Thursday, December 15, 2016

சந்திப்பு: சங்கீத கலாநிதி சஞ்சய் சுப்ரமண்யம்

"ஊர்ல நானும் கோபாலும் ஸ்போர்ட்ஸ்டார் வாங்கி புத்தம்புதுசை நறுக்கி பக்கம்பக்கமா ஆல்பம் பண்ணுவோம்... அப்போல்லாம் அது ரொம்ப இஷ்டம்....இல்ல..." என்று சிரித்த போது அ
வர்...
"ஆமாமா... அப்புறம் அந்த ப்ளேயரையை ஒட்டியே அப்படியே வளைச்சு வளைச்சு நறுக்கிக்கூட ஆல்பத்துல ஒட்டுவோம்..." என்று வெள்ளையாய்ச் சிரித்தார் சஞ்சய்.
கர்நாடக சங்கீத சூப்பர் ஸ்டார் சங்கீத கலாநிதி சஞ்சய் சுப்ரமண்யன் அவர்களைச் சந்தித்தது பற்றி....
**
நண்பர் ராஜாராமிடம் ஒருநாள் போகிற போக்கில் "உங்களுக்குச் சஞ்சையைத் தெரியும்னா... அவரை "சேவிக்க வேண்டுமய்யா..." என்று ஒரு விருப்ப மனு போட்டிருந்தேன்.
அந்த ஆசையை சென்ற ஞாயிற்றுக்கிழமை பூர்த்தி செய்தார். காலிங் பெல் அடித்து காத்திருக்கும் நேரத்தில் வயத்துக்குள் பட்டாம்பூச்சி சடசடத்தது. ஒரு சூப்பர்ஸ்டாரைப் பார்க்கப்போகிறோம் என்கிற படபடப்பு. மோகனமான புன்னகையுடன் "வாங்க...." அவரே வந்து கதவைத் திறந்தார்.
எட்டு முழம் வேஷ்டி. டீ ஷர்ட். Simple But பளிச் சஞ்சய். பின்புலத்தில் மும்மூர்த்திகள் தெரிய கம்பீரமாக முன்னால் அமர்ந்தார்.
"சங்கீத கலாநிதி"யைச் சந்திப்பதற்கு வெறும் கையோடு போனோமே என்று அசட்டுத்தனத்தை எண்ணித் தவிக்கும்போது ராஜாராம் பின்பையைத் திறந்து "வில்லிவாக்கத்துல பழைய புஸ்தகக்கடையில வாங்கினேன்..." என்று கொத்தாக சஞ்சய் கையில் சில புத்தகங்களை அடுக்கினார்.
எல்லாம் அந்தக்காலத்து கிரிக்கெட் புத்தகங்கள். (முதல் இரண்டு பாராக்கள்... இவ்விடத்தில் பேசப்பட்டது)
"ரூல்ஸ் புஸ்தகம் வேண்டாம்.. ம்..... இது படிச்சிருக்கேன்... அது எங்கிட்டியே இருந்தது.... ம்.. தாங்க்ஸ்.." என்று ஆர்வமாகப் புரட்டிப் பார்த்து வாங்கிக்கொண்டார்.
"எனக்கு ராகமெல்லாம் தெரியாது...." என்று கூச்சத்துடனும்... "ஆனா கர்நாடக சங்கீதம் ரொம்பப் பிடிக்கும்..." என்று இசைப் ப்ரேமை ததும்பும் கண்களோடும் என்னைப் பற்றிய இண்ட்ரோ கொடுத்தேன். அகஸ்மாத்தாக மன்னார்குடியைப் பற்றி பேச்சு வந்தது. "குன்னியூர் பண்ணை, எஸ்டேட் ஐயங்கார், கபிஸ்தலம்...." என்று சரளமாக அந்தந்தப் பிரதேச ஜமீந்தார்களைப் பட்டியலிட்டார்.
சிந்து பைரவியில் சிவகுமார் கண்களை மூடி மீரா பஜனை லயித்துக் கேட்கும் போது..... மிக்ஸியில் "டர்ர்ர்ர்ர்ர்ர்"ரென்று மொளகாப்பொடி அரைக்கும் சுலக்ஷ்ணா அளவுக்குதான் சங்கீத ஞானம் எனக்கிருந்ததால்... லவலேசம் தெரிந்த ஒன்றிரண்டு ஐட்டங்கள் பற்றிக் கூட பேச பயந்தேன். அவர் பாடும் தமிழ்க் கீர்த்தனைகள் என் மனசுக்கு நெருக்கமானவை. சபாக்களின் நாயகன், கச்சேரிப் புயல் ஆர்.வியும் கம்மென்று அவையடக்கத்துடன் அமர்ந்திருக்க ஆர்ப்பாட்டம் செய்யாமல் சமர்த்தாக காதில் வந்து விழுந்த சங்கதிகளோடு திரும்பினேன்.
ராஜாராம் அவர்களுக்குள் அணுக்கமான விஷயங்கள் நிறைய பேசினார். பாடலாகக் கேட்ட குரலைப் பேச்சாகக் கேட்க கசக்குமா என்ன? அவர்கள் பேசப் பேச.... காதை குரலுக்கு மட்டும் கொடுத்துவிட்டு சங்கதிகளை ஃபில்டர் செய்து இறக்கிக்கொண்டேன். சஞ்சய்க்கு பல விஷயங்களில் ஞானம் இருந்தது. "நிறைய தமிழ் இலக்கிய புஸ்தகங்கள் வகைதொகையில்லாமல் படிக்கிறார்.. சோ. தருமனின் கூகை.. இந்த மாதிரி.. இன்னும்...." என்று படியிறங்கி வரும்போது தோளில் கைபோட்டு ஆர்.வி சொன்னார். எந்த தலைப்பிலும் எளிமையாகவும் சரளமாகவும் அர்த்தபுஷ்டியாகவும் பேசியது அவரது "ஆல் ரௌன்டர்" அந்தஸ்தை ஸ்திரப்படுத்தியது.
"நா ஃபேஸ்புக்ல அவ்ளவா ஆக்டிவ் கிடையாது.. ஆனா ட்விட்டர்ல இருக்கேன்..." என்றார்.
சுமார் ஒரு மணி நேரம் கழித்துக் கிளம்பும்போது அவரிடம் ஒரு விண்ணப்பம் போட்டேன்.
"சார். என் ஃப்ரென்ட் விஜய்னு பேரு. மைக்ரோஸாஃப்ட்ல இருக்கான். கர்நாட்டிக்ல ரொம்ப இன்ட்ரெஸ்ட். யூயெஸ்லேர்ந்து சீசனுக்காகவே சென்னை வருவான். இப்போ பெங்களூர் வாசம்..... அடுத்த தடவை வரும்போது உங்களைப் பார்க்க அழைச்சுண்டு வரட்டா?"
"ஓ! தாராளமா..." என்று புன்னகைத்தார்.
"தாங்க் யூ".
இந்த சந்திப்பைச் சாத்தியமாக்கிய ராஜாராமுக்கு மனப்பூர்வமான நன்றிகள். பேசிக்கொண்டிருக்கும் போது சில விஷயங்களை எடுத்துப்பேசி சுவாரஸ்யமாக்கிய அடியேனின் பெரிய அண்ணன் திரு. ஆர்.வி அவர்களுக்கும் நன்றிகளும் வணக்கங்களும்...

0 comments:

ஆடிய பிற ஆட்டங்கள்

Related Posts with Thumbnails