Thursday, December 15, 2016

விஸா வ்யாசம்

நானொரு ஏர்கலப்பை பிடிக்காத கீபோர்டு தட்டும் கடின உழைப்பாளி. இப்படி சொன்னால் "த்தோ பார்றா அக்ரமத்த.... உன்னால ப்ரூவ் பண்ண முடியுமா?" என்று முண்டு தட்டி, முழித்துப் பார்த்துச் சண்டைக்கு வருவீர்கள். கொஞ்சம் பொறுத்தருளுங்கள் ஸ்வாமின். "லெஃப்ட் ஹாண்ட் ப்ளீஸ்.. ரைட் ஹாண்ட் ப்ளீஸ்...தம்ஸ் ப்ளீஸ்.." என்று விரல் ரேகைகள் கிடைக்காமால் திணறிய அமெரிக்க கான்ஸ்லேட் ஆசாமிகளிடம் கேட்டுப்பாருங்கள். ஒத்துக்கொள்வீர்கள். சதா மெயிலடித்துத் தேய்ந்து போன விரல் ரேகைகள். இரண்டு முறை வெல்வெட்டால் அழுந்தத் துடைத்து எடுத்துக்கொண்டார்கள்.
வள்ளுவர் கோட்டமருகே நிழலுலகில் வேலை செய்வது போல மறைவாக இருந்தது பயோ எடுக்கும் ஆபீஸ். கார் பார்க்கிங் இல்லாத கார்டன்ட் ஏரியா. எதாவது ஒரு கட்டிடம் முன்னால் காரை நிறுத்தினால் பக்தி படங்களில் "ட்ரிங்....." இசையுடன் தோன்றும் அஷ்டபுஜ தெய்வம் போல செக்யூரிட்டி வெளியே வந்து "வண்டியை எடுங்க... இங்கெல்லாம் நிப்பாட்டக்கூடாது..." என்று துரத்துகிறார்கள்.
இந்தப் புழுக்கத்திலும் கோட்டோடு வரிசையில் நின்றவர் ஐம்பது சதவீத அரைகுறை கபாலியாக இருந்தார். ஸ்தூலமாக இங்கும் சூட்சுமமாக யூயெஸ்ஸிலும் வாழ்ந்துகொண்டிருக்கிறார் என்பது அவர் விழிகளில் சுடர்விட்டது. பெற்றோரின் கட்டுக்கடங்காமல் திரிந்த இக்காலப் பொடியன் எப்போது அந்தக் கோட்டை உருவுவான் என்று எதிர்பார்த்துக் கொண்டிருந்த போது டோக்கன் கொடுத்து உள்ளே போகச்சொன்னார்கள்.
ரயில்வே ரிசர்வேஷன் கவுண்ட்டர்கள் போல பதினாறு இருந்தது. மைக்கில் டோக்கன் நம்பர் சொல்லி எல்சிடியில் காட்டிக் கூப்பிட்டார்கள். தலைக்கு இரண்டு நிமிஷ வேலை. அவ்ளோதான். ரேகை எடுக்க பட்டபாடு முதல் பாராவில் பார்த்தோம்.
வெளியே வானம் மப்பு போட்டிருந்தது. குலதெய்வத்திடம் வேண்டிக்கொண்டு நெற்றியில் ஒற்றை விபூதிக்கீற்றுடன் பிள்ளையையோ பெண்ணையோ பார்க்கும் ஆர்வம் கண்களில் ததும்ப நின்ற வயோதிக தம்பதிக்குப் பின்னால் ஐம்பதுக்கும் மேலே வரிசை வாசுகியாய் நீண்டிருந்தது.
67 சதவிகித இந்திய-அமெரிக்கர்கள் டெமாக்ரடிக் ஹிலாரியை ஜனாதிபதியாக அமர வைத்து அழகு பார்க்க விரும்புகிறார்கள். மூன்று மில்லியன் அமெரிக்க ஜனத்தொகையாக இருக்கும் நம்மாட்களுக்கு ரிப்பப்ளிக் ட்ரம்ப் மேலே ஒருவித பயம்.அலர்ஜி. ”ஹி இஸ் க்ரேஸி” என்கிறார்களாம். ட்ரம்ப்போ ஹிலாரியோ ராஜாங்கம் நடத்த வரும்போதும் இதே போக்குவரத்து இருக்கவேண்டும் என்று வேண்டிக்கொண்டு இவ்வியாசத்தை பூர்த்தி செய்கிறேன்.

0 comments:

ஆடிய பிற ஆட்டங்கள்

Related Posts with Thumbnails