Showing posts with label இராமாயணம். Show all posts
Showing posts with label இராமாயணம். Show all posts

Monday, February 1, 2016

எனக்கு இருட்டுன்னா பயம்....

சரி.. சின்னதாவே முடிச்சுக்கிறேன். ஸ்ரீராமன் சிருங்கிபேரபுரத்தில் சீதா லக்ஷ்மணனுடன் முகாமிட்டிருக்கிறான். வேடர்குல குகனின் ராஜாங்கத்துக்குட்பட்ட இடம். இரவு சீதையும் ராமனும் சயனித்திருக்க லக்ஷ்மணன் வில்லோடு காவல் காக்கிறான். “உங்களுக்கும் சிரமம் வேண்டாம்.. தாங்களும் நித்திரைக்குப் போகலாம். நான் பார்த்துக்கொள்கிறேன்” என்று குகன் வலிய வந்து வற்புறுத்துகிறான். ”இல்லையில்லை.. எனக்கு தூக்கம் வரவில்லை.. அண்ணாவுக்கு நான் காவல் நிற்கிறேன்...” என்று லக்ஷ்மணன் மறுத்து “நீங்கள் ஓய்வெடுத்துக்கொள்ளுங்கள்..” என்று குகனை போகச் சொல்கிறான்.

குகனும் அந்த இடத்தைவிட்டு நகர்வதாயில்லை. இருவரும் குறுக்கும் நெடுக்குமாக நடை போட்டுக்கொண்டு விடிய விடிய காவல் புரிகிறார்கள். [கடைசியில் பரதன் தேடிக்கொண்டு வந்தவுடன் அவனிடம் “இமைப்பிலன் நயனம்” என்று லக்ஷ்மணனின் புகழ்பாடுகிறான் குகன் என்பது வேறு கதை.]

ராமன் பதினான்கு வருடங்கள் காடாள வந்தவுடன்... பரதன் சக்கரவர்த்தியாக பட்டம் கட்டிக்கொண்டு அவனின் ஆளுகைக்கு உட்பட்ட இந்த குகனிடம் ராமனைத் தீர்த்துக்கட்ட திட்டம் தீட்டியிருக்கலாம் என்று லக்ஷ்மணனுக்குச் சந்தேகம். பரதன் லக்ஷ்மணனிடம் சொல்லி ராமனை வேலை தீர்க்கச் சொல்லியிருக்கலாம் என்பது குகனின் ஐயம்.

மேற்கண்ட இந்த காட்சிக்கு சேங்காலிபுரம் ப்ரம்மஸ்ரீ அனந்தராம தீக்ஷிதர்வாள் நகைச்சுவையாகச் சொல்லும் திருஷ்டாந்தம் கீழே...

“ஒருத்தன் பாம்பேலேர்ந்து வந்த வைர வியாபாரி. இன்னொருத்தன் மெட்ராஸ் ஆளு. ரெண்டு பேருமா ஹோட்டல்ல ரூம் போட்டு உக்காண்டு வியாபாரம் பேசறான்கள். பாம்பே ஆள் முன்னாடி வைரம் வைரமா குமிச்சுக் குமிச்சுக் ஏழெட்டுக் கூறு கட்டி வச்சுருக்கான். மெட்ராஸ் ஆள் நிறையா முத்துக் கல்லு, சேப்புக் கல்லு, மரகதக் கல்லுன்னு பத்து கூறு கட்டி குமிச்சு தன் முன்னாடி வச்சிருக்கான்.

ரெண்டு பேருமா ”உங்களைப் போல உண்டா?” ஆஹா... நீர் அப்படி.. நீர் இப்படி..ன்னு உம்மைப் போல நியாயஸ்தன் லோகத்துல உண்டா? நீரே சத்தியசந்தன்...ன்னு புகழ்ந்து பேசிண்டு வியாபாரம் பண்ணிண்டிருக்கான்கள். திடீர்னு லைட்டு போயிடுத்து. கும்மிருட்டு. முன்னாடி யாரு இருக்கான்னே தெரியல... ரூம்ல இவனுங்க ரெண்டு பேர் மட்டும்தான். உடனே ரெண்டு பயலும் என்ன பண்ணினான்கள் தெரியுமோ? படக்கன்னு ஒருத்தொனக்கொருத்தன் அடுத்தவனோட ரெண்டு கையையும் கெட்டியமாப் பிடிச்சுண்டுட்டான்.

”என்னடா? இப்படி பிடிச்சிக்கிறியேன்னு கேள்வி கேட்டுண்டு.. ரெண்டு பேருமே எனக்கு இருட்டுன்னா பயம்னு சேர்ந்தே சொல்றான்கள்.... இந்தப் பயல்களுக்கு இருட்டா பயம் அங்க... முன்னாடி குமிச்சிருக்கிறதில ஒண்ணு ரெண்ட எடுத்து பாக்கெட்ல போட்டுண்ட்டா என்ன பண்றதுங்கிற பயம்... அந்த மாதிரி இருக்கு லக்ஷ்மணனும் குகனும் சேர்ந்து காவல் காத்தது.....”


‪#‎இராமாயணம்‬

Thursday, October 15, 2015

சேங்காலிபுரம் அனந்தராம தீக்ஷிதர்வாள்

இன்றைக்கு ரொம்ப விசேஷமான நாள். ஸ்ரீராமச்சந்திரமூர்த்தியும் கிருஷ்ண பரமாத்மாவும் தோள்மேல் கைபோட்டுக்கொண்டு அனுக்கிரகம் பண்ண அடியேன் கிரஹத்துக்கு எழுந்தருளியிருக்கிறார்கள். ஸ்ரீராமநவமியும் ஸ்ரீஜெயந்தியும் எங்கியாவது ஒண்ணா வருமோ? மஹாப்ரளயம் வந்தாக் கூட திரேதாயுகமும் துவாபரயுகமும் சேருமோ? சக்ரவர்த்தித் திருமகனும், மாடு மேய்க்கும் கோபாலனும் ஏககாலத்தில் யாரிடமாவது எழுந்தருளியிருக்கிறார்களா? மரியாதை புருஷோத்தமனும் லீலா புருஷோத்தமனும் யார் வீட்டு வாசல்படியாவது தாண்டி வீட்டிற்குள் பிரவேசித்திருக்கிறார்களா? ஆச்சரியமான ஆச்சரியம்.
மத்தியானமாக அம்மாதான் ஃபோன் பண்ணினாள்.
“கார்த்தி.... கூரியர் வந்துருக்குடா... பெரிய பார்ஸல்.. புக்ஸ் எதுவும் ஆர்டர் பண்ணினியா?”
“எங்கேயிருந்து வந்துருக்கும்மா?”
“சேலம்...”
“ஓ! வெரி குட். பிரிச்சுப் பாரு... நானும் வந்து அனுபவிக்கிறேன்...”
டொக்.
இரண்டு நாட்களுக்கு முன்னால் ஆர்டர் பண்ணினேன். இன்று இரண்டு பேரும் பரிவார தேவதைகளோடு பறந்து வந்துவிட்டார்கள். புண்ணியம் செய்(த) மனமே.. மனமே... “ஸ்ரீராம ராம ராமேதி.. ரமே ராமே மனோரமே....” பாட்டி இராத்திரி பாயில் உட்கார்ந்து உரக்கச் சொல்லுவாள். பின்பு "ஹே ப்ரபோ"ன்னு முணுமுணுத்துக் கட்டையை நீட்டுவாள். “க்ருஷ்ண..க்ருஷ்ண...” என்று உத்தரணி தீர்த்தம் விடுவாள்.
ஆஃபீஸிலிருந்து வீட்டிற்குள் நுழைந்தவுடன் ”எங்கே..எங்கே”ன்னு பக்தி டோஸுக்குப் பரபரத்தேன். ப்ரம்மஸ்ரீ அனந்தராம தீக்ஷிதர்வாள் உபன்யாசம் பண்ணிய ஸ்ரீ ராமாயணம் மற்றும் ஸ்ரீ மஹாபாராதம் இரண்டும் எம்பித்ரீ ஆடியோ சிடிக்களாக சோஃபாவில் வசித்தது. ஓடோடிப்போய் மூஞ்சி கைகால் அலம்பிவிட்டு நெத்திக்கு ஒத்தை இட்டுக்கொண்டு பேக்கைப் பிரித்துப்பார்த்தேன். சீதாலக்ஷமன ஹனுமன் சமேத பட்டாபிஷேக ராமர் படம் போட்ட இராமாயண பேக்கும், பார்த்தனுக்குச் சாரதியாய் பக்தனுக்கு சாரத்யம் பண்ணிக்கொண்டு பாஞ்ச சன்யம் ஊதும் கிருஷ்ணன் படம் போட்ட மூன்று மஹாபாரத பேக்கும் தரிசனம் ஆயிற்று. ராமாயணம் 28 ஸிடி, மஹாபாரதம் 78 ஸிடி. துளசி வாசனை. மகிழ்ச்சிக்கு எல்லையேது?
“போன ஜென்மத்துல புண்ணியம் பண்ணியிருந்தாதான் பகவத் குணம் கேட்கணும்னு தோணுமாம்...” என்று ஸ்ரீமத் பாகவத சப்தாகத்தில் தீக்ஷிதர்வாள் அழுத்தம்திருத்தமாகச் சொல்லியிருக்கிறார். புண்ணியம் செய்திருக்கிறேன். டபுள் புண்ணியம். எப்படியென்றால் ஸ்ரீரமண சரிதம் ஆடியோ புஸ்தகம் பாம்பே கண்ணன் அனுப்பினார். இந்த உபன்யாசங்கள் முடியும் வரை சேப்பாயியில் பாட்டு, ஜோக்குகளுக்கு உபவாசம் இருக்கப்போகிறேன். ஐந்தாம் வேதத்தையும் நடையில் நின்றுயர் நாயகனைப் பற்றி பகவத் குணம் கேட்டும் சில நாட்கள் இம்மானுடப் பிறவியில் கழியட்டுமே!

Sunday, August 2, 2015

சிவ தனுசு

எட்டுச் சக்கரங்களையுடைய ஒரு வண்டி மைதானத்திற்குள் கம்பீரமாக நுழைகிறது. முன்னால் கொசகொசவெனப் பெருங்கூட்டம் முண்டியடிக்கிறது. ஜனத்திரளுக்குப் பின்னால் வரும் அது மாட்டு வண்டியா? குதிரை வண்டியா? இல்லையில்லை.. ஐயாயிரம் பேர் தேர் போல இழுத்துக்கொண்டு வருகிறார்கள். நேரே ஓரமாகப் பதினைந்து பிராயம் கூட நிரம்பாதவர்கள் இருவர் நின்று வேடிக்கைப் பார்க்கிறார்கள். பக்கத்தில் ஒரு ஜடாமுடி ரிஷி. அப்புறம் தங்கக் க்ரீடம் ஜொலிக்க ஒரு வெண் தாடி வேந்தர்.
“ரொம்ப பேர்னால இத தூக்கவே முடியலை... இது ரொம்ப சின்ன பையனா இருக்குதே.... இதால முடியுமா?” முண்டாசுக் கட்டியிருந்தவர்கள் குழுமி நின்று பேசிக்கொள்கிறார்கள். பக்கத்தில் குந்தியிருந்த பெண்கள் ”க்ளுக்...” என்று சிரிக்கிறார்கள். வண்டியில் வருவது திரிபுரங்களை எரித்தபோது சிவபெருமான் கைகளில் விளையாடிய திவ்ய தனுசு.
வண்டி அந்த பதினைந்து வயசுப் பசங்கள் அருகில் வந்து நிற்கிறது.
“குழந்தைகள் வில்லைப் பார்க்கட்டும்...” என்று அந்த ஜடாமுடி முனிவர் உத்தரவிடுகிறார். ஐம்பது பேர் வண்டியின் மீது குதித்து ஏறி இரு பக்கத்திலும் நின்று கொண்டு பெட்டியின் மூடியை லாவகமாகத் திறந்து காட்டுகிறார்கள்.
“நான் தொட்டுப் பார்க்கட்டுமா?” தோளிரண்டும் கருந்தேக்காய் இருந்தவனிடமிருந்து ஆர்வமாய் கேள்வி வந்தது. கண்களில் ஆர்வம் மின்னியது.
ஜனகர் விஸ்வாமித்ரரைப் பார்க்கிறார். இருவரும் பார்வையால் பேசிக்கொள்கிறார்கள். மீண்டும் அந்த சியாமள இளைஞன்
“நான் இந்த வில்லை எடுத்து நாணேற்றிப் பார்க்கட்டுமா?” என்று கேட்கிறான். விஸ்வாமித்ரரும் ஜனகரும், கேட்ட அந்த ராமனைப் பார்த்து “உம்” என்று தலையசைக்கிறார்கள்.
அநாயாசமாகச் சுள்ளி பொறுக்குவது போல ஒற்றைக் கையால் வில்லைத் தூக்குகிறான். வளைத்து நாணேற்றும் போது வில் படாரென்று முறிந்து இரண்டு துண்டாகத் தரையில் விழுகிறது. அப்போது எழுந்த பெரும் சப்தத்தில் பூமி அதிர்ச்சி உண்டாச்சு. சுற்றி நின்றிருந்த பலஹீனமானவர்கள் மூர்ச்சையடைந்து பொத்தென்று சாய்ந்தார்கள். மிருகங்கள் பக்ஷிகள் எல்லாம் நடுநடுங்கின. ஜனகர் நல்ல மாப்பிள்ளைக் கிடைத்துவிட்டான் என்று மனம் மகிழ்ந்தார்.
**
ஸ்ரீமத் இராமாயணம் பற்றி சில்வர் டங் ஸ்ரீநிவாச சாஸ்திரியார் பல தலைப்புகளில் ஆங்கிலத்தில் பேசியதை கி. சாவித்திரியம்மாள் தமிழில் ”ராமாயணப் பேருரைகள்” என்று எழுதிய புஸ்தகம் படித்துக்கொண்டிருக்கிறேன். இராமாயணத்தை சல்லடை போட்டு அலசி ஆராய்ந்த ஸ்ரீநிவாச சாஸ்திரியின் துளிக்கூட பந்தா இல்லாத அவையடக்கமான பேச்சும், கி. சாவித்திரியம்மாளின் அழகான எளிமையான தமிழாக்கம் இரண்டும் என்னை தூங்கவிடாமல் அடுத்த பக்கம் அடுத்த பக்கம் என்று புரட்டி கீழே வைக்கவிடாமல் படிக்கவைக்கிறது. இது மயிலாப்பூர் சம்ஸ்க்ருத அகாடமி வெளியீடு.
வால்மீகி உயிரோட்டமாக எழுதியதை உருக்கமாக எழுத்தில் வடித்திருக்கிறார்கள். பக்கம்பக்கமாகப் படித்துக்கொண்டே வரும் போது கொஞ்சம் நிறுத்தி மோட்டுவளையைப் பார்த்துக்கொண்டே சிவதனுசு வண்டியில் வரும் காட்சியையும் அதை ராமன் ஒடித்ததையும் படம் ஓட்டி எழுதிப் பார்த்தேன். மன்னார்குடி ஹரித்ராநதி வடகரை கோதண்டராமர் நினைவுக்கு வருகிறார். ஆஹா. அற்புதம். சிரித்துக்கொண்டே சீதா இளையபெருமாள் ஆஞ்சநேயருடன் கப்சிப்பென்று நின்ற திருக்கோலத்திலிருக்கும் அவனை.....
”பலுகே பங்கார மாயனா? கோதண்ட பாணி - பேசினால் பொன்னும் சிந்திடுமா? கோதண்ட பாணி!” என்று பத்ராசலம் ராமதாசர் ஆனந்த பைரவியில் பாடியதோடு ஸ்ரீராமசந்தரனுக்கு ஜெய மங்களம்!
பின் குறிப்பு: "எடுத்தது கண்டனர் ... இற்றது கேட்டார்" என்ற கம்பநாட்டாழ்வாரை இங்கு அழைத்திருக்கலாம். தூங்கியிருப்பான். அடுத்த ராமாயணப் பதிவில் கூப்பிட்டுக்கொள்ளலாம்! குட் நைட்!!

Wednesday, September 17, 2014

ஆச்சா

Hardwickia binata என்ற பொட்டானிகல் பெயருள்ள ஒரு மரத்தை இந்த ஸ்டேட்டஸின் ஒட்டாகப் பார்க்கிறீர்கள். இது சித்ரகூட மலையில் இளையபெருமாள் ஏறிப் பார்த்த மரம். இராஜாஜியின் இராமாயணம் படித்துக்கொண்டிருக்கிறேன். முதல் பக்கத்திலிருந்து மளமளவென்று கதையை நகர்த்துகிறார். படிக்கும்போது எழுத்துகள் வழியாக ராமன் அடி பற்றி பின்னாலேயே காடு மலை ஆறுகளைக் கடந்து ஓடுகிறோம். அண்ணன் தம்பி பாசத்தைப் பக்கம் பக்கமாக வடிக்கிறார். ராஜாஜியின் ராமச்சந்திரமூர்த்தியைப் படிக்கும்போது சாதாரணரர்களுக்கே கருணை ஊற்றெடுக்கும். 

இராமனுக்கு பணிவிடைகள் செய்து பகவத் கைங்கர்யம் செய்யும் இளையபெருமாள் தூரத்தில் புழுதி கிளம்ப ஆச்சா மரத்தின் மேலேறிப் பார்த்தான் என்று ராஜாஜி எழுதியிருந்தார். பரதன் சதுரங்க சேனையுடன் வருவதைப் பார்த்ததும் கோபாவேசமாக “ராஜ்ஜியத்தைப் பிடிங்கிக்கொண்டதுமில்லாமல் படையெடுத்தும் வருகிறான்...” என்று குதித்தானாம்.

அரச, ஆல, வேப்ப, கருவை, கருவேப்பிலை, பூவரசு, நாவல், புளிய, மா, பலா, தேக்கு, வாழை, நெல்லி, புங்க, தென்னை, பனை, புன்னை, நாகலிங்கப் பூ, சந்தன மரங்கள் சகஜமாகத் தெரிந்தவை. பார்த்தவை. ஆச்சா மரமா? அதென்ன ஆச்சாரமான மரம் என்று கூகிளில் மூழ்கினேன். கிஷ்கிந்தா காண்டத்தில் சுக்ரீவனுக்கு தெம்பூட்டவும் தனது வில்லாற்றலை காண்பிக்கவும் ஏழு மராமரங்களென்று இராமன் துளைத்தது ஆச்சா மரங்களைத்தானாம். இத்தகைய வலிமையான ஆச்சா மரத்தில்தான் நாகஸ்வரம் தயாரிக்கிறார்கள் என்பது கூடுதல் செய்தி. கம்பனும் ”பெரிய, ஆச்சா, விலங்கு” என்று அர்த்தம் தொனிக்க ”“மா..மா..மா..” போட்டு எழுதிய பாடலை இங்கே பார்க்க: http://www.tamilvu.org/slet/l3710/l3710ame.jsp?st=391&ed=509&mi=2&sno=872

இப்படி இந்த மரம் தேடுகையில் கிடைத்த தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக் கழகத்தின் வனவியல் வலைப்பக்கம் உபயோகமான ஒன்று. (அது இங்கே: http://agritech.tnau.ac.in/forestry/ntfp_hardwickia_binata.html) தமிழிலும் ஆங்கிலத்திலும் மரங்களை மட்டுமன்றி தமிழ்நாட்டின் ஆரண்ய வனப்புகளை சங்கிலியாகக் கோர்த்து பார்வைக்குக் கொடுத்திருக்கிறார்கள்.

“ஆர்வியெஸ் சட்டையில மேல் பொத்தானைப் போடுடா... ரௌடி மாதிரித் திரியற...” என்று ஹைபிஸ்கஸ் ரோஸாசினான்ஸிஸுடன் அடிப்படை ஒழுக்கங்களையும் போதித்த மன்னை நேஷனல் ஸ்கூல் பாட்டனி பாலு சார் ஞாபகம் நினைவில் நிரடுகிறது.

‪#‎தாவரவியல்‬

Friday, November 18, 2011

பிறன்மனை நோக்காப் பேராண்மை

இராவணன் கூட பிறன்மனை நோக்காப் பேராண்மையுடன் இருந்ததாக வரும் இராமாயணச் சான்று இது! ஆச்சரியமாக இருக்கிறதா?



சீதாப் பிராட்டியார் அசோகவனத்தில் சிறைவைக்கப்பட்டிருக்கும்போது இராவணன் பல வேடங்களில் வந்து வசீகரிக்கப் பார்க்கிறான். ஒன்றுக்கும் சீதாப் பிராட்டியார் மசிவதாக இல்லை. மிகவும் கலக்கமுற்று ஒரு நாள் தனது உப்பரிகையில் உலாத்திக்கொண்டிருந்தான். மதியாலோசனை செய்ய தனது மந்திரியை அழைக்கிறான்.

சீதை தனக்கு இணங்கவில்லை என்பதை வருத்தத்தோடு சொன்ன இராவணனுக்கு மந்திரி ஒரு சமயோசித யோசனை கூறினான்.

“அரசே! சீதை எவருக்கும் மயங்காதவர். நீங்கள் ஸ்ரீராமன் வேடமிடுங்கள். நிச்சயம் உங்களுக்கு அவர் மயங்கலாம்” என்றான்.

அதற்கு இராவணன் “அமைச்சரே! அந்த வேடம் கூட பூண்டு பார்த்துவிட்டேன். ஆனால் அந்த வேடத்திற்குக் கூட ஒரு தனி மகிமை இருக்கிறது போலிருக்கிறது” என்றான்.

இராவணனை வியப்பாகப் பார்த்தான் அமைச்சர். என்ன என்பது போல புருவங்களைச் சுறுக்கினான்.

சீதை எனக்கு பிறன்மனை ஆதலால் அந்த வேடத்தில் இருக்கும் போது என்னால் காதலுடன் பார்க்க முடியவில்லை” என்று சொல்லி வருந்தினான் இராவணன்.

#இராமனின் பிறன்மனை நோக்காப் பேராண்மையின் மகத்துவம் அவனது வேடமிட்டவருக்குக் கூட ஒட்டிக்கொள்ளும் என்பதற்கு வரும் இராமாயணச் சான்று இது. நினைத்தாலே சிலிர்க்கிறது.
பின் குறிப்பு: இனிமேல் இதுபோல டிட்பிட்ஸ் பதிவுகள் கூட போடலாம் என்று விருப்பம்.
-

ஆடிய பிற ஆட்டங்கள்

Related Posts with Thumbnails