Thursday, June 30, 2011

உரையாடல் - ல்டயாரைஉ- பூஜ்ஜியம் ஒன்று ஒன்று



நறுக் - 3 
நிச்சயதார்த்ததிற்கு பிறகு.....
அவள்: அப்பாடி... இதுக்கு தான் ரொம்பநாளா நான் தவம் கிடந்தேன்.


அவன்: நீ என்னை பிரிந்துவிடுவாயா?

அவள்:  ச்சே.ச்சே.. கிடையவே கிடையாது 

அவன்: நீ என்னை விரும்புகிறாயா? 

அவள்: நிச்சயமாக. செய்தேன், செய்கிறேன். இன்னமும் செய்வேன்

அவன்: நீ என்னை ஏமாற்றினாயா? 

அவள்: ச்சே.ச்சே. அதற்கு நான் செத்தே போய்விடுவேன்.. 

அவன்: எனக்கு ஒரு உம்மா கொடுப்பாயா

அவள்: நிச்சயமாக. அது எனக்கு பேரின்பம். 

அவன்: நீ என்னை ஹிம்சிப்பாயா? 

அவள்: ச்சே.ச்சே. நான் அதுபோல ஆள் இல்லை... 

அவன்: நான் உன்னை நம்பலாமா? 

அவள்: உம். 

அவன்: ஹோ டார்லிங்.. 


திருமணத்திற்கு பிறகு அவளும் அவனும் என்ன பேசிக்கொண்டார்கள்?

கடைசியில் பார்க்கவும்..

******
போன பதிவில் உங்கள் ரசிகனைப் பார்த்தோம். இந்தப் பதிவில் ஒரு ரசிகன் இருக்கிறார். பர்மிங்க்ஹாமில் இருக்கும் புதுச்சேரிக்காரர். காதல் ரசிகன் என்று முத்தாய்ப்பாக சொல்லலாம். சின்ன சின்ன தப்புப் பண்ணுவேன் என்று ப்ளாக் சுயவிவரத்தில் சொல்கிறார். அதுவே சுவாரஸ்யமாக இருக்கிறது. ஈர்க்கிறது. துரையின் லேட்டஸ்ட் பொய்க்கால் காதலி.

கரந்தையில் பேராசிரியராக இருக்கிறார் ஹரணி. ஹரணி பக்கங்கள் என்ற வலைப்பூவில் தமிழேற்றுகிறார். தூய தமிழில் அழகாக எழுதுகிறார். என்றைக்காவது அத்தி பூத்த்தார்ப்போல நான் நன்றாக எழுதினால் வந்து நல்லாயிருக்கு என்று கருத்துரைப்பார். கடிதம் எழுதுவது பற்றி மடலேறுதல் என்று இவர் எழுதிய பதிவு, அந்தக்காலத்தில் கடிதாசி போட்ட எல்லோருக்கும் உரைக்கும். 

ஆதிரா ஒரு தமிழ் டாக்டர். தமிழுக்கு டாக்டர் இல்லை பைந்தமிழ் இலக்கியங்களில் மருத்துவம் பற்றி இருப்பவைகளை அந்தந்த வரிகளை மேற்கோள் காட்டி ஔஷதக் கட்டுரைகள் எழுதும் டாக்டர். அவை எல்லாம் குமுதம் ஹெல்த் ஸ்பெஷல் பத்திரிகையில் வெளியாவது சிறப்பு. நெல்லிக்கனியின் விசேஷ மருத்துவக் குணங்கள் பற்றி தேவலோக அமுதத்துளி என்று எழுதிய பதிவு இங்கே.

சிமுலேஷன் படைப்புகள் என்று எழுதுகிறார் சுந்தரராமன். நிறைய இபாவின் நூல்களை படித்து நூல்நயம் எழுதுகிறார். சில புதிய புத்தகங்கள் என் போன்ற புழுக்களின் கண்களுக்கு தென்படுகிறது. பத்து பதினைந்து சைட் வைத்திருக்கிறார். வலையுலக வலைப்பூ கிருஷ்ணன் போலிருக்கிறது. கர்நாடக சங்கீதம் கரைத்துக் குடித்திருப்பார் போல தெரிகிறது. சினிமாப் பாடல்களில் கர்நாடக சங்கீத மெட்டுக்கள் பற்றி புஸ்தகம் வெளியிட்டிருக்கிறார்.

ரேகா ராகவன் ஒரு பக்க கதை எழுதும் வித்தகர். நிறைய அவரது சிறுகதைகளை பார்த்து வியந்திருக்கிறேன். இருநூறு முன்னூறு வார்த்தைகளில் சாகசமாய் நிறைய கதைகள் எழுதியிருக்கிறார். ஒரு மாதிரி இண்டர்வியு இங்கே. 

நானும் ஒரு நாள் இலக்கியவாதி ஆகவேண்டும் என்ற பெருந்தீ குபுகுபுவென்று உள்ளே பற்றி எரிகிறது. கீழே இருக்கும் பெரும் பேனாக்காரர்களின் எழுத்துக்களை படித்தால் மனதில் அச்சமும் ஐயமும் எழுகிறது. இரும்படிக்கிற இடத்தில ஈக்கு என்ன வேலை என்றாலும்... பாழாய்ப் போன மனது கேட்காமல் அவ்வப்போது நான் சைட் அடிக்கும் திருத் தளம்.
 உலக இலக்கியம். என்ற வலைத்தளத்தினில் இந்த இலக்கியச் சேவை புரியும் "அழியாச் சுடர்கள்" ராம் புகழ் இணையதள வரலாற்றில் மங்காப் புகழ் பெற்றிருக்கும்.

******
தி.பிறகு..

திருமணத்திற்கு பிறகு ஆதர்ஷ தம்பதிகளாக இவர்கள் இருவரும் அன்னியோன்யமாக சம்பாஷித்தது கீழிருந்து மேல்.


-

Wednesday, June 29, 2011

ரொம்பப் பிடிக்கும் - பூஜ்ஜியம் ஒன்று பூஜ்ஜியம்


dog sits at bar




நறுக் - 2 - ரொம்பப் பிடிக்கும்
"டார்லிங்."

"என்னப்பா"
 
"டா-ர்-லி-ங்.."

"ம்..."

"டா--ர்--லி--ங்...."

"எ-ன்-ன-டா."

"டார்லிங் உங்கவீட்லயே எனக்கு யாரை ரொம்பப் பிடிக்கும் தெரியுமா?"

"கைய நோண்டாம யாருன்னு சொல்லு"

"சொல்லட்டா"

"சொல்லுப்பா"

"சொ-ல்-ல-ட்-டா----"
"சொல்லித்தொலையேண்டா.."

"நின்னா சின்னதாவும் உக்காந்தா பெருசாவும் இருப்பாங்களே..."

"நின்னா சின்னதா... உக்காந்தா பெருசாவா... ச்சே.. யாரு.."

"ஆமாம் டார்லிங்.. நெசமாத்தான்..."

"யாருப்பா..."

சொன்னான். (கடைசியில் பார்க்கவும்)

பதிலைக் கேட்டவுடன் ஆசையாய் இருந்த டார்லிங் ஆவேசமாய் பீச்சில் கஷ்டப்பட்டு ஒரு கல்லை தேடி பொருக்கி எடுத்துக் கொண்டு அடிக்க துரத்துகிறார்.. 

ஆம்பளை டார்லிங் சொன்னது கடைசியில்...

***********
என்.கணேசன் என்பவர் என்.கணேசன்.பிளாக்ஸ்பாட்.காமின் ஓனர். ஆனந்த விகடனில் எழுதியதிலிருந்து எழுத்தாளராக மிளிர்கிறார். பால் பிரண்டனின் பார்வையில் இந்தியப் பக்கிரிகள் பற்றியும் சயனைடு விழுங்கியும் சாகாத சாமியார்கள் பற்றியும் எழுதியிருப்பது படிக்கும் ஆர்வத்தை தூண்டுகிறது. இன்னும் நிறைய எழுதியிருக்கிறார். அவசியம் பாருங்கள். என் கணேசன் உங்கள் கணேசனாகி விடுவார்.

பிறப்பு, இறப்பு என்பது உண்மையில்லை என்ற ரமண மகரிஷியின் அநுபூதியை வலைமுகப்பில் எழுதி வைத்து வ.ஸ்ரீநிவாசன் கனவு மழையில் எழுதுகிறார். தினம் ஒரு பதிவு போட்டு அதகளப்படுத்தாமல், மாதம் ஒன்று போட்டாலும் அமர்க்களமாக போடுகிறார். அசோகமித்ரனுடன் தி.ஜா பற்றிய இவரது பேட்டியில் தி.ஜாவை பற்றி கால்வாசியும் அ.மி பற்றி முக்கால்வாசியும் தெரிந்துகொள்ள முடிகிறது. அசோகமித்ரனின் எவை இழப்புகள் என்ற புத்தகத்தை படித்தவர்களுக்கு அ.மியின் பல முகங்கள் தெரிந்திருக்க வாய்ப்புண்டு. ஒரு முறை சென்ற நம்மை va. srinivasan பலமுறை வா வாவென்று அழைக்கிறார்.

திருவாளர் ரவி பிரகாஷ் எழுதும் வலைப்பூ உங்கள் ரசிகன். விகடனின் காலப் பெட்டகத்தை இத்தலைமுறைக்கு பொக்கிஷமாக தொகுத்தவர் இவர். வலைப்பூவிற்கு உங்கள் ரசிகன் என்று பெயர் வைத்திருந்தாலும் பதிவை படிக்கும் நம்மையெல்லாம் அவருடைய ரசிகனாக மாற்றுகிறார்.  என்னைக் கவர்ந்த அழகிகள் என்று இவர் எழுதிய ஒரு பதிவு படங்களுடன் பந்தாவாக இருக்கிறது. இமைக்காமல் 'பார்த்து', படித்து இன்புறுங்கள்.

பயமறியாப் பாவையர் சங்கம். தலைப்பே சுண்டி இழுத்தது. ஒரு கூடை நக்கல். ஒரு கூடை சிரிப்பு. ஒன்றாக சேர்த்தால் என்று தலைப்புக்கு கீழே டேக் லைன் கொடுத்திருக்கிறார்கள். ஐந்தாறு பேராக சேர்ந்து கூட்டணி அமைத்து தாக்குகிறார்கள். சிரிப்புக்கு பஞ்சமே இல்லை. நக்கல் நாட்டியமாடுது. காக்க காக்க ரீமேக் ஒரு வெள்ளிவிழா ஹிட். 2009 க்கு பிறகு இந்த வலைப்பூ அப்டேட் ஆகவில்லை என்றாலும் இடது பக்க மார்ஜினில் இருக்கும் இந்த வலைப்பூவின் டீம் மெம்பர்கள் வலைப்பதிவை படித்து மகிழுங்கள்.

வார்த்தைகளிலிருந்து மௌனத்திற்கு என்று தத்துவார்த்தமாக பெயர் வைத்து சமுத்ரா சுகி என்று சுயமாக பெயர் சூட்டிக் கொண்டு எழுதுகிறார் இவர். கலைடாஸ்கோப் என்று இவர் எழுதும் பதிவுகள் மிகவும் சுவாரஸ்யமானவை. இவரது வாசிப்பின் வீச்சு ரேடியோ கதிர்களாக வீசுகின்றன. அணு அண்டம் அறிவியல் என்று ஒரு விஞ்ஞானத் தொடர் வீராசாமியாக எழுதுகிறார். ரசிக்க வைக்கும் பதிவுகள். பிறருக்கு பின்னூட்டம் மட்டும் Super, Good One என்று போடுவார். மௌனம் அவ்வளவு பேசியதே ஜாஸ்தி தானே! 

******

கடைசியில் பார்க்கச்சொன்னது:

"உங்க வீட்டு டாமிதான்". போன பதிவில் எழுதிய வாத்தியாரைப் பார்த்து நான் கிறுக்கினது. புலியைப் பார்த்து பூனை போட்டுக்கொண்ட வல்லிய ச்சூடு. சரியா?

பட உதவி: http://stuffistolefromtheinternet.com

-

Tuesday, June 28, 2011

ஹலோ யார் பேசறது - பூஜ்ஜியம் பூஜ்ஜியம் ஒன்று

communication


நறுக் - 1- ஹலோ யார் பேசறது

"ஹலோ"

"ஹலோ"

"யார் பேசறது?"

"நான்தான்"

"நாந்தான்னா யாரு?"

"நான்தான் ரேவதி"

"ரேவதி அப்பா இல்லையா?"

"இல்லை"

"அம்மா இல்லையா?"

"இல்லை"

"சரி அப்பா வந்தா ராமன் டெலிபோன் பண்ணினதாகச் சொல்லு.."

"யாரு?"

"ராமன். எழுதிக்கோ ரா-ம-ன்"

"ரா எப்படி எழுதறது "

"சரிதான் பாப்பா வீட்ல வேற யாரும் இல்லையா?"

"சேகர் இருக்கான்."

"சரி சேகரைக் கூப்பிடு..."

"சேகர் இந்தா.."

இதுல என்னவா? கடைசியில பாருங்க....

*****************
திருமதி இராஜராஜேஸ்வரிக்கு பிறகு வலைச்சர அறிமுகம் எழுதுவது தலைகீழாக அந்தரத்தில் நடப்பதற்கு சமானம். அவரது கடந்த ஏழு நாள் பதிவை யாரேனும் மொத்தமாக திரட்டி வைத்திருந்தால் அதுதான் ஒரு நிகழ்காலத் தமிழ்ப் பதிவர்கள் கையேடு.

என்னால் முடிந்த அளவிற்கு தொடுக்கப்பட்ட அறிமுகங்கள் கீழே..

பார்த்தது கேட்டது படித்தது என்று ஒரு வலைப்பூ. பழைய சென்னையைப் படம் பிடித்து நிறைய இடங்களில் பிரேம் போட்டு மாட்டியிருக்கிறார்கள். பழைய தமிழகத்தை அதாவது, தஞ்சையை, மதுரையை யாரோ படம் பிடித்ததை எடுத்து பொக்கிஷமாக அந்தக் கால தமிழகம் என்று ஒரு பதிவாக போட்டிருக்கிறார் பிகேபி. வருடத்திற்கு வருடம் தஞ்சையின் பரிணாம வளர்ச்சி தெரிகிறது. திருச்சி அப்போதே தஞ்சையை விட பிக் சிட்டி என்று புரிகிறது. மலைக்கோட்டை மேலிருந்து பார்த்தால் காவிரி கரைபுரண்டு ஓடுவது தெரிகிறது. அற்புதம். அற்புதம். நிறைய டெக்னாலஜி கூட எழுதுகிறார். சுவாரஸ்யமான வலைப்பூ.

லாஸ் ஏஞ்சல்ஸ் ராம் என்று ஒரு எழுத்தாளர். விகடன் பிரசூரம் இவர் எழுதிய இரண்டு புக் போட்டிருக்கிறார்கள். பெரிய ஆள். எழுத்திலும், ஏற்றத்திலும். போன வருடம் ஜூலையில் கல்கி பத்திரிகை செல்லும் இடமெல்லாம் ஒரே மசால் வடை வாசனை. என்னடான்னு எல்லோரும் ஆராய்ச்சி செய்து பார்த்தால் அதில் செவ்வடையான மசால்வடையே! அப்டின்னு ஒரு செம்மொழிக்கட்டுரை. மனுஷர் கலக்கிட்டார்.


ராமச்சந்திரன் உஷா ஒரு எழுத்தாளர். நுனிப்புல் என்று வலைத்தளத்திற்கு பெயர் வைத்து விட்டு வாசிக்க வருகிறவர்களுக்கு முழு விருந்து வைக்கிறார். சமீபத்தில் இவர் எழுதிய இரவுக் கட்டுரை மதுமிதா அவர்கள் தொகுத்த "இரவு" புத்தகத்தில் இடப்பெற்றது. அது இங்கே.  இமை மூட மறுக்கும் இரவுகள்

காதலிப்பது பற்றி ஒரு பொறுப்பான அக்கா என்னவெல்லாம் எண்ணுவாள். முப்பது வரியில் வரிக்கு ஓரிருவரி எழுதி ஒரு கவிதையில் அசத்துகிறார் ஜகன். காதலிப்பது பற்றி இவர் எழுதிய ஒரு கவிதை அப்படியே அடித்துப்போடுகிறது. இரண்டிரண்டு வரிகளில் வீட்டிற்கு மூத்தவளின் கடமைகளை பட்டியலிட்டுள்ளார்.

நடராஜன் வெங்கடசுப்ரமணியன் அவர்களது வலைப்பூ வாரணம். வலை முகப்பில் மூன்று சுழி ணவோடு சேர்த்து ஒரு யானையைக் கட்டி வைத்திருக்கிறார். ஆடிக்கும் அமாவாசைக்கும் எழுதினாலும் நிறைய அமாவாசை பல ஆடிக்கள் தாங்கும் பதிவாக வெயிட்டாக எழுதுகிறார். சாம்பிளுக்கு ரெண்டு.
1. எழுத்து எங்கிருந்து வருகிறது?
 2. தொலைக்காட்சி தொடர் காணும் உரிமைச் சட்டம்

இன்றைய வரிசையில் பிகேபியை தவிர மீதமிருப்போர் அபூர்வமாகத்தான் எழுதுகிறார்கள். ஆனால் எழுத்து அபூர்வமாக இருக்கிறது.




**********
என்னவா? சேகருக்கு 1 வயசு.
இது வாத்தியார் எழுதியது.

பின் குறிப்பு: முடிந்த வரையில் புதுப்புது அறிமுகமாக தருவதற்கு முயற்சிக்கிறேன்.  தினமும் இந்தப் பதிவில் ஆரம்பித்தது போல சில நறுக் கதைகள்/டயலாக்  பதியலாம் என்று எண்ணம்.

படக் குறிப்பு: நாம ஒன்னு கேட்டா அவங்க ஒன்னு செஞ்சுத் தரும் அனைத்து தொழில்நுட்ப விற்பன்னர்களுக்கும் மேற்கண்ட படம் சமர்ப்பணம். ரொம்ப நாட்களுக்கு முன்னாடி எல்லா ஈமெயில் இன்பாக்ஸ்சையும் சகட்டுமேனிக்கு நிரப்பிய படம்.

-

Monday, June 27, 2011

அடியேன் 'தீராத விளையாட்டுப் பிள்ளை ' ஆர்.வி.எஸ்.

முன்குறிப்பு: இன்றிலிருந்து வலைச்சரத்தில் எழுதுகிறேன். அங்கே வெளியிட்டதை இங்கேயும் பகிர்கிறேன்.


self portrait

ஆசிரியர் என்றாலே ரொம்ப பயந்தவன் நான். அதுவும் நான் படித்த மீசை வைத்த அத்யாபக்(अथ्यापक) என்றால் 50% அடிஷனல் மரியாதையான பயம். நான் தக்ஷின பாரத ஹிந்தி பிரச்சார சபாவினர் வைத்த மத்திமா தேர்வில் கோட் அடிக்காமல் செகண்ட் கிளாசில் ஒரே முயற்சியில் தேறிய பண்டிட். சிலம்பம் சுற்றும் வாத்தியாரைக் கூட பவ்யமாக காலைத் தொட்டு கண்ணில் ஒற்றிக்கொள்வேன். குருவிற்கு ஒஸ்தி மரியாதை ஜாஸ்தி கொடுப்பவன். அவர்களிடம் மரியாதையை சரி சமமாக ஊற்றிக் கலந்த பயம் என் ரத்தத்தில் ஓடுகிறது. திருடன் கையில் சாவி கொடுப்பது போன்ற சீனா சாரின் அழைப்பை ஏற்று ஆசிரிய நாற்காலியை  அலங்கரிக்க(?!) (அ) அபகரிக்க (அ) அமர ஒத்துக் கொண்டேன். ஒரு வாரம் நான் உட்காரும் சீட்டில் யாரும் 'பின்' சொருகாமல் இருந்தால் மிக்க சந்தோஷப்படுவேன். 

சுயபுராணம், சுயதம்பட்டம், சுயவிளம்பரம், சுயசொரிதல் என்று சுயம் இருக்கும் எல்லாவற்றையும் முதல் நாள் இங்கே பகிர்ந்துகொள்ளலாம் என்று சொன்னார் சீனா. ஒன்றும் பெரிதாக சொல்வதற்கில்லை. ஆனால் கடை விரித்துவிட்டேன். என்னுடன் பள்ளி, கல்லூரி படித்தவர்களுக்கு தெரியும். நான் ஒரு வாயரட்டை. பேச்சுப் பட்டறை. பாட, பேச, கெட்ட வார்த்தையால் திட்ட, சிரிக்க, சாப்பிட, கொறிக்க, குடிக்க, ஊத, உறிஞ்ச, முத்தமிட, கொட்டாவி விட, பிளந்து குறட்டை விட்டு தூங்க, சிலரை கடிக்க என்று வாயைப் படைத்த பரம்பொருள் எனக்கு மட்டும் முக்கால்வாசி நேரம் பேசுவதற்காக மெனக்கெட்டு செய்து அம்சமாக பொருத்திவிட்டான்.

நாளுக்கு நாள் கடியின் வீச்சு அதிகமானதால் தாங்கள் தப்பிப்பதற்காக சுயநலம் மிகுந்த நண்பர்கள் சிலர் என்னை எழுதத் தூண்டினார்கள். பொதுவெளியில் வலைப்பூ ஆரம்பிக்கும் போது இதுவரை நான் கடந்து வந்த தமிழாசிரியர்கள் கையில் பிரம்புடன் கண்ணில் முறைப்புடன் ஒருமுறை என் கண்முன்னே பரேட் நடத்தினார்கள். போதும். இத்தோடு நிறுத்திக்கொள்வோம். இனி எழுதிக் கொல்வோம். இதுவரை எழுதிக் கிழித்தவைகளை கொஞ்சம் பார்ப்போம்.

2007-ம் வருஷம் "ப்ளாக்ன்னா இன்னாபா?" என்பதற்காக அரசியல்வாதிகள் போல ஊர்ப்பெயரை முன்னால் சேர்த்து ஒரு வலைப்பூ பின்னி எனது திருமுகத்தை (பயந்துடுவீங்க! ஜாக்கிரதை!) மட்டும் ஏற்றி முதல் பதிவிட்டேன். பதிவுலகம் அப்போது லேசாக அதிர்ந்தது எனக்கு அப்பட்டமாக தெரிந்தது. அப்புறம் சுமார் மூன்று வருடம் தமிழில் நன்றாக எழுதப் படிக்க கற்றுக்கொண்டு 2010- பிப்பில் கச்சேரியை ஆரம்பித்தேன். "இப்போது நீ என்ன முத்தமிழறிஞரா?" என்று என் நெஞ்சுக்கு நேராக விரல் நீட்டுபவர்கள் சற்றே மன்னிக்க. பதிவுலகில் என்னுடைய வலைப்பூவின் பெயர் பெரிய அதிர்வலையை ஏற்படுத்தியது. அதற்காக பெயர்க்காரணம் சொன்னேன். நிறைய குடும்பங்களில் உறவுகள் பிச்சுப்போட்டது போல உலகெங்கும் விரவியிருக்கிறார்கள். அவர்களை ஒருங்கிணைக்க இஷ்டமித்திர பந்துங்கள் எழுதினேன். என் மானசீக ஆசான் சுஜாதாவின் நினைவு தினத்தன்று ராஜனுக்கு ராஜன் இந்த ரெங்கராஜன் தான் என்று அஞ்சலி செலுத்தினேன். 

பரமசுகர் என்ற போலிச்சாமியார் பற்றி நானெழுதிய முதல் கதை இரண்டு பின்னூட்டங்களுடன் அமோக வரவேற்பை பெற்றது. மகளிர் தினம் ஒன்று வந்ததில் ஜிப்பா போடாத கவிப்பேரரசாக அவதாரம் எடுத்தேன். வலைக் கவிஞர்கள் வருத்தம் கொண்டனர். சொல்லனாத் துயர் அடைந்தனர். வாளென வீசிய எனது கவிதைப் பேனாவுக்கு ஒய்வு கொடுத்தேன். எஃப் டிவியின் கலைச்சேவை நிறுத்தியபோது பொது நிகழ்வுகள் பற்றி எழுதிப் பார்த்தேன். மீண்டும் இரண்டு பின்னூக்கங்கள் கிடைத்தது. லோக்கலில் ஆஞ்ஜூ கோயிலுக்கு போய்விட்டு வந்ததும் Fair & Lovely பூசிய ரயிலில் சென்று வந்ததும் சமகால பயண இலக்கியங்கள் ஆயின. சாமியாரைப் பற்றி கதை எழுதிய நான் வீடியோ 'பிட்டில்' வாத்து மேய்த்த நடிகையுடன் பின்னிக்கொண்ட ஆனந்தமயமானவருக்கு பத்து நெத்தியடி யோசனைகள் சொன்னேன். எல்லோரும் நீங்களே ஒரு ஆஸ்ரமம் அமைக்கும் அளவிற்கு திறன் படைத்தவர் என்று உளமார பாராட்டினார்கள். இரண்டு சிஷ்யர்கள் வீட்டு வாசல் கதவை தட்டினார்கள்.

ஜட்டி இல்லாமல் ரயில் பயணம் செய்த மக்களை பற்றி நான் எழுதியதை தேடிப் பிடித்து "நல்லாயிருக்கு" என்று யூத்ஃபுல் விகடனில் பிரசூரித்தார்கள். குஷ்பூவும் நானும் சேர்ந்து பார்த்த விண்ணைத் தாண்டி வருவாயா பற்றி நான் எழுதிய விமர்சனம் கெளதம் வாசுதேவ் மேனனுக்கு அச்சடித்து ஸ்பெஷலாக வழங்கப்பட்டது. கும்பமேளாவைப் பற்றி போர்ஃப்ஸ் பத்திரிகையில் அபிஷேக் ரகுநாத் எழுதியது என்னை வெகுவாகக் கவர அந்தக் கட்டுரையை ஆங்கிலத்தில் இருந்து தமிழ்ப்'படுத்தினேன்'. கோடைக்கால சிறப்பு முகாம்கள் எதிலும் என் பிள்ளைகளை சேர்க்காமல் கொடைக்கானலுக்கும் மதுரைக்கும் சென்று மீனாட்சியின் அருள் பெற்று திரும்பியதை பற்றி பதிவிட்டிருந்தேன். 

உலக வலைப்பூக்களில் முதன் முறையாக கார்த்திக்கின் காதலிகள் என்று காதல் ரசம் சொட்டும் தொடர் எழுதி மக்கள் மீது மன்மத அம்பு போட்டேன். பால் தி ஆக்டோபஸ் ஆருடம் சொல்லிக் கலக்கிய காலத்தில் அதை ஒரு பிரத்யேக பேட்டி எடுத்தேன். மகாபாரதத்தில் வரும் நகுஷனைப் பற்றி சர்ப்ப..சர்ப்ப.. என்று எழுதி காப்பியம் படைத்தேன். ஆகஸ்ட்டில் சென்னையில் அடித்த பெருமழையில் பத்திரமாக நீந்திக் கரையேறி நான் இப்பெரு நகரத்தில் திரவியம் தேடுவதை பற்றி அங்கலாய்த்தேன். சினிமாவிற்குப் பெயர் வைக்க திணறுபவர்கள் இங்கே அணுகவும். போதாத காலமாகிய ஓரிரவில் மணியின் ராவணன் பார்த்துவிட்டு நான் பட்ட பாடு இங்கே.

மோகன்ஜி பதிவில் யானை ஜோக் ஒன்றிற்கு நானும் பத்மநாபனும் பின்னூட்டமிடப் போய் அது யானை மீது சத்தியம் என்ற பதிவாக மலர்ந்தது. வலையுலகில் பின்னூட்டங்களை திரட்டி பதிவிட்ட பெருமை என்னையே சாரும். (எழுத ஒன்னும் இல்லாமல் பதிவாகப் போட்டுவிட்டு பெருமை வேறு.. என்று யாரோ பேசுவது தெளிவாகக் கேட்கிறது) 2010 அக்டோபர் மாதத்தில் ஆரம்பித்தது ஊரைப் பற்றிய பதிவு. மன்னார்குடி டேஸ். இன்னமும் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது. தஞ்சைத் தரணியின் திண்ணைக் காற்றின் பெரும் சுகத்தை அனுபவித்தவனாதலால் திண்ணைக் கச்சேரி என்று ஒன்றை ஆரம்பித்து பல தரப்பட்ட விஷயங்களை வம்பளக்கிறேன்.

ரொம்ப நாட்களாக கவிதையை விட்டுவைத்த நான் திரும்பவும் பித்துப் பிடித்து ஆக்ரோஷமாக எழுதியது ஒரு கம்ப்யூட்டர்காரனின் காதல் கவிதை. மஹாபாரத கேரக்டர்கள் பற்றி கதைகள் எழுதலாம் என்று எண்ணியதில் விளைந்தவை யார் அந்த யோஜனகந்தி? மற்றும் பாகுகன்?.  காலை நேர நடைப்பயிற்சியின் போது பைரவர்களுடன் நட்பு பாராட்டிய பழக்கத்தில் எழுதியது நாய்கள் ஜாக்கிரதை!.

ஜி போட்டு எழுதினால் தனக்கு சம்மதமில்லை என்ற அப்பாஜிக்கு எதிராக மோகன்ஜி என்னை ஏவிவிட்டு முடிந்தவரை ஜகாரம் வைத்து எழுதச்  சொன்ன சிறுகதை ஜாலிலோ ஜிம்கானா. ரஜினியின் பஞ்ச் டயலாக்குகள் பல மேலாண்மைப் பாடங்கள் எடுக்க வல்லது. ரஜினி - தி மானேஜ்மென்ட் குரு பதிவு அதன் விளைவே! கால் கடுக்க ஒரு ரிஷப்ஷனில் நின்றதால் ஒரு பதிவு, புதிய கார் வாங்கப் போகிறேன் என்று ஒன்று, சேப்பாயியாக வாங்கியபின் ஒன்று என்று கிறுக்கியிருக்கிறேன்.

அறிவியல் புனைவுக் கதைகள் எனக்கு மிகவும் விருப்பம். வாத்தியார் பேனாவால் புகட்டியது. சிலிகான் காதலி என்று ஒன்று ஒரு சிறு அறிபுனைவுத் தொடர் எழுதினேன். கிராமத்து தேவதை மற்றும் ஃபைனான்ஸ் கம்பெனி மாப்பிள்ளை என்று இரு காதல் குறுந் தொடர்கள் அப்புறம் ஒரு துணை நடிகையின் கதை என்ற க்ரைம் தொடர் என்று பல கதைகள் எழுதி பாடாய்ப்படுத்தினேன். ஆண்டவன் இப்பதிவுலகைக் காக்கட்டும்.

உப்புமா பற்றி எழுதிய துரித உணவுகளின் தலைவன் லேட்டஸ்ட் ஹிட். யாக்கை திரி  என்ற அறிபுனை கதைக் கூட பரவாயில்லை என்று பேசிக்கொண்டார்கள்.

என்னுடைய ஸ்கோர் போர்டு:

பார்வையாளர்கள்: 110650 + நாளையிலிருந்து வரப் போகிறவர்கள்
மொத்த பதிவுகள் : 364
பின்தொடர்பவர்கள்: 170
மொத்த பின்னூட்டங்கள்:  8000 + இனிமேல் வரப்போகும் அர்ச்சனைகள்

வால்மீகி ராமாயணத்தை விட ஆர்.வி.எஸ்ஸாயணம் பெரிதினும் பெரிது என்பதால் இத்தோடு எண்டு கார்டு போட்டுவிட்டேன். தப்பித்தீர்கள். ஆயுஷ்மான் பவ! நாளை முதல் நீங்கள் அறிமுகத்தில் விழிக்கப் போகிறீர்கள். நன்றி!

பட உதவி: http://www.saturdayeveningpost.com. நார்மன் ராக்வெல்லின் triple self portrait மிகவும் பிரசித்தி பெற்ற ஓவியம். என்னை நானே ஓவர் டோஸாக விளம்பரப்படுத்திக் கொன்றதால் ச்சே.. கொண்டதால் இது இந்தப் பதிவில்.

-

Friday, June 24, 2011

முன்னுரைகளின் என்னுரை

முதல் இரண்டு வரிகளில் கதைக்குள்ளே ஒரு ஆளை சுருக்கு போட்டு இழுக்கவில்லை என்றால் உருவிக்கொண்டு எஸ்கேப் ஆகிவிடுவார்கள். முன்னுரையில் ஒரு பொறி வைத்து பெருந்தீயாக ஊதியோ அல்லது மெய்மறக்க வைத்து வாசகர்களை கட்டி இழுத்து வருவதோ மிகப்பெரிய கலை. அசாத்திய சாமர்த்தியம். பல பக்கங்களுக்கு படிப்பவர்களை அடித்துப் போடும் உத்தி தெரிந்த ஜாம்பவான்களுக்கு முன்னுரை ஒன்றும் எட்டாக் கனியல்ல. இருந்தாலும் இருநூறு முன்னூறு வார்த்தைகளுக்கு மிகாமல் கட்டுரை வரைக என்ற எட்டாம் வகுப்பு மாணவனின் வழவழா வாழைமரக் கட்டுரை போல இல்லாமல் கதைக்களனின் சாராம்சமாக எழுதப்படும் முன்னுரைகள் இந்த உலகத்திற்கு முன் மாதிரி உரைகளே!

ஒரு முன்னுரை கட்டுரைக்கு இவ்ளோ பெரிய முன்னுரையா என்று மூச்சிரைத்து முறைத்துப் பார்ப்பவர்கள் இங்கே நிற்க. எழுத்தாளர் வித்யா சுப்ரமணியம் அவர்கள் போன பதிவிற்கும் பிந்தைய பதிவில் பின்னூட்டமாக இந்த முகவுரைகளைப் பற்றி எழுத தொடரச் சொன்னதால் வந்த விளைவு இது. ஒரு நான்கு சாம்பிள்கள் சொல்லலாம் என்று அவா.

ஒன்று சிலப்பதிகாரம் என்ற தமிழர்களின் பண்டைய வரலாறு, கற்பு, நீதி என்று சகல துறைகளை அலசிய படைப்பின் முன்னுரை. இரண்டாவதாக ஒரு சமூக நாவலை வரலாற்றுடன் இணைத்து எழுதிய புலிநகக்கொன்றையின் முகவுரை. ஒரு இதிகாசக் கருவை சுவையாக, காதல் காவியமாக சொன்ன நித்ய கன்னி மூன்றாவது. கடைசியாக ஒரேநாளில் ஒரு சாமானியனுக்கு நடக்கும் அவனது வாழ்வின் தருணங்களை படம்பிடித்த நாளை மற்றுமொரு நாளே என்ற இலக்கியம். நான் இங்கே ஔவையார் ஆண்டி முருகனை வரிசைப்படுத்தி பாடியது போன்று ஒன்று இரண்டு போட்டது படைப்புகளை வரிசைப்படுத்துவதற்காக இல்லை.

முதலில் வாத்தியாரிடமிருந்து ஆரம்பிப்போம். நிறைய முகவுரைகள் அவர் எழுத்துக்களில் ஜொலித்திருக்கின்றது. சிலப்பதிகாரம் ஒரு எளிய அறிமுகம் என்ற தனது நூலிற்கு அவர் எழுதிய முன்னுரை என்னைப் போன்ற தற்குறிகளே சிலப்பதிகாரம் படிக்கலாம் என்று ஊக்கமூட்டியது. சுஜாதா ஆற்றியது இலக்கியப்பணியா என்று சர்ச்சையில் ஈடுபடுவோருக்கு ஒரு செய்தி. அறிவியல், இலக்கியம் என்று எதை எடுத்தாலும் "நைனா.. இது ஒன்னும் இல்லீப்பா.. அவ்ளோதான்" என்று தோளில் கையைப் போட்டு தோழனாய் சொல்லும் பாணி என்றென்றும் தமிழ்கூறும் நல்லுலகிற்கு புதுசு.
பாரதி 'நெஞ்சை அல்லும் சிலப்பதிகாரம்' என்று சொன்னது மிகப் பொருத்தமான வருணனை. ஆனால் தற்கால அவசரத்தில் இருக்கும் எஸ் எம் எஸ் - 'லாஸ்ட் டச் வித் டமில் யார்' - இளைஞர்களின் நெஞ்சை அள்ள சிலப்பதிகாரத்தின் கதையையும், அழகான அமைப்பையும், உவமைகளையும் எளிய முறையில் சொல்ல வேண்டியது தேவை என்று எண்ணினேன். அதன் விளைவுதான் இந்நூல்.

சிலப்பதிகாரத்தைப் படித்தபோது எனக்கு மிஞ்சிய ஒரு மகா வியப்பு. அதன் காலத்தை கடந்த நவீனம், contemporaneity , இன்றும் புதிதாக இருக்கும் கதையும், அதை சொல்லும் முறையும். அதை நீங்கள் உணர்ந்துகொள்ள முடிந்தால் இந்த எளிய உரையின் பயன் கிட்டியதாகச் சொல்வேன்.
சுஜாதா 

இணையத்தில் எதையோ தேடும்போது பொக்கிஷமாக கிடைத்தது புலிநகக்கொன்றை. இரண்டு நாட்களுக்குள் அடித்துபிடித்து வாங்கிப் படித்தேன். ஆசிரியர் பி.ஏ.கிருஷ்ணன். நாங்குநேரி பகுதியில் தென்கலை ஐயங்கார் குடும்பத்தின் ஐந்து தலைமுறை வரலாறு, சமூக நாவலாக. 1865 லிருந்து 1972 வரை நடக்கும் கதை. கம்யூனிசம், சுதந்திரப் போராட்டம், பெரியார், தி.மு.க என்று பலதளங்களை தொட்டுச் செல்கிறது இந்நாவல். Tiger Claw Tree என்று ஆங்கிலத்தில் முதலில் எழுதி அதை மீண்டும் தமிழில் எழுதியிருக்கிறார். அற்புதம். இதே கிருஷ்ணன் "அக்கிரகாரத்தில் பெரியார்" என்ற கட்டுரைத்தொகுப்பு ஒன்றையும் எழுதி வெளியிட்டிருக்கிறார். சுவாரஸ்யமான புத்தகம். புலிநகக்கொன்றை முன்னுரைக்கு வருவோம். தனது நாவலை திரும்ப எழுதும் போது மொழிபெயர்ப்பதின் நுணுக்கத்தைப் பற்றி ஆராய்ந்திருக்கிறார். அந்த முன்னுரையிலிருந்து சிறு துளிகள்.

"செவ்வாய் கிரஹத்திலிருந்து ஒரு மொழி அறிஞர் பூமிக்கு வந்தால் உலகெங்கும் மனிதர்கள் பேசும் மொழி ஒன்றுதான், ஒரு சில வட்டார வித்தியாசங்களுடன், என்ற முடிவுக்கு அவர் வருவார்" என்று சாம்ஸ்கி கூறுகிறார். "அந்த வித்தியாசங்கள் நமக்கு முக்கியமானவை." எவ்வளவு முக்கியமானவை என்பது என் ஆங்கில நாவலைத் தமிழில் மறுபடியும் எழுத முற்பட்டபோதுதான் தெரிந்தது. கம்பனையும் சங்கப்   பாடல்களையும், நம்மாழ்வாரையும் நமது காரமான வசவுகளையும் ஆங்கிலத்தில் கொண்டுவருவது எவ்வளவு கடினமோ அவ்வளவு கடினம் ஷேக்ஸ்பியரையும், ஹௌஸ்மானையும், நாஷையும், லியரையும் தமிழில் கொண்டுவருவது. திறமையான மொழிபெயர்ப்பாளர்கள் கோயிலில் வைத்து கும்பிடத்தக்கவர்கள்.
பி.ஏ. கிருஷ்ணன் 

தி.ஜா, கரிச்சான்குஞ்சு, எம்.வி.வெங்கட்ராம் போன்ற மருத நாட்டு எழுத்தரசர்களை எனக்கு ரொம்ப பிடிக்கும். ஒன்று அவர்கள் நான் பிறந்த பகுதிக்காரர்கள். ஏரியாப் பாசம். இன்னொன்று வாசகனை தலையை திருப்பவிடாமல் அனாயாசமாக கதையை நகர்த்தும் லாவகம் தெரிந்தவர்கள். தி.ஜா வசனத்திலேயே பாத்திரம் வழியாக காட்சி சொல்லும் வித்தகர். கரிச்சான்குஞ்சு அந்தக் கால தஞ்சை ஜில்லாவை எழுத்துக்களால் கையை பிடித்து அழைத்துக்கொண்டு போய் கண் முன்னே காட்டுவார். கும்பகோணத்து எம்.வி.வெங்கட்ராம் மஹாபாரதத்தில் நடந்த சிறிய நிகழ்வை எடுத்துக் கொண்டு நித்ய கன்னி என்ற காவியம் படைத்திருக்கிறார். அதன் முன்னுரையில் அவர் அரசர்களுக்கும் அந்தணர்களுக்கும் தரும் விளக்கம் அற்புதம்.


மகாபாரதத்தில் நித்ய கன்னியின் கதை ஆறேழு பக்ககளில் அடங்கிவிடுகிறது. இந்தச் சிறு பொறியைத்தான் "ஊதி ஊதி"ப் பெரும் தீயாக மூட்டியிருக்கிறேன். கதை சரித்திரக் காலத்துக்கும் முற்பட்டது; பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முந்தைய கதை. அப்போது இந்தப் பாரத பூமியில் பல அரசர்கள் ஆட்சி புரிந்தார்கள். அக்காலத்தில் அரசியலில் ஒரு நெறி இருந்தது. குடிகளின் மகிழ்ச்சியையும் சுபிட்சத்தையும் மனதில் கொண்டு, அரசர்கள் ஆண்டனர். அறத்தை அடிப்படையாகக் கொண்ட சமூக வாழ்க்கை அமைதியாக இருந்தது. மறை ஓதுவதையும் ஓதுவித்தலையும் தொழிலாகக் கொண்டதாலும், ஆயுதப் பயிற்சியை அறிந்து கற்பிக்கும் திறன் பெற்றிருந்ததாலும், பொருள் தேடுவதில் முனையாமல் பரம்பொருள் தேட்டத்தில் ஈடுபட்டிருந்ததாலும் அந்தணர்களை அரசர்களும் மக்களும் மதித்தனர் அக்காலத்தில். நாட்டின் ஆட்சிக்கு மட்டும் அன்றி மக்களின் வாழ்க்கை நெரிக்கும் அந்தணர்கள் வழி வகுத்துக் கொடுத்தார்கள். அன்றைய சமூகத்தில் அவர்களுக்கு அத்தகுதி இருந்தது. மேலே சொன்ன பகைப்புலனில்தான் 'நித்ய கன்னி'யின் கதை உருவாகியிள்ளது.
எம்.வி.வெங்கட்ராம்
 
இது கொஞ்சம் இங்கிலிபீசு முன்னுரை. இது இந்தக் கதைக்காக பிரத்யேகமாக எழுதப்பட்டது இல்லை. இருந்தாலும் காலச்சுவட்டில் இதை தேர்ந்தெடுத்து பிரசூரித்தவர் யாராக இருந்தாலும் மனமார்ந்த பாராட்டுக்கள். ஒரே நாளில் கதை நகர்வதாக எழுதப்பட்ட ஜி.நாகராஜனின் நாளை மற்றுமொரு நாளே என்ற நாவலின் தொடக்கத்தில் இதை அச்சடித்திருக்கிறார்கள்.


"God is not always in his Heaven, all is not always right with the world. It is not all bad, but is is not all good, it is not ugly, but it is not all beautiful, it is life, life, life - the only thing that matters. It is savage, cruel, kind, noble, passionate, selfish, generous, stupid, ugly, beautiful, painful, joyous - it is all those and more and it is all these that I want to know and, by God, I shall, though they crucify me for it"
THOMAS WOLFE

லா.ச.ரா, கி.ரா.ஜா போன்ற தலைசிறந்த எழுத்தாளுமைகள் பற்றி இன்னும் நிறைய இருக்கிறது. முடிந்தால் சிலபல பகுதிகளாக படித்தவற்றை வேறொரு பதிவில் பகிர்கிறேன். இதை எழுதவேண்டும் என்று ஆரம்பித்து மற்றவர்களையும் ஊக்கப்படுத்திய எழுத்தாளர் வித்யா சுப்ரமணியத்திற்கு நன்றி.

மோகன்ஜி, அப்பாதுரை, பத்மநாபன், சுந்தர்ஜி, போகன் போன்றவர்கள் இதைப் பற்றி இன்னும் விஸ்தாரமாக எழுதலாம். இச் சிறுவனால் முடிந்தது இவ்வளவே!

திரு ரிஷபனின் முன்னுரை இங்கே.

-

Thursday, June 23, 2011

உலக யுத்தம் - II

இரண்டாம் உலகப்போரை படங்களில் கொண்டு வந்து நிறுத்தியிருக்கிறார்கள். ஹிட்லரின் நாஜிப் படைகளின் ஊடுருவல்களும், ஜப்பானிய ராணுவத்தின் சீனக் கைப்பற்றுதலும், விஷவாயு முகமூடியணிந்த புத்த பிக்குகளும், இத்தாலிய முசொலினியும், வீடு வாசல் இழந்து வீதிகளில் குடும்பத்தோடு குடியிருப்போரையும் என பல படங்கள், தகவல்களுடன்.


Adolf Hitler, age 35, on his release from Landesberg Prison, on December 20, 1924. Hitler had been convicted of treason for his role in an attempted coup in 1923 called the Beer Hall Putsch. This photograph was taken shortly after he finished dictating "Mein Kampf" to deputy Rudolf Hess. Eight years later, Hitler would be sworn in as Chancellor of Germany, in 1933.
(Library of Congress)


First pictures of the Japanese occupation of Peiping (Beijing) in China, on August 13, 1937. Under the banner of the rising sun, Japanese troops are shown passing from the Chinese City of Peiping into the Tartar City through Chen-men, the main gate leading onward to the palaces in the Forbidden City. Just a stone's throw away is the American Embassy, where American residents of Peiping flocked when Sino-Japanese hostilities were at their worst. (AP Photo)

Buddhist priests of the Big Asakusa Temple prepare for the Second Sino-Japanese War as they wear gas masks during training against future aerial attacks in Tokyo, Japan, on May 30, 1936. (AP Photo)
Italian Fascist leader Benito Mussolini, center, hands on hips, with members of the fascist Party, in Rome, Italy, Oct. 28, 1922, following their March on Rome. This march was an act of intimidation, where thousands of fascist blackshirts occupied strategic positions throughout much of Italy. Following the march, King Emanuelle III asked Mussolini to form a new government, clearing the way towards a dictatorship. (AP Photo)
Three hundred fascist insurgents were killed in this explosion in Madrid, Spain, under the five-story Casa Blanca building, on March 19, 1938. Government loyalists tunneled 600 yards over a six-month period to lay the land mine that caused the explosion. (AP Photo)
Scores of families are seen taking refuge underground on a Madrid subway platform, on Dec. 9, 1936, as bombs are dropped by Franco's rebel aircraft overhead. (AP Photo)
Florence Thompson with three of her children in a photograph known as "Migrant Mother." This famous image is one of a series of photographs that photographer Dorothea Lange made of Florence Thompson and her children in early 1936 in Nipomo, California. More on the photo here. (LOC/Dorothea Lange) 
A group of German girls line up to learn musical culture under auspices of the Nazi Youth Movement, in Berlin, Germany on Feb. 24, 1936. (AP Photo
The zeppelin Hindenburg floats past the Empire State Building over Manhattan on Aug. 8, 1936. The German airship was en route to Lakehurst, New Jersey, from Germany. The Hindenburg would later explode in a spectacular fireball above Lakehurst on May 6, 1937. (AP Photo) #
Adolf Hitler of Germany and Benito Mussolini of Italy greet each other as they meet at the airfield in Venice, Italy, on June 14, 1934. Mussolini and his fascists put on a show for Hitler, but on the details of their subsequent conversations there was little news. (AP Photo) #
Thousands of young men flocked to hang upon the words of their leader, Reichsfuhrer Adolf Hitler, as he addressed the convention of the National Socialist Party in Nuremberg, Germany on Sept. 11, 1935. (AP Photo)
Adolf Hitler is shown being cheered as he rides through the streets of Munich, Germany, November 9, 1933, during the celebration of the 10th anniversary of the National Socialist movement.
(AP Photo)
இத்தோடு முடியவில்லை. இன்னும் நிறைய படங்கள் The Atlantic இணையத்தில் இங்கே.

இரண்டு நாட்களாக வலைப்பூ பதிவில்லாமல் காய்ந்து கிடக்கிறது. கொஞ்சம் பணி மிகுதி. ஆகையால் இந்த படப்பதிவு.

-

Tuesday, June 21, 2011

குழந்தை மனசு

ishqiya

ஒரு பாட்டைப் பார்த்ததும் அந்தப் படத்தை பார்க்க வேண்டும் என்ற பேராவல் எழுந்தது. தில் தோ பச்சா ஹை ஜி (Heart of a Child = குழந்தை மனசு) என்ற இந்தப் பாடல் ரஹெட் பதே அலி கான் எனும் கவாலி பாடும் பாகிஸ்தானிய இளம் பாடகரால் நமக்கு பரிசளிக்கப்பட்டது. படம் இஷ்கியா. சூஃபிக்களின் பக்திப் பாடல்கள் கவாலி. பதே அலி கானுக்கு வெண்கலக் கடையில் யானை புகுந்தது போல நல்ல காத்திரமான குரல். அட்சர சுத்தமாக பாடுகிறார். உத்தர இந்தியாவில் கஜலில் ஜொலிப்பார் என்று நினைக்கிறேன். பாலு மகேந்திரா படங்களில் வருவது போல காட்சிகளுக்கு பின்னால் தனி ட்ராக்காக பாடல் ஒலிக்கிறது. விஷால் பரத்வாஜின் அமர்க்களமான இசை காதுகளில் தேனாய்ப் பாய்கிறது.

நஸ்ருதீன் ஷாவின் நேர்த்தியான நடிப்பு இந்த பாடல் முழுவதும் நம்மை வசப்படுத்துகிறது. வடக்கத்திய கிராமங்களின் ஊடே செல்லும் ஒரு பேருந்து பயணத்தில் துவங்கும் இந்தப் பாடல் நம்மையும் அந்த பஸ்ஸின் கடைசி இருக்கையில் உட்கார வைத்துவிடுகிறது. "சீட் வேண்டாம்" என்று தலையசைக்கும் போதும் சரி அந்த முகவரி தெரியாத துறுதுறு விழிப் பெண்ணின் பக்கத்தில் உட்கார்ந்து பெருமூச்சு விடும் போதும் சரி அசத்துகிறார் ஷா. 

பக்க வாத்தியங்கள் இல்லாமல் பாடல் ஆரம்பித்து நஸ்ருதீன் ஷாவின் நினைவுகள் சிறகடித்து பறக்க, பக்கத்து இருக்கையில் பயணிக்கும் அந்தத் துருதுரு கண் குமரியின் தோளில் தலை சாய்த்து கனாவில் மூழ்குகிறார். அடுத்த கணம் திரையில் வித்யா பாலன் வந்து நம் மனதை கொள்ளையடிக்கிறார். இங்கே நமக்கு காதல் நரம்பு புடைக்கிறது. நஸ்ருதீன் ஷாவின் நடிப்பிற்கு இணையாக இளமை துள்ளலில் வருகிறார் விபா. கண்களை விரிய வைக்கிறார். பாடல் முழுக்க வரும் காட்சி அமைப்புகள் வெகு சாதரணமாக நாம் ஷாவை பின் தொடர்வது போல அமைந்துள்ளது குறிப்பிடதக்கது. படாடோக வாத்தியங்கள் இல்லாமல் மெல்லிய இசை. கிடார் அடி தூள்! Strumming பட்டையைக் கிளப்புகிறது. 

டீக்கடையில் பூண்டு உரித்துக்கொண்டிருப்பவன் தனது காதலியின் கையை ஆசையாய் வருட அவள் பூண்டு உரித்த தோளியை ரசமாக அவன் முகத்தில் வீசுகிறாள். ஒரு பெருமூச்சோடு இதைப் பார்க்கும் ஷா, முகத்தில் அவரது எண்ணத்தைக் கொண்டு வரும் காட்சி ஒன்று மற்றொமொரு அற்புதம். புத்தம் புது தேன் மலராக குளித்து விட்டு வரும் விபாவை பூ போட்டு அழைக்கும் அர்ஷத் வர்ஷி நான்காவது நிமிடத்தில் இருந்து பச்ச்சுக்கும் முத்தக்காட்சிகள் பற்றிய வர்ணனை என்னைப்போன்ற சிறுவர்களால் வார்த்தைகளில் வடிக்கமுடியாதது.

கிராமங்களின் வழியாக செல்லும் பேருந்தை எடுத்த லாங் ஷாட் நிச்சயம் அனேக ரசிகர்களின் விசேஷ பாராட்டை பெற்றிருக்கும். வித்யா பாலன் நம்மூர் ஆட்கள் கண்ணில் இன்னும் படவில்லையா? வேண்டாம். தனுஷுக்கு ஜோடியாக போட்டு ரோஸு ரோஸு ரோஸு என்று தெருவில் ஆடவிட்டு படுத்துவார்கள். நாம் இன்னும் நிறைய முன்னேறவேண்டும் போலத்தான் இருக்கிறது.


அதீத காதல் காட்சிகள் நிரம்பிய இந்தப் பாடலின் சுட்டி:  
http://www.youtube.com/watch?v=WI70m8-WRto&NR=1

ஹே பக்வான்! Vidhya பாலனிடமிருந்து முஜே பச்சாவ்!! मुझे बचाव !!

பின் குறிப்பு: கண்டதும் காதலில் விழும் இளகிய மனம் படைத்தவர்கள் மேற்கண்ட பாடலைப் பார்க்கவேண்டாம் என்று அறிவுத்தப்படுகிறார்கள். 

பட உதவி: www.bollywoodworld.com

-

Sunday, June 19, 2011

ஆயிரம் அப்பாக்கள்

father 

இன்றைக்கு அப்பாக்கள் தினம். கதை, கவிதை எழுதும் அளவுக்கு எனக்கு திராணியில்லை. அதனால் இந்த அப்பாவியின் ஒரு அப்பாக் கட்டுரை ஜல்லி.
 
ஆயிரம் அப்பாக்கள்

கண்ணை உருட்டி முறைத்துப் பார்க்கும் அப்பா.

பெல்ட்டை உருவி பட்டையைப் பேர்க்கும் அப்பா.

தோளில் கை போட்டுத்  தோழனாய் சில அப்பா.

தனது செய்கைகளினால் ஆசானாய் சில அப்பா, அசடாய் சில அப்பா.

மகனைப் பார்த்து முகம் நிமிர்த்தி பேசாமடந்தை அப்பாக்களும் இந்த யுகத்தில் உண்டு.

எதற்கும் சிரித்துக்கொண்டு டேக் இட் ஈசி அப்பாக்கள் சிலர்.

வார நாட்களில் காலை மாலை பணிகள் கழுத்தை நெரிக்க ஞாயிற்றுக்கிழமை அப்பா.

குழந்தை தன் கழுத்தைக் கட்டிக்கொண்டு உப்புமூட்டை சுமக்கும் இப்போது அப்பாவான புது அப்பா!

தான் சுமந்த குழந்தைகள் தன்னைச் சுமக்கும் குழந்தையான வயசாளி அப்பா.

ஒரு பெரியவீடு, ஒரு சின்னவீடு என்று ரெண்டு வீட்டுக்கு ஒரே அப்பா.

சொத்துள்ள அப்பா, சொத்தையான அப்பா.


குமாரப்பா, மாரப்பா, பங்காரப்பா, செல்லப்பா, கிட்டப்பா, கண்ணப்பா, திம்மப்பா, பட்டப்பா, குட்டியப்பா, வீரப்பா, ராஜப்பா, அப்பாதுரை, அப்பாசாமி, பக்கத்து வீட்டு வாண்டுவின் அப்பா... பிள்ளையாரப்பா......... ஸ்... அப்பப்பா எவ்வளவு அப்பாக்கள். பெரியப்பா, சிற்றப்பா, ஒன்றுவிட்ட ரெண்டுவிட்ட பெரிய சிற்றப்பாக்கள் என்று அப்பாக் கூட்டம் நிறைய குடும்பங்களில் ஏகத்துக்கும் உண்டு.

எல்லா அப்பாக்களுக்கும் இன்று எனது தந்தையர் தின வாழ்த்துக்கள்.

இந்த சரக்கோட, கொஞ்சம் சினிமாவையும் கலந்து டாடீஸ் ஸ்பெஷல்..

பெல் பாட்டம் பீச் காற்றில் அலைபாய பாக்யராஜ் பட "டாடி டாடி ஓ மை டாடி" பாடல்:


ரெண்டு ஆண் சிங்கங்களுக்கு அப்பாவான பின்னும் அர்விந்த் சாமி எல்லா அப்பாக்களின் ஆசையை சொல்லும் விதமாக பொட்டப்புள்ள பெத்துக் குடு என்று பாடும் பம்பாய் பாடல்..



அப்பா பெயரச் சொல்லி கூப்பிட்டு கல்லூரி வகுப்பை விட்டு கார்த்திக் அழைத்து வரும் ரேவதி... அப்புறம் 05:15ல் ரெஸ்டாரெண்டில் அப்பாவுக்கு பயந்து மறைந்து கொள்ளும் போது மிஸ்டர் சந்திரமௌலி என்று கலாய்க்கும் கார்த்திக். எண்பதுகளில் காதல் காட்சிகளில் புரட்சி ஏற்படுத்திய சீன் இது.


இரு இமயங்கள் அப்பா-மகன் வேஷத்தில் நடித்த தேவர் மகனில் இருந்து ஒரு காட்சி


பின் குறிப்பு: ஏதோ என்னால முடிஞ்சா அப்பா பதிவு... அப்பாடி....

பட உதவி: http://rhapsodani.com
-

Saturday, June 18, 2011

துரித உணவுகளின் தலைவன்


இந்தப் பெருமை வாய்ந்த பாரத தேசத்தில் சிலருக்கு தமிழில் உப்புமா, தெலுங்கில் உப்பிண்டி, கன்னடத்தில் உப்பிட்டு என்றால் ரமணா விஜயகாந்த் ஸ்டைலில் "பிடிக்காத வார்த்தை". காதை மூடிக்கொண்டு காத தூரம் ஓடிவிடுவார்கள். ஏன் என் சுற்றம் நட்பில் நிறைய பேருக்கு அதைக் கண்டால் ஒருவித அஜீரண அலர்ஜி. அதையே தாரளமாக அரைப்படி சர்க்கரை சேர்த்து ரெண்டு ஏலக்காய் தட்டிப்போட்டு கேசரி பவுடர் கொஞ்சம் தூவி இறக்கினால் ரவை மிச்சம் வைக்காமல் அந்தக் கேசரியை எல்லோரும் தட்டை நக்கி சாப்பிட்டு ஏப்பம் விடுவார்கள். எனக்கு ரவா உப்புமா ரொம்ப பிடிக்கும். அதுவும் கல்யாணம் ஆன புதிதில் என் தர்மபத்தினி கொழகொழன்னு கூழ் மாதிரி கிண்டின "ரவா உப்புமா" (எ) "ரவா பேஸ்ட்" ரொம்ப ரொம்ப பிடிக்கும். அடடா.. என்ன ருசி. என்ன ருசி. அல்வா போல தொண்டையில் வழுக்கிக்கொண்டு உள்ளே இறங்கியது. பதிலுக்கு மல்லிப்பூ வாங்கிக் கொடுத்தேன். "பிடிச்சிருக்கா?" என்று கையில் கரண்டியோடு ஒரு எதிர்பார்ப்பில் கேட்டபோது மூணு வயசு மானஸா மாதிரி கை ரெண்டையும் சிறகாக அகல விரித்து "அவ்ளோ பிடிச்சிருக்கு"ன்னு மனமாரச் சொன்னேன்.

ராத்திரி பதினொன்னரைக்கு பொட்டியும் கையுமாக வந்திறங்கும் திடீர் விருந்தாளிகளுக்கு பசிப்பிணி தீர்க்கவல்லது ரவா உப்மா. பத்து நிமிடத்தில் சாப்பிட்டுவிட்டு பனிரெண்டுக்கு காலை நீட்டிப் படுத்து குறட்டை விடுவார்கள். செய்வதும் ஈசி, உண்பதும் ஈசி. ஜீரணமும் ஈசி. தொட்டுக்க ரெண்டு ஸ்பூன் சர்க்கரை எதேஷ்டம். முதல்நாள் ராத்திரி மாங்காய்த் தொக்கோடு ரவா உப்புமாவை பிசிறி சாப்பிட்ட என்னுடைய உறவினர் ஒருவர் மறுநாளும் நாக்கைச் சப்புக் கொட்டி அதே காம்பினேஷன் ரிப்பீட்டு கேட்டார். ரவா உப்புமா இந்தக் கால ஃபாஸ்ட்  ஃபுட்டுக்கேல்லாம் தலைவன்.


அரிசி நொய் உப்புமா வித் கத்திரிக்கா கொஸ்த்து தேவாமிர்தமா இருக்கும். வெங்காய சாம்பார் கூட அதன் பொருத்தமான ஜோடிதான். ஒரு சமயம் கோயில் குளம் என்று மாயவரம் பக்கம் சுற்றியபோது ஊருக்கு வெளியே வாசலில் "டிபன் ரெடி" போர்டு போட்ட சிற்றுண்டி ஹோட்டலில் போய் உட்கார்ந்து ஆசையாய் "இட்லி"ன்னு கேட்டா "ஒரு அரை மணி ஆவும்"ன்னு சொல்லிட்டு பதிலுக்கு அழுக்கு கையை உள்ளே விட்டு தம்ளர்ல தண்ணீர் கொண்டு வந்து வைத்தார்கள். அந்த அகாலத்தில் "வேறென்ன இருக்கு?" என்று பசியில் வயிற்றைப் பிடித்துக் கொண்டு ஈனஸ்வரத்தில் முனகியதில் வந்த பதில் "உப்பூ......மா...". ஒரு கட்டு கட்டினேன்.

என்னுடைய உறவினர் வட்டத்தில் காற்றடித்தால் பறந்து மாயமாய் மறையும்படி ஒல்லியாக ஒரு மாது இருப்பார். கை, கழுத்து மற்றும் காதுகளில் அணிந்திருக்கும் நவீன அணிகலன்களின் எடை அவரை காற்றிடம் இருந்து காப்பாற்றும். கைலாயத்தில் சிவபெருமானுக்கு சேவை புரியும் கிம்புருடர்கள் கழுத்தில் கிடக்கும் மாலை எலும்பாக இருப்பார். "தெரு நாய்களிடம் ஜாக்கிரதையாக இரு" என்று அடிக்கடி எச்சரிப்பேன். ஒரு உறவினர் வீட்டு விசேஷத்தில் முதல்நாள் முகாமில் சாப்பிடுவதற்கு தட்டை ஏந்தி "எனக்கு உப்புமா.." என்று கும்பலாக நீட்டியபோது "நீ உப்புமா" என்று நான் சொன்னதற்கு வெகு நேரம் யோசித்தார். "கிண்டல்" என்று புரிந்தும் அர்த்தம் புரியாமல் அடிக்க வந்தபோது அவளை சுட்டி "நீ", கையிரண்டையும் இடுப்பருகில் மடக்கி குண்டு போல அபிநயித்து காட்டி "உப்பு", சிரித்துக்கொண்டே "மா" என்று மோனோ ஆக்டிங் செய்து காண்பித்தேன். சற்றுநேரம் வரை மலங்கமலங்க விழித்தது தட்டை கீழே போட்டுவிட்டு கொலைவெறியோடு என்னை துரத்த ஆரம்பித்துவிட்டது. அன்றிலிருந்து விசேஷங்களில் வாய் பொத்தி அடக்கி வாசிக்க வேண்டும் என்று நினைத்துக் கொண்டேன். இன்னமும் அமுல்படுத்தவில்லை.

"அது ஒரு உப்புமா கம்பெனி சார், எல்லாத்தையும் சுருட்டிகிட்டு ஓடிப் போய்ட்டானுங்க" என்று இகழ்வோர் ஏன் உப்புமாவை உபயோகிக்கிறார்கள் என்று இன்றுவரை தெரியவில்லை. கொஞ்சம் கத்திரிக்கா, தக்காளி, உருளைக்கிழங்கை பொடிப்பொடியாக நறுக்கிப் போட்டு கடுகு தாளிச்சுக் கொட்டி கிளறி இறக்கினா "கிச்சடி நல்லா இருக்கு.. கிச்சடி பேஷா இருக்கு"ன்னு ஐந்தாறுமுறை கேட்டு வாங்கி உள்ளே தள்ளுகிறார்கள். "இன்னிக்கி ஏன் இட்லிக்கு தேங்காய் சட்னி அரைக்கலை?"  என்று சிரம் தாழ்த்தி அனேக கோடி நமஸ்காரங்களுடன் பவ்யமாக கேட்டால் கூட "ச்சே. இந்த உப்புமா பொறாத விஷயத்துக்கு ஏன் இப்படி கூச்சல் போடரான்"ன்னு சொல்லி நிராகரித்து விடுகிறார்கள். ஒதுக்கித் தள்ளட்டும், இருந்தாலும் "உப்புமா பொறாத விஷயம்" என்று சொல்லவேண்டுமா?

சாம்பாரில் வெல்லம் கரைத்து தித்திப்பாக சாப்பிடும் கர்நாடக தேசத்தில் "ரவா பாத்" என்று ஸ்டைலாக பெயர் வைத்து விற்கிறார்கள். பணி நிமித்தம் பெங்களூரூ செல்லும்போதெல்லாம் ரவா பாத்தும் கொஞ்சம் இனிப்பு தூக்கலாக இருக்கும் சாம்பாரும் சேர்ந்து வயிற்றை நிரப்புகிறது. அங்கே பந்தியில் பாயசத்திற்கு பதில் சாம்பார்தான் முதலில் இலையில் வைப்பார்களோ? ஆயாசமாக இருக்கிறது.


இவர்களுக்கு எல்லாம் பதில் சொல்லும் விதமாக சாட்டையடியாக இந்த வாரத்தில் ஒரு விஷயம் நிகழ்ந்துள்ளது. இந்தியாவில் பிறந்து அமெரிக்காவில் நாக்கு செத்துப் போன இந்திய கும்பலுக்கு வடிச்சு கொட்டும் Floyd Cardoz என்பவருக்கு சமையல் போட்டியில் $100,000 பரிசு கிடைத்துள்ளது. நியூயார்க் நகரத்தில் மூன்று நட்சத்திர அந்தஸ்த்தில் இருந்த  தப்லா என்ற இந்திய உணவு உபசரிக்கும் ஹோட்டலில் பணிபுரிந்தார் ஃபிளாயிட். தப்லா இப்போது யூனியன் ஸ்கொயர் ஹாஸ்பிடாலிட்டி குரூப்பிடம். கான்சரில் இறந்த தன் தந்தையின் நினைவாக தான் கெலித்த பரிசுத்தொகை முழுவதையும் கேன்சர் ரிசர்ச் இன்ஸ்ட்டியூட் ஒன்றிற்கு தானமாக கொடுத்துவிட்டார். இப்படி ஒரு உன்னதமான நோக்கத்திற்கு உதவிய உப்புமாவை இனிமேல் யாரும் எடுத்தெறிந்து பேசாமல் இருப்பார்களா?

ஐரோப்பிய அமெரிக்க இத்தாலிய பீட்ஸா பாஸ்தா போல ஒரு ஆறு மாதத்தில் "டயல் எ உப்புமா" என்று சிகப்பு கலர் பொட்டியை டூவீலர் பின்னால் கட்டிக்கொண்டு அரை மணி நேரத்தில் வீட்டு வாசலில் கொண்டு வந்து பொட்டலமாய் கொடுத்துவிட்டு போவார்கள். கெட்டிச் சட்னி சாஷேக்களில். "பிச்சூஸ் உப்மா இஸ் மை ஃபேவரிட் ஃபுட்" என்று கூந்தலை விரித்துப் போட்டுக்கொண்டு கால் மேல் கால் போட்ட திரையுலகக் கனவுக் கன்னி யாராவது பனியனோடு கவர்ச்சியாக விளம்பரங்களில் வருவார்கள். "சூப்பி உப்புமா" என்று குடிக்கலாம் சாப்பிடலாம் வகையறா வெளியிடுவார்கள். உப்புமாவை நீர்க்க காண்பித்து காஜோலை உறிஞ்சி சாப்பிட வைத்து விளம்பரப் படுத்துவார்கள். இட்லி தோசைக்கு பதில் திஹாரில் உப்மா பரிமாறப்படலாம். வேண்டாத மாப்பிளைக்கு தான் மாமனார் வீட்டில் உப்புமா கிண்டி போடுவார்கள் என்ற எண்ணம் மாறுவது திண்ணம். எனக்கு நம்பிக்கையிருக்கிறது. இனிமேல் உப்மா பிக்கப் ஆயிடும்.


பின் குறிப்பு: இந்த உப்புமா மேட்டரை பொறுமையாக படித்ததற்கு நன்றி. மேற்கண்ட பாராவில் நான் அறிவித்துள்ள வியாபார உத்தியை பயன்படுத்தி தொழில் தொடங்குவோர் எனக்கு ராயல்டி வழங்கும்படி கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.


பட உதவி: www.sailusfood.com மற்றும் archives.starbulletin.com

-

Thursday, June 16, 2011

புருஷன் பொண்டாட்டி

1. மளிகை சாமான் 
ஒருத்தனுக்கு சாமியக் கண்டாலே வேப்பங்காயா பிடிக்காதாம். நீங்க நினைக்கிற மாதிரி சாமிங்கறது பக்கத்து வீட்டு ஆசாமி இல்லை. கோவிலில் இருக்கும் கும்புடுற சாமி. ஆனால் அவன் பொண்டாட்டிக்கு பக்தி ரொம்ப ஜாஸ்தியாம். எப்போப் பார்த்தாலும் ஸ்லோகம், ஜபம், தபம்ன்னு பக்தி பழமா இருப்பாளாம். இவன் நாஸ்திகனா இருந்தாலும் பொண்டாட்டியோட பக்தியை குத்தம் குறை சொல்லாம அவ இஷ்டத்துக்கு சாமி கும்பிட விட்டுட்டானாம்.

ரத்தம் சுண்டிப் போய் வயோதிக காலம் வந்தது. ஆடி அடங்கி படுத்த படுக்கையாக ஆறடி படுக்கையில காலை நீட்டி விழுந்துட்டானாம். பொண்டாட்டிக்கு ஒரே வருத்தம். கடைசி வரைக்கும் சாமி கும்பிடாம செத்துப் போகப் போறாரே, இவருக்கு மோட்சம் கிடைக்காதே அப்படின்னு ரொம்ப கவலைப்பட்டாளாம். சரி, அவரு சாமி கும்பிடாட்டாலும் பரவாயில்லை, சாவும்போது சாமி பெயரைச் சொல்லிட்டு செத்துப் போனால் சொர்கத்துக்கு போவாரே அப்படின்னு ஆசைப்பட்டு பக்கத்து வீட்டு குப்புசாமி மகன் முருகனை கொண்டு வந்து அவன் கண்ணு முன்னாடி நிறுத்தி "ஏங்க... இவன் யாரு தெரியுதா?" அப்படின்னு கேட்டாளாம். கண்ணை முழிச்சி திருதிருன்னு அவனை பார்த்துட்டு பழைய கோபத்தை மனசுல வச்சுக்கிட்டு "உம் தெரியுது... தெரியுது.. பக்கத்து வீட்டு திருட்டுப்பய மவன்தானே..." ன்னு சொல்லிட்டு கண்ணை மூடிட்டானாம்.

அவன் சம்சாரத்துக்கு ஒரே வருத்தம். மூக்குகிட்ட கையை வச்சுப் பார்த்து இன்னும் உசுரு இருக்குன்னு தெரிஞ்சுகிட்டாளாம்.  இன்னும் சாவலை, இருந்தாலும் கடைசி வரை சாமி பேர் இவன் வாய்லேர்ந்து வராது போலருக்கேன்னு நினைச்சுக்கிட்டு இதுக்கு ஏதாவது வழி இருக்கான்னு யோசிச்சாளாம். அப்ப பக்கத்து வீட்டு கோமளத்துக்கிட்ட ரோசனை கேட்டாளாம். அவ சொன்னாளாம் "ஏய்.. உம்புருஷன் கிட்ட ஜீரகத்தை எடுத்துக் காமி. அதப் பார்த்துட்டு அவரு சீராமான்னு கேள்வி கேப்பாரு... ராமன் பேரச்சொல்லி புண்ணியத்தைக் கட்டிப்பாரு..."ன்னு ஐடியா கொடுத்து அனுப்பிச்சாளாம்.

அடுப்பாங்கரையிலேர்ந்து அஞ்சறைப் பெட்டியைத் தொறந்து ஒரு கைப்பிடி ஜீரகத்தை எடுத்துக்கிட்டு படுக்கையில கிடக்கிற புருஷன்கிட்டே காமிச்சு "இது என்னா?"ன்னு கேட்டாளாம். முழிச்சி பார்த்து "மளிகை சாமான்"ன்னு சொல்லிட்டு செத்துப் போயிட்டானாம்.

இது எப்படி இருக்கு?

********************
Jodi Fighting
*******************

2. அமெரிக்கனுக்கு விடுதலை

அமெரிக்காவுலேர்ந்து ஒருத்தன் நம்மூரு சாமியாரைப் பார்க்க வந்தானாம். பல சிஷ்ய கோடிங்க கூட பந்தாவா இருந்த சாமியாரை படாதபாடு பட்டு வி.ஐ.பி டிக்கெட் வாங்கி பார்த்தானாம்.

"மகனே உனக்கு என்ன வேண்டும்?"ன்னு கேட்டாராம் சாமியார்.

"சாமி! நான் நினச்சது பலிக்க எனக்கு ஏதாவது ஒரு மந்திரம் சொல்லித்தாங்க"ன்னு கேட்டான் அமெரிக்கன்.

அவனை பக்கத்துல கூப்ட்டு உட்காரவச்சு காதுல ஒரு மந்திரத்தை உபதேசிச்சு, "மகனே.. அனுதினமும் இதை ஸ்ரத்தையாக உச்சாடனம் செய்து வா. ஆனால் யார் கேட்டாலும் என்ன மந்திரம் என்று மட்டும் சொல்லாதே! வெகு விரைவில் நல்ல பலன் உண்டாகும்"ன்னு ஆசீர்வாதம் பண்ணி ஊருக்கு அனுப்பினாராம்.

இந்தியாவுலேர்ந்து ஊருக்கு வந்த புருஷன் எப்பப்பார்த்தாலும் எதையோ முணுமுணுத்துக்கிட்டே இருக்கறத பார்த்து அவன் பொண்டாட்டி "என்னய்யா.. எதையோ முனுமுனுத்துகிட்டே இருக்கியே... என்னா" ன்னு அமட்டலா கேட்டாளாம்.

"உஹும்... சாமி சொல்லக்கூடாதுன்னு சொல்லியிருக்காரு.."ன்னானாம். பொண்டாட்டி சரி கழுத நாளைக்கு சொல்லட்டும்ன்னு ஃப்ரீயா விட்டுட்டாளாம். மறுநாளும் இந்த அமெரிக்கன் நடு கூடத்துல சோஃபால உட்கார்ந்துகிட்டு ஓயாம முனுமுனுத்துகிட்டே இருந்தானாம். இதைப் பார்த்த அவன் பொண்டாட்டி ஏகத்துக்கும் டென்ஷனாயிட்டாளாம். முகத்துல எள்ளும் கொள்ளும் வெடிக்க "யோவ்! முச்சூடும் எதையோ முனவுறியே மரியாதையா அது என்னன்னு சொல்லப்போறியா இல்லையா?"ன்னு மிரட்டினாளாம். இவன் வாயே தொறக்காம தலையை மட்டும் மாட்டேன் மாட்டேன்னு ஆட்டி ஆட்டி காமிச்சுகிட்டே அவள்ட்டேர்ந்து பிச்சுகிட்டு வெளியே ஓடினானாம்.

ஒரு மணிநேரம் கழிச்சு திரும்ப வந்தானாம். டேபிள் மேல "நான் இனிமே உன்கூட வாழமாட்டேன்"ன்னு லெட்டர் எழுதி வச்சுட்டு அவன் பொண்டாட்டி ஓடிப்போய்ட்டாளாம்.

அவனுக்கு ஒரே ஆச்சர்யம். என்னன்னா கேக்குறீங்க? வேறென்ன.. மந்திரம் பலிச்சுடுச்சேன்னுதான்!!

பின் குறிப்பு: உங்களோட பக்கத்துல உட்கார்ந்து அரட்டை அடிக்கறா மாதிரி ஒரு பதிவு எழுதணும்னு ரொம்ப நாள் ஆசை. இந்த ரெண்டு குட்டிக் கதை மூலமா தீர்த்துக்கிட்டேன்.

பட உதவி: http://novygallery.blogspot.com/

-

Tuesday, June 14, 2011

யாக்கை திரி


இன்னும் நானூறு கிலோமீட்டர் வேகத்தில் அழுத்தினால் அவளை ஒரே அமுக்காக அமுக்கிப் பிடித்துவிடலாம் என்று என் வாகனத்தை சூறாவளியாய் விரட்டினேன். இடதுகையால் விசையை பின்னால் இழுக்க துள்ளிக்குதித்து முன்னால் பறந்தது. வானில் திட்டுதிட்டாய் மேகமூட்டம். உலோக வைப்பர் மேகக் கூட்டத்தை அடித்துத் துவைத்து பஞ்சுமிட்டாய் ஆக்கி இரண்டு பக்கமும் சக்கை சக்கையாய் துப்பியது. இது புஷ்பக்-420. உச்சபட்ச வேகம் நானூறு மைல். அவள் நிச்சயம் 1.2K ஹை எண்டு மாடல் தான் வைத்திருப்பாள். நான் ஏன் இவளை நாக்கை தொங்கப் போட்டுக்கொண்டு துரத்துகிறேன்?

நான்கு நாட்களாக பக்கத்து வீட்டில் தலையை விரித்துப் போட்டுக்கொண்டு பொம்பளைப் பட்டாளங்கள் ஒரே லூட்டி. கூத்தடிக்கிறார்கள். முந்தாநாள் வெண்புகை நடுவில் தேவதைகள் மாநாடு போட்டு கூடி நின்று அனுபவித்து ரசித்து சிரிப்பது போன்று ஒரு இன்பக் கனா. மெய்யாலுமே. சிரிப்பொலியும், கரகோஷமும் திரி கொளுத்திய அணுகுண்டு போல கொஞ்சம் கொஞ்சமாக ஏறி காதில் நுழைந்து வெடித்தபோது அது கனவில்லை நிஜம் என்றுணர்ந்தேன்.

எழுந்து மெதுவாக திரைச்சீலைகளை விலக்கி ஜன்னலை திறந்து வெளியே பார்வையை ஓடவிட்டேன். உச்சி முதல் வேர் வரை ஜிலீர் என்று நனைந்த மரங்களின் இலைகளில் இருந்து நீர் சொட்டுசொட்டாக முத்து போல் வடிந்தது. ஓ. மறந்தே போனேன். இன்றைக்கு எங்கள் ஊருக்கு மழை முறை. மழைக்காரன் கருமேகங்களை பிடித்து ஒரு பக்கமாக காற்றூதி பேட்டை பேட்டையாக கொண்டு சென்று நிறுத்தி அட்டவணைப் படி அடைமழை பொழிவான். இவன் அக்காமாலா கம்பெனியின் உறவுக்கார கம்பெனி. வீட்டிற்கு மாதம் ரெண்டனா கட்டவேண்டும். மழைக்கட்டணம். இரண்டு ரூபாய் மாத சம்பளத்தில் இதற்கு வேறு ரெண்டனா அழவேண்டும். இவனுக்குப் போட்டியாக மாமழைக்காரன் என்று ஒன்று புதிதாக ஆரம்பித்தார்கள். கப்சி கம்பெனியின் சகோதரிக் கம்பெனி. ஒன்றும் பெரிதாக சோபிக்கவில்லை. தலையில் துண்டைப் போட்டுக்கொண்டு கிளம்பிவிட்டார்கள். அவர்கள் கிடக்கிறார்கள் என்று நினைத்துக்கொண்டு பக்கத்து வீட்டை விழுங்கி விடுவதைப் போல பார்த்தேன்.

ஆரஞ்சு, மஞ்சள், பச்சை என பல வர்ணங்களில் விளக்குகள் மங்கலாக பிசிறடித்து கசிந்தன. "டொம். டொம்" என்றதிர்ந்தது ஸ்பீக்கர். எந்நேரமும் அது படாரென்று வெடித்து டி.வி.டியில் பாடிக்கொண்டிருப்பவர் ஸ்தூல உடலோடு வெளியே தூக்கி எறியப்படுவார் என்பது போல பாடல் அலறியது. கண் பந்திற்கு அதிக வேலை கொடுத்து உற்றுப் பார்க்கவேண்டியிருந்தது.  "ஹேய்....", "டீ..." என்று மகிழ்ச்சியின் உச்சக் கட்டத்தில் நாலைந்து லோலிட்டாக்கள் கூக்குரல் எழுப்பி குதூகலித்தார்கள். பனியன் அவர்களை வேண்டாவெறுப்பாக மேலே மூடியிருந்தது. டான்ஸ் ஆடும் போது கூட இடுப்புக்கு கீழே ஆடை தெரியாத வண்ணம் மறைத்த அந்தக் கம்பி போட்ட ஜன்னல் ஒழிக! அறையைச் சுற்றிலும் புகை மண்டலமாக, கைகளில் கண்ணாடிக் கோப்பை தாங்கி சொர்க்கத்தில் டென்ட் போட்டு குடியிருக்கிறார்கள். அவர்கள் குழுவில் யாருக்கோ இன்று அவதாரத் திருநாள் போலிருக்கிறது. கொண்டாடுகிறார்கள்.

திரும்பி சுவர்க்கடிகாரத்தை பார்த்தேன். பின்னிரவு மூனரை மணி என்று ரேடியமாய் ஒளிர்ந்தது. இந்த ஏரியா கொஞ்சம் வனாந்திரம் தான். கொஞ்சம் ஷார்ப்பான காதாக இருந்தால் அடுத்த வீட்டில் மூச்சு விடும் சத்தம் கூட தெளிவாகக் கேட்கும். ஒரு இருநூறு குடித்தனங்கள் இங்கே அமைதியாக வாழ்கிறது. "அகாலத்தில் இது என்ன ஒரு அயோக்கியத்தனம்?" என்று வெகுண்டு கேட்கத் தோன்றினாலும் மொத்தக் குருதியையும் ஒரே பார்வையில் சுண்டி இழுத்த ஒரு அழகியை பார்த்து வாயடைத்து நின்றேன். அவளைப் பார்த்துக்கொண்டே தொட்டதால் ஜன்னல் கம்பி கூட சுரீர் என்று ஷாக் அடித்தது. மெகாவாட் மின்சாரம் அவள் கண்களில் சுடர்விட்டது. இந்த சுற்றுவட்டாரத்தில் என்னைப்போல பூர்வீக சொத்து இருக்கும் கல்யாணம் ஆகாத கட்டை பிரம்மச்சாரி யாரும் இல்லை. என் அழகு? அவள் என்னைப் பார்த்தால் அப்படியே அபகரித்துக்கொள்வாள். அந்த ஸ்திரமான நம்பிக்கை தான் ஜன்னலோரத்திலேயே விடியவிடிய கால் கடுக்க என்னை நிற்க வைத்துவிட்டது.

இப்போது முதல் பாராவைப் படித்துவிடுங்கள். புரிந்துவிடும். அங்கே கிளம்பியவளை எட்டித்தொடும் தூரத்தில் பயணித்தும் ஒருமுறை கோட்டை விட்டுவிட்டேன். ஏனென்றால் அவள் மொத்த அழகையும் வெளிச்சத்தில் அப்பட்டமாக பார்த்துவிட்டேன். வெயிட். வெயிட். நீங்கள் நினைப்பது போல 'ஏ'த்தனமாக இல்லை. அரைகுறை வெளிச்சத்தில் பார்த்தவளை வானத்தில் இருந்து ஒளிர்ந்த நண்பர் ரவியின் துணைகொண்டு ஃபுல்லாப் பார்த்தேன். அந்த ஆடை அணிந்த அல்வாத்துண்டு  இப்போது வாகனத்தில் வழுக்கிக் கொண்டு ஆகாயமார்க்கமாக பறக்கிறது. "பிடி..உம்..விடாதே..பிடி.." மனதரக்கன் உட்கார விடாமல் தார்க்குச்சியால் குத்தி குத்தி விரட்டுகிறான்.

ஹா.. கடைசியாக என்னைப் பார்த்துவிட்டாள்! வண்டியை ஒரு ஏரிக்கு அருகில் ஓரம்கட்டி சிலையென நளினமாக இறக்கினாள். ஆசையில் நானும் அவசரமாக ஒதுங்கினேன். பக்கத்தில் பார்க்க பளபளவென்று இருந்தாள். வெயிலில் டாலடித்தாள். ஓடினேன். என்னை அணைக்க தயாராக இருப்பது போல் இரு கையையும் நீட்டி தயாராக நின்றாள். ஆஹா... அடைந்து விட்டேன்.. ஆனந்தம்.. பேரானந்தம் என்று என்னுள்ளம் உவகை கொண்டது. அண்டசராசரத்தில் இப்போது அவளொருத்தி தான் பெண்ணாக என் கண்ணுக்கு தெரிந்தாள். பக்கத்து ஏரியில் சலசலத்த தண்ணீரில் அவள் பிம்பம் "நட்டு வைத்த போல்" டான்ஸ் ஆடியது. பாழும் மனது கிடந்து அடித்துக்கொண்டது. என்ன சொல்வாளோ?

"ஹாய். நான் 7656465897"

"ஹாய். நான் 9876565677"

ஐ.டி நம்பர் சொல்லி இருவரும் கைகுலுக்கிக் கொண்டோம். மிருதுவாக இருந்தாள். சங்கீதமாகப் பேசினாள். கை ஜில்லென்று இருந்தது. டென்ஷனில் எனக்கு நெற்றியில் வியர்த்தது. கைக்குட்டையால் துடைத்துக் கொண்டேன்.

"உன்னை எனக்கு ரொம்ப பிடிச்சிருக்கு. உனக்கு என்னை...." என்று வெட்கத்தோடு நான் வார்த்தைகளை விட்டு விட்டு ஸ்லோ மோஷனில் இழுத்த இழுப்பில் அவள் "ஹஹ்ஹா..ஹா..." என்று வெடித்துச் சிரித்தாள்.

இந்த ஜென்மம் ஈடேறிய சந்தோஷத்தில் அவள் கொடி இடையை எட்டித் தொட்டு என் பக்கம் இழுத்து மூச்சு முட்ட அணைத்தேன். எந்தவித எதிர்ப்பில்லாமல் பச்சென்று ஒட்டிக்கொண்டாள். இதழோடு இதழ் பொருத்திப் பார்த்தேன். ஜாடிகேற்ற மூடியாய் மிகச்சரியாக பொருந்தியது. இது ஒரிஜினல் தான் என்று அகமகிழ்ந்து இருந்த வேளையில் "பீப்..பீப்..பீப்.." என்ற பேட்டரி ட்ரைன் ஆகும் சத்தம் வர சலனமேயில்லாமல் புஷ் டோர் போல தலை துவள என் தோளில் சவமென சாய்ந்திருந்தாள் அவள். பாழாய்ப் போனவள்.

ஹும். நான் கொடுத்து வைத்தது அவ்வளவுதான். இத்தோடு உயிர்க் காதலி தேடும் படலத்தில் எண்ணிக்கை இருபது பூர்த்தியாயிற்று. இனி, சர்க்காராக பார்த்து தலையில் கட்டிவைக்கும் உணர்ச்சிப்பூர்வ இயந்திரத்திர்க்கு வாழ்க்கையை தாரை வார்க்க வேண்டியதுதான். அலுத்துப் போய் தோளில் இருந்து அதை கீழே தள்ளிவிட்டு புஷ்பக்கை நோக்கி நடையைக் கட்டினேன். குப்புற கவிழ்ந்து குலுங்கி அழுவது போல விலுக்விலுக்கென்று கைகால்களை உதைத்துக்கொண்டது.

ஏரியிலிருந்து நீரில் நனைந்த ஒரு பிகினி அழகி தண்ணீரும் காதலும் சொட்டச்சொட்ட என்னை நோக்கி ஆவலாக வந்துகொண்டிருந்தாள். இவளை முதலில் சோதிக்க வேண்டும்.

பின் குறிப்பு: யாக்கைக்காக திரிவதாக கவித்துவமான தலைப்பு கொடுத்திருக்கிறேன்.

படம்: ரஜினி ஞாபகம் வந்தது. அதான்....

-

Monday, June 13, 2011

மேகமே.... மேகமே....

திண்ணைக் கச்சேரி எழுதும் ஆசை நேற்றைக்கு ராத்திரி வந்தது. பார்த்த விஷயங்கள் அப்படி. விளம்பர தொந்தரவுகள் இல்லாமல் நேரே செல்வோம்...


********** விஸ்வரூப ஆதிவ்யாதிஹர பக்த ஆஞ்சநேயசுவாமி **********
நேற்றைக்கு மாலை ஆறரை வாக்கில் நங்கை ஆஞ்சநேயர் கோவில் சென்றிருந்தேன். என்னையும் நம்பி கண்ணாலம் கட்டிக் கொண்டவளுக்கு பிறந்த நாள். ஆவக்காய் மாங்கா வெட்டி விற்கும் தள்ளுவண்டி பெண்மணியிடம் கூட்டம் அம்மியது, ஆன்மீக புத்தக் கடையில் சுதா "டோலாயம்" பாடிக்கொண்டிருந்தார், ஸ்ரீ கிருஷ்ணா ஸ்வீட்சில் இன்னும் சர்க்கரைநோய் தாக்காத புண்ணியாத்மாக்கள் நெய்யொழுகிய இனிப்புகளை நொசுக்கிக்கொண்டிருந்தன, பக்கத்தில் இருந்த ஆதித்ய பிர்லா கம்பெனியின் பலசரக்கு கடையில் மாம்பழ மெகா சேல் மாமிகளின் அமோக ஆதரவுடன் நடைபெற்றுக்கொண்டிருந்தது, வியாபார வசிய யந்திரம் தந்திரமாக விற்கும் மற்றுமொரு ஆன்மீகக் கடையில் நல்ல கூட்டம் இருந்தது, செருப்பு விடும் இடத்தில் ஒருவர் தனது தொலைந்த ஜோடியை கண்களை "கண்ணாளனே..." பாடல் மனிஷா கொய்ராலா மாதிரி சுழற்றி தேடிக்கொண்டிருந்தும் மற்றவர்கள் சட்டை செய்யாமல் ஐநூறு ரூபாய் காலணிகளை கழற்றி விட்டுக்கொண்டிருந்தார்கள், இத்தனை அமர்க்களத்திற்கிடையே கோவிலின் உள்ளே ஹனுமன் கூட்டமே இல்லாமல் ஏகாந்தமாக சேவை சாதித்தார்! திவ்ய தரிசனம். வெளியே வரும்போது சர்க்கரைப் பொங்கல் பிரசாதம் கொடுத்து வெளியே சென்று சாப்பிட பணித்தார்கள். வரும் வழியெங்கும் பிச்சுபிச்சு என்று சர்க்கரைப் பொங்கல் காலில் ஒட்டியது மனதை உறுத்தியது.

********* பட்டம் பறக்குது.. பள்ளிக்கொடம் தொறக்குது... *********

இன்றிலிருந்து என் பிள்ளைகளுக்கு பள்ளி ஆரம்பம். லேட்டா எழுந்து, லேட்டா பல் தேய்த்து, லேட்டா சாப்பிட்டு, நிறைய விளையாடி, நிறைய கார்ட்டூன் பார்த்து, லேட்டா படுத்து தூங்கியவர்களுக்கு இன்றிலிருந்து முன்னால் போட்ட பட்டியலில் லேட்டுக்கு சீக்கிரமும், நிறையக்கு கொஞ்சமும் போட்டு செய்யவேண்டியிருக்கும். துக்கம் தொண்டையை அடைத்தாலும் மகராசிகள் சிரித்துக் கொண்டே "டாடா" காண்பித்துவிட்டு பள்ளி சென்றார்கள். எனக்கு தொண்டையை அடைத்தது.

*********** ஸ்பீட் ஆட்டோகார் **********

ஆட்டோகாரர்கள் ரொம்பவும் திருந்திவிட்டார்கள். நடுரோட்டில் யூவாக வளையும் பொழுது இரண்டு பக்கமும் பார்த்துவிட்டு திரும்பினார் ஒரு அசாதாரண ஆட்டோ ஓட்டுனர். இந்த ஆச்சர்யத்தில் பிரேக் மேல் வைத்த காலை எடுக்காமல் உறைந்து நோக்கிய என்னை பின்னால் காது கிழிய ஹாரன் அடித்து கிளப்பினார்கள். பக்கத்தில் கொண்டு போய் வண்டியை நிறுத்திவிட்டேன் என்று முறைத்துக்கொண்டு வண்டியை உறுமிக்கொண்டே முந்திச் சென்றார் பின்னால் இருந்து வாயுவேகத்தில் சென்ற ஸ்பீட் ஆட்டோக்கார். என் மேல் இருந்த கோபத்தில் எனக்கு முன்னால் சென்ற ஆட்டோவின் பின் சீட்டில் பிருஷ்டம் தெரிய கம்பி மேல் உட்கார்ந்து சென்ற பெண்மணியை ஒட்ட ஒட்ட வழித்திருப்பார். வால் தப்பியது தம்பிரான் புண்ணியம்! மொத்தம் இந்த பாராவில் எவ்வளவு ஆட்டோகாரர்கள் ஓட்டினார்கள்?

*********** ரஜினி வாழ்க ***********

உடம்புக்கு முடியாமல் சிங்கப்பூரில் வைத்தியம் பார்த்துக் கொண்டாலும் சன் குழுமம் இன்னமும் ரஜினியால் வாழ்கிறது. சனிக்கிழமை நூறாவது முறையாக படையப்பா போட்டார்கள். ஆயிரம் விளம்பரங்களுக்கு மத்தியில் எல்லோரும் நூறாவது முறையாக ஸ்ரத்தையாக பார்த்தார்கள். எல்லாப் படங்களிலும் வரும் பேமிலி செண்டிமெண்ட், மகள் செண்டிமெண்ட், அப்பா செண்டிமெண்ட், அம்மா செண்டிமெண்ட், லவ்வு செண்டிமெண்ட், செண்டிமெண்ட் செண்டிமெண்ட் என்று ஆயிரம் செண்டி வைத்து எடுத்தாலும் நீலாம்பரி ஸ்டைலில் சொல்வதென்றால் "அழகும், ஸ்டைலும் இன்னமும் உன்னை விட்டு போகலை..." தலைவா! சீக்கிரம் குணமடைய கடவுளை ப்ரார்த்திக்கிறோம்.

*********** திஹார் ஸ்பெஷல் இட்லி, தோசை ***********

ஜெயிலுக்கு போனால் களி தான் கிடைக்கும் என்று முன்பெல்லாம் சொல்வார்கள். இப்போது திஹார் முழுக்க தென்னிந்திய உணவு வகைகள் கமகமக்கிறதாம். இட்லி, தோசை என்று மூக்க பிடிக்க சாப்பிடுகிறார்களாம். தென்னிந்திய கைதிகள் மட்டுமல்லாமல் வடஇந்திய கைதிகளும் விரும்பிச் சாப்பிடுகிறார்களாம். கைதிகளுக்கு இவர்கள் செய்யும் உபசாரங்களைப் பார்த்தால் யாரும் சிறையை விட்டு வெளிய வரமாட்டார்கள் போலிருக்கிறது. இட்லி, தோசை ஆசையில் பிச்சைக்காரர்களாக சேர்ந்து சிறை நிரப்பும் போராட்டம் நடத்தாமல் இருந்தால் சரி!

********* செல்லாக் **************

அமெரிக்காவின் Magnum P.I என்ற மெகாத்தொடரில் நடித்து வரும் புகழ்பெற்ற நடிகர் டாம் செல்லாக்கின் புகைப்படத்தை கீழ்காணும் விதத்தில் போட்டோஷாப்பி மகிழ்ந்திருக்கிறார்கள். உங்களுடைய பார்வைக்கும்....


கொஞ்சம் உற்றுப் பார்த்தால் நிறைய செல்லாக்குகள் கண்மூடி தெரிவார்கள். இதைப் பார்க்கும் போது இராவணன் நினைவுக்கு வந்தால் அவர்களுக்கு நிச்சயம் ஸ்ரீராமன் அருள் பாலிப்பார்!

************ ABC... RVS **********

textify.it என்ற வலைமனையில் எந்தப் படம் கொடுத்தாலும் ABC யில் வரைந்து கொடுக்கிறார்கள். என்னுடைய படம் ABC யில்... "ஏபிசி நீ வாசி... எல்லாம் என் கைராசி... சோ ஈசி...."

என்னுடைய ஒரு காதில் 'A' வும் மறுகாதில் 'B' யும் தொங்குவது தெரிகிறதா?

*************** மேகமே.... மேகமே.... **************

மனம் மயக்கும் வீடியோ ஒன்று. பத்து நிமிடங்கள் இதற்கு நீங்கள் ஒதுக்க வேண்டும். மனதிற்கு இதம் கியாரண்டி. ரம்மியமாக மேகங்கள் ஒன்று கூடி, கலைந்து, இருட்டும் வரையில் கை நோக எடுத்ததை வேகமாக ஒட்டி வீடியோ தயாரித்திருக்கிறார்கள். அற்புதம். இதற்கு time-lapse ஃபோட்டோக்ராபி என்று சொல்வார்கள். பூ மொட்டு விரிப்பது, பல்லி நாக்கை நீட்டி கொசு பிடிப்பது என்று நிறைய நேஷனல் ஜியாக்ரபிக் சேனலில் பார்த்ததுதான், இங்கே மழை தரும் மேகத்தை படம் பிடித்து அசத்தியிருக்கிறார்கள். யான் பெற்ற இன்பம் பெருக இவ்வையகம். இன்பமேகங்கள் எல்லோரையும் சூழ்க.



பின் குறிப்பு: தீராத விளையாட்டுப் பிள்ளை இலட்சம் பார்வையாளர்களை தாண்டி பயணிக்கிறான் என்பது சந்தோஷமான செய்தி!
-

Saturday, June 11, 2011

மன்னார்குடி டேஸ் - ஆறிலிருந்து பனிரெண்டுவரை

NHSS

தேசப்பிதா காந்தியடிகள் மேற்படிப்பிற்கு லண்டனுக்கு சென்றது போல என் பிதா நான் மென்மேலும் படித்துச் சிறக்க தேசிய மேல்நிலைப் பள்ளியில் முதுகில் புத்தக மூட்டையும் நீல டிராயர் வெள்ளை சொக்காய் சீருடை சகிதம் ஆறாம் வகுப்பில் சேர்த்து விட்டார். அது ஒரு நூற்றாண்டு கால பெருமை வாய்ந்த ஸ்கூல். நிறைய வகுப்பறைகளுடன் வாசலில் ரங்கன் நினைவு பேஸ்கட் பால் கோர்ட்டுடன் பெரிய ஸ்கூல். வீணை ஏந்தி வெள்ளைத்தாமரையில் சரஸ்வதி ஸ்கூல் உச்சியில் வெயில் மழை பாராது கருணையோடு வீற்றிருப்பாள். ஐந்தாம் வகுப்பு வரை சின்ன கான்வென்டில் தமிழ் வழிக் கல்வியில் ஆனா ஆவன்னா என்று படித்து தீந்தமிழில் வளர்ந்தவனை ஆறாவதில் தஸ்ஸு புஸ்ஸுன்னு இங்கிலீசு மீடியம் படிக்கச் சொன்னார்கள். ஐந்தில் வராதது ஆறில் வருமா?

ஹரித்ராநதியில் இருந்து தே.மே.பள்ளி நிச்சயம் இரண்டு கிலோ மீட்டர் இருக்கும். காலார தேரடி, பெரிய போஸ்ட் ஆபிஸ், கிக்கான குஷ்பூ ஒயின்ஸ், புள்ளித்தாள்* விற்கும் சோழன் மளிகை, வாசலில் பொம்மைக்கு அலங்கோலமாக சேலைக்கட்டி வைத்திருக்கும் லக்ஷ்மிராம்ஸ் சில்க் ஹௌஸ், பிஸ்கட் மற்றும் கேக் நறுமணம் கமழும் ஜீவா பேக்கரி, அரிசிக்கடை சந்து ஏற்றம், முதலியாரின் நாட்டு மருந்துக் கடை, அந்த 'மருந்து' விற்கும் கலா ஒயின்ஸ், யுவராஜின் டில்லி ஸ்வீட்ஸ் திரும்பியதும் அழகப்பா தாளகம், ஒத்தைத் தெரு ஆனந்த விநாயகரை மொத்த குத்தகை எடுத்திருக்கும் ஆர்.ஆர். ட்ராவல்ஸ், வெண்ணைத்தாழி மண்டபம் என்று கடைத்தெருவை வேடிக்கை பார்த்துக் கொண்டு நடந்தால் இருபது நிமிஷத்தில் ஸ்கூலை அடையலாம். ஏற்கனவே பள்ளிப் பிராயத்திலே என்ற பதிவில் பள்ளிப் போக்குவரத்து பற்றி நிறைய எழுதிவிட்டேன். இம்முறை நான் கல்விச் செல்வம் பெற்ற ஆசிரியர்கள் பற்றியது.

ஆறாம் வகுப்பில் தாண்டான் சார் தான் வகுப்பாசிரியர். முதன் முறையாக கையில் பிரம்போடு நான் பார்த்த ஆசிரியர். ஆளைப் பார்த்தால் பரமசாதுவாக இருப்பார். குளிருக்கு தோதாக காதை மறைக்கும் ஸ்டெப் கட்டிங். கையில் இருக்கும் பிரம்பு சற்றே வீங்கினார்ப் போன தேகம். மணிக்கட்டிலிருந்து நழுவி எந்நேரமும் கீழே விழும் அபாயத்துடன் தொங்கும் கைக்கடிகாரம். அவருக்கு உடம்பு முழுவதும் கண்டிப்பு ரத்தம் கன்னாபின்னாவென்று ஓடியது. ஒரு கையடக்க பால் கணக்கு நோட்டு போட்டு நாங்கள் தினமும் வீட்டுப்பாடம் படித்ததை அதில் எழுதி வீட்டாட்களிடம் கையொப்பம் பெற்று வரவேண்டும். தினமும் காலையில் முதல் முப்பது நிமிடங்கள் நல்ல ராகு காலம். சங்கர ஹாலில் மரக்கட்டை கால் கொண்ட இரும்பு தடுப்பு போட்டு மூன்று வகுப்புகள் சத்தமாக நடக்கும். இரண்டாம் தடுப்பின் அறிவியல் முதல் தடுப்பின் வரலாற்றோடு பின்னிப் பிணைந்து அறிவரலாறாக காதில் விழும். சான்ட்விச் கோர்ஸ். முதல் மறைவுத் தடுப்பில் தரையில் ஆறாவது 'ஏ' பிரிவு ஆங்கில மீடியம். அப்புறம் 'பி'. 'ஸி' என்று எங்களோடு இணையான பிரிவுகள்.

நடுஹாலில் தோளில் சார்த்திய தண்டத்துடன் நாங்கள் படிப்பதை கவனித்துக் கொண்டிருந்த ஆதிசங்கரர் ஒரு தடவை கூட தாண்டான் சாரிடம் இருந்த தண்டத்திடம் இருந்து என்னைக் காப்பாற்றவில்லை. கம்பை சுழற்றி அடிக்கும் போது தொழில்முறை சிலம்பாட்டகாரர்கள் எல்லாம் அவரிடம் பிச்சை எடுக்கவேண்டும். காற்றில் "விர்..விர்.." என்ற ஓசையுடன் கணுக்கால், உள்ளங்கை, தோள்பட்டை என்று சகல இடங்களிலும் விளாசி "சாந்து பொட்டும் சந்தன பொட்டும்" தேவர் மகன் ஸ்டைலில் அசால்ட்டாக வைப்பார். அவரால் தான் புஸ்தகத்தை எடுத்து நித்யமும் படிக்கவேண்டும் என்ற அடிப்படை பள்ளி ஒழுங்கை கற்றுக்கொண்டேன். வாழ்க அவரது சிலம்பமும், கண்டிப்பும்!

ஏழாம் வகுப்பில் இங்கே சொல்லிக்கொள்ளும்படி வரலாறு படைக்கும் சம்பவங்கள் எதுவும் நடைபெறவில்லை. சங்கர ஹால் கடந்து போனால் மூன்றாம் கட்டு ஒன்று எங்கள் பள்ளிக்கு உண்டு. ஆஸ்பெஸ்டாஸ் கூரைக்கு கீழே மூளைக்குச் சூடு வைத்து எட்டாம் வகுப்பு பாடத்தை புத்தியில் பதிய வைத்துக்கொண்டிருப்போம். பாஸ் செய்யும் அளவுக்கு படித்தால் போதும் என்ற பொன் செய்யும் மனது படைத்தவனாக இருந்தேன். ஆங்கில மீடியம் என்ற ஃபாரின் கோஸ்ட் படாத பாடு படுத்திய பாட்டில் எனது பால்யம் அழிக்கப்படுவதாக உணர்ந்தேன். எப்படியும் எழுபது சதவிகிதம் குறையாமல் மார்க் எடுத்து எனது புகழை நிலைநாட்ட மிகவும் பிரயர்த்தனப்பட்டேன்.

ஒரு காலாண்டு தேர்வில் விளையாட்டு புத்தியில்(?!) கொஞ்சம் குறைவாக மார்க் எடுத்து வசமாக மாட்டிக்கொண்டேன். சாந்தகுமாரி டீச்சர் மிகவும் அமைதியானவர் தான். Not Satisfied என்று இரண்டு வார்த்தை எழுதி கையெழுத்திட்டு ரேங்க் கார்டில் ராங்கு காட்டினார் எனது தகப்பனார். இதைக் கண்ட சாந்தகுமாரி டீச்சர் கோபாக்கினியில் கோபகுமாரி ஆகிவிட்டார்கள். "நீ படிக்கறது உங்க அப்பாவுக்கு Not Satisfied-ஆ இல்ல நான் சொல்லிக்கொடுக்கறது Not Satisfied-ஆ" என்ற கிடிக்கிப்பிடி கேள்வி ஒன்று என்னைக் கேட்டு இரண்டு நாளைக்கு படுத்தி எடுத்துவிட்டார். மேற்கூரையும், டீச்சரும் ஒரு டீமாக சேர்ந்து என்னை உஷ்ணப்படுத்தினார்கள். காய்ந்து கருகி விட்டேன்.


கையில் கொண்டுபோகும் மோர்சாதத்தை ஸ்கூலுக்கு எதிரில் இருக்கும் சுதர்சன் காப்பி கடையின் பின்னால் இருக்கும் முற்றத்தில் உட்கார்ந்து சாப்பிடுவேன். ஓடு சரிந்து இறக்கும் பின்கட்டில் காப்பிக் கொட்டை சரக்கு அடுக்கி வைத்திருப்பார்கள். ஒரு மண் பானையில் தண்ணீர் நிரப்பி மூடி அதன் மேல் சிகப்பு கலர் பிளாஸ்டிக் டம்பளர் வைத்திருப்பார்கள். ரெண்டு ரூபாய்க்கு வாங்கின காசிற்கு அது இன்னமும் உழைத்துக் கொண்டிருக்கலாம். நான் சாப்பிட்டு முடித்ததும் கடைக்கு வரும் வாடிக்கையாளர்களுக்கு ஃப்ரிட்ஜிலிருந்து வெண்ணை எடுத்து பேப்பரில் மடிக்கவும், சுடச்சுட அரைத்த காப்பிபொடியை மெஷின் வாயில் தட்டி எடுத்து மணம் குறையாமல் காக்கி பொட்டலத்தில் மடித்துக் கொடுத்தும் தொண்டு புரிந்தேன்.

கை வைத்த பனியனோடு கை ஒழியாமல் வேலை பார்த்த பவானந்தம் மற்றும் துரைக்கண்ணு இருவருக்கும் இன்னமும் நான் நினைவில் இருப்பேனா என்று தெரியாது ஆனால் சுதர்சன் காப்பி மணம் என் மனத்தில் இன்னமும் ஸ்ட்ராங்காக இருக்கிறது. ஒரு முறை பிஞ்சு வெள்ளரிக்காய் என் பிஞ்சு மனத்தை அபகரித்ததில் ஒரு எட்டணா சுதர்சன் கடையில் கடன் வாங்கி சாப்பிட்டதற்கு ஒரு வாரம் என்னை வீட்டில் வறுத்து எடுத்துவிட்டார்கள்.

ஆர்ட்டும் கிராஃப்ட்டும் இரண்டு ஜாலி வகுப்புகள். சுருட்டை முடி ஸ்ப்ரிங் போல அசைந்தாட, செல்லமான கெட்ட வார்த்தை திட்டோடு பள்ளியின் பின்னால் கொல்லைப்புறத்தில் டாய்லட் அருகில் நீலக் கலர் இரும்பு சேர் போட்டு ஆர்ட் வாத்தியார் ரெங்கராஜன் சொன்ன திகில் கதைகள் அழியாப் புகழ் பெற்றவை. "சிங்கபெருமாள் கோவில்ங்கற ஊர்ல ராத்திரி பன்னெண்டு மணிக்கு அவன் வந்து இறங்கறான்...அப்போ..." என்று அவர் கதையில் சொன்ன அந்த ஊர்ப் பெயர் முதன் முறையாக சென்னை வந்தபோது அவரை கொண்டு வந்து அந்த ஊர்ப் பெயர்ப்பலகை முன்னால் நிறுத்தியது.

கிராஃப்ட் ஜெயராமன் சார் கொஞ்சம் 'மூடி' பேர்வழி. ஆர்ட் போல குலுங்ககுலுங்க சிரிக்க மாட்டார். எப்பவும் ஒரு இனம்புரியா சோகத்தை முகத்தில் தாங்கி இருப்பார். எப்பவாவது அதிசயமாக புன்னகை பூப்பார். போலீஸ் கட்டிங்கில் அவரது கறார்த்தனம் தெரியும். எல்லோரையும் ஒரு பீரியட் முழுக்க கைகட்டி வாய்பொத்தி பேசாமல் உட்கார்த்தி வைத்து அப்போதே எங்களுக்கு யோகா கிளாஸ் எடுத்த ஆசிரிய யோகி அவர்.

எட்டாம் வகுப்பில் இருந்து கிரிக்கெட் என்னை முழுவதுமாக ஆட்கொண்டது. படிப்பின் வலுவான இரும்புப் பிடியில் இருந்து தப்பிக்க விருப்பத்துடன் நான் என்னை கிரிக்கெட்டிற்கு அர்ப்பணித்துக் கொண்டேன். அக்காலத்தில் ஸ்போர்ட்ஸ்க்கு அதிக முக்கியத்துவம் தரப்பட்டது. வீதியில் லோக்கலாக மட்டையும் பந்துமாக திரிந்தவன், விசேஷ அங்கீகாரம் கிடைத்தது போல பள்ளி அணிக்கு கிரிக்கெட் விளையாட தேர்ந்தெடுக்கப்பட்டேன். கை காலை உதறி வேகவேகமாக ஓடிவந்து சாப்பிட்ட பருப்பு சாதத்தின் ஒட்டுமொத்த இரும்புச் சத்தையும் பயன்படுத்தி வேகப்பந்து வீசியதில் "டேய்.. இவனோட பந்து பிட்ச் பண்ணினதும் ஃபாஸ்ட்டா வருதுடா. ஒரு நிப் இருக்கு" என்று ஊக்கப்படுத்தி கிரிக்கெட் ஜோதியில் ஐக்கியப்படுத்தினார் ராமு சார். போன வருஷம் கூட ராமு சாரிடம் தொலைபேசி தொல்லை கொடுத்து அறுத்துக் கொண்டிருந்தேன்.


கோகோ, ரிங் பால், பால் பேட்மிண்டன், கூடைப் பந்து, வாலி பால், சுக்ரீவன் பால் என்று இன்னபிற விளையாட்டுக்களுக்கும் பிரமாதமாக பயிற்சி கொடுக்கப்பட்டது. இதில் சிறப்பு கவனத்திற்கு உரியவர் பெல்பாட்டம் ராமதாஸ். இவரும் ஸ்டேப் கட்டிங் பார்ட்டி. பெல் பாட்டம் பேன்ட் சிகப்பு ரோஜாக்கள் கமலஹாசனிடம் இருந்து வாங்கிப் போட்டது போன்று இருக்கும். மைதானத்தின் குப்பைகூளங்களை தனது பெல் பாட்டத்தினால் பெருக்கி சுத்தம் செய்துவிடுவார். உங்கவீட்டு பெல் எங்கவீட்டு பெல் இல்லை. உலக மகா பெல் பாட்டம் அது.

ஸ்ரீதரன் சார் ஒன்பதாம் வகுப்பாசிரியர். நிமிட்டாம்பழத்தில் விற்பன்னர். அரைக்கை சட்டைக்குள் கைவிட்டு ஒரு சிட்டிகை புஜத்தின் தோலை கையில் பிடித்து கிள்ள ஆரம்பித்தால் மாட்டிக்கொண்டவர்கள் தானாக ஹைஜம்ப் போல எம்பிக் குதிப்பார்கள். எல்லாம் உள்காயம். அந்த பீரியட் முழுக்க எரியும். சில இ.பி.கோ பிரிவுகளுக்கு அவரை விட்டு இந்தத் தண்டனை கொடுத்தால் சமுதாயம் திருந்தலாம். அவரிடம் எலும்பர்கள் தப்பிப்பதற்கு சாத்தியம் உண்டு. மூன்றாம் தெருவில் கணிதம் டூஷன் எடுத்தார். கிள்ளுக்கு பயந்தே அந்த தெருப்பக்கம் தலை வைத்துப் படுக்க மாட்டேன். சோதனையாக அந்த வருடம் எங்கள் வகுப்பறையின் மேலே உத்தரத்தில் எங்களோடு சேர்ந்து ஒரு ஆந்தையும் குடிவந்து விட்டது. சில விஷமிகள் "ஆந்தை இருக்கும் வகுப்பில் படிப்பவர்கள் பேர் பாதி பாஸ் பண்ணுவது கடினம்" என்று ஆந்தை ஆருடம் சொல்லி வயிற்றில் புளியைக் கரைத்தார்கள். ஆனால் நிறைய பேர் தேறினார்கள்.


மகாலிங்கம் சார் புட்டபர்த்தி சாய்பாபாவின் அதிதீவிர பக்தர். குழந்தைகள் "பாபா" ப்ளாக் ஷீப் என்று பாடினால் கூட கண்ணை மூடி கன்னத்தில் போட்டுக்கொள்வார். அவ்வளவு பயபக்தி. அவருக்கு எல்லாம் சாய் மயம். ஒரு முறை எனது சீனியர்களின் வகுப்பில் இடது கையை மேலே உயர்த்தி ஆட்டி காண்பித்து "புட்டபர்த்தி போயிருந்தப்ப இந்த வாட்ச் சாய் பாபா எனக்கு கிஃப்ட்டா கொடுத்தார்" என்று சொல்லிவிட்டு மெய்சிலிர்த்துக் கொண்டார். வகுப்பில் ஒரு குல்லேரிப் பயல் "சிடிசன் வாட்சா பார்த்துதான் குடுத்தாரா?" என்று எதிர்கேள்வி கேட்டு மடக்கியதாக நினைத்துக்கொண்டவனை அந்த ஆண்டின் இறுதி வகுப்புவரை திரும்பிப் பார்க்கவில்லை என்று மேல்வகுப்பு அண்ணாக்கள் பேசிக்கொண்டார்கள்.


ஸ்கூல் பாடங்கள் நடைபெற்றுக் கொண்டிருக்கும் போது எண்ணம் போன போக்கில் ஜன்னல் வழியாக ரோடை பிலாக்குப் பார்த்துக் கொண்டிருப்பது ஒரு அலாதியான விஷயம். மனசுக்கு சுகம் தரும் காரியம். ஜன்னலுக்கு வெளியே தெரியும் பிரசித்தி பெற்ற ஒத்தைத் தெரு பிள்ளையார் கோவிலுக்கு எவ்ளோ பேர் அர்ச்சனை செய்கிறார்கள், சிதறு தேங்காய் எவ்ளோ பேர் உடைக்கிறார்கள், புதுவண்டி பூஜை இன்று எவ்வளவு என்று உபயோகமான தகவல் தேடல்களும் உண்டு. உபாத்தியாயர் சாக்பீஸை கிள்ளி முகத்தில் விட்டெறியாதவரை இன்பம் தெருவிலே.

வேடிக்கையின் போது காக்கி பேன்ட்/ட்ராயர் மற்றும் வெள்ளை சட்டைப் போட்டுக்கொண்டு யாராவது  வீட்டுக்கு போய்க்கொண்டிருந்தார்கள் என்றால் அளவில்லா ஆனந்தம் எங்களுக்கு. காக்கி யூனிபார்ம் ஃபின்லே மேல்நிலைப் பள்ளியுடையது. ராஜகோபாலசுவாமி கலைக் கல்லூரி அண்ணாக்கள் இலங்கைத் தமிழர் பிரச்சனைக்காக ஸ்ட்ரைக் செய்தார்கள் என்றால் வரும் வழியில் முதலில் நுழைவது ஃபின்லே. அப்புறம் தே.மே.பள்ளி. ஒரு நாளைக்கு ஸ்ட்ரைக் நடந்தது என்றால் ஒரு பத்து நாளைக்கு கண் அந்தப் பக்கமே அலைபாயும். யாராவது ஃபின்லே ஸ்கூல் பையன் வயிறு சரியில்லை என்று பாதியில் வீட்டுக்கு போனான் என்றால் கூட ஸ்ட்ரைக் இன்னிக்கும் தொடருமோ என்று மனது அல்பமாக கற்பனை செய்து கொள்ளும்.

முதல் இரண்டு பட்டனை கழற்றி காற்றுவாங்க மைனர் கணக்காக திரிந்த என்னை "சட்டை பித்தானை போடுடா.." என்று விரட்டிய பாட்டனி பாலு சார் ஒழுக்கத்தை உயிரினும் ஓம்பப்படும் என்று போற்றியவர். சட்டையை டக்கின் செய்து டீக்காக ஆங்கிலேய துரைமார்கள் வியக்கும் வண்ணம் வலம் வந்தவர் ஆங்கில ஆசிரியர் கௌதமன். ஆங்கிலத்தின் இன்றியமையாத தன்மையை புத்தியில் உரைக்கும்படி எடுத்துரைத்தவர். என்.எஸ்.எஸ் என்ற அமைப்பின் பள்ளித் தலைவர். இயற்பியல் பாடம் சொல்லிகொடுத்த இளங்கோவன் தோழனாய் இருந்த ஆசிரியர். தோளில் கைபோட்டு பேசியவர். கெமிஸ்ட்ரி சந்தானம் சார் ரிடையர் ஆகி அந்த வருடம் வந்து சேர்ந்தவர் ராதாக்ருஷ்ணன். ஃபிசிக்கலா தேசலான சரீரத்துடன் இருப்பார். சோமு சார் எனக்கு வகுப்பு எடுக்கவில்லையானாலும் கிரிக்கெட் மூலமாக பந்தம். கண்ணில் பூ விழுந்த தியாகராஜன் சார் ஏழு எட்டில் எனக்கு சரித்திரம் எடுத்தார்.


இன்னும் ஒரு பத்து பதினைந்து பேர் இருக்கிறார்கள் சொல்வதற்கு. "டின்.டின்.டின்." என்று பள்ளி முடிந்து லாங் பெல் அடிப்பது போல காதில் கேட்கிறது. மற்றவை அடுத்த பதிவில். நன்றி.

*புள்ளித்தாள் என்பது இரு ஓரங்களிலும் perforation இருக்கும் டாட் மாட்ரிக்ஸ் பிரிண்டரில் உபயோகப்படுத்தும் பேப்பர். ஒரு பக்க ரஃப் பேப்பராக கணக்கு போட்டு பார்க்க வாங்குவோம். கால் கிலோ அரைக்கிலோ என்று வெயிட் போட்டு தருவார்கள்.

படம்: நானே... நானே...

-

Friday, June 10, 2011

நங்கை நிலாவின் தங்கை

சில "சங்கீத சாம்ராட்கள்" தேய்ந்த ரெகார்ட் போல ஒரே ராகத்தை பல படங்களுக்கு பற்பல பாடல்களுக்கு உபயோகப்படுத்தும் வல்லமை படைத்தவர்கள். ஒக்க ராகம். ஓராயிரம் படம். வெளிநாட்டிலிருந்து நைசாக மெட்டு உருவும் வித்தை கற்றவர்கள். "அழகிய லைலா" பாட்டுக்கு ஒரு ஆல்பத்தையே கொள்ளையடித்து போட்டு தமிழ் சினிமாவில் துண்டு போட்டு சீட்டு பிடித்த இசைஞர் உண்டு. மேஸ்ட்ரோ இளையராஜாவிடம் நிருபர் ஒருவர் பேட்டியில் கேட்டபோது "ஏழு ஸ்வரங்கள் தானே இருக்கு... அதுக்குள்ள தான் எல்லா பாட்டுக்கும் மெட்டு போட முடியும்" என்றாராம். இருந்தாலும் சில இசை இயக்குனர்கள் சுய ஈயடிச்சான் காப்பி அடித்துக் கொள்வது கொஞ்சம் ஓவர்தான். சமீபத்தில் வந்த எங்கேயும் காதல் படத்தில் வந்த நங்கை நிலாவின் தங்கை நடனம் மற்றும் மெட்டினால் என்னைக் கவர்ந்தது.
 
நேற்று என் மனைவியிடம் இது மைக்கேல் ஜாக்சன் போல இருக்கு என்று அளந்து கொண்டிருந்தேன். யாரோ ஒரு புண்ணியவான் மைக்கேல் ஜாக்சன் ஆடியதற்கு நங்கை நிலாவின் தங்கையை போட்டு பிசைந்து ஒரு வீடியோ யூட்டுபில் ஏற்றியிருக்கிறார். அற்புதம்.

முதலில் மைக்கேல் ஜாக்சன் துரையின் The Way You Make Me ஃபீல். ஒரிஜினல் வர்ஷன்.


மைக்கேல் ஜாக்சன்.. ஒரு நிலாவின் தங்கையை பின்தொடர்ந்து ஆடியது. கலக்கியவர் கலக்கிவிட்டார்.


ஜெயம் ரவியை வேடிக்கை பார்க்கவிட்டு ஹீரோயினை சுற்றி வெள்ளைக்கார ஆட்டக்காரர்கள் ஆடியது... எங்கேயும் காதல் படத்தில் இருந்து... இது தமிழ்ப் பட ஒரிஜினல்.


போரேன்... வேலை நிறையா கிடக்கு.. எங்கயாவது மொனாகோ, அன்டோரா போன்ற நாடுகளில் மெட்டமைத்த ஸ்ருதியான பாடல்கள் கிடைத்தால் நீங்களும் நானும் 'ஒரு பட' இசையமைப்பாளர் தான்.  எல்லாத்துக்கும் சுழி நல்லா இருக்கணும்.
 
பட உதவி: spreadshirt.com
-

ஆடிய பிற ஆட்டங்கள்

Related Posts with Thumbnails