Friday, April 4, 2014

சொத்தைப் பல்

இராவேளை. நடுநிசிக்கு இன்னும் சில நாழிகைகள் இருக்கிறது. வானத்தில் பூர்ண சந்திரன் ஜொலிக்கிறான். அவனைச் சுற்றி வெள்ளி அரைஞான்கயிறு போல கோட்டை கட்டியிருக்கிறது. தொடுவானத்தில் சில நட்சத்திரங்கள் கண் சிமிட்டுகின்றன. கண்ணுக்கெட்டிய தூரம் வரை வயற்காடு. அதற்கு நடுவில் நிலா வெளிச்சத்தில் குளிக்கும் அந்த பழங்காலத்துக் கற்கோயில். நான்கு காத தூரம் சென்று திரும்பிப் பார்த்தால் கூட கம்பீர நிழலாய்த் தெரிகிறது. கோயில் மதிலில் இருக்கும் ரிஷபச் சுதைகள் அதை ஒரு சிவன் கோயில் என்கிறது.

அந்தக் கோயிலுக்குப் பக்கத்தில் ஒரு சின்னக் குட்டை. மேலண்டை ஓரத்தில் பூத்திருப்பது அல்லி போல் தெரிகிறது. அந்தக் குட்டைக்குள் இறங்கும் சின்ன ஒத்தையடிப் பாதை. ஏனைய இடங்களில் நட்டு வைத்த அம்புகளாய் கோரை மண்டிக்கிடக்கிறது. இரண்டு மின்மினிப் பூச்சிகள் கோரைக்குள் புகுந்து புகுந்து திருடன் போலீஸ் விளையாடுகிறது. சுவர்க்கோழிகளின் ஓயாத க்ரீஈஈஈஈஈச் சப்தம். ஆளரவமே இல்லை.

திடீரென்று அரையில் காவி வேஷ்டியுடன் ஒரு சன்னியாசி அங்கே வருகிறார். கையில் சின்ன தடி. மார்மீது புசுபுசுவென்ற வெண்ரோமக் காடு. வெள்ளைத் தாடியில் மஹா தேஜ்வியாக இருக்கிறார். நெற்றி முழுக்க விபூதி. கைத்தடியை வீசியெறிந்துவிட்டு திடுதிப்பென்று அந்தக் குட்டையில் இறங்குகிறார். குட்டைக்கு நடுவில் செல்லச் செல்ல தொடை இடுப்பு நெஞ்சு கழுத்து என்று படிப்படியாகக் குட்டைக்குள் மறைகிறது. க்ளக்.க்ளக்.க்ளக்.. சப்தம். கரையோரத்தில் ஒரு சர்ப்பம் படமெடுத்து வேடிக்கைப் பார்க்கிறது.

ஜல சத்தத்தைத் கேட்டு கோயிலைத் திறந்துகொண்டு பிச்சைக்காரன் ஒருவன் வெளியே வருகிறான். கையில் வெண் சங்கு வைத்திருக்கிறான். கண் மட்டும் வெளியே தெரியுமளவிற்கு சன்னியாசி மூழ்கி விட்டார். “ஊ...” என்று அந்தப் பிரதேசமே நடுங்கும்படி அந்தப் பிச்சைக்காரன் சங்கு ஊதுகிறான். சன்னியாசி எரிக்கும் கண்களோடு கரையிலிருக்கும் அவனைப் பார்க்கிறார். அவன் சொத்தைப் பல் தெரிய சிரிக்கிறான்.

கோயிலுக்குள்ளிருந்து கோடி சூர்யப் பிரகாசமாக ஒளி வருகிறது. இருவரும் அங்கே பார்க்கிறார்கள். ஜடாமுடிநிழலொன்று நீண்டு கோயில் வாசலைத் தாண்டி வயலுக்குள் வந்து விழுகிறது. நிழல் பெருத்துக் கொண்டே போகிறது. இங்கே சன்னியாசி இறங்கிய சுவடே தெரியாமல் குட்டை தூங்குகிறது. குட்டைக் கரையில் நின்ற பிச்சைக்காரன் நிழலுக்குள்ளே தலை தெறிக்க ஓடுகிறான்.

ஒரு பெருத்த காற்று வீசி கோயிலருகே இருக்கும் வேப்ப மரத்தை உலுக்குகிறது. வயலில் நெற்பயிரெல்லாம் பிடிங்கிக்கொண்டு பறக்குமளவுக்கு பேய்க்காற்று. நிலவின் ஒளியை மங்கச் செய்யும் பிரகாசமாய் கோயிலுக்குள்ளிருந்து வெளிச்சம். ஊழிக்காலமோ என்றென்னும் வகையில் ஆளைத் தூக்கும் காற்று. குட்டையில் கடலலை. சன்னியாசி மறைந்த இடத்திலிருந்து குபுகுபுவென்று தண்ணீர் பொங்குகிறது.

இப்போது குட்டைத் தண்ணீர் கங்கை போல பிரவாகமாக எழுந்து வருகிறது. தூரத்தில் தூக்கத்தில் கிராமத்து வீடுகள். கோயிலுக்குள் புகுந்து மண்டபத்தை நிறைக்கிறது. பலிபீடம் தாண்டி கொடிமரம் தாண்டி நந்தியை மூழ்கடிக்கிறது. கர்ப்பகிரஹத்துக்குள் நுழையவில்லை. கோயிலைச் சுற்றி முழங்கால் அளவிற்கு நீர் நிற்கிறது. நிழலுக்குள் மறைந்த பிச்சைக்காரன் கோபுரத்தின் உச்சியில் தோன்றுகிறான். மீண்டும் காது கிழிய சங்கு ஊதுகிறான்.

பட்டென்று காற்று நிற்கிறது. குட்டைத் தண்ணீர் அடங்குகிறது. கோயிலுக்குள் புகுந்த நீர் வரண்டு போகிறது. இதெல்லாம் கண நேரத்தில் மாயமாய் நிகழ்ந்த மாற்றம். கோயில் கதவு மூடிக்கொள்கிறது. சந்திரனின் பிம்பம் குட்டைக்குள் மிதக்கிறது. மின்மினிப் பூச்சிகள். இதமான சூழ்நிலை. சன்னியாசி மேனியில் சொட்டு நீரில்லாமல் கரையில் நிற்கிறார். கோயில் வாசலில் தலைக்கு மேலே கைகூப்பித் தொழுகிறார். கிராமத்தை நோக்கி நடக்கிறார்.

பொலபொலவென்று பொழுது விடிகிறது. சைக்கிளில் குருக்கள் வருகிறார். ஹாண்டில் பாரில் இடதுபுறம் நைவேத்திய தூக்கு. வலதுபுறம் வயர்க் கூடையில் திரி, ஆரத்தித் தட்டு மணியுடன் கற்பூர பாக்கெட். ஊர் மக்கள் கொட்டு மேளத்துடன் சன்னியாசியை அழைத்துக்கொண்டு கோயிலுக்கு வருகிறார்கள். மேனியெங்கும் விபூதியைக் குழைத்துப் பூசி சிவப்பழமாக வருகிறார். பார்வையில் பூரிப்பு.

நொடியில் அவருக்கு முகம் சுருங்குகிறது. கோயில் வாசலில் முன்னால் துண்டு பரப்பி எங்கோ பார்த்தபடி நேற்றிரவு பார்த்த பிச்சைக்காரன். துண்டு பறக்காமலிருக்க ஓரத்தில் வெண் சங்கு! சன்னியாசி ஸ்தம்பித்துப் போகிறார். முகத்தைத் தூக்கி சன்னியாசியைப் பார்த்த பிச்சைக்காரன் எக்காளமாகச் சிரிக்கிறான். சொத்தைப் பல் தெரிகிறது.

தோளில் துண்டு போர்த்திய ஊர் ப்ரிசிடெண்ட் சிரிக்கிறார். சொத்தைப் பல் தெரிகிறது. ட்ராயருக்கு மேல் அரைஞான் கயிறு கட்டிய பையன் சிரிக்கிறான். சொத்தைப் பல். மாலை கொண்டு வந்த பூக்காரர் சிரிக்கிறார். சொத்தைப் பல். நாட்டாமை பொண்டாட்டி சிரிக்கிறாள். சொத்தைப் பல். குருக்கள் அம்மா நார்மடிப் பாட்டி சிரிக்கிறாள். சொத்தைப் பல். குருக்கள் சிரிக்கிறார். சொத்தைப் பல். முகமெல்லாம் வியர்த்துப் போய் தூணில் கட்டியிருக்கும் கண்ணாடியில் சன்னியாசி முகம் பார்த்து ஈ என்கிறார். சொத்தைப் பல்.

அவ்ளோதான்!

0 comments:

ஆடிய பிற ஆட்டங்கள்

Related Posts with Thumbnails