Thursday, December 15, 2016

மன்னார்குடி டேஸ் - மனிதக் கரண்டி

சமையல்கட்டிலிருந்து கொல்லைக் கோடியில் இருக்கும் கிணற்றுக்கு போவதற்கு ஒரு ஒத்தையடிப்பாதை இருந்தது. அக்டோபர் நவம்பர் மழைக்கு சறுக்கியடிக்கும். வேனிற் கால கொளுத்தும் வெய்யிலில் கூட கால் சுடாது. கொல்லைகொரு கிணறு என்பது கிராமத்து வீடுகளின் ஆதி சம்பிரதாயம். ஒத்தையடிப் பாதையின் இரண்டு புறமும் அருகம்புல் கால் உரச மண்டியிருக்கும். "இன்னிக்கி சதுர்த்தி.. பூஜைக்குப் பறிச்சுண்டு வந்தேன்..." என்று பாட்டி மடியிலிருந்து கொத்து புல் எடுத்துப் போடுவாள். அதைத் தாண்டி பட்ரோஸ், வயலட்டும் ஆரஞ்சுமாக டிஸம்பர் பூச்செடிகள், செகப்பு செம்பருத்தி, நந்தியாவட்டை, எறும்பு ஊறும் செண்பகம் என்று இருமருங்கும் மலர்கள் மண்டிய வாசமிகு கொல்லை.

மழையில் சறுக்குகிறது என்று பின்னர் அந்த நடைபாதையை மட்டும்ரெண்டு கல் வைத்து சிமென்ட் வழித்துவிட்டோம். வெய்யிலுக்குச் சுட்டது, மழைக்கு சறுக்கவில்லை. ஆனால் கொல்லைக்குள் வந்தால் அமேசான் காட்டுக்குள் வந்தது போலிருக்கும். சித்திரை மாதத்தில் கூட சூரியனால் வேலை காட்ட முடியாத இடம். அணிலாடும் கிணற்றடி. குயிலோ அக்காக் குருவியோ அங்கிருந்து தெரியும் பாமணியாற்றுக்குக் குரல் கொடுத்து பேசிக்கொண்டிருக்கும் இடம்.
மரக்கிளையிடையில் சிந்தும் பௌர்ணமி இரவுகளில்.... வயதானவர்களுக்கு அபிராமி பட்டரும் அம்பாளும்.. ”மா.. தேவீ...” என்று கன்னத்தில் போட்டுக்கொள்ளும்படியாகவும் வயதோடு வாலிபமாய் இருப்பவர்களுக்கு கயித்துக் கட்டில் போட்டு நேத்து ராத்திரி யம்மாஆஆஆ..... என்றும் வயதுக்கேற்றவாறு பலப்பல கற்பனைகளைத் தூண்டுமிடம். மதியமோ மாலையோ சில சமயம் சாரையும் சர்ப்பமும் கட்டிப்புரண்டு விளையாடும். சாயந்திர வேளைகளில் இந்த "நல்லது" களைப் பார்த்துவிட்டால் " நீலா.. ஒரு அகல் வெளக்கு ஏத்துடீ" என்ற பாட்டியின் கட்டளைக்கு கொல்லைப்புற துளசிக்கருகே நல்லெண்ணெயில் பஞ்சு திரி போட்ட அகல் எரியும்.
கிணற்றுத் தண்ணீர் இறைத்துக் குளித்தபோது தோள் பட்டைகள் வலுவாகவும் இரண்டு மலைகளைக் கட்டி இழுத்து வரும்படி தேகாரோக்யம் இருந்தது என்றெல்லாம் பொய் சொல்லமாட்டேன். ஆனால், குளிப்பது என்பது ஒரு சுறுசுறுப்பான சமாச்சாரமாக இருந்தது. சுற்றிலும் செம்பருத்தி, நந்தியாவட்டை பூச்செடிகளும், கன்றோடு வாழையும், நெடிதுயர்ந்த தென்னையும் பக்கத்தில் ஒரு பெரிய நெல்லி மரமும் சூழ இருக்கும் கொல்லைப்புறக் கிணற்றில் குளிப்பது என்பது குற்றால அருவியில் குளிக்கும் பேரானந்தம்.
முதல் முறை தலையில் ஊற்றிக்கொள்ளும் போது ஒட்டு மொத்த தேகமும் உதறிச் சிலிர்க்கும். மயிர்க்கால்கள் நட்டுக்கும். அடுத்தடுத்த வாளிகள் சுகவாளிகள். இன்னும் இப்படியே லட்சம் வாளிகள் ஊற்றிக்கொண்டாலும் கை அசராது. கண்ணிரண்டும் சிவந்துவிடும். விரல் நுனிகளில் தோலூறி வரிவரியாகிவிடும்.
ஒரு சமயம் கேணித் தண்ணீர் கொஞ்சம் கடுத்தது என்று "தம்பி... வானரம் மாதிரி ஏறி உட்காண்டிருக்கியே.. அந்த நெல்லிக் கெளையை ஒடிச்சு கிணத்துக்குள்ளே போடேன்... ஜலமாவது ப்ரயோஜனப்படும்படி ஆகும்..." (கவனிக்க.... ஜலமாவது ப்ரயோஜனப்படும்படி ஆகும்...) என்று நெல்லிமரக் கிளையை ஒடித்துப் போடச் சொல்லி கிணற்று நீரை கல்கண்டு நீராக்கினாள் பாட்டி.
பாத்திரங்களை அலம்பி கிணற்றுக் கட்டையில் வைக்கும் போது சிலசமயங்களில் கயிறு தட்டியோ வாளி தட்டியோ கிணற்றுக்குள் விழுந்துவிடும். அதை எடுப்பதற்கு கீழிருந்து மேலாகக் கிளைக் கிளையாக இரும்பில் கொக்கிகள் அமைத்துச் சின்ன ராட்டினம் போலிருக்கும் "பாதாளக் கரண்டி" பயன்படும். "வாணா விழுந்துடுத்து... பாதாளக் கரண்டி போட்டு எடுடா... சித்த வா..." என்று கேரம்போர்டில் ரெட்டை உள்ளே தள்ளி ஃபாலோ முயற்சிக்கும் போது கூப்பிடுவாள். உடனே எழுந்து ஓடவேண்டும். இல்லையேல் அஷ்டோத்ரசதம்தான்.
கிணற்றுக் கயிற்றுலிருந்து வாளியைக் கழட்டிவிட்டு பாதாளக் கரண்டியைக் கட்டி கீழே இறக்க வேண்டும். சுருட்டிச் சுருட்டி வட்ட வட்டமாக ஆட்டிக்கொண்டே இருந்தால் உங்கள் அதிர்ஷ்டப்படி ஐந்து நிமிடத்திலேயோ ஐம்பது நிமிடத்திலேயோ பாத்திரம் பாதாளக் கரண்டிக்கு தட்டுப்படும். அந்த இடத்தில் உசரக்கத் தூக்கி ஒரு தடவை உள்ளே போட்டு.. இடதும் வலதுமாகச் சுழற்றினால் அந்த பாதாளக் கரண்டியின் ஒரு கிளைக்குள் விழுந்த பாத்திரம் சிக்கிக்கொள்ளும். மீன் பிடிக்கும் லாவகத்துடன் சடாரென்று தூக்கக்கூடாது. பாத்திரத்தின் மேனி வலிக்காமல் தூக்கவேண்டும்.
சில வீடுகளில் பாதாளக் கரண்டி இருக்காது. "பாட்டி.. எங்காத்து கிணத்துல சொம்பு விழுந்துடுத்து.. பாதாளக் கரண்டி வேணூம்" என்று தெருமக்கள் யாரவது வந்து கேட்டால் "உங்காத்துலேர்ந்து ஒரு பாத்ரத்தைக் கொண்டு வந்து ரேழி மூலேல வச்சுட்டு... பாதாளக் கரண்டி எடுத்துண்டு போ.. அப்பத்தான் அது ஆப்டும்..." என்று சொல்லிவிடுவாள்.
கொண்டு போனவர்கள் பாதாளக்கரண்டியை மறக்ககூடாதென்பதற்காக பாட்டியின் தந்திரம் அந்த பாத்திரம் அடகு வைக்கும் உத்தி. பாதாளக்கரண்டியை சுருக்கு சரியாகப் போடாமல் கிணற்றுக்குள் தவற விட்டு ஜேம்ஸை இறக்கி எடுத்துத் தந்திருக்கிறார்கள். கழுத்தில் சிலுவையாடும் ஜேம்ஸுக்கு அப்போது ஐம்பது வயதிருக்கும். ஆறடிக்கு ரெண்டு விரக்கடை கம்மியான உயரம். அவர்தான் மனித பாதாளக் கரண்டி. கைலியை அவிழ்த்துவிட்டு கௌபீணத்துடன் கிணற்றுக்குள் குதிப்பார்.
இரண்டு முங்கு இல்லையேல் அதிகபட்சமாக மூன்று முங்குகளில் கையில் பாத்திரத்துடன் கரையேறுவார். ஒரு வீட்டில் வெள்ளிக் கொலுசு ஒன்று விழுந்துவிட்டது. "கரண்டிக்கு ஆப்டாதுடா..." என்று பாட்டி சொல்லிவிட்டாள். ஜேம்ஸைக் கூப்பிட்டார்கள். ”போன மாசம் ராயர் ஆத்துல பஞ்சபாத்ரம் விழுந்துடுத்து.. ஒரே முங்குல உத்ரிணியோட எடுத்துண்டு... ஜிங்குன்னு கிணத்துலேர்ந்து மேல ஏறிட்டான்”. இது போன்று கியாதி பெற்ற மனிதக் கரண்டி அவன். மொபைல் இல்லாத காலம். "இன்னிக்கு வரேன்னிருக்கான்..." " நாளைக்கு வருவானாம்..." என்று ஒரு மாதம் ஓடியது.
ஒரு ஞாயிற்றுக்கிழமை நாலைந்து மாமிகள் பாட்டியிடம் வாசல் படி மாநாட்டில் பேசிக்கொண்டிருந்தார்கள். "ஊர்ல இருக்கிற கிணத்துத் தண்ணில முங்கி பாத்திரத்தல்லாம் எடுத்துக் கொடுத்தான். அவனுக்கு தண்ணிலயே சாவுன்னு எழுதியிருக்கே....". அடப்பாவமே... ஜேம்ஸ் குடிகாரனா? என்று நீங்கள் தேம்புவது தெரிகிறது. இவர்கள் டயலாக்கை முழுக்கக் கேட்போம்.
"ஆத்துல புதுத்தண்ணி தொறந்து விட்டாளோன்னோ... மேலப்பாலத்துக்கிட்டே கொழந்தை தவறி விழுந்துடுத்துன்னு யாரோ கதறியிருக்கா... இவன் அந்த வழியாப் போயிருக்கான்... தொபகடீர்னு குதிச்சு கொழந்தையைக் காப்பாத்தி கரையில கொண்டு வந்து அப்பாம்மாட்ட ஒப்படைச்சுட்டான். கொழந்தையை உச்சிமோந்த அம்மாக்காரி... அதோட காலைப் பார்த்துட்டு ஒரு கால்ல கொலுசக் காணுமேன்னுருக்கா... உடனே இவன் திரும்பவும் ஆத்துக்குள்ள குதிச்சுருக்கான்.. சட்ரஸ் பக்கத்துலே சுழி ரொம்ப ஜாஸ்தி.. புதுத் தண்ணி... காவு வாங்கும்னு சொல்லுவா.. ரெண்டு ஆழமான ஊத்துக் கெணறும் இருக்கோன்னோ... இவனைப் பிடிச்சு தலை குப்புற அழுத்திடுத்து... ஃபயர் சர்வீஸ்காரா வந்து.. கரையோட கரை தேடித் தேடி... நாலு மண் நேரத்துக்கப்புறம் கயித்தைக் கட்டி தூக்கியிருக்கா... பாவம்.. ஆயிரம் வாட்டி கிணத்துல குதிச்சு பாத்திரமெல்லாம் எடுத்துருப்பன்.. அதே கெணறு பிராணனை வாங்கிடுத்தே..."
பாழுங்கிணறு விழுங்கினால் அது அதன் சுபாவம்.பழகிய கிணற்றுக்கும் பழகாத கிணற்றுக்கும் வித்யாசம் உண்டோ?

1 comments:

மாதேவி said...

மன்னார்குடி நினைவுகள் அருமை.

ஆடிய பிற ஆட்டங்கள்

Related Posts with Thumbnails