Friday, April 4, 2014

மகாமகக் குளக்கரை

ரெண்டு நாள் கும்மோணம் ட்ரிப். மாமாங்கக் கரையிலேயே கல்யாணம். காசிமடத்து ரோமன் லெட்டர்ஸ் கடிகாரக் கூண்டு மன்னையின் பந்தலடி மணிக்கூண்டை கண்ணுக்குள் ஃப்ளாஷடித்தது. ”சரத்குமார் படத்துல வர்ற பாட்டுக்கு சிம்ரன் இங்கேதான் டான்ஸ் ஆடினா” என்று படித்துறை கம்பிகளுக்கு வெளியே ஒரு தரையைப் பசங்கள் காட்டினார்கள். பயபக்தியோடு கன்னத்தில் போட்டுக்கொண்டேன்.

டூரிஸ்ட் வண்டிகளின் பார்க்கிங் துறையாக மகாமகக் குளக்கரை பயன்படுகிறது. “தொர்ர்ர்ர்ர்”ரென்று ஊற்றிக்கொண்டு வாசலில் பசுமாடு நின்ற அபிமுகேஸ்வரர் கோயிலில் ஈ காக்கா இல்லை. குளக்கரையில் இருந்த சன்னிதிகளில் சாமிகள் க்ரில் கேட்டுக்குள் பத்திரமாக இருந்தார்கள். காய்கறி வண்டிகளில் கோஸும் கத்திரியும் கேரட்டும் பீட்ரூட்டும் சமாதானமாகக் குடித்தனம் நடத்தின. ”நவக்கிரம் பார்க்கணுமா சார்?” என்று ஒரு டூரிஸ்ட் ஆள் சவாரி தேத்திக்கொண்டிருந்தார். பையும் கையுமாக இருந்த குடும்பஸ்தன் அவரைக் கண்களில் அளந்துகொண்டிருந்தார். ட்ராயர் பையனும் சில்க் சாரி மனைவியும் நெட்டிவேலை கடையைப் பார்த்துக்கொண்டிருந்தார்கள். சியூபி ஏடியெம்மிற்குள் குளிரும் ஏஸிக்கு ஆசைப்படாமல் செக்யூரிட்டி வாசலில் நின்றிருந்தார்.

காலாரக் குளத்தைச் சுற்றினேன். பாசியும் ப்ளாஸ்ட்டிக் பேக்குகளுமாக மூலைகளில் ஒதுங்கியிருந்தது. ”குளிக்கும்போது பாசி முதுகுல ஒட்டிக்காது?”ன்னு பார்யாள் கேட்டாள். “கையால ஒதுக்கிட்டு முங்கிக் குளிப்போம்” என்று கும்மோணத்துக்காரனாய் பதில் சொன்னேன். எதற்கும் கவலைப்படாத பொதுஜனம் லைஃப்பாய் கட்டிக் கரைய அழுக்கு தீர குளித்துக்கொண்டிருந்தது. கரையின் ஒவ்வொரு சன்னிதியின் இடுக்குக்குள்ளெல்லாம் ஒரு ஜோடியாவது ஒளிந்திருந்தது. காதல் புரிதலில் வளையலோ வாயோ அவ்வப்போது சிணுங்கியது.

அவசரமாக ஒண்ணுக்கு வந்த பிள்ளையை ஜட்டியைக் கழட்டி “படியில இறங்கிப் போ...” என்று தீர்த்தத்துக்குத் தீர்த்தம் சேர்க்க விரட்டிய அந்த அம்மாவுக்கும் சேர்த்து கும்பேஸ்வரனை வேண்டிக்கொண்டேன். வடக்கத்திய பொடியன் பானி பூரி விற்றுக்கொண்டிருந்தான். பக்கத்தில் எதற்கெடுத்தாலும் “ஹை..ஹை..” போட்டு ஹிந்தி பேசி வெறுப்பேற்றிக்கொண்டிருந்த பசங்கள் பள்ளி தாண்டியிருக்கமாட்டார்கள். பாக்கெட்டில் நூறு ரூபாய் தாள் எட்டிப்பார்த்தது.

சென்னையிலிருந்து எல்லைக் கல்லுக்கு எல்லைக்கல் வழி நெடுக வெறுப்பேற்றிய ”கும்பகோணம் டிகிரி காஃபி”யை மண்டபத்தில் குடித்தேன். ”எப்ப வந்தே?” என்று கேட்ட பெண் வீட்டாருக்குப் பதில் சொல்லமுடியாமல் நாக்கு பச்சென்று ஒட்டிக்கொண்டது.

0 comments:

ஆடிய பிற ஆட்டங்கள்

Related Posts with Thumbnails