Saturday, August 20, 2016

புது சேப்பாயீ...........

"அடி பட்டூ.. உம் புது மாட்டுப்பொண் எப்டியிருக்கா?" என்று குளக்கரையில் துணி துவைக்கும் போது விஜாரிப்பது போல எனது புதுக்காரைப் பற்றி போகுமிடமெல்லாம் நட்பும் சுற்றமும் அக்கறையாக விஜாரிக்கிறார்கள். ஒரு வ்யாசம் எழுதவேண்டும் போல கை அரித்தது.
*
பளபளக்கும் புதுக்காரை சென்னை வீதிகளில் ஓட்டுவதற்கு அசாத்திய நெஞ்சுரமும் அளப்பரிய அதிர்ஷ்டமும் பூர்வஜென்ம புண்ணியத்தின் பத்து சதவிகிதமாவது உங்கள் கணக்கில் சேமித்திருக்க வேண்டும். காந்தம் கண்ட இரும்பு ஊசியாகவும் தேங்காய்பத்தைக் கண்ட பெருச்சாளியாகவும்புதுக்காரைத் துரத்தும் துர்சக்திகள் அதிகம் உலவும்.

ஐந்து வருடங்களுக்கு முன் டிஸையர் ஒன்று எனக்குக் காராக வாக்கப்பட்டது. சேப்பாயி என்று பெயரிட்டு அதனுடன் நான் வாழ்க்கை நடத்திக்கொண்டிருந்தது இந்த ஃபேஸ்புக் சமுதாயம் அறிந்ததே. ஒரு சுபயோக சுபதினத்தில் மாருதிகாரர்கள் ரிப்பன் வெட்டி காட்பரீஸ் கொடுத்து கையில் சாவியை ஒப்படைத்து "ஹாப்பி மோட்டாரிங் சார்.." என்று வீட்டுக்கனுப்பி சரியாக மூன்றாவது நாள். புதுகாரின் ரெக்ஸின் சீட்வாஸனை இன்னமும் குப்பென்று அடித்துக்கொண்டிருந்தது. என்னது? அடடா... இல்லையில்லை.. நீங்கள் நினைப்பது போல இல்லை. சீட்டின் மேல் அழுக்குப் படாமல் மாட்டிவிட்டிருந்த பாலீதீன் கவரெல்லாம் உடனே கழட்டிவிட்டேன்.
முதல் நாளிரவு நல்ல மழை. சாலையெங்கும் திடீர்க் குட்டைகள். குளங்கள், ஓரத்தில் ஆறுகள் என்று வழியெங்கும் நீர்வளம் மிகுந்து செழிப்பாகக் காணப்பட்டது. கத்திப்பாரா... காசி தியேட்டர்.. உதயம்... என்று யாருடனும் ஒட்டாமல் உரசாமல் புது வண்டியின் கற்பு கெடாமல் சர்வஜாக்கிரதையாக வந்துகொண்டிருந்தேன். பக்கத்து இருக்கையில் சங்கீதா. இளையராஜா இசை வண்டியுள் ஆக்ஸிஜனாய் நிரம்பியிருந்தது.
அஷோக் பில்லர் சிக்னல். சிவப்பிலிருந்து மாறி பச்சை ஒளிர்ந்து கிளப்பினேன். அங்கே இடதுபுறம் ஒரு சிவன் கோயில் இருக்கும். தெரியுமா? ஆமாம் அங்கே வரும் போது ஒரு பெரிய மூட்டை என் போனெட்டில் விழுந்தது. மூட்டையா அது? என்று நான் அசந்து பார்த்துக்கொண்டிருந்த போது அது துளிர்த்து இலையெல்லாம் முளைத்திருந்தது. ஓஹோ! அது மூட்டையில்லை மரக்கிளை என்று சுதாரித்துக்கொண்டேன். சங்கீதாவுக்கு அந்த மரம் விழுந்த அதிர்ச்சி. "நேத்திக்கு பெஞ்ச மழை எஃபெக்ட்" இது சங்கீதா. எனக்கு போனெட் என்னாச்சோ என்ற கொடுங்கவலை. கொத்தோடு கிளை போட்ட ஆண்டவன் ஒரு மூட்டை பொற்காசுகள் இந்த ஏழைக்கு அருளியிருக்கக்கூடாதா?
நான் இறங்கி சேப்பாயிக்கு என்ன சேதாரம் ஆயிற்று என்று பார்ப்பதற்குள் சங்கீதா இறங்கி ப்ளாட்ஃபார்ம் ஓரம் ஓடினாள். வண்டியின் பாகமெதுவும் தெரித்து விழுந்துவிட்டதோ என்று அச்சப்பட்டேன். ஓடியவள் திரும்பவும் வந்து "கர்ச்சீப் தாங்க.." என்று பிடுங்கிக்கொண்டு போனபோதுதான் கவனித்தேன். அங்கே ஒரு பாட்டியின் தலையிலிருந்து இரத்தம் வழிந்துகொண்டிருந்தது. "முறிஞ்சு விழுந்த கிளை பக்கத்து வண்டி பில்லியன்ல உக்கார்ந்திருந்த பாட்டி மண்டையிலயும் குத்தித்து" என்று கர்ச்சீப்பை வாட்டர் பாட்டிலைச் சரித்து தண்ணீரில் நனைத்து கட்டுப் போட்டுவிட்டுதான் சேப்பாயிக்கு என்ன ஆயிற்று என்று பார்க்க வந்தாள்.
இதிலிருந்து தெளிவது என்னவென்றால் விதியை மாற்ற யாராலும் முடியாது. ஆகாயத்திலிருந்து விழுவதற்கு என்ன பம்பர் போட்டு வண்டியைக் காப்பாற்ற முடியும்?
இரத்தக்காவு வாங்கினாலும் அதற்கப்புறமும் சேப்பாயியின் மேல் எண்ணெற்ற விழுப்புண்கள். ஆட்டோ, ட்ரை சைக்கிள், டூவீலர் என்று பேதமில்லாமல் மாதம் ஒரு முறை சீண்டிக் கோடு போடுவார்கள். "எல்லாம் மரத்துப்போச்சு.." என்று அரங்கேற்றம் பிரமீளா சொல்வது போல இவையெல்லாம் பழகப்பழக மரத்துப்போய்விட்டது. ஐந்து வருடங்கள் உழைத்துக் களைத்துப்போன வண்டியை மாற்றும் திட்டம் உதித்தது. புது சேப்பாயி வாங்குவது என்று முடிவாகி ஹோன்டா கம்பெனிக்காரர்களை அணுகினேன்.
சரவணபவனில் கையலம்பி உட்கார்ந்த பின்னர் ஆர்டர் எடுத்துதான் ஆனியன் ரவா ஊற்றுவது போல "புக் பண்ணிட்டீங்கன்னாதான் வண்டிய ரெடி பண்ணுவாங்க" என்றார்கள். "ஐயா.. பி ஆர் வி என்கிற வகையறாவில் உச்சபட்ச வசதிகள் இருக்கும் டீஸல் வண்டியில் மெட்டாலிக் சிகப்பு.. ஒண்ணு..." என்று தெண்டனிட்டுக் கேட்டுக்கொண்ட பின் "ஒரு மாசமாவது ஆகும்..." என்று ஒரு கிளாஸ் பச்சத் தண்ணீர் கொடுத்து அனுப்பிவைத்தார்கள். இரதமில்லாத ராஜா போல பொதுஜன போக்குவரத்தில் பயணமாகி பதிவுக்கு மேல் பதிவாக எழுதி.. உங்கள் எல்லோரையும்... நாயடி பேயடியாய்... சரி மீண்டும் அந்த நாட்களைப் பற்றி பேச வேண்டாம். உங்களுக்கு அது ஒரு கெட்ட கனவாகப் போகட்டும்.
மாருதியைக் காட்டிலும் ஹோன்டா சொகுசாக இருக்கிறது. புதுப்பொண்டாட்டி காஃபி போட்டுக்கொடுத்து “சொல்லுங்கோன்னா..” என்று அன்பொழுகக் கேட்பது போல சொல் பேச்சு கேட்கிறது. "துட்டு கூடப் போட்டாக்கா அப்படிதான் இருக்கும்" என்று ஒரு நண்பர் தோளில் தட்டினார். நான் காரோட்டக் கற்றுக்கொண்டதே எங்கள் வீட்டிலிருந்த டொயோட்டா குவாலிஸில்தான். ஆகையால் ஏழு பேர் அமரும் வண்டியாக இருந்தாலும் இலகுவாகத்தான் இருக்கிறது.
பின்பக்கம் விசிறி போல ஒரு வைப்பர் இருப்பதால் மழைத்தண்ணீரை வழித்துவிட்டு கவர்ச்சியாக பின்பக்கக் காட்சி காண்பிக்கிறது. “கொஞ்சம் அந்தப் பக்கம்.. கீழ.. இல்ல கொஞ்சம் மேலே.. இந்தப் பக்கம் திருப்பு....” என்றெல்லாம் பக்கத்து இருக்கைக்காரர்கள் கையை ஒடிக்கும்படி ரியர் வ்யூ கண்ணாடியைத் திருப்பச் சொல்ல வேண்டாம். ட்ரைவர் பக்கக் கதவில் ஸ்விட்ச் கொடுத்து இடது வலது பக்க கண்ணாடிகளை விரலசைப்பில் திருப்பிக்கொள்ளலாம். பல சௌகரியங்கள்... கார்வாலே சைட்டில் போட்டிருப்பார்கள்.
புது சேப்பாயியில் சர்வ ஜாக்கிரதையாக ஒரு வாரம் கடந்திருக்கிறேன். அதற்குள் தக்கோலம், ஜம்புகேஸ்வரர் அருள்பாலிக்கும் வட திருவானைக்கா மற்றும் ஒன்பது அடி உசரமுள்ள, மூலிகைகளால் வடிக்கப்பட்ட ஔஷத லலிதாம்பிகை, பாலா திரிபுரசுந்தரி, வாராகி என்று மூன்று அற்புதத் திருக்கோயில்கள் சென்று கடவுள் தரிசனம் ஆயிற்று. தொடர்ந்து எழுதுகிறேன்......

0 comments:

ஆடிய பிற ஆட்டங்கள்

Related Posts with Thumbnails