Showing posts with label மன்னார்குடி. Show all posts
Showing posts with label மன்னார்குடி. Show all posts

Monday, October 23, 2017

ஜுரக் கனா

ஜுரம் உச்சத்தில் இருந்தால் வாய் பிதற்றும். கண் திறந்தபடி இருக்க திடீர்க் கனாக்கள் வரும். சில்க், அனுராதா, டிஸ்கோ சாந்தி தோன்றி ஜிகுஜிகு அண்ட்ராயரில் மிரட்டும் இன்பக்கனா அல்ல. (எண்பதுகளில் வயசுக்கு வந்தவர்களான இப்போதைய பெருசுகளுக்கு மேற்கண்ட உதாரணம் சமர்ப்பணம்) ஜுரமடித்தால் சலனமே இல்லாமல் ஜடம் போல கிடப்பது சிலருக்கு அபூர்வமாய் வாய்க்கும். புண்ணியம் செய்த பிரகிருதிகள். என்னுடையது இரண்டாவது வகை. கனா. அதைக் கனா என்று சொல்லமுடியாது. ஏதோதோ காட்சிகள் தோன்றித் தோன்றி மறையும்.
சில காட்சியில் யாருமே இல்லாத நெடும் சாலையில் தனியே மொட்டை வெயிலில் நடந்துகொண்டிருப்பேன். சில காட்சியில் மரங்கள் சூழ் அடர்காட்டில் சொட்டச் சொட்ட நனைந்துகொண்டிருப்பேன். சிலவற்றில் கூட்டத்தில் சிக்கி முழி பிதுங்கி திருவிழாவில் காணாமல் போன பையன் போல விழித்துக்கொண்டிருப்பேன். சிலது ரொம்ப கொடூரம்...ஏதோ ஒரு சிகரத்தின் உச்சியில் இருந்து தலைகீழே வேகமாய் விழுந்துகொண்டிருப்பேன். தலை நச்சென்று தரையில் பட்டு சிதறுகாயாக உடையும் இடம் வந்ததும் மேனி மொத்தமும் தூக்கிப் போடும்.
இந்த முறை ஜெகதாம்பாள் சிரார்த்தத்தின் போது என்னுடைய அம்பாள் பாட்டிகள் நினைவில் உருகியிருந்தேனல்லவா... இரு கிழவிகளும் புகையாய்க் கிளம்பி பக்கத்தில் வந்துவிட்டார்கள். அதிலும் அந்தச் சாரதாக் கிழவி என் கன்னத்தில் இடித்துக்கொண்டே “இத்துனூண்டு கண்டந்திப்பிலி... அரிசித்திப்பிலி.. ஓமம்...துளசி ரெண்டு...சுக்கு.. ரெண்டு கும்மோணம் வெத்தலை..செத்த மிளகும் சேர்த்துக்கோ.. நன்னா அரைச்சு கொதிக்க வச்சு.. நீர்க்க ஒரு டம்ளர் குடிக்கக் குடு.. சரியாப்போயிடும்.. ஊர் சுத்தியிருப்பன்.. கண்டதைத் தின்ருப்பான்.. படுவா...” என்றாள்.
எப்போதும் போல ஜெகதா “டாக்டரைப் பார்த்தியோடா.. ஊசியும் ரெண்டு மாத்திரையும் வாங்கிப் போட்டுக்கோ.. கார்த்தாலே ரெண்டு இட்லி சாப்பிட்டா எல்லாம் சரியாப்போயிடும்... தெம்பு வந்துடும்..” என்று தலையைக் கோதி ஆறுதல் கூறினாள். இருவரும் தலைமாட்டில் உட்கார்ந்து தொடர்ந்து வசவசவென்று பேசிக்கொண்டிருந்ததால் நடக்கவே முடியாத நிலையிலும் மாடியிலிருந்து இறங்கி என் அம்மா அலமேலம்மாவைப் பார்த்து விட்டு “என்னடா?”.. “ச்சும்மாம்மா...” “ரொம்ப சுடறதா?” “இல்லேம்மா..” சொல்லிவிட்டு தூத்தம் குடித்துவிட்டு மேலே வந்தேன்.
சென்னையில் வசிப்போருக்கு ஞாயிற்றுக்கிழமை நோவு வந்துவிடக்கூடாது என்று தன்வந்திரி பகவானை வேண்டிக்கொள்கிறேன் அன்று லோக்கல் மருத்துவர்களுக்கு விடுமுறை. பாவம் அவர்களுக்கும் குடும்பம் குட்டி உண்டே! லேசான ஜுரம் என்றால் கூட ”ஆளைக் கண்டதும் அட்மிஷன் போடு” ஸ்லோகனுடன் இயங்கும் கார்ப்பரேட் ஆஸ்பத்திரிகளுக்குதான் போக வேண்டும். எனக்கு அடிப்பதோ காட்டு ஜூரம். தெர்மாமீட்டர் பாதரசம் வெளியில் வந்து ஊற்றும் அளவிற்கு காட்டு காட்டு என்று காட்டுகிறது.
ஊபர் வரச்சொல்லி போகலமா என்று எண்ணும் போது ஹாஸ்பிடல் அட்மிஷன் பயம் வந்தது. பேசாமல் பாராசிடமால் மற்றும் தொண்டைக் கரகரப்பு இருந்ததால் அஸித்ரோமைஸின் வாங்கிப் போட்டுக்கொள்ளலாம் என்று சுயமருத்துவத்துடன் பக்கத்து மருந்துக்கடையில் வாங்கிப் போட்டுக்கொண்டேன். அரை மணிக்கொரு தரம் மிதமான வெந்நீர் முன்னூறு மி.லி லோட்டாவில் தொடர்ந்து குடித்துக்கொண்டிருந்தேன். பாவம் சங்கீதா. கால் பிடித்து தண்ணீர் கொடுத்து ஒன்றரை மணி வரை கண்கொட்டாமல் எனக்கு சிஷ்ருஷை. இப் பாவிக்கு கிடைத்த பாக்கியம்.
இரண்டு மணி. நெற்றியில் வேர்த்துவிட்டது. கால் இரண்டும் ஜில்லிட்டுப்போய் வெலவெலவென்றாகி ஷுகர் லெவல் இறங்கியது தெரிந்தது. தூரத்தில் அது சொர்க்கமா நரகமா என்று தெரியாத ஒரு மேலோக ஊர் மசமசவெனத் தெரிந்தது. இரண்டு தேக்கரண்டி சர்க்கரைப் போட்டு ஹார்லிக்ஸ் கலந்து குடித்து... சாக்கோஸ் ஒரு கப் மென்று தின்று... அரை மணியில் மீண்டு திரும்பவும் பூலோகம் வந்தடைந்தேன். ஃபேஸ்புக் கடமையாற்ற வேண்டியிருக்கிறதே!
ஜூரம் விட்டதற்கு அந்த மாத்திரைகள் மட்டும் காரணமல்ல. என்னுடைய நண்பர்களாகிய உங்களுடைய “Get Well Soon" மெசேஜ்ஜுகளும், பிரார்த்தனைகளும், அக்காக்கள் அண்ணாக்கள் தம்பிக்களின் பிரத்யேக செல் அழைப்பு விஜாரிப்புகளும் மற்றும் உங்களுக்கும் எனக்கும் இடையே இனம் காண முடியாத அன்பின் பிணைப்பும் துரிதகதியில் வேலைக்குத் திரும்பும் திராணியைக் கொடுத்திருக்கிறது.
என்னுடையது அன்பு சூழ் உலகு. ஃபேஸ்புக் எனக்களித்த வரமான ஸ்நேகிதர்களின் பிரியத்தின் சக்தி இது. அனைவருக்கும் பிரத்யேகமாக நன்றி சொல்லமுடியாததற்கு மன்னித்தருளும்படி வேண்டிக்கொண்டு............
என்றும் அன்புடன் ஆர்.வி.எஸ்.

சாதம் போட்ட அன்னபூரணிகள்

எனது பாட்டிகள் இருவருமே அம்பாள்கள். சாதம் போட்ட அன்னபூரணிகள். வித்தை கற்க உதவிய சரஸ்வதிகள். அப்பாம்மா ஜெகதாம்பாள். அம்மம்மா சாரதாம்பாள். ஜெகதாவிற்கு ”குழந்தே... சாப்டியோ... பசிக்குமேடா...”என்று வாஞ்சையோடு தலை தடவிக் கேட்கத் தெரியும். எட்டாவது படித்துக்கொண்டிருக்கும் போது அரை பரீட்சை லீவில் “இன்னும் உனக்கு எவ்ளோ நாள் ஸ்கூலு..” என்று கேட்பாள். “நாலு வருஷம் பாட்டி...” என்றால் “நாலு மணியா... என்னடா பேத்தறே..”ன்னு கேட்பாள். காது சுத்தமாகக் கேட்காது. செவிக்கருவிகளுக்கெல்லாம் சவால் விடும் காது. தாத்தா கைலாய பதவி அடைந்த பிறகு தலையை முண்டனம் செய்துகொண்டு நார்மடியோடு காலத்தை தள்ளினாள்.
சாரதாம்பாள், ஜெகதாவின் சாப்டியோ.. பசிக்குமேடா கூட “படிக்கறதே இல்லை.. கட்டேல போறவன்... தோசைக்கல்லை அடுப்புல போட்டதும் தட்டைத் தூக்கிண்டு வந்துடறான்.. போய்ப் படிச்சுட்டு வாடா.. அப்பதான் தோசை...” என்று விரட்டுவாள். கையில் பிரம்பிருக்கும் ஹெட் மிஸ்ட்ரஸ் போல இருந்தவள். அவளிடம்தான் வளர்ந்தேன். மடி ஆசாரம் என்பது உயிர் மூச்சு. ”என்ன பாட்டி.. காலேல குளிச்சுட்டியே... ஏன் இப்போ திரும்பவும் இப்போ மத்தியானம் ஸ்நானம் பண்றே?” என்று கேட்டால் “வயறு சரியில்லேடா... கொல்லப்பக்கம் போய்ட்டு வந்தேன்... கால் அலம்பினா போறுமா? ஸ்நானம் பண்ணிட்டேன்... கொடில மடியா புடவை ஒனத்தியிருக்கேன்.. “ என்று கூன் விழுந்த முதுகோடு கொல்லைக் கிணற்றிலிருந்து டங்குடங்கென்று வேகமாக நடந்து உள்ளே செல்வாள்.
சமையற்கட்டிலிருந்து “கையிலே.. கதை புஸ்தகம் போல்ருக்கேடா தம்பி...” என்று ரேழியில் படித்துக்கொண்டிருக்கும் என்னை கேட்பாள். ரஸ்க் தடிமனுக்கு கண்ணாடி போட்டிருந்தும் என்னுடைய அசையாத ஸ்ரத்தையான படிப்பைப் பார்த்து அது பாடபுஸ்தகமல்ல என்பதைக் கண்டுபிடித்துவிடுவாள். வெளி ஆட்களிடம் நியாய தர்மங்கள் விவாதிப்பாள். “இப்டி நடக்குமோடி இந்த லோகத்துலே...” என்று அதிசயித்து வலது கையால் தாவாங்கட்டைக்கு முட்டுக் கொடுத்து பேசுவாள்.
எண்பத்தேழு வயது வரை எங்கள் மன்னை ஹரித்ராநதியின் நான்கு கரையையும் பிரதக்ஷிணம் வந்து நடுவளாங்கோயில் வேணுகோபாலஸ்வாமியை கும்பிட்டு வீட்டுக்குள் வருவாள். தானே இருபது படி இறங்கி ஹரித்ராநதி மங்கம்மாள் படித்துறையில் ஸ்நானம் செய்வாள். தன் துணியை தானே துவைத்து மடியாக தானே கொம்பு பிடித்து உத்தரத்தில் தொங்கும் கொடியில் உலர்த்தி... “ஒரு சொம்பு பால் குடுடீ பவானி.. ஹரித்ராநதித் தாயாருக்கு விட்டுட்டு வேண்டிண்டு வரேன்...” என்று இருநூறு மிலி பாலை குளத்தில் ஊற்றி அதைத் தெய்வமாக மதித்து வேண்டிக்கொள்வாள். ஏதோ நம்பிக்கை. ”கார்த்தாலே வேண்டிண்டு பால் விட்டுட்டு வந்தேன்.. சாயரக்ஷை தொலைஞ்சு போன மோதரம் கிடைச்சுடுத்து...”. இந்த சாரதாம்பாள்தான் என்னுடைய மன்னார்குடி டேஸ் தொடரில் பாட்டி பாத்திரத்தை நிரப்புபவள்.
*
தேகாரோக்கியத்தோடு இருந்தவரையில் ஜெகதா உழைப்பின் சிகரம். கைகால்கள் விழுந்த பிறகு, அலமேலம்மா அவளை மகாராணி போல பார்த்துக்கொண்டாள். சாரதாவைவிட ஜெகதாவிற்கு சரீரம் பெருசு. ரேழி நடுவில் முக்காடுத் தலையோடு உட்கார்ந்திருக்கும் போது யார் வீட்டில் நுழைந்தாலும் “பாட்டீ... நமஸ்காரம் பண்ணிக்கிறேன்.. ஆசீர்வாதம் பண்ணுங்கோ...” என்று நெடுஞ்சான்கிடையாக விழத் தோன்றும். ஆரோக்கியத்தோடு இருந்த ஜெகதா ஆயிரம் பேருக்கு சமைப்பாளாம். அவள் அருகில் சென்று கறுப்பு லக்ஷ்மியைத் தடவி கொடுத்து “விருந்தாளியெல்லாம் வந்துருக்காடி.” என்று சொன்னதும் அரை லிட்டர் பால் கூடக் கறக்குமாம். ஜெகதாவின் நடமாட்டம் கண்டவுடன் தொழுவத்தில் இருக்கும் மாடுகள் தலையை அசைத்து கழுத்தில் கட்டியிருக்கும் மணி அடித்து ஜாடையாய்ப் பேசும். வைக்கோல் பிரி உருவி போட்டுவிட்டு கழுத்தில் தடவிக்கொடுத்துவிட்டுச் செல்வாள்.
”ஸ்கூலுக்கு போலயாடா?”
“லீவு விட்ருக்கா”
“ஏன்?”
“தோ... இந்த கிரிக்கெட் மேட்ச் பார்க்கறத்துகாக..”
என்று டிவியைக் காட்டி இப்படிச் சொன்னால் நம்பிவிடுவாள். “ஓ... சர்தான்... சாப்ட வரியா?” என்று கேட்டு போட்டுவிட்டு பின்கட்டுக்குச் சென்றுவிடுவாள். லீவா? படிக்கவேண்டாமா? என்கிற கேள்விகள் அவளுக்கு கேட்கத் தெரியாது! அன்னபூரணிக்கு சரஸ்வதி டிபார்ட்மெண்ட் பற்றித் தெரியாது. ஒரு சமயம் பஸ்ஸ்டாண்ட் பக்கம் சர்க்கஸ் நடந்துகொண்டிருந்தது. வடக்கத்தியர்கள். ஜெகதாவோடு நானும் அக்காவும் சென்று பார்த்தோம். நடுவில் ஜெகதாவும் பாடிகார்டு போல இருபுறமும் நானும் கீர்த்திகாவும். உயரத்தில் கயிறு கட்டி ஊஞ்சல் ஆடிய பெண்களைச் சிலர் ஆச்சரியத்தோடும் சிலர் ஆனந்தத்தோடும் பார்த்துக்கொண்டிருக்கும் போது ஜெகதா என் காதில் “பாவம்டா.. ஒரு ஜான் வயித்துப்பாடுக்காக அந்தரத்துல தொங்கறாள்கள்.. நமக்கு பகவான் நிறைய கொடுத்துருக்கான்.”
நடை தடுமாறியபோது கூட தொழுவம் எட்டிப்பார்த்து மாட்டுக்கு வாளியில் தீவனம் கலந்து வைத்து பார்த்துக்கொண்டாள். ”தட்டை அலம்பிண்டு வரியா? சாதம் போடறேன்” என்று தள்ளாத வயதிலும் கேட்டவள். ஊரிலிருந்து அகாலத்தில் யார் வந்து கதவைத் தட்டினாலும் ஜீரா ரசம் மோர் சாதமாவது கிடைக்கும். ஜெகதாவை நினைக்கும் போதெல்லாம் அன்னதானப் பிரபுவான இளையான்குடி மாற நாயனார் கதை நியாபகத்துக்கு வரும்.
இன்று ஜெகதாவின் ஸ்ரார்த்தம். சாப்பிட்டுவிட்டு கண் அயரும் நேரத்தில் சட்டென்று நினைவு அடுக்குகளிலிருந்து எழுந்திருந்த இரு பாட்டிகளும் என்னை இவ்வியாசம் எழுதச் சொன்னார்கள். இதுபோன்ற அம்பாள் பாட்டிகளின் சாம்ராஜ்யமாக வீடுகள் இருந்தபோது கட்டுப்பாடுகளும் ஒழுக்கமும் அமைதியும் குன்றாத சந்தோஷமும் குடியிருந்தது.

Sunday, October 22, 2017

விஷ்ணு சித்தன் ஸ்ரீராம்

என்னுடைய மன்னார்குடி டேஸ் அத்யாயங்களை ஏராளமாக ஆக்கிரமித்தவன் ஸ்ரீராம். தரை எட்டாத பெரிய சைக்கிளில் மேனியைக் கோணி காலூன்றி நின்று கொண்டு “வெங்குட்டூ..” என்று “டு” வை “டூ”வாக்கி நீட்டி முழக்கி கொல்லை வரைக் கூப்பிடுவான். காது மந்தமான சாரதா பாட்டியே “ஜில்லாலி வந்துருக்கான் போல்ருக்கு....” என்று மூக்குக் கண்ணாடியைத் தூக்கி விட்டுக்கொண்டு தோராயமாக வாசலைப் பார்ப்பாள். மன்னையில் ஹரித்ராநதி மதில் கட்டையிலும் சரி மற்ற இடங்களிலும் சரி ஸ்ரீராம்தான் தோதான கம்பெனி. எனக்கு படிப்பில் ஜூனியர். பாக்கி விஷயத்தில் சீனியர்.
பத்து நாட்களுக்கு முன் ஒரு நாள் “வெங்குட்டு.. பசங்களுக்கு பூணூல் வச்சுருக்கேன். வந்துடு..” என்று அழைத்திருந்தான். தரையில் நிற்க நேரமில்லாமல் விமானத்தில் சுற்றிக்கொண்டே இருந்ததால் உபநயனத்திற்கு செல்ல முடியவில்லை. வடுக்களை ஆசீர்வதிக்க நேற்று இல்லம் தேடிச் சென்று பார்த்தேன்.
பஞ்சகச்சமும் தாடியும் மீசையுமாக ’விஷ்ணு’சித்தன் போல இருந்தான் ஸ்ரீராம். தாடிக்காக சித்தன் என்ற பதம் போடுவதற்காக விஷ்ணுவை இழுத்தேனே தவிர வேறொன்றும் மேற்கண்ட சொற்டொடரில் விசேஷமில்லை. உடனே யாரும் கல்ச்சுரல் விரோதி என்று பட்டம் கொடுத்து பாட்டா தூக்கவேண்டாம். பெரியாழ்வாரை சேவித்துக்கொள்கிறேன்.
”அபிவாதயே...” சொல்லி ரெண்டு வாண்டும் என்னை நமஸ்கரித்தார்கள். நேற்று நம்முடன் கிரிக்கெட் விளையாடியவனின் பசங்களா என்ற நினைப்பு பூரிப்பாக இருந்தது. டீஷர்ட்டைக் கழற்றி ஸமாச்ரயணம் செய்த சங்கையும் சக்கரத்தையும் தோளைத் திருப்பிக் காட்டினார்கள். தொட்டுப்பார்க்கும் ஆர்வக்கோளாறில் சங்கை அழுத்திவிட்டேன். ”ஸ்ப்பா... அழுத்திட்டீங்க.. வலிக்குது அங்கிள்...” என்று தோளை நகர்த்திக்கொண்டான் சின்னவன்.
“அங்கிள் ஒரு மேட்ச் விளையாடிட்டுதான் போகணும்..” என்று சின்னவன் (இந்தப் படத்தில் இருக்கும் விஷமன்) நச்சரிக்க ஆளுக்கு இரண்டு பேராய் அணி பிரிந்து காம்பௌண்ட் க்ரில் கேட்டை விக்கெட்டாக்கி விளையாடினோம். ரப்பர் பந்து போட்டி. "ஸ்ட்ரெயிட்டா அடிச்சா சிக்ஸ். அந்த சுவத்தை தாண்டினா ஃபோர். பக்கத்து வீட்டு காம்பௌண்டுக்குள்ளே தூக்கி அடிச்சா அவுட். ஒன் பிட்ச் ஒன் ஹாண்ட் அவுட்... மூனு தடவை பின்னாடி விட்டா அவுட்...” என்று வரிசையாய் விதிமுறைகளை எனக்குச் சொன்னான். அரை மணி விளையாடிவிட்டுதான் வீட்டுக்கு வந்தேன்.
குழந்தையாய் சின்னவன் சொன்ன விளையாட்டு விதிமுறைகள் போல வாழ்க்கைக்கு நம்மால் ரூல்ஸ் போடமுடியுமா? எத்தனை போடுவது? அப்படி போட்டால் தாண்டாமல்தான் இருக்க முடியுமா? ஆனால், ஸ்ரீராம் தாண்டாமல் இருக்கிறான். மன்னை ஸ்ரீவித்யா ராஜகோபாலனின் க்ருபை. மகிழ்ச்சி.

அப்பு சார்


கோதுமை ஹல்வா. பூசணிக்காய் அரைச்சுவிட்ட கூட்டு. தக்காளி சாத்தமுது. வாழக்காய் கறியமுது. திருக்கணமுது. மாஷாபூபம். வெண்ணைத்தாழி அன்று மத்தியானம் மன்னை வானமாமலை மடத்தில் சாப்பாடு. " நிச்சயம் வந்துடு....மிஸ் பண்ணாதே.. " என்று விஜய்யும் Vijay Rajagopalan கோபாலும் Rajagopalan Rengarajan அன்பு கலந்த உரிமையோடு அழைத்திருந்தார்கள். திவ்யபோஜனம். கோபாலனின் பிரசாதமாச்சே!!
"வெங்குட்டு... கோபாலகிருஷ்ணன் சார் பக்கத்துல மடத்துல உட்கார்ந்திருக்கார்.. பார்க்கணும்னியே..."
"கையலம்பிட்டு வந்துடறேன்... நீ அங்க இரு..." என்று கோபாலை அனுப்பிவிட்டு பின்னால் விரைந்தேன்.
கோபாலன் பிரசாதம்... கோபாலகிருஷ்ணன் சார்... ஸ்நேகிதன் கோபால்... பாராவுக்கு ஒரு கோபாலன்.... சரி...மேலே படியுங்கள்....
அறுபதாம் கல்யாணம் முடிந்த ஹால் போலிருந்தது மடம். ஓரத்தில் சுவற்றில் சாய்ந்திருந்த வாத்யாரைச் சுற்றி வேதம் படித்த மாணவர்கள் அரை வட்டமாய் அமர்ந்திருந்தார்கள். ஹாலின் நடுவில் நெற்றியை கோபிச் சந்தனம் அலங்கரிக்க விஸ்ராந்தியாக ஜெம்பகேச தீக்ஷிதருடன் கோல்டன் ஃப்ரேமில் காதில் கடுக்கன் பளபளக்க அமர்ந்திருந்தார். எதிரில் போய் சம்மணமிட்டு அமர்ந்து கொண்டேன்.
"யாருன்னு தெரியறதா?"
கண்களை இடுக்கிப் பார்த்தார்.
"தெரியலைப்பா...". அருகில் அமர்ந்திருந்த ஜெம்பகேசன் சாருக்கு தெரிந்துவிட்டது.
"ஹரித்ராநதி.... கீழ்கரை...." என்று துப்பு சொல்லத்தொடங்கியதும் அவருக்குள் கூகிள் மேப் navigation போல லொகேஷன் வந்துவிட்டது. இடுக்கிய கண்கள் விரிந்தது. அடி உதட்டை உள்ளுக்கிழுத்து “ம்...” என்று விஷமமாகச் சிரித்தேன்.
"ம்... அங்க யாரு?"
"நீங்கதான் எனக்கு அக்ஷராப்பியாசம் பண்ணி வச்சேள்.. ரேழில பித்தளை தாம்பாளத்துல நெல் பரப்பி... என் ஆள்காட்டி விரலைப் பிடிச்சு அ எழுதி....."
மடத்தின் ஓரத்தில் சலசலப்பு. வேதபாட சாலை வித்யார்த்திகள் குழுமி அமர்ந்திருந்த திக்கில் கண்ணைச் செலுத்தினேன்.
"பரீக்ஷை நடக்கறது..." என்றார் ஜெம்பகேசன் சார் என்னைப் பார்த்து. முறுவலித்தேன்.
அப்போது கிடைந்த அவகாசத்தில் நான் யாரென்று அப்பு சார் ஓரளவிற்கு ஊகித்திருந்தார். பாட்டி அப்பு சார் என்றுதான் கோபாலகிருஷ்ணன் சாரை அழைப்பாள். எங்கள் பள்ளியில் தமிழ் வாத்தியார். அப்பவே வெஸ்பா வைத்திருந்தார். நீலு அக்காவை கூப்பிடப் போகும் போது கையில் ராமாயணம் மகாபாரதம் என்று சம்ஸ்கிருதத்தில் புரட்டிக்கொண்டிருப்பார். இரு மொழியிலும் அபார புலமையுடைவர்.
"தெரிஞ்சுடுத்தா?"
"வயசாயிடுத்து... ஞாபகம் குறைஞ்சுடுத்து... அடையாளம் தெரியலையே... "
"பவானி டீச்சர்... நீலா டீச்சர்...." என்று என் கடைசி அஸ்திரத்தை எய்தேன்.
"ஆங்... நம்ம சின்னத்தம்பி... டேய்.... எப்படியிருக்கே?" என்று மின்னலாய்க் கேட்டு முதுகில் ஆதூரமாய்த் தட்டினார்.
அரைமணி பேசினார். சாரதா பாட்டியிலிருந்து என் அம்மா, அப்பா, அக்கா என்று சகலரையும் விஜாரித்தார். நிறைய சம்பவங்களை நினைவு கூர்ந்தார்.
"தம்பி... இப்போ கிரஹண பீடை... அது விட்டத்துக்கு ஸ்நானம் பண்ணனும்.. அப்பு சார் மங்கம்மா படித்துறை மதில் கட்டையிலேர்ந்து ஹரித்ராநதிக்குள்ளே டைவ் அடிச்சுட்டாரா பாருடா..ன்னு பாட்டி என்னைக் கேட்பா..." என்று என்னுடைய நினைவு கொக்கி போட்டதைச் சொன்னேன்.
"ஆமாமா.. உங்க பாட்டி ரொம்ப மடி ஆசாரம்.. குளத்துல குதிக்கும் ஜலம் மேலே தெளிச்சுடும்னு படிக்கட்டு ஓரத்துக்கு தள்ளி போவா... ஒனக்கு ஒண்ணு தெரியுமோ.. அப்போ...." என்று மீண்டும் கிழக்குத் தெரு கதைகள் பல சொன்னார். அவரது விவரிப்பைக் கண்டு என்னுடைய சின்னது "யப்பா.. தாவாங்கட்டையில கையை வச்சு... நடிச்செல்லாம் காமிக்கறார்..." என்றாள். சிரித்துக்கொண்டார்.
"சார்.. நமஸ்காரம் பண்றேன்..ஆசீர்வாதம் பண்ணுங்கோ... உங்களுக்கும் சேர்த்து பண்றேன்.." என்று ஜெம்பகேசன் சாரிடமும் சொல்லிக்கொண்டு குடும்ப சகிதம் விழுந்து வணங்கினேன்.
இன்று நானெழுதும் இந்த லவலேசம் தமிழ் அவர்கள் இட்ட பிச்சைதானே.

கைங்கர்ய ஸ்ரீமான்

இருபத்தைந்து முப்பது வருஷத்துக்கு முந்தைய கதை. பவானி சித்தியின் கைக்குள் கையை விட்டு செயின் போல கோர்த்துக்கொண்டு பெரியகோயிலுக்கு சென்றது நினைவில் முட்டுகிறது. தேரடியில் திருநாவுக்கரசுப் பிள்ளை (இந்த முறை சென்றபோது திருநாவுகரசு என்று 'க்'கில்லாமல், பெயருக்கு வலிக்காமல், போர்டு எழுதியிருந்தது) மளிகைக் கடையில் டைமன்ட் கல்கண்டும் கட்டிக் கல்கண்டும் தாயாருக்கும் கோபாலனுக்கும் அர்ச்சனைக்காக வாங்கிக்கொண்டு கோபுரவாசல் கடக்கும் போது காற்று அள்ளும். சற்றே அசிரத்தையாக நடந்தால் ஆளை அரை இன்ச் ஒதுக்கும்.
கோபுரவாசலில் அருள்பாலிக்கும் சிறிய திருவடி ஆஞ்சுவை ஜெம்பகேச தீக்ஷிதர் தீந்தமிழில் கம்பனின் "அஞ்சிலே ஒன்று பெற்றான் அஞ்சிலே ஒன்றைத் தாவி..."யோடு தீபாராதனை தரிசித்து கோயிலுள் நுழைவது மனசுக்குள் இனம்புரியாத ஒரு இன்பத்தைக் கொடுக்கும். ஜெம்பகேச தீக்ஷிதர் என்னுடைய தமிழ் ஆசான். பவானி சித்தியின் "தம்பி.. பெரியகோயிலுக்கு கிளம்பு" என்ற வார்த்தையை நான் என்றும் தட்டியதில்லை.
இராப்பத்து பகல்பத்து காலங்களில் பெருமாள் புறப்பாடுக்கு நானும் பவானி சித்தியும் தி.பிள்ளை கல்கண்டு வாங்கிக்கொண்டு “கோபாலா..கோபாலா..” என்று ஓடுவோம். கோபாலன், தீக்ஷிதர், முன்னால் ஒரு கோஷ்டி, பின்னால் ஒரு கோஷ்டி, ஒரு தீவட்டி, பாதந்தாங்கிகள் எட்டு பேர், இரண்டொரு தீவிர வைஷ்ணவர்கள், நானும் பவானி சித்தியும் என்று குட்டியாக ஒரு பக்தர் குழாம். கோபாலனின் கையைப் பிடித்துக்கொண்டு ஏகாந்தமாக வாக்கிங் போவது போன்ற பெரிய பிரகார உலா. இப்போது நினைத்தாலும் துளசி வாசனையோடு சேர்த்து தீவட்டிவியின் கந்தமும் கலந்துகட்டி எழுகிறது.
போன பாராவின் இரண்டு கோஷ்டிகள் பற்றிதான் இப்போது எழுத வந்தேன். இதில் முன்னால் போவது பிரபந்த கோஷ்டி பின்னால் வருவது வேத பாராயண கோஷ்டி என்பதில் எனக்குச் சின்ன மெமரி தகராறு. கோபாலிடம் Rajagopalan Rengarajanகூப்பிட்டுக் கேட்டேன்.


“வெங்குட்டு.... பெருமாள் தமிழைத் தேடி போறார்... வேதம் அவர் பின்னால வருது..ன்னு தமிழ்க்கு பெருமையை ஏத்திச் சொல்லுவா... அதனால எப்பவுமே முன்னால போறது பிரபந்தம். பின்னால வர்றது வேதபாராயணம்..”
“எப்படியாவது இந்த தடவை பெரியப்பாவைப் பார்க்கணும் கோபால்...” என்று இரண்டு வருடங்களாக சொல்லிகொண்டிருந்தவனுக்கு இந்தமுறை வெண்ணைத்தாழியில் ராஜகோபாலனைச் சேவித்தபிறகு அந்த அதிர்ஷ்டம் கிடைத்தது. மன்னார்குடி அண்ணா ஸ்வாமி ஐயங்கார் வேத பாட சாலையில் பயின்றவர் ஸ்ரீஸ்ரீநிவாஸகோபாலாச்சாரியார். 1924ம் வருஷம் ஜனனம். கோபாலனின் பின்னால் வரும் வேத கோஷ்டியில் வருவார். நீண்ட வெளிர் தாடியும் வெண் தலையுமாக ஒரு ரிஷி கம்பீரமாக நடந்து வருவது போல இருக்கும். வேதம் கணீரென்று முழங்கியபடி வருவார். “கோபாலனோடு அவாளையும் சேர்த்து பிரதக்ஷிணம் வந்து நமஸ்காரம் பண்ணனும்.. அப்பதான் புண்யம்.” என்று பாட்டி சொல்லுவாள்.
”நமஸ்காரம் பண்ணிக்கிறேன்...”
“ம்... இப்படியே..”
“மாமியும் வரட்டுமே...”
“ம்.. பண்ணுங்கோ...”
குடும்ப சகிதம் தெண்டம் சமர்ப்பித்தேன். எழுந்து அபிவாதயே சொன்னேன்..
“நைத்ருப காஸ்யப கோத்ரக: ஆபத்ஸம்ப ஸுத்ரக::” சொல்லி முடிக்கும் முன் கட்டிப் பிடித்துக்கொண்டார்.
“நானும் நைத்ருப காஸ்யப... நாம ரத்த சம்பந்தம்.... க்ஷேமமா இருங்கோ..”
வீதிக்கு வந்தவுடன் கோபாலிடம் “திருப்திப்பா... ரொம்ப நாளா ஆசீர்வாதம் வாங்கணும்னு இருந்தேன்... தேங்க்ஸ்”
“வெங்குட்டு.. இன்னொன்னு தெரியுமா? 2014ல கிஞ்சித்காரம் ட்ரஸ்ட்... அதான் வேளுக்குடி ஸ்வாமி போஷகரா இருக்காரே.. அந்த ட்ரஸ்ட் இவருக்கு “கைங்கர்ய ஸ்ரீமான்..”ன்னு பட்டம் கொடுத்து கௌரவிச்சிருக்கா..”
“ ஆஹா.... கோபால் உனக்கு பெரியப்பா... மாதவன், வெங்கடேசனுக்கெல்லாம் அவங்களோட அப்பான்னு நினைக்கும் போது எவ்ளோ பெருமையா இருக்கும்!! ”
அந்த குடும்பத்துக்கு மட்டுமா பெருமை? எங்கள் ஊருக்கே பெருமை!!

ஸ்ரீராமகோபாலவெங்கட்

நாங்க மூன்று பேரும் ஒன்றாக கிரிக்கெட் விளையாடினோம். ஒரே ஸ்கூல். ஒரே காலேஜ். வெவ்வேற க்ரூப். கோபாலும் ஶ்ரீராமும் எனக்கு சீனியர்ஸ். இன்று காலை தேரில் ஏறி கோபாலனை சேவிக்கும் முன்னர் இருவருடனும் தேரடியில் ஃபோட்டோ எடுத்துக்கொண்டேன். கோபால் professor. ஶ்ரீராமன் (வங்கிப் பணி துறந்து) பெருமாள் கைங்கர்யம். நான் IT. கோபாலனின் பரிபூரணமான அனுக்ரஹம். "ஆர்விஎஸ்... நன்னா எழுதறேப்பா... சிவப்பழமா இருக்கே... கோபாலோட ஒரு ஃபோட்டோ எடுத்து வாட்ஸப் பண்ணு.." என்று விஜய் அப்பா ஆர்விஆர் சார் ஆசீர்வாதம் பண்ணினார். ஸ்நேகிதர்களின் பார்வைக்கு இங்கே....


Thursday, December 15, 2016

மன்னார்குடி டேஸ் - மனிதக் கரண்டி

சமையல்கட்டிலிருந்து கொல்லைக் கோடியில் இருக்கும் கிணற்றுக்கு போவதற்கு ஒரு ஒத்தையடிப்பாதை இருந்தது. அக்டோபர் நவம்பர் மழைக்கு சறுக்கியடிக்கும். வேனிற் கால கொளுத்தும் வெய்யிலில் கூட கால் சுடாது. கொல்லைகொரு கிணறு என்பது கிராமத்து வீடுகளின் ஆதி சம்பிரதாயம். ஒத்தையடிப் பாதையின் இரண்டு புறமும் அருகம்புல் கால் உரச மண்டியிருக்கும். "இன்னிக்கி சதுர்த்தி.. பூஜைக்குப் பறிச்சுண்டு வந்தேன்..." என்று பாட்டி மடியிலிருந்து கொத்து புல் எடுத்துப் போடுவாள். அதைத் தாண்டி பட்ரோஸ், வயலட்டும் ஆரஞ்சுமாக டிஸம்பர் பூச்செடிகள், செகப்பு செம்பருத்தி, நந்தியாவட்டை, எறும்பு ஊறும் செண்பகம் என்று இருமருங்கும் மலர்கள் மண்டிய வாசமிகு கொல்லை.

மழையில் சறுக்குகிறது என்று பின்னர் அந்த நடைபாதையை மட்டும்ரெண்டு கல் வைத்து சிமென்ட் வழித்துவிட்டோம். வெய்யிலுக்குச் சுட்டது, மழைக்கு சறுக்கவில்லை. ஆனால் கொல்லைக்குள் வந்தால் அமேசான் காட்டுக்குள் வந்தது போலிருக்கும். சித்திரை மாதத்தில் கூட சூரியனால் வேலை காட்ட முடியாத இடம். அணிலாடும் கிணற்றடி. குயிலோ அக்காக் குருவியோ அங்கிருந்து தெரியும் பாமணியாற்றுக்குக் குரல் கொடுத்து பேசிக்கொண்டிருக்கும் இடம்.
மரக்கிளையிடையில் சிந்தும் பௌர்ணமி இரவுகளில்.... வயதானவர்களுக்கு அபிராமி பட்டரும் அம்பாளும்.. ”மா.. தேவீ...” என்று கன்னத்தில் போட்டுக்கொள்ளும்படியாகவும் வயதோடு வாலிபமாய் இருப்பவர்களுக்கு கயித்துக் கட்டில் போட்டு நேத்து ராத்திரி யம்மாஆஆஆ..... என்றும் வயதுக்கேற்றவாறு பலப்பல கற்பனைகளைத் தூண்டுமிடம். மதியமோ மாலையோ சில சமயம் சாரையும் சர்ப்பமும் கட்டிப்புரண்டு விளையாடும். சாயந்திர வேளைகளில் இந்த "நல்லது" களைப் பார்த்துவிட்டால் " நீலா.. ஒரு அகல் வெளக்கு ஏத்துடீ" என்ற பாட்டியின் கட்டளைக்கு கொல்லைப்புற துளசிக்கருகே நல்லெண்ணெயில் பஞ்சு திரி போட்ட அகல் எரியும்.
கிணற்றுத் தண்ணீர் இறைத்துக் குளித்தபோது தோள் பட்டைகள் வலுவாகவும் இரண்டு மலைகளைக் கட்டி இழுத்து வரும்படி தேகாரோக்யம் இருந்தது என்றெல்லாம் பொய் சொல்லமாட்டேன். ஆனால், குளிப்பது என்பது ஒரு சுறுசுறுப்பான சமாச்சாரமாக இருந்தது. சுற்றிலும் செம்பருத்தி, நந்தியாவட்டை பூச்செடிகளும், கன்றோடு வாழையும், நெடிதுயர்ந்த தென்னையும் பக்கத்தில் ஒரு பெரிய நெல்லி மரமும் சூழ இருக்கும் கொல்லைப்புறக் கிணற்றில் குளிப்பது என்பது குற்றால அருவியில் குளிக்கும் பேரானந்தம்.
முதல் முறை தலையில் ஊற்றிக்கொள்ளும் போது ஒட்டு மொத்த தேகமும் உதறிச் சிலிர்க்கும். மயிர்க்கால்கள் நட்டுக்கும். அடுத்தடுத்த வாளிகள் சுகவாளிகள். இன்னும் இப்படியே லட்சம் வாளிகள் ஊற்றிக்கொண்டாலும் கை அசராது. கண்ணிரண்டும் சிவந்துவிடும். விரல் நுனிகளில் தோலூறி வரிவரியாகிவிடும்.
ஒரு சமயம் கேணித் தண்ணீர் கொஞ்சம் கடுத்தது என்று "தம்பி... வானரம் மாதிரி ஏறி உட்காண்டிருக்கியே.. அந்த நெல்லிக் கெளையை ஒடிச்சு கிணத்துக்குள்ளே போடேன்... ஜலமாவது ப்ரயோஜனப்படும்படி ஆகும்..." (கவனிக்க.... ஜலமாவது ப்ரயோஜனப்படும்படி ஆகும்...) என்று நெல்லிமரக் கிளையை ஒடித்துப் போடச் சொல்லி கிணற்று நீரை கல்கண்டு நீராக்கினாள் பாட்டி.
பாத்திரங்களை அலம்பி கிணற்றுக் கட்டையில் வைக்கும் போது சிலசமயங்களில் கயிறு தட்டியோ வாளி தட்டியோ கிணற்றுக்குள் விழுந்துவிடும். அதை எடுப்பதற்கு கீழிருந்து மேலாகக் கிளைக் கிளையாக இரும்பில் கொக்கிகள் அமைத்துச் சின்ன ராட்டினம் போலிருக்கும் "பாதாளக் கரண்டி" பயன்படும். "வாணா விழுந்துடுத்து... பாதாளக் கரண்டி போட்டு எடுடா... சித்த வா..." என்று கேரம்போர்டில் ரெட்டை உள்ளே தள்ளி ஃபாலோ முயற்சிக்கும் போது கூப்பிடுவாள். உடனே எழுந்து ஓடவேண்டும். இல்லையேல் அஷ்டோத்ரசதம்தான்.
கிணற்றுக் கயிற்றுலிருந்து வாளியைக் கழட்டிவிட்டு பாதாளக் கரண்டியைக் கட்டி கீழே இறக்க வேண்டும். சுருட்டிச் சுருட்டி வட்ட வட்டமாக ஆட்டிக்கொண்டே இருந்தால் உங்கள் அதிர்ஷ்டப்படி ஐந்து நிமிடத்திலேயோ ஐம்பது நிமிடத்திலேயோ பாத்திரம் பாதாளக் கரண்டிக்கு தட்டுப்படும். அந்த இடத்தில் உசரக்கத் தூக்கி ஒரு தடவை உள்ளே போட்டு.. இடதும் வலதுமாகச் சுழற்றினால் அந்த பாதாளக் கரண்டியின் ஒரு கிளைக்குள் விழுந்த பாத்திரம் சிக்கிக்கொள்ளும். மீன் பிடிக்கும் லாவகத்துடன் சடாரென்று தூக்கக்கூடாது. பாத்திரத்தின் மேனி வலிக்காமல் தூக்கவேண்டும்.
சில வீடுகளில் பாதாளக் கரண்டி இருக்காது. "பாட்டி.. எங்காத்து கிணத்துல சொம்பு விழுந்துடுத்து.. பாதாளக் கரண்டி வேணூம்" என்று தெருமக்கள் யாரவது வந்து கேட்டால் "உங்காத்துலேர்ந்து ஒரு பாத்ரத்தைக் கொண்டு வந்து ரேழி மூலேல வச்சுட்டு... பாதாளக் கரண்டி எடுத்துண்டு போ.. அப்பத்தான் அது ஆப்டும்..." என்று சொல்லிவிடுவாள்.
கொண்டு போனவர்கள் பாதாளக்கரண்டியை மறக்ககூடாதென்பதற்காக பாட்டியின் தந்திரம் அந்த பாத்திரம் அடகு வைக்கும் உத்தி. பாதாளக்கரண்டியை சுருக்கு சரியாகப் போடாமல் கிணற்றுக்குள் தவற விட்டு ஜேம்ஸை இறக்கி எடுத்துத் தந்திருக்கிறார்கள். கழுத்தில் சிலுவையாடும் ஜேம்ஸுக்கு அப்போது ஐம்பது வயதிருக்கும். ஆறடிக்கு ரெண்டு விரக்கடை கம்மியான உயரம். அவர்தான் மனித பாதாளக் கரண்டி. கைலியை அவிழ்த்துவிட்டு கௌபீணத்துடன் கிணற்றுக்குள் குதிப்பார்.
இரண்டு முங்கு இல்லையேல் அதிகபட்சமாக மூன்று முங்குகளில் கையில் பாத்திரத்துடன் கரையேறுவார். ஒரு வீட்டில் வெள்ளிக் கொலுசு ஒன்று விழுந்துவிட்டது. "கரண்டிக்கு ஆப்டாதுடா..." என்று பாட்டி சொல்லிவிட்டாள். ஜேம்ஸைக் கூப்பிட்டார்கள். ”போன மாசம் ராயர் ஆத்துல பஞ்சபாத்ரம் விழுந்துடுத்து.. ஒரே முங்குல உத்ரிணியோட எடுத்துண்டு... ஜிங்குன்னு கிணத்துலேர்ந்து மேல ஏறிட்டான்”. இது போன்று கியாதி பெற்ற மனிதக் கரண்டி அவன். மொபைல் இல்லாத காலம். "இன்னிக்கு வரேன்னிருக்கான்..." " நாளைக்கு வருவானாம்..." என்று ஒரு மாதம் ஓடியது.
ஒரு ஞாயிற்றுக்கிழமை நாலைந்து மாமிகள் பாட்டியிடம் வாசல் படி மாநாட்டில் பேசிக்கொண்டிருந்தார்கள். "ஊர்ல இருக்கிற கிணத்துத் தண்ணில முங்கி பாத்திரத்தல்லாம் எடுத்துக் கொடுத்தான். அவனுக்கு தண்ணிலயே சாவுன்னு எழுதியிருக்கே....". அடப்பாவமே... ஜேம்ஸ் குடிகாரனா? என்று நீங்கள் தேம்புவது தெரிகிறது. இவர்கள் டயலாக்கை முழுக்கக் கேட்போம்.
"ஆத்துல புதுத்தண்ணி தொறந்து விட்டாளோன்னோ... மேலப்பாலத்துக்கிட்டே கொழந்தை தவறி விழுந்துடுத்துன்னு யாரோ கதறியிருக்கா... இவன் அந்த வழியாப் போயிருக்கான்... தொபகடீர்னு குதிச்சு கொழந்தையைக் காப்பாத்தி கரையில கொண்டு வந்து அப்பாம்மாட்ட ஒப்படைச்சுட்டான். கொழந்தையை உச்சிமோந்த அம்மாக்காரி... அதோட காலைப் பார்த்துட்டு ஒரு கால்ல கொலுசக் காணுமேன்னுருக்கா... உடனே இவன் திரும்பவும் ஆத்துக்குள்ள குதிச்சுருக்கான்.. சட்ரஸ் பக்கத்துலே சுழி ரொம்ப ஜாஸ்தி.. புதுத் தண்ணி... காவு வாங்கும்னு சொல்லுவா.. ரெண்டு ஆழமான ஊத்துக் கெணறும் இருக்கோன்னோ... இவனைப் பிடிச்சு தலை குப்புற அழுத்திடுத்து... ஃபயர் சர்வீஸ்காரா வந்து.. கரையோட கரை தேடித் தேடி... நாலு மண் நேரத்துக்கப்புறம் கயித்தைக் கட்டி தூக்கியிருக்கா... பாவம்.. ஆயிரம் வாட்டி கிணத்துல குதிச்சு பாத்திரமெல்லாம் எடுத்துருப்பன்.. அதே கெணறு பிராணனை வாங்கிடுத்தே..."
பாழுங்கிணறு விழுங்கினால் அது அதன் சுபாவம்.பழகிய கிணற்றுக்கும் பழகாத கிணற்றுக்கும் வித்யாசம் உண்டோ?

Saturday, August 20, 2016

குமுட்டி நினைவுகள்

"கார்த்தீ.... சாம்ப்ராணிக்கு தணல் வேணும்...."
அம்மா வரலக்ஷ்மி பூஜையின் நடுவில் குரல் கொடுத்தாள்.
" ....ம்ம்ம்... சங்கல்பம் முடிஞ்சவொன்னே பேசுங்கோ மாமி.. நமோஸ்துதே.." என்று மந்திரங்களுக்கு இடையில் அம்மாவைக் கண்டித்து அடுத்த மந்திரத்துக்குத் தாவினார் வெங்கடேச சாஸ்திரிகள் . அம்மாவை வரலக்ஷ்மி கோச்சுக்கமாட்டா. எழுபத்து ஐந்து வருஷ உழைப்பு. பொறந்தாம் புக்காம் எல்லோருக்கும் நேரங்காலம் பார்க்காமல் அசராத உழைப்பு. அர்ப்பணிப்பு.
"பின்னாடி கொல்லை ஷெட்டு லாஃப்ட்ல குமுட்டி இருக்குடா தம்பி.. அத எடு.." பவானி சித்தி கொக்கியாய்க் கூன் விழுந்த முதுகை நிமிர்த்திக் கேட்டாள்.
எக்கிக் குமுட்டியை எடுக்கும் போதே சாரதா பாட்டியின் நினைவுகள் என்னை மொய்க்க ஆரம்பித்தன. அண்ட்ராயர் வயசிலிருந்து பாண்ட் போடும் வரை என்னை வளர்த்துப் பெரிய ஆளாக்கி சென்னைக்கு அனுப்பி வைத்தவள்.
"பக்கத்து ப்ளாஸ்டிக் வாளில கரி இருக்கு பாரு.. அதையும் எடுத்து குமுட்டி ஜல்லடைல போடு... நா உரிமட்டை நார் கொண்டு வரேன்...சித்த நாழில சீக்கிரம் பிடிச்சுக்கும்.." என்று பவானி சித்தி விலகிய நொடியில் குமுட்டியை இறக்குவதற்குள் மனசு மன்னையில் தஞ்சமடைந்திருந்தது.
மதனகோபால்நாயுடு கடையில் ஒரு மனு விறகும், உர சாக்குப் பையில் ரெண்டு கிலோ கரியும் வாங்கிக்கொண்டு பவானி சித்திக்கு ஒத்தாசையாகத் தூக்கிக்கொண்டு ஜெயலக்ஷ்மி விலாஸ் ஸ்கூல் தாண்டியது கண்ணுக்குள் வந்து போனது. பின்னால் திரும்பித் திரும்பி பார்த்துக்கொண்டே வருவாள். பாவம் தம்பிக்கு கை வலிக்குமே என்று யாராவது தெரிந்தவர்கள் சைக்கிளில் கடந்தால் "தம்பி.. இவனைக் கொஞ்சம் கீழ்கரையில இறக்கிவிட்டுடேன்.." என்று கெஞ்சி ஏற்றிவிடுவாள்.
"ம்... விசிறு.." என்று எரியும் கசங்கிய காகிதத்தை குமுட்டி வாயில் சொருகினாள். வேஷ்டியைக் கால்களுக்கிடையில் சொருகிக்கொண்டு சந்தியாவந்தனம் பண்ணுவது போல உட்கார்ந்து கொண்டேன். ப்ளாஸ்டிக் விசிறியால் “பட்..பட்..பட்”டென்று விசிற ஆரம்பித்தேன். குமுட்டியின் மேலிருந்து குபுகுபுவென்று புகை சுழன்று வரவர அதற்குள் கறுப்பு-வெள்ளையில் காட்சிகள் ஓட ஆரம்பித்தது.
புளி போட்டுத் தேய்த்த, டாலடிக்கும், வெண்கலப்பானையில் தான் பாட்டி அரிசி உப்புமா செய்வாள்.
"பசிக்கிறது.. என்ன டிஃபன்?" என்று பள்ளிக்கூடம் விட்டு வந்தவுடன் பரபரப்போடு அடுக்களைக்கும் நுழையும் போது "சித்த குமுட்டியை விசிறுடா... ஒருதடவை குழப்பிட்டு எடுத்துண்டு வரேன்" என்று பனைமட்டை விசிறியைக் கையில் கொடுத்துவிட்டு வெண்கலப்பானையோடு கொல்லைப்பக்கம் கிணத்தடிக்கு விரைவாள். பாட்டி பளபள வெண்கலப்பானையோடு வருவதற்குள் குமுட்டியில் தணல் பிடித்திருக்கவேண்டும்.
எல்லாம் முடிந்து சாப்பிடுவதற்குள் பசி போய்விடாமல் இருக்க "இந்தாடா... " என்று ஒரு பிடி வேர்க்கடலையைக் கையில் திணிப்பாள். குனிந்து குன்று போல உட்கார்ந்து கொண்டு... எல்லாம் முடிந்து இறக்கும்போது.. பின்னால் தட்டோடு நான் நிற்பேன். "சித்த உலப்பூறட்டும்டா..". என்றைக்காவது கத்ரிக்கா கொத்ஸு கிடைக்கும். தேவார்மிதம்.
"தம்பி... இன்னும் கொஞ்சம் பேப்பர் சொருகு... கரி ஈரமா இருக்கு போல்ருக்கு.. பிடிச்சுக்கலை.." குமுட்டி வாயில் பேப்பர் சொருகி வேகமாக விசிறினேன்.
விரத நாட்களில் சர்க்கரை வள்ளிக் கிழங்கு சுட்டுச் சாப்பிடுவதற்கும்.. "இன்னிக்கி பயத்தம் தூத்தம் வெச்சுடறேன்.." என்று கிருத்திகைக்குப் பயத்தம்பருப்புப் பாயஸமும் குமுட்டியில்தான் வைப்பாள். "என்னயிருந்தாலும் குமுட்டிதான் மடி.. நீங்க என்ன சொல்றேள் அக்கா?..." என்று பக்கத்தாத்து ரமா பாட்டியை துணைக்குக் கூப்பிடுவாள்.
"கத்திரிக்கா தொகயல் பண்ணிடுடீ பவானி..." என்று கரிமேல் போட்டு கையாலேயே சுட்டுத் தருவாள். தோல் வழுமூண்டு போயி வெந்த கத்தரிக்கா பந்திக்கு அழைக்கும்.
"இன்னுமா புடிச்சுக்கலை... பூஜையே முடிஞ்சுடும் போல்ருக்கே..." என்று பின்புறத்திலிருந்து பவானி சித்தியின் குரல் கேட்டது. விசிறிய கையையும் கடந்த காலத்தில் கொக்கி போட்டிருந்த மனசையும் நிறுத்திவிட்டு குமுட்டி அடுப்பைப் பார்த்தேன். மேலே கறுப்பாய் இருந்த கரி அடிபாகத்தில் பிறந்த குழந்தையின் பாதம் போல சிவப்பாக இருந்தது.
"இந்த தணல் போறும்டா..." என்ற குரலுக்குக் குமுட்டிப் புகையிலிருந்து மீண்டு நிகழ்காலத்திற்குள் நுழைந்தேன். தணல் தூபக்காலில் இடப்பட்டு சாம்பிராணி புகை பூஜையறையெங்கும் படர்ந்தது. புகையை மீறி தூபக்காலில் பார்த்த கரியின் ஜிவ்வென்ற அக்னியில் எனது மன்னை நினைவுகள் கனன்றுகொண்டிருந்தது.

Friday, August 19, 2016

ரிசல்ட்

”பதிலற்றவனுக்கு பகவானே துணை” என்கிற நொண்டிச் சாக்கோடு... தெய்வ நம்பிக்கையில்தான் வகுப்புதோறும் என்னைப் போல் தேறியவர்களை குறிப்பிட்டு எழுத ஆரம்பிக்கிறேன். பள்ளிக் காலங்களில் மார்க் எடுப்பதில் மட்டும் பிறத்தியாரைப் பார்த்து பொறாமைப்பட்டதே கிடையாது. பல்லுள்ளவன் புண்ணாக்கு திங்கிறான் கான்செப்ட். அக்கா இருக்கிறவன் ஐஃபோன் வெச்சுருக்கான் மொமெண்ட்.
”தம்பிக்கென்னடி... அவாள்ட்டேயிருந்து வெள்ளைத் தாளைப் புடுங்கி..... சடசடன்னு ஏதோ கிறுக்கி நீலமாக்கிட்டு.... மொதோ ஆளா ஆத்துக்கு வந்துடுவன்.... என்னத்த படிச்சான்... எப்போப் பார்த்தாலும் மட்டைதான்... பைத்தாரப்பய..” என்று என் மீது அசையாத நம்பிக்கை வைத்தவள் என் சாரதா பாட்டி. வாசலில் திண்ணைக் கச்சேரிகளில் கூடும் சமவயது கிழவிகளிடம் ”எங்காத்து தம்பிக்கு சோத்தைப் போட்டுட்டா போறும்... ரெண்டு கண்ணையும் அப்படி சொருகிண்டு வந்துடும்...சித்த நாழிலே அவா தாத்தா மாதிரி பெஞ்சுலேயே தலையைச் சாச்சு உக்காண்டே கொறட்டை வுடுவான்....” என்று என் மானத்தை மட்டுமல்லாமல் சீனிவாஸய்யர் மானத்தையும் சேர்த்து வாங்குவாள். பரீட்சை சமயங்களில் படித்து முடிக்கும்வரை இராச்சாப்பாடு கிடையாது.
அக்காலங்களில் மாலைமுரசு அச்சுக்கோர்ப்பவர் கைகளில் பல மாணவர்களின் உசுர் இருந்தது. மன்னை பஸ் ஸ்டாண்டில் செண்பகா தியேட்டர் மூத்திர சுவரோரம் மாலைமுரசு கட்டு புழுதி பறக்க வந்திறங்கும். “தொம்”. விழுந்து புரண்டு ஒரு பேப்பர் வாங்குவதற்கு கைலி அவிழ அரணாக்குடி அறுந்து விழ ஓடுவார்கள். ”தோல்வியா.. எங்களிடம் வாருங்கள்...” தோரணம் கட்டி வரும் டுடோரியல் காலேஜ் விளம்பரங்களுக்கு மத்தியில்தான் பொடி எழுத்தில் நம்பர் வரும். மூனும் எட்டும், ஏழும் ஒண்ணும் ஈஷிக்கொள்ளும். “அவன் நம்பரு வரலை.... வாங்கி வச்சுருந்த பாலிடாலைக் குடிச்சுட்டாண்டா மாப்ளே...” என்று இரவு தேரடியில் கூட்டுறவு பால் பண்ணை ஸ்டாலில் பருத்திப்பால் உறிஞ்சும் போது அங்கலாய்ப்பார்கள்.
நம்பர் பேப்பரில் வராமல், இரண்டு மூன்று நாட்களுக்கு அன்னம் தண்ணீரில்லாமல்... கன்னம் வீங்கி... கண்ணீர் வற்றுமளவிற்கு அழுதும், “தண்டச்சோறு.. மக்குப்ளாஸ்திரி..” போன்ற பெரும் பட்டங்கள் குடும்பத்தாரிடம் பெற்று, பள்ளியில் வழங்கும் மார்க்‌ஷீட்டில் எல்லாம் பாஸாகி எண்பது சதவிகிதம் எடுத்து “அழுத புள்ளை சிரிச்சதாம்... கழுதைப் பாலைக் குடிச்சுதாம்...” என்று ஊர் மெச்சும் வண்ணம் சிரித்த ”ஐயோ பாவம்” ப்ரகிருதிகளும் உண்டு.
இப்போதெல்லாம் இந்த அசௌகரியங்கள் இல்லை. இணையத்தில் நம்பரை இட்டு மதிப்பெண்களையே ஃப்ரெண்ட்ஸ் அண்ட் ரிலேடிவ்ஸ் க்ரூப்புக்கு வாட்ஸப் செய்துவிட்டு ஒரு காப்பி அச்சிட்டுக்கொள்ளுமளவிற்கு வளர்ந்துவிட்டோம். லட்சத்துக்கு ஐம்பதாயிரம் பேர் மேக்ஸ், சயின்ஸ், தமிழ், ஆங்கிலத்தில் நூத்துக்கு நூறு வாங்கி மின்னுகிறார்கள். விடைத்தாள் திருத்துபவர்கள் சாஸ்திரத்திற்கு ஒரு மார்க் ரெண்டு மார்க் குறைத்துப்போட்டு பரீட்சைகளின் மாண்பு காக்கிறார்கள்.
அட்லீஸ்ட் ஐயாயிரம் பேராவது 500/500 வாங்கும் நாட்களை எதிர்பார்த்துக் காத்திருக்கும்.... நானூறு வாங்கினாலே ”ஜீனியஸ்டா” காலத்தில் பத்தாவது எழுதிய பரதேசி!
நல்ல மார்க் எடுத்த நல்முத்துகள் அனைவருக்கும் மனமார்ந்த வாழ்த்துகள்!!

நீ யாரு?

கீழவாழக்கரை. நாகை மாவட்டம். குக்கிராமம். கிராமராஜர் படங்களில் நடிக்கும் புகழ்பெற்ற கிராமங்களைப் போலவே வயலோர பஸ் நிறுத்ததில் இறங்கி, காற்றில் தலைகலைய வரப்புகளில் ஆடியாடி நடந்து, கடந்தால் ’டமடம’க்கும் மரப்பாலமேறி நுரைத்து ஓடும் வாய்க்கால் தாண்டினால் அமைதியான ஊர். ஒரு டீக்கடை, திண்ணை மரத்தூணோடு பண்ணை வீடு, சேப்பு கலர் டிராக்டர், மலைபோல வைக்கப்போர், தலைவிரித்த அரசமரம், கடந்து ஓடும் குட்டிகளுடன் ஆடு, கொண்டைச் சேவல், “ம்மா...” கத்தும் பசுமாடு என்று மாதிரி கிராமத்தின் சகல கல்யாணகுணங்களையும் கொண்ட கிராமம்.
அண்ட்ராயர் பருவத்தில் நான் அங்கே சரஸ்வதி பள்ளிக்கூடத்தில் கொஞ்ச நாட்கள் திருதிருவென்று விழித்திருந்தேன் என்று சொன்னால் எனக்கு நெருக்கமான மன்னையர்களே “என்னாடா கத வுடறான்?” ஆச்சரியத்தில் புருவம் சுருக்குவார்கள். “நீ பக்கா மன்னார்குடிக்காரன். உனக்கு அங்கே என்ன வேலை?” என்று நீங்கள் சுட்டு விரல் நீட்டும் முன்... சொல்லிவிடுகிறேன்.
நீலா சித்திக்கு கீழவாழக்கரை சரஸ்வதி பள்ளிக்கூடத்தில் ஒன்றாம் வகுப்பு ஆசிரியையாக பணி நியமனம் கிடைத்தது. ஆம்பிளைத் துணையாக என்னையும் அழைத்துக்கொண்டு கிளம்பிவிட்டாள். எல்கேஜி யூகேஜி போன்ற குழந்தைப்பருவ கொலைக்களன்கள் உருவாகாத காலம். தினமும் நீலா சித்தி ஒன்றாம் வகுப்புக்கு அ ஆ சொல்லித்தரும்போது நாற்காலி பக்கத்தில் உட்கார்ந்துகொண்டு கோரஸாக ராகம்பாடி படிப்பவர்களை வெறித்துக்கொண்டிருப்பதுதான் அன்றாட பணி.
தாளாளர் மற்றும் தலைமையாசிரியர் திரு. கங்காதரன் பக்கத்து வீட்டுக்காரர். ஐந்தாறு கட்டு கொண்ட பெரிய வீடு. வாசல் திண்ணையில் ஐம்பது பேருக்கு தலைவாழை இலை போட்டு சாப்பாடு போடலாம். அவ்ளோ பெரிசு. அவர்களுக்கு நான், கன்னம் பிடித்துக் கிள்ளி “சமத்துக்குட்டிடா...” என்று கையிரண்டையும் என் கன்னம் வழித்து பொட்டில் அழுத்தி விரல்கள் க்ளுக் க்ளுக்க திருஷ்டி கழிக்கப்படும் செல்லம்.
“சின்னத்தம்பி... “என்று இடைவேளைகளில் என்னை வாஞ்சையாய் அழைத்து அவரது மனைவியார் எனக்கு பருப்புசாதம் ஊட்டுவார்கள். முழு நிலா அப்பளத்தோடு. என்னுடைய நெடுநாளைய கெட்டப்பழக்கம், அப்பளம் நொறுங்காமல் சாப்பிட ஆரம்பிக்க வேண்டும். இல்லையேல் சாதம் தொடமாட்டேன். ”ஏன்டாம்பி... நொறுக்கித்தானே தொட்டுக்க தரப்போறேன்.. இப்போ என்ன?” என்று கேட்டால் வாயைத் திறந்து பப்பு மம்மு வாங்கிக்கொள்ளமாட்டேன். அடம். அழிச்சாட்டியம். புதுசாக அப்பளம் பொறித்து ஊட்டுவார்கள். அவர்களது முகவரி இப்போது நானறியேன். இப்பதிவு கொண்டு வந்து சேர்க்கிறதா பார்க்கலாம்.
அது ஒரு மாரிக்காலம். கண்ணெதிரே பச்சை வயற்காடு இருண்டு போகும்படி மேகங்கள் அணியாய்த் திரண்டு ஊரும் இருட்டிவிடும். அரைமணி ஒருமணி இடைவிடாமல் பொத்துக்கொண்டு கொட்டும். அலுத்த மேகக்கூட்டம் தூரம் போக பாதி வானம் பளிச்சென்று நீலம் காட்டிச் சிரித்து நம் மேனி குளுகுளுக்கும். இதுதான் வாடிக்கை. ஆனால் திடீரென்று ஒருநாள் புயல்சின்னம் உருவாகி தொடர் மழை. நாகப்பட்டிணத்தில் புயல் திருவிழாவுக்கு கொடியேற்றி துவஜாரோகணம் நடந்து விவித பாரதியில் “24 நேரத்திற்கு பலத்த மிக பலத்த மழையுடன் சூறைக்காற்று அடிக்கும்... மீனவர்கள் கடலுக்குள் மீன் பிடிக்க செல்ல வேண்டாம் என்று எச்சரிக்கப்படுகிறார்கள்” காலையும் மாலையும் ஒலித்துக்கொண்டிருந்தது. பொட்டு இடம் கூட இல்லாமல் மொத்த கிராமம் சொட்டச் சொட்ட நனைந்திருந்தது. கால்நடைகள் கொட்டகை தாண்டவில்லை.
பள்ளி எதிரே ஓடிய வாய்க்கால் கரையைத் தொட்டு காலை நனைத்தது. பள்ளிக்கு விடுமுறை அளித்து அந்தப் பிரதேசத்தில் ஈ காக்கா இல்லை. பள்ளிக்கு அடுத்த பக்கத்தில் அந்தக்கால பழைய வீடு. காம்பௌண்ட் சுவற்றிலும் சமையல்கட்டின் ஒரு மூலையில் ஓடு திறந்திறந்த பகுதியிலும் வேப்பங்கன்று துளிர்விட்டிருந்தது. மற்றபடி நல்ல விஸ்தாரமான ஓட்டு வீடு. பலமான உத்திரங்கள். நீலா சித்தியுடன் மகாலெக்ஷ்மி டீச்சரும் அங்கேதான் தங்கியிருந்தார்கள். நாங்கள் மூன்று பேர். நான் தான் அந்த இரண்டு லேடீஸுக்கும் காவல். மகாலெக்ஷ்மி டீச்சருக்கும் மன்னைதான்.
அன்று காலையிலிருந்து காற்று பலமாக வீசியது. நாகை கடற்கரை பக்கத்தில் இருப்பதால் காற்றின் வேகம் அதன் “ஊ..ஊ..ஊ” என்ற ஓலத்தில் பயமுறுத்தியது. காஃபியோ டீயோ போட்டுக்குடித்துவிட்டு ஜன்னலை எல்லாம் சார்த்திவிட்டு வீட்டுக்குள்ளேயே மடங்கிக் கிடந்தோம். மின்சாரம் என்றைக்கு போனது என்று தெரியாது. என்றைக்கும் வருமென்றும் தெரியாது. எதிராள் மங்கலாகத் தெரியும் மசமச இருட்டிலிருந்து சுத்தமாக மறையும் கும்மிருட்டு வந்தால் இருட்டிவிட்டது என்று அர்த்தம். அந்த இரவு வந்தது. வெளியே மழை நின்றபாடில்லை. அரிக்கேன் விளக்கு ஏற்றிவைத்துவிட்டு மோர்சாதமாக ஏதோ சாப்பிட்டோம். சமையற்கட்டில் ”சொர்ர்ர்ர்ர்ர்”ரென்று ஒரு திடீர் அருவி முளைத்திருந்தது.
கை கழுவி விட்டு பாயை விரித்து உட்கார்ந்திருக்கிறோம். வெடவெடவென்று குளிர ஆரம்பிக்க போர்த்திக்கொள்கிறோம். எதிரே மூலையில் அரிக்கேன் விளக்கிலிருந்து ஒளி சன்னமாகக் கசிந்துகொண்டிருக்கிறது. மகாலெக்ஷ்மி டீச்சர் ஏதோ ஊர்க்கதை சொந்தக்கதை பேசிக்கொண்டிருக்கிறார்கள். வெளிச்சம் எங்களைக் கடந்த போது பின்னால் சுவற்றில் கறுப்பு நிழலாகப் பூதாகாரமாக வரைந்திருந்தது. நீலா சித்தி அசையாமல் கதைக் கேட்டுக்கொண்டிருந்தாள். பக்கத்தில் கால்களை மடக்கி தாவாங்கட்டைக்கு முட்டுக்கொடுத்து நானும் சுவாரஸ்யமாகக் கேட்டுக்கொண்டு அமர்ந்திருக்கிறேன்.
கதை சொல்லிக்கொண்டிருந்த மகாலெக்ஷ்மி டீச்சரின் வாய் சட்டென்று திக்குகிறது. “டீ..ச்ச்....ச்ச்...ச்ச்” என்று “ர்” முடிக்காமல் உத்தரத்தையே வெறித்துப் பார்த்துக்கொண்டிருந்தார்கள். எங்களுடைய கண்களும் அங்கே சரேலென்று திரும்பியது. தலைக்கு மேலே உத்தரத்தில் ஐந்தாறு முறை ஸ்ப்ரிங்போல மேனியைச் சுருட்டிக்கொண்டு ஒரு நீளமான பாம்பு தலை தூக்கிப் படமெடுத்துக்கொண்டிருந்தது. அந்த அரைகுறை அரிக்கேன் விளக்கு வெளிச்சத்திலேயே பளபளக்கும் அதன் மேனி வெள்ளியில் கைப்பிடியளவு காத்திரமான செயின் உத்தரத்தில் தொங்கவிட்டது போலிருந்தது. அவ்வப்போது மின்னல் வெட்டி எங்களை அந்தப் பாம்புக்கு அடையாளம் காட்டி எட்டப்பன் வேலை செய்துகொண்டிருந்தது. மின்னலில் அதன் மேனி கண்ணைப் பறித்தது.
நீலா சித்தியை இடுப்போடு கட்டிக்கொண்டு பாம்பிலிருந்து கண்ணெடுக்காமல் மிரண்டுபோயிருந்தேன். உத்தரத்தில் அது நர்த்தனம் ஆடியது. இறங்கி கீழே வருமா.. இல்லை ஓட்டுக்கும் சுவருக்கும் மத்தியில் இருக்கும் இடைவெளியில் பதவிசாக வெளியே போகுமா? விதிதான் நிர்ணயிக்கும் என்கிற நிலை... மூவரும் அதையே கண்ணெடுக்காமல் பார்த்துக்கொண்டிருந்தோம். அறையில் பேச்சு நின்றுவிட்டது. நாங்கள் பாம்பின் முழுக்கட்டுப்பாட்டில் இருந்தோம். அப்போது................

...உத்தரத்தில் உல்லாசமாக ஊஞ்சலாடிக்கொண்டிருந்த பாம்பு அயர்ந்து போய் கீழே இறங்கத் தயாரானது. சுருட்டியிருந்த மேனியை நேர்கோடாக்கி சோம்பல் முறித்து மெதுவாக நீயா பட ஸ்ரீப்ரியா போல வளைந்து ஊர்ந்தது. நீலா சித்திக்கு அந்த மழையிலும் வியர்த்தது. நான் இன்னமும் சித்தியை இறுக்கிகொண்டு அந்த கோரக் காட்சியை பார்க்காமல் மடியில் முகம் புதைத்துக்கொண்டேன். "நாகராஜா... கண்ணுல படாம மண்ணுல மறைஞ்சு போ....நாகராஜா...நாகராஜா.. மறைஞ்சு போ... " என்று நடுநடுங்கும் குரலில் நீலா சித்தி அதனிடம் கெஞ்சி பேச்சுவார்த்தை நடத்திக்கொண்டிருந்தாள். அது பிரார்த்தனையா? வேண்டுகோளா? சமாதானமா? என்று ஒன்றும் புரியவில்லை.
மஹாலக்ஷ்மி டீச்சர் கொஞ்சம் தைரியமானவர். அவருக்கொன்றும் ஓடுகிற பாம்பை ஓடிப் பிடிக்கும் வயதில்லைதான். ஆனால் ஏதோ யுக்தி கண்டுபிடித்தது போல விருட்டென்று எழுந்து அறை மூலைக்குச் சென்றார். என்ன நடக்கிறது என்பதை அரைக்கண்ணால் பார்த்துக்கொண்டிருந்தேன். துடைப்பக் கட்டையை எடுத்துக்கொண்டு வந்து எங்களுக்கு முன்னால் கட்டாந்தரையில் பளார்...பளாரென்று ஓங்கி அறைந்தார். தரையில் இறங்கியிருந்த பாம்பு இரண்டு முறை அலட்சியமாகத் தலையைத் திருப்பிப் பார்த்துவிட்டு, நாங்களொன்றும் அது தீண்டும் அளவிற்கு கொலைபாதக எதிரிகளல்ல என்று மெதுவாகக் கொல்லைப் பக்கம் சென்றுவிட்டது.
மூவருக்கும் அன்று இரவு தூக்கமில்லை என்று எழுதுவேன் என்று எதிர்பார்ப்பீர்கள். எப்போது தூங்கினேன் என்று தெரியாமல் ஆம்பிளைச் சிங்கம் காலையில் எழுந்திருந்தேன். மழை தூறல் தூறலாகக் குறைந்து போனது. வெய்யில் அடித்தது. நாட்கள் ஓடின. சரஸ்வதி பள்ளிக்கூடத்திலிருந்து மன்னைக்கு வந்து சின்ன கான்வென்டில் சேர்ந்து...... நேஷனலில் படித்து.... காலேஜ் முடித்து... வேலைக்குப் போய்... கல்யாணம் பண்ணிக்கொண்டு... குழந்தைகள் பெற்று... காலம் கரைபுரண்டு ஓடிவிட்டது.
இந்த ரீவைன்ட் காட்சியை இதோடு நிறுத்திவிட்டு நிகழ்காலத்திற்குள் நுழைவோம்.
**
சென்ற வாரத்தில் மன்னைக்கு மஸ்டர் டேக்காகச் சென்றேன். சென்னையிலிருந்து சேப்பாயியில் போகும் போதே தி.ஜா வின் "துணை" கதை நினைவுக்கு வந்து படுத்தியது. சின்னக் குழந்தை என்ற எழுதுபகளின் இறுதியில் இருக்கும் ஒரு கிழவரையும் அவருடைய தகப்பனார் லேடி கிழவரையும் மஸ்டர் டேக்கு பென்ஷன் ஆஃபீஸ் அழைத்துச் சென்று திரும்பும் "துணை"ப் பையனாய் என்னை உருவகப்படுத்திக்கொண்டேன். தி.ஜாவின் நகைச்சுவை ததும்பும் சிறுகதை அது. கடைசியில் வண்டி குடை சாய்ந்து கீழே விழுந்து அடிபட்டுக்கொண்ட அந்தப் பையனுக்கு கிழவர்கள் துணையாக வீடு வந்து சேர்வார்கள்.
தி.ஜாவின் கதையில் கிழவர்கள் போல நான் தாய்க் கிழவியுடனும் சித்திக் கிழவியுடனும் சென்றேன். கூடவே உள்ளூரில் என் சாரதா பாட்டியின் தோழியாகிய தொன்னூற்று மூன்று தொண்டுவையும் அவரது மாப்பிள்ளையாகிய லேட்டஸட்டாக பென்ஷன் பெறும் இளங்கிழவரும் உடன் வந்தார்கள். சேப்பாயியையும் என்னையும் தவிர்த்துப் பார்த்தால் அகில இந்திய முதியோர் மாநாட்டுக்கு ஆட்கள் ஏற்றிக்கொண்டு போவது போல இருந்தது. அனைவரும் பாசமாக “என்னடா தம்பி” கூப்பிடும்போது இன்னும் பத்துப் பதினைந்து வயசு குறைந்து போய் வாலிபம் வளமாக ஏறிக்கொண்டது.
"இப்பவே போய்டுவோமா?" என்று அம்மா கேட்டபோது காலை ஒன்பதரை. வயதானாலே எட்டு மணிக்கு ரயில் என்றால் ஆறரைக்கே ஸ்டேஷனுக்கு போணும் என்று அடம்பிடிப்பது அதிகமாகிவிடுகிறது. "பத்து மணிக்குதான் வருவா" என்று வாசலில் ஹரித்ராநதி ரசித்துக்கொண்டே குரல் கொடுத்தேன்.
"கூட்டமாயிடப் போறது.. ஊருக்கு வேற திரும்பணும்... போலாம்..." என்று குச்சி போட ஆரம்பித்தார்கள்.

பஞ்சாயத்து யூனியன் ஆஃபீஸுக்குப் பின்னால் போலீஸ் ஸ்டேஷன், சப்-கோர்ட் மற்றும் தாலுகா அலுவலகங்கள் என்று கையும் மெய்யுமாக அரச ராஜ்ஜியம் நடந்துகொண்டிருக்கும் இடம். ஒன்பது ஐம்பத்தைந்திற்கு அலுவலர்கள் வருவதற்குள் இரண்டு மர பென்ச் நிரம்பி வழிந்து முதுபெரும் பென்ஷனர்களுக்கு இடம் கொடுத்து இளைய கிழவர்கள் வாசலில் ஓய்வு வாழ்க்கையின் சாதக பாதகக் கதைகளைப் பேசிக் கொண்டு நிற்குமளவிற்கு கூட்டம்.
"பாதி பேர் ரிட்டயர்ட் டீச்சர்ஸ்... அவா க்ரௌட் தான் ஜாஸ்தி..." என்றாள் ஆசிரியையாகப் பணி ஓய்வு பெற்ற பவானி சித்தி. அதில் ஒரு பெருமை. பட்டதாரியொருவரின் டீக்கடையில் வியாபாரம் சுடச்சுட ஆகிக்கொண்டிருந்தது. சென்னையில் பரவலாகக் காணப்படும் மெதுவடையில்லாமல் க.கொண்டைக் கடலை சுண்டல் விற்றார். தேங்காய்ப்பூ தூவி... பார்த்ததும் இழுத்தது.
"ஏஜுடு பர்சனுக்கு நல்லதுங்க..." என்று டீக்கு நின்ற என்னிடம் விற்பனையை எதிர்பார்த்தார். ஏஜுடுன்னு என்பதற்குப் பிறகு "ரிட்டயர்டு ஆளாடா நீ" என்று வாங்குவதற்கு ஒரு மனம் வீம்பாகத் தடுத்தும் "மணமா இருக்கு.. வாங்கி வாய்ல போடுடா" என்று சிபாரிசாய் இன்னொரு மனமும் சுண்டல் பறிக்கும் குரங்காகக் கூத்தாடியது. அடக்கிக்கொண்டேன்.
எதேச்சையாக உள்ளே பெஞ்சுகளில் அமர்ந்திருந்தவர்களைப் பார்த்தபோது ... அட.. இவங்களை மாதிரி இருக்கே.. என்று மஸ்டர் கையெழுத்துக்காக நின்றிருந்த சில பெருசுகளைக் கடந்தேன். ஆமாம்... அவங்கதான்..
“என்னைத் தெரியுதா?” என் நெஞ்சில் கைவைத்துக் கேட்டேன்.
“நீ யாரு?” எதிர் கேள்வியில் மிரண்டு போனேன்.
“யாரா? இன்னுமா தெரியலை?” காதலர்கள் போல முகத்துக்கு முகம் வைத்துக் கேட்டேன்.
“யாரு நீ?” என்று கேள்வி புரண்டு வந்தது.
“அலமேலு தெரியுமா?”
“அலமேலக்கா என் தெய்வம். என்னை வேலைக்குச் சேர்த்ததுவிட்டுச்சு..”
தனது பேட்ச் மெட் யாரிடமோ பேசிக்கொண்டிருந்த பவானி சித்தி விறுவிறுவென்று பக்கத்தில் வந்து “இப்படித்தாண்டா பேசறா...” என்றாள்.
”இது யாரு?” என்று பவானியைக் காட்டினேன்.
“யாரு?” ஆயிரமாயிரம் கேள்விகள் அந்தம்மாவின் கண்களில்.
“ஒண்ணுமே தெரியலைடா... நம்மாத்துல அவளும் அப்படியிருக்கா.... இவளும் இப்படி ஆயிட்டாளேடா” என்று அங்கலாய்த்தாள் பவானி சித்தி.
மீண்டும் முன்னால் நின்றேன். கனைத்துக்கொண்டேன்.
கனைப்பில் மிரண்டுபோய் பார்த்தார்கள்.
“சின்னத்தம்பி.. தெரியலையா? கீழவாழக்கரை நியாபகம் இருக்கா?”
“கீழவாழக்கரை... ஆமாம்.. நீ சின்னத்தம்பியா? சரி..சரி...”
பக்கத்தில் யாரையோ வினோதமாக பார்த்தார்கள். மீண்டும் என்னைப் பார்த்தார்கள். அவர்களுக்கு மொத்த உலகமே கேள்வியாய் இருந்தது. கண்களில் கேள்விகள் அணைக்கட்டு நீர் போலத் தேங்கி நின்றது அவரது பார்வையில் தெரிந்தது. உள்ளேயிருந்து “மீனாட்சி... தனபாக்கியம்.... வஜ்ரவேலு....” பெயர்கள் வரிசையாக ஒலித்துக்கொண்டிருந்தது.
“மஹாலெக்ஷ்மி”
“.....”
“மஹாலெக்ஷ்மி”
”....”
பென்சிலிருந்து எழுந்திருக்காமல் “யாரைக் கூப்பிடறாங்க?” என்று கேள்வியாய் என்னைப் பார்த்தபோது எனக்கும் துக்கம் தொண்டையை அடைத்தது. அழக்கூடாது என்று முடிவாய் இருந்தேன். கீழவாழக்கரையில் துடைப்பக்கட்டையை எடுத்து சர்ப்பம் விரட்டிய மஹாலெக்ஷ்மி டீச்சரா இது? பஸ்ஸிலிருந்து இறங்கி விடுவிடுவென்று வரப்பில் சென்ற ஆளா இது? “சின்னத்தம்பி ஒரு கிளாஸ் குடுங்க....” என்று டீ நீட்டியவரா இப்படி? இரக்கமில்லாத வியாதிகள். பக்கத்தில் அவரது கடைசிப் பெண் அமர்ந்திருந்தார்கள்.
“டாக்டர்ஸ் என்ன சொல்றாங்க?” என்று கமறலுடன் கேட்டேன்.
“டிமென்ஷியா... கொஞ்ச நேரத்துக்குப்புறம் எதுவுமே நினைவுல தங்க மாட்டேங்குது.. ”
“எங்க அம்மாவும் வந்திருக்காங்க... அலமேலு.... டீச்சர் பார்த்தாங்களா?”
“ம்....பார்த்தாங்க... அப்பவும்... அலமேலக்கா என் தெய்வம்... அப்படீங்கறாங்க.. ஆனா எதிர்த்தார்ப்ல நிக்கிறது அலமேலக்கான்னு தெர்ல...”
கொடுமை. நீலா சித்திக்கும் டிமென்ஷியா. மஹாலெக்ஷ்மி டீச்சர் நடமாடிக்கொண்டே டிமென்ஷியாவில். நீலா சித்தி பசி சொல்ல முடியாமல், வலி சொல்ல முடியாமல், தாகமெடுத்தால் தண்ணீர் கேட்கமுடியாமல், படுத்த படுக்கையாய்....கண்கள் உருட்டிப் பார்த்து.... டிமென்ஷியாவில்...
மன்னையை விட்டு சேப்பாயியில் கிளம்பியாயிற்று. “நீ யாரு?நீ யாரு?நீ யாரு?நீ யாரு?நீ யாரு?நீ யாரு?......” மட்டும் விடாமல் காதில் ரீங்காரம் செய்துகொண்டிருந்தது. அதன் ஓசை பேரிரைச்சலாக வளர்ந்துக்கொண்டே வந்து காரின் எதிரே தெரியும் ரோடு முழுக்க “நீ யாரு? நீ யாரு?” என்கிற வார்த்தை வெள்ளையாய்ச் சிதறிக்கொண்டே வந்தது. கார்ச் சக்கரத்தில் அரைபடும் ஒவ்வொரு “நீ யாரு?”களால் மஹாலெக்ஷ்மி டீச்சரின் “நீ யாரு?” சொஸ்தமாகிவிடாதா என்ற நப்பாசை. கீழவாழக்கரை.. சரஸ்வதி பள்ளி... வயல்.. கடல்... காற்று... பாமணியாறு.. மன்னை.... இதோ கும்மோணம்... மாயவரம்... கொள்ளிடம்... சிதம்பரம்.. சென்னை... என்று எல்லா காணும் இடங்களிலும் ஆக்கிரமித்த “நீ யாரு?” என்னை விட்டுக் களைவது எப்போது?
இப்போதும் என்னுள்ளே ஒரு விஸ்வரூப “நீ யாரு?”

‪மன்னை சர்பத்ஸ்‬

நேஷனல் ஸ்கூலிலிருந்து பந்தலடி மூன்னூறு நானூறு மீட்டர் இருக்கலாம். இரண்டு பக்கமும் இடைவிடாத கடைகள். சுதர்ஸன் காஃபி ( ’வெள்ளெரிப்பிஞ்சு ஐம்பது பைசா’ என்கிற மன்னார்குடி டேஸ் எபிஸோடில் இந்தக் கடை விஸ்தாரமாகப் பேசப்பட்டிருக்கிறது), தங்கம் ஸ்டுடியோ, வெண்ணைத்தாழி மண்டபம், ஆர்.ஆர் ட்ராவல்ஸ், நாதன் ஸ்டுடியோ, சர்வோதயா, லக்ஷ்மி சில்க் ஹௌஸ் என்று பராக்குப் பார்த்துக்கொண்டே நடந்து வந்தால் ரங்கூன் ட்ராவல்ஸ் வரும். மசமசவென்று தெரியும் புதுப்பட வீடியோ கேசட்டுகளோடு ஒரு நாள் இரவு முழுவதற்கும் VCPயையும் வாடகைக்கு விட்டு மன்னார்குடியையே ஒட்டுமொத்தமாக அடக்கி ஒடு்க்கி வீட்டிற்குள் அடைத்த பெருமையுடையவர்கள். (ஆமாம். இதற்கு தனி மன்னார்குடி டேஸ் எபிஸோட் பிறகு வரும்) அதற்கு எதிர்புறம் இருப்பது அழகப்பா தாளகம். ஆனால், தாளகத்தைப் பற்றிய பேச்சு இல்லை இது.
அதன் ஒதுக்குப்புறமான வாசலில் பாய் ஒருத்தர் சர்பத் ஸ்டால் போட்டு உட்கார்ந்திருப்பார். ஸ்டால் என்றால் ஷட்டர் போடும் கடைகிடையெல்லாம் இல்லை. பெரிய நாலு கால் ஸ்டூலுக்கு மேலே நாலுபக்கமும் சட்டம் அடித்திருக்கும். நாலைந்து கலர்க்கலர் சர்பத் பாட்டில்களையும், ஜஸ்கட்டி வைத்திருக்கும் தெர்மாகோல் பெட்டியையும், நகத்தினால் நெம்பினால் திறந்துகொள்ளும் கதவுடைய அடியில் போட்டு... சுண்டு விரல் அளவு உறுதியான(?!) பூட்டுப் போட்டு ஐந்து நிமிடத்தில் கடையைக் கட்டிவிடுவார்.
கட்டம் போட்ட கைலியும் கை வைத்த வெள்ளை பனியனும் அவரது அடையாளம். வேகமாக காற்று அடித்தால் ஆவி மிதப்பதுபோல தேசலாக இருப்பார். உச்சி சிரஸுக்கு தும்பைப்பூ வெள்ளைக் குல்லாய். அனுதினமும் நேரம்தவறாமல் நமாஸ் செய்து காய்த்துக் கறுத்துப் போன முன் நெற்றி. டொக்கு விழுந்த கன்னங்கள். கண்களில் நேர்மை. எந்த கெட்ட பழக்கமுமில்லாத ஒழுக்க சீலர்.
யாரும் வந்து சர்பத் கேட்காத நேரங்களில் கண்ணாடி போட்டுக்கொண்டு குடை ரிப்பேர் செய்வார். நான் போய் கடை வாசலில் நின்றதும் கண்ணாடியைக் கழற்றி பனியனில் தொங்கவிட்டு... “ஜ்லிங்...ஜ்லிங்..” என்று உடைந்த ஐஸ் கட்டிகளை கண்ணாடி தம்பளரில் இட்டு..... நன்னாரி சர்பத் எஸென்ஸை வலது கை உயர்த்தி ஆகாயத்திலிருந்து ஊத்துவார்... எலும்பிச்சம்பழம் பிழிந்து... இடது கையால் தம்பளரை மூடிக்கொண்டு... வலது கை ஸ்பூனால் கண்ணாடி தம்பளிரில் ”டிணிங்...டிணிங்”க பத்து நொடிகள் அடித்துக் கையில் கொடுப்பார். கை வழி ஏறும் ஜில்லுப்பில் கத்திரி சூரியன் காணாமல் போய்விடுவான். பாய்க்கு நானொன்றும் காசு கொடுக்க வேண்டாம்.
“சர்பத்துக்குக் காசு தரேன்னு அப்பா சொல்லிட்டாஹ... நீங்க பத்திரமா வூட்டுக்கு போங்க....” என்று வாஞ்சையாக வழி அனுப்புவார் பாய்.
**
ஃப்ரிஜ்ஜிலிருந்து எவர்சில்வர் டம்பளரில் ஐஸ் கட்டிகளை எடுத்துப் போட்டு நன்னாரி சர்பத் தயாரித்தேன். தூக்கிப் பிடித்து ஆத்தும்போது ஐஸ் கட்டிகள் ”க்ணிங்..க்ணிங்..” சப்தம் எழுப்பியபோது விழித்துக்கொண்ட மன்னை நினைவுகள் இது.
வெய்யிலுக்கு ஜில்லுன்னு இருக்கா?

மன்னை விஜயம்


அம்மாவுடன் மன்னைக்கு ஒரு நாள் சூறாவளி சுற்றுப்பயணம் மேற்கொண்டேன். சென்னை-திண்டிவனம்-பாண்டிச்சேரி-கடலூர்-சிதம்பரம்-சீர்காழி-மாயவரம்-கும்பகோணம்-மன்னார்குடி. வழியில் முத்துச்சட்டை நாதர்... தோணியப்பர்... பிரமன் வழிபட்ட பிரம்மபுரீஸ்வரர் என்று ”த்ரவிட சிசு” சம்பந்தன் ஞானப்பால் குடித்த ஊரான சீர்காழியில் தரிசனமும், தையல்நாயகி... முத்துக்குமார ஸ்வாமி... நோய் தீர்க்கும் வைதீஸ்வர தரிசனமும் ஆனது. அதுபற்றி பின்னர் தனி பதிவு.
அகாலத்தில் கும்மோணம் வெங்கடரமணா ஊழியர்களை நச்சு செய்யவேண்டாம் என்று மாயூரத்திலிருந்து குடந்தைக்குள் நுழையும் சாலையின் நுனியில் இருக்கும் முராரியில் இரவுச் சிற்றுண்டியை முடித்துக்கொண்டோம். "மஷ்ரூம் புலாவ், பட்டர் நான், பாவ் பாஜி, காஷ்மீரி புலாவ்....." என்று வடக்கிந்திய உணவுகள் அனைத்தையும் அஷ்டோத்ர சத நாமாவளியாய் ஒப்பித்துவிட்டு "என்ன வேணும்?" என்று ஆர்டராய்க் கேட்ட சர்வரிடம் தென்னிந்திய வகையறாவான "ரெண்டு ஆனியன் தோசை... . ரெண்டு இட்லி..." கேட்டு ஏக்கமாகப் பார்த்தேன்.
சிரித்துக்கொண்டே உள்ளே சென்றார். இரவு ஒன்பதரை மணிக்கு சொற்ப கூட்டம் இருந்தது. கண் மேய்ந்த மேஜைகளிலெல்லாம் வடக்கின் ஆதிக்கம் ஓங்கியிருந்தது. புலாவ், நான், பிரியாணிகள் பரவலாய் ஆக்கிரமித்திருந்தன. சாப்பிட்டு கை அலம்பி வரும் போது மூச்சு முட்டக் குடித்திருந்த இளம் கிழவர் ஒருவர் தண்ணீர் ஜக்குகளை தள்ளியபடி தள்ளாடி அமர்ந்தார். "எந்திரிங்க.." என்று விரட்டும் தோரணையில் வந்த சந்தனப் பொட்டு சர்வரிடம் "வாழ்ந்தி எழுக்கமாழ்ழேன்...சழ்த்தியமாஆ..." என்று தடுமாற்றத்துடன் மேஜையில் ஓங்கி அறைந்து சத்தியம் செய்தார். ஹோட்டல் குலுங்கியது. இடுப்பில் வேஷ்டி நழுவியது. ஷேம் ஷேம் பப்பி ஷேம் வேடிக்கையெல்லாம் பார்க்க நேரமில்லை.
கும்மோணம் மன்னை சாலையில் ஓட்டுனர் தூங்கிவிடுவார் என்பதற்கு பயப்படதேவயில்லை. ஆயிரமாயிரம் கொக்கி வளைவுகள் கொண்ட தடதடக்கும் தார்ச் சாலை. 'தல' அஜீத்குமாரே அறுபதில்தான் போகமுடியும். ஸ்டியரிங் திருப்பித் திருப்பிக் கையிரண்டும் பின்னிக்கொள்ளும் அபாயமுண்டு. நவக்ரஹ குரு ஸ்தலமான ஆலங்குடிக்கு முன்னர் "ஞானபுரீ" என்று போர்டு ஒளிர்கிறது. நங்கை நல்லூர், பஞ்சவடி போன்ற இடங்களில் விஸ்வரூப ஆஞ்சநேயர் கோயில்களை நிர்மாணித்த ரமணி அண்ணாவுடைய கைங்கர்யத்தில் இக்கோயில் எழும்புகிறது.
வலங்கைமான் பாடைகட்டி மாரியம்மன் கோயில் வாசல் பிரகாரத்தில் சுருட்டிக்கொண்டு சில பக்தர்கள் படுத்திருந்தார்கள். மங்கலான வெளிச்சத்துடன் அரைதூக்கத்துடன் முன்னால் சென்ற பஸ்ஸிலிருந்து மாரியாத்தா பொறுக்கிக்கொள்ள பாதி தூக்கத்திலிருந்து எழுந்து காசு எறிந்தவரின் புசுபுசு ரோமக் கை மட்டும் தெரிந்தது. ஆந்திராவின் கலுவராயியில் பிறந்த கணபதிமுனியின் முன்னோர்கள் வலங்கைமான் வாசிகள். (கணபதி முனி ரமணரின் பக்தர். ரமண கீதை எழுதியவர். இவரது வாழ்க்கை வரலாறு எழுதிவருகிறேன்.) நிர்ஜனமான தெருக்களின் ஊடே சேப்பாயி ஊர்ந்து செல்லும்போது எந்த வீடாக இருக்கும் என்ற கேள்வி காரின் சக்கரம் போல மனசுக்குள் சத்தமில்லாமல் மெதுவாக ஓடியது. மசூதியில் ஏதோ சொற்பொழிவு.
நீடாமங்கலத்தில் ரயில்வே கேட் விழுந்திருந்தது. வேளாங்கண்ணி மார்க்கத்திலிருந்து பஸ்வரிசை நீண்டு.. பஸ்ஸுக்கு பஸ் இடைவெளியில் பொட்டுப் பொட்டாய் சிகரட் தலையின் தீயும் புகையும் எழுந்துகொண்டிருந்தது. ஓரத்தில் வண்டியை நிறுத்தி விளக்கணைத்து கதவு திறக்கக் காத்திருந்தேன். "ஒனக்கு எவ்ளோ குடுத்தான்?" என்ற கேள்வி கார் ஜன்னலைத் திறந்தவுடன் கேட்டது. மூடிய உரக்கடை வாசலில் இருவர் ஆடியபடி கையில் கரன்சியோடு பேசிக்கொண்டிருந்தார்கள். பக்கத்தில் நின்ற போலீஸ் அசுவாரஸ்யமாய் இதைக் கடந்து போயிற்று.
பூவனூர், ராயபுரம் என்று பழகிய பாலங்கள் கடந்து சென்றுகொண்டிருந்தோம். சேப்பாயியின் முகப்பு விளக்கொளியில் இருபுறமும் புளியமரங்கள் சாமரம் வீசிக்கொண்டிருந்தது. "மன்னார்குடி எப்பப்பா வரும்?" வினயாவின் கேள்விக்கு "அதோ... அந்தப் பக்கம் வானத்துல பார்த்துண்டே வா.. பெரியகோயில் கோபுர விளக்கு பிரகாசமாத் தெரியும். அப்புறம் மேலப்பாலம், ஹரித்ராநதி வந்துடும்". கட்சிக்காக ஓட்டு வேட்டை நடத்திய சில தொண்டர்கள் கரை வேஷ்டி துண்டுடன் களப்பணி ஆற்றி களைப்புடன் வீடு திரும்பிக்கொண்டிருந்தார்கள்.
மணி டீக்கடை தாண்டி ஊருக்குள் நுழைந்தேன். ஹரித்ராநதி உறங்கிக்கொண்டிருந்தது. மனசுக்குள் நினைவுகள் விலுக்கென்று விழித்துக்கொண்டது.

அப்புவின் அம்மா

மீசை அரும்பிய பதின்மவயசு. எதிர்பாலினரிடமிருக்கும் கண்ணுக்குத் தெரியாதவைகளைப் பார்க்கும் ஒருவிதமான "அந்த" ஆசை. ஒருநாள் விஜயாவில் காலைக் காட்சி படத்துக்குப் போகும்போது "வெங்குட்டு.. நானும் வரேன்.." என்று கேரியரில் ஓடிவந்து தொற்றிக்கொண்டான் அப்பு. அது மன்னை முழுக்க காலையை கிளுகிளுப்பாக்கிக்கொண்டிருந்த எண்பதுகளின் பிற்பாதி. கொட்டகையெங்கும் சேர நாட்டுப் படங்களின் ஆதிக்கம். ஒண்ணரை மணிநேரப் படத்தில் இடைவேளைக்கு முன்னும் பின்னும் வரும் அல்ப ஐந்து நிமிட சிற்றின்பம்.
தியேட்டர் எதிரில் கீத்துக் கொட்டாயில் சைக்கிளை விட்டாயிற்று. சிகரெட் அட்டையை டோக்கனாக வாங்கி சட்டைப் பையில் சொருகிக்கொண்டு கை சொடுக்கும் நேரத்திற்குள் தியேட்டர் இருட்டுக்குள் இருவரும் மறைந்துவிட்டோம். காமாசோமாவென்று (இப்போது நினைத்தால்!) திரையில் ஏதோ காண்பித்தார்கள். பாதி நேரம் வெண்திரையில் அடர்மழை. மீதிப் பாதி மசமசவென்ற காரிருளில் புள்ளியாய் டார்ச் வெளிச்சமடித்து எதையோ தேடிக்கொண்டிருந்தார்கள்.
கசகசவென்று வேர்த்து விறுவிறுத்துப்போய் படம் விட்டு வெளியே வந்தோம். வெய்யிலில் கண் கூசியது. இருநூறு அடியில் இருக்கும் சைக்கிளை எடுத்துவிட்டால் சாவகாசமாக வீட்டிற்கு போகலாம். சைக்கிளில் கிளம்புவதற்கு முன்னர் வீட்டிற்கு தெரிந்தவர்கள் யாராவது பார்த்துவிட்டால் அசிங்கம்.
பரபரப்பாகக் கூட்டத்தில் கலந்து தலையோடு தலையாய் மிதந்து வந்து கொண்டிருக்கும் போது "மேட்டினி ஷோ.... சாமி படத்துக்கு அம்மா வந்துருக்காங்க..." என்று காதில் கிசுகிசுத்தான் அப்பு . காலையில் நுழையும் போது கையில் சூலாயுதத்துடன் ஏதோ அம்மன் படப் போஸ்டர் தியேட்டர் காம்பௌன்ட்டில் ஓட்டியிருந்தது இப்போது நினைவில் வெட்டியது. எனக்கு கிடுகிடுத்துப்போனது.
"டேய்... என்னடா சொல்ற?" சத்தமான ரகசியக் குரலில் கேட்டேன்.
"ஆமாடா.. வளையல் சத்தம் கேட்குது"
"ஊர்ல எல்லா பொம்பளையும் வளையல் போட்டுக்கிறாங்க... வளையல் சத்தம் கேட்டாக்க அம்மாவாடா?" இளக்காரமான சிரிப்பு.
"இல்ல... இது அம்மாதான்..."
டிக்கெட் கவுன்டருக்கும் சினிமா முடிந்து வெளியில் வரும் வழிக்கும் மத்தியில் ஒரு அரைக்கல் சுவர்தான் வேலி. எனக்கும் "க்ளிங்..க்ளிங்.." கேட்டது. அது அப்புவின் அம்மாதானா என்று எட்டிப் பார்க்கும் அசட்டு தைரியம் எங்கிருந்தோ வந்தது.
"வெங்குட்டு.. வேணாம்.. நிச்சயமா அம்மாதான்.. பார்க்காதே.... ஓடிடலாம்.." வெட்கமும் பயமும் பிடுங்கித் திங்க கையைப் பிடித்து சைக்கிள் ஸ்டான்ட் பக்கம் இழுத்தான் அப்பு. நான் விடவில்லை. எப்படியும் பார்த்துவிடவேண்டும் என்று திமிறிக் கொண்டு அவனிடமிருந்து கையை உருவிக்கொண்டு கவுன்டரை நோக்கி முன்னேறினேன்.
ஜீவசமாதி போன்ற கவுன்டர்கள். ஆறுதலுக்காக வாசல் பார்த்த சுவரில் ஒரடிக்கு ஒரடி சிமென்ட் ஜாலி (பல்லி மட்டும் நுழையும் துளைகளோடு) பதித்திருப்பார்கள். எட்டணா, ஒரு ரூபாய் நாணயங்களை வைத்து "குபேரராஜ் LUV தேனு" என்று சுரண்டி ஆட்டின் போட்டு மன்மத அம்பு விட்டிருப்பார்கள். பார்வை யாரைத் தேடி வந்ததோ அதை விட்டு கண்டதையும் பார்த்து தவித்துக்கொண்டிருந்தது.
பக்...பக் மனசை அடக்கிக்கொண்டு கவுன்டருக்குள் பாய்ந்தேன். ஓரத்தில் குள்ளமாக கையை ஆட்டிக்கொண்டு கண்ணாடி வளையல்கள் கலகலக்க யாரிடமோ பேசிக்கொண்டு அப்புவின் அம்மா அமர்ந்திருந்தார்கள். கவுன்ட்டர் வாசலில் நிழலாட, திரும்பிப்பார்த்தார்கள். ஜாலியிலிருந்து என் முகத்தில் வீசிய வெளிச்சத்தில் "வெங்குட்டுவா?" என்று சுலபத்தில் அடையாளம் காணப்பட்டது.
நாணிக்கோணிக்கொண்டு சைக்கிளை எடுக்க ஓடினேன். அப்பு ஏற்கனவே சைக்கிள் நிறுத்தத்தின் வாசலில் காலில் வென்நீர் கொட்டியது போல தவித்துக் கொண்டிருந்தான்.
"எடுடா சீக்கிரம்...ம்... சீக்கிரம்.."
அவசரத்தில் இரண்டு மூன்று சைக்கிளை சாய்த்துவிட்டு என்னுடையதை உருவிக்கொண்டு பேய் மிதி மிதித்துக்கொண்டு வீட்டிற்கு ஓடினோம். ஹரித்ராநதி கீழ்கரை அடைந்தவுடன் எனக்கு சிரிப்பு பொத்துக்கொண்டு வந்தது. "பஹ...பஹா" என்று சிரித்தேன்.
"ஏன்டா சிரிக்கிறே?"
"எப்படியும் உங்கம்மா அந்த சாமி படம் பார்த்துட்டு சாயங்காலமாதான் வரப்போறாங்க... எதுக்குடா இப்படி நாயடிபேயடியா சைக்கிளை மிதிச்சுக்கிட்டு பறந்து வந்தோம்?'
குளக்கரையில் சைக்கிளைச் சாய்த்துவிட்டு சிரித்துக்கொண்டோம். இரண்டு மூன்று நாட்கள் அப்பு வீட்டுப் பக்கம் தலைவைத்துக்கூட படுக்கவில்லை. மறந்துவிட்டிருப்பார்கள் என்று பத்து நாட்களுக்குப் பின்னர் எட்டிப் பார்த்தபோது கூட "வெங்குட்டு..." என்று ராகமிழுத்து நமுட்டுச் சிரிப்புடன் அடிப்பார்வை பார்த்தது நிரந்தரமாய் என் நெஞ்சில் பதிந்துவிட்டது.
**
இன்று காலையில் அப்புவிடமிருந்து ஃபோன். அவசரகதியில் உடனே எடுக்கமுடியவில்லை. சற்று நேரம் பொறுத்துக் கூப்பிட்டேன்.
"என்னடா?"
"வெங்குட்டு... காலயில மூணு மணிக்கு அம்மா தவறிட்டாங்க..."
ஒரு நிமிடம் புரியவில்லை. நிதானத்திற்கு வந்த பின்னர்..
"எ-ன்-ன சொ-ல்-றே?" தடுமாறினேன்.
"வயித்துல கேன்சர்னு சமீபத்துல கண்டு பிடிச்சோம். முத்திப்போச்சுதுன்னு அடையாறுல பார்க்க முடியாதுன்னு சொல்லிட்டாங்க.... ஆயுர்வேதிக்ல காமிச்சுக்கிட்டிருந்தேன்.. முடியல.. போய்ட்டாங்க..."
ஃபோனை வைத்துவிட்டான். ஐந்து சுவையுள்ள ஐங்கிரிமண்டி என்றொரு பதார்த்தம் அவர்களது மராத்தி மரபில் சிறப்பு. "வெங்குட்டு... இன்னும் கொஞ்சம்.." என்று கூடத்தில் இலைபோட்டு கேட்டுக் கேட்டுப் பரிமாறியிருக்கிறார்கள். கல்யாணத்திற்காக அப்புவைக் கடத்திய போது (பார்க்க: மன்னார்குடி டேஸ் - முதல் கல்யாணம்) என்னை நம்பி வெளியே அனுப்பிய தர்மாத்மா. ம்..
காலனையும் காலத்தையும் யாரால்தான் பிடித்துக்கட்டிவிட முடியும்?
என் ஆழ்ந்த அஞ்சலிகள்! 

ஆடிய பிற ஆட்டங்கள்

Related Posts with Thumbnails