Saturday, June 18, 2011

துரித உணவுகளின் தலைவன்


இந்தப் பெருமை வாய்ந்த பாரத தேசத்தில் சிலருக்கு தமிழில் உப்புமா, தெலுங்கில் உப்பிண்டி, கன்னடத்தில் உப்பிட்டு என்றால் ரமணா விஜயகாந்த் ஸ்டைலில் "பிடிக்காத வார்த்தை". காதை மூடிக்கொண்டு காத தூரம் ஓடிவிடுவார்கள். ஏன் என் சுற்றம் நட்பில் நிறைய பேருக்கு அதைக் கண்டால் ஒருவித அஜீரண அலர்ஜி. அதையே தாரளமாக அரைப்படி சர்க்கரை சேர்த்து ரெண்டு ஏலக்காய் தட்டிப்போட்டு கேசரி பவுடர் கொஞ்சம் தூவி இறக்கினால் ரவை மிச்சம் வைக்காமல் அந்தக் கேசரியை எல்லோரும் தட்டை நக்கி சாப்பிட்டு ஏப்பம் விடுவார்கள். எனக்கு ரவா உப்புமா ரொம்ப பிடிக்கும். அதுவும் கல்யாணம் ஆன புதிதில் என் தர்மபத்தினி கொழகொழன்னு கூழ் மாதிரி கிண்டின "ரவா உப்புமா" (எ) "ரவா பேஸ்ட்" ரொம்ப ரொம்ப பிடிக்கும். அடடா.. என்ன ருசி. என்ன ருசி. அல்வா போல தொண்டையில் வழுக்கிக்கொண்டு உள்ளே இறங்கியது. பதிலுக்கு மல்லிப்பூ வாங்கிக் கொடுத்தேன். "பிடிச்சிருக்கா?" என்று கையில் கரண்டியோடு ஒரு எதிர்பார்ப்பில் கேட்டபோது மூணு வயசு மானஸா மாதிரி கை ரெண்டையும் சிறகாக அகல விரித்து "அவ்ளோ பிடிச்சிருக்கு"ன்னு மனமாரச் சொன்னேன்.

ராத்திரி பதினொன்னரைக்கு பொட்டியும் கையுமாக வந்திறங்கும் திடீர் விருந்தாளிகளுக்கு பசிப்பிணி தீர்க்கவல்லது ரவா உப்மா. பத்து நிமிடத்தில் சாப்பிட்டுவிட்டு பனிரெண்டுக்கு காலை நீட்டிப் படுத்து குறட்டை விடுவார்கள். செய்வதும் ஈசி, உண்பதும் ஈசி. ஜீரணமும் ஈசி. தொட்டுக்க ரெண்டு ஸ்பூன் சர்க்கரை எதேஷ்டம். முதல்நாள் ராத்திரி மாங்காய்த் தொக்கோடு ரவா உப்புமாவை பிசிறி சாப்பிட்ட என்னுடைய உறவினர் ஒருவர் மறுநாளும் நாக்கைச் சப்புக் கொட்டி அதே காம்பினேஷன் ரிப்பீட்டு கேட்டார். ரவா உப்புமா இந்தக் கால ஃபாஸ்ட்  ஃபுட்டுக்கேல்லாம் தலைவன்.


அரிசி நொய் உப்புமா வித் கத்திரிக்கா கொஸ்த்து தேவாமிர்தமா இருக்கும். வெங்காய சாம்பார் கூட அதன் பொருத்தமான ஜோடிதான். ஒரு சமயம் கோயில் குளம் என்று மாயவரம் பக்கம் சுற்றியபோது ஊருக்கு வெளியே வாசலில் "டிபன் ரெடி" போர்டு போட்ட சிற்றுண்டி ஹோட்டலில் போய் உட்கார்ந்து ஆசையாய் "இட்லி"ன்னு கேட்டா "ஒரு அரை மணி ஆவும்"ன்னு சொல்லிட்டு பதிலுக்கு அழுக்கு கையை உள்ளே விட்டு தம்ளர்ல தண்ணீர் கொண்டு வந்து வைத்தார்கள். அந்த அகாலத்தில் "வேறென்ன இருக்கு?" என்று பசியில் வயிற்றைப் பிடித்துக் கொண்டு ஈனஸ்வரத்தில் முனகியதில் வந்த பதில் "உப்பூ......மா...". ஒரு கட்டு கட்டினேன்.

என்னுடைய உறவினர் வட்டத்தில் காற்றடித்தால் பறந்து மாயமாய் மறையும்படி ஒல்லியாக ஒரு மாது இருப்பார். கை, கழுத்து மற்றும் காதுகளில் அணிந்திருக்கும் நவீன அணிகலன்களின் எடை அவரை காற்றிடம் இருந்து காப்பாற்றும். கைலாயத்தில் சிவபெருமானுக்கு சேவை புரியும் கிம்புருடர்கள் கழுத்தில் கிடக்கும் மாலை எலும்பாக இருப்பார். "தெரு நாய்களிடம் ஜாக்கிரதையாக இரு" என்று அடிக்கடி எச்சரிப்பேன். ஒரு உறவினர் வீட்டு விசேஷத்தில் முதல்நாள் முகாமில் சாப்பிடுவதற்கு தட்டை ஏந்தி "எனக்கு உப்புமா.." என்று கும்பலாக நீட்டியபோது "நீ உப்புமா" என்று நான் சொன்னதற்கு வெகு நேரம் யோசித்தார். "கிண்டல்" என்று புரிந்தும் அர்த்தம் புரியாமல் அடிக்க வந்தபோது அவளை சுட்டி "நீ", கையிரண்டையும் இடுப்பருகில் மடக்கி குண்டு போல அபிநயித்து காட்டி "உப்பு", சிரித்துக்கொண்டே "மா" என்று மோனோ ஆக்டிங் செய்து காண்பித்தேன். சற்றுநேரம் வரை மலங்கமலங்க விழித்தது தட்டை கீழே போட்டுவிட்டு கொலைவெறியோடு என்னை துரத்த ஆரம்பித்துவிட்டது. அன்றிலிருந்து விசேஷங்களில் வாய் பொத்தி அடக்கி வாசிக்க வேண்டும் என்று நினைத்துக் கொண்டேன். இன்னமும் அமுல்படுத்தவில்லை.

"அது ஒரு உப்புமா கம்பெனி சார், எல்லாத்தையும் சுருட்டிகிட்டு ஓடிப் போய்ட்டானுங்க" என்று இகழ்வோர் ஏன் உப்புமாவை உபயோகிக்கிறார்கள் என்று இன்றுவரை தெரியவில்லை. கொஞ்சம் கத்திரிக்கா, தக்காளி, உருளைக்கிழங்கை பொடிப்பொடியாக நறுக்கிப் போட்டு கடுகு தாளிச்சுக் கொட்டி கிளறி இறக்கினா "கிச்சடி நல்லா இருக்கு.. கிச்சடி பேஷா இருக்கு"ன்னு ஐந்தாறுமுறை கேட்டு வாங்கி உள்ளே தள்ளுகிறார்கள். "இன்னிக்கி ஏன் இட்லிக்கு தேங்காய் சட்னி அரைக்கலை?"  என்று சிரம் தாழ்த்தி அனேக கோடி நமஸ்காரங்களுடன் பவ்யமாக கேட்டால் கூட "ச்சே. இந்த உப்புமா பொறாத விஷயத்துக்கு ஏன் இப்படி கூச்சல் போடரான்"ன்னு சொல்லி நிராகரித்து விடுகிறார்கள். ஒதுக்கித் தள்ளட்டும், இருந்தாலும் "உப்புமா பொறாத விஷயம்" என்று சொல்லவேண்டுமா?

சாம்பாரில் வெல்லம் கரைத்து தித்திப்பாக சாப்பிடும் கர்நாடக தேசத்தில் "ரவா பாத்" என்று ஸ்டைலாக பெயர் வைத்து விற்கிறார்கள். பணி நிமித்தம் பெங்களூரூ செல்லும்போதெல்லாம் ரவா பாத்தும் கொஞ்சம் இனிப்பு தூக்கலாக இருக்கும் சாம்பாரும் சேர்ந்து வயிற்றை நிரப்புகிறது. அங்கே பந்தியில் பாயசத்திற்கு பதில் சாம்பார்தான் முதலில் இலையில் வைப்பார்களோ? ஆயாசமாக இருக்கிறது.


இவர்களுக்கு எல்லாம் பதில் சொல்லும் விதமாக சாட்டையடியாக இந்த வாரத்தில் ஒரு விஷயம் நிகழ்ந்துள்ளது. இந்தியாவில் பிறந்து அமெரிக்காவில் நாக்கு செத்துப் போன இந்திய கும்பலுக்கு வடிச்சு கொட்டும் Floyd Cardoz என்பவருக்கு சமையல் போட்டியில் $100,000 பரிசு கிடைத்துள்ளது. நியூயார்க் நகரத்தில் மூன்று நட்சத்திர அந்தஸ்த்தில் இருந்த  தப்லா என்ற இந்திய உணவு உபசரிக்கும் ஹோட்டலில் பணிபுரிந்தார் ஃபிளாயிட். தப்லா இப்போது யூனியன் ஸ்கொயர் ஹாஸ்பிடாலிட்டி குரூப்பிடம். கான்சரில் இறந்த தன் தந்தையின் நினைவாக தான் கெலித்த பரிசுத்தொகை முழுவதையும் கேன்சர் ரிசர்ச் இன்ஸ்ட்டியூட் ஒன்றிற்கு தானமாக கொடுத்துவிட்டார். இப்படி ஒரு உன்னதமான நோக்கத்திற்கு உதவிய உப்புமாவை இனிமேல் யாரும் எடுத்தெறிந்து பேசாமல் இருப்பார்களா?

ஐரோப்பிய அமெரிக்க இத்தாலிய பீட்ஸா பாஸ்தா போல ஒரு ஆறு மாதத்தில் "டயல் எ உப்புமா" என்று சிகப்பு கலர் பொட்டியை டூவீலர் பின்னால் கட்டிக்கொண்டு அரை மணி நேரத்தில் வீட்டு வாசலில் கொண்டு வந்து பொட்டலமாய் கொடுத்துவிட்டு போவார்கள். கெட்டிச் சட்னி சாஷேக்களில். "பிச்சூஸ் உப்மா இஸ் மை ஃபேவரிட் ஃபுட்" என்று கூந்தலை விரித்துப் போட்டுக்கொண்டு கால் மேல் கால் போட்ட திரையுலகக் கனவுக் கன்னி யாராவது பனியனோடு கவர்ச்சியாக விளம்பரங்களில் வருவார்கள். "சூப்பி உப்புமா" என்று குடிக்கலாம் சாப்பிடலாம் வகையறா வெளியிடுவார்கள். உப்புமாவை நீர்க்க காண்பித்து காஜோலை உறிஞ்சி சாப்பிட வைத்து விளம்பரப் படுத்துவார்கள். இட்லி தோசைக்கு பதில் திஹாரில் உப்மா பரிமாறப்படலாம். வேண்டாத மாப்பிளைக்கு தான் மாமனார் வீட்டில் உப்புமா கிண்டி போடுவார்கள் என்ற எண்ணம் மாறுவது திண்ணம். எனக்கு நம்பிக்கையிருக்கிறது. இனிமேல் உப்மா பிக்கப் ஆயிடும்.


பின் குறிப்பு: இந்த உப்புமா மேட்டரை பொறுமையாக படித்ததற்கு நன்றி. மேற்கண்ட பாராவில் நான் அறிவித்துள்ள வியாபார உத்தியை பயன்படுத்தி தொழில் தொடங்குவோர் எனக்கு ராயல்டி வழங்கும்படி கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.


பட உதவி: www.sailusfood.com மற்றும் archives.starbulletin.com

-

50 comments:

வை.கோபாலகிருஷ்ணன் said...

உங்கள் பதிவுகளைப்படிக்க என் கண்களுக்கு கொஞ்சம் கஷ்டமாக உள்ளதாக உணர்கிறேன். மற்றவர்களுக்கு எப்படியோ தெரியவில்லை.

எழுத்துக்களை சற்றே பெரிதாக ஆக்கவும்.

பட்டையாக (BOLD) ஆக மாற்றவும்.

சின்னச்சின்ன பத்திகளாக பிரித்துத்தரவும்.

மிகப்பெரிய பதிவுகளாக இருப்பின் 2 அல்லது 3 பதிவுகளாக (தொடராக) வெளியிடவும்.

இந்த மாற்றங்கள் விரும்பிப்படிக்கும் ஆர்வத்தை அதிகரிக்கும்.

தங்களின் சிறிய எழுத்துக்களை நான் பெரியதாக ஆக்கிப்படிக்கும் போது இடதுபுற மற்றும் வலதுபுற மார்ஜின்களை வரிக்குவரி அடிக்கடி இழுத்துவிட வேண்டியதாக இருக்கிறது.

இவையெல்லாம் என்னுடைய தாழ்வான வேண்டுகோள். பிறகு உங்கள் செளகர்யம் எப்படியோ அப்படி.

அன்புடன் vgk

பத்மநாபன் said...

துரித உணவு தலைவனுக்கு சிறப்பான மரியாதை செய்திருக்கிறீர்கள் ...உப்புமாவிற்கு நிலைய வித்வான் எனும் அந்தஸ்து பெயரோடு இருக்கும் .. சில நேரங்களில் நிலையான வித்வானாக மாறுவதும் உண்டு .. போரடிக்காமல் இருக்க தன்னுள் பட்டாணி கேரட் இவை சேர்த்து கிச்சடி யாக மிளிர்வதும் உண்டு ... உப்புமா சாதரணமானது அல்ல ஓட்டை சம்பாரித்து ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்தியிருக்கிறது .. படம் ஜோர் ..

Yaathoramani.blogspot.com said...

அவசரத்துக்கு ஒன்னும் இல்லாட்டி
உப்புமாதான என இனிமேல்
யாரும் அலுத்துக்கொள்ளவேண்டியதில்லை
உப்புமாவோட ரேஞ்சே வேற ஆகிப்போச்சு
உப்புமா பெறாத விஷயத்தைக்கூட
சூப்பர் பதிவாக்கிவிட்டீர்களே
வாழ்த்துக்கள்

துளசி கோபால் said...

சூப்பர் பதிவு.

இன்னிக்கு இரவு நம்மூட்டுலே உப்புமாதான். ரவா உப்புமா.

ஆனால் என்னுடைய ஃபேவரிட் ஐட்டம் அரிசி உப்புமா.

RVS said...

@வை.கோபாலகிருஷ்ணன்
எல்லாவற்றையும் மாற்றுவதற்கு முயற்சி செய்கிறேன் சார்! நன்றி. ;;-))

RVS said...

@பத்மநாபன்
ஹா..ஹா. அற்புதம் பத்துஜி. கமெண்ட்லயே பின்னி பெடல் எடுக்குறீங்க.. நன்றி. ;-))

RVS said...

@Ramani
முதலில் தலைப்பு உப்புமா பெறாத விஷயம் என்று தான் வைத்திருந்தேன் ரமணி சார்! பின்னால் மாற்றினேன். கருத்துக்கு நன்றி. ;-))

RVS said...

@துளசி கோபால்
நன்றி மேடம் முதல் வரவுக்கு.

எனக்கும் அரிசி உப்புமா மற்றும் அரிசி கொழுக்கட்டை ரெண்டுமே பிடிக்கும்.
கருத்துக்கு நன்றி. ;-))

அடிக்கடி வாங்க. ;-))

Matangi Mawley said...

ஒரு யுக்தி தான் sir இந்த உப்மா... ஒத்துக்கறேன்! ஆனாலும்-- எனக்கு உப்மா அவ்வளவா பிடிப்பதில்லை... ஆனா-- எங்க office ல canteen ல-- உப்பு கம்மியா... வெறும் வெங்காயம் மட்டும் போட்டு ... சாதாரணமா ஒரு உப்மா இருக்கும்... வெறும் தக்காளி-வெங்காய சாம்பார்-ஓட அத சாப்ட பிடிக்கும்... எங்க அம்மா கிட்ட சொன்னா... தலைல கைய வெச்சிண்டு--"என்ன ரசனையோ"-ம்பா...

கே. பி. ஜனா... said...

உப்புமாவை உதாசீனம் செய்வது தப்பும்மா! அழகான கட்டுரை...

எல் கே said...

ஈசி உணவு அண்ட் டேஸ்டி .... ஏற்கனவே நான் உப்மாவை பத்தி போட்ட பதிவுக்கு ஒரு விளம்பரம்

http://lksthoughts.blogspot.com/2010/05/blog-post_06.html

ADHI VENKAT said...

நான் DME படித்துக் கொண்டிருந்த போது ஹிமாச்சல் பெண் என்னுடன் படித்தாள். காலையில் என்ன சாப்பிட்ட என்று கேட்டவுடன் ஹல்வா என்றாள். ஆஹா! ஹல்வால்லாம் ஹாஸ்டலில் போடுவாங்களா? என்று யோசிக்கும் போது பின்னாலிருந்த நண்பன் ச்சீ! ரவா உப்புமாவத் தான் இது ஹல்வான்னு சொல்லுது என்றான். ஹிந்தியில் ரவையில் செய்யும் கேசரியை ஹல்வா என்பார்கள். ஏதேதோ எழுதி விட்டேன்.

எங்கள் வீட்டில் இன்று வெங்கலப் பானையில் காந்தலுடன் அரிசி உப்புமா.

CS. Mohan Kumar said...

மீ ஆல்சோ லைக் உப்புமா

அப்பாதுரை said...

நிலைய வித்வான்.. nice.

துளசி கோபால் said...

கோவை2தில்லி.

சண்டிகருக்குக் காந்தலோடு ஒரு பார்ஸேல்......... ப்ளீஸ்:-)

வித்யா சுப்ரமணியம் (Vidya Subramaniam) said...

உங்கள் மனைவியாவது பரவாயில்லை. நான் முதன் முதலில் என் புருஷனுக்கு பண்ணின உப்புமா கடாயை விட்டு வரவேயில்லை. இன்றும் என் பெண்கள் என்னிடம் உப்புமா கேட்க யோசிப்பார்கள். இருந்தாலும் உங்கள் உபமா சுவையாகவே இருந்தது.

A.R.ராஜகோபாலன் said...

அன்றிலிருந்து விசேஷங்களில் வாய் பொத்தி அடக்கி வாசிக்க வேண்டும் என்று நினைத்துக் கொண்டேன். இன்னமும் அமுல்படுத்தவில்லை.


இது இது இதுதான் வெங்கட் டச்
ஒரு உப்பு பெறாத விஷயத்தை கூட
உப்புமா மாதிரி
உடனடியாக
உன்னால்
உச்சத்தில் வைக்க முடியும் என்று
நிருபித்த பதிவு
மனதும் நிரம்பியது
வயிறுதான்..................

மனையாளே உனக்கு
ரவ உப்புமா பண்ணத்தெரியுமா??

RVS said...

@Matangi Mawley
எங்க காலேஜ் கான்டீன்ல (படிக்கற காலத்துல) போட்டதும் இதே போன்று உப்புமாவில் சேர்த்திதான். ஏன் அவருக்கு பரிசு கிடைக்கவில்லை என்று வருந்துகிறேன்.;-))))

RVS said...

@கே. பி. ஜனா...
அழகான கருத்துக்கு நன்றி சார்! ;-))

RVS said...

@எல் கே
அரியலூர் உப்புமா படிச்சுட்டேன் எல்.கே. சுவையா இருந்தது. ;-))

RVS said...

@கோவை2தில்லி
கடைசியில் வெங்கலப்பானையில் "பிடிச்சது" எனக்கும் ரொம்ப பிடிக்கும். காந்தலே ருசி! ;-)))

RVS said...

@மோகன் குமார்
மீ டூ மோகன். சேம் பின்ச். ;-))

RVS said...

@அப்பாதுரை
நிலைய வித்வான் = உப்புமா கலைஞர்... சரியா சார்? ;-)))

RVS said...

@துளசி கோபால்
எனக்கும் பிடிக்கும் மேடம்! ;-))

RVS said...

@வித்யா சுப்ரமணியம் (Vidya Subramaniam)
எங்க வீட்ல அது மைசூர் பாக்கு செய்யும் போதுதான்.... செங்கல் செங்கல்லா பேர்த்து எடுத்து..... வேணாம் இன்னொரு பதிவுக்கு வச்சுக்கிறேன். கருத்துக்கு நன்றி மேடம். ;-)))

RVS said...

@A.R.ராஜகோபாலன்
பாராட்டுக்கு நன்றி நண்பா! ;-))

Anonymous said...

ஏன் சார் சும்மா இருக்குறவனை உசுப்பேத்தி உப்புமா சாப்புட வக்கிறீங்க. இப்ப நைட் 11.30 மணி. கொஞ்சம் முன்னாடி படிச்சிருந்தா வீட்ல உப்மா செய்ய சொல்லி இருப்பேன். மவுத் வாட்டரிங் போஸ்ட்!!

சிவகுமாரன் said...

நீ உப்பு மா -- ரசித்து சிரித்தேன்.

ரிஷபன் said...

அவளை சுட்டி "நீ", கையிரண்டையும் இடுப்பருகில் மடக்கி குண்டு போல அபிநயித்து காட்டி "உப்பு", சிரித்துக்கொண்டே "மா" என்று மோனோ ஆக்டிங் செய்து காண்பித்தேன்.

ஆஹா.. அந்த காட்சியை நினைத்துப் பார்த்தாலே நவரசம் தெரிகிறது!

RVS said...

@! சிவகுமார் !
ஹா.ஹா.. மவுத் வாட்டேரிங்.... ;-))
நன்றி சிவா.. ;-))

RVS said...

@சிவகுமாரன்
நன்றி சிவகுமாரன்!
காதல் கவிதைகள் படித்துவிட்டேன்... பின்னூட்டமிடுகிறேன்.. நன்றி. ;-))

RVS said...

@ரிஷபன்
பாராட்டுக்கு நன்றி சார்! ;-))

மோகன்ஜி said...

நம்பினா நம்புங்க.. நான் உங்க கிட்ட இந்த வாரத்தில் ஒரு உப்புமா பதிவை எதிர்பார்த்தேன்.. வந்து பாக்குறேன்... மணக்க மணக்க உப்புமா..

பெங்களூர் ஹோட்டல்களில் சௌசௌ பாத என்று ஒரே பிளேட்டில் ஒரு கப் உப்புமாவும் ஒரு கப் கேசரியும் வைப்பார்கள்.

நான் வெண்கல போகிணியில் செய்யப் படும் அரிசி உப்புமா ரசிகன்

ஸ்ரீராம். said...

ஒரே ஐட்டத்தையே சாப்பிட்டுக் கொண்டிருந்தால் போர் அடிக்கும். மாற்றாக ஓரிரு முறை உப்புமா சாப்பிடலாம். ரவா உப்புமா கூட செய்யும் வகையறிந்து செய்தால் சுவைதான். கூட காய் போட்டு கிச்சடி செய்வது இருக்கட்டும், பெருங்காய வாசனையோடு உதிரியாயும் இல்லாமல் கொழ கொழ என்றும் இல்லாமல் பச்சை மிளகாய் மட்டும் போட்டு ர.உ. செய்தால் தொட்டுக் கொள்ள மா. தொ. போதும்...சுவை. அதிலேயே கொதிக்கும்போது கொஞ்சம் புளிப்பு மோர் விட்டு கிண்டிப் பாருங்கள்...உபரியாய் இஞ்சி, சி.வெங்காயம் உங்கள் விருப்பம். புது சுவையாய்...

துளசி கோபால் said...

//அதிலேயே கொதிக்கும்போது கொஞ்சம் புளிப்பு மோர் விட்டு கிண்டிப் பாருங்கள்...உபரியாய் இஞ்சி, சி.வெங்காயம் உங்கள் விருப்பம். புது சுவையாய்...//

தாளிக்கும்போது இஞ்சியைத் துருவிச் சேர்த்து இறக்குனதும் கொஞ்சம் எலுமிச்சை பிழிஞ்சு பாருங்க. சுவை தூக்கிட்டுப் போகும்.

சுந்தர்ஜி ப்ரகாஷ் said...

சரியான பதத்தில் செய்யப்படும் உப்புமாவுக்கு சைட் டிஷ் தேவையேயில்லை.

அப்படியே வேண்டுமென்றால் மாவடு ஊறிய ஜலம்-மாஹாளிக்கிழங்கு ஊறிய ஜலம்-புளிமிளகாய்-மாங்காய்த் தொக்கு அல்லது எலுமிச்சை ஊறுகாய் என்று மிக எளிய துணையோடு பசி நீக்கும் அமிர்த போஷிணி இந்த ரவா உப்மா.

என் அம்மாவால் எக்ஸ்ட்ரா ஃபிட்டிங்ஸ் எதுவுமில்லாமல் கறிவேப்பிலை-பச்சை மிளகாய்-இஞ்சி-சேர்ந்த உப்மா ஓர் சுவையெனில் என் மனைவியின் நளபாகத்தில் முந்திரியும் நெய்யும் மணக்க கையிலிருந்து வயிற்றுக்கு நேராகச் சூடாகப் ப்ரயாணிக்கும் ரவா கேஸரி மற்றொரு தெவிட்டாத சுவை.

சு...ஜியின் ஏகபோகத் துணை இந்த சூஜி.

போட்டிக்குத் தயாராய் இருக்கவும் ஆர்விஎஸ் மற்றொரு இடுகைக்கு.

Sai said...

ஆர். வீ, எஸ் மாமா --> நீங்கள் தான் நமது உப்புமா கட்சி தலைவர். நண்பர்களே.. துணை தலைவர், பொது செயலாளர், பொது கூழு, வட்டம், மாவட்டம் இன்னபிற பதவிகள் வேண்டும் எனில் இந்த பதிவை தந்தி போல பாவித்து உடனடியாக
நமது உப்புமா கட்சி தலைவர் மண்ணை சுஜாதா உப்புமா கழக விடிவெள்ளி நாளைய முதல்வர் உப்புமா போரட்ட தியாகி நமது தங்கத்தின் தங்கம் அன்பின் உருவம் உப்புமா வின் மறுவடிவம் அண்ணன் ஆர். வீ, எஸ் மாமா அவர்களை தொடர்பு கொள்ளவம் ...
www.rvsm.in
இப்படிக்கு
அமெரிக்க நாட்டின் விர்ஜெனியா மாநிலத்தில் பாஇர்பாக்ஸ் நகர் 43 வது வட்டம்
ஆர். வீ, எஸ் மாமா வின் உப்புமா கட்சி தொண்டன் சாய்

அப்பாதுரை said...

சுந்தர்ஜி.. வாவ்!

RVS said...

@மோகன்ஜி
அண்ணா! நீங்களும் நானும் ஒன்னு... அரிசி உப்புமா ரசிகர்கள்... ;-))

RVS said...

@ஸ்ரீராம்.
தினமும் நீங்கள் தான் வீட்டில் உப்புமாவா! பலே..பலே.. ;-))

RVS said...

@துளசி கோபால்
மேடம்... உலக உப்புமா ரசிகர்களுக்கு இந்தப் பதிவின் சுட்டியை அனுப்பலாமா? நல்லா வெந்துகிட்டு இருக்கு.. ;-))))

RVS said...

@சுந்தர்ஜி
ஜி! நீங்கள் தான் உப்புமா ஸ்பெஷலிஸ்ட்! ரசிகன் ஸ்வாமி நீங்கள்.. ;-)))

என்றென்றும் உங்கள் எல்லென்... said...

என் வீட்டிலேயே நான் உப்புமா செய்ய வேண்டும்..அதை சாப்பிட வேண்டும் என்று சொல்வார்கள். சும்மா அனுபவித்து செய்வேன்.
என் இனிய உப்புமாவிற்காக வரிந்துகட்டிக் கொண்டு இத்தனை எழுதியிருக்கும் உங்களுக்கு ஓர் ‘ஓ’. இட்லிக்கொரு காலம் வந்தால் உப்புமாக்கொரு காலம் வரும்.

RVS said...

@Sai
உப்புமா கட்சி.. ரொம்ப ஜோரா இருக்கு பேரு...
மாமா நீயும் என் கட்சியில் இருந்தால் எனக்கு பலமே.. நம்மூர் பார்ட்டிங்க அல்லாரையும் இட்டுகினு வா! நாளை நமதே!
சாய்... உன்னுடைய கமென்ட்டிற்கு எனது நன்றிகள் உரித்தாகட்டும்... ;-))

RVS said...

@அப்பாதுரை
என்னா ...வாவோட உட்டுட்டீங்க.. ஒரு பார்சல் கேளுங்க சார்! ;-))

RVS said...

@என்றென்றும் உங்கள் எல்லென்...
முதல் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி எல்லென். ;-)) யானைக்கொரு காலம் வந்தால் பூனைக்கு ஒரு காலம்.. உங்கள் உப்புமா இனிமேல் இன்னும் சத்துமாவாக போற்றப்படும்.. நன்றி. ;-))

வெங்கட் நாகராஜ் said...

மன்னை மைனரே.... முக்கால் வாசி பேருக்கு பிடிக்காத உணவும் இந்த ரவா உப்புமா...

என் அப்பா, அம்மாவிடம் சொல்வார் - “ரவா உப்புமா, மொத்தமா அஞ்சு பேருக்கு பண்ணா நல்லா இருக்காது... அதனால ரெண்டு பேருக்கு பண்ணனும், நிறைய எண்ணெய் விட்டு, முந்திரி, கருவேப்பிலை, எல்லாம் போட்டு” செய்து வாயிலே போட்டா, அப்படியே வழுக்கிண்டு வயிற்றுக்குப் போயிடும்-னு....

எனக்கு மிகவும் பிடித்த உப்புமா - கொழமா உப்புமா... அதுவும் அம்மா கையால் செய்தது என்றால் இன்னும் இரண்டு பிடி சுலபமாய் உள்ளே செல்லும்.... ம்... உப்புமா நினைவுகள்...

pudugaithendral said...

எனக்கு ரொம்ப பிடித்த ஒரு உணவு இது. செய்யும் பொழுதே ரொம்ப அனுபவித்து செய்வேன். தாளிக்கும் பொழுதே உப்புமாவின் வாசம் ஃபெர்பெக்டாக வரவேண்டும் என்பதில் கவனமாக இருப்பேன்.

உப்புமா பத்தியும் பதிவு எழுதலாம்னு காட்டியிருக்கீங்க. நன்றீஸ்

RVS said...

@வெங்கட் நாகராஜ்
கொழமா உப்புமா எனக்கும் பிடிக்கும். நன்றி தலைநகரம்! ;-))

RVS said...

@புதுகைத் தென்றல்
கருத்துக்கு நன்றி சகோ.
என்ன எழுதறதுன்னு தெரியாம எழுதினது இது. ;-)
அடிக்கடி வாங்க சகோ. ;-))

ஆடிய பிற ஆட்டங்கள்

Related Posts with Thumbnails