Thursday, December 15, 2016

பேய்ச்சுரைத் தோட்டம்

எம் பேரு கலை. கலைச்செல்வியா கலைச்செல்வனான்னு நீங்க பால் தெரிய துடிக்கிறீங்கன்னு தெரியும். ஆம்பிளை வாய்ஸ்ல மேலே படிங்க. கலைவாணன். இப்ப நீங்க பார்த்துக்கிட்டிருக்கீங்களே... மங்கலான வெளிச்சத்துல... பெரிய பெரிய ஸ்டூல்ல உட்கார்ந்து... கைல மதுக்கோப்பையோட... ஆம்பளையும்.. பொம்பளையுமா.. சமதர்ம சமுதாயமா இருக்கிற இந்த இடத்துக்கு போன மாசந்தான் வேலைக்குச் சேர்ந்தேன். இது சென்னையில ஃபேமஸான நட்சத்திர ஹோட்டல். கவர்ச்சியான சினிமா, கோட் போட்ட கார்ப்போரேட், வொயிட் அண்ட் வொயிட் அரசியல்ன்னு பெரும் புள்ளிங்க சகஜமா தள்ளாடற இடம்.

புகழுதான் இங்க வேலைக்குச் சேர்த்துவிட்ட்டான். ஆமா.. இதென்ன பெரிய கம்பேனியில ஜெனரல் மேனேஜர் வேலையான்னு நீங்க சிரிக்கிறீங்க.. ஆனா இந்த வேலைக்குக் கூட தரமான சிபாரிசு தேவைப்படுது. நீங்க நினைக்கிறது சரிதான். ஊரை விட்டு ஓடினேன்... ஜெயில்ல இருந்தேன்... களி தின்னேன்.. உடனே நா ஒரு கயவாளிப்பய.. உதவாக்கரை... ரௌடி... அப்டீஇப்டீன்னு நீங்க நினைச்சுரக் கூடாது.
ஒரு குட்டிக் கதை கேட்க ரெடியா இருக்கீங்களா? இதுவொன்னும் உவேசாவோட என் சரித்திரமோ... காந்திஜியோட சத்தியசோதனையோ இல்லைன்னாலும் எனக்கு மன்சு விட்டுச் சொல்லணும்னு தோணிச்சு. இந்தக் கதையினால சமூகத்துக்கு எதாவது மெசேஜ் உண்டான்னு ஆர்வமா இருப்பீங்க.. இப்படியும் ஒருத்தனோட வாழ்க்கை இருந்ததுன்னு பதிவு பண்றேன்.. அம்புட்டுதேன்.. பார் மூடுற வேளைதான்... அந்தக் கடைசி டேபிள் மேலாக்கு சரிஞ்ச நடிகைக்கு கார் ஏற்பாடு பண்ணியாச்சு... மாஜி கணவரோ இல்லை மாஜி டைரக்டரோ வந்து கூட்டிட்டுப்போவாங்க... அது கிடக்கு... நாம கதைக்கு போவோம்..
ஆடுதுறைக்குப் பக்கத்துல தான் நான் பொறந்து வளர்ந்ததெல்லாம். எண்ணி நாலே தெரு இருக்கிற ஒரு குக்கிராமம். மரம் காய்ச்சு செடி பூத்துக் கொடி குலுங்கிய குக்கிராமம்.. சின்ன வயசுலேயே பாடம் சொல்லிக்கொடுத்தா கப்புன்னு புடிச்சிப்பேனாம். "கற்பூர புத்தி..."ன்னு பொட்டிக் கடை பாக்கியம் ஆத்தா போயிலை வாய் கமகமக்கச் சொல்லும் ..
மரம் சூழ் ஆடுதுறை கவர்மென்ட்டு ஸ்கூல்ல படிச்சேன். பள்ளிக்கூடம் விட்டா நேரா வீட்டுக்கு வந்து பாடப்பொஸ்தகத்தையெல்லாம் தொறந்து வீட்டுப்பாடம் எழுதி முடிச்சுடுவேன். இருட்டின பிறகு அரிக்கேன் விளக்குல எனக்குப் படிக்க புடிக்காது. அப்பாவுக்கு வயல் வேலை தவிர எதுவும் தெரியாது. கவர்மென்ட்டு திட்டத்துல தினக்கூலியா பைசா நெறையாத் தரேன்னு கூப்பிட்டாலும்... "விவசாயம் செய்யறது புனிதமான தொழிலு காந்தி... மண் மாதாவை நாம உதாசீனம் பண்ணிரக்கூடாது...வயிறு ரொம்பாது அப்புறம்..."ன்னு அம்மாகிட்டே உருக்கமா நடிகர் திலகம் மாதிரி தியாக வசனம் பேசுவாரு. நடவு அறுப்புன்னா தெருவிளக்கு வச்சப்புறம்தான் சோர்ந்து போயி வீட்டுக்கு வருவாரு... "நல்லா வாசிக்கிறியா தம்பீ..."ன்னு அசதியில பரிவோட கேட்டுட்டு சுருண்டு படுத்துருவாரு... விவசாயம்தான் அவரோட உலகம். நானு அம்மாவெல்லாம் வேற கிரகம். ஆனா அவரோட கடமையிலிருந்து தவற மாட்டாரு. சத்யவான்.
நா ஏன் ஜெயிலுக்குப் போனேன்னு தெரிஞ்சுக்க ஆர்வமா இருப்பீங்க்க.... ரொம்ப சுத்திக்கிட்டிருக்கேனா? என்னையப் பத்தி முழுசா தெரிஞ்சுக்கிட்டாதானே நான் பாவியா அப்பாவியான்னு தீர்மானிக்கமுடியும்? சீக்கிரம் முடிச்சுடறேன். மேலே கேளுங்க...
அம்மாவுக்கு எம்பேர்ல கடலளவு பாசம். எதுக்கெடுத்தாலும் கலை கலைன்னு உருகுவாங்க.. ஒரே பையன். பக்கத்து வீட்டுல பசங்க நான் பார்க்க ரொட்டித் துண்டு சாப்டாக்க... கடைத்தெருவுக்கு ஓடிப்போயி.... மூச்சிரைக்க வாங்கியாந்து தருவாங்க... எனக்கு மட்டும் எப்பவுமே சுடுசோறு. தயிர். ராத்திரிக்கு குடிச வாசல்லயே நட்சத்திரத்தை எண்ணிக்கிட்டுப் படுத்துருவோம். என்னிக்காச்சும் தூக்கம் வராம நிலாவப் பாத்துக்கிட்டே மல்லாக்கக் கிடப்பேன்.. பக்கத்துல படுத்திருக்கிற அம்மாவோட முந்தானையை எம் மேலே போர்த்திக்கிட்டு... மோந்து பார்த்தாக்க அதுல அன்னிக்கி வீட்ல ஆக்கின கொழம்போட வாசனையும் அம்மா பூசிக் குளிக்கிற மஞ்சள் வாசனையும் சேர்ந்து கலந்துகட்டி அடிக்கும்.... அப்படியே சொக்கிப்போயி... அது எப்படீன்னே சொல்லத் தெரியல.. .. தூங்கிடுவேன்... ஆனா அந்த வாசனை...ஸப்பா... செத்தாலும் மறக்காது...
ஏழாவது எட்டாவதுன்னு இல்லை.. ஒண்ணாவதுலேர்ந்தே எல்லா வகுப்புலேயும் நாந்தான் முதல் ரேங்க். தமிழய்யா குணசேகரு என்னியக் கூப்பிட்டு மாசில் வீணையும் மாலை மதியமும். கேட்பாரு. சத்தமா கணீர்னு எட்டூருக்கு கேட்கிற மாதிரி சொல்வேன். என் தோள்ல கை போட்டு க்ளாஸைப் பார்த்து.. "டேய் பயலுவலா.. கலை பெரிய கலெக்டரா ஆவப்போறான்... நீங்கல்லாம் மாடு மேய்க்கதான் லாயக்கு..."ன்னு திட்டுவாரு... கணக்கு டீச்சர் கண்மணிக்கு எம்பேர்ல கொள்ளைப் பிரியம்... "கலை.. நூத்துக்கு நூறா வாங்கிக் குவிக்கிறப்பா.... நீ பெரிய ஆளா வருவே" அப்டீன்னு... என்கன்னத்தை வழிச்சு.... அவங்க தலையில எல்லா விரலையும் படக்குன்னு முறியறா மாதிரி சொடுக்கித் திருஷ்டி சுத்திப் போடுவாங்க...
ஊரே எதிர்பார்த்தபடி பத்தாவதுல நாந்தான் மாவட்டத்துலேயே ஃபர்ஸ்ட் வந்தேன். கும்மோணத்துக்கு அழச்சுக்கிட்டுப் போயி அப்பா புது ட்ரெஸ் எடுத்துத்தந்தாரு. அம்மாவுக்கு கனகாம்பரம் வாங்கிக்குடுத்து... வெங்கடரமணாவுல ராத்திரிக்கு டிபன் சாப்டுட்டு சந்தோஷமா வீட்டுக்கு வந்தோம்.. ஆடுதுறையில டவுன் பஸ்லேர்ந்து இறங்கி வீட்டுக்கு வந்துக்கிட்டிருந்தோம்.. அப்பா வழக்கம்போல கடகடன்னு முன்னாடி போயிட்டாரு.... நானும் அம்மாவும் பின்னாடி மெதுவா நடந்து வந்துக்கிட்டிருக்கோம்... சுத்திலும் நிழலா வயல் பரந்துகிடக்கு.. நிலா டார்ச் அடிச்சு வழி காமிச்சிட்டிருக்கு.... "இன்னிக்கி எம் மனசு நெறஞ்சு இருக்குடா கலை..." அப்டீன்னு குரல் கம்ம அம்மா சொன்னாங்க... திரும்பிப் பார்த்தா கண்ணுல பொலபொலன்னு தண்ணீ.... "அழாதம்மா.. அழாதம்மா.."ன்னு நானும் விக்கிவிக்கி அழுதுக்கிட்டே துடைச்சுவிட்டேன். மனசுக்குள்ளே...ரொம்ப சங்கடமா இருந்திச்சி... மனசு நெறஞ்ச அம்மா ஏன் அழுவணும்? ஃபர்ஸ்ட் மார்க் எடுத்ததெல்லாம் மறந்து போயி.... அம்மாவை ஒரு மாளிகைக்குள்ளே குடி வச்சு மகாராணி மாதிரி அழகு பார்க்கணும்னு சபதம் எடுத்துக்கிட்டேன்.. ஆனா அந்த விதி விதின்னு சொல்லுவாங்களே... அது என் வாழ்க்கையில கபடி விளையாடினது ரொம்ப ஜாஸ்திங்க... சொல்றேன்...
பதினொன்னாவதுக்கு பவித்ரா வந்து சேர்ந்தா... பாவாடை.... சட்டை... குடை ராட்டினம் மாதிரி காதுக்கு ஜிமிக்கி... அன்னபட்சி டாலர் தொங்கும் செயினு... பவுன் வளையல்.. ஜில்ஜில் கொலுசு.. பார்வைக்குப் பளபளன்னு இருந்தா... பணக்கார ரத்தம்னு நடையிலும் உடையிலும் பேசற தோரணையிலும் தெரிஞ்சுது... கிராமத்து ஸ்கூல்ல பளிச்சுன்னு ஒரு பொண்ணு.... கேட்கவா வேணும்... தரை சருக்க ஜொள்ளு விட்டுக்கிட்டு... பல்லிளிக்க ரெண்டு பேரு அவ பின்னாடியே... கண்மையால கோடு போட்டா மாதிரி லேசா மீசை அரும்ப ஆரம்பிச்ச வயசு. ரோட்ல போறப்போ மலையாளப் பட போஸ்டரை நின்னு பார்த்து வாய் பொளந்த வயசு. பசங்க கும்பலா சேர்ந்து அவ பின்னாடி அலைய ஆரம்பிச்சாங்க... என்னையக் கேட்கறீங்களா? நா வழக்கம் போல படிப்ஸ்தான். குனிஞ்ச தல நிமிராத சமர்த்துப் பையன் அப்டீன்னு பேரெடுத்தேன்... வாழ்க்கையில ஜெயிக்கணும்னு ஒரு வெறி... இடைவிடாத வெறி...
பன்னென்டாவதுலேயும் நா மாவட்டத்துலேயே முதலாவதா வந்தேன்.... மாநிலத்துக்கு ஃபர்ஸ்ட் ரேங்க்கா வரமுடியலை.. சின்ன வருத்தம்தான்.. திருச்சி பிஷப்ல சேர்த்துவிட்டாங்க... ஹாஸ்டல். ஸ்காலர்ஷிப் கிடைச்சுது.. ரெண்டு வாரத்துக்கு ஒரு தடவை இல்லைன்னா மாசம் ஒரு தடவை வீட்டுக்கு வருவேன். போன பாராவுல பார்த்த பவித்ராங்கிற பொண்ணை சுத்தமா நான் மறந்து போயிருந்தேன். ஒரு வெள்ளிக்கிழமை சாயந்திரம் தஞ்சாவூர் பஸ்ஸ்டான்ட்ல அரையிருட்டுல நின்னுக்கிட்டிருக்கும் போது "ஹாய்.."ன்னு துள்ளலா ஒரு குரல். ஆமா. நீங்க எதிர்பார்த்ததுதான்.. பவித்ரா.. ஜிலிஜிலுக்கும் ஒரு செகப்பு சுடிதார். துப்பட்டா இருக்க வேண்டிய இடத்துல இல்லாம கழுத்துக்குக்கு பாம்பு மாதிரி சுத்தியிருந்தது. எக்கச்சக்க குஷியில இருந்தா... அவ ஒரே ராத்திரில தளதளன்னு தாராளமா வளர்ந்துட்டா மாதிரி எனக்கு பிரமை.
"கலை எப்படியிருக்கே.."ன்னு பக்கத்துல வந்து கேட்டா...பலவந்தமா என்னோட கையைப் பிடிச்சு இழுத்து ஷேக் ஹான்ட்ஸ் குடுத்தா...எனக்கு கூச்சமா இருந்திச்சி... ஸ்கூல்ல படிச்சது மாதிரி இல்லாம.. உதட்டுக்கு செவப்பா லிப்ஸ்டிக்கெல்லாம் பூசியிருந்தா.. கண்ணை படபடன்னு இமைச்சு இமைச்சு கவனத்தை கவரும்விதமா பேசினா... எனக்குப் படபடப்பாதான் இருந்துச்சு... நான் பதிலுக்கு "ம்.. "அப்டின்னு ஒருஎழுத்தோட சுருக்கமா முடிச்சுட்டேன். "நீ பிஷப்ல சேர்ந்திருக்கேன்னு குணா சொன்னான் .." பேச்சை வளர்க்கிறா.... அந்த குணா இருக்கானே... அவன் விஷமக்காரப்பய. ரோட்ல ரெண்டு பேரு அந்தப் பக்கமும் இந்தப் பக்கமும் எதிரெதிர் திசையில நடந்து போனா.... தோள் மேலே கை போட்டுக்கிட்டு ஜோடியாப் போனாங்கன்னு கத கட்டி விடுவான். அவங்கப்பா கடா மீசையும் புலி நகச் செயினும் மாட்டிக்கிட்டு புல்லட்டுல உலாத்திக்கிட்டிருப்பாரு. அந்தக் கத எதுக்கு? நாம பவித்ரா பத்தி பார்ப்போம்..
"யேய்.. நான் எஸ்ஸார்ஸில சேர்ந்திருக்கேன். பியெஸ்ஸி மாத்ஸ்தான். கம்பைண்ட் ஸ்டடி பண்ணலாமா" அப்டீன்னு கண்ணடிச்சுக் கேட்டா... கண்ணடிச்சா மாதிரிதான் இருந்துச்சு.. ஒருக்கால் தூசி விழுந்திருக்கலாம்.. ஆனா வரம்புமீறி பேசறான்னு புரிஞ்சுது.. இப்போ நீங்க இந்தக் கதையில ஒரு லவ் ட்விஸ்ட் எதிர்பார்க்கிறீங்க... இன்னும் கொஞ்சம் தான் கதை... அப்ப தெரிஞ்சிடப்போவுது..
நா அவளைக் கண்டுக்கல... உத்தமபுத்திரனா பஸ்ஸேறி ஊருக்கு வந்துட்டேன். ரெண்டு மூணு வாரத்துக்குப் பிறகு ஒரு லீவுக்கு பை நிறையா அழுக்குத்துணியோட ஹாஸ்டல்லேர்ந்து ஊருக்கு வந்திருந்தேன்.... பெரிய வீட்டுக்கு கூப்பிட்டு அனுப்பிச்சாங்க... பண்ணையாளு பெருமாள்தான் வந்து "பவித்ராம்மா கூப்பிடறாங்க"ன்னு...வாசல்ல வந்து நின்னான். சைக்கிளை எடுத்துக்கிட்டு போனேன்.
கோயில் மதில் மாதிரி காம்பென்ட் சுவர்க்குப் பின்னால ராட்சத பங்களா. வெள்ளையடிச்சு கம்பீரமா இருந்திச்சி. கோட்டை வாசல் கதவு போல பெரிய க்ரில் கேட். திண்ணைக்கு அந்தப் பக்கம் வைக்கப்போர். ஊஹும். அது போர் இல்லை... வைக்கோல் மலை. நுழையும் போதே இடம் வலமா சேவல் படப்டன்னு பறந்து போச்சு. "ம்மா.."ன்னு கட்டிப்போட்டிருந்த ஏர்மாடு கத்திச்சு.... அவங்க அப்பா. அம்மா யாரும் வீட்ல இருக்கிற சுவடு இல்லை... எனக்கு சுவாதீனமா உள்ள போக பயம். வாசல்ல சைக்கிளை ஸ்டான்ட் போட்டுட்டு... தயங்கித் தயங்கி நின்னுக்கிட்டிருந்தேன். மாடி ஜன்னல்லேர்ந்து... "கலை.. மேல வா.." அப்டீன்னு கூப்ட்டா.. மீசையும் நெஞ்சுல தங்கப் பதக்கமுமா தலை நரைச்சுப்போன முன்னோர்கள் ஃபோட்டோல முறைக்கும் அலங்காரமான ஹாலைத் தாண்டி மாடிப்படி ஏறும் போது அவங்க வீட்டு வேலைக்காரம்மா.. எங்கம்மாவோட ஃப்ரெண்டுதான்.. மாயாக்கா.. என்னைப் பார்த்து "கலை"ந்ன்னுட்டு... ஒருமாதிரியா சிரிச்சாங்க... அதுல பல அர்த்தங்கள்... எனக்கு அது சரியாப் படலை...
ரத்ன கம்பளம் விரிச்சா மாதிரி அறைக்குள்ளே தரையெல்லாம் காஷ்மீர்ப் பாய் விரிச்சிருந்தது. அஞ்சு பேரு சேர்ந்து உருளலாம் போல பஞ்சு மெத்தைப் போட்ட பெரிய படுக்கை. வேலைப்பாடு நிறையா இருந்த படுக்கையோட தலைமாட்டுலேயும் கால்மாட்டுலேயும் முன்னங்கால் ரெண்டையும் தூக்கின யானை செதுக்கியிருந்தது.. டீக் வுட்டாயிருக்கும்.. அந்த படுக்கையில ஓரத்துல பவித்ரா குனிஞ்சு உட்கார்ந்திருக்கா.... ச்சே..ச்சே.. கெட்டத்தனமா நினைக்காதீங்க.. "கலை எனக்கொரு டௌட்.. தீர்த்து வைப்பியா...."ன்னு ஏக்கமாக் கேட்டா.... என்ன அப்டீன்னு கேட்கறத்துக்குக்கூட எனக்கு குரல் எழும்பல....தொண்டைக்குள்ள ரம்பம் விட்டா மாதிரி இருந்திச்சு... பூம்பூம் மாடு மாதிரி தலையை ஆட்டி ஜாடையாவே என்னான்னு கேட்டேன்..
ஆனா அவளா என்னை ஈஷ ஆரம்பிச்சா... படக்குன்னு படுக்கையிலேர்ந்து எந்திரிச்சு.. என் பக்கத்துல வந்து உரசர மாதிரி நின்னுக்கிட்டு...ம்.... ஹப்பா.. அது என்ன சென்ட்? ஜாஸ்மின்? மல்லிக்கும் மனசுக்கும் இருக்கிற மயக்கற உறவு இருக்கே... ஹா.. கிறக்கமா இருந்திச்சு... இந்த உலகத்துலேர்ந்து விடுபட்டு எங்கயோ பறந்துக்கிட்டிருக்கும்போது "கலை.. உனக்கு இந்த ஸம் தெரியுமா?"ன்னு கேட்டா. அவ்ளோ பக்கத்துல.. அவ்ளோ வாசனையா... ஒரு பொண்ணை.. யம்மா.. எனக்கு உள்ளுக்குள்ள மின்சாரம் பாஞ்சு நரம்பெல்லாம் நீவி விட்டா மாதிரி உதறல்.. ஏன்னா அவ ஊர்ப் பெரியவரோட செல்லப் பேத்தி. எங்க கிராமத்தைச் சுத்தி கண்ணுக்கெட்டின தூரம் வரை எல்லாமே அவங்க நிலம்ந்தான். எங்க அப்பாகூட அவங்களுக்கு ஒரு கூலி. கூலிக்காரனோட பையன் சந்து வழியாக் கொல்லைப்பக்கம் போகலாமே தவிர அவங்க வீட்டு படுக்கையறக்குப் போக ஆசைப்படலாமா? தெரிஞ்சா கூறு போட்ருவாங்க...
கூச்சமா இருந்திச்சு. தள்ளி வந்துட்டேன். அவ என் கையைப் பிடிச்சு இழுத்து.. "கலை எனக்கு சொல்லிக்கொடுத்துட்டுப் போ.."ன்னா.. அவ குரல்ல சாராயம் இருந்திச்சு.. அவ்ளோ போதையான குரல்... நான் கிறங்கித் திமிறினேன்... கையை இருக்கமா பிடிச்சிருந்ததை என்னால விடுவிக்க முடியலை... அவளை அப்படியே தரதரன்னு இழுத்துக்கிட்டு வெளிய வரலாம்னு பார்த்தப்போ... சட்டுன்னு எம்மேலேயே விழுந்துட்டா..வேணும்ட்டுட்தான்.. நா கீழே தரையில.... என் மேலே போர்வை மாதிரி அவ கிடக்கா.. ஒரு செகன்ட் எனக்கு என்ன பண்றதுன்னு தெரியலை... இன்பமான துன்பம்.... உடம்புல பல இடத்துல மெத்து மெத்து அழுத்துது.. முண்டிப்பார்க்கிறேன்.. நா முண்ட முண்ட இன்னும் அமுக்கி நெருக்கிறா.. எந்திரிக்க மாட்டேங்கிறா.. அந்தப் படுக்கயறையோட வாசல்ல அசிங்கமாக் கிடக்கோம்....
நா எந்திரிக்க முயற்சி பண்றேன். அவ என்னை அமுக்கறா.. இந்த காம்ப்ரமைஸிங் நிலமையில... "டேய்.. கலை.. என்னடா பண்ணிக்கிட்டிருக்கே.."ன்னு ஒரு ஆம்பிளைக் குரல்பதறிப்போய்ட்டேன்.. நீங்க வந்தது குணான்னு நினைச்சுட்டீங்க.,... குணா இல்லை.. கட்டக்குட்டக்க கங்காதரன் வந்தான். கங்காதரன் பொடிப்பையன். பவித்ராவோட சிங்கப்பூர் சித்தப்பா மவன். அதிகப்படியான தம்பி. தண்ணி தெளிச்சுவிட்ட கேஸு. இப்போ பத்தாவது மூனாவது வாட்டியா ப்ரைவேட்டா எழுதறான். RO plant வடிகட்டின முட்டாள். அஞ்சும் மூணும் பத்துன்னு மின்னலாச் சொல்லுவான். அதையும் அழுத்தம்திருத்தமாச் சொல்வான்... நாந்தான் தப்பு பண்ணினா மாதிரி என்னைக் குறுகுறுன்னு பார்த்தான். பவித்ரா சுதாரிச்சு எழுந்துட்டா...
அவனுக்கு குணா மாதிரி கெட்ட சகவாசம் அதிகம். படிப்பு ஏறலை..அப்பா ஃபாரீன்ல இருக்காரு.... பாதை தப்பிப் போறத்துக்கு நிறையா சான்ஸ் அவனுக்கு... அக்கா மேலே நாந்தான் பலவந்தமா உழுந்து கெட்டகாரியம் பண்ணிக்கிட்டிருக்கேன்னு நினைச்சுக்கிட்டு ரொம்ப அதிகமாப் பேசினான்.. வயசுக்கு மீறிய பேச்சு.. செயல் எல்லாமே... பவித்ராவுக்கும் லேசான நடுக்கம்தான்.. கொஞ்ச நேரம் யாருமே பேசலை.. மௌனமா ஹாலுக்கு வந்தோம்.. அவன் எப்ப வேணா அவங்கப்பாம்மாக்கிட்டே சொல்லிடுவான்ங்கிறது எனக்கும் பவித்ராவுக்கும் தெரியும். நா தப்பே பண்ணலை.இருந்தாலும் என் விதி விளையாட ஆரம்பிச்ச முதல் நாள் அது.
பவித்ரா வீட்ல இப்ப வந்துடுவாங்க.. எனக்கும் வீட்டுக்குப் போவணும்.. பவித்ராதான் அந்த மயான அமைதியைக் கலைச்சு பேச ஆரம்பிச்சா...
"கங்கா... கலை மேல தப்பில்லை.. நாந்தான் சறுக்கி...." அவ சறுக்கியில இழுத்த இழுப்பே சரியில்லை... பச்சக்கொழந்த கூட இத நமபாது... பிஞ்சுலயே பழுத்த.. வெம்பிப்போன கங்கா நம்புவானா?
"நா ரெண்டு கண்ணாலையும் பார்த்தது பொய்யா.. இந்த ஜல்ஸா வேலை எவ்ளோ நாளா நடக்குதுன்னு..." நக்கலா மிரட்டற தொனியில பேச ஆரம்பிச்சான்.. எனக்கு கோவம் சுர்ருன்னு தலைக்குமேலே ஏறிடிச்சு.. "டேய் இப்பா என்னாங்கிரே?..." ன்னு கையை மடிச்சிக்கிட்டு மூக்குமேலேயே குத்த கிளம்பிட்டேன் ... பவித்ரா என்னை சமாதானப்படுத்த ஆரம்பிச்சா... அவன் கேவலமா சிரிச்சான்.. "உங்க ரெண்டு பேரையும் போட்டுக்கொடுக்கறத்துக்கு எனக்கு எத்தனை நாழி ஆவுங்கிறே?"ன்னு நம்பியார்த்தனமா உள்ளங்கையிரண்டையும் பிசைந்தான்....
அவனை சமாதானப்படுத்த.. "கலை... கலை.. கங்காவுக்கு பத்தாவது பரீட்சை எழுதிக்கொடுத்து பாஸ் பண்ண வச்சுடு... அது போதும்..".ன்னு கெஞ்சாத குறையா டீல் பேசினா பவித்ரா... எனக்கு பகீர்னு ஆயிடிச்சு.. ஆள் மாறாட்டம் பண்றச் சொல்றா... அதெல்லாம் முடியாதுன்னு முரண்டு பண்ணினேன்.... உருப்படியா வளந்த ஒரு பையன... நாங்க இதைப் பத்தி பேசிக்கிட்டிருக்கும் போதே வாசல்ல வெள்ளை அம்பாசிடர் வந்து நின்னுச்சு... பட் பட்டுன்னு கார்க் கதவு சாத்தற சத்தத்துக்குப் பின்னாடி... பவித்ராவோட தாத்தா பாட்டி அம்மா அப்பா எல்லோரும் பட்டுப் புடவை பட்டு வேஷ்டியுமா இறங்கினாங்க... எனக்கு மனசுக்குள்ளே திக். திக்க்னு இருந்திச்சு.. இந்தப் பய போட்டுக்கொடுத்துட்டான்னா உசுரோட விடமாட்டாங்களேன்னு பயம் வந்திடுச்சு....
"என்னங்கடா எல்லோரும் இங்க வந்திருக்கீங்க?"ன்னு பவித்ராவோட அப்பா சந்தேகமாக் கேட்டார். "பொன்னுசாமியோட பையந்தானேடா அவன்?" ன்னு என்னைப் பார்த்து தாத்தா கேட்டாரு. கங்கா என்னையும் பவித்ராவையும் வச்ச கண்ணை எடுக்காமப் பார்த்தான். இன்னிக்கி நமக்கு சங்குதான்... எந்த நொடியும் எங்களைக் காலி பண்ணிடுவான்னு உள்ளுக்குள்ள உதறல் எடுத்த போது... நடுப்பற இருந்த நான் பவித்ராவுக்கும் அவனுக்கும் மட்டும் கேக்கிறா மாதிரி "உன்னோட டெந்த் பரீட்சையை நான் எழுதித்தரேன்"னு பாதி காத்து கலந்த குரல்ல உறுதிமொழி கொடுத்தேன்..... எந்த நேரத்துலேயும் நேர்மையா இருந்த நான் தவறி கீழ விழ ஆரம்பிச்ச தருணம்...
"ஒன்னுமில்லை பெரியப்பா... பவிக்கு ஏதோ டௌட்டாம்.. செமஸ்டர் வருதாம்... அதான் கலையைக் கூப்பிட்டுவரச்சொன்னா.. க்ளீயர் பண்ணிட்டான்.. அவ்ளோதான்."ன்னு திக்கித்திணறிப் பேசிட்டு அந்த இடத்தை விட்டுப் பறந்துட்டான்.
பத்துப் பதினஞ்சு நாள் கழிச்சு ஒரு நாள் ஆத்தங்கரை ஓரமா சைக்கிள்ல போயிக்கிட்டிருந்தேன். கங்கா எதிர்த்தாப்ல வந்தான். உன்னோட பாஸ்போர்ட் சைஸ் ஃபோட்டோ ஒண்ணு குடுன்னு உரிமையாக் கேட்டான். ஹால்டிக்கெட்ல ஒட்டறத்துக்காகன்னு எனக்குப் புரிஞ்சுது. வாயைத்தொறக்காம வீட்டுக்குப் போயி என்னோட பொட்டியில இருந்த டைரிலேர்ந்து எடுத்துக் கொடுத்தேன். நாட்கள் ஓடிச்சு... பேப்பர்ல பரீட்சை தேதி போட்டுட்டாங்க... நான் தயார் பண்ண ஆரம்பிச்சேன்... ஃபெயிலாகாமலே பத்தாவது திரும்பப் படிச்சவன் நான் ஒருத்தனாத்தான் இருக்க முடியும்.. விதி.. இதுவும் விதிதானே...
பரீட்சைக்கு கும்பகோணம் சக்ரபாணி படித்துறைப்பக்கத்துல இருந்த கார்போரேஷன் ஸ்கூல்தான் சென்டர். பரீட்சை இருக்கும் நாளெல்லாம் நான் திருச்சிலேர்ந்து கும்மோணம் வந்து எழுதிக்கொடுத்துட்டு திரும்பவும் காலேஜ் போவணும். தமிழ் இங்கிலீஷ் எழுதிட்டேன். சயின்ஸ் பரீட்சையன்னிக்கி பத்து நிமிஷம் லேட். ஸ்கூல் வாசல்லயே கங்கா நின்னுக்கிட்டிருந்தான். முறைச்சுப் பார்த்தான். எனக்கு கடுப்பாயிடிச்சு... இருந்தாலும் வாக்கைக் காப்பத்தனும்னு ஒரு கொள்கையில அன்னிக்கும் நல்லபடியா எழுதிட்டேன்.
மாத்ஸ் பரீட்சையன்னிக்கி பரீட்சை ஹாலுக்குள்ள நுழையும்போதே அந்த இன்விஜிலேடர் என்னை ஒரு மாதிரியா பார்த்தாரு. அரண்டவன் கண்ணுக்கு இருண்டதெல்லாம் பேயி... நா மாட்னுக்கு என்னோட பெஞ்சுல உட்கார்ந்து கணக்கு போட ஆரம்பிச்சேன்.... பாதி கொஸ்டின் பேப்பர் முடிச்சுட்டேன்.. திடீர்னு பார்த்தா என் பக்கத்துல ரெண்டு பேர் வந்தாங்க.. ஃப்ளையிங் ஸ்குவாட். பிட் அடிக்கறவங்களைப் பிடிக்கறத்துக்கான டீம். எந்திரிச்சு நின்னேன். அவங்க சட்டை பேன்டெல்லாம் பிட் இருக்கான்னு தொட்டுப் பார்க்கலை.... எனக்கே ஆச்சரியமாப் போச்சு... "தம்பி உன் பேப்பரைக் கொடுத்துட்டு அப்படியே ஜீப்ல ஏறு"அப்டீன்னு ஒரு மொட்டையடிச்ச ஆஃபீஸர் சொன்னாரு. "ஏன்?" அப்டீன்னு கேட்டேன். பின்னாடி தாட்டியா இருந்த ஒருத்தரு "எண்பத்தெட்டுல நீ தான் இந்த மாவட்டத்திலேயே பத்தாவதுல முதல் மார்க். உன்னோட ஃபோட்டவெல்லாம் பத்திரிக்கையில வந்திருக்கு. மூணே வருசத்துல திரும்பவும் பத்தாவது எழுதிரியே... இது நியாயமா?"ந்ன்னு என்னை ஜீப்ல ஏத்துனத்துக்காண காரணத்தைச் சொன்னாரு.. நான் உறைஞ்சுபோயிட்டேன்.
என் கண் முன்னாலயே நான் கண்ட கனவெல்லாம் சிதறிப்போயி... ஆள் மாறாட்டத்துல புக் பண்ணி உள்ள தள்ளீட்டாங்க்க.. அப்பாவும் அம்மாவும் ஜெயிலுக்கு வந்து கதறினாங்க... அம்மா மூஞ்சிய என்னால ஏறெடுத்தப் பார்க்க முடியலை... அவங்க அழற சத்தம் என் இதயத்தை அறுத்துப்போட்டுச்சு.. நா தப்பே பண்ணாம இருந்தேன்.. ஆனா அதுக்கு பரிசா ஜெயில் தண்டனை.. சரி இனிமே தப்பு பண்ணீனா என்ன அப்டீன்னு யோசிக்க ஆரம்பிச்சேன்.. ரெண்டு வருஷத்துல வெளிய வந்துட்டேன்.
பழி தீர்க்க மனசுக்குள்ள கொலவெறி வந்துச்சு... ஆனா நா இயல்பிலேயே சாத்வீகமான ஆளு... அப்படியே அடக்கிக்கிட்டேன். திருச்சிக்குப் போனேன். பிஷப்ல என்னை வெளியே துரத்திட்டாங்க... காலேஜ் படிப்பு ஒரு வருஷத்தோட நின்னுபோச்சு... என்ன பண்றதுன்னு தெரியலை... வாழ்க்கையே வெறுத்துப்போச்சு.. தற்கொலை பண்ணிக்கலாமான்னு பார்த்தேன்.. காவேரில உழுந்து போய்ச் சேர்ந்துடலாம்னு நினைச்சு.. பாலத்தோட கட்டையில ஏறி நடுராத்திரி நின்னுக்கிட்டிருந்தபோது.. என் காலைப் பிடிச்சு யாரோ இழுத்தாங்க... "விடுங்க.. நீங்க ஏன் என்னை நிப்பாட்டினீங்க.."ன்னு கோபமாக் கேட்டேன்.. அதுக்கு அவரு... "எப்படி பிறக்கறத்துக்கு நீங்க சுயமா விருப்பப்டலையோ... அதுமாதிரி சாகறத்துக்கும் நீங்களா விருப்பப்படக்கூடாது"ன்னு உபதேசம் பண்ணீனாரு.. கடுப்பாயி "போடா ..யிறு" ன்னு திட்டினேன். அதே பாலக்கரையில.. தலை கோதுற காத்து அடிக்க...பக்கத்துல உட்கார்ந்துகிட்டு ஒரு மணி நேரம் தத்துவார்த்தமாப் பேசினாரு.... அதை அட்வைஸ்னு சொல்றதா.. இல்லை அவரோட அனுபவம்னு சொல்றதான்னு தெரியலை.. ஆனா அந்த நேரத்துக்கு ரொம்பவும் பிடிச்சிருந்திச்சி...
அவருதான் புகழு. ரெண்டு பேரும் பேசிக்கிட்டே நடந்து போனோம். எங்கேன்னு அவருக்கும் தெரியாது. எனக்கும் தெரியாது. என்னோட வாழ்க்கையில நடந்தெல்லாம் அவர்கிட்டே ஒப்பிச்சேன். ரொம்ப வருத்தப்பட்டாரு. ஒண்ணு ஒண்ணா போயிக்கிட்டிருக்கிற பஸ் காரெல்லாம் கூட குறைஞ்சு போய்.. மெயின் ரோடு ஹோன்னு கிடந்தது... "பசிக்குதா?"ன்னு கேட்டாரு. சொல்லமுடியாம சோம்பலா நடந்தேன்... ஒரு ரோட்டோர ராத்திரிக் கடையில முட்டை புரோட்டா வாங்கிக் கொடுத்தாரு.. கையில கையடக்கமா ஒரு இங்கிலீஷ் புக் வச்சிருந்தாரு..."இது என்ன புக்கு?" ன்னு கேட்டேன். "மஹாராஜா" ன்னு சொல்லிட்டு சிரிச்சாரு.. நம்பளை கிண்டல் பண்றாரு போல்ருக்குன்னு நினைச்சு எனக்கு வெட்கமாயிடிச்சு. அப்புறம் அவரே "இது திவான் ஜர்மானி தாஸ்னு ஒருத்தர் எழுதினது.. நம்ம நாட்ல கடைசி காலத்துல வாழ்ந்த ராஜபரம்பரை ஆட்கள் எப்படி இருந்தாங்கன்னு எழுதியிருக்காரு.. நாமதான் ராஜாவா இல்லை.. அட்லீஸ்ட் மக்கள் எப்படி இருந்தாங்கன்னு படிச்சு மனசை தேத்திக்குவோம்ன்னு" புக்கை வானம் பார்க்கத் தூக்கிப்போட்டுப் பிடிச்சு "பஹா.. பஹா.."ன்னு சிரிக்கிறாரு..
வாங்க போங்கன்னு கூப்பிட்டுக்கிட்டிருந்த என்னை மறு நாள் காவிரில குளீச்சுட்டு கரையேறும் போது "என்னை நீ புகழ்னே கூப்பிடலாம்.. உன் வயசுதான் எனக்கும்.."ன்னு தோள்ல கையைப் போட்டாரு... எங்கியோ பாங்க்ல கொள்ளையடிச்சா மாதிரி அவரு பாக்கெட்டுல கரன்ஸி நிறையா புடைச்சுக்கிட்டு இருந்திச்சு... இப்படி ரோட்டுல சுத்திக்கிட்டிருக்கிற ஆளுகிட்டே ஏது இவ்ளோ பணம்னு கேட்க மனசுக்குள்ள எண்ணம் தோனினாலும்... வேண்டாம்னு விட்டுட்டேன்.. திருச்சி மலைக்கோட்டைக்கு போனோம். பக்தர்களும் பார்வையாளர்களும் பருவத்துடன் ஒதுங்கியவர்களூமாக கூட்டம் இருந்தது. நாங்களிருவரும் உச்சிப்பிள்ளையாரைப் பார்த்துட்டு இறங்கி வரும் போது.....
அவதானா?... ம்... அவளேதான்.. பவித்ரா. சகஜமா யாரோ ஒருத்தன் இடுப்பை வளைச்சு கையைப் போட்டிருந்தான்... குலுங்கிச் சிரிச்சுக்கிட்டுப் போனா.. அவனோட கையும் கண்ணும் கெட்ட காரியத்துக்காக துடிக்கறது தெரிஞ்சுது.. அவ என்னைப் பார்த்த மாதிரியுமிருன்ந்தது பார்க்காத மாதிரியும் இருந்தது... அப்போ புகழு என்னைக்கேட்டாரு.. "உன்னோட டாவா அது கலை?"... "இல்லீங்க... அதுதான் உங்ககிட்ட நான் சொன்ன என்னோட கதையின் ஹீரோயின்... நா லவ் பண்ணாத ஹீரோயின்."ன்னு சொன்னேன்..
மனசை கிளறிவிட்டுட்டா... ப்ளேடு போட்டுக் கீறி ரணமாயிருந்த நெஞ்சு எரிய ஆரம்பிச்சிடுச்சு.. என்னவோ அவ மேல கோவம் பொத்துக்கிட்டு வந்திச்சு..... அன்னிக்கி அவ மட்டும் என்னை கீழ தள்ளி மேலே சாயாம இருந்திருந்தா... இப்படி நா ரோடு ரோடா நாய் மாதிரிக் கேவலமா அலையவேண்டியதில்லையேன்னு ஒரு சுயகழிவிரக்கம் என் மேலே படர்ந்திச்சு..,, பழி வாங்கிடலாமான்னு பிபி ஏறிச்சு..... இவதானே அந்த பரீட்சை எழுதற கேவலமான யோசனை கொடுத்தது.. "சரி வா போவலாம்"ன்னு புகழு என் கையைப் பிடிச்சு இழுத்துக்கிட்டுக் கிளம்பிட்டாரு...
அன்னிக்கி ராத்திரி சத்திரம் பஸ்ஸ்டான்ட் பக்கத்துல ஒரு லாட்ஜ்ல புகழோட தங்கினேன். பத்து மணிக்கு மேலே "ஃபேமிலி" கேர்ல்ஸ் நடமாட்டம் ஜாஸ்தியாயிருந்தது. ஹோட்டல் காரிடாரெங்கும் மல்லி வாசனை. ஊர்ல பேச்சியம்மன் கோயில் வாசல்ல திரிஞ்சிக்கிட்டிருக்கும் ஆண்டி ஞாபகம் வந்திச்சி.. அவரு "எத்தனை பேர் தொட்ட முலை.. எத்தனை பேர் நட்ட குழி.. எத்தனை பேர் பற்றி இழுத்த இதழ்...உய்யடா உய்யடா உய்...."ன்னு சத்தமா பட்டினத்தார் பாட்டைப் பாட்டும் வசனமுமாப் பேசுவாரு .... கவர்மென்ட்ல உசந்த பதவில இருந்தாராம். அவரோட பொண்டாட்டி இவரை விட்டுட்டு ஒரு க்ளார்க்கோட ஓடிடிச்சாம்.... ஊர்ல பல பேரு அவருக்கு மிச்சம் மீதி இருக்கிற சாப்பாட்டை போடுவாங்க... அடிக்கடி "பேய்ச்சுரைத் தோட்டம்.. பேய்ச்சுரைத் தோட்டம்"ன்னு மந்திரம் மாதிரி சொல்லுவாரு.. "சித்தம் கலங்கிப்போச்சு.."ன்னு ஊர்ல பேசிப்பாங்க.. பிஷப்ல சேர்ந்தவுடனே லைப்ரரில பட்டினத்தார் பாடல்கள் எடுத்துப் படிச்சப்போதான் பேய்ச்சுரைத் தோட்டம் புரிஞ்சுது.. இப்போ உய்யடா உய்யடா உய்க்கு அர்த்தம் புரியுது...
எனக்குத் தூக்கம் வரலை. வாழ்க்கையை தொலைச்சவனுக்கு தூக்கம் வருமா? அந்த ஹோட்டல் மொட்டை மாடியில போய் தனியா உட்கார்ந்திருந்தேன். ஊர் மெல்ல அடங்கியிருந்தது. புகழ் பின்னாடி வந்தாரு...கிங்ஸ் எடுத்து உதட்டுல சொருகி பத்த வைக்கும் போது அந்த வெளிச்சத்துல என்னைப் பார்த்தாரு.. கண்லேர்ந்து தண்ணியா வந்துக்கிட்டிருந்ததைப் பார்த்துட்டு... "ஆம்பளை அழக்கூடாது கலை... எல்லார் வாழ்க்கையிலும் வசந்தமும் வரும்.. வறட்சியும் வரும்.. யாருக்கு பாதை மாறிய பயணம் வரும்ன்னு முங்கூட்டியே தெரியும்? மரவட்டை தரையில ஊர்ந்து போயிட்டிருக்கும். ஒரு குச்சியை வச்சு திருப்பி விடு.. திருப்பிவிட்ட திசையில விடுவிடுன்னு போயிட்டிருக்கும்.. எந்த நிலைமை வந்தாலும் எதிர்த்து நின்னு போராடரவந்தான் உண்மையான மனுஷன்.. " இப்படி பேச ஆரம்பிச்சு கீழ்வானம் வெளுக்கற வரை.. விடிய விடிய.. நிறையா அட்வைஸ் பண்ணினாரு.... அப்பதான் பவித்ராவை க்ளோஸ் பண்ணிடலாம்னு திட்டம் போட்டோம்.
திருச்சிலேர்ந்து காலையில கிளம்பி தஞ்சாவூர் வந்துட்டோம். சாயந்திரத்துக்கு மேலே ஆடுதுறைக்குப் போகலாம்ங்க்கிறது திட்டம். பெரியகோயில் பிரகாரத்துல கொஞ்ச நாழி படுத்து பொழுதைக் கழிச்சோம். வெள்ளைக்காரங்க சில பேர் காமிராவும் கையுமா கோயிலை படுத்தும் உட்கார்ந்தும் மண்டி போட்டும் ஃபோட்டோ எடுத்துக்கிட்டிருந்தாங்க... சிற்பக்கலை ரசிக்க வந்த ஆட்களுக்கு அங்கொரு கலை சீரழிஞ்சு போய் கிடக்கிறது தெரியணும்னு எதிர்ப்பார்க்கிரது நியாயமில்லை... புகழ் விடிய விடிய முழுச்சிக்கிட்டு எனக்கு உபதேசம் பண்ணினதால ட்யர்ட் ஆகி தூங்கிட்டான். எனக்கு க்ண்ணு மூடமாட்டேங்குது.. இப்படி எல்லாத்தையும் இழந்துட்டோமேங்க்கிற துக்கம்...
புரண்டு புரண்டு படுத்துக்கிட்டிருக்கும் போது வாசல்ல அகழி தாண்டி ரெண்டு பேரு கை கோர்த்துக்கிட்டு போறது தெரிஞ்சுது.. பின்னாடிலேர்ந்து பார்த்தாக்கா.. ஆமாம்.. பவித்ரா மாதிரி தெரிஞ்சுது.. எனக்கு அவதானான்னு பார்க்கணும்னு ஒரு உந்துதல்... புகழை டிஸ்டர்ப் பண்ணாம எந்திரிச்சு தொடர்ந்தேன். முதல்ல கை கோர்த்திருந்த பய.. பழைய பஸ்ஸ்டான்ட் கிட்ட ப்ளாட்பாரம்ல நடக்கும் போது அவனோட கையை தாராளமா அவளோட பின்பக்கமெல்லாம் எல்லா இடத்துலையும் புரள விட்டான்... கொச்ச புடிச்ச பய... கிச்சுகிச்சு மூட்டறா மாதிரி எல்லா காரியமும் செஞ்சான்... நாயினும் கடையன்னு சுந்தரமூர்த்தி சுவாமிகள் தன்னை சொல்லிப்பாராம்.... மண்டைக்குள்ள ரெஃபரன்ஸ் எங்கல்லாமோ போவுது... அப்பேர்ப்பட்ட உத்தமமான மகானே நாயினும் கடையன்னு தன்னைச் சொல்லிக்கும்போது.. நாமெல்லாம் எம்மாத்திரம்.. அப்புறம் இந்தப் படுபாவிய என்னான்னு சொல்றது..
இன்னமும் அவளோட முகத்தைப் பார்க்கலை.. ரெண்டு பேரும் ஒரு ஜூஸ் கடையில சர்பத் வாங்கிக் குடிச்சாங்க.. நானு ரொம்ப பக்கத்துல போயி சிகரெட் வாங்கினேன். ச்சே.. ச்சே.. எனக்கில்லை.. புகழுக்கு.. எனக்கு தண்ணி சிகரெட்டு பழக்கமெல்லாம் கிடையாது. "களுக்"குன்னு சிரிச்சிகிட்டே வாயை ஸ்டராவில் வச்சு உறிஞ்சும் போது பக்கவாட்டுல அவளைப் பார்த்தேன். இன்னும் கொஞ்சம் மெருகு ஏறியிருந்தா.... உடம்பு ரசமேறிப் போயிருந்தது... தலைக்கு ஜாதியை சரமா தொங்கவிட்டிருந்தா... இப்போ ஃபைனல் இயர் படிச்சிக்கிட்டிருக்கணும்... பக்கத்துல நின்னுக்கிட்டிருந்த பயல பார்த்தா காட்டான் மாதிரி இருந்தான்... கையில கழுத்துல வடம் வடமாத் தங்கம் மின்னிச்சு. வால் க்ளாக்க கைக்கடிகாரமா சுருட்டிக் கட்டியிருந்தான். உடம்பெங்கும் புசுபுசுன்னு புதர் மாதிரி ரோமம். காதோரத்துல நீட்ட நீட்டமா ரோமம் ராட்சதர்களுக்குதான் மொளைக்கும்ன்னு புகழு எதோ சாமுத்ரிகா லட்சணம் புக்குல படிச்சிருந்ததா பஸ்ல வரும்போது சொல்லிக்கிட்டிருந்தான்.
பின்னாடியே புகழும் என்னைத் தேடிக்கிட்டே அங்கே வந்து சேர்ந்துட்டான். கொஞ்ச நேரம் வெயிட் பண்ணினோம். அவங்க ரெண்டு பேரும் சாந்தி தியேட்டருக்குப் போனாங்க. மாட்டனீ நாடோடித் தென்றல் ஓடிக்கிட்டிருந்தது. கொஞ்ச தூரம் தள்ளி ஒரு பார்ல உட்கார்ந்திருந்தோம். புகழு பீர் குடிச்சான். "கலை.. பச்சாதாபம் பார்க்காதே... அவளாலதானே நீ சீரஞ்சே... கொன்னுடு..". வேர்க்கடலை கொண்டு வந்து வச்ச ட்ராயர் பையன் காதுல கொன்னுடுங்கிறது கொண்டு வான்னு விழுந்துடுச்சு... "இன்னும் என்ன சார் கொண்டுவரணும்?"நு சிரிச்சான். பதிலுக்கு நாங்களும் சிரிச்சோம்.... ரொம்பவே உபதேசம் பண்ற புகழுக்கு ஏன் இத்தனை கொலை வெறி? எனக்கு ஆச்சரியமா இருந்திச்சு.. கேட்டாக்க யாராவது பொண்ணை லவ் பண்ணி அது கடைசியில "அண்ணா"ன்னு பாசமாச் சொல்லி வேற ஒருத்தனைக் கட்டிக்கிட்டு குடித்தனம் பண்ணப் போயிடுச்சுன்னு அரதப் பழசான ஒரு லவ் துரோகிக் கதை சொல்லுவான்.. வேண்டாம்னுட்டு விட்டுட்டேன்... அப்புறம் என் கதை சொல்லிமுடிக்க லேட் ஆயிடும்...
சூரியன் இறங்கிடிச்சு. தூரக்க இருக்கிறவங்க நிழலாத் தெரியற அரையிருட்டுப் பரவத் தொடங்கின நேரம். கும்பகோணத்துக்கு பஸ் ஏறுவான்னு பார்த்துக்கிட்டிருக்கும் போது ஸ்லோவாத் திரும்பின பாட்டு வச்ச திருச்சி பஸ்ஸைக் கைகாட்டி ரெண்டு பேரும் தொத்தி ஏறிட்டாங்க.. அந்த பஸ்ஸை விட்டுட்டு பின்னால வந்த இன்னொரு அரசாங்க பஸ்ல நாங்க ஏறினோம். தனியார் பஸ் வேகமாப் போவும். பவியை மிஸ் பண்ணிடுவோமோன்னு பயம். இப்போ மிஸ் பண்ணீடுவோமோன்னு எப்படி ஃபீல் பண்றேன் பாருங்க.. கெட்டத்துக்குன்னா மனசு சுலபமா ட்யூன் ஆயிடுது. தமிழ்ப் பல்கலைக் கழகம் வாசல்ல ட்ராஃபிக் ஜாம். ரெண்டு பஸ்ஸும் பின்னுக்குப் பின் நின்னுக்கிட்டிருந்துச்சு. ரெண்டு பேரும் குதிச்சு இறங்கி ஓடிப் போயி பவித்ரா பஸ்ல ஏறிக்கிட்டோம். ஒரு நல்லவன் கெட்டவன் ஆவறத்துக்கான பிரயத்தனமாப் பட்டது என்னோட அந்த நடவடிக்கை.
பஸ்ஸு நெடுஞ்சாலையில உறுமிக்கிட்டே போய்க்கிட்டிருக்கு. என்னோட மனசு ஆடுதுறைக்கு பயணமாயிடிச்சு. ட்ராயர் போட்டுக்கிட்டு கிட்டிப்புல் விளையாடினது.. அம்மாவோட முந்தானையைப் பிடிச்சுக்கிட்டு தூங்கினது... அப்பா துன்னூறு இட்டுவிட்டு "நல்லா படி தம்பீ" சொன்னது... ஆத்துல டைவ் அடிச்சு ஆட்டம் போட்டது...பொங்கலுக்கு என் உயரத்துக்கு கரும்பு வெட்டி பல்லால கடிச்சித் தின்னது... இப்படி நல்ல காரியமா வந்துக்கிட்டிருந்தது... கடேசில பவி எம்மேல கிடக்கிற சீன்ல வந்து குத்துக்கிட்டி நின்னுச்சு.. நெஞ்சு வலிச்சுது. பக்கத்துல புகழு தூங்கிக்கிட்டிருந்தான்.
துவாகுடில பஸ் நின்னபோது.... முன்னாடி முண்டியடிச்சுக்கிட்டு ஒரு கும்பல் ஏறிச்சு. வெளிய வேடிக்கைப் பார்த்துட்டு திரும்பறேன்.. ட்ரைவர் சீட்டுக்குப் பின்னாடி பவித்ராவைக் காணலை. "புகழு... அவ இறங்கிட்டா..."ன்னு உலுக்கினேன். ஸ்டாப்லேர்ந்து கிளம்பின பஸ்ஸைவிட்டு ரெண்டு பேரும் அவசராவசரமா இறங்கினோம். ரோட்டுக்கு அந்தப் பக்கம் போயிட்டு இருந்தாங்க... ஆமா.. கையோடு கையை கோர்த்துக்கிட்டு... கண்ணுல படும்படியா இடைவெளி விட்டுத் தொடர்ந்துக்கிட்டிருந்தோம்...
ஒரு சின்ன ஹோட்டல். "அறகள் வாடகைக்கு வீடப்படூம்"ன்னு தப்பான தமிழ்ல அழகா எழுதியிருந்தது. அந்த கட்டிடமே தப்புக்கு துணையா நிக்கும்ங்கிற லக்ஷணத்துல மங்கலான வெளிச்சத்தோட இருந்தது. அவன் அதுக்குள்ள போனான். பவித்ரா சுத்திலும் வேடிக்கை பார்த்துக்கிட்டு சங்கடமா வாசல்லயே நின்னா. புகழு "கலை.. முன்னாடி போ.. உன்னைப் பார்த்ததும் ஆச்சரியப்படுவா... அந்த இடத்துலேர்ந்து அவளை நகர்த்திடு.. அப்புறம் பார்த்துக்கலாம்.."னு என்னை தூண்டிவிட்டான். திடுதிப்புன்னு நான் வந்து முன்னாடி நிப்பேன்னு பவித்ரா எதிர்ப்பார்க்கலை.. "க..க..க.."ந்ன்னு 'க'லேயே கபடி விளையாடினா.. "என்ன பவித்ரா இங்க?"ன்னு ஆச்சரியமாக் கேட்டேன். "என்னோட ஃப்ரென்ட் இங்கே இருக்கா..."ன்னு உளற ஆரம்பிச்சா... "இந்த ஹோட்டல்லயா?"ன்னு கேட்டேன். "ச்சே..ச்சே... இங்கே முருகப்பா நகர்ல.. அவள்ட்ட ஒரு நோட்ஸ் வாங்கணும்னு வந்தேன்". சுதாரிச்சா.... மூச்சு சீரா இல்லை.. பொய்னு அவளோட கண்கள் சொல்லிச்சு..
"நடந்துகிட்டே பேசலாமே"ன்னு அவளை மெதுவா அந்த ஹோட்டல் தாண்டி இடதுபக்கம் அழைச்சுக்கிட்டுப் போனேன். எங்களை புகழ் பின் தொடர்ந்துவந்தான். ஏற்கனவே ராத்திரி ஒன்பது மணி. ஊருக்கு உள்ளே போகும் அனாதையான ஒத்தை ரோடு. ரெண்டு பக்கமும் ராட்சச புளியமரம். யாராவது ஒன்னுரெண்டு பேர் டூவிலர்லயும் சைக்கிள்லயும் க்ராஸ் பண்ணி போயிக்கிட்டிருந்தாங்க... பவித்ரா அவனைத் தவிக்க விட்டு வந்துட்டோமேன்னு வருத்தப்பட்டது கண்ல தெரிஞ்சுது.. நா அதைக் கண்டுக்கலை...
அப்படியே வளைஞ்சு வளர்ந்த ரோட்டுல வலது பக்கம் பெரிய குளம் வந்தது. வட்டமும் சதுரமும் செவ்வகமுமில்லாத வடிவமில்லா ஒரு குளம். கொஞ்சம் பெரிய குட்டைன்னு வச்சுக்கோங்களேன்... பச்சைக் கலர்ல தண்ணி அசையாம இருந்தது. கரையில பாசி ஒதுங்கியிருந்தது. "உன்னோட கொஞ்சம் பேசணும்..." குளத்தாங்கரைக்குக் கூப்பிட்டேன். மறுப்பு சொல்லாம தலையைக் குனிஞ்சுக்கிட்டே வந்தா. நாங்க ரெண்டு பேரும் குளத்தை நெருங்கின இடத்துல விழுதுகளோட ஒரு பெரிய ஆலமரம் இருந்தது. மனுஷ நடமாட்டத்துல ஏதோ பறவைங்க சடசடத்து பறந்து போச்சு.
வெளிய தெரியாம இருக்க உள்ள இறங்கி குளத்துப் படிக்கட்டுல பக்கத்து பக்கத்துல உட்கார்ந்துகிட்டோம்.. "இதுமாதிரி ஆவும்னு நினைக்கலல்ல..."ன்னு பவித்ரா ஆரம்பிச்சா. எனக்கு பிபி எகிறிடுச்சு. "ஆமாடீ.. எல்லாம் உன்னாலதான்.." கொஞ்சம் சத்தமா பேச ஆரம்பிச்சேன். தலையைக் குனிஞ்சுகிட்டே உட்கார்ந்திருந்தா... "நா அப்படிப் பண்ணியிருக்கக்கூடாதுதான்... ஆனா உன்னை முதன்முதலா பார்த்தப்பவே ரொம்பவும் பிடிச்சிருந்திச்சு..." என்னன்னவோ பேசினா. எனக்குப் பிடிக்கலை. எப்படி அவளைக் கொன்னுட்டு தப்பிச்சுப் போகலாம்னு திட்டம் போட்டுக்கிட்டிருந்தேன்.
ஒரு பதினைஞ்சு நிமிஷம் போயிருக்கும். என்னை நிமிர்ந்து பார்த்தா. கண்ல தண்ணி குளம் கட்டி நின்னுச்சு... அம்மாவுக்கு அப்புறம் இன்னொரு பொண்ணு...இவ்ளோ பக்கத்துல உட்கார்ந்து தாரைதாரையாய் அழுது இப்பதான் பார்க்கிறேன்.. மனசுக்கு சங்கடமா இருந்திச்சி.. அப்ப அவ ஒரு புது கதை சொன்னா...
"கலை... ஊர்ல என்னோட அம்மாவா இருக்கிறது ஒரு துரோகி...பிசாசு... அவ அம்மாவே இல்ல... அதைவிட அவ ஒரு பொம்பளையே இல்ல...." எனக்கு ரொம்ப அதிர்ச்சியா இருந்திச்சி... "என்ன சொல்ற?"ன்னு முறைச்சேன். "ஆமா கலை... சின்ன வயசுல நானு பம்பாய்ல இருந்தேன். பொட்டும் பூவுமா எங்கம்மா சினிமால வர்ற அம்மன் மாதிரி இருப்பாங்க.. அப்பா அங்க ஃபைனான்ஸ் பிசினஸ் பண்ணிக்கிட்டிருந்தாரு.. இங்க தாத்தாகிட்டே கோச்சுக்கிட்டு சின்ன வயசுலேயே மும்பாய் ஓடிவந்தவரு... லவ் பண்ணி கல்யாணம் பண்ணிக்கிட்டாரு.. ஒரு பெரிய தொகை அங்க ஒருத்தங்கிட்டே மாட்டிக்கிச்சு.. அவனை உருட்டி மெரட்டி காசு வாங்க அப்பா ட்ரை பண்ணிக்கிட்டிருந்தாரு.. அதுலேர்ந்து தப்பிச்சுக்க இவளை ஆசை காமிச்சு மயக்கி எங்கப்பாவுக்கு கட்டி வச்சுட்டாங்க.." புகழு என்ன ஆனான்னு தெரியலை. இப்பவே மணி பத்து மணிக்கு மேலே இருக்கும். இவளை அழைச்சுக்கிட்டு வந்த காட்டானுக்கு என்ன ஆச்சு? இவ கதையை எப்ப முடிப்பா? ஏன் நாம இதைக் கேட்டுக்கிட்டு உட்கார்ந்திருக்கோம்? பல கேள்விகள் ஒண்ணு பின்னாடி ஒண்ணா எழுந்து மூளையை நிரப்பிடிச்சு...
"ஒரு நா ராத்திரி எட்டு மணி இருக்கும். அம்மா எனக்கு ஹோம் வொர்க் சொல்லிகொடுத்துக்கிட்டிருக்கும் போது எங்கப்பா மாலையும் கழுத்துமா இவளோட வந்தாரு. நானு அப்போ எட்டாவது படிச்சுக்கிட்டிருந்தேன். வந்தவ எங்கம்மாவை நிம்மதியா இருக்கவிடலை. தெனமும் சண்டை. என்னால ஒழுங்கா படிப்புல கவனம் செலுத்த முடியலை.. அப்பா கொஞ்சம் கொஞ்சமா குடிக்கு அடிமையானாரு... எனக்கு வீடே நரகமாயிட்டுது... இந்த சமயத்துல டெல்லியில யார்கிட்டயோ ஃபைனான்ஸுக்கு பணம் வாங்க எங்கப்பா போனாரு. ஒரு மத்தியான நேரம். வெளியே மழை பொளந்துகட்டுது." சுவாரஸ்யமா சொல்லிக்கிட்டே போறா.. எப்போ முடிப்பான்னு தெரியலை. இப்ப இவளைக் கொல்ல வந்ததையே நா மறந்துடுவேன் போலருக்கு...
"என்னிக்குமில்லாத திரு நாளா எங்கம்மாகிட்டே குழைஞ்சு பேசினா இவ. காய்கறி மார்கெட் வரைக்கும் போய்ட்டு வரலாம்னு அழைச்சுக்கிட்டு போனா.. எனக்கு பரீட்சைக்காக ஸ்டடி லீவு. மத்தியானம் போனவங்க ராத்திரி ஏழு மணி வரைக்கும் வரலை. ரொம்ப டென்ஷனாயிடிச்சு.. பத்து மணிக்கு இவ மட்டும் திரும்பி வந்தா.. "அம்மா வரலை?.." ன்னு பதபதைப்போட என்னைக் கேள்வி கேட்டா. எனக்கு பகீர்னு ஆயிட்டுது. அவ நாடகம் போடறான்னு புரிஞ்சுது... உன் கூடதானே வந்தாங்கன்னு சண்டை போட்டேன்.. பதிலுக்கு என்னைத் திட்டிட்டு படுத்து தூங்கிட்டா.. அவ மேல எனக்கு சந்தேகம். எங்கப்பா வர்றத்துக்கு ரெண்டு நாளு ஆச்சு.. அம்மாவைக் காணாம அழுது அழுது என் கண்ணுரெண்டும் வீங்கிப் போச்சு... சோறுதண்ணி இறங்கமா அவருக்காகக் காத்திருந்தேன்... வந்தவர்கிட்டே ஏதோ பொய் சொல்லி பசப்பி சபலம் காட்டி எங்கம்மா யார் கூடவோ சேர்ந்து ஓடிப்போயிட்டான்னு கதையை முடிச்சுட்டா.. என்னோட வலி உனக்கு புரியுதா? அப்புறம் அப்பாவுக்கு ஃபைனான்ஸ் நொடிச்சுப் போயி ஊருக்கே விவசாயம் பண்ணலான்னு வந்தபோது.. தாத்தா கூட ராசியாகி.. பதினொன்னாவதுல நா அங்கேயே வந்து சேர்ந்து.. மத்ததெல்லாம் உனக்கும் தெரியுமே"
உணர்ச்சி வேகத்துல அவ பேசி முடிச்சா.. புகழு பவியைக் கொல்லலாம்னு சொன்னதெல்லாம் மறந்து போயி எனக்கு வேற மாதிரி சபலம் தட்டிச்சி... அவளை நான் கட்டிப்புடிச்சு... நெத்தியில முத்தம் கொடுத்து... சினிமாவுல வர்றா மாதிரி பாக்கெட்டுலேர்ந்து தாலிக்கயிறை எடுத்துக் கட்டி... ஒரு சிட்டிகை குங்குமமெடுத்து உச்சித் திலகமிடறா மாதிரி கண்ணைத் தொறந்துக்கிட்டே கனா கண்டுக்கிட்டிருந்தேன். அப்போ எங்கிருந்தோ மின்னல் மாதிரி அந்த காட்டான் வந்தான். இடுப்புல இருந்த பிச்சுவா கத்தியை எடுத்து என் கண்ணு முன்னாலயே.. அதை எப்படி சொல்வேன்.. என் கண்ணு முன்னாலயே... பவித்ராவை சரமாரியா வாயிலேயும் வயித்திலேயும்... "யு பிட்ச்.. யு ஸ்கௌன்ட்ரல்.... என்னை ஏமாத்திட்டியேடீ"ன்னு திட்டிக்கிட்டே.. சதக் சதக்ன்னு சரமாரியாக் குத்தறான்... எனக்கு மூச்சு வாங்குது..ஆடிப்போயிட்டேன்... சுதாரிச்சு "டேய்.. நிறுத்துடா"ந்னு அவனைப் பிடிக்க நா கெளம்பும்போது அவன் கத்தியை குளத்துக்குள்ளே வீசி எறிஞ்சிட்டு ஓட ஆரம்பிச்சான்.
பதினோறு மணிக்கு மேலேயே இருக்கும். அவன் நூறு மீட்டர் முன்னாடி ஓடிக்கிட்டிருக்கான். பின்னால நானு. ரெண்டு தெரு திரும்பினவுடனே ஒரு பாழடைஞ்ச வீட்டு வாசல்ல புகழ் கையில தம்மோட உட்கார்ந்திருந்தான். நா ஓடி வர்றதைப் பார்த்துட்டு அவனும் தொரத்த ஆரம்பிச்சான். அவன் வளைஞ்சு வளைஞ்சு கோகோ விளையாடறா மாதிரி ஓடறான். ஆளில்லா தெருவெல்லாம் தாண்டி மெயின் ரோட்டுக்கு வந்துட்டான். அவனைப் புடிக்கவே முடியலை. காத்தா போயிட்டான்.. ஸ்பிர்ன்டரா இருப்பான் போல்ருக்கு...
"கலை.. வர்ற பஸ்ல ஏறிடு.. நாம மெட்ராஸ் போயிடுவோம்.. இங்க நின்னாக்க மாட்டிப்போம்"ந்ன்னு புகழு தூண்டினான். ஏதோ ஒரு பஸ்ஸு காத்து வாங்கிக்கிட்டு வந்திச்சு. ஏறினோம். தூங்கினோம். விடிய விடிய திருச்சிலேர்ந்து கிளம்பி மறு நாள் மத்தியானம் மெட்ராஸ் வந்துட்டோம். ட்ரிப்ளீக்கேன்ல ஒரு மான்ஷன்ல புகழோட புகலிடம். அவந்தான் அந்த நட்சத்திர ஹோட்டல்ல பார் டென்டர் லீடர். மேனேஜர்ட்ட சொல்லி எனக்கொரு வேலை வாங்கிக்கொடுத்தான். பார்த்தீங்களா? தண்ணியடிக்காதவன், சிகரெட் பிடிக்காதவன்... பொம்பளைங்களை ஏறெடுத்துப் பார்க்காதவன்.. என்ன நிலைமைக்கு ஆயிட்டேன்... திரும்பவும் உய்யடா..உய்யடா..உய்..ன்னு யாரோ இடுப்புல காவித் துண்டோட சூட்சுமமா எதிர்க்க நின்னு கூப்பாடு போடற மாதிரியே இருக்குதுங்க.."
பவித்ரா கொலை கேஸு இன்னும் முடியலை. நேத்திக்கு தந்தியில விசாரணை நடக்குதுன்னு நாலு காலம் நியூஸ் போட்ருக்குது.. இன்னிக்கி உங்க கிட்ட சொன்ன இந்தக் கதையை யார்ட்டேயும் சொல்லிடாதீங்க.. என்னை திரும்பவும் உள்ள போட்டுடுவாங்க.... ஆள் மாறாட்டம் செய்தப்பவும் எம் மேலே தப்பில்லை.. இப்பவும் நானொன்னும் கொலை செய்யலை.. என்னைப் போட்டுக்கொடுக்காம இருக்கிறத்துக்கு மனமார்ந்த நன்றி!
முற்றும்.

0 comments:

ஆடிய பிற ஆட்டங்கள்

Related Posts with Thumbnails