Friday, August 19, 2016

பீச்சாங்கரைக்கு வருபவர்கள்


பீச்சாங்கரைக்கு வருபவர்கள் பல தினுசு.
1. டாமிக்கு பீச் பிடிக்கும். அந்த இயற்கை எழில் கொஞ்சும் சூழலில்தான் சுச்சா..கக்கா வரும். ஆகையால் ஷார்ட்ஸ் ஸகிதம், முன்னால் டாமி நாக்கைத் தொங்கப்போட்டுக்கொண்டு தன்னை இழுக்க, தான் பின்னால் மனோகரா சிவாஜி போல இழுபட ஒயிலாக வருவார்கள்.
2. வெய்யில் ஜாஸ்தி. வெள்ளை லெங்கிங்கில் தன்னுடைய யூகேஜி குழைந்தையுடன் சமுத்ரதில் உருண்டு பெரண்டு முழுக்குப் போட்டு... தனக்கும் லஜ்ஜைக்கும் ஸ்நானப்ராப்தி கூட கிடையாது என்று லோகத்திற்கு நிரூபிப்பார்கள்.
3. கூட்டுக் குடித்தனம். பத்து பேருக்கு பத்துக்குப் பத்து ரூமாயிருக்கும். தலை துவட்டும் காட்டன் துண்டை பீச் வாசலில் விரித்து ஜோடியாய் காலை நீட்டிப் படுத்துக்கொண்டு தலைக்கு மேலே வாட்ஸாப் பார்த்துச் சிரிப்பார்கள். மணல் விசிற அருகே நடந்தால் முறைத்துப் பார்த்து சபிப்பார்கள்.
4. தனவந்தரான கருங்கேச மாமனார், வைர மூக்குத்தி டாலடிக்கும் மாமியார், சினிமாவில் பணக்கார அப்பாவாக தோன்றும் சரத்பாபு போன்ற புருஷன் என்ற ஃபேமிலியோடு கறுப்பு ஷார்ட்ஸ், அபாயகரமான கழுத்தோடு டீஷர்ட்.... குடும்ப குத்துவிளக்காக வரும் டாப்கிளாஸ் மருமகள்.
5. விட்டால் பிய்த்துக் கோண்டு ஓடிவிடுவாளோ என்றஞ்சி கையோடு கை கோர்த்து கோந்து போட்டு ஓட்டிக்கொண்டு வரும் தலைகலைந்த காதலர்கள்.
6. ஃபுட்பாலால் போவோர் வருவோரின் பிருஷ்டபாகத்தை பதம் பார்க்க வைக்கும் கால்சக்தி காளைகள்.
7. பெருங்கவலையில் கடல் பார்க்க தனிமையில் உட்கார்ந்து சோகம் கரைய கரையில் பெருமூச்சு விடும் குடும்பபாரம் இழுக்கும் கணவோத்தமர்கள்.
8. நண்பர்களோடு மிளகாய் பஜ்ஜி கடித்து குரூப்பி எடுத்து ஃபேஸ்புக்கில் விடும் நட்பிலக்கண பிரகிருதிகள்.
9. வெட்கம் தூக்கலாக தோளோடு தோள் உரசிக்கொண்டு கழுத்தில் புது மஞ்சள் சரடோடு குல்ஃபியும் கையுமாக உலாத்தும் ஜோடி.
10. எங்களைப் போல குடும்பமாக நீரில் நின்று விட்டு ஓரமாய் உட்கார்ந்து இப்படி வேடிக்கைப் பார்த்துவிட்டு வீட்டுக்கு மூட்டையைக் கட்டுபவர்கள்.
இன்று எலீயட்ஸ் பீச்சில் கூட்டம் அம்மியது. வெய்யில் போட்ட தாக்கம் ஜனங்களின் நடவடிக்கையில் தெரிந்தது. பெருவாரியான மக்கள் தண்ணீரில் கால் நனைத்து இன்பம் கண்டார்கள். நான் பார்த்த சில காட்சிகளை மேலே பட்டியலிட்டேன். கிளம்புவதற்கு முன்னர் ஒரு ”திடுக்” நிகழ்ச்சி.
எட்டு பேர் இருக்கும். பதினொன்று இல்லையென்றால் பன்னிரெண்டு படிப்பார்கள். வளர்த்தியான நான்கு பெண் பிள்ளைகள். மீதம் அரும்பு மீசையோடு ஆம்பிளை பசங்கள்.
“அரே யார்...”
“இட்ஸ் ஜஸ்ட் ஃபன் டா...”
“டோண்ட் பி ஸில்லி... “
“ஷி இஸ் ஃப்ளர்ட்டிங்...”
“கோன்னா ஹிட் யூ ப்ளடி .ஃப..ர்”
மாறி மாறி காதில் விழுந்தன வார்த்தைகள். பெண் பிள்ளைகள் ஷார்ட்ஸ் பனியன். தப்பில்லை. தன்னம்பிக்கை ததும்ப நாகரீகமாக வளர்கிறார்கள். நுனி நாக்கில் ஆங்கிலம் தாண்டவமாடுகிறது. புஷ்டியான, பசையுள்ள பசங்கள். பந்து போட்டு கேட்ச்சிங்-கேட்ச்சிங் விளையாடினார்கள்.
நான் பதவிசாக பார்த்துக்கொண்டிருந்தேன். இருள் கவியத் துவங்கியது. பசங்கள் விரல்கள் மடக்கிய கையோடு கை குத்துவிட்டு முட்டி இடித்து “பை டா..” என்று சொல்லிக்கொண்டார்கள். சிரித்துக்கொண்டார்கள். அப்போதுதான் அது நிகழ்ந்தது.
திடுமென்று ஆவேசம் வந்தது போல ஒவ்வொரு பையனையும் ஒவ்வொரு பெண் பிள்ளையும் ஆரத்தழுவி “பை டா.. பை டா...” என்று ஸ்நேகமாகச் சொல்லிக்கொண்டார்கள். எனக்கு தூக்கிவாரிப் போட்டது. ஒவ்வொரு பையனையும் ஒவ்வொரு பெண்ணா... இல்லை.. ஒரு பையனை ஒரு பெண்ணா? ரீவைண்ட் தாறுமாறாக ஓடி கீறல் விழுந்த சிடி போல கொசகொசத்துப்போனது.
வருத்தம் தோய்ந்த குரலில் ”இது தப்பில்லையா?” என்றேன் சங்கீதாவிடம்.
”அண்ணன் தங்கைகளாக பழகுகிறார்கள் போலிருக்குது.. “ என்றாள் நமுட்டுச் சிரிப்புடன்.
“இந்த வயசுல அண்ணன் தங்கை.. அக்கா.. தம்பியாக இருந்தாலும் பக்கத்துல வந்து தொட்டு பேசக் கூடாதுன்னு எங்க பாட்டி வைவாள்.” என்று கடலையே அமைதியாகப் பார்த்தேன். நம்ம வீட்டுச் சரக்குகள் நல்லவிதமாக கரையேற வேண்டுமே என்ற கவலை பிறந்தது.
“பசங்க கிட்டே நிறையா பேசணும்...” என்று இருவரும் சேர்ந்தே சொல்லிக்கொண்டோம். நல்லது கெட்டது பாகுபாடு கற்றுத்தர வேண்டும்.
மூளைக் கூர்மையுடைய நல்ல புத்திசாலிகளாக இருக்கலாம். செண்டம் எடுக்கும் முதல் மாணவர்களாக இருக்கலாம். ஒழுக்கமானவர்களாக இருப்பது அதைவிட முக்கியமில்லையா? கட்டிப் பிடித்து “பை” சொல்வது அப்படியொன்றும் ஒழுக்கங்கெட்ட காரியமில்லை என்று புரட்சிகரமான வாதுபோர் புரிய வராதீர்கள். பஞ்சும்-நெருப்பும் பக்கத்தில் இருப்பது அபாயம் என்பது சாதாரண விதி! மாறுவது சமூகத்திற்கு கேடு!!
ம்.. முக்கியமான ஒன்றை சொல்ல விட்டுவிட்டேன்.
இடது கையில் மணியும் உயர்த்திப் பிடித்த வலது கையில் ரோஸ் கலர் பஞ்சு மிட்டாயோடு விற்றுக்கொண்டு போகும் வடக்கத்தி பையன் இந்த விடைபெறுதல் நிகழ்ச்சியைக் கண்டு அதிர்ச்சியாகி... பத்தை மாங்காய் விற்கும் கடையில் விழுந்து.... அறுத்த மாங்காய் மண்ணில் சிதறி... ஏக ரகளை.. பொருள் நஷ்டம். மனக் கஷ்டம்.
பார்த்தவர்களுக்கே இந்த கஷ்டம் என்றால்.... வேண்டாமே செல்வங்களே!!!
படம்: அடியேன் க்ளிக்கிய பனோரமா! 

0 comments:

ஆடிய பிற ஆட்டங்கள்

Related Posts with Thumbnails