Friday, April 4, 2014

சகஸ்ர சந்த்ர தர்ஸீ

ஆஃபீஸில் நுழைந்ததும் பளபளவென்று க்ளேஸுடு காகிதத்தில் டேபிளில் ரெண்டு படம். ஸ்ரீசந்த்ரபகவான் மூலவர் மற்றும் உற்சவராகக் திருக்காட்சியளித்தார். படத்துக்குப் பின்னால் திங்களூர் என்று நீல ரெனால்ட்ஸால் கிறுக்கியிருந்தது. என்னுடைய வருகை மோப்பம் பிடிக்கப்பட்டு ஐந்து நிமிடத்தில் ஃபோன் வந்தது. “சார்! அதை ஸ்கேன் பண்ணிக்கோங்க. திங்களூர் சந்திரன்.. வர்ற ஜய வருஷத்துக்கு அவர்தான் அதிதேவதை!” என்றார் மறுமுனையிலிருந்து வெங்கட்ராமன்.

உற்சவர் தலைக்குப் பின்புறம் பிறை அம்சமாகத் தெரிந்தது. அதன் அழகை ரசித்து உற்றுப் பார்க்கப் பார்க்கக் கையைப் பிடித்து சடாரென்று உள்ளே இழுக்கப்பட்டேன். ஐந்து நிமிடம் அம்புலியில் ஆனந்தமாகப் பயணித்தேன். மரங்களுக்கிடையில் மன்னை தெரிந்தது. பிரம்மாண்டமான தெப்பக்குளம் தெரிந்தது. வளைந்து ஓடும் பாமணி ஆறு தெரிந்தது. ஆற்றங்கரையோர அரசமரம் தெரிந்தது. வேறு என்னவெல்லாம் தெரிந்தது என்று சொல்கிறேன், வாருங்கள்.

தலையை இடது வலதாகப் பெண்டுலமாய்த் திருப்பினால்தான் ஒரு கரைக்கு அடுத்த கரை தெரியுமளவிற்கு மாபெரும் தெப்பக்குளம். மன்னையின் ஹரித்ராநதி. நடுவே சின்னஞ்சிறு தீவுபோலுள்ள மேடான இடத்தில் ஸ்ரீவேணுகோபால ஸ்வாமி ராஜகோபுரமுள்ள ஒரு கோயிலில் சேவை சாதிக்கிறார். உதய சூரியன் கோபுரத்தின் முகத்திலும் சந்தியா காலத்தில் அக்கோபுரத்தின் முதுகிலும் விழும். ரெண்டுமே கொள்ளை அழகு.

”சகுந்தலா.. ஆத்தாவுக்கு ஒடம்பு சரியில்லேன்னியே... டாக்டராத்துக்கு அழைச்சிண்டு போனியா? இல்லே.. எங்காத்துக்கு மைதீன் வந்தார்னா பார்க்கச்சொல்லட்டா?.. ஏதோ வயத்துல சொருகிண்டுடுத்து போல்ருக்கு...” போன்ற விசாரிப்புகளோடு தினந்தோறும் அன்றைய நிகழ்வுகளின் ரீகேப் எங்கள் வீட்டின் வாசல்படியில் பாட்டியின் தலைமையில் சிறப்பாக நடைபெறும். ஜிலுஜிலுவென்று காற்று இதமாக வீசும். அவ்வப்போது தெற்கு வடக்காக உதிரியாய் பயணிகள் அமர்ந்திருக்கும் பஸ்கள் தடதடவென்று விரையும். ”நம்ம தெரு எப்பவுமே ஏகாதேசி தெருதான்... வடக்குத்தெருவுல எல்லாக் கம்பத்துலையும் விளக்கு ப்ரகாசமா கண்ணைப் பறிக்கிறது... இங்க எதுத்தாப்ல யாராவது வந்தா முட்டிண்டு மண்டை ஒடையும்..” போன்ற பொதுப்பிரச்சனைகளும் பேசப்படும்.

“தம்பீ... சித்த அங்கே பார்டா.. மைய மண்டபத்துக்கு மேலே பிறையா தெரியர்து?.. .. மூனாம் பிறையோ.. ஏங்க்கா?”

“ஆங்... போன ஞாயித்துக்கெழேமே அமாவாசை. திங்கள் ஒண்ணு, செவ்வாய் ரெண்டு இன்னிக்கு புதன் மூணு... ம்... மூணாம் பிறைதான்..”

“நாலாம் பிறை கண்ணுக்கு நன்னாத் தெரியும். நா படாத பாடு படறோம்.. அது மட்டும் நன்னா தெரியும்.. ஆனா, விசேஷமான மூனாம் பிறை தெரியவே மாட்டேங்கிறது.. ” என்று அங்கலாய்த்துக்கொள்வாள்.

இந்த இடத்தில் நினைவோடை முடிந்தது. இதற்கெல்லாம் விளக்கமளிப்பதுபோல ஒரு புஸ்தகம் வீகெயெஸ் படிக்கக் கொடுத்தார். சதாபிஷேகம் செய்துகொள்பவர்களுக்கான சகஸ்ர சந்தர பூஜா விதானம். திருனவேலி எஸ். சீதாராமன் தொகுத்து வெளியிட்டது. வேத சாஸ்திர ஜ்யோதிஷத்தில் புலமை பெற்று கர்மயோகியாகத் திகழ்ந்த “ஆண்டி வாத்யார்” என்றழைக்கப்பட்ட T.S. ஸுப்ரம்ஹண்ய ஸாஸ்த்ரிகளுக்கு வந்தனத்துடன். 0462-2330246 என்ற எண்ணில் லோட்டஸ் பிரிண்ட்டர்ஸை அழைத்து ஒரு காப்பி வாங்கிக்கொள்ளுங்கள். சந்த்ரனைப் பற்றிய விவரங்கள் பூர்ணமாக அடங்கிய புஸ்தகம்.

ஜ்யோதிஷ சாஸ்த்திரத்தில் 120 வயது பூர்ணாயுஸ் என்று கணக்கிட்டிருக்கிறார்களாம். ஆனால் 100 வயது வரை வாழ்வதே துர்லபம். என் பாட்டி எண்பளத்தொம்போது வயசு வரை திடகாத்திரமாக இருந்தாள். குளத்தைச் சுற்றி பிரதக்ஷிணம் பண்ணிக்கொண்டு, இருபது படியிறங்கி மங்கம்மா படித்துறையில் ஸ்நானம் பண்ணி, தன் துணியை தானே தோய்த்துக்கொண்டு மடி ஆசாரத்தோடு இருந்தாள். இது பாட்டி கதை இல்லை. பாட்டி காட்டிய சந்த்ரனைப் பற்றியது.

சகஸ்ர சந்த்ர தர்ஸீ சதாபிஷேகம் செய்துகொள்ளலாம் என்று ரிஷிகள் சம்மதித்துள்ளார்களாம். சகஸ்ர என்கிற 1000 முறை சந்த்ரனை தரிசனம் செய்வது பௌர்ணமியைக் குறிக்கிறது. இது 81 வயதில் சித்திக்கிறது என்று கணக்கிட்டிருக்கிறார். எப்படி?
80x 12 = 960 பௌர்ணமிகள். ஒவ்வொரு ஐந்தாண்டிற்கு ஒரு முறையும் 2 அதிமாஸங்கள் வருமாம். அதில் இரண்டு கூடுதல் பௌர்ணமிகள். எண்பதிற்கு 16 அதிமாஸங்கள். 16x2 = 32. ஏற்கனவே 960+32= 992. அப்புறம் ஒரு எட்டு மாதங்கள் எடுத்துக்கொண்டால் 992+8=1000. எண்பது வயது எட்டு மாதங்களில் அந்தப் பெரியவர் சகஸ்ர சந்த்ர தர்ஸீ ஆகிவிடுவார்.

அமாவாசை கழிந்து மூன்றாம் பிறை பரமஸிவனின் சிரசை அலங்கரித்ததாம். அதனாலேயே அவருக்கு சந்த்ரசேகரன் என்றும் சந்த்ரமௌளி என்றழைக்கப்படுகிறார். சதுர்த்தி அன்று விநாயகனைப் பழித்ததால் சந்த்ரனுக்கு சாபமளித்தார் விநாயகர். அவரைப் போற்றித் துதித்து சாபவிமோசனம் பெற்ற சந்த்ரனை சிரசில் சூடிக்கொண்டு பாலசந்த்ரன் ஆனார் அவர். ”நாலாம் பிறையைப் பார்த்துட்டியா.. போய் ஆனந்த விநாயகரையோ.. இல்லேன்னா முக்கில இருக்கிற வரசித்தி விநாயகரையோப் பார்த்து குட்டிண்டு தோப்புக்கரணம் போட்டு நமஸ்காரம் பண்ணிட்டு வாடா..” என்ற பாட்டியின் கட்டளையில் நான்காம் பிறை பார்த்த தோஷத்தை தீர்த்துக்கொள்வோம்.

பரமசிவனைக் கட்டித்தழுவும் போது உமாவுக்கு ஒரே பரவசம். அவர் சிரசில் சூடியிருக்கும் சந்த்ரனைப் பார்த்த நாணத்தால் ஈஸ்வரி தன் தாமரை போன்ற கண்களை லேசாக மூடிக்கொள்கிறாள். சந்த்ரனைக் கண்ட தாமரை தன்னை மூடிக்கொள்வது இயல்புதானே! சர்வேஸ்வரனின் தலையிலிருந்து சுடர்விடும் சந்த்ர ஒளி பட்டுதான் உமையின் தாமரைக் கண்கள் மூடிக்கொள்கிறது.... இப்படியாக புஸ்தகம் முழுக்க சந்த்ரனைப் பற்றிய ஏராளமான விஷயங்கள். நமக்கு உடனே நினைவுக்கு வருவது “வதனமே சந்த்ர பிம்பமோ...”தானே.

”இன்னிக்கு பஞ்சாங்கம் பார்த்தியோடீ பவானி” என்று தினமும் ஒரு முறை விஜாரிப்பாள் பாட்டி. மனோன்மணி விலாஸ் பாம்பு பஞ்சாங்கத்தின் பின்னால் ராமர் கட்டம் சீதா கட்டத்தில் கண்ணை மூடிக்கொண்டு [முன்னரே கண்ணால் உற்றுப் பார்த்ததில்] கைவைத்து “நினைத்த காரியம் ஜெயம்” படிப்பதில் அலாதி இன்பம். அதைத் தாண்டி பல்லி விழும் பலன் பார்ப்போம். ஆனால், பஞ்சாங்கத்தில் தினந்தோரும் திதியை அறிவதால் செல்வம் பெருகுமாம். கிழமையால் ஆயுள் வளரும், நக்ஷத்திரத்தால் பாபம் விலகும், யோகத்தால் ரோகம் அகலும், கரணத்தால் வெற்றி கிட்டுமாம். முனிவர்கள் மற்றும் ரிஷிகளின் வாக்கை ப்ரமாணமாக வைத்துக்கொண்டு கணிக்கபடுவது வாக்ய பஞ்சாங்கமென்றும் சூர்யன், சந்த்ரன் மற்றும் பூமி இவற்றின் ஆகர்ஷண சக்தியால் சந்த்ரனது பாதையில் ஏற்படும் இயக்கநிலை வித்யாசங்களைக் கணக்கிட்டுக் கூறுவது த்ருக் கணித பஞ்சாங்கமாம்.

ஸுக்ல பக்ஷ சந்திரனுக்கு அவனுடைய 15 கலைகள் வளருவதாகவும், க்ருஷ்ண பக்ஷத்தில் அவை கொஞ்சம் கொஞ்சமாகத்தேய்வதாகவும் புராணம். ராமன் சூர்ய வம்சத்தினன். நகுஷன், யயாதி என்ற முன்னோர்களை உடைய கௌரவ பாண்டவர்கள் சந்த்ர வம்சத்தினர்.

அத்திரி மஹரிஷிக்கும் அனுசுயா தேவிக்கும் பிறந்தவர் சந்த்ரன் என்கிற சோமன். சந்த்ரன் தேவகுருவான பிரஹஸ்பதியிடம் அனைத்துக் கலைகளையும் கற்றார். அவருடைய தேஜஸைப் பார்த்து தனது 27 நக்ஷத்திரப் பெண்களை தக்ஷப் பிரஜாபதி சந்த்ரனுக்கு மணம் முடித்து வைத்தார். ஆனால், சந்த்ரன் ரோஹிணியிடம் அதிக அன்பு செலுத்தியதால் மற்ற பெண்கள் தந்தையிடம் முறையிட்டார்கள். வெறுப்பான தக்ஷன் சந்த்ரனுக்கு க்ஷயரோகம் பீடிக்குமாறு சபித்தானாம். இது புராணம்.

சந்த்ர கிரஹணம் விட்ட ஸ்நானம் பண்ணுவதற்கு ஹரித்ராநதியின் மங்கம்மா படித்துறை மதில் கட்டையிலிருந்து குளத்துக்குள் டைவ் அடித்துக் குளித்த அப்பு சார் நீர்க்குமிழியாய் கொப்பளித்து ஞாபகம் வருகிறார். கிரஹணம் விலகிய சந்த்ரனின் ஒளியில் அவர் ஜிட்டுத் தலை குளத்து நீரில் பளபளவென்று தெரியும். அவருடைய எல்லோரும் குளிக்கலாமுக்கப்புறம் அந்தப் படித்துறை தெருவாசிகளால் நிறையும்.

அட! இன்னிக்கு சோம வாரம்!!

போஜனப்ரியா

யாராவது டைனிங் ஹாலை அகஸ்மாத்தா எட்டிப் பார்த்தால் கூட அவ்ளோதான். போச்சு. கையைப் பிடித்து தரதரவென்று இழுத்து உள்ளே பந்தியில் விட்டார்கள்.

சாயங்கால நேரத்தில் டிஃபன் போய்க்கொண்டிருந்தது. ஹோட்டல் வாசலில் மெனு போர்டு வைப்பது போல சமையல் காண்ட்டிராக்டர் டைனிங் ஹால் ஜன்னலில் பிரதானமாகப் பதாகை கட்டியிருந்தார். இன்ன தேதி இன்ன வேளைக்கு இன்னன்ன ஐட்டங்கள் என்று காலக்கிரமமாக இருந்த சாப்பாட்டுப் பட்டியலை ஒரு மாமா வரிவரியாக நெட்ரு பண்ணிக்கொண்டிருந்தார். இவர் வாயைக் கட்டமுடியுமா என்று பார்த்த நெடுநெடு மாமியின் வாயை எந்தக் கொம்பனாலும் கட்டமுடியாது என்பது அவரது பேச்சில் தெரிந்தது.

நான் நுழைந்த நேரத்திற்கு அசோகா ஹல்வா, பாதாம் ஹல்வா என்று ரெண்டு ஸ்வீட். சுவற்றோர பந்தியில் இருபத்திச் சொச்ச பேர் மலபார் அடை வித் அவியல், மைசூர் போண்டா, சட்னி என்று வயிற்றை வஞ்சனையில்லாமல் கவனித்துக்கொண்டிருந்தார்கள். கைக்கும் வாய்க்கும் உக்கிரமான போர் நடந்துகொண்டிருந்தது. கடைக்கோடியில் தண்ணீர் தெளித்த ஏடுகளில் உட்காரவைத்து “சார்! ஹல்வாஆஆஆ...” என்று குழிக்கரண்டி முழுக்க வழித்து வலது கைக்கு எட்டுமிடத்தில் பரிமாறினார்கள். ஆட்காட்டி விரலால் ஹல்வாக்களைத் தடவி வாயில் வைத்துக்கொண்டேன். திடீரென்று இருதயத்தில் பக்கென்று இருந்தது. இடது பக்கத்தில் அமர்ந்திருந்த வாமபாகத்தின் விழியீர்ப்பில் உண்டான மின்சாரம் என்று தெளிந்து அவாசராவசரமாக அவர் இலைக்குப் பார்சல் பண்ணிவிட்டேன். பதிலுக்கு ஒரு “கட்டிச் சமத்து”ப் பார்வை பார்த்தாள். அல்வாவாய் நெஞ்சினித்தது.

எச்ச பத்து ஆன கைக்குக் காஃபி கிடையாது என்று ஹாலோரத்துக் கவுண்ட்டரில் வாங்கிக் குடிக்கச் சொன்னார்கள். பூந்தி தேய்க்கும் பெரிய ஜாரணி கரண்டியின் ஒன்றரை மடங்கு உசரத்தில் இருந்தார் அவர். இடுப்பில் மடித்துக் கட்டிய காவி வேஷ்டி. கையில் காஃபி நிறைந்த வால் பாத்திரம். தோளில் ஒரு சிகப்புக் கலர் காசித்துண்டு. அரை மொட்டைத் தலையில் ஆயிரமாயிரம் வெள்ளி முடி. கல்யாணத்தில் கால் வைக்கும்
அனைவருக்கும் அவர் போட்ட காஃபிதான்.

“ஷுகர் இல்லாமே வேணுமே”. ஏறிட்டுப் பார்த்தார். பக்கத்தில் பெல்லாரி உறித்துக்கொண்டிருந்த பவளவாயர் ”இவ்ளோ சின்ன வயசிலேயேவா?” என்று ஐயோபாவப்பட்டு என்னை பாதாதிகேசம் ஸ்கேன் செய்தார்.

“கேன்ல இருக்கிறதே அரை ஷுகர்தான் இருக்கும்.” என்று பல் தெரிய சிரித்துவிட்டு ஆகாசத்துக்கும் பூமிக்கும் காஃபியை ஆற்ற ஆரம்பித்தார். வானத்திலிருந்து வலதுகை பாத்திரத்திலிருந்து வால்பாத்திரத்தில் விழுந்த காஃபி ஸ்கூட்டர் நம்மிடத்தில் கிளம்பி தெருமுனைக்கு செல்வது வரை காதில் விழும் “டர்ர்ர்ர்ர்ர்ர்”ரொலியாக கேட்டது.

“ஒரு சித்தெறும்பு தூக்கிண்டு போற ஷுகர் கூட இருக்கக்கூடாது மாமா” என்றேன். என்னுடைய கடுமையான விரதத்தைப் பாராட்டும் விதமாக என்னை ஊடுருவிப் பார்த்த சங்கீதாவின் கண்களை என்னால் ஜென்மஜென்மாந்திரத்துக்கும் மறக்கவே முடியாது. இப்புண்ணிய பாரதத்தில் சமத்துகளுக்காக கொடுக்கப்படும் பத்ம விருதுகள் எதாவது இருந்தால் மேடம் என்னை உறுதியாக சிபாரிசு செய்திருப்பார்கள்.

ஸ்ட்ராங்க் காஃபி. நாக்கில் லேசான கசப்பு. காஃபி குடித்த கையோடு அவரிடம் “ஸ்வீட் மாஸ்டர் யாரு?”ன்னு கேட்டேன். ”உக்கிராணத்துல இருக்கார்” என்றவரை “நான் பார்க்கணுமே....” என்று கையைப் பிடித்து இழுக்காத குறையாகக் கேட்டேன். சமையற்கட்டினுள் நுழைவதற்கு முன்னரே சூரியனை எட்டித் தொடும் தூரத்திலிருப்பது போல தகித்தது. பெரிய இலுப்பச்சட்டியில் தேங்கியிருந்த எண்ணெய்க் கடலில் பூந்தி போட்டுக்கொண்டிருந்தார். எங்கிருந்தோ மூக்கினுள் சர்க்கரைப் பாகு வாசனை வெள்ளமெனப் புகுந்தது. ராண்டம் ஷுகர் ஐநூறைத் தொட்டதைப் போல தலையை கிர்ரென்று சுற்றிக்கொண்டு வந்தது. “உங்களைப்
பார்க்கணுமாம்” என்று காண்பித்துவிட்டு காஃபி கவுண்ட்டருக்கு விரைந்தார் ஜாரணி கரண்டி.

ஸ்வீட் மாஸ்டருக்கு கை குலுக்கினேன். என் கையிலும் எண்ணெய் பிசுக்கு ஏறியது. இரத்தக்காட்டேரி மனுஷ்ய ரூபத்தில் வந்தது போல வாயெல்லாம் வெற்றிலைக் காவி. உதட்டோரத்தில் ஒரு சொட்டு வழிந்திருந்தது. சுகந்த சுண்ணாம்பைக் கிரிக்கெட் பந்து அளவுக்கு உருட்டி உள்ளே தள்ளியிருக்கிறார். வாய்க்கு டியோடரண்ட். “ஸ்வீட் சூப்பரா இருக்கு! பஜார்ல கடை வச்சீங்கன்னா பிச்சுக்கிட்டுப் போகும்” என்று மனதார வாழ்த்தினேன். “நன்றி” சொல்லக் கூட நாணப்பட்டு வேஷ்டி நுணியைத் தூக்கி முகத்தைத் துடைத்துக்கொண்டார். அறுபது வயதிருக்கலாம். இதுவரை லட்சோபலட்சம் ஸ்வீட் செய்திருப்பது அவரது கேஷுவல் அப்ரோச்சில் தெரிந்தது.

திருவிடைமருதூர் மகாலிங்கத்தைப் பார்த்துவிட்டு மண்டபத்திற்குள் நுழைந்தோம். இரவு சாப்பாட்டிற்கு சொற்ப கூட்டமே இருந்தது. பேரன் பேத்தி கண்ட இள தாத்தா பாட்டிகள் அங்கே ஒரு குட்டி ராஜ்ஜியம் அமைத்து சாப்பிட்டுக்கொண்டிருந்தார்கள். அவர்கள் அருகாமையில் கிடைத்த இரண்டு இளம் இலைகளில் நானும் அவளும் பதவிசாய் அமர்ந்தோம். இரண்டு வாய் அமைதியாகச் சாப்பிட்டப் பக்கத்து மாமா சன்னதம் வந்தது போல நிமிர்ந்து “யாருய்யா அது...” என்று ஹாலதிரக் குரல் விட்டார்.

பரிமாறும் கூட்டம் பதைத்தது. “என்ன மாமா? என்ன வேணும்?” என்று இருவர் வாளிகளில் சாம்பாரோடும் ரசத்தோடும் வந்துவிட்டார்கள். அவர் கண்கள் ஊறுகாயாய் சிவந்திருந்தது. வந்த வேகத்தில் தலையில் கொட்டி அபிஷேகம் பண்ணிவிடுவார்களோ என்று பயந்தேன். “பந்தியை கவனிக்காமே கூடி நின்னு அரட்டையடிச்சுக்கிட்டிருக்கீங்க... உம்.. நா யாருன்னு தெரியுமா? இல்ல.. யாருன்னு தெரியுமான்னு கேக்கறேன்..” என்று எகிற ஆரம்பித்துவிட்டார். எச்சிலைக்கு முன்னால் ருத்ரதாண்டவம். பிபி பேஷண்ட் போலிருக்கிறது. கை கால் கரண்ட் கம்பியைப் பிடித்தது மாதிரி உதறியது. அவருக்கும் சாம்பார் கரண்டி பிடித்தவருக்கும். காண்ட்ராக்டர் சஃபாரி சூட்டில் ஓடி வந்தார். வாழை இலைகளுக்கு ஓரம் நறுக்கி செம்மைப் படுத்திக்கொண்டிருந்தவர் கத்தியாதிபாணியாக அங்கே வந்தார். கூட்டம் களை கட்டியது.

“நான் பேசிப்பார்க்கட்டுமா?” என்று மேடத்திடம் அடிக்குரலில் ரகஸ்யமாக உத்தரவு கேட்டேன். “வேண்டாம்” என்று கட் அண்ட் ரைட்டாக அதே டெஸிபலில் கட்டளையிட்டார்கள். பக்கத்தில் லௌட் ஸ்பீக்கராய் சத்தம். பொறுக்கமுடியாமல் ”நான் பேசறேனே” என்று பார்வையால் மீண்டும் கெஞ்சினேன். “ஐயோ.. மிஞ்சாதே..” என்று பதிலுக்கு அவளும் பார்வையில் கண்டித்தாள். ”உருளை...” என்று வந்தவரை ”மாமாக்கு போடுங்கோ...” என்று அவர் பக்கம் திருப்பினேன். இதே உத்தியை அடுத்தடுத்த வாளி, பேசின், கூடை என்று விதவித பாத்திரங்களில் வந்தவைகளை திருப்பிவிட்டேன். கையில் பதார்த்தத்தோடு தாண்டுபவனெல்லாம் ஒரு கரண்டி அந்த இலைக்கு சாய்த்துவிட்டுச் சென்றான்.

கோஸு அடுக்கிக்கொண்டிருந்தவர், முருங்கைக்காய் நறுக்கிக்கொண்டிருந்தவர், ஆயில் டின்னை உடைத்து சட்டியில் ஊற்றிக்கொண்டிருந்தவர் என்று பல அணியில் இருந்தவர்களும் ஒரு சேனையாய்த் திரண்டு போர்புரிய வியூகம் அமைத்து நின்றார்கள்.

ஒரு பத்து நிமிட சத்தத்துக்குப் பிறகு “சார்! நீங்களே சொல்லுங்க...” என்று என்னை நாட்டாண்மையாக்கித் திரும்பினார். ”இவ்ளோ நாழி வாயை அடைத்து உட்கார்த்தி வைத்திருந்தவன் வாயை அனாவசியமாய் குச்சி எடுத்து நோண்டுகிறாரே” என்று அவள் விசனப்பட்டது என் மூளைக்கு ப்ளூ டூத்தில் ட்ரான்ஸ்ஃபர் ஆயிற்று.

வேட்டை கிடைத்ததே என்று முதலில் அவர் பேசப் பேசச் சிரித்தேன். இரண்டு நிமிடங்களுக்கு ஆச்சா போச்சோவென்று அவர்களைத் திட்டினார். “நாடு எப்படிங்க உருப்படும்?” என்கிற தேசியநலக் கேள்விகளும் இதில் அடக்கம். கடைசியில் நான் ரெண்டு வாசகம் அவரிடம் பேசினேன். வாயே திறக்காமல் சாப்பிட்டுவிட்டு கை கழுவ எழுந்துவிட்டார். நான் என்ன கேட்டேன் என்று கேட்கிறீர்களா?

“உங்க இலையில எல்லாமே இருக்கே! இன்னும் உங்களை எப்படி கவனிக்கணும் மாமா?”

புஸ்தகேஷு 6174

இரண்டு மாதங்களாக புத்தக அலமாரியில் துறுத்திக்கொண்டிருந்தது. இந்தப் பக்கம் அந்தப் பக்கம் போகும்போது பிரதானமாகக் கண்ணில் படும். அதன் புஷ்டியைப் (விஷயம், தேகம்) பார்த்து நிதானமாகப் படிக்கலாம் என்று இவ்வளவு நாள் தொடாமல் வைத்திருந்தேன். நேற்றிரவு கையில் எடுத்தேன். டின்னரின் போது ஒரு ப்ரேக். “இப்பவும் தூங்கலைன்னா கொன்னுடுவேன்” என்ற நடுநிசி மிரட்டலின் போது கீழே வைத்தேன். அது இன்னொரு ப்ரேக். இரவெல்லாம் கடலாகவும் நம்பர்களாகவும் நுரைத்து நுரைத்துக் கனவுவில் பொங்கியது. இன்று முடித்துவிட்டேன்.

புஷ்பேஷு ஜாதி
புருஷேஷு விஷ்ணு
நாரேஷு ரம்பா
நகரேஷு காஞ்சி

என்று ஒரு புதிரின் குறிப்புக்காக காஞ்சிபுரம் போவதற்கு முன்னதாக ”ராமதேவி” ஜானகியிடம் அனந்த் சொல்வதாக பாணினியின் இந்த சமஸ்கிருத வரிகள் இந்நாவலில் வரும். நாம் இதில் இன்னும் ரெண்டு சேர்த்துக்கலாம்.

புஸ்தகேஷு 6174
லேககேஷு சுதாகர்

குமரிக்கு தெற்கே ஒரு தீவில் துவங்குகிறது கதை. ஆயிரமாயிரம் வருடங்களுக்கு முன் வாழ்ந்த காது நீண்ட பாலினக் குறிகளில்லாத ஹெர்மோப்ராடைட் (மண்புழு போல) லெமூரியர்களின் ”சக்தி பிரமிட்”டுகள்தான் பிரதான சப்ஜெக்ட். க்ரிஸ்ட்டலோகிராஃபியில் தேர்ந்த ஒருவனையும்(அனந்த்) கோலத்தை அறிவியலாக பார்க்கும் ஒருத்தியையும்(ஜானகி) நாயகநாயகியாக்கியிருக்கிறார். சடகோபன், சாரங்கன் என்று காஞ்சிபுர ஆசாமிகள் கதையின் களனை தங்கள் கட்டுப்பாட்டுக்குள் வைத்திருக்கிறார்கள். கூட்டத்திலிருப்பவர்களை அவர்களின் வியர்வை வாசனையில் கண்டறியும் ஸ்பெக்ட்ரோமீட்டர், ஸீ பெட் லாக்கிங் (sea bed logging), voice conversion , search and synthesis software, சீலகந்த மீன்கள் இப்படியாக புத்தகம் முழுவதும் களஞ்சியமாக அறிவியல் இரைந்து கிடக்கிறது.

ஒரு அறிவியல் கதையில் இலக்கணச் சுத்தமான தமிழ் அம்சங்களைப் புகுத்தி புனைந்திருப்பது நாவலின் சுவையை பன்மடங்கு கூட்டுகிறது. கதை நெடுக புதிராக வரும் பாடல்களை எழுதிய சுதாகரை எப்படி பாராட்டினாலும் தகும். ஃபிலடெல்ஃபியாவிலிருந்து அம்பாசமுத்திரம் வரை நாடு நகரங்களைத் தாண்டி கதை விரிகிறது. ரெண்டு பக்கத்துக்கு ஒரு சயின்ஸ் சமாச்சாரம். அப்படி அறிவியல் இல்லாத இடத்தை தமிழில் சந்த நயத்தோடு எழுதியிருக்கும் ஒரு புதிர்ப்பாடல் நிரப்புகிறது.

எகிப்திய பிரமீடுகள் போலல்லாமல் தென்னிந்திய கோபுரங்கள் பாதி பிரமிட்டுகளின் (மொட்டை பிரமிட்) குறியீடு. தமிழர் நாகரீகம் லெமூரியர்களைச் சார்ந்ததா போன்ற வரலாற்று விசாரங்கள் ஓரிடத்தில் வருகிறது. சுதாகரின் கடின உழைப்பு நாவலெங்கும் தெரிகிறது. ஒவ்வொரு பக்கத்தைத் திருப்பும்போது புதியதாய் என்ன தெரிந்துகொள்ளப்போகிறோம் என்கிற ஆவலே வாசகர்களுக்குத் தூண்டில் போடுகிறது. நம்மூரில் சாணி தெளித்து வாசலில் போடும் சாதாரண கோலத்தையும் ஃபிபனாக்கி நம்பர்களையும் அனாயாசமாகச் சங்கிலி போடும் இரண்டு பக்கங்களில் நீங்கள் வாயைப் பிளக்கப் போவது சர்வ நிச்சயம்.

மஹாராஷ்டிர மாநிலத்தில் விண்கற்கள் விழுந்த லோனார் ஏரி! லோனார் ஒரு தூங்குமூஞ்சி கிராமம் என்ற வர்ணனை அக்கிராமம் ஆறு மணிக்கு அடங்குவதை அழகாகச் சொல்கிறார். அந்த ஏரியின் அருகிலிருக்கும் பாறைகளில் காந்தமானிகள் 360 பாகையில் கரகரவென்று சுழலுகின்றன. அந்த ஏரியில் ஒரு பக்கம் உப்பு நீர். ஒரு பக்கம் சுவை நீர். ஒவ்வொன்றிர்க்கும் அறிவியல்பூர்வமான விளக்கங்கள். அதில் அதிசயித்து நீங்கள் சொக்கிப்போகும் தருணத்தில் உடனேயே புதிர் நிரம்பிய ஒரு தமிழ்ப்பாடல் வந்து உங்களை அப்படியே அடித்துப்போடும்.

“தலைவால் நேராகித் தன் வாலே தலையாகித்
தன்னிலே தான் கழிய தானேயாய் நின்றிடுமே....
நாலார வட்டத்துள் நாலே எண்ணாம்”

இதுதான் 6174 என்கிற கப்ரேகர் மாறிலியின் வாழ்த்துப் பாடல். அந்த லோனார் ஏரிக்குப் பக்கத்திலிருக்கும் பாழடைந்த விஷ்ணு கோயிலில் இந்த மர்மம் விலகுகிறது. இங்கிருந்து அசுர வேகத்தில் கதையை நகர்த்துகிறார். ஆங்காங்கே ஹெலிகாப்டர் பறக்கிறது. நமக்கு பகோடா என்றால் முக்குக்கடையில் போடும் வெங்காய பகோடாதான் தெரியும். மியான்மர்க்கு அழைத்துச் சென்று அங்கிருக்கும் புத்தவிகாரங்களை பகோடா என்று காட்டுகிறார். இந்திரனின் ஐராவதம் தெரிந்த நமக்கு பர்மாவின் ஐராவதி நதிக்கரையில் ரகளையான ஒரு க்ளைமாக்ஸ் காண்பிக்கிறார்.

கதையைச் சொல்லாமல் கவனமாகத் தவிர்த்திருக்கிறேன். சுத்தமான ஒரு அறிவியல் புனைவில் தமிழ்த்தேன் தடவிக் கொடுத்திருக்கிறார். இனிக்கிறது. தமிழுக்கு இது புதுசு! இதைப் படித்த பிறகு சுதாகரின் சமீபத்தியப் படைப்பான 7.83 ஹெர்ட்ஸையும் படித்துவிடுங்கள். இந்த ஜீவனிருக்கும் வரை நம்பர் பயமில்லாமல் பெருவாழ்வு வாழ்வீர்!

நேற்றிரவு “இது என்னப்பா?” என்று கேட்ட சின்னவளிடம் கப்ரேகர் கான்ஸ்ட்டெண்ட்டைப் பற்றிச் சொன்னேன். ”எந்த நம்பருக்கும் இது மாதிரி வருமா?” என்று போர்வைக்குள்ளிருந்து கேட்டாள். ”ஆமாம். ஆனால் 1111, 2222 என்று ரிப்பீட் ஆகக்கூடாது” என்று தலையசைத்ததும் உதறி எழுந்தாள். அவளுடைய ரஃப் நோட்டில் தானே ஒரு நான்கிலக்க எண்ணைத் தேர்ந்தெடுத்துக்கொண்டு டிரைவ் செய்தாள். அப்பட்டமான மகிழ்ச்சி அவள் முகத்தில். அதைத்தான் இந்த போஸ்ட்டின் படமாக இணைத்திருக்கிறேன்.

அடைக்கும் உண்டோ தாழ்!

சாஸ்திரத்துக்கு ஒரு வெல்ல அடை சாப்பிட்டேன். ஊத்துக்குளி வெண்ணை தடவி. ஏழெட்டு உப்பு அடை மளமளவென்று உள்ளே இறங்கியது. பட்டர்ஸ்காட்ச் ஐஸ்க்ரீமில் நட்ஸ் போட்டா மாதிரி கடிக்குக் கடி காராமணி வாயில் நிரடியது. பல்லு பல்லாய்ப் பதித்த தேங்காயோடு காராமணியும் அரைபட்டு உப்படையின் சுவையை அமிர்தத்துக்கு ஒரு படி மேலே தூக்கியது. தொட்டுக்க முருங்கைக்காய் சாம்பார். வாய்க்கு அதிர்ஷ்டம். சிம்பிள் டிஃபன் ஆனால் பவர்ஃபுல்.

வருஷம் முழுக்க நாம தாஸனதாஸனாய்க் கொடுத்த மரியாதைக்கு இன்னிக்கு ஒரு நாள் மட்டும் பதில் மரியாதை கிடைக்கும். ஒரு நெருங்கிய உறவுக்காரரிடம் ”என்ன.... மரியாதை கிடைச்சுதா?”ன்னு ஃபோனில் ராகமாக விஜாரிக்கும் போது சொன்னார் “அப்படியெல்லாமில்லைடா.. இப்பவெல்லாம் அகஸ்மாத்தா கல்லிலியோ கட்டையிலியோ தடுக்கிண்டாக் கூட என் கால்ல மட்டும் விழுந்துடக்கூடாதுன்னு உஷாரா இருக்காடா. பக்கத்துல சுவத்தையோ மரத்தையோ கெட்டியாப் பிடிச்சுக்கிறா...” என்றார். “கால்ல விழுந்தா நீங்க காலாண்டு பெட் ரெஸ்ட்தான் ஓய்..” என்று முணகிவிட்டு “பாவம்... ஒரு அடிப்படை மரியாதை கூட கிடைக்கிலியே” என்று அங்கலாய்த்தேன். உம். கண்டிப்பா கடைசில் “த்சொ..த்சொ..” உண்டு.

”சண்டை போட ஆளில்லைன்னா வாழ்க்கை சுரத்தா இருக்காதுன்னு சத்தியவானைப் போய் எமன்ட்டேயிருந்து மீட்டுண்டு வந்தாடா சாவித்திரி...” என்றெல்லாம் ஊரில் ஒய்ஃபிடம் உதை வாங்கும் அண்ணாக்கள் சிலர் அபவாதம் பேசிக் கிண்டலடிப்பார்கள். ஆத்தில் எவ்வளவு மொத்து விழுந்தாலும் காலரைத் தூக்கிவிடும் கேஸ்கள். நான் அந்த ஜாதி இல்லை. இன்று வெல்லடை உப்படை எப்படியிருந்தாலும் நொட்டை சொல்லாமல் சாப்பிடவும். “நாக்கை இழுத்து வச்சு அறுக்க...” என்று திட்டு கிடைக்கும். ஜாக்கிரதை. பகவத் பிரசாதம் உடம்புக்கு நல்லது.

“தீர்க்க சுமங்கலி பவ:” என்ற ஆண்களுக்கான ஆசீர்வாதங்கள் நிரம்பும் ”ஹாப்பி காரடையான் நோன்பு!”

மகாமகக் குளக்கரை

ரெண்டு நாள் கும்மோணம் ட்ரிப். மாமாங்கக் கரையிலேயே கல்யாணம். காசிமடத்து ரோமன் லெட்டர்ஸ் கடிகாரக் கூண்டு மன்னையின் பந்தலடி மணிக்கூண்டை கண்ணுக்குள் ஃப்ளாஷடித்தது. ”சரத்குமார் படத்துல வர்ற பாட்டுக்கு சிம்ரன் இங்கேதான் டான்ஸ் ஆடினா” என்று படித்துறை கம்பிகளுக்கு வெளியே ஒரு தரையைப் பசங்கள் காட்டினார்கள். பயபக்தியோடு கன்னத்தில் போட்டுக்கொண்டேன்.

டூரிஸ்ட் வண்டிகளின் பார்க்கிங் துறையாக மகாமகக் குளக்கரை பயன்படுகிறது. “தொர்ர்ர்ர்ர்”ரென்று ஊற்றிக்கொண்டு வாசலில் பசுமாடு நின்ற அபிமுகேஸ்வரர் கோயிலில் ஈ காக்கா இல்லை. குளக்கரையில் இருந்த சன்னிதிகளில் சாமிகள் க்ரில் கேட்டுக்குள் பத்திரமாக இருந்தார்கள். காய்கறி வண்டிகளில் கோஸும் கத்திரியும் கேரட்டும் பீட்ரூட்டும் சமாதானமாகக் குடித்தனம் நடத்தின. ”நவக்கிரம் பார்க்கணுமா சார்?” என்று ஒரு டூரிஸ்ட் ஆள் சவாரி தேத்திக்கொண்டிருந்தார். பையும் கையுமாக இருந்த குடும்பஸ்தன் அவரைக் கண்களில் அளந்துகொண்டிருந்தார். ட்ராயர் பையனும் சில்க் சாரி மனைவியும் நெட்டிவேலை கடையைப் பார்த்துக்கொண்டிருந்தார்கள். சியூபி ஏடியெம்மிற்குள் குளிரும் ஏஸிக்கு ஆசைப்படாமல் செக்யூரிட்டி வாசலில் நின்றிருந்தார்.

காலாரக் குளத்தைச் சுற்றினேன். பாசியும் ப்ளாஸ்ட்டிக் பேக்குகளுமாக மூலைகளில் ஒதுங்கியிருந்தது. ”குளிக்கும்போது பாசி முதுகுல ஒட்டிக்காது?”ன்னு பார்யாள் கேட்டாள். “கையால ஒதுக்கிட்டு முங்கிக் குளிப்போம்” என்று கும்மோணத்துக்காரனாய் பதில் சொன்னேன். எதற்கும் கவலைப்படாத பொதுஜனம் லைஃப்பாய் கட்டிக் கரைய அழுக்கு தீர குளித்துக்கொண்டிருந்தது. கரையின் ஒவ்வொரு சன்னிதியின் இடுக்குக்குள்ளெல்லாம் ஒரு ஜோடியாவது ஒளிந்திருந்தது. காதல் புரிதலில் வளையலோ வாயோ அவ்வப்போது சிணுங்கியது.

அவசரமாக ஒண்ணுக்கு வந்த பிள்ளையை ஜட்டியைக் கழட்டி “படியில இறங்கிப் போ...” என்று தீர்த்தத்துக்குத் தீர்த்தம் சேர்க்க விரட்டிய அந்த அம்மாவுக்கும் சேர்த்து கும்பேஸ்வரனை வேண்டிக்கொண்டேன். வடக்கத்திய பொடியன் பானி பூரி விற்றுக்கொண்டிருந்தான். பக்கத்தில் எதற்கெடுத்தாலும் “ஹை..ஹை..” போட்டு ஹிந்தி பேசி வெறுப்பேற்றிக்கொண்டிருந்த பசங்கள் பள்ளி தாண்டியிருக்கமாட்டார்கள். பாக்கெட்டில் நூறு ரூபாய் தாள் எட்டிப்பார்த்தது.

சென்னையிலிருந்து எல்லைக் கல்லுக்கு எல்லைக்கல் வழி நெடுக வெறுப்பேற்றிய ”கும்பகோணம் டிகிரி காஃபி”யை மண்டபத்தில் குடித்தேன். ”எப்ப வந்தே?” என்று கேட்ட பெண் வீட்டாருக்குப் பதில் சொல்லமுடியாமல் நாக்கு பச்சென்று ஒட்டிக்கொண்டது.

பாலகுமாரனுடன் ஒரு சந்திப்பு

”சுகுருன்னா இன்னாபா?” என்று காதருகே ஒரு கிசுகிசுக் குரல். பின்னணி இசை போல “க்ளக்... க்ளக்... க்ளக்..”என்று குதிரையின் குளம்பொலியும் சன்னமாகச் சேர்ந்தே கேட்கிறது.

தலைக்குக் க்ரீடம். இடையில் உடைவாள். கட்டுறுதியான தேகம். முறுக்கிவிட்ட மீசை. ஆள் பார்க்க ராஜாவாட்டம் இருந்தார்.

”நீங்க யாரு சார்?” கேட்கும்போதே சிரிக்கிறேன்.

“ராஜ.......சோழன்” இடைப்பட்ட புள்ளிகளில் சிக்கிய வார்த்தை ராஜவா இந்திரவா என்று கேட்கமுடியாதபடி நகரத்தின் வாகனாதி ஒருவன் “பாம்..”என்று ஹார்னால் எழுத்தை அழித்துக்கொண்டு பறந்தான் ஒரு ப்ரம்மஹத்தி.

“ஓ! மன்னர்மன்னா.... நீங்களா? சுகருன்னு எங்கே கேட்டீங்க?”

“எழுத்தாளர் பாலகுமாரன் சொன்னாரே! நீங்களெல்லாம் அவர் இல்லத்தில் பேசிக்கொண்டிருந்த போது.. கங்கைகொண்ட சோழபுரம் கோவில் கர்ப்பக்கிரஹ வாசல் அகலத்தையும் லிங்கத்தின் ஆவுடையாரின் அகலத்தையும் ஒப்பிட்டுச் சொன்னாரேப்பா... அப்போ...”

“அதுவா? கனக்கச்சிதமாக என்று அர்த்தம்.... எங்களூர் ஆட்டோக்காரர்கள் பாஷை” என்றேன். சிரித்துக்கொண்டார்.

“ஆட்டோக்கள் என்றால்?”

“குதிரை மாதிரி ஒரு வாகனம். குதிரைக்கு கொள்ளு மாதிரி அதுக்கு பெட்ரோல் டீசல் கேஸ்... ஆட்டோ அதைக் குடித்துவிட்டு ஓடும். அவர்தான் ஆட்டோக்களின் முதுகு வாசகமாக “உன் வாழ்க்கை உன் கையில்” என்று திருவாசகம் தந்தார்.”

“ஓ! அற்புதமாக இருக்கிறதே...”

குதிரைக்கு இப்படியும் அப்படியும் வண்டிகள் உரசிக்கொண்டு இழைகிறது. குதிரையிலிருந்து குதித்து இறங்கி பக்கத்தில் சேப்பாயியில் வந்து என்னுடன் அமர்கிறார்.

“நீங்க அவரு சுகரு சொன்னப்பதான் அங்கே வந்தீங்களா?”

“இல்லையில்லை. தயிர்சாதமும், மிக்ஸர் பொட்டலத்துடனும் பெருஆவுடையார் கோயிலுக்குள் நாட்கணக்கில் தவமாக உட்கார்ந்திருந்ததும்.. டார்ச் அடித்துக் கற்சுவர் முழுவதும் தடவித்தடவிப் பார்த்தேன் என்றும் கண்களை மூடிக்கொண்டு மனசுக்குள் ஓடியதைப் பார்த்துச் சொன்னாரே... அப்பவும் அங்கே தான் இருந்தேன். ஆவுடையார் ஒரே கல்லால் ஆனது இல்லை. எட்டு பங்காக இருக்கிறது என்று சொன்னபோது அவரது தலைக்குப் பின்னால் நின்றிருந்தேன்..”

“ஃபுல்லா கேட்டிருக்கீங்க.. அப்போ நாங்க யோகி ராம்சுரத்குமாரை முதல்ல கும்பிட்டோமே.. அதையும் பார்த்தீர்களா?”

“ம்... பெக்கர்... பெக்கர்ன்னு பால்குமார் சொன்னாரே... பெரிய ரைட்டர்.. பெரிய ரைட்டர்... அப்டீன்னு சொல்லிட்டு அவருக்கு மாலை போட்டதையும்.. ம்... அப்போ கூட அந்த மாலையிலிருந்த சம்மந்திப் பூவோட காம்பு கழுத்தில் குத்திச்சும்னு சொன்னாரே....”

“அடேங்கப்பா.. பெக்கர்னு இங்கிலீஷ் வார்த்தையெல்லாம் பேசறீரு.... ”

”ம்... அரபியெல்லாம் கூட பேசுவேன்..”

“அப்புறம் முக்கியமா சொன்னாரே...”

“ஆமாம்.. தான் பெரிய ரைட்டர்னு இருந்த அகம்பாவத்தை அந்த மகான்தான் அறுத்தெரிஞ்சார்ன்னார்... அந்த மாலையோடு அவரை திருவண்ணாமலை வீதிகளில் ஊர்வலமாக அழைத்துக்கொண்டு வந்ததையும்.. வேஷ்டி அவிழும் நிலையில் இருந்ததையும்.. கடைசியில் ஆசிரமத்தில் வந்து யோகியின் காலடியில் விழுந்ததும் அவிழ்ந்த வேஷ்டி போர்வையாய் போர்த்திக்கொண்டதையும்..... சுவரோரத்தில் அரூபமாக நின்ற நான் அழுததை நீங்கள் பார்த்திருக்க முடியாது..”

”ஒற்றர் படை செய்வது போல வேற என்னவெல்லாம் ஒட்டுக் கேட்டீர்....”

“எதிலையும் உண்மையா இருக்கவேண்டும். உழைக்க வேண்டும் என்றும் சொன்னாரே.. அப்புறம் சினிமா என்று எதைப்பற்றியோ சொன்னாரே.. அதென்ன சதிராட்டம் போலா....”

”சினிமாவுக்கு வசனம் எழுதுபவன் வெறுமனே வசனம் மட்டும் எழுதாமல் அதை உச்சரிக்கும் ஏற்ற இறக்கங்களும் சொல்லித்தரவேண்டும் என்று சொன்னபோது அதைக் கேட்டிருக்கிறீர்கள். இல்லையா? அதுவும் பாட்ஷாவில் ”என்ன சொன்னீங்கண்ணே..” என்று கேட்கும் தங்கையிடம் “உண்மையைச் சொன்னேன்..” என்று ரஜினிகாந்த் சொல்வதை...”

“ஆமாம். கேட்டேன். மேலும் சாங் சீக்குவன்ஸ்.......என்று.....”

“சாங் என்றால் பாடல். அதாவது பாடல் காட்சிக்குக் கூட எழுத்தாளனைக் கூப்பிட்டு உட்காரச் சொல்வார்கள் என்று ஜோக்கடித்தார்...”

கொஞ்ச நேரம் அமைதியாக இருந்தார் ராஜாதிராஜர். ”அவர் பக்கத்தில் அமர்ந்திருந்த ஒரு பெண் அம்மன்குடியில் சுவற்றில் மாயமாய் மறைந்த ஒரு வயதானவரைப் பற்றியும் கங்கை கொண்ட சோழன் எழுதும்போது ஒரு பாகம் முழுவதும் அவர்கள் பயணித்த வாகனத்திலேயே மூன்றரை மணி நேரம் தொடர்ந்து கதையைச் சொல்லி முடித்ததையும் சொன்னார்களே யார் அவர்?”

“அவர் பாலகுமாரனின் சத்சங்கத்தின் அங்கத்தினர். அவரது எண்ண ஓட்டத்திலிருக்கும் கதைகளையும் புதினங்களையும் அவர் வாயாலேயே கேட்கும் பாக்கியம் பெற்ற புண்ணியவதி. இப்படி சகலசம்பத்துக்களையும் பெற்றதினால் அவர் பெயர் சம்பத்லக்ஷ்மி பாலாஜி!”

“மத்தியானம் சாப்பாடெல்லாம் பலமாக இருந்தது போலருக்கே..”

“செவிக்கு தாராளமாக உணவளித்தபின் வயிற்றுக்கும் வஞ்சனையில்லாமல் ஈந்தார். ஆர்வியெஸ்ஸுக்கு வெண்டைக்கா பிடிக்கும். இன்னும் கொஞ்சம் போடு... என்று உபசரித்ததும் காதில் விழுந்திருக்குமே..”

“ம்.. சாப்பாடு என்று சொன்னதும்.. சட்டென்று ஒன்று ஞாபகம் வருகிறது.. அவர் சொன்னாரே... அது பளிச்சுன்னு பிடிச்சது...” என்றார் மிதமிஞ்சிய பீடிகையாய். க்ரீடத்தை கழற்றி பக்கத்தில் வைத்துவிட்டு ஆசுவாசப்படுத்திக்கொண்டார்.

“என்னதது?” என்று புருவம் உயர்த்தினேன்.

“உள்ளங்கையகல வடை.. எட்டணாவுக்கு ரெண்டு. அல்வா அட்டகாசமா இருந்தது. வாயில போட்டதும் லொடக்குன்னு வயத்துக்குள்ளே போய்டுத்து.. அடடா... அல்வாவை வேஸ்ட் பண்ணிட்டோமே..ன்னு தோணித்து..ன்னு யாரோ சொன்னதாச் சொன்னாரே.. அதுல அல்வா வயத்துக்குள்ள போனதுக்கப்புறம் வேஸ்ட் பண்ணிட்டேனே.ன்னு சொன்ன ஆள் யாருப்பா.. அவராண்டைக் கேட்டுச் சொல்லு... வாயையும் வயிற்றையும் சேர்த்து வகுந்துடறேன்...”

“எப்போதும் உங்கள் குலத்தைப் பற்றிய நினைப்புதான். முப்போதும் சோழர்களின் ஸ்மரணையாகவே இருக்கார். சோழம்...சோழம்.. என்று வாயாரச் சொல்லிக்கொண்டு நீங்கள் கட்டிய கோவில்கள் என்று பார்த்துக்கொண்டு இந்தக் காலத்தில் உங்கள் நூற்றாண்டில் வாழ்ந்துகொண்டிருக்கிறார். நீங்களே நேரடியாகக் கேட்டுக்கலாம். கண் முன்னே காட்சி போல அழகாகச் சொல்வார்... கடைசி வரைக்கும் நீர் அங்கேதான் சுற்றிக்கொண்டிருந்தீரோ?”

“ஆமாம். எல்லோருக்கும் அவரது நூல் இரண்டைப் பரிசளித்து கையெழுத்திட்டுக் கொடுத்தாரே... அதையும்தான் பார்த்துக்கொண்டிருந்தேன்...”

”வீ ஆர் ஹானர்டு...”

“என்னப்பா... என்ன சொல்ற...” என்று பக்கத்திலிருந்த சின்னவள் மானஸா கண்ணுக்கு முன்னால் சொடுக்கினாள்.

அலையலையாய்க் கலைய மீண்டு வந்தேன்

யாவர்க்குமாம் ஒரு காத்தாடி

ஆனந்த் ராகவ்வின் கீபோர்ட்டில் உருவான யாவர்க்குமாம் ஒரு காதல் இந்த சனிக்கிழமை மாலையை இனிமையாக்கியது. முதல் மணிக்கு நாரத கான சபாவில் இருந்தேன். இரா.முருகன் சார் அருகில் ஆசனம் கிடைத்தது. உள்ளே நுழைந்த பாரதி மணி சாரை நலம் விசாரித்து என் ரோவிலேயே அமரப் பணித்தேன். கொட்டகையை இருட்டாக்கி திரைதூக்கும் போது பிவிஆர் சார் வந்தார். ட்ராமா துவங்குவற்கு கால் மணி முன்பு பாலாஜி அருணை என்னுடன் இணைத்துக்கொண்டேன். சங்கத்து ஆட்கள் வீகேயெஸ், வல்லபா, ராதிகா பார்த்தசாரதி, ஈஷா மாலா போன்றோர் தெம்புக்காக உடன் இருந்தார்கள்.

காதல் கதை. யாரோடு யாருக்கு என்று நாளைக்கும் நடக்கும் நாடகத்தில் சென்று பார்த்துவிடுங்கள். ரிடையரான அப்பா வேஷத்தில் கிரீஷ் கச்சிதமாக செய்திருக்கிறார். கிரீஷின் நண்பராக ஒரே வீட்டில் குடியிருக்கும் காத்தாடி ராமமூர்த்தி. லவ் மேடையை லைவ் மேடையாக வைத்திருந்தார். அந்த சோஃபாவிற்கு பின்னால் இருக்கும் ஷெல்ஃபில் வாட் 69 இல்லையே என்று பக்கத்தில் இரா.முருகன் சாரிடம் கேட்டேன். அதானே என்றார். கொஞ்சம் தொண தொண என்று பேசிக்கொண்டே பார்த்தேன். இனிமேல் பத்து ரோ தள்ளி உட்காருவார் என்று நினைக்கிறேன்.

தன்னிலை விளக்கமாக வசனம் சொல்லவேண்டிய கட்டாயம் சில பாத்திரங்களுக்கு இருந்ததால் ஒரு சில காட்சிகள் நீ....ளமாக இருந்தது. அப்படி நீளமான காட்சிகளை நயமாக மாற்றினார் காத்தாடி. சுலோச்சனாவாக நடித்தவர் வெகு இயல்பாக மேடையில் தோன்றினார். பின்னணி இசை சில இடங்களில் பேசிற்று. குறிப்பாக காத்தாடி டைவோர்ஸ் ஸ்பெஷலிஸ்ட்டிடம் டிட்பிட்ஸ் கேட்கும்போது கொடுத்த இசை ஐடியாவைப் பேசியது. ரோமியோ டாக்டர் பூனை போல நடந்து கண்ணதாசன், ஷேக்ஸ்பியர், வாலி என்று அனைவரிடமிருந்து வார்த்தைகளை தேத்திப் பேசுவதைக் காத்தாடி கிண்டலடிப்பது நடைமுறையில் இப்படி பிழைப்பவர்களை வம்புக்கிழுத்தது.

இடைவேளை கொஞ்சம் தூரத்தில் இருந்தது. க்ரீஷ் சுலோச்சனா இருவரும் சிங்கம் புலியாக காதல் டயலாக் பேசுவது ஆனந்த் ராகவ்வின் வசன ஜாலம். நடுநடுவே வரவு செலவு வசனங்கள் அவரது அனுபவமாக இருக்கலாம். கிரீஷ் சுலோச்சனாவிற்கு ரோஸ் கொடுப்பதோடு ட்ராமா முடிந்து இரண்டாவது க்ளைமாக்ஸாக காத்தாடிக்கு முனியம்மா ரோஸ் கொடுப்பதாக ஒன்பது மணி வரை நாடகம் நீடித்தது. காத்தாடியில் ஆரம்பித்த ட்ராமா காத்தாடியிடமே முடிந்தது. காத்தாடி சார்! அங்கமெல்லாம் அசைந்து நடித்து அவையோரை பிரமிக்க வைத்ததற்கு உங்களுக்கு ஒரு ராயல் சல்யூட்.

யாவர்க்குமாம் ஒரு நாடகம்
யாவர்க்குமாம் ஒரு பொழுதுபோக்கு
யாவர்க்குமாம் ஒரு இன்பம்
யாவர்க்குமாம் ஒரு காத்தாடி

கறுப்பு வெள்ளை வர்ணங்கள்

சோனியைச் சுற்றி எறும்புகள். வசந்த் டிவியில் தேனருவி ஒடிக்கொண்டிருந்தது. பிறை நெற்றியின் பாதி ஏரியாவைக் குங்குமப் பொட்டுக்கு எழுதி வைத்துவிட்டு படுக்கையில் உருண்டு பாடிக்கொண்டிருந்தார் விஜயகுமாரி. முழு முகத்தை காமிரா அபகரிக்க திரை முழுக்க விஜயகுமாரியின் உருண்டை முகம் வியாபித்திருந்தது. அஞ்சனம் எழுதியக் கண்களை கோலியாக இங்குமங்கும் உருட்டிச் சாய உதடுகளைப் பழித்துச் சுழித்து காட்சிக்கு உயிரூட்ட பிரயத்தனப்பட்டுக்கொண்டிருந்தார். இப்போதெல்லாம் முகத்துக்குப் பதில் க்ளோஸ் அப் ஷாட்டில் இடை நடிக்கிறது.

ஊரடங்கிய வேளையில் கறுப்பு-வெள்ளைப் பார்ப்பது கலர்க்கலர் நினைவுகளை மீட்டுத் தருகிறது. சாலிடேர் (அ) பிபில் இருக்கும் வீட்டைத் தெருவே முற்றுகையிட்டு ஒளியும்-ஒலியும் பார்க்கும். கண்ணதாசனின் தத்துவப் பாடல்களில் கல் மனசையெல்லாம் கரைய வைத்த பின்னர் ஒரு காதல் கலர்ப்பாட்டு போனால் போகிறது என்று போடுவார்கள். பூஸ்டர் சரியில்லையென்றால் பூச்சிபூச்சியாய்த் தெரியும். இப்போது சேனலைத் திருப்பத் திருப்ப ”ஒங்க’லு’க்காக பாட்டு வந்துகிட்டேயிருக்கு...பார்த்து எஞ்சாய் பண்ணுங்க...” என்று திகட்டுமளவிற்கு வண்ண வண்ணப் பாடல்கள்.

ஆனாலும் வர்ணஜாலங்களுக்கு நடுவில் கறுப்பு-வெள்ளை அலாதி சுகம்தான்.

சொத்தைப் பல்

இராவேளை. நடுநிசிக்கு இன்னும் சில நாழிகைகள் இருக்கிறது. வானத்தில் பூர்ண சந்திரன் ஜொலிக்கிறான். அவனைச் சுற்றி வெள்ளி அரைஞான்கயிறு போல கோட்டை கட்டியிருக்கிறது. தொடுவானத்தில் சில நட்சத்திரங்கள் கண் சிமிட்டுகின்றன. கண்ணுக்கெட்டிய தூரம் வரை வயற்காடு. அதற்கு நடுவில் நிலா வெளிச்சத்தில் குளிக்கும் அந்த பழங்காலத்துக் கற்கோயில். நான்கு காத தூரம் சென்று திரும்பிப் பார்த்தால் கூட கம்பீர நிழலாய்த் தெரிகிறது. கோயில் மதிலில் இருக்கும் ரிஷபச் சுதைகள் அதை ஒரு சிவன் கோயில் என்கிறது.

அந்தக் கோயிலுக்குப் பக்கத்தில் ஒரு சின்னக் குட்டை. மேலண்டை ஓரத்தில் பூத்திருப்பது அல்லி போல் தெரிகிறது. அந்தக் குட்டைக்குள் இறங்கும் சின்ன ஒத்தையடிப் பாதை. ஏனைய இடங்களில் நட்டு வைத்த அம்புகளாய் கோரை மண்டிக்கிடக்கிறது. இரண்டு மின்மினிப் பூச்சிகள் கோரைக்குள் புகுந்து புகுந்து திருடன் போலீஸ் விளையாடுகிறது. சுவர்க்கோழிகளின் ஓயாத க்ரீஈஈஈஈஈச் சப்தம். ஆளரவமே இல்லை.

திடீரென்று அரையில் காவி வேஷ்டியுடன் ஒரு சன்னியாசி அங்கே வருகிறார். கையில் சின்ன தடி. மார்மீது புசுபுசுவென்ற வெண்ரோமக் காடு. வெள்ளைத் தாடியில் மஹா தேஜ்வியாக இருக்கிறார். நெற்றி முழுக்க விபூதி. கைத்தடியை வீசியெறிந்துவிட்டு திடுதிப்பென்று அந்தக் குட்டையில் இறங்குகிறார். குட்டைக்கு நடுவில் செல்லச் செல்ல தொடை இடுப்பு நெஞ்சு கழுத்து என்று படிப்படியாகக் குட்டைக்குள் மறைகிறது. க்ளக்.க்ளக்.க்ளக்.. சப்தம். கரையோரத்தில் ஒரு சர்ப்பம் படமெடுத்து வேடிக்கைப் பார்க்கிறது.

ஜல சத்தத்தைத் கேட்டு கோயிலைத் திறந்துகொண்டு பிச்சைக்காரன் ஒருவன் வெளியே வருகிறான். கையில் வெண் சங்கு வைத்திருக்கிறான். கண் மட்டும் வெளியே தெரியுமளவிற்கு சன்னியாசி மூழ்கி விட்டார். “ஊ...” என்று அந்தப் பிரதேசமே நடுங்கும்படி அந்தப் பிச்சைக்காரன் சங்கு ஊதுகிறான். சன்னியாசி எரிக்கும் கண்களோடு கரையிலிருக்கும் அவனைப் பார்க்கிறார். அவன் சொத்தைப் பல் தெரிய சிரிக்கிறான்.

கோயிலுக்குள்ளிருந்து கோடி சூர்யப் பிரகாசமாக ஒளி வருகிறது. இருவரும் அங்கே பார்க்கிறார்கள். ஜடாமுடிநிழலொன்று நீண்டு கோயில் வாசலைத் தாண்டி வயலுக்குள் வந்து விழுகிறது. நிழல் பெருத்துக் கொண்டே போகிறது. இங்கே சன்னியாசி இறங்கிய சுவடே தெரியாமல் குட்டை தூங்குகிறது. குட்டைக் கரையில் நின்ற பிச்சைக்காரன் நிழலுக்குள்ளே தலை தெறிக்க ஓடுகிறான்.

ஒரு பெருத்த காற்று வீசி கோயிலருகே இருக்கும் வேப்ப மரத்தை உலுக்குகிறது. வயலில் நெற்பயிரெல்லாம் பிடிங்கிக்கொண்டு பறக்குமளவுக்கு பேய்க்காற்று. நிலவின் ஒளியை மங்கச் செய்யும் பிரகாசமாய் கோயிலுக்குள்ளிருந்து வெளிச்சம். ஊழிக்காலமோ என்றென்னும் வகையில் ஆளைத் தூக்கும் காற்று. குட்டையில் கடலலை. சன்னியாசி மறைந்த இடத்திலிருந்து குபுகுபுவென்று தண்ணீர் பொங்குகிறது.

இப்போது குட்டைத் தண்ணீர் கங்கை போல பிரவாகமாக எழுந்து வருகிறது. தூரத்தில் தூக்கத்தில் கிராமத்து வீடுகள். கோயிலுக்குள் புகுந்து மண்டபத்தை நிறைக்கிறது. பலிபீடம் தாண்டி கொடிமரம் தாண்டி நந்தியை மூழ்கடிக்கிறது. கர்ப்பகிரஹத்துக்குள் நுழையவில்லை. கோயிலைச் சுற்றி முழங்கால் அளவிற்கு நீர் நிற்கிறது. நிழலுக்குள் மறைந்த பிச்சைக்காரன் கோபுரத்தின் உச்சியில் தோன்றுகிறான். மீண்டும் காது கிழிய சங்கு ஊதுகிறான்.

பட்டென்று காற்று நிற்கிறது. குட்டைத் தண்ணீர் அடங்குகிறது. கோயிலுக்குள் புகுந்த நீர் வரண்டு போகிறது. இதெல்லாம் கண நேரத்தில் மாயமாய் நிகழ்ந்த மாற்றம். கோயில் கதவு மூடிக்கொள்கிறது. சந்திரனின் பிம்பம் குட்டைக்குள் மிதக்கிறது. மின்மினிப் பூச்சிகள். இதமான சூழ்நிலை. சன்னியாசி மேனியில் சொட்டு நீரில்லாமல் கரையில் நிற்கிறார். கோயில் வாசலில் தலைக்கு மேலே கைகூப்பித் தொழுகிறார். கிராமத்தை நோக்கி நடக்கிறார்.

பொலபொலவென்று பொழுது விடிகிறது. சைக்கிளில் குருக்கள் வருகிறார். ஹாண்டில் பாரில் இடதுபுறம் நைவேத்திய தூக்கு. வலதுபுறம் வயர்க் கூடையில் திரி, ஆரத்தித் தட்டு மணியுடன் கற்பூர பாக்கெட். ஊர் மக்கள் கொட்டு மேளத்துடன் சன்னியாசியை அழைத்துக்கொண்டு கோயிலுக்கு வருகிறார்கள். மேனியெங்கும் விபூதியைக் குழைத்துப் பூசி சிவப்பழமாக வருகிறார். பார்வையில் பூரிப்பு.

நொடியில் அவருக்கு முகம் சுருங்குகிறது. கோயில் வாசலில் முன்னால் துண்டு பரப்பி எங்கோ பார்த்தபடி நேற்றிரவு பார்த்த பிச்சைக்காரன். துண்டு பறக்காமலிருக்க ஓரத்தில் வெண் சங்கு! சன்னியாசி ஸ்தம்பித்துப் போகிறார். முகத்தைத் தூக்கி சன்னியாசியைப் பார்த்த பிச்சைக்காரன் எக்காளமாகச் சிரிக்கிறான். சொத்தைப் பல் தெரிகிறது.

தோளில் துண்டு போர்த்திய ஊர் ப்ரிசிடெண்ட் சிரிக்கிறார். சொத்தைப் பல் தெரிகிறது. ட்ராயருக்கு மேல் அரைஞான் கயிறு கட்டிய பையன் சிரிக்கிறான். சொத்தைப் பல். மாலை கொண்டு வந்த பூக்காரர் சிரிக்கிறார். சொத்தைப் பல். நாட்டாமை பொண்டாட்டி சிரிக்கிறாள். சொத்தைப் பல். குருக்கள் அம்மா நார்மடிப் பாட்டி சிரிக்கிறாள். சொத்தைப் பல். குருக்கள் சிரிக்கிறார். சொத்தைப் பல். முகமெல்லாம் வியர்த்துப் போய் தூணில் கட்டியிருக்கும் கண்ணாடியில் சன்னியாசி முகம் பார்த்து ஈ என்கிறார். சொத்தைப் பல்.

அவ்ளோதான்!

மன்னார்குடி டேஸ் -- நாகராஜனின் கடைசி தினம்

ருசித்துப் புசித்தத் தயிர்சாதப் புறங்கையை சுவாரஸ்யமாய் நாவால் துடைத்துக்கொண்டே கை அலம்பலாம் என்று கொல்லைப் பக்கம் வருகிறீர்கள். கொல்லை வாசல்படிக்கு நேரே பொட்டிட்ட துளசி மாடம். அதனருகில் பந்தல் புடலை நீளத்தில் ஒரு பாம்பு படமெடுத்து பார்த்துக் கொண்டிருக்கிறது. பழி வாங்கும் படங்களிலெல்லாம் வருமே...அது மாதிரி தலையைத் தூக்கிக் கொத்தும் பார்வையுடன். காலை நேர வெய்யிலில் அதன் மேனி கண்ணாடி மாதிரி பளபளத்துக் கண் கூசச் செய்கிறது. அதனெதிரே பாட்டி பவ்யமாக நமஸ்காரம் பண்ணிக்கொண்டிருக்கிறாள். உங்களுக்குத் திக்குன்னு தூக்கிவாரிப் போடாது? எனக்கு அப்படிதான் இருந்தது.

நாக்கில் சலைவா சொட்டில்லாமல் நக்கியதில் சாப்பாட்டுக் கையை அரையிலே துடைத்துக்கொள்ளுமளவிற்கு ஏற்கனவே சுத்தமாகிருந்தது. பிரபல ரஜினி படங்களில் வருவது போல பப்பகாரத்தில் “ப..ப..ப்ப....ப்ப...” என்று வார்த்தையில் நொண்டியடித்துக் கொண்டிருந்தேன். கிணற்றடிக்குப் போவதற்கு சித்தி வாணாய் அருக்கஞ்சட்டி என்று பத்துப்பாத்திரங்களை எடுத்துக்கொண்டு பின்னாலையே வந்தாள். “திடுமுனு உனக்கு பேச்சுப் போய்டுத்தா? பாட்டின்னு சொல்ல நாக்கு எழும்பலையாடா?” என்று நக்கலடித்தவள் நேரே பார்த்ததும் திறந்த வாய் திறந்தபடிக்கு அதிர்ச்சியாகிக் கல்லாய்ச் சமைந்தாள். ”கல்லாய்ச் சமைந்தாள்” அறுபது எழுபதுகள் மாதிரி இருக்கோ? எஃப்பியின் கவர் ஃபோட்டோவாக நின்றாள்.

ஆசுவாசப்படுத்திக்கொள்வதற்கு இரண்டு நொடி பிடித்தது. “எ...ன்...ன....டா......து...?” என்று திக்கித்திக்கி கீறல் விழுந்த ஸிடி போலப் பேசினாள். இந்தப் பக்கம் வந்தால் வாசலுக்கு ஓடுவதற்காக கண் எடுக்காமல் பார்த்துக்கொண்டிருந்தேன்.

பாதி நமஸ்காரத்தில் தலையைத் தூக்கி “போய் அந்த அகல் விளக்கை எடுத்துண்டு வாடி....” என்று சாரதா பாட்டி சத்தமான ரகஸ்ய குரலில் கட்டளையிட்டாள். பாம்பு சமாதானமாக நின்று கொண்டிருந்தது. பாட்டி அதன் முன் விழுந்து விழுந்து பஞ்சாங்க நமஸ்காரம் செய்துகொண்டிருந்தாள். வெண்கலப் பானையிலிருந்த கடலைப் பருப்பு பாயஸத்தை ருசி பார்த்தது போல நாக்கிரண்டையும் வெளியே உருட்டி விளையாடியது. படையே நடுங்குமாம்... பையன் நான் நடுங்க மாட்டேனா?

“பா.ட்.டி..,. பா.ம்.பு...பா...ட்..டி... பா.. ம்.. பு... ” என்று எனக்கு ஜுர வேகத்தில் வார்த்தைகள் வழுக்கிக்கொண்டு வந்து விழுந்தன. முணுமுணுத்தேன். சாப்பிட்டது ஜீரணம் ஆகிவிட்டது. பயத்தில் கொல்லைப்பக்கம் வருவது போலிருந்தது. இராவேளைகளில் பக்கத்தாத்து கொல்லையிலிருந்து பறித்த பூவரசு இலையில் பீப்பீ செய்து ஊதினால் கூட “விளக்கு வெச்சப்புறம் ஊதாதேடா... ‘அது’ வந்துடும்...புஸ்ஸுன்னு... ” என்று கையைச் சர்ப்பமாக்கி மிரட்டுவாள். மலங்க மலங்க விழித்துவிட்டு திரும்பவும் காருக்குருச்சி அருணாசலம் மாதிரி வாயில் வைத்து “பீ..பீ....” என்றதும் “ஸர்ப்பம் வரும்டா... இவனொருத்தன் இங்கிதமா சொன்னா புரிஞ்சுக்காமப் படுத்துவன்..” என்று பிடிங்கிக் கசக்கித் தூரத் தூக்கிப் போட்டுவிடுவாள். “ஆடு பாம்பே... விளையாடு பாம்பே...” என்ற பாடலுக்கு ஸ்வர்ணமுகி நடனமாடி பிரபலப்படுத்தியிருந்தார். ஊரிலுள்ள நண்டு சுண்டு நார்த்தாங்காயெல்லாம் தலைக்கு மேலே கையிரண்டையும் வைத்துக்கொண்டு வெறும் தரையில் நீச்சலடித்து நாகா டான்ஸ் ஆடிக்கொண்டிருந்த சமயம். அதற்கு ”ட்ரெஸ்ஸெல்லாம் பாழ்...” என்று அம்மாக்கள் திட்டுவர்.

பாட்டு நல்லாயிருக்கே என்று “நாதர் முடி மேலிருக்கும்..” என்று மெல்ல ஆரம்பித்தால் கூட “படவாப்பயலே... பாடாதேடா... பாம்புச் செவிக்கு எட்டிடும்...” என்று கப்பென்று வாயைப் பொத்தி அமர்க்களம் செய்வாள். நாகபஞ்சமி போன்ற விசேஷ நாட்களில் பால் கொடுத்துக் கொண்டாடிய அவளுக்கு இப்படி ஒரு நிலையா என்று பதறியது என் உள்ளம். அந்த பாம்பிற்கு அன்றைக்கு வேறு வேலையில்லை போலிருக்கிறது. சூப்பர்வைஸர் மாதிரி மிடுக்காக ரெண்டு பக்கமும் பார்த்துட்டு அப்படியே நின்ற வாக்கில் உறங்கிக்கொண்டிருந்தது. படம் எடுத்தபடியே!

முட்டி போட்டுக் குனிந்து கைகளை நிலத்தில் ஊன்றி முதுகில் குழந்தைகளை ஏற்றி “ஆனை...ஆனை.. அரசரானை.. அரசரும் சொக்கரும் ஏறும் ஆனை...” விளையாடும் போஸிலிருந்த பாட்டி நான் ”பா....ட்டி.. பாம்.......பு....” என்று பாண்டியாடியதைக் கேட்டு “நேக்கு தெரியும்டா... நீலா அகல்ல நல்லெண்ணெய் ஊத்தி பஞ்சு திரி போட்டுக் கொண்டாடீ.... சீக்கிரமா..” என்றாள். பாம்பு வேடிக்கைப் பார்த்தது.

அகல் விளக்கு வருவதற்குள் துரிதகதியில் இந்த லொகேஷனைப் பார்த்துவிடலாம். நிலை வாசலுக்கு நேரே சமுத்திரம் போல தெப்பக்குளம், கொல்லைப்புறம் துரு பிடித்தத் தகர கேட்டைத் திறந்தால் (திறக்கும் போது ”ட்ர்ர்ர்ர்...டொர்ர்...” என்ற க்ரீச்சொலி எட்டூருக்குக் கேட்கும். குட்டிகளுடன் மேயும் பன்றிகள் ”புர்..புர்...”ரென்று தெறித்து ஓடும்) பாமணியாறு, நடுவில் எங்கள் அகம். கொல்லையில் ஆறேழு தென்னைமரத்து நிழலில் ஜகடை போட்ட கிணறு. வாளியை உள்ளே விட்டு ஒண்ணு... ரெண்டு... என்று பத்து எண்ணி இழுப்பதற்குள் வாளி தண்ணீரோடு வெளியே வந்துவிடும்.

துளசிமாடத்திலிருந்து ஒரு ஒத்தையடிப் பாதை கிணற்றுக்கு காம்ப்பஸ் பிடித்து வரைந்த ஆர்க் போல சட்டென்று ஓடும். இப்போது பாம்பு படமெடுத்து ஆடிக்கொண்டிருக்கிறதே அதற்கு பின்னால் ஒரு பெருநெல்லி மரம். காய்க்கும் காலத்தில் மரத்தடியில் நடந்து போனால் மெல்லிய தென்றலுக்கு ரெண்டு பழுத்த காய் தலையில் விழும். ”நெல்லிக்கா தின்னுட்டு சொம்பு சொம்பா ஜலம் குடிக்காதீங்கோடா.. தொண்டை கட்டிக்கும்..”ன்னு பாட்டி இரைவாள்.

நெல்லிமரத்திற்கு இடதுபுறம் வாழையடி வாழை என்கிற கூற்றை மெய்ப்பிக்கும் குலை தள்ளியும் தள்ளாமல் கன்னியாகவும் நிற்கும் வாழைமரங்கள். இன்னும் கொஞ்ச தூரத்தில் செம்பருத்திச் செடி. மரம் மாதிரி கிளைபரப்பி செழித்து வளர்ந்திருக்கும். கிளைக்குப் பத்து பூ. சிகப்பும் பச்சையுமா செடியிலேயே மாலை மாதிரி.

ஏப்ரல் மேயில் கூட கிணற்றுத் தண்ணீர் தொட்டா ஐஸ் மாதிரி ஜிலோர்னு இருக்கும். தலைக்கு ஊத்திண்டா குளிரும். அந்தக் கிணற்றுக்கு பக்கவாட்டில் ராஜேஸ்வரி டீச்சர் அக்காவாத்தில் புற்றுக் குன்று இருக்கும். எறும்புகளின் உழைப்பில் பாம்புக் குடும்பம் குழந்தை குட்டிகளுடன் குடித்தனம் நடத்திக்கொண்டிருந்தது.

கட்.

இங்கே பாம்பு ஏதோ புன்னாகவராளி கேட்டா மாதிரி அரை மயக்கத்தில் நின்று கொண்டிருந்தது. கடன்காரன் வசூலுக்கு நிற்கிறா மாதிரி இடத்தை விட்டு அசையக் காணோம்.

நேத்திக்கு சாயந்திரம் ”டீச்சர் நேத்திக்கு கொல்லையிலே இவ்ளோ பெரிய பாம்பு பார்த்தேன்” என்று பக்கத்து வீட்டு சீனு அம்மா சித்தியிடம் காண்பித்துக்கொண்டிருந்து ஞாபகம் வந்தது. கையிரண்டையும் ஸ்கூல் ட்ரில் மாஸ்டர் ஒன் டூ த்ரி சொல்லும் போது ஆகாசத்தையும் பக்கத்து பசங்க மேலெ இடிக்கிற மாதிரியும் நீட்டுவோமே.. அந்த மாதிரி டூ கமாண்டுக்கு கையை விரித்துக் காட்டினார்கள். பாற்கடல் கடைய கயிறான வாசுகியை நேரே பார்த்தா மாதிரியான ஒரு பிரமிப்பு அவர் கண்ணில் மின்னியது.

அகல் வந்தது.

சடாரென்று பாம்பு குனிந்தால் கொத்தாத தூரத்தில் அந்த விளக்கை நகர்த்தி நமஸ்கரித்தாள் பாட்டி. தலையில் போடுமா போடாதா என்று தூரத்திலிருந்து நடுங்கிக்கொண்டிருந்தேன். “தம்பி... சித்த இப்டி வாடா.. நாகராஜனுக்கு சமர்த்தா ஒரு நமஸ்காரம் பண்ணு பாப்போம்...” என்று பாட்டி கூப்பிட்டபோது ட்ராயர் அவிழ குடுகுடுன்னு ஓடிப்போய் வாசல் கதவைப் பிடித்துத் தொங்கிக்கொண்டிருந்தேன். அப்புறம் பால்பழமெல்லாம் (சுத்த ஆசாரமான வூடாதலால் முட்டை கிடைக்காது என்று நாகராஜனுக்குத் தெரிந்திருக்க வாய்ப்பில்லை.) கொடுத்து மாப்பிள்ளை உபசாரத்தோடு அனுப்பி வைத்தாள் என்று கேள்விப்பட்டேன்.

இந்தக் கூத்து காலையில் நடந்தது. சாட்டிலைட் டீவி என்னும் அசுரன் அப்போது ஜனிக்கவில்லையாதலால் சாயந்திர வேளைகளில் வாசல்படியில் உட்கார்ந்து கொண்டு பொது விஷயங்களை அலசுவர். பெண்டிர்தான். வம்பென்று சொல்லக்கூடாது. “ராஜேஸ்வேரி ஆத்துல ஒரு வாழும் பாம்பு இருக்குடி சகுந்தலா. நா கொல்லைப்பக்கம் போகும் போதெல்லாம் சிறகுமேலெல்லாம் ஏறி “சரக்..சர்க்..”ன்னு உலாத்திண்டிருக்கும். சில நேரம் சாரையும் சர்ப்பமுமா கட்டிப் பொரண்டு சண்டை வேறே... ” இந்த இடத்தில் சகுந்தலா நிறுத்தி “பாட்டி சாரையும் சர்ப்பமும் இந்த மாதிரி பின்னிப் பினைஞ்சுதுன்னா வைரம் கக்குமாமே? அப்டியா? என்று பேச்சுக்கு சுவாரஸ்யத்தை இணைத்தார்.

“அது கெடக்குடி... இன்னிக்குக் கார்த்தாலே சடசடன்னு துளசிமாடத்துக்கிட்டே வந்து எட்டிப் பார்த்துது. பெரிய திருவிழால வெள்ளி சேஷ வாகனத்துல ராஜகோபாலன் சுத்தி வருவாரே... அந்த வெள்ளி சேஷ வாகனம் மாதிரி பளீர்னு ஜொலிச்சுதுடி. நேக்கு கையும் ஓடலை.. காலும் ஓடலை.... போன வாரமே கிணத்தடியில சட்டை உரிச்சுக் கிடந்துது. தாம்புக்கயிறு நீளத்துக்கு... வாழும் பாம்போன்னோ.. அடிக்கடி கண்ல படறது... நானும் நாகராஜா... கண்ல படாம மண்ல மறைஞ்சு போன்னு வேண்டிண்டு.....” ஐந்தாறு பேர் மெய்மறந்து காலட்சேபம் கேட்டுக்கொண்டிருந்தார்கள்.

ஏழு மணி வாக்கில் “ஏதோ வழவழன்னு கை மேலே ஏறித்து...” என்று உலுக்கிக்கொண்டு எழுந்திருந்தாள் பாட்டி. அப்போது சாணி தெளித்த வாசலில் சைக்கிளோடு நின்றிருந்தேன். ”அதோ..அதோ.. போவுது....” என்று மாநாட்டில் கலந்துகொண்ட அம்மணிகள் கூச்சலிட்டார்கள். காலையில் ப்ரேக் ஃபாஸ்ட் கொடுத்த கைக்கு உம்மா கொடுத்துவிட்டு நைட் டின்னருக்கு வந்திருந்தார் நாகராஜன். வாசல் படிக்கு உட்புறம் முதற்கட்டில் மாடிப்படிக்கு கீழே 2x2 வில் ஒரு சின்ன மித்தம் உண்டு. கொல்லைக் கதவு சார்த்திவிட்டால் மிச்சம் மீதியை பைசல் பண்ணிவிட்டு பாத்திரம் அலம்புவதற்காக இருக்கும் தொட்டி மித்தம் அது. வீட்டிற்கு வந்த கெஸ்ட் போல அதில் வாலைச் சுருட்டிக்கொண்டு படுத்துவிட்டது.

அவசரநிலை பிரகடனப்படுத்தப்பட்டு வாசல் மீட்டிங் கலைக்கப்பட்டது. அவரவர் தத்தம் வீடுகளுக்கு ஓடினார்கள். தெரு பரபரப்பானது. பழுதெல்லாம் பாம்பாக தென்பட்டது. சைக்கிளை எடுத்துக்கொண்டு வடக்குத் தெருவிற்கு போய்விடலாம் என்று பெடலில் கால் வைத்தேன். “தம்பீ!” என்ற பாட்டியின் அபயக்குரல் என்னைத் தடுத்தது. “எஸ்ஸென்னார் ஆத்துல இளங்கோவைச் சித்தக் கூப்பிடுடா... அப்டியே கையாலேயேப் பிடிச்சுப்புடுவன்...” என்று தைரியம் கொடுத்தாள். இரண்டு வீடு தள்ளியிருக்கும் ஆர்ட்டிஸ்ட் எஸ்ஸென்னார் வீட்டில் இரு புதல்வர்கள். பெரியவர் தமிழரசன். இளவல் இளங்கோ. கலை என்ற அக்காவும் உண்டு.

வாசலோடு கொல்லை திறந்துகிடந்தது. “இளங்கோ அண்ணே.....” என்று கத்தினேன். மனைவி மக்கட்செல்வம் இருந்தாலும் எஸ்ஸென்னார் பாட்டிலோடுதான் குடும்பம் நடத்திக்கொண்டிருந்தார். கோப்பையில் குடியிருக்கும் ஆர்ட்டிஸ்ட். சரக்கு உள்ளே போனால் கை ஆடாமல் வரைவார். லாஹிரி வஸ்து போடவில்லையென்றால் கண்ணுக்கு காதும் காதுக்கு மூக்கும் வரைவார். வரலக்ஷ்மி நோன்பிற்கு நடுக்கூடத்தில் கலசத்துடன் அவர் வரைந்த லக்ஷ்மி படத்துக் நமஸ்கரிக்காமல் ஜாக்கெட் பிட் வாங்கிக்கொண்டு சென்ற சுமங்கலிகள் இல்லை. அவர் கூடத்தில் உட்கார்ந்து வரைந்த அன்னிக்கு “ஹப்பா...” என்று மூக்கைக் கெட்டியாகப் பிடித்துக்கொண்டாள் பாட்டி. எஸ்ஸென்னார் வாசலில் ஒரு மோன நிலையில் அமர்ந்திருந்தார். இன்னொருதரம் “இளங்கோ அண்ணே இருக்கா?”ன்னு கேட்டேன். அவர் சஞ்சாரித்துக்கொண்டிருந்த அந்த சந்தோஷ லோகத்திலிருந்து மீண்டு வரவேயில்லை. பாட்டி வாசலுக்கு வந்து மிரட்சியுடன் என்னைப் பார்த்துக்கொண்டே நிற்கிறாள்.

“பாட்டி! நிலைவாசல் கதவை மூடி வையுங்க. வூட்டுக்குள்ளே புகுந்திருச்சுன்னா அப்புறம் புடிக்கவும் முடியாது. அடிக்கவும் முடியாது” என்று பக்கத்துவீட்டு சீனு அம்மா பீதியைக் கிளப்பினார்கள்.

முண்டா பனியனும் அரைக்கு பூப்போட்ட கைலியுமாய் தமிழரசு அண்ணே எட்டிப்பார்த்தார்.

“என்னடா சின்னதம்பி?”

“அண்ணே! வீட்ல பாம்பு வந்திருச்சு. பாட்டி இளங்கோ அண்ணனை கூட்டுண்டு வரச்சொன்னாங்க...”

“பாம்பா... ஓடியா பார்ப்போம்....” என்று ஹவாய் செருப்பை மாட்டிக்கொண்டு என் முன்னால் போனார். இளங்கோவுக்கு மூத்தவர் தமிழரசன். ஆலைக்கரும்பு ஏற்றிக்கொண்டு வ் வீதிவழி செல்லும் ட்ராக்டர்களில் பின்பக்கமாய் ஓடிப்போய் ஏறி திருட்டுக் கரும்பு பறித்துத் தெருவிற்கு வாரிக் கொடுக்கும் ராபின்ஹுட்.

“டீச்சர்... கம்பு இருக்கா...” சித்தியைப் பார்த்துக் கேட்டார்..

துணி உலர்த்தும் கம்பை எடுத்துக்கொண்டு வந்த சித்தியை “அடிப்பாபி... பாம்பு அடிக்க துணி ஒணத்தற மடி கம்புதான் கிடைச்சுதா..” என்று அந்த நேரத்திலும் ஒரு பிடி பிடித்தாள் ஆச்சாரப் பாட்டி. வீட்டிற்கு ஓடிப் போய் ஒரு சவுக்குக் கட்டையை எடுத்துக்கொண்டு வந்தார். நேரம் ஓடிக்கொண்டிருந்தது.

மித்தத்திலிருந்து காம்பௌண்டிற்கு வெளியே செல்லும் பைப்பிற்குள் தஞ்சம் புகுந்தது பாம்பு. சவுக்குக் குச்சி தடிமன். மித்தத்தின் ஓட்டைக்குள் நுழையவில்லை. கொஞ்சம் கொஞ்சமாக கூட்டம் கூடியிருந்தது. பாலு சார், அக்கம்பக்கத்து வீட்டு ஆம்பிளைகள் பொம்மனாட்டிகள் என்று ஒரே கூட்டம்.

“புகை போட்டா வந்துருங்க...” வேடிக்கை பார்க்க வந்தவர்களில் ஒருவர் ஐடியா கொடுத்தார்.

“அந்த ஓட்டைக்குள்ள எப்படிங்க புகை போடறது?” தமிழரசண்ணன் லாஜிக் கேட்டார்.

புகை போடுவதைப் பற்றிய மந்தராலோசனைக் கூட்டம் அங்கேயே நடைபெற்றது. பாதியில் வந்து இளவல் இளங்கோ கலந்துகொண்டார். இதற்குள் மணி ஒன்பதைக் கடந்திருந்தது. தஞ்சையிலிருந்து வரும் கணேசா பஸ் கூட்டத்தைப் பார்த்துக் கொஞ்சம் மெதுவாக்கி “டீச்சர் வீட்ல என்ன?” என்று விசாரித்துவிட்டு சென்றது.

கடைசியில் இளங்கோ அண்ணன் கையில் ஒரு மண் பானையுடன் வந்தார். பேக்கரி அண்ணாச்சியிடம் மரச்சிராய் கேட்டு வாங்கி வந்து பானைக்குள் போட்டு நெருப்பு மூட்டி புகை வளர்த்தாயிற்று. “கோபு வாத்தியாரை அழைச்சிண்டு வந்தா அவர் தீயில்லாமல் கண்ணை எரிக்கிறா மாதிரி ஹோமம் வளர்ப்பார். நிமிஷத்துல இங்கே புகை போட்டுடுவார்” என்று கூட்டத்தில் ஜோக் வேறு.

பானையின் கழுத்தை அந்த ஓட்டைப் பக்கமாக இளங்கோ அண்ணன் கவுத்துப் பிடித்துக்கொண்டு வாசல் பக்கம் தமிழரசண்ணன் சவுக்குக்கட்டையோடு அலெர்ட்டாக நின்றார். புகை கசிந்துகொண்டிருந்தது. அஞ்சு நிமிஷம், பத்து நிமிஷம்.. ஊஹும். சாம்பிராணி புகை போட்டது போல பாம்புக்கு சுகமாய் இருந்திருக்கும். அல்லது சிரமபரிகாரமாய் தூங்கியிருக்கவேண்டும்.

“வெளியில போயிருச்சுன்னு நினைக்கிறேன்..” என்று பீதியைக் கிளப்பினார் ஒருவர். அக்கம்பக்கம் வீடுகளில் பாம்பு தேட உள்ளே போய்விட்டார்கள்.

“எப்படிங்க.. இவ்ளோ பேர் வெளியில நிக்கிறோம்.. நம்பளைத் தாண்டி....”

“கண்ல படாம மண்ல மறைஞ்சு போன்னு பாட்டி வேண்டிக்கிட்டாங்க... நம்ப கண்ல மண்ணைத் தூவிட்டு போயிருக்குமோ...”

“இல்லீங்க.. பாம்பு மூச்சு விட்டா அந்த இடத்துல ஓட்டை விழுமாம். எங்கிட்ட கிராமத்து ஆளு ஒருத்தர் சொன்னாரு... உங்க மித்தது பைப்ல ஓட்டையிருக்குமோ?” என்று இன்னொருத்தர்.

“ஓட்டையில்லாம மித்தத்து தண்ணி எப்படிங்க ட்ரையின் ஆகி வெளியில வரும்...”

“ச்சே..ச்சே... காம்பௌண்டு சுவத்துல புதைச்ச குழாய்க்குக் கீழே ஓட்டையிருந்தா.. பாம்பு மூச்சு விட்டு ஓட்டைப் போட்டுக்கிட்டு அப்படியே கீழே இறங்கி போயிருக்கும்...”

”கீழேன்னா.. எங்கே நாக லோகத்துக்கா?” இப்படி இன்னொருத்தர்.

அன்ன ஆகாரமில்லாமல் தெரு ஜனங்கள் காத்திருந்தார்கள். பத்து மணி அடித்தது. பத்து மணிக்கு ஃபேஸ் மாற்றுவதற்காக பத்திருபது செகண்ட்டுக்கு கரண்ட் நிப்பாட்டுவார்கள். பொசுக்கென்று கரெண்ட் கட் ஆகியது.

கூட்டம் சிறு சலசலப்பிற்கு பின் அமைதி காத்தது. காம்பௌண்டிற்கு வெளியே திடீரென்று ஆய்..ஊய்யென்று கூச்சல். தப்பித்தோம் பிழைத்தோமென்று பாம்பு நடுரோட்டில் சரசரவென்று ஊர்ந்து செல்ல ஆரம்பித்தது. தமிழரசண்ணன் கட்டையோடு துரத்தினார். கோபி வீட்டைத் தாண்டும்போது வால் பகுதியில் ஒரு போடு. துண்டானது. துண்டாகி விழுந்த வால் துடித்தது. முண்டத்தோடு பாம்பு இன்னும் விறுவிறுப்பாக போக ஆரம்பித்தது. ஓங்கி தலையில் நச்சென்று போட்டார். அப்புறம் பின்னால் முருங்கக் குச்சியோடு விரட்டிய சிலர் செத்த பாம்பை தொப்தொப்பென்று அடித்தார்கள். கடைசியாகப் போய் எட்டிப் பார்த்த நானும் ஒரு சுள்ளியைப் பொறுக்கி எடுத்துக்கொண்டு அடித்தேன்.

“அச்சச்சோ... தமிழரசு பாம்பை அடிச்சுக் கொன்னுட்டீயேடா? நாசாமாப் போச்சு... ” திடீரென்று பாட்டி புலம்பினாள். பாம்பு Vs தமிழரசன் பார்த்த பார்வையாளர்களுக்கு பேரதிர்ச்சி. பாம்பை அடித்துக் கொல்ல ஆளைக் கேட்டதே பாட்டிதான். இப்போ இப்படி அலறுகிறாளே என்று விந்தையாய்ப் பார்த்தார்கள்.

“என்னாச்சு பாட்டி?” என்றார் கொலை முடித்த கையோடு இருந்த தமிழரசு அண்ணன்.

“நான் இளங்கோவைத்தானே பாம்படிக்கச் சொன்னேன். நீ ஏன் அடிச்சே? உங்கம்மா இந்திராணி எங்கே?” என்று அவரின் அம்மாவைக் கூட்டத்தில் தேட ஆரம்பித்தாள்.

வேடிக்கைப் பார்த்தக் கூட்டத்திற்கு ஒன்றும் விளங்கவில்லை. இந்திராணியம்மாள் வந்தார்கள்.

“இந்திராணி... இன்னிக்கி வெள்ளிக்கிழமை. வீட்டுக்கு மூத்த பிள்ளை பாம்பை அடிக்கக்கூடாது. அதுவும் வாழும் பாம்பு. சர்ப்ப தோஷம் பிடிக்கும்பா. ஏம்ப்பா... அதை அப்படியே குளத்து மதிலோரமா தோண்டிப் புதையுங்கோ... இந்திராணி ஒரு அகல் விளக்கு நல்லெண்ணை ஊத்தி உங்காத்துலேர்ந்து எடுத்துண்டு வா... இளங்கோ...ரோட்டுல ஒரு பீஸில்லாமல் அந்தக் குழிக்குள்ளே போட்டு மூடுப்பா... தமிழு... நன்னா குழியை மூடிட்டியோன்னோ?... இந்தா இந்த விளக்கை ஏத்து.... அப்பனே நாகராஜா... எல்லோரையும் காப்பாத்துடாப்பா....ம்... போலாம்.... ”

அதற்கு பிறகு தெருக் கொல்லையில் வசிக்கும் வாழும் பாம்பிற்கெல்லாம் தமிழண்ணேதான் அஜாதசத்ரு. ஜனமேயஜன் சர்ப்பயாகம் பண்ணி எல்லாப் பாம்பையும் ஹோமத்தீயில விழவச்சு அழிச்சா மாதிரி தமிழ் சவுக்குக்கட்டை ஆயுதத்தால் பல்லியினத்தை ஒழித்துக்கட்ட ஆரம்பித்தார். வெள்ளிக்கிழமைகள் நீங்கலாக.

எஸ்ஸென்னார் அந்த வீட்டை விட்டு குடி மாறிய ஆறு மாசத்துக்கப்புறம் ஒரு நாள் “நேத்திக்கு கிணத்தடியில பாம்பு சட்டை உரிச்சிருந்துதுடி... எம்மாம் பெருசு.... போன விசே இதே மாதிரி வந்தப்ப தமிழு இளங்கோவெல்லாம் இருந்தான்கள்.... இப்போ...” என்று பாட்டி வாசல் படி மாநாட்டில் சக பங்கேற்பாளர்களிடம் அங்கலாய்த்துக்கொண்டிருந்தாள்.

நாமளா போய் சீந்தாட்டா பாம்பு ஒண்ணும் பண்ணாது என்று இத்தனை வருஷத்துக்கப்புறம் புத்திக்கு உரைத்தாலும் பயம் நம்மை விடுவதில்லை. தமிழரசு அண்ணனையும் இளவல் இளங்கோவையும் அதற்கு பிறகு இன்னும் நான் சந்திக்கவில்லை! எந்த ஊர்ப் பாம்போ! எந்த புற்றோ!! எவர் கண்டார்?

[ரொம்ப நாட்கள் கழித்து மீண்டும் ஒரு புதிய மன்னார்குடி டேஸ் எபிஸோட் எழுதினேன். இது 27வது அத்தியாயம்]

பிலே! என்ன பிலே!

பனைவிளை என்ற கிராமத்தின் பனைமரக் காட்டுக்குள்ளே ரெண்டு நாள் தங்கியிருந்தேன். அண்ணாந்து பார்த்தால் அக்கானி இறக்கிக்கொண்டிருந்தார்கள். பனைமரங்களுக்குக் நடுவே ரெண்டு வீடு இருந்தது. ஒன்று பாரம்பரியம் மிக்க கிருஸ்துவக் குடும்பம். இன்னொன்று சாதாரணப் பனையேறிக் குடும்பம். அண்ணன் தம்பிகளோடு ஆட்கள் நிறைந்திருக்கும் அந்தப் பெரியக் கூட்டுக் குடும்பம் பொருளாதாரத்தில் தடுமாறுகிறது. தம்பி திருவனந்தபுரத்தில் பிசினெஸ் செய்து நொடித்துப்போகிறார். அண்ணன் குடிகாரர். அந்தக் குடிகார அண்ணனுக்கு லிஸி என்று ஒரு பெண். கதையின் எபிசென்டர். தம்பிக்கு லில்லி. லிஸியின் ஒன்றுவிட்ட தங்காய். அடிச்சுக்கூட்டிள் படுத்திருக்கும் மூப்பி கண்ணப்பச்சி. கோபம் வந்தால் “தூ” என்று காறித் துப்புகிறார். வீட்டுப் பொம்பளைகள் அக்கானி காய்ச்சுகிறார்கள்.

அன்பையன் என்கிற பின் வீட்டுப் பனையேறியின் மகன் தங்கராஜ். தங்கராஜும் லிஸியும் பள்ளியிலிருந்து ஒன்றாகப் படிக்கிறார்கள். பெரியவர்கள் ஆனதும் அது காதலாக மலர்கிறது. பொறுங்கள். நீங்கள் நினைப்பது போல கவித்துவமான காதல் இல்லை. வீட்டிலிருக்கும் பல பிரச்சனைகளுக்கு இடையில் கொல்லையில் பார்த்துக்கொள்கிறார்கள். அப்பாவுக்குப் பதிலாக புத்தம் வீட்டில் பனையேறும் போது ஒன்றிரண்டு தடவை “லிஸி” என்று வாய்விட்டுக் கூப்பிடுகிறான் தங்கராஜ். அவ்ளோதான். மீதியை லிஸியின் உணர்வுகளாக கதாசிரியர் வரிவரியாக எழுதிவிடுகிறார். கடைசியில் தம்பியைக் கொல்கிறார் புத்தம் வீட்டின் அண்ணன். அதாவது லிஸியின் அப்பா லில்லியின் அப்பாவைக் கொன்றுவிடுகிறார். கடைசியில் லிஸி தங்கராஜைத் திருமணம் செய்துகொள்ளும் ஸ்திதியில் கதையை முடித்துவிடுகிறார் ஆசிரியர்.

நாவல் முழுக்க பனையேறிகளின் அன்றாடங்களை ஆவணப்படுத்தியிருக்கிறார். நாகர்கோயில் வட்டார வழக்கில் பேசுகிறார்கள். ஜெமோ படித்தவர்களுக்கு பல்லை உடைக்காத லாங்குவேஜ். காசு பணம் இருப்பவர்கள் இல்லாதப்பட்டர்களிடம் சம்பந்தம் வைத்துக்கொள்ள தயங்குகிறார்கள். ஆதிக்கம் செலுத்தவே ஆசைப்படுவதை சம்பவங்கள் மூலம் காட்டுகிறார்.கதைமுழுக்க பக்கத்துக்குப் பக்கம் ஒரு மெல்லிய சோகம் இழையோடுகிறது. தாவணி போட்டவுடன் பெண் பிலேக்களை வெளியே விடாமல் வீட்டுக்குள்ளே அடைத்துவிடுகிறார்கள். இது காதல் கதையா என்று கேட்டால் சொல்வதற்கு கொஞ்சம் கஷ்டம். ஏனென்றால் நீங்கள் நினைப்பது போல ஸ்வீட் நத்திங் பேசிக்கொண்டு பெண்ணைத் துரத்தும் ஃபேண்ட்டஸி காதல் கதை இல்லை.

Lakshmi Chitoor Subramaniam அம்பையின் முன்னுரை என்னுரையை விட டாப்பாக இருக்கும். அதற்கு நீங்கள் அந்தப் புத்தகத்தை வாங்க வேண்டும். கதாசிரியர் ஹெப்ஸிபாவுடன் பழகியவர் அவர். ஹெப்ஸிபாவின் கணவர் ஜேசுதாசனுக்கு கம்பராமாயணம் கொள்ளைப் பிரியமாம்.

“புத்தம் வீடு: ஹெப்ஸிபா ஜேசுதாசன்”. காலச்சுவடு க்ளாஸிக் வரிசை.

அருஞ்சொற்பொருட்கள்: அக்கானி-பதநீர்(கள்ளாவதற்கு முன் நிலை), பிலே-பிள்ளே, அடிச்சுக்கூட்டில்-வாசல் திண்ணை, மூப்பி - வீட்டுப் பெரியவர்

சேவை செய்!

”சேவை நாழி துருப்பிடிக்காத வீட்டில் ஒரு நாழியும் வயிற்றிக்கில்லை தீது”ன்னு ஒரு மூதுரை ஊர் வழக்கில் உண்டு. ”என்னடா கதையிது” என்று நெற்றி சுருக்குபவர்கள் இதையே மூதுரையாகக் கொள்க. மூஞ்சி கை கால் அலம்பி இடுப்பில் வேஷ்டியைச் சுற்றிக் கொண்டு “என்னம்மா டிஃபன்?” என்று சாப்பிட உட்கார்ந்தால் சுடச்சுட சுருள் சுருளாய் மெத்மெத்தென்று சேவை. என்னையறியாமல் குஷியில் “மானிட சேவை துரோகமா?” என்று சற்று உரக்கவே பாடிவிட்டேன்.

சர்க்கரைக் கொட்டிக் கலந்து செய்யும் வெல்ல சேவை இலை சம்பிரதாயமான முதல் ஐட்டம். சேவையின் சூட்டுக்கு சர்க்கரை கொஞ்சம் ஜலம் விட்டுண்டு சேவையின் ஒவ்வொரு இழையையும் தித்திப்பில் குளிப்பாட்டியிருந்தது. பார்க்கும்போதே இனிப்பாக இருந்தது. நாக்கு ஊறிச் சப்புக்கொட்டினாலும் நேக்கு கிடையாது.

அடுத்த ஏனத்தில் மஞ்ச மசேர்னு இருந்த எம்பிளச்சம்பழ சேவையில் வயிற்றுக்குச் சேவையை ஆரம்பித்தேன். “புழுங்கரிசியில பண்ணினேன்டா” என்ற அம்மாவின் இதழோரத்தில் சிறு புன்னகை. ”காலுக்கு நடுப்பற வச்சுக்கோடா” என்று அடுப்பிலிருந்து சுடச்சுட உருண்டை பாலை கரண்டை பேட்டில் கொண்டு வந்து நாழியின் வாயில் தள்ளுவாள் பாட்டி. ”உங்க கொள்ளுப் பாட்டி வாலாம்பாளுக்கு அவாத்திலேர்ந்து சீரா வந்ததாம்....” என்று பாட்டி சொல்லும் போது நாழியின் மேலே மரியாதை ஏற்பட்டு பக்தியாக பிழியத் தோன்றும்.

புஜபல பராக்கிரமனாக நாக்கைத் துருத்திக்கொண்டு நிமிஷமாய்ப் பிழிவேன். ஆரம்பத்தில் “ப்ர்ர்ர்..ர்ர்..” என்றெல்லாம் வரும் அபான வாயு சப்தத்தில் “பாட்டி.. நீ சொல்லுவியே... செல்லக்கு_வே பல்லிடுக்கில பூந்தாயே.. அதுதான் இது...” என்ற போது ”படவாப் பயலே”ன்னு சிரித்த பாட்டியின் முகம் தட்டில் தோன்றியது. ”மோர்க்கொழம்பு உட்டுக்கோடா....” என்று தட்டிலிருந்து பாட்டியின் குரலுக்குப் பதிலாக “கொழம்புதான் இருக்கு.. மோர்க்கொழம்பு பண்ணலை...” என்று அம்மாக் குரல் பக்கத்தில் கேட்டது.

வறுத்த கடலைப் பருப்பு ஒன்றிரண்டு கடைவாய்ப்பல்லில் அரைபட்டு எ.சேவையின் ருசியை இன்னும் இரண்டு மடங்கு ஏற்றிற்று. இக்கணம் என் இஷ்ட தெய்வம் நேரில் தோன்றி “என்ன வரம் வேண்டும் கேள்” என்று கேட்டால் “வறுத்த கடலைப் பருப்புப் போட்ட சேவையும் தொட்டுக்க மோர்க்குழம்பும் தரும் அட்சயப்பாத்திரம் தா” என்று தெண்டனிடுவேன். ஊரில் ஒரு முறை சேவை தேவப்பிரசாதமாக இருந்த போது “இன்னும் கொஞ்சம்....இன்னும் கொஞ்சம்”என்று பறக்காவெட்டியாகத் திண்டினேன். பதிலுக்குப் பாட்டி கேட்டாள் “நா வீட்டுக்குதான் சேவை பண்ணினேன். இந்த வயசுல என்னால நாட்டுக்கா பண்ண முடியும்?” டைமிங்கில் அசத்துவாள் அப்படி!!

மிளகு சேவை வாய்க்கு ஆரோக்கியமாக இருந்தது. வாய்க்குள்ளே இண்டு இடுக்கெல்லாம் ஆசிட் ஊத்தி சுத்தம் பண்ணினா மாதிரி ஒரு ஜிவுஜிவு சுகம். ”ஸ்..ஸ்ஸ்ஸ்”ஸென்று ஜில்லுக்கு காற்றை இழுத்து ”ஃபூ” என்று ஊதும் போது வாயிலிருந்து ட்ராகன் போல தீப்பொறி பறந்தது. மிளகு காரம் புரைக்கு ஏறாமல் இருக்க தேங்காய் சேவைக்குத் தாவினேன். பொன்நிறமாக வறுபட்ட முந்திரி வாய்க்கு அகப்பட்டது. இந்திரன் தோட்டத்து முந்திரியோ என்றெண்ணும் படியாக அம்முழு முந்திரி அமைந்தது. “ராவேளையில ரொம்ப தேங்கா வாண்டாம்டா....” என்பாள் பாட்டி. “சாதா சேவை கொஞ்சம் இருக்கு.. போட்டுண்டு கொழம்பு இல்லைன்னா மோர் ஊத்திக்கோ....” என்று அம்மா சொன்னாள்.

இப்படியாகப்பட்ட சேவாலோகத்திலிருந்து மனசேயில்லாமல் எழுந்திருக்கும்போதுதான் அதைப் பார்த்தேன்.

பாத்திரத்தில் சேவைகள் தீர்ந்துகொண்டிருக்கும் போது மூலையோர டிவியில் சீரியல் சேவைகளாகக் கதாபாத்திரங்கள் வழியாகப் பிரஜைகளைப் போட்டுப் பிழிந்துகொண்டிருந்தார்கள்.

#வயிற்றுக்கும்_சேவை_செய்!

பாஸ்போர்ட் ஃபார்மாலிட்டீஸ்

மன்னை பந்தலடியில் அழகப்பா தாளகத்துக்கு கோணவாக்கில் இருக்கும் கடை ரங்கூன் ட்ராவல்ஸ். எண்பதுகளில் ஒளிஒலி நாடாக்கள் வியாபாரம் உச்சத்தில் இருந்த போது மன்னையின் பட்டிதொட்டியெங்கும் காதுக்கும் கண்ணுக்கும் விருந்தளித்தவர்கள். சாயங்கால வேளைகளில் இதயம் பேசுகிறது மணியனின் ராமாயண ஒலிநாடக்களை ஒலிபரப்பி ட்ராஃபிக் ஜாம் செய்வார்கள். டெக் என்றழைக்கப்படும் விசிஆர் விசிபி போன்ற கேளிக்கை உபகரணங்களை ஒரு ராத்திரிக்கு மூன்று சினிமாக்களோடு வாடகைக்கு விட்டு மன்னை மண்ணில் சினிமாப் புரட்சி ஏற்படுத்தினார்கள்.

வெள்ளி சனி இரவுகளில் டெக்குக்காக நாயாக அலைந்ததை பின்னர் தனிக் காவியமாக எழுதுகிறேன். இதைவிட அவர்கள் செய்த சிரேஷ்டமான காரியம் என்னவென்றால் பரவாக்கோட்டை, நெடுவாக்கோட்டை, மூவாநல்லூர், கூத்தாநல்லூர் என்று சுத்துப்பட்டு பதினெட்டுப் பட்டிக் கிராம மக்களையும் பாஸ்போர்ட் எடுத்துக் கொடுத்து சிங்கப்பூர் மற்றும் அரேபிய நாடுகளுக்குக் கொத்துக் கொத்தாக ஏற்றுமதி செய்தார்கள்.

பாஸ்போர்ட் சம்பந்தபட்ட வேலைகளுக்காக சமீபத்தில் ஒரு நாள் ஆஃபிஸுக்கு மட்டமடித்திருந்தேன். பாஸ்போர்ட் சேவா கேந்திரா என்கிற நெல்சன் மாணிக்கம் ரோடு பியெஸ்கே மையத்தின் வாசலில் இரண்டு மூன்று நிமிடங்கள் கால் கடுக்கக் காத்திருந்தபோது ரங்கூன் ட்ராவல்ஸ் ஓனர் (ராஜன் என்று ஞாபகம்) ஸ்டெப் கட்டிங் பெல் பாட்டமுடன் ஞாபகத்துக்கு வந்தார். முதலிரண்டு பாராக்களில் மன்னைக்குச் சென்று வந்தேன். இனி, பாஸ்போர்ட் எடுப்பதைப் பற்றி உருப்படியாகப் பார்ப்போம்.

ஏஜெண்ட்டுகளின் பிடியில் இருந்து பாஸ்போர்ட் அலுவலகத்தை மீட்டிருக்கிறார்கள். passportindia.gov.in என்பது தளம். ஈமெயில் அட்ரெஸ் பதிந்து உறுப்பினர் ஆகிக்கொள்ள வேண்டும். Download e-Form என்கிற சுட்டியிலிருந்து பிடிஎஃப் வடிவிலிருக்கும் பாஸ்போர்ட் நமூனாவைத் தரவிறக்கித் தகவல்களை டைப்படித்துக் கொள்ளுங்கள். XML என்கிற வகையறா ஃபைலாக அதை சேமித்து வைத்துக்கொள்ளவேண்டும்.

சென்ற பாராவில் பார்த்த பூர்வாங்க காரியங்களை முடித்துவிட்டு காஃபி குடித்துக்கொண்டோ அல்லது எஃப்பி மேய்ந்துகொண்டோ அல்லது இளையராஜாவை இரசித்துக்கொண்டோ மடிக்கணினியில் பணத்தைக் கட்டி பாஸ்போர்ட் எடுக்க ஒரு முகூர்த்தம் குறித்துக்கொள்ளலாம். புதுசாக நார்மல் கோட்டாவில் வாங்குவதற்கு பதினெட்டு வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு 1500 ரூபாயும் அதற்குட்பட்டவர்களுக்கு 1000 ரூபாயும் வசூலிக்கிறார்கள். என்னைப் போல் கல்யாணத்துக்கு முன்னால் பாஸ்போர்ட் வாங்கியவர்கள் ஸ்பௌஸ் பெயரைச் சேர்க்க ரூ. 1500. பணத்தைக் கட்டிவிட்டு “எப்போ வரலாம்” என்று நமது ஸ்லாட்டை புக் செய்து கொள்ளலாம்.

நீங்களாக உங்களுக்கு தோதுப்பட்டத் தேதியைக் குறிக்க முடியாது. அவர்கள் ஒதுக்கும் தேதி உங்களுக்கு ஒத்து வந்தால் ஒப்புக்கொண்டு ”சரி வருகிறேன்” என்று சம்பிட் பட்டனைத் தட்டிச் சம்மதியுங்கள். ஒதுக்கிய தேதிக்கு போக முடியவில்லையென்றால் இரண்டு தடவை வேறு தேதிக்கு ஒத்திப் போடலாம். அதற்கு மேல் நீங்கள் கட்டிய பணம் ஸ்வாஹா என்று நினைக்கிறேன்.

”3:45 pm" என்று முகூர்த்த நேரம் கொடுத்திருந்தால் அத்தனை மணிக்கு அவர்கள் வாசற்படியை மிதித்தால் போதும். பல்லு தேய்த்துவிட்டு கையில் நாஸ்தா கட்டிக்கொண்டு போக வேண்டிய அவஸ்யம் இல்லை. கட்டாயம் அப்பாயிண்ட்மெண்ட் லெட்டரை ஒரு பிரிண்ட் அவுட் எடுத்துக்கொண்டு செல்லவேண்டும். ஹிந்தியில் பேசும் வடக்கத்திய செக்யூரிட்டிகள் அந்த நேரத்தைப் பார்த்து உள்ளே அனுப்புகிறார்கள்.

வாசலுக்கு நேரே 4 கவுண்ட்டர்கள். நார்மலுக்கு ரெண்டு. தட்காலுக்கு ஒன்று. தகவல் கௌண்ட்டர் ஒன்று. எல்லாம் யூனிஃபார்ம் சுடிதார் போட்ட டிசியெஸ் பெண் சிப்பந்திகள். அவர்களது வலைத்தளத்திலேயே என்னென்ன சான்றிதழ் ஆவணங்கள் கொண்டு வர வேண்டும் என்று போட்டிருக்கிறார்கள். இருந்தாலும் என்னைப் போன்றவர்களுக்காக இங்கே சுருக்கமாக.

1. புதுப்பித்தல் அல்லது திருமணத்திற்குப் பின் மனைவி/கணவன் பெயரைச் சேர்த்தல்.
----------------------------
அ) பழைய பாஸ்போர்ட் - ஒரிஜினல்
ஆ) ரேஷன் கார்டு - ஒரிஜினல்
இ) அரசாங்க வங்கிகளில் கணக்கிருந்தால் அந்த பாஸ்புக்கின் முதல் பக்கத்தையும் (உங்கள்து ஃபோட்டோ ஒட்டி வங்கி மேலாளர் கையெழுத்திட்டிருக்க வேண்டும்)
ஈ) Annexure D - இது நோட்டரி பப்ளிக்கிடம் வாங்க வேண்டும். தம்பதி சமேதராய் ஃபோட்டோ எடுத்து ஒட்டவேண்டும். இதற்கு மார்க்கெட் ரேட் அதிகபட்சம் ஐநூறு வரைக்கும் கேட்கிறார்கள்.

2. புதிய பாஸ்போர்ட் - 18 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு
-------------------
அ) அரசாங்க வங்கிகளில் கணக்கிருந்தால் அந்த பாஸ்புக்கின் முதல் பக்கத்தையும் (உங்கள்து ஃபோட்டோ ஒட்டி வங்கி மேலாளர் கையெழுத்திட்டிருக்க வேண்டும்)
ஆ) ரேஷன் கார்டு
இ) பத்தாவது அல்லது பனிரெண்டாவது ஒரிஜினல் மதிப்பெண் பட்டியல்

3. மைனர்களுக்கு
--------------
அ) பிறப்புச் சான்றிதழ் (பெற்றோரின் சரியான ஸ்பெல்லிங்கோடு- இது ரொம்ப முக்கியம்)
ஆ) பெற்றோர்களின் பாஸ்போர்ட்
இ) Annexure H - இந்தக் குழந்தை எங்கள் பிள்ளைதான் என்று பெற்றோர் சுய ஒப்பமிடும் சான்றிதழ்
ஈ) பயிலும் பள்ளியிலிருந்து போனஃபைட் சர்ட்டிஃபிகேட் மற்றும் பள்ளி ஐடி கார்ட்.

மேலே வகைவகையாகக் குறிப்பிட்ட அனைத்து சான்றிதழ்களின் அசலோடு இரண்டிரண்டு பிரதிகளை கையில் எடுத்துக்கொள்ளவும்.

கவுண்ட்டர்களில் இதைச் சோதித்துவிட்டு ஒரு கோப்பில் இதையெல்லாம் போட்டுக் கட்டி ஒரு நம்பரிட்டு (உதா: 283) உங்களை உள்ளே அனுப்புகிறார்கள். ஏஸி அறை. தொடராகக் இடுப்பில் கட்டிப்போட்ட மேனி ஜில்லிட்ட இரும்பு நாற்காலிகள். உட்கார்ந்தால் பிருஷ்ட பாகத்தில் ஐஸ் வைத்தார்ப்போல ஜில். ஐடிசி கிராண்ட் சோழா விலையில் ஒரு காஃபி பூத். சமோஸாவெல்லாம் பார்க்க நன்றாக இருக்கிறது. அற்பசங்கைக்கு ஒதுங்க ஃபினாயில் ஊற்றிய ரெஸ்ட் ரூம். கண்ணெதிரே ரோ ரோவாய் நம்பர் காட்டும் இரண்டு பெரிய மானிட்டர்கள்.

ஏ, பி, சி என்று மூன்று இடங்களில் உங்களை நேர்காணல் செய்வார்கள். ஏ கவுண்ட்டரில் ஒரு பதினைந்து, பி கவுண்ட்டரில் ஒரு நான்கு, சி கவுண்ட்டரில் ஒரு நான்கு. நீங்கள் எந்த கவுண்ட்டருக்கு செல்லவேண்டும் என்று அந்த பெரிய மானிட்டர்களில் ஒளிரும். நீங்கள் போய் உட்காரும் வரை அந்தச் சேரை யாரும் இழுத்துவிடுவதற்கு அது ம்யூசிக்கல் சேர் அல்ல. இருந்தாலும் சிலர் எழுந்து தபதபவென்று ஓடினார்கள்.

ஏ கௌண்ட்டரில் கைரேகை ஃபோட்டோ போன்றவற்றை எடுத்து உங்களது அப்ளிகேஷனை ஸ்பெல்லிங்கோடு சரிபார்க்கிறார்கள். தவறாக டைப்பியிருந்தால் உங்களுக்கு கடைசி வாய்ப்பு. இங்கேயே சரி செய்துகொள்ளவும். இந்த ஏ கௌண்ட்டர் வேலை டிசியெஸ் பொறுப்பிலிருக்கிறது. பி கௌண்ட்டரில் கூப்பிட்டு கொடுத்த விபரங்களை சரிபார்க்கிறார்கள். சரியில்லை என்றால் திருப்பி அனுப்புகிறார்கள். இந்த லெவல் நீங்கள் கெலித்தால் சி கவுண்ட்டருக்கு முன்னேறுகிறீர்கள். பி யும் சி யும் பாஸ்போர்ட் அத்தாரிட்டிகளின் ஆதிக்கத்தில் இருக்கிறது.

சி கவுண்ட்டரில் ஃபோட்டோவிலிருப்பது நீங்களா என்று ஒரு கள்ளப்பார்வை பார்க்கிறார்கள். அப்புறம் திரும்பவும் இணைத்த சான்றிதழ்களை சரியா தவறா என்று சோதனை செய்கிறார்கள். அம்புட்டுதான். உங்களது கையில் ஒரு அக்னாலெட்ஜ்மெண்ட் கொடுத்து ஃபீட்பேக் ஃபார்மை பூர்த்தி செய்து கொடுத்துவிட்டு திரும்பிப்பார்க்காமல் வீட்டுக்கு நடக்கச்சொல்கிறார்கள்.

மொத்தமாக ஒண்றரையிலிருந்து இரண்டு மணி நேரத்திற்குள் நீங்கள் வெளியே வருவதற்கு உத்தரவாதம்.

பாஸ்போர்ட் சம்பந்தபட்ட அடுத்தடுத்தக் கட்டங்களை தொடர்ந்து உங்களுக்கு மெயில் மூலம் தெரியப்படுத்தி ஆச்சரியப்படுத்துகிறார்கள். நார்மல் கோட்டாவில் 20 நாட்களுக்குள் பாஸ்போர்ட் வந்துவிடுகிறது. தட்கலில் ஒரு வாரத்திற்குள் உங்கள் கையில் பாஸ்போர்ட்டைக் கொடுத்து விழுந்து சேவிக்கிறார்களாம். இந்த ப்ராஜெக்ட்டினால் டிசியெஸ்ஸுக்கு மத்திய அரசாங்கம் விருது வழங்கி கௌரவித்திருக்கிறார்களாம். ஒன்றிரண்டு சந்தேகங்களை நிவர்த்தி செய்த டிசியெஸ் கணேஷ் சொன்னார்.

சமூகத்திற்கு பிரயோஜனமாக இருக்கட்டுமே என்று இங்கு எழுதும்படியாயிற்று!

வாஸவேச்வரம்

முன்னணி எழுத்தாளர்கள் பலர் "படிக்க வேண்டியது” என்று பரிந்துரைத்தது. EraMurukan Ramasami சார் தன்னுடைய ஆகச் சிறந்த நாவல்கள் வரிசையில் இதைப் பட்டியலிட்டிருந்தார். சிலாக்கியமான படைப்பு என்று தெரிந்தது. பக்கம் திருப்பி அழுக்கு பண்ண முடியாதவாறு காலச்சுவடுக்காரர்கள் பாலிதீன் கவரில் லாமினேட் செய்திருந்தார்கள். 1966ம் வருடம் முதல் பதிப்பு கண்டிருக்கிறது. நவீனத் தமிழ் கிளாசிக் நாவல் வரிசையில் காலச்சுவடு 2011ல் பதிப்பித்தது.

சீலை உடைத்துக் கிழித்துப் பிரித்தேன். நேரமின்மையால் இரண்டு நாட்கள் விட்டு விட்டுப் படித்தேன். காஃபிக்குக் காத்திருக்கும் ஐந்து நிமிட இடைவெளியைக் கூட வீணாக்காமல் இரண்டு பக்கங்களாவது திருப்புமளவிற்கு குன்றாத சுவாரஸ்யம்.

வாஸவேச்வரம். இது எழுத்தாளர் கிருத்திகாவின் கற்பனைக் கிராமமாம். மலையடிவாரத்திலுள்ளது. அக்ரஹாரக் கதை. சுப்புக்குட்டி சாஸ்திரிகளின் உபன்யாசத்தில் ஆரம்பிக்கிறது. மாண்டவ ரிஷியின் பத்னியைக் கள்ளத்தனமாக அடைந்த வாஸவனாகிய இந்திரன் அம்முனியிடம் சாபம் பெற்று பூலோகத்தில் வந்து விழுந்த இடம் வாஸவேச்வரம் என்று தன்னுடைய கனவு கிராமத்திற்கு அழைத்துப்போகிறார். இங்கு ஒரு ஸ்படிக லிங்கத்தை பிரதிஷ்டை செய்து சாபவிமோசனம் பெற்று இந்திரலோகம் செல்கிறான் வாஸவன்.

முதல் இரண்டு பக்கங்களில் வாஸவேச்வர ஸ்தல புராணமாகச் சுப்புக்குட்டி சாஸ்திரிகள் நாவலின் ப்ளாட்டை உபன்யாசமாகச் சொல்லிவிடுகிறார். பெரிய பாட்டா என்ற பெரியவர் பஞ்சாயத்துத் தலைவர். தங்கத்தின் புருஷன் சுந்தா என்கிற உள்ளூர் டாக்டர். அம்பி மாமா என்று ஊருக்கு உதவும் பரோபகாரி. மிட்டா மிராசுதார் சந்திரசேகரய்யர். வயல்வரப்புகளையும் தோட்டம் துரவுகளையும் காதலிப்பவர். பொண்டாட்டி ரோகிணியின் (வாஸவேச்வரத்திலேயே அவள்தான் அழகி) கைப்பிடியில் அகப்படாமல் ஆண்மை காட்டுபவர். விதவையாக தன்னுடன் இருக்கும் அக்காள் மீனாவுக்கு சிரேஷ்ட தம்பி.

சந்திரசேகரய்யரைப் போட்டியாகக் கருதும் சுப்பையா. சுப்பையாவுக்கு சமத்துப் போதாதென்று துளைத்து எடுக்கும் அவன் மனைவி விச்சு. வீட்டிற்கு வீடு இருக்கும் மாமியார்க் கிழவிகள். தண்ணீர்த் துறை பேச்சுகள். பாலுண்ணிப் பாட்டி. ஐந்தாறு கிராப் தலைகளுடன் கம்யூனிஸம் பேசும் பிச்சாண்டி.

பிச்சாண்டிக்கு ரோகிணி மேல் ஒரு கண். சுப்புக்குட்டி சாஸ்திரிகளுக்கு ஆனந்தா மேல் ஆசை. டாக்டர் சுந்தா விச்சுவிற்கு நூல் விடுகிறான். ரங்கன் கோமுவைப் பார்க்கிறான். பப்புவிற்கு கோமுவைப் பிடித்திருக்கிறது. ரோகிணிக்கு பிச்சாண்டி பார்க்கும் போதெல்லாம் மனசுக்குள் பட்டாம்பூச்சி படபடக்கிறது. அறுபதுகளில் இதுபோன்று எழுதுவதற்கு துணிச்சல் வேண்டும். காமதேவனின் லீலா வினோதங்களில் அவ்வூர்க்காரர்கள் ஆட்படுகிறார்கள். மெல்லிய இழையாக கதை நெடுக மோகக் காற்று வீசுகிறது. அது சூறாவளியாகமல் கம்பி மேல் நடந்து சாசகம் செய்திருக்கிரார் கிருத்திகா.

பஞ்சாயத்து தேர்தலில் சந்திரசேகரய்யரை நிற்கச் சொல்கிறார்கள். புரட்சி பேசும் பிச்சாண்டி சந்திரசேகரய்யரை எதிர்த்து நிற்பேன் என்று குதிக்கிறான். சந்திரசேகரய்யருக்கு டாக்டர் சுந்தா ஆதரவு. இந்த நிலைமையில் ஊர்த் திருவிழா வருகிறது. ஊரே கொண்டாடிக்கொண்டிருக்கும் போது சந்திரசேகரய்யர் கொலையாகிக் கிடக்கிறார். பிச்சாண்டி ரோகிணியைப் பார்க்க அவர் வீட்டுப் பக்கம் போகும்போது போலீசாரால் பிடிபடுகிறான். ஆனால், சுப்பையாவைச் சந்தேகிக்கிறார் பெரிய பாட்டா.

ஏற்கனவே சுப்பையாவுடன் வாழப்பிடிக்காமல் அவன் மனைவி விச்சு பிறந்தகம் போய்விடுகிறாள். இதில் இந்தக் கொலைக்கு வேறு அவனை சந்தேகிப்பதால் துக்கம் தாங்க முடியாமல் தூக்க மாத்திரை சாப்பிட்டு கடிதாசு எழுதிவைத்துவிட்டு உயிரை மாய்த்துக்கொள்கிறான். ஊருக்கு வந்துகொண்டிருந்த பஸ் கவிழ்ந்து சாவு. கடைசி இருபது பக்கத்தில் இரத்தக்காடாக மாறுகிறது வாஸவேச்வரம்.

திரும்பவும் கடைசியில் சுப்புக்குட்டி சாஸ்திரிகள் கதாகாலட்சேபம் நடக்கிறது. “மா ஜானகி செட்டபெட்டகா....ஓ ராமா... என் ஜானகியால்தானே நீ இத்தனை புகழ் அடைஞ்சே...” என்று சொல்லி “ஸ்த்ரீகள்தான் அவாளோட கற்பைக் காத்துக்கணும். அவா கையில்தான் எல்லாமிருக்கு..” என்று சொல்லிக்கொண்டிருக்கையில் பிச்சாண்டி மேலக்கோடியாத்துத் திண்ணையை நோட்டமிட்டு ரோகிணியைப் பார்க்க மெல்ல நழுவுகிறான். கதை சொல்லிவிட்டு சுப்புக்குட்டி சாஸ்திரிகள் ஆனந்தா வீட்டிற்கு போகும் சந்தில் புகுந்து மறைகிறார்.. என்று கதை முடிகிறது.

கிருத்திகாவின் எழுத்திலிருந்து ஒரு சின்ன பிட்.
=====
வாஸவேச்வரத்து ஆண்கள் உள்ளம் தவியாய்த் தவித்தது. மனத்திரையில் நிழலோடின காமனுடைய கட்டழகியைக் கண்டு மயக்கங்கொண்டார்கள். அழகே திரண்டு உயிர் கொண்டவள் ரதி. அவளை நினைகும்போது அவர்கள் ரத்தம் கொதித்துக் கொப்புளித்தது. துவளும் தேகம், வரிசைப் பற்கள், உதிரம் சிந்தும் இதழ்கள். அப்பா! என்ன வளைவுகள், சரிவுகள்!! பார்த்த இடத்திலெல்லாம் அவள் தேகத்தில் இன்பக் குன்றுகள், பள்ளத்தாக்குகள், மேடுகள்! ரதியை மனதில் நினைத்துப் பார்த்துக் கொண்டே அவ்வாண்கள் தம் பெண்களிடம் போனார்கள். இந்தக் கற்பனை ரதிக்குத்தான் வாஸவேச்வரத்துப் பெண்கள் எவ்வளவு கடமைப்பட்டிருக்கிறார்கள்?
=====

மேற்கண்ட பாரா கிளுகிளுப்பிற்காக சேர்க்கப்படவில்லை. இதில் எல்லாக் காலங்களுக்கும் பொருந்தும் அர்த்தங்கள் ஆயிரம்.

#வாஸவேச்வரம்... . சுகமான வாசிப்பனுபவம்!!

ஆடிய பிற ஆட்டங்கள்

Related Posts with Thumbnails