி. நாகஸ்வர இசை மெல்லியை ஓடை போல ஆரம்பித்தது. இரட்டை நாகஸ்வரம். பட்டையைக் கிளப்பும் இரட்டை தவில். ஒரு நாகஸ்வரம் எஸ்பிபியென்றால் இன்னொன்று டியெம்மெஸ். ஒன்று நளினம். இன்னொன்று அட்டானிக்கால் போடும் காம்பீர்யம்.

”நாத தனுமனிசம்”த்தில் ஆரம்பித்து நாகஸ்வரத்தைத் தூக்கிச் சீராகப் பிடித்தார்கள். ஒவ்வொரு ஸ்வர வரிசைக்கும் பெரிசும் சிறுசுமாய் இரண்டு நாகஸ்வரங்கள் ஊதின. அபார வாசிப்பு. அவர்களுக்கு ஈடு கொடுத்து தவில்கள் முழங்கின. காதுக்கு வலிக்குமோ கைக்கு வலிக்குமோ என்றில்லாமல் தவிலைத் தவிடுபொடியாக்கினார்கள். மடத்தைக் கடப்பவர்களில் அந்த சங்கீதம் நனைக்காத செவிகள் கண்ணாடி மாட்ட மட்டும் உபயோகப்படுபவையாக இருக்கும்.

இடையறாத வாசிப்பின் வேகத்துக்கு ஓய்வு கொடுப்பதுபோல அடுத்து ஊஞ்சலாடி வந்தது “க்ருஷ்ணா நீ பேகனே”. க்ஷண நேரத்தில் நம்முன்னே காற்றலைகளில் க்ருஷ்ணனைத் தவழவிட்டார்கள். நல்ல காத்திரமான நாகஸ்வரம் கூட ”பேகனே...”யில் புல்லாங்குழல் போலக் குழைந்த மாயமென்ன என்று இன்னமும் ஆச்சரியப்படுகிறேன். திரை திறப்பதற்கு முன்னர் அகஸ்திய மாமுனியின் ஸ்ரீசக்ரராஜ சிம்மாசனேஸ்வரி ஆரம்பித்தார்கள். அடுக்கு தீபாராதனையின் போது ”உலகம் முழுதும் என் அகமுறக் காணவும் ஒரு நிலை தருவாய் காஞ்சி காமேஷ்வரி” வரிகள் இசைத்தது. குருமார்களின் தரிசனத்தோடு மெய்சிலிர்க்கும் அனுபவம்.

செவிகளைத் தொட்டு இதயத்தைக் குளிர்விக்கும் இசை நம்மை இறைநிலைக்கு இட்டுச்செல்கிறது.

Friday, November 15, 2013

கேஜே! ஜேஜே!

கொஞ்சம் ஆசுவாசப்படுத்திக்கொண்டு யோகா செய்யும் நுட்பத்தோடு பாடலில் கவனத்தைச் செலுத்தினேன். “மல்லிகையை வெண் சங்காய் வண்டினங்கள் ஊதும்..... மெல்லிசையின் ஓசை போல் மெல்லச் சிரித்தாள்” என்று தேனாய் காதில் விழுந்தது. இன்பம்! இன்பம்! செவிக்கின்பம். மனதிற்கின்பம். எதற்காக ஆசுவாசப்படுத்திக்கொண்டேன் என்பது பின்வரும் இரண்டு பாராக்களில் இருக்கிறது.

கர்மபலனில் நம்பிக்கையில்லாத பத்து பேரைக் குண்டுக் கட்டாகக் கட்டிக் கொண்டு வந்து, காலையிலோ மாலையிலோ சென்னையின் பீக் ஹவர் ட்ராஃபிக்கில் காரோட்டச் சொன்னால், வண்டியை விட்டு இறங்கியவுடன் மட்டையாய் மடங்கிய காலோடு பாடிகாட் முனீஸ்வரன் கோயிலுக்குச் சென்று துண்ணூறு போட்டுக்கொண்டு பயபக்தியுடன் ”இனி பிறத்தியாரை இம்சிக்கமாட்டேன்” என்று சங்கல்பம் செய்துகொள்வார்கள். போன ஜென்மத்தில் சவாரியில்லாத ஆட்டோவாய் பிறந்து நடு ரோட்டில் நடைவண்டியாய் பயணித்து படுத்தியிருப்பதன் பலனாக இப்படி அவதியுறுகிறேன் என்றும், அந்தப் பிறவியிலும் கர்ப்பஸ்த்ரீகள் ஆஸ்பத்திரியில் சென்று பிரசவிக்குமாறு சௌகரியமாக ஓட்டியதால் அட்லீஸ்ட் சென்னையிலாவது இருக்கிறேனாம். இல்லையென்றால் பெங்களூருவில் கார் ஓட்டி ஐந்து கிலோ மீட்டர் தூரத்தை ஐம்பது நிமிடங்கள் உருட்டி உருட்டி பணிஷ்மெண்ட்டாகக் கடக்கும்படி உத்தரவாகியிருக்குமாம். இவ்வாறு யாரோ மூளைக்குள்ளிருந்து எச்சரிக்கை ஓலமிட்டார்கள்!

சேப்பாயி தன் கழுத்தை நெறிக்கும் ட்ராஃபிக் வெள்ளத்தில் உயிர்பிழைக்க நீந்திக்கொண்டிருக்கும் போது ”நகராச்ச்சியில...” என்று காதை அறுத்துக்கொண்டிருந்த ஒரு எஃப்பெம் சானலிலிருந்து விடுபடுவதற்கு டாஷ்போர்டிலிருந்த சிடி பௌச்சை பலங்கொண்ட மட்டும் வெறியுடன் இழுத்தேன். தற்கொலைக்காக தூக்க மாத்திரை சாப்பிட்டுவிட்டு க்ளைமாக்ஸில் தன்னைத் தூக்க வந்த ஹீரோவிடம் மேஜை ட்ராயரைத் திறந்து தனது லவ் டாக்குமெண்ட்களைக் காட்டும் உயிர்க் காதலியைப் போல இடது கையால் தட்டுத் தடுமாறி பௌச்சின் ஜிப்பைத் திறந்து ஒரு ஸிடியை எடுத்து ப்ளேயரின் வாயில் காணிக்கை போல உள்ளே தள்ளினேன். ரேடியோவின் கழுத்தை முறித்துவிட்டு அந்த க்ஷணமே ஸிடி பாட ஆரம்பித்தது. இதற்கப்புறம் முதல் பாராவில் படித்துவிட்டீர்கள். மேலே படியுங்கள். அதாவது கீழே படியுங்கள்.

இப்போது இருபுறமும் சேப்பாயியைக் கட்டி ஏறுகிறார்கள். கரையை உடைத்துச் சுழித்துக் கொண்டு வரும் காட்டாற்று வெள்ளத்தைப் போல ஆட்டோக்களும் மாநகர பேருந்துகளும் இருமருங்கும் அணைக்கின்றன. இங்கே ”இளநீரும் பாலும் தேனும்... இதழோரம் வாங்க வேண்டும்..” என்று ஸ்வரம் ஸ்வரமாய் இழுத்த வயலின்களுக்குப் பின்னர் காதுகளில் இழைய ஆரம்பித்திருந்தது. கல்லூரியில் படிக்கும்போது(?!) வீட்டிற்கு பஸ்ஸில் வந்து கொண்டிருந்த போது சுமாராய் இருந்த தாவணி ஒன்று ஏறியதும் இந்தப் பாட்டு தலைக்கு மேலே ஒலிக்க ஆரம்பித்தது. எதற்கோ அந்தப் பெண் அநியாயத்திற்கு வெட்கப்பட்டு ஜன்னல் வழியாக வாய்க்கால் வரப்பைப் பார்த்து சிரித்துக்கொண்டே வந்தது நினைவுக்கு வந்தது. அபாண்டமாக நீங்கள் இப்போது பழி சொல்வீர்கள் என்று அப்போதே அது இறங்கும் போது என்னைப் பார்க்கவில்லை. தெய்வீகராகமோ!!

இந்த உன்மத்த மனோ நிலையில் க்ரேனே பின்னால் வந்து காரை அலேக்காகத் தூக்கியிருந்தால் கூட பாடல் சுகத்தில் பட்டமாய்ப் பறக்கிறேன் என்று நினைத்துக்கொண்டிருப்பேன். பாடல் பாதி நினைவுகள் பாதி என்னை போதையூட்ட வாகன வெள்ளத்தில் சேப்பாயி அதன் போக்குக்குக் இழுத்துச் சென்றுகொண்டிருந்தது. ”கண்கள் என்ன நெஞ்சில் பாயும் காம பானமோ.. உன் சொற்கள் என்ன போதை ஏற்றும் சோம பானமோ...” என்று காதலைக் கரைத்துக் காதுகளில் ஊற்றிக்கொண்டிருந்த என் ஸிடி ப்ளேயரை அஃறிணைப் பொருளாகப் பார்க்க எனக்கு மனம் வரவில்லை. டெல்லிவாழ் ராஜபுத்திரர்கள் யாரவது சென்னை வந்து திரும்புகிறார்கள் என்ற சாக்கை வைத்துப் போக்குவரத்துக் காவலர்கள் ஒரு அரைமணி அப்படியே நம்மை நிப்பாட்ட மாட்டார்களா? திரும்பத் திரும்ப இதையே ரிப்பீட்டில் கேட்கமாட்டோமா என்று மனசு கிடந்து அடித்துக்கொண்டது.

சற்றுநேரத்தில் ”பெண்மையின் இலக்கணம் அவளது வேகம்..” என்ற வரிகள் வரும் போது ஹோண்டா ஆக்டிவாவில் ஒரு பெண் சரேலென்று விரைந்து சென்றாள் என்று இப்போது எழுதினால் நான் பொய் சொல்கிறேன் என்று நீங்கள் பழிப்பீர்கள். சரிதான்! அப்படியாரும் அந்த வரி வரும்போது செல்லவில்லை. ஆனால், “முகம் மட்டும் பார்த்தால் நிலவின் எதிரொளி” பாடும் போது ஸ்கூட்டியில் விரைந்தது கண்ணைத் தவிர மொத்தமும் மூடிய ஒரு மாது.

”மதுவின் குடத்தை மடியில் நீ மறைத்து வைத்த மலரோ...” என்று குழையும் போது நமக்கும் ஜில்லென்று சிறகடித்துப் பறந்தது நினைவுகள். ”விழிகள் ரெண்டும் பள்ளிக்கூடம்.. தொடங்கு கண்ணா புதிய பாடம்...” கதறக் கதற காதலைச் சொட்டும் பாடல்களால் சேப்பாயியின் அங்கமெல்லாம் நனைந்துவிட்டிருந்தது. எனக்கு ஜுரம் எடுத்துவிடும் அபாயமிருந்தது. காதல் ஜுரமல்ல! இப்படி ஒன்றல்ல இரண்டல்ல... நிச்சயம் பத்துக்கு மேல் பாடல்கள் கடந்திருக்கும். காது கொடுத்துவிட்டு கண்டபடி கரைந்துகொண்டு வண்டியோட்டிக்கொண்டிருக்கிறேன்.

“இதழில் போடும் இதழின் காயம் இதழில் ஆறும் இனிமையாகும் தேகம் தீண்டும் நேரம் யோகம்..யோகம்...” என்று அனாயாசமாக பாடிக்கொண்டிருந்தார் அவர். இந்த வியாசத்தை இப்படியே நான் முடித்துவிடப்போகிறேன். ஆனால், நீங்கள் இரட்டை மேற்கோளில் இதில் எழுதியிருக்கும் பாடல்கள் எவையெவை என்றும் பாடியவர் யாரென்றும் இசையமைத்தவர் இன்னாரென்றும் ஆராய்ச்சியில் இறங்கப்போகிறீர்கள். தெரிந்த பாடல்களை கமெண்ட்டில் எழுதுங்கள் என்று நான் சொல்லமாட்டேன். நான் தூங்கப் போகிறேன். காதுகளில் கேஜே..... ஸாரி! தூங்கிவிட்டேன்.

Monday, June 4, 2012

எஸ்.பி.பி சொன்ன காதல் கதை

என்னுடைய ஆதர்ஷ பாடகர் பாடும் நிலா பாலுவின் பிறந்தநாள் இன்றைக்கு.  வித்தியாசமான முறையில் அவருக்கு பிறந்த நாள் வாழ்த்து சொல்லும் விதமாக சட்டென்று நினைவுக்கு வந்த அவர் பாடிய சில பாடல்கள் மூலமாக ஒரு காதல் கதை சொல்லிப்பார்த்தேன், பச்சை வண்ண குண்டு எழுத்துக்களில். கதைக்கு போவோமா?


இன்று காலையில் எழுந்தவுடன் இப்படி ஒரு இன்ப அதிர்ச்சி கிடைக்கும் என்று நினைக்கவில்லை கார்த்திக். நிலவொன்று கண்டேன் என் ஜன்னலில் என்றாகும்படியாக காயும் கத்திரியில் குளிர் நிலவாக எதிர் வீட்டு வாசலில் படைத்தானே பிரம்ம தேவன் பதினாறு வயதுக் கோலம் நின்று  தலை சாய்த்து விரித்து கைகளை கோதி (இப்போது நான் பூவெடுத்து வைக்கணும் பின்னால... என்று நினைத்துக்கொண்டான்) காய வைத்துக்கொண்டிருந்தாள் மஞ்சள் பாவாடை பச்சை தாவணி அணிந்த நித்யா. மெதுவாகவும் இதமாகவும் அடித்த தென்றலை கண்டு மேடையில் ஆடிடும் மெல்லிய பூங்காற்றே நீ ஆடையில் ஆடினால் மன்மதன் விளையாட்டே என்று கற்பனை செய்துகொண்டு காமனை நிந்தித்தான் கார்த்திக். தலையைக் குனியும் தாமரையாக இருந்தாள். அவளைத் தொட்ட காற்று அவனைத் தொடும் போது பூங்காற்று உன் பேர் சொல்ல கேட்டேனே இன்று என்று மெதுவாக சொல்லிக்கொண்டான். பின்னால் ஏதோ ஒரு எஃப்.எம் ஸ்டேஷன் ரேடியோ  நீல வான ஓடையில் நீந்துகின்ற வெண்ணிலா பாடியது. "நித்தூ..." என்ற அம்மாவின் அழைப்பிற்கு "இதோ வந்துட்டேம்மா...." என்று  பாடிப் பறந்த குயிலின் கடைக் கண்களில் இளமனது பலகனவு விழிகளிலே வழிகிறதே என்றுணர்ந்தான் கார்த்திக்.

கல்லூரி வாகனத்திற்காக கடைவீதியில் காத்திருக்கும் போது நம்ம கடைவீதி சும்மா கலகலக்கும் என்று கிண்டலடித்து பாடிய பாஸ்கரிடம் அவள் ஒரு பச்சைக்குழந்தை பாடும் பறவை பருவம் பதினாறு என்றான் கார்த்திக். தன்னை கண்டும் காணாதது போல போன நித்யாவைப் பார்த்து கேளடி என் பாவையே பாட வேண்டும் போல இருந்தது அவனுக்கு. பேருந்தின் இடது கைப்பக்கம் கார்த்திக்கும் வலது கைப்பக்கம் மகளிர் வரிசையில் நித்யாவும் பாடம் படிக்க கல்லூரி செல்லும்போது ஒரு ஜோடி சேர்ந்து செல்லும் பயணங்களில் என்று சரணம் பாடும் என் கண்மணி உன் காதலி இளமாங்கனியை கற்பனை செய்துகொண்டான். காலையில் இருந்தே குளிர்த் தென்றல் வீசி தேன் சிந்துதே வானமாகி சற்று தனது பூவாளியை திறந்து விட்டது. மழையும் நீயே வெயிலும் நீயே என்று அந்த கரு நீலக் கண் ரெண்டும் பவழமாக இருக்கின்றவளைப் பார்த்து மருங்கினான். தன்னிடம் இன்னமும் வாய் திறக்காதவளைப் பார்த்து மலரே மௌனமா என்றான்.

எந்தப்பெண்ணிலும் இல்லாத ஒன்று அவளிடம் இருந்ததால் ஒரு காதல் என்பது உன் நெஞ்சில் உள்ளது, உன் நெஞ்சில் உள்ளது கண்ணில் வந்ததடி என்று இவன் நெஞ்சில் இருந்ததை மாலை வீட்டிற்கு பஸ் ஏறும் போது முதன் முதலாக காதல் டூயட் பாட வந்தேனே என்று சொல்லிவிட்டான். காதெலெனும் தேர்வெழுதி காத்திருந்த மாணவன் கார்த்திக் காதலே என் காதலே என்னை என்ன செய்யப் போகிறாய் என்று தவித்தான். மீண்டும் மாலையில் பன்னீர் மேகம் தூறல் போடும் போது அந்தி மழை பொழிந்து ஒவ்வொரு துளியிலும் அவள் முகம் தெரிந்தது. மாலை கடைத்தெருவிற்கு தன்னை கடந்து செல்லும் போது சுந்தரி கண்ணால் ஒரு சேதி சொல்லடி என்று கேட்டுக் கொண்டிருந்தான். சின்னராசு ஜூஸ் கடையில் நின்றிருந்த பாஸ்கர் நித்யாவிடம் சிரித்தும் கையை பிடித்தும் பேசும்போதுதான் தெரிந்தது இவ்வளவு நாளாய் உன்னை நினச்சேன் பாட்டு படிச்சேன் அப்புவாக அவன் இருந்தது.

என்னை காணவில்லையே நேற்றோடு என்று புலம்பிய கார்த்திக்குக்கு அடுத்த இரண்டு நாளில் நிச்சயாதார்த்தம் முடிந்து அவளின் கல்யாண சேதி கேட்டது. அதிலிருந்து வாழ்க்கை வெறுத்துப் போனவனன் சத்தம் இல்லாத தனிமை கேட்டான். இப்படி இவன் பித்துப் பிடித்து திரிந்த காலத்தில், ராத்திரியில் பூத்திருக்கும் தாமரையாக அவளை பாவித்து வளையோசை கல கலக்க பாஸ்கர் அவள் இதழில் கதை எழுதும் நேரத்தில் கார்த்திக் உச்சி வகுந்தெடுத்து பிச்சி பூ வச்ச கிளி பச்சைமலை பக்கத்துல மேயுதுன்னு சொன்னங்க என்று சிவகுமார் கணக்காக பாடிக்கொண்டிருந்தான்.

Happy Birthday SPB Sir. Wish you Many More Happy returns of the Day.
#இது ஒரு மீள் பதிவு

Friday, March 23, 2012

ஈ காஃபி

*********** பேப்பர் பெரியவர் **********
ஒரு நூறு மீட்டர் தள்ளி அந்தப் பெரியவர் நடந்து வந்துகொண்டிருந்தார். கையில் 40 micronக்கு குறைவாய் மாசு ஏற்படுத்தும் ஒரு கேரி பேக். அதிலிருந்து இரும்புச் சத்துக் கீரை அதிகப்படியாக துறுத்திக்கொண்டு தெரிந்தது. மலச்சிக்கலும் இருக்காதாம். பெங்களூர் தக்காளி தனது சிகப்பின் அதிக வேவ்லெங்த்தினால் கண்ணுக்குப் புலப்பட்டது. அகிலேஷ் யாதவ் முதல் மந்திரியாக தேர்தெடுக்கப்பட்ட மாலைமலர் கையில் படித்துக்கொண்டு வந்தது பக்கத்தில் வந்தபோது தெரிந்தது.

அவர் சுவாரஸ்யமாக பேப்பர் படித்துக்கொண்டு இடது ஓர சாலையில் ஊர்ந்து வரும்போது அவருடைய காலை உரசிக்கொண்டு ரெண்டு நாய் சண்டை போட்டுக்கொண்டது அவருக்கு தெரியவில்லை. அவசரமாக பிள்ளையை கையில் பிடித்துக்கொண்டு போன பெண் டேஷ் செய்வது போல வந்து கடைசி நொடியில் கட் அடித்தது அவருக்கு தெரியவில்லை. சைக்கிளில் ட்யூஷன் போட்டு வந்த பையன் இடிக்காமல் துள்ளி ஒதுங்கியது அவருக்கு தெரியவில்லை.

நான் நின்றுகொண்டிருந்த இடத்தைத் தாண்டியும் அந்த பேப்பர் படிக்கும் மோன நிலையில் ஒரு யோகியைப் போல சென்றுகொண்டிருந்தார். இவர் வீட்டிற்கு எப்படி போய் சேருவார் என்று ஆவலாக திரும்பிப்பார்த்தேன். நான் நின்று கொண்டிருந்த இடத்திலிருந்து அடுத்த பில்டிங்கிற்குள் நுழைந்தார். வைத்த கண்ணை எடுக்காமல் பேப்பர் படித்துக்கொண்டே!

அதிசயமாக இருக்கிறதே என்று நினைத்துக்கொண்டே தலையைத் திருப்ப எத்தனித்தபோது அது நடந்தது.

“டமார்” என்று ஒரு ஆஜானுபாகுவான மாமி மேல் மோதினார்.

“என்ன எழவோ! ரோட்லேர்ந்தே பேப்பர் படிச்சுண்டே வர பழக்கம். ஒரு நாள் எவனாது ஒரேடியா ஏத்திட்டுப் போய்டப்போறான். வைகுண்டத்தில போயும் மாலைமலர் படியுங்கோ!!”

தொடர்ந்த வசவுகளைப் பார்க்கும் போது நிச்சயம் அவரது மனைவியாகத் தான் இருக்கவேண்டும். ஒரு செகண்ட் பேப்பரிலிருந்து கண்ணை எடுத்தார். அலட்சியமாக ஒரு பார்வை பார்த்தார். திரும்பவும் படித்துக்கொண்டே மாடிப்படி ஏற ஆரம்பித்தார். இந்த செய்கையில் உறுதியாக சொல்கிறேன், அவர் அந்த ஆ.பெண்மணியின் கணவராகத்தான் இருக்கவேண்டும்.

************** நதியில் ஆடும் பூவனம் *************** 
பழைய பேப்பர் போடும் ஆதி கடையில் இன்னும் கொஞ்சம் நாழி இருக்க மாட்டோமா என்கிற ஆவல் எழுந்தது.

“சார் இந்தாங்க!” என்று அழுக்குக் கல்லாவைத் திறந்து காசு எடுத்துக் கொடுத்தும் அவ்விடத்தை அகல மனம் வரவில்லை.

பின்னாடி எஸ்.பி.பி தூண்டில் போடுகிறார். எப்படி நகர்வது. அந்தப் படம் சரியாகப் போகவில்லை. புதுமுகம் கண்ணன் சரியாக நடிக்கவில்லை. கதை சுகமில்லை. என்றெல்லாம். பாரதிராஜாவுக்கு அடிதான்.

ஆனால், ராஜாவும் எஸ்.பி.பியும் புகுந்து விளையாடிய படம். இந்த ஸ்டேட்டஸோடு அட்டாச் செய்த பாடல் அற்புதமான மெலோடி.

கறுப்பு ராதாவை நதியில் ஆடும் பூவனம் என்று வைரமுத்து கவிஞர்களின் கவித்துவ புரட்டோடு எழுதியிருந்தாலும்... கேட்க..கேட்க.... எஸ்.பி.பி நெஞ்சை அள்ளும் பாடல்...

இரண்டாவது சரண ஆரம்பத்திற்கு முன் எஸ்.பி.பியின் அமர்க்களமான ஆலாபனைக்கு ராதாவின் சாணி மிதிக்கும் பரதநாட்டியம் கர்ண கொடூரமாக இருப்பது அவசியமில்லாமல் ஞாபகம் வந்தது.

ஜானகியும் எஸ்.பி.பியும் ஹம்மிங்கில் மங்களம் பாடி முடிந்தவுடன் கிளம்பினேன். பாடிய இடத்தை நான் பார்த்த பார்வையில்....

“சார்! இது எஸ்.பி.பி. டிவிடி.”

“என்னென்ன பாட்டெல்லாம் இருக்குப்பா?”

மாஸ்டரிலிருந்து பிரிண்ட் போட்டு கருப்பாக ஜெராக்ஸ் எடுத்து உள்ளடக்கம் தயார் செய்திருந்தார்கள். தூசி தட்டி எடுத்துக் காண்பித்தான்.

ஒன்று விடாமல் எல்லாமே என்னிடம் இருந்தது.

“வேணுமின்னா காப்பி பண்ணிக்கிட்டு குடுங்க..”

“வேண்டாம்பா”

“பிடிக்கலையா?”

”சுருக்” என்று நெஞ்சுக்குள் நெருஞ்சி ஏறியது. சிரித்துக்கொண்டே சொன்னேன்.

“எஸ்.பி.பியோட எல்லாமே எங்கிட்ட இருக்கு! அவனொரு பாட்டு ராக்ஷசன்!!”

http://www.youtube.com/watch?v=W02st3WU-sE

************* சாஸ்திரிகளுக்கு நன்றி **************
நீங்களும் வெல்லலாம் ஒரு கோடி நிகழ்ச்சி மாபெரும் வெற்றியாம். கோட் சூட்டுடன் சூர்யாவை நிற்க வைத்து போஸ்டர் அடித்து ஒட்டி தமிழக மக்களுக்கு நன்றி தெரிவித்திருக்கிறார்கள்.

சமீபத்தில் வீட்டில் நடத்திய கணபதி ஹோமத்திற்கு கூட நல்ல ஆதரவு. விமரிசையாக நடந்தது. வீதிக்கு வீதி போஸ்டர் அடித்து ஒட்டலாம் என்று விரும்புகிறேன்.

“கணபதி ஹோமத்தை சிறப்பாக நடத்தித் தந்த கிருஷ்ணமூர்த்தி சாஸ்திரிகளுக்கு அநேக கோடி நமஸ்காரங்களும், நன்றிகளும்”

அரச இலைப் பிள்ளையார் படத்தைப் போட்டு.... :-)

********** ஈ காஃபி *************
ஈ விழுந்த காஃபியை திருப்பிக் கவுண்டரில் கொடுத்தால் புதுசாக ஒரு காஃபி போட்டுக் கொடுத்தார்கள். ரிட்டர்ன் காஃபியை வீணாக்காமல் அப்படியே வைத்திருந்தார்கள்.

காஃபியை உறிஞ்சிய பின் பச்பச்சென்று கையில் ஒட்டியதை ஈரத்தண்ணீரில் தொட்டு துடைத்துக்கொண்டு வரும்வரை அக்காஃபி அங்கேயே தவமிருந்தது.

கடையை விட்டு அகலும் போது இருவர் காஃபி டோக்கனுடன் கவுண்ட்டரை அடைந்தனர். கண்ணை விட்டகலாமல் அக்காஃபியும் இருந்தது. எச்சரிக்கலாமா? கூடாதா? என்ற எண்ணத்தின் பின்னல்களின் இடைவெளியில் எழுந்த கேள்வி.

ஈ ரெண்டு பேரில் ’ஈ’ காஃபி எவருக்கு?

********** ராத்திரி பாடல்கள் **********
இது போல் மையிருட்டில் எடுக்கப்படும் பாடல்களுக்கு

அத்தியாவசியத் தேவை ஆறு
1. பெட்ருமாஸ் லைட்
2. ஒரு கூடாரம்
3. ஒரு தேன் நிலா
4. கேம்ப் ஃப்யர்
5. அழகான ஜோடி
6. ராஜாவின் இசையில் பாடல்

தேவையில்லாதவை ஆறு
1. பளபள ட்ரெஸ்
2. தேவதைக் கூட்டம்
3. இயற்கைக் காட்சி
4. ஆடம்பர செட்
5. காதைக் கிழிக்கும் இசை
6. விசுக்விசுக்கென்ற நடனம்

#அமலா மாதிரி ஒரு பொண்ணு கிடைச்சா மம்மூட்டி ஏன் லோலோன்னு அலைஞ்சு லாலான்னு பாட மாட்டார்?

www.youtube.com/watch?v=OWm9kRMfcGQ

******* ப்ளேன் ஓட்டக் கற்றுக்கொண்டேன் ******
“என் வயிற்றில் ஏதோ கவ்வியது. முதன்முதலாக பூமி ஈர்ப்பை இப்படி எதிர்த்துச் செல்கிறேன். வேகமான லிஃப்டில் அல்லது மிக வேகமாக ஊஞ்சலில் மேற்செல்வது போல உணர்ச்சி என்று சொல்லலாம். அதனுடன் கூட நம் ஸீட்டுக்கு அடியில் ஒன்றுமில்லை என்று உணர்ச்சி. அதற்கு ஈடாக பூமியில் ஒன்றும் கிடையாது. எனக்குப் பயமாக இருந்தது. லலிதா சஹஸ்ரநாமம் சொல்ல வேண்டும் போலிருந்தது”

#என் வசம் இருக்கும் சுஜாதா புத்தங்களை ஃபிக்ஷன், நான் - ஃபிக்ஷன் என்று இரு வரிசைகளாக அடுக்கினேன். தராசில் வைத்து நிறுத்தது போல சமமாக வந்து நிற்கிறது.

## மிஸ் தமிழ்த்தாயே நமஸ்காரம்! புஸ்தகத்தில் “ப்ளேன் ஓட்டக் கற்றுக்கொண்டேனி”லிருந்து...

###முதன் முதலாக பறக்கும் படபடப்பை, அனுபவத்தை வாத்தியார் போல யார் எழுத முடியும்? சூப்பர்ப்!! வணக்கம் வாத்யாரே!
*********** புழல் ஏரி *********


-

Monday, November 7, 2011

கமல்ஹாசன்: பிறந்தநாள் வாழ்த்துகள்

”சீச்சீ... உனக்கு கமலப் புடிக்குமா? அவன் கிஸ்ஸெல்லாம் அடிப்பான். நீ கெட்டப் பையன். எங்கிட்ட பேசாதே” என்று ஏழாவது எட்டாவது படிக்கும் போது கமல்ஹாசனைப் பிடிக்கும் என்று சொன்ன காரணத்தால் இப்படி சக வயது நண்பர்களால் ஓரங் கட்டப்பட்டேன். பேண்ட் போட்ட அண்ணாக்கள் ”பய விவரமானவனா இருக்கான்” என்று கண்ணடித்து சிரித்து கன்னம் தட்டினார்கள். தட்டிய கன்னத்தை தடவிக்கொண்டு புரியாமல் விழித்திருக்கிறேன்.

விக்ரமும் காக்கிச்சட்டையும் விவரம் புரிந்த பிறகு பார்த்தவுடன் எதற்கு அப்படி வம்பு அளந்தார்கள் என்று ஒரு பிட் அளவு புரிந்தது. எட்டு பிட் சேர்ந்தது ஒரு பைட் என்பதன் ஒரு பிட். சொச்சமிருக்கும் ஏழு பிட் புரிய இன்னும் ஏழு வருடங்கள் பிடித்தது. கண்ணும் கருத்துமாய் கைக்கு அடக்கமான குஷ்பூவைக் காதலிக்கும் சிங்காரவேலனாக நடித்த பொழுதுதான் எட்டாவது பிட் எனக்கு புரிந்து ஒரு பைட் கம்ப்ளீட் செய்தேன்.

சிவாஜிகணேசனை சிலாகிக்கும் அளவிற்கு கமல்ஹாசனை பொதுஜனங்கள் போற்றிப் புகழ் பாடுவதில்லை. எனக்குக் கூட மறைந்திருந்தே பார்க்கும் மர்மம் என்னவில் பத்மினியைப் தூணுக்குப் பின்னால் இருந்து லுக் விடும் சிவாஜியை ரொம்ப பிடிக்கும். அதேயளவு காக்கிச்சட்டையில் மொட்டை மாடியில் அம்பிகாவிடம் கண்மணியே பேசு என்று குழையும் கமலையும் பிடிக்கும். அவரைப் பற்றிய ஒரே சார்ஜ்ஷீட்: கிஸ் அடிப்பார். கட்டிப் பிடிப்பார். இப்படியாக தமிழ் மரபுக்கு எதிராக திரைகளில் தோன்றுகிறார் என்று என்றைக்கு கொடிபிடித்தார்களோ, இப்போது அழத் தெரியாத புதுமுகங்கள் கூட மூக்குரச முத்தம் கொடுக்கிறார்கள்.

இயற்கையாகவே நகைச்சுவை ததும்ப நடிப்பார். சென்னை பாஷை அவருக்கு கை வந்த கலை. குணா நல்லாயிருக்குன்னு சொன்னா உடனே “நிஜ வாழ்க்கையை வாழ்ந்திருக்கார்னு சொல்லு” என்று கைகொட்டி சிரிப்பார்கள். நாயகனில் “ஆ....ஆ.....” என்று அழுதது அழியாப் புகழ் பெற்று பேட்டைக்கு பேட்டை மேடைக்கு மேடை மிமிக்கிரி செய்தார்கள்.

எனக்குப் பிடித்த பத்து கமல் படங்கள். ஸார்ட்டிங் ஆர்டர் எதுவும் இப்பட்டியலுக்கு கிடையாது. ஒவ்வொரு சமயம் ஒவ்வொன்று சிறந்தது .

  1. தேவர் மகன்
  2. மகாநதி
  3. மைக்கேல் மதன காம ராஜன்
  4. நாயகன்
  5. குணா
  6. அவ்வை ஷண்முகி
  7. காக்கிச் சட்டை
  8. சிகப்பு ரோஜாக்கள்
  9. இந்தியன்
  10. உன்னால் முடியும் தம்பி


பத்துக்குள் அடக்க முடியாதவர் கமல். ரசிகர்களை நற்பணி மன்றங்கள் அமைக்கச் சொல்லி ரத்ததானம் கொடுக்க வைத்தார். ஏழைகளுக்கு நோட்டுப் புஸ்தகம் பரிசளிக்கச் சொன்னார். அநேக நட்சத்திரங்களைப் போல சுயநலத்திலும் பொதுநலமாய் நற்காரியங்கள் பல செய்வதற்கு ஊன்றுகோலாக இருக்கிறார். அவருக்கு பிறந்தநாள் வாழ்த்துகள்.

பத்துப்பாட்டும் போட்டுடுவோம்.

டிக்.டிக்.டிக்கில் மாதவியை க்ளிக்கிப் பாடும்...

-

மின்மினிக்கு கண்ணில் ஒரு மின்னல் வந்தது....

தெய்வீக ராகம்... ராஜாவின் ஆரம்ப ப்ளூட் பிட்... தெவிட்டாத தெள்ளமுது...

ராதா ராதா நீ எங்கே.... மீண்டும் கோகிலாவில்...

நீல வான ஓடையில்..... தலைவர் எஸ்.பி.பியின் ஆரம்ப ஆலாபனை அமர்க்களம்... 


அம்பிகாவின் பட்டுக் கண்ணம் கமல் தொட்டுக்கொள்ள ஒட்டிக்கொள்ளுமாம்... காக்கிச்சட்டையில்...


ஊர்வசியுடன்.... சிறிய பறவை சிறகை விரிக்க துடிக்கும்... அந்த ஒரு நிமிடம்  பாடல்....




அமலாவுடன் பூங்காற்று உன் பேர் சொல்ல என்று வெற்றி விழாவில்.....

கௌதமியுடன் காதலை வாழ வைக்கும் கமல்.. அபூர்வ சகோதரர்கள் படத்தில்...




கிண்ணத்தில் தேன் வடித்து....


-

Sunday, September 11, 2011

மலையாளக் கரையோரம்

ஓணத்திற்கு விசேஷமாய் இந்த இசைத்தொகுப்பை வெளியிட ச்சிந்திச்சு. பக்‌ஷே தாமஸமாயி. இசைக்கு மொழி கிடையாது. ஒரு புல்லாங்குழலுக்கோ வயலினுக்கோ கிட்டாருக்கோ பாஷை உண்டா? ஒரு அமெரிக்க குழந்தை “ம்...க்க்ர்..ர்ர்..ம்...” என்று ஜொல்லொழுக மழலையிட்டால் இரசிப்போம் இல்லையா அது போல இதையும் இரசிக்கலாம்.

இந்த முறை பாடல் பதிவிட்டு ஒரு மாமாங்கம் ஆகிவிட்டதாக சகோதரி கோவை2தில்லி குறைப்பட்டுக்கொண்டார்கள். அந்த கோயமுத்தூர் அம்மணியின் குறை தீர்க்க எண்பதுகளில் கொடிகட்டிப் பறந்த சில சேர நன்னாட்டு பாடல்கள் உங்கள் செவிகளுக்கும் மனதுக்கும் இதமாய்...

தாஸேட்டன் என்று அன்போடு அழைக்கப்படும் ஜேசுண்ணாவின் குரலுக்கு மயங்காதோர் உண்டோ? மலையாளத்தில் யார் பாடினாலும் அது ஜேசுதாஸ் மாதிரி இருக்கு என்று என் நண்பனொருவன் பிதற்றினான். நிச்சயம் எல்லோரோடும் ஒப்புமைப்படுத்தக்கூடிய குரல் அல்ல அது. இப்பதிவில் எம்.ஜி.ஸ்ரீகுமாரின் சில பாடல்களும் அடக்கம்.

இதில் நிறைய லாலேட்டனுடைய பாடல்களைத் தந்திருக்கிறேன். கொஞ்சம் வினீத்தும். வடக்கன்வீர கதாவில் மட்டும் முகம்மது குட்டி மாதவிக் குட்டியுடன் நடித்தது.

முதலில் கிலுக்கம்!!

கிலுகில் பம்பரம்... சம்சகம்... ம்..ம்..ம்.. சம்சகம்..



அதே கிலுக்கத்திலிருந்து.... மீனவேனலில்...



இது ஒரு அற்புதமான பாடல். சரணங்களுக்கிடையில் வீணையின் துணையில் ஆளைக் கொள்ளை கொள்ளும் பாடல். ஸ்ரீவித்யா வீணை வாசிப்பது போல அபிநயிக்கும் கோபிகே நின்விரல்.....



கோபிகா வசந்தம்.... கௌதமி கர்நாடகப் பாடகரான மோகன்லாலுடன் ப்ரேமையாய் நடித்த ஹிஸ் ஹைனஸ் அப்துல்லா...




கொச்சு மோனாக வினீத்தும் கொச்சு மோளாக மோனிஷையும் நடித்த இந்தப் பாடல் இரு இளசுகளின் காதல் விருந்து. நம் கண்களுக்கும் தான்... செவிக்கும் வைத்துக்கொள்வோமே!! மஞ்சள் ப்ரசாதவும்...



பரதத்திலிருந்து கோபாங்கனே... சுரமுரளியில் ஒழுகும்..... ராதிகே வரு..வரு... ஓமணே வரு...வரு... நீலாம்பரியில்.......




காலாபாணியிலிருந்து மலையாள ஆலோலங்கிளி தோப்பிலே.... தமிழில் எஸ்.பி.பி குழைந்திருப்பார்!!... எம்.ஜி.ஸ்ரீயுடையது கொஞ்சம் ஸ்ட்ரைட்டாக இருக்கிறது.,.. பிரியதர்ஷனின் காமிராவுக்காகவே ஆயிரம் தடவை  பார்க்கலாம்...



தூக்கிக் கட்டிய குடுமியுடன் மம்மூட்டியும் காந்தக் கண்ணழகி மாதவியும்.. ஒரு வடக்கன் வீர கதாவில்.. சந்தன லேப சுகந்தம்.... 


நெடிமுடி வேணு மேக்கபில்லாத ரம்பாவுக்கு கர்நாடக இசைக் கற்றுக்கொடுக்கும்... ஆந்தோளனம்... வினீத் மலையாள ராமராஜனாக நடித்த சர்க்கம் படத்திலிருந்து.....





எண்டே கேரளம்!!!

அடுத்த முறை தீந்தமிழ் பாடல்களோடு......

-

Tuesday, June 21, 2011

குழந்தை மனசு

ishqiya

ஒரு பாட்டைப் பார்த்ததும் அந்தப் படத்தை பார்க்க வேண்டும் என்ற பேராவல் எழுந்தது. தில் தோ பச்சா ஹை ஜி (Heart of a Child = குழந்தை மனசு) என்ற இந்தப் பாடல் ரஹெட் பதே அலி கான் எனும் கவாலி பாடும் பாகிஸ்தானிய இளம் பாடகரால் நமக்கு பரிசளிக்கப்பட்டது. படம் இஷ்கியா. சூஃபிக்களின் பக்திப் பாடல்கள் கவாலி. பதே அலி கானுக்கு வெண்கலக் கடையில் யானை புகுந்தது போல நல்ல காத்திரமான குரல். அட்சர சுத்தமாக பாடுகிறார். உத்தர இந்தியாவில் கஜலில் ஜொலிப்பார் என்று நினைக்கிறேன். பாலு மகேந்திரா படங்களில் வருவது போல காட்சிகளுக்கு பின்னால் தனி ட்ராக்காக பாடல் ஒலிக்கிறது. விஷால் பரத்வாஜின் அமர்க்களமான இசை காதுகளில் தேனாய்ப் பாய்கிறது.

நஸ்ருதீன் ஷாவின் நேர்த்தியான நடிப்பு இந்த பாடல் முழுவதும் நம்மை வசப்படுத்துகிறது. வடக்கத்திய கிராமங்களின் ஊடே செல்லும் ஒரு பேருந்து பயணத்தில் துவங்கும் இந்தப் பாடல் நம்மையும் அந்த பஸ்ஸின் கடைசி இருக்கையில் உட்கார வைத்துவிடுகிறது. "சீட் வேண்டாம்" என்று தலையசைக்கும் போதும் சரி அந்த முகவரி தெரியாத துறுதுறு விழிப் பெண்ணின் பக்கத்தில் உட்கார்ந்து பெருமூச்சு விடும் போதும் சரி அசத்துகிறார் ஷா. 

பக்க வாத்தியங்கள் இல்லாமல் பாடல் ஆரம்பித்து நஸ்ருதீன் ஷாவின் நினைவுகள் சிறகடித்து பறக்க, பக்கத்து இருக்கையில் பயணிக்கும் அந்தத் துருதுரு கண் குமரியின் தோளில் தலை சாய்த்து கனாவில் மூழ்குகிறார். அடுத்த கணம் திரையில் வித்யா பாலன் வந்து நம் மனதை கொள்ளையடிக்கிறார். இங்கே நமக்கு காதல் நரம்பு புடைக்கிறது. நஸ்ருதீன் ஷாவின் நடிப்பிற்கு இணையாக இளமை துள்ளலில் வருகிறார் விபா. கண்களை விரிய வைக்கிறார். பாடல் முழுக்க வரும் காட்சி அமைப்புகள் வெகு சாதரணமாக நாம் ஷாவை பின் தொடர்வது போல அமைந்துள்ளது குறிப்பிடதக்கது. படாடோக வாத்தியங்கள் இல்லாமல் மெல்லிய இசை. கிடார் அடி தூள்! Strumming பட்டையைக் கிளப்புகிறது. 

டீக்கடையில் பூண்டு உரித்துக்கொண்டிருப்பவன் தனது காதலியின் கையை ஆசையாய் வருட அவள் பூண்டு உரித்த தோளியை ரசமாக அவன் முகத்தில் வீசுகிறாள். ஒரு பெருமூச்சோடு இதைப் பார்க்கும் ஷா, முகத்தில் அவரது எண்ணத்தைக் கொண்டு வரும் காட்சி ஒன்று மற்றொமொரு அற்புதம். புத்தம் புது தேன் மலராக குளித்து விட்டு வரும் விபாவை பூ போட்டு அழைக்கும் அர்ஷத் வர்ஷி நான்காவது நிமிடத்தில் இருந்து பச்ச்சுக்கும் முத்தக்காட்சிகள் பற்றிய வர்ணனை என்னைப்போன்ற சிறுவர்களால் வார்த்தைகளில் வடிக்கமுடியாதது.

கிராமங்களின் வழியாக செல்லும் பேருந்தை எடுத்த லாங் ஷாட் நிச்சயம் அனேக ரசிகர்களின் விசேஷ பாராட்டை பெற்றிருக்கும். வித்யா பாலன் நம்மூர் ஆட்கள் கண்ணில் இன்னும் படவில்லையா? வேண்டாம். தனுஷுக்கு ஜோடியாக போட்டு ரோஸு ரோஸு ரோஸு என்று தெருவில் ஆடவிட்டு படுத்துவார்கள். நாம் இன்னும் நிறைய முன்னேறவேண்டும் போலத்தான் இருக்கிறது.


அதீத காதல் காட்சிகள் நிரம்பிய இந்தப் பாடலின் சுட்டி:  
http://www.youtube.com/watch?v=WI70m8-WRto&NR=1

ஹே பக்வான்! Vidhya பாலனிடமிருந்து முஜே பச்சாவ்!! मुझे बचाव !!

பின் குறிப்பு: கண்டதும் காதலில் விழும் இளகிய மனம் படைத்தவர்கள் மேற்கண்ட பாடலைப் பார்க்கவேண்டாம் என்று அறிவுத்தப்படுகிறார்கள். 

பட உதவி: www.bollywoodworld.com

-

Friday, June 10, 2011

நங்கை நிலாவின் தங்கை

சில "சங்கீத சாம்ராட்கள்" தேய்ந்த ரெகார்ட் போல ஒரே ராகத்தை பல படங்களுக்கு பற்பல பாடல்களுக்கு உபயோகப்படுத்தும் வல்லமை படைத்தவர்கள். ஒக்க ராகம். ஓராயிரம் படம். வெளிநாட்டிலிருந்து நைசாக மெட்டு உருவும் வித்தை கற்றவர்கள். "அழகிய லைலா" பாட்டுக்கு ஒரு ஆல்பத்தையே கொள்ளையடித்து போட்டு தமிழ் சினிமாவில் துண்டு போட்டு சீட்டு பிடித்த இசைஞர் உண்டு. மேஸ்ட்ரோ இளையராஜாவிடம் நிருபர் ஒருவர் பேட்டியில் கேட்டபோது "ஏழு ஸ்வரங்கள் தானே இருக்கு... அதுக்குள்ள தான் எல்லா பாட்டுக்கும் மெட்டு போட முடியும்" என்றாராம். இருந்தாலும் சில இசை இயக்குனர்கள் சுய ஈயடிச்சான் காப்பி அடித்துக் கொள்வது கொஞ்சம் ஓவர்தான். சமீபத்தில் வந்த எங்கேயும் காதல் படத்தில் வந்த நங்கை நிலாவின் தங்கை நடனம் மற்றும் மெட்டினால் என்னைக் கவர்ந்தது.
 
நேற்று என் மனைவியிடம் இது மைக்கேல் ஜாக்சன் போல இருக்கு என்று அளந்து கொண்டிருந்தேன். யாரோ ஒரு புண்ணியவான் மைக்கேல் ஜாக்சன் ஆடியதற்கு நங்கை நிலாவின் தங்கையை போட்டு பிசைந்து ஒரு வீடியோ யூட்டுபில் ஏற்றியிருக்கிறார். அற்புதம்.

முதலில் மைக்கேல் ஜாக்சன் துரையின் The Way You Make Me ஃபீல். ஒரிஜினல் வர்ஷன்.


மைக்கேல் ஜாக்சன்.. ஒரு நிலாவின் தங்கையை பின்தொடர்ந்து ஆடியது. கலக்கியவர் கலக்கிவிட்டார்.


ஜெயம் ரவியை வேடிக்கை பார்க்கவிட்டு ஹீரோயினை சுற்றி வெள்ளைக்கார ஆட்டக்காரர்கள் ஆடியது... எங்கேயும் காதல் படத்தில் இருந்து... இது தமிழ்ப் பட ஒரிஜினல்.


போரேன்... வேலை நிறையா கிடக்கு.. எங்கயாவது மொனாகோ, அன்டோரா போன்ற நாடுகளில் மெட்டமைத்த ஸ்ருதியான பாடல்கள் கிடைத்தால் நீங்களும் நானும் 'ஒரு பட' இசையமைப்பாளர் தான்.  எல்லாத்துக்கும் சுழி நல்லா இருக்கணும்.
 
பட உதவி: spreadshirt.com
-

Thursday, June 2, 2011

இளையராஜா: ஒரு யுகக் கலைஞன்

இப்போது நீங்கள் படிக்கப் போவது ஒரு நான்-லினியர் பதிவு. அதாவது ஒரு அரை மணி நேரம் இளையராஜாவை பற்றி நினைத்தால் என்னென்ன பாடல்கள் நினைவில் வந்து அலை மோதிவிட்டு போனதோ அந்த பாடல்களைப் பற்றி எழுதியிருக்கிறேன். காலக்கிரமமாகவோ, அகர வரிசைக்கிரமமாகவோ, நடிகர்களின் வரிசையாகவோ, இயக்குனர்களின் வரிசையாகவோ, காதல்,சோகம், பாசம் போன்ற பகுப்புகளின் வரிசையாகவோ இது இருக்காது. ஒரு ரசிகனின் அரை மணி நேர பிதற்றல்கள் இது.


தாய் மூகாம்பிகையில் வரும் "ஜனனி ஜனனியும்", அலைகள் ஓய்வதில்லையின் "புத்தம் புது காலை"யும், குளத்தில் கழுத்தளவு தண்ணீரில் நின்று சாதகம் செய்யும் ஆவாரம்பூ விடலைப்பையன் பாடும் "மந்திரம் இது மந்திரம்"மும், ரேக்ளா ரேஸ் முடிந்து நாலைந்து பேர் முரட்டுக்காளை ரஜினியை தூக்கி "அண்ணனுக்கு ஜே!" சொல்லி சூப்பர்ஸ்டார் பாடும் "பொதுவாக என் மனசு தங்கம்"மும், கேப்டனின் பிரபாகரனில் ரம்யா கிருஷ்ணன் துப்பாக்கி தூக்கிக் கொண்டு குத்தாட்டம் போடும் "ஆட்டமா"வும், தண்ணீர் சொட்டும் முற்றத்தில் நின்று சொட்டுக்களை கையால் அலசி கஸ்தூரியின் ஆசைக்கு பிரபு பாடும் "சின்ன சின்ன தூறல் என்ன"வும், மணியின் மௌனராகத்தில் மைக் இல்லாமல் மோகன் பாடும் "நிலாவே வா"வும், நாயகனில் கடற்கரையோரத்தில் அந்த சிறுவன் இருகைகொண்டு கிளாஸ் டீ பிடித்து குடிக்கும் போது "ஆ... ஆ..." என்று ஆரம்பித்து வரும் "தென்பாண்டி சீமையிலே"யும் வேலு நாயக்கர் பேரன் அவரிடம் "நீங்க நல்லவனா கெட்டவனா" கேட்கும்போது வரும் பி.ஜி.எம்மும், சிங்காரவேலன் கமல் குஷ்பூவை ஸ்ட்ரக்ச்சரில் படுத்துக்கொண்டே தள்ளிக்கொண்டு போய் பாடும் "இன்னும் என்னை என்ன செய்யப் போகிறாய்"யும்,

கொஞ்சம் மூச்சு விட்டுக்கோங்க... இன்னும் பாக்கி இருக்கு...

மதுவையும் திராட்சையையும் வாயால் ருசித்து டிம்பிள் கபாடியாவை கண்ணால் ரசித்து விக்ரம் கமல் பாடும் "மீண்டும் மீண்டும் வா"வும், அம்பிகாவை கமல் ராதா கிருஷ்ணன் போஸில் இடுப்பில் ஒரு கையும், மேலே தூக்கிய கையோடு மறு கையும் கொண்டு  நடுக் கூடத்தில் அரவணைத்து பாடும் "வந்தாள் மஹா லக்ஷ்மியே..."யும், அதே அம்பிகாவை காக்சிசட்டையில் கட்டிபிடித்து கமல் கேட்கும் "கண்மணியே பேசு..."வும், இயக்குனர் சிகரத்தின் உன்னால் முடியும் தம்பியில் சீதாவுடன் சைக்கிளில் சென்று தரையில் விழுந்த பூக்கள் தானாக மரத்தின் மேல் செல்லும் போது கமல் பாடும்  "இதழில் கதை எழுதும் நேரமிது .."வும், கார்த்திக்கை அந்த புதுமுக குண்டு நடிகை "எஸ் ஐ லவ் திஸ் இடியட்" என்று காதலுடன் திட்டி, பாடும் நிலா பாடிய "காதல் கவிதைகள் படித்திடும் நேரம்"மும், "காளிதாசன் உன்னை கண்டால் மேகதூதம் பாடுவான்" என்று சரணத்தில் அமைந்த "வா வா வா கண்ணா வா" என்ற வேலைக்காரர் ரஜினி அமலாவை பனி பிரதேசத்தில் பரதநாட்டியம் ஆட விட்டு பாடியதும், கமல்ஹாசன் கம்பு சுழற்றி கெளதமிக்கு வீரம் காண்பித்து பெரியத் தேவர் மகனாக "சாந்து பொட்டு சந்தன பொட்டு" இட்டும் ரேவதியை "இஞ்சி இடுப்பழகி" என்று வர்ணித்து பாடியதும், 

இன்னும் கொஞ்சம் மூச்சு விட்டுக்கோங்க... இன்னும் கொஞ்சம் பாக்கி இருக்கு... 

வயதில் அரை செஞ்சுரி போட்ட நடிகர் திலகத்தை நாயகனாக்கி அழகு பார்த்த இயக்குனர் இமயம் சிவாஜிகணேசனுக்கு தந்த முதல்மரியாதையில் வந்த "பூங்காற்று திரும்புமா" வும் மணல் வெளியில் ஓடி வரும்போது வசனத்திற்கு வேலை தராத அந்த புல்லாங்குழல் இசையும், மேட்டுக்குடி ஜனங்கள் கேட்கும் இடத்தில் சேரிக்கும் பாட்டு படி என்று "சிந்து" சுகாசினி "பைரவி" கட்டிய சிவகுமாரை கேட்கும் "பாடறியேன்... படிப்பறியேன்..."னும், பி.எஸ்.ஏ சைக்கிள் கொண்டு நண்பர்களுடன் தாத்தா ஊரில் பச்சை பசுமையில் சுற்றும் கார்த்திக்கை வருஷம் பதினாறில் "ஏய் அய்யாசாமி.. உன் ஆளை காமி" என்று சார்லி மற்றும் நண்பர் மும்பையிலிருந்து வந்திறங்கிய (படத்தில்) ஒல்லி குஷ்புவை காட்டச் சொல்லி பாடியதும், அதே குஷ்பூவை கிழக்கு வாசலில் "தளுக்கி தளுக்கி தான்" என்று சின்னி ஜெயந்துடன் கார்த்திக் வரப்பில் வெறுப்பேற்றியும் ரேவதியை "பச்சமலை பூவு" பாடி தூங்க வைத்ததும், கட்டு கட்டாக வேலங்குச்சி, ஆலங்குச்சி அனுப்பி எஜமான் ரஜினியை காதலித்து மீனா பாடும் "ஆலப்போல் வேலப்போல்"ம்,வெள்ளை வேட்டி சட்டை போட்டு வழித்து தலை சீவி சந்தனப் பொட்டிட்டு சின்னக்கவுண்டர் சுகன்யாவின் முத்து மாலையை பிடித்து அருவி விழும் பாறையில் இழுக்கும் போது பாடும் "முத்து மணி மாலை"யும்,  பி.சி ஸ்ரீராமின் ஒளி அலைகளின் நடுவே ஊஞ்சலில் ஆடிக்கொண்டே பிரபுவை நினைத்து அமலா பாடும் "நின்னுக் கோரி வரணு"மும், மழலைப் பட்டாளங்க ளை  வைத்து மணி எடுத்த அஞ்சலியில் வரும் "மொட்ட மாடி மொட்ட மாடி ஒரு லவ் ஜோடி லவ் ஜோடி"யும்

இன்னும் இன்னும் கொஞ்சம் மூச்சு விட்டுக்கோங்க... இன்னும் இன்னும் கொஞ்சம் பாக்கி இருக்கு... 

கேம்ப் ஃபயர் மூட்டி கிடார் இசைத்து ரேவதி முன் முரளி பாடும் "துள்ளி எழுந்தது பாட்டு"ம், அடவு கட்டி ஆட ஆசைப்படும் நாசர் அரிதாரம் பூசிய அவதாரத்தில் வரும் "ஒரு குண்டு மணி குலுங்குது.."வும், அமலாவை தேடித் தேடி மோகன் பாடும் "தேடும் கண் பார்வை தவிக்க..."வும், புதுப் புது அர்த்தங்களில் காதலுக்கு குருவாயூரப்பனை சாட்சியாக வைத்து எஸ்.பி.பி ரகுமானுக்கும் பொசஸிவ் கீதாவுக்கும் பாடிய "குருவாயூரப்பா குருவாயூரப்பா நான் கொண்ட காதலுக்கு"ம், புது நெல்லு புது நாத்தில் தோளில் தூக்கி கொண்டு போகும் மச்சானை காலில் கிச்சு கிச்சு மூட்டி சுகன்யா பாடும் "கருத்த மச்சான்... கஞ்சத்தனம் எதுக்கு வச்சா"னும், பாபு நடித்த பாரதிராஜாவின் என் உயிர்த் தோழனில் வரும் "ஏ ராசாத்தி ராசாத்தி"யும், காதலியின் நினைவில் ராத்திரி ராத்திரி ஊரில் உள்ளோருக்காக கையில் காதலி கொலுசு தட்டி விஜயகாந்த் பாடிய படத்தில் ரேவதி கோயிலில் பரதநாட்டியம் ஆடும் "இன்றைக்கு ஏன் இந்த ஆனந்தமோ"வும், சகல கலா வல்லவனான கமல் அம்பிகாவுடன் கயற்றுக் கட்டிலில் படுத்து பாடும் "நிலா காயுது..."வும், நந்திதா தாஸ் பார்த்திபனின் வீட்டு வேலைக்காரியாகவும் முன்னாள்  காதலியாகவும் வரும் அழகி படத்தில் வரும் "பாட்டு சொல்லி பாடச் சொல்லி"யும், டிக் டிக் டிக்கில்  பரத நாட்டியம் ஆடும் மாதவியை கமல் படுத்து படுத்து போட்டோ எடுக்கும் "பூ மலர்ந்திட மலர்ந்திடும்"வும், கண் தெரியாத ராஜபார்வை கமல் காதலி மாதவி மேல்  கை பட்டும் படாமலும் பாடிய "அழகே.. அழகு.. தேவதை.."யும், கொஞ்சம் குண்டான குஷ்பூ சத்யராஜுடன் ப்ரம்மாவில் பாடும் "வருது வருது இளங்காற்றும், பல் காட்டி சிரித்தும், சீறியும் சீயான் விக்ரம் நடித்த பிதாமகனில் வரும் "இளங்காற்று வீசுதே"யும், பைத்தியம் பிடிக்கும் கல்லூரி மாணவனாக விக்ரம் நடித்த சேதுவில் வரும் "மாலை என்  வேதனை கூட்டுதடி"யும், கயிறு கட்டி மரத்தின் மேல் ரேவதியை தூக்கி பாண்டியன் மண் வாசனையில் பாடும் "பொத்தி வச்ச மல்லிகை மொட்டு"ம்  ................................................................................................



முடியலை... இன்னும் இந்த பட்டியல் முடியலை.. இவ்வளவும் கேட்பதற்கும் இது பூபாளமா, மோகனமா, மத்யமாவதியா, நிலாம்பரியா, கரஹரப்ப்ரியாவா, சங்கராபரணமா, தோடியா, வசந்தாவா, சாரங்காவா என்றெல்லாம் தெரியவேண்டிய அவசியம் இல்லாமல் அப்படியே ரசிக்க வைத்த இசைதேவன், இசைஞானி, இளையராஜாவிற்கு இந்த ரசிகனின் பிறந்தநாள் வாழ்த்துக்கள். 

பின் குறிப்பு: இது ஒரு மீள் பதிவு. போன வருஷம் ராஜாவுக்கு எழுதிய வாழ்த்தை எடுத்து தலைப்பை மாற்றி பாட்டையெல்லாம் போல்ட் பண்ணி இங்கே போட்டுட்டேன்.

-

Thursday, April 28, 2011

ஜானகி மந்திரம்!

ரொம்ப சீரியஸா நான் சயின்ஸ்ல சிலுத்துக்கிட்டு சிலிகான் காதலி எழுதிகிட்டு இருந்த போன வாரம் ஜானகியம்மாவின் பிறந்தநாள் வந்துட்டு போச்சு. எண்பதுகளில் கடைசியில் என்னுடைய கொப்புளிக்கும் இளம் பிராயத்தில் எஸ்.பி.பி யுடன் சேர்ந்து அவர் பாடிய பல டூயட்டுகள் நிறைய பேரை காதலிக்க வைத்தது. பல பேரை பித்தம் பிடிக்க வைத்தது.

என்னுடைய பள்ளி/கல்லூரி நாட்களில் நிறைய தாவணி போட்ட பெண்கள் வெள்ளித்திரையில் ராதா "ஊரு சனம் தூங்கிருச்சு ஊதக் காத்தும் அடிச்சிருச்சு" என்று ஏங்கிப் பாடியது போல இந்தப் பாட்டை பாயில் படுத்து பாடிக்கொண்டு இன்பக் கனா பல கண்டார்கள். அப்படி பாடியவர்கள் பார்ப்பதற்கு ராதா போலும் இல்லை குரலிலும் ஜானகி போலும் இல்லை என்பது என் இளமைக்கு ஒரு வருத்தமான செய்தி தான்.

"இச்.இச்." என்று அனு கன்னத்தில் ரெண்டு வைத்து பாக்கியராஜ் தனது கட்டிலை ரோட்டுக்கு மேலே ஒரு இராப்பொழுதில் பறக்கவிட்டு இந்த பாட்டு சீனை ஆரம்பித்திருப்பார். படம் சின்ன வீடு. பாட்டு ஆரம்பித்து கொஞ்ச நேரத்தில் தனது உடற்பயிற்சிகளை அவர்பாட்டுக்கு கடமையாய் செய்துகொண்டிருப்பார். இதில் ஒரு குறிப்பிட்ட அம்சம் என்னவென்றால் கூட ஆடும் அனுவிற்கு ஆடத்தெரிந்தால் கூட ஜோடியாக எக்செர்சைஸ் தான் கட்டாயமாக பண்ணவேண்டும். ஸ்டெப்ஸ் வைத்து பார்க்கும் போது புலியூர் சரோஜா அக்காவாகத்தான் இருக்கணும். அக்கா ஒரு ஃபிட்னெஸ் சென்ட்டர் வைத்திருந்தால் நன்றாக ஓடியிருக்கும். எஸ்.பி.பி வழக்கம் போல அற்புதமாக பாடி நமக்கும் ஒரு சின்ன வீடு செட் பண்ணும் ஆசையை கிளப்பியிருப்பார். ராஜாவின் ஆளை இழுக்கும் இசை. நடுநடுவே வரும் தக்.தக்..தக்.தக். ரசிக்கும் நமக்கு ஒரு அழகிய திக்.திக்.திக்.திக்.

பாவம். எவ்வளவு நல்லா நடிச்சாலும் வினீத் ஒரு ராசியில்லாத நடிகர் அப்படின்னு முத்திரை குத்தி ஓரங்கட்டி வைத்துவிட்டார்கள். வினீத் நடித்த ஆவாரம் பூ ஒரு அற்புதமான படம். ஏ படம் தான். ஆனாலும் ஒரு மனநிலை பிழன்றவனின் உள்ளத்தை ஓவியமாக காண்பித்த படம். வினீத் உடன் நடித்த நந்தினியும் மிக நன்றாக நடித்திருப்பார். என்னுடைய கல்லூரிக் காலங்களில் வந்த படம் இது. பாதி பேர் இதை இளமைக்கு விருந்தாக பார்த்தார்கள். இந்தப் படத்தில் ஜேசுதாஸ் பாடிய மந்திரம் இது மந்திரம் எனும் பாடல் இளையராஜாவின் ஒரு உன்னத படைப்பு. நன்றாக படமாக்கப் பட்டிருக்கும். இப்பதிவின் நாயகி ஜானகி ஆதலால் அம்மையாரும் எஸ்.பி.பி யும் சேர்ந்து பாடிய சாமிகிட்ட சொல்லிவச்சு..


சுகமான சுமையாக சௌந்தர்யாவை உப்பு மூட்டை தூக்கிக்கொண்டு கார்த்தி பாடுவதை நான் கல்லூரியில் பயிலும் காலத்தில் மெட்ராசுக்கு வந்த போது குரோம்பேட்டை வெற்றி தியேட்டரில் கொசுக்கடியோடு தியேட்டர் ரொம்ப ரிலீஸ் ஆன ரெண்டாம் நாள் பார்த்தேன். படத்தில் ஆர்.வி.உதயகுமார் மாமா செண்டிமெண்ட், அப்பா செண்டிமெண்ட், லவ்வர் செண்டிமெண்ட் என்று ஓராயிரம் செண்டிமெண்ட் வைத்து பொளந்து கட்டியிருப்பார். என்ன இருந்தாலும் மனதைரியத்தோடு அத்தனை கடியிலும் (கொசு..கொசு..) விடாப்பிடியாக கடைசி வரை அந்தப் படம் பார்த்துவிட்டு வெளியே வந்தபோது யாரோ ஓடிவந்து எனக்கு 'ரசிகபூஷன்' விருது கொடுக்கப் போகிறார்கள் என்று நினைத்தேன். உஹும்.. அப்படி ஒன்றும் நடக்கவில்லை. இருந்தாலும் எஸ்.பி.பியும் ஜானகியம்மாவும் பாடிய நெஞ்சுக்குள்ள இன்னாரென்று ஒரு சூப்பெர்ப் ஹிட். எனக்கு இன்னொரு பேர் கார்த்திக் என்று இந்த பதிவு படிப்போர் அறிக. அப்போது நான் கல்லூரியில் படித்துக்கொண்டிருந்தேன் என்றும் அறிக.


ரஞ்சிதா சாமியாரிடம் மாட்டிக்கொள்வதற்கு வெகு காலத்திற்கு முன்பு நடித்த கர்ணா படத்தில் வரும் மலரே மௌனமாவும் நல்ல பாடல். கல்லூரியில் படித்துக்கொண்டிருக்கும் போது தஞ்சாவூர் குந்தவை நாச்சியார் கல்லூரிப் பெண் ஒருத்தி பேருந்து பயணத்தில் பெண்கள் பக்கத்தில் அமர்ந்து மௌனமாக வந்த போது என்னுடைய ஒரு அராத்து நண்பன் கட்டை குரலில் "மலரே... மௌனமா" என்று பாடியதும் அந்தப் பெண் அலறியடித்துக்கொண்டு அடுத்த ஸ்டாப்பில் இறங்கி விடுவிடுவென்று நடையை கட்டியது. பயத்தில் பத்து நாள் யாரிடமும் பேசியிருக்காது என்பது திண்ணம். இதை விட அவமானம் சைட் அடிக்கும் பிராயத்தில் ஒருத்தனுக்கு இருக்க முடியாது. இருந்தாலும் ரொம்ப நாளைக்கு அவன் ம.மௌ மௌனமாக பாடிக்கொண்டே இருந்தான். "மாப்ள நல்லவேளை கால்ல கிடக்கறதை கயட்டி அடிக்காம விட்டாளே!" என்று நாங்களும் ரொம்ப நாள் அவனை சத்தமாக ஓட்டிக்கொண்டிருந்தோம். பாடலில் ஜானகியம்மாவின் அந்த கொஞ்சல் ததும்பும் ஏற்ற இறக்கங்கள் ரஞ்சிதாவிற்கு நடிக்கும்(?!) போது நிச்சயம் பக்க பலமாக இருந்திருக்கும்.

அண்ணனும் தம்பியும் தன் மாமன் மகளை லவ்வும் படம் சின்னத் தம்பி பெரிய தம்பி. நதியா வழக்கம் போல இழுத்துப் போர்த்திக்கொண்டு நடித்த படம். இக்காலத்தில் நடிக்கும் ஹீரோயின்கள் கவனிக்கவும். சுடிதார், ஸ்கர்ட் போன்று அந்தக் காலத்தில் அதி நவீன உடைகள் அணிந்து நடித்து நதியா வளையல், நதியா புடவை, நதியா பொட்டு, நதியா ஸ்கர்ட்டு என்று சகலத்திர்க்கும் தன் பெயரை சார்த்திக்கொண்ட பெருமை பெற்றவர். நல்லவேளை எந்த கொலை வெறி ரசிகனும் பித்தம் தலைக்கேறி தன்னை பெற்றவர்களை நதியா அப்பா, நதியா அம்மா என்று அழைக்கவில்லை. குஷ்பு அலைக்கு முன்னர் நதியாவின் நதியலை தமிழக ரசிக நெஞ்சங்களை இழுத்துச் சென்றது.


நல்ல குளிரில் பிரபுவையும் ராதாவையும் ஓடவிட்டு எடுத்த இந்த பாடல் நம் செவிகளுக்கு ஒரு அற்புதமான விருந்து. கைராசிக்காரன் என்ற இந்தப் படம் ராசியாக போணியானதா என்று தெரியவில்லை ஆனால் இந்தப் பாடல் ஒரு அமிர்தம். ஒரு நூறு வயலின்கள் ஒரு சேர இழுஇழு என்று இழுக்கும் போது நாயகனும் நாயகியும் ஓடிவருவது முதல் டெம்போ. அப்புறம் எடுத்த வுடனேய அண்ணன் எஸ்.பி.பி. ஆரம்பிக்கும் நிலவொன்று கண்டேன்... அடாடா.. ஒரு ரெண்டு மூணு தடவை அந்த ஆரம்பத்தை மட்டும் கேட்டுவிட்டு தான் பாட்டிர்க்குள்ளேயே செல்வேன். கண்ணீரின் ஈரம் சுடுகின்ற நேரம் என்று ஆரம்பிக்கும் ஜானகியின் குரல் குற்றாலமாக வரும்.

பின் குறிப்பு: சிலிகான் காதலி குறுந்தொடராக எழுதலாம் என்று நினைத்தேன். நீள்கிறது. அதனால் இந்தப் பதிவு அதற்கு ஒரு இடைவேளையாக இங்கே. அப்பாடி என்று நாலு பேர் பெருமூச்சு விடுவது கேட்கிறது. விடாது கருப்பாக உங்களை விடாது சிலிகான்.

பட உதவி: us.7digital.com
-

ஆடிய பிற ஆட்டங்கள்

Related Posts with Thumbnails