Saturday, August 20, 2016

குமுட்டி நினைவுகள்

"கார்த்தீ.... சாம்ப்ராணிக்கு தணல் வேணும்...."
அம்மா வரலக்ஷ்மி பூஜையின் நடுவில் குரல் கொடுத்தாள்.
" ....ம்ம்ம்... சங்கல்பம் முடிஞ்சவொன்னே பேசுங்கோ மாமி.. நமோஸ்துதே.." என்று மந்திரங்களுக்கு இடையில் அம்மாவைக் கண்டித்து அடுத்த மந்திரத்துக்குத் தாவினார் வெங்கடேச சாஸ்திரிகள் . அம்மாவை வரலக்ஷ்மி கோச்சுக்கமாட்டா. எழுபத்து ஐந்து வருஷ உழைப்பு. பொறந்தாம் புக்காம் எல்லோருக்கும் நேரங்காலம் பார்க்காமல் அசராத உழைப்பு. அர்ப்பணிப்பு.
"பின்னாடி கொல்லை ஷெட்டு லாஃப்ட்ல குமுட்டி இருக்குடா தம்பி.. அத எடு.." பவானி சித்தி கொக்கியாய்க் கூன் விழுந்த முதுகை நிமிர்த்திக் கேட்டாள்.
எக்கிக் குமுட்டியை எடுக்கும் போதே சாரதா பாட்டியின் நினைவுகள் என்னை மொய்க்க ஆரம்பித்தன. அண்ட்ராயர் வயசிலிருந்து பாண்ட் போடும் வரை என்னை வளர்த்துப் பெரிய ஆளாக்கி சென்னைக்கு அனுப்பி வைத்தவள்.
"பக்கத்து ப்ளாஸ்டிக் வாளில கரி இருக்கு பாரு.. அதையும் எடுத்து குமுட்டி ஜல்லடைல போடு... நா உரிமட்டை நார் கொண்டு வரேன்...சித்த நாழில சீக்கிரம் பிடிச்சுக்கும்.." என்று பவானி சித்தி விலகிய நொடியில் குமுட்டியை இறக்குவதற்குள் மனசு மன்னையில் தஞ்சமடைந்திருந்தது.
மதனகோபால்நாயுடு கடையில் ஒரு மனு விறகும், உர சாக்குப் பையில் ரெண்டு கிலோ கரியும் வாங்கிக்கொண்டு பவானி சித்திக்கு ஒத்தாசையாகத் தூக்கிக்கொண்டு ஜெயலக்ஷ்மி விலாஸ் ஸ்கூல் தாண்டியது கண்ணுக்குள் வந்து போனது. பின்னால் திரும்பித் திரும்பி பார்த்துக்கொண்டே வருவாள். பாவம் தம்பிக்கு கை வலிக்குமே என்று யாராவது தெரிந்தவர்கள் சைக்கிளில் கடந்தால் "தம்பி.. இவனைக் கொஞ்சம் கீழ்கரையில இறக்கிவிட்டுடேன்.." என்று கெஞ்சி ஏற்றிவிடுவாள்.
"ம்... விசிறு.." என்று எரியும் கசங்கிய காகிதத்தை குமுட்டி வாயில் சொருகினாள். வேஷ்டியைக் கால்களுக்கிடையில் சொருகிக்கொண்டு சந்தியாவந்தனம் பண்ணுவது போல உட்கார்ந்து கொண்டேன். ப்ளாஸ்டிக் விசிறியால் “பட்..பட்..பட்”டென்று விசிற ஆரம்பித்தேன். குமுட்டியின் மேலிருந்து குபுகுபுவென்று புகை சுழன்று வரவர அதற்குள் கறுப்பு-வெள்ளையில் காட்சிகள் ஓட ஆரம்பித்தது.
புளி போட்டுத் தேய்த்த, டாலடிக்கும், வெண்கலப்பானையில் தான் பாட்டி அரிசி உப்புமா செய்வாள்.
"பசிக்கிறது.. என்ன டிஃபன்?" என்று பள்ளிக்கூடம் விட்டு வந்தவுடன் பரபரப்போடு அடுக்களைக்கும் நுழையும் போது "சித்த குமுட்டியை விசிறுடா... ஒருதடவை குழப்பிட்டு எடுத்துண்டு வரேன்" என்று பனைமட்டை விசிறியைக் கையில் கொடுத்துவிட்டு வெண்கலப்பானையோடு கொல்லைப்பக்கம் கிணத்தடிக்கு விரைவாள். பாட்டி பளபள வெண்கலப்பானையோடு வருவதற்குள் குமுட்டியில் தணல் பிடித்திருக்கவேண்டும்.
எல்லாம் முடிந்து சாப்பிடுவதற்குள் பசி போய்விடாமல் இருக்க "இந்தாடா... " என்று ஒரு பிடி வேர்க்கடலையைக் கையில் திணிப்பாள். குனிந்து குன்று போல உட்கார்ந்து கொண்டு... எல்லாம் முடிந்து இறக்கும்போது.. பின்னால் தட்டோடு நான் நிற்பேன். "சித்த உலப்பூறட்டும்டா..". என்றைக்காவது கத்ரிக்கா கொத்ஸு கிடைக்கும். தேவார்மிதம்.
"தம்பி... இன்னும் கொஞ்சம் பேப்பர் சொருகு... கரி ஈரமா இருக்கு போல்ருக்கு.. பிடிச்சுக்கலை.." குமுட்டி வாயில் பேப்பர் சொருகி வேகமாக விசிறினேன்.
விரத நாட்களில் சர்க்கரை வள்ளிக் கிழங்கு சுட்டுச் சாப்பிடுவதற்கும்.. "இன்னிக்கி பயத்தம் தூத்தம் வெச்சுடறேன்.." என்று கிருத்திகைக்குப் பயத்தம்பருப்புப் பாயஸமும் குமுட்டியில்தான் வைப்பாள். "என்னயிருந்தாலும் குமுட்டிதான் மடி.. நீங்க என்ன சொல்றேள் அக்கா?..." என்று பக்கத்தாத்து ரமா பாட்டியை துணைக்குக் கூப்பிடுவாள்.
"கத்திரிக்கா தொகயல் பண்ணிடுடீ பவானி..." என்று கரிமேல் போட்டு கையாலேயே சுட்டுத் தருவாள். தோல் வழுமூண்டு போயி வெந்த கத்தரிக்கா பந்திக்கு அழைக்கும்.
"இன்னுமா புடிச்சுக்கலை... பூஜையே முடிஞ்சுடும் போல்ருக்கே..." என்று பின்புறத்திலிருந்து பவானி சித்தியின் குரல் கேட்டது. விசிறிய கையையும் கடந்த காலத்தில் கொக்கி போட்டிருந்த மனசையும் நிறுத்திவிட்டு குமுட்டி அடுப்பைப் பார்த்தேன். மேலே கறுப்பாய் இருந்த கரி அடிபாகத்தில் பிறந்த குழந்தையின் பாதம் போல சிவப்பாக இருந்தது.
"இந்த தணல் போறும்டா..." என்ற குரலுக்குக் குமுட்டிப் புகையிலிருந்து மீண்டு நிகழ்காலத்திற்குள் நுழைந்தேன். தணல் தூபக்காலில் இடப்பட்டு சாம்பிராணி புகை பூஜையறையெங்கும் படர்ந்தது. புகையை மீறி தூபக்காலில் பார்த்த கரியின் ஜிவ்வென்ற அக்னியில் எனது மன்னை நினைவுகள் கனன்றுகொண்டிருந்தது.

0 comments:

ஆடிய பிற ஆட்டங்கள்

Related Posts with Thumbnails