Saturday, August 20, 2016

கபாலி


கபாலி திரைக்கு வந்தவுடனேயே போக வேண்டும் என்று பிள்ளைகள் ஒத்தைக்காலில் நின்றார்கள். “எல்லோரும் பார்த்துட்டாங்கப்பா..”. peer pressure. “நெருப்புடா...” டீஸரின் தாக்கம். ஆனால் நான் மசியவில்லை. இஷ்டமுமில்லை. ஆயிரம் ரூபாயோ...அல்லது முதல் காட்சியோ கஷ்டப்பட்டு ரிசர்வ் செய்து இதுபோன்ற கலைப்படங்களுக்கு அழைத்துப்போவது பெருங்குற்றம் என்று நெஞ்சு குறுகுறுத்ததால், ஊர் மக்கள் பார்த்து சாந்தியடைந்தபிறகு சாவகாசமாக நேற்று சென்றோம்.
“தையத்தக்கான்னு ஆட்டமில்லை... அரையும்குறையுமா யாருமே அவுத்துப்போடலை... கெக்கேபிக்கேன்னு சிரிச்சுண்டு ரெண்டு அர்த்தமா யாரும் பேசலை... பொட்டு பொட்டுன்னு ஒரே துப்பாக்கி சத்தம்... காதை அடைச்சுது.... பத்து நிமிஷத்துக்கு ஒரு தடவை தெரையில ரத்த விளார்... கிட்டக்க காமிக்கும் போது ரஜினிக்கு வயசாயிடுத்துன்னு நன்னா தெரியறது.... ஆனா சிரிப்பும் நடையும் இன்னமும் அப்படியே இருக்கு...”
நேற்று இரண்டாம் ஆட்டம் முடிந்து வீடு திரும்பும் போது என்னுடைய எழுபது வயது சித்தி சொன்னதுதான் மேற்கண்ட இரத்தினச்சுருக்கமான விமர்சனம். நம்ம பாணியிலே தொடருவோம்...
கையைச் சுட்டுக்கக்கூடாது என்ற தயாரிப்பாளரின் ஜாக்கிரதாம்சத்தால் ரஜினியே “இமயமலைக்கு போய்டலாமா?” என்று எண்ணுமளவிற்கு அளவுக்கதிகமாக விளம்பரப்படுத்தப்பட்ட மலேசிய கேங்ஸ்டர்களின் கதை. தமிழ் மக்களுக்காக அந்நிய தேசத்தில் போராடும் ஒரு கேங்கின் தலைவனது வாழ்க்கை சூறையாடப்படுகிறது. அவன் மீண்டெழுந்து வருவதுதான் க்ளைமாக்ஸ். மகிழ்ச்சி.
வழக்கமாக இந்திய வில்லன்களை பந்தாடும் ரஜினி இந்தப் படத்தில் வெள்ளைக்கார வில்லனை எதிர்கொள்கிறார். அந்த வில்லன் டோனி லீ, மகிழ்ச்சியை மதுரைத் தமிளாக்காமல், நாக்கை சுளுக்கிக்கொள்ளாமல், “ழ்”ழை “ழ்”ழாகவே உச்சரித்தது மகிழ்ழ்ழ்ழ்ழ்ழ்ழ்ச்சி. மலேசிய இரவுகளில் நகரின் பருந்துப் பார்வையும் விடுதிகளின் பார்களும் பார்வையை குளுகுளு மற்றும் கிலுகிலுப்பாக்குகின்றன. ரஜினி என்கிற நாயகனை மட்டும் பிரதானமாக வைத்துப் பின்னப்பட்ட கதை. ஆகையால், இசை, பின்னணி, வசனங்கள், சுற்றி வரும் துணை நடிகர்கள் என்று அனைத்துக்குமே அவர்தான் மையப்புள்ளி.இதனாலேயே திரையைத் தவிர்த்துப் பாடல்கள் வெற்றியடவில்லை. மகிழ்ச்சி.
தென்றல் வந்து தீண்டும் போது.. என்கிற இளையராஜ இசையமைத்த அவதாரம் படப்பாடல் ஒரு காட்சியில் பின்னணியில் வருகிறது. புயலுக்கு மத்தியில் தென்றலாய், இரைச்சலுக்கு நடுவில் இன்னிசையாய் மனசைச் சுண்டி இழுத்தது. ராஜா எங்கும் வாழ்கிறார். அதே மெட்டின் தழுவலில்தான் ரஜினி-ராதிகா ஆப்தே பாண்டிச்சேரி சந்திப்பில் வரும் பாடல் அமைந்திருக்கிறது. மகிழ்ச்சி.
சந்தோஷ் நாராயணனின் கிடாருக்கு நான் பரம ரசிகன். அட்டக்கத்தியில் பின்னணி முழுக்க ஆளை அசத்தும் ஸ்ட்ரம்மிங் வரும். இதில் இரண்டு மண்வெட்டி எடுத்து தார் ரோடில் கரண்டுவது போல ( கூடுதலாக கிடார், ட்ரம்ஸ்,) ரஜினி திரையில் தோன்றி சாகசம் செய்யும்போதெல்லாம் வருகிறது. ம்... கூடவே “நெருப்புடா...”. ட்ரைலரில் வரும் “மரு வச்சிக்கிட்டு.. .குமிஞ்சு.. சொல்லுங்க எஜமான்..” முதல் அரைமணியிலேயே வந்துவிடுகிறது. மகிழ்ச்சி.
ஆவேசமாக தொழிலாளர் நலம் பேசும் தமிழ்நேசன் கதாபாத்திரத்தில் நாசர். நடிப்பில் மிளிர்கிறார். ஒரு விடுதியில் ரஜினி உள்ளிட்ட கேங்க் மக்கள் அனைவருடனும் புரட்சி பொங்க பேசிக்கொண்டிருக்கும் போது தன்னுடைய செவ்வகக் கண்ணாடியை தூக்கி விட்டுக்கொள்ளும் மானரிஸத்தில் அசந்துபோனேன். குறிப்பிட்ட இடைவெளியில் துல்லியமாக ஒவ்வொருமுறையும் அதேபோல செய்கிறார். உடல்மொழி புரட்சி பேசுகிறது. அப்போது வரும் சந்தோஷின் கிடாரிஸ பீட்ஸ் பின்னணி காட்சிக்கு பெரும்பலம். பார்க்கும் நமக்கே நரம்பு புடைக்கிறது. மகிழ்ச்சி.
அட்டகத்தி தினேஷுக்கு ஆர்வக்கோளாறு பாத்திரம். ரஜினியைச் சுற்றிச் சுற்றி வருகிறார். அவரை பாட்டில்களால் அடித்துக் கொல்வது கொடூரமான காட்சி. பசங்களுடன் சேர்ந்து நானும் பயந்தேன். வன்முறையின் உச்சக்கட்டம். தன்ஷிகா அளவோடு செய்திருக்கிறார். ஒன்றிரண்டு ப்டங்களாவது “தெகிரியமான..விஜயசாந்தி” டைப் படங்கள் எடுத்து அவரை வீரம் குன்றச் செய்து அப்புறம் ரொமாண்டிக் படம் பண்ணுவார்கள் என்பது என் துணிபு.
சிங்கப்பூர் சட்டை என்று எண்பதுகளில் எங்கூரில் விற்பார்கள். குருவியாகப் பறந்துவிட்டு வருபவர்களும் அதே சட்டையணிந்து அவர்கள் சிங்கப்பூர் சென்றுவந்தவர்கள் என்று ஊர்ஜிதப்படுத்துவார்கள். அந்த ஜிலுஜிலு சட்டைகளை என் அப்பா எனக்கு போட்டு அழகுபார்த்தார். படத்தில் வரும் ஆண்கள் அனைவரும் ஃப்ளாஷ்பேக்குகளில் பெருங்காலரும் பெரிய பெரிய பூப்போட்ட ஜிகுஜிகு சட்டையுமாக வருகிறார்கள். விதம்விதமான இலைகளும் பூக்களுமாகச் சட்டைகளில் வண்ணக்களஞ்சியமாக பூந்தோட்டங்கள் இருக்கும். மகிழ்ச்சி.
”லோகா” என்ற மாத்திரை ஓட்டும் தாதா ஒருவனை பென்ஸ் ஏற்றிக் கொள்ளும் காட்சியில் இரஞ்சித்-இரஜினி கூட்டணி தூள் கிளப்புகிறது. கோட் போடுவதற்கு சொல்லும் “அரசியல்” காரணமும், “கனவில் வரும் துன்பங்கள் எல்லாம் எழுந்ததும் விலகிவிடுவது போல நிஜத்திலும் இருக்காதா?” என்ற அர்த்தத்தில் வரும் வசனமும் ஜம்மென்று இருக்கிறது. இதுபோன்ற சில சுறுக் நறுக் திருப்பங்கள் படத்தை சுவாரஸ்யமாக்குகின்றன. மகிழ்ச்சி.
My Father Balaiah* படித்துக்கொண்டு சிறைப்பறவையாய் இருந்த ரஜினி விடுதலையாகி வந்தவுடனே கையைக் காலை உதறிக்கொண்டு பொட்டு வைத்த மைக்கேல் ஜாக்ஸன் போல அரைகுறையாய் ஆடுகிறார்கள். ரஜினியின் திரையுலக வரலாற்றிலேயே இதுதான் சொத்தையான அறிமுகப்பாடல். ஒருவன் ஒருவன் முதலாளியை நினைத்துப்பார்க்கிறேன். “மகிழ்ச்சி”, கோபம், கருணை, வருத்தம், சந்தோஷம் என்று பலவிதமான ரசங்களுடன் அவ்வப்போது ரஜினியால் சொல்லப்படுகிறது. இரசிக்கும்படி இருக்கிறது. மகிழ்ச்சியோ மகிழ்ச்சி.
இராதிகா ஆப்தேவின் நடிப்பு அபாரம். அலங்காரம் கூட மிகையாக இல்லை. கண்கள் பேசுகிறது. கண்டிப்பு காட்டுகிறது. பாசம் ஒழுகுகிறது. காதலில் மினுக்குகிறது. குறைந்த காட்சிகளே தோன்றினாலும் நிறைவாகச் செய்திருக்கிறார். மகிழ்ச்சி.
இறந்துவிட்டதாக அனைவராலும் நம்பப்பட்ட, ஆனால் ஜீவிக்கும் தன் மனைவியைக் காண பாண்டிச்சேரி வருகிறார். அருகில் தொழின்முறைக் கொலையாளிப் பெண் “யோகி”யுடன் (கர்மயோகி போல கொலையோகி?). எத்தனையோ தசாப்தங்கள் கடந்து சந்திக்கும் அந்த கணத்தில் இராதிகா ஆப்தேவின் நடிப்பில் நமது கண்கள் குளமாகின்றன. இதை விடுத்து இந்தக் காட்சிக்கு சற்று முன்னர் “அம்மா உயிரோட இருக்காங்க...” என்று தன் பெண் சொல்ல... பச்சை பசும்புல் தரையில் போய் மண்டி போட்டு.... திரைக்கு முதுகைக் காண்பித்து அமர்ந்து... ரஜினி இருமலில் குலுங்குவதை.. அருமையான நடிப்பு என்று சொல்பவர்களை... எனது குருநாதர் பாணியில் திட்டுவதென்றால்... அவர்களை பசித்த புலி தின்னட்டும்.
”அப்போ ரஜினி நடிக்கவேயில்லையா?” என்று நாக்கை மடித்து என்னை அடிக்க வராதீர்கள். படம் முழுக்க கண்களால் நடித்திருக்கிறார். பெண்ணிடம் பாசம் பொழியும் தகப்பனாக வரும் காட்சிகள் அருமை. ராதிகா ஆப்தேவுடன் வரும்போது நம்மையறியாமல் கண்கள் ரஜினியை விட்டு ஆப்தேவுடன் சென்றுவிடுகிறது. ரௌத்திரம் பொங்க பழிவாங்க கிளம்பும் இடங்ளில் உடல் பேசுகிறது. மகிழ்ச்சி.
கேங்ஸ்டர் படங்களில் இரண்டு குறியீடுகள் உண்டு. ஒன்று தொடை தெரிய ஆடையுடுத்திக்கொண்டு கைகளில் மதுக்கோப்பையுடன் கவர்ச்சியான அழகியொருத்தி வில்லன் தோளோடு ஒட்டிக்கொண்டே வருவாள். அந்தக் காலத்தில் சிலுக்கு அனுராதா போன்ற முதிர்கன்னிகள். சிலுக்கென்றால் பாதிக்கண் சொருக வருவார். அனுராதா என்றால் தங்கக்காசு போட்ட டிராயரோடு வருவார். விமர்சனம் திசை மாறுவதால் அடுத்த அடியாள்படக் குறியீட்டுக்குப் போகலாம். மகிழ்ச்சி.
இன்னொரு குறியீடு குளிர்க்கண்ணாடி. இதில் முதல் ஐட்டம் இப்படத்தில் இல்லை. இரண்டாவது எல்லோரும் கண்ணாடிப் போட்டுக்கொள்கிறார்கள். ஒரு காட்சியில் திரையில் அனைவருமே கூலிங்கிளாஸ் போட்டுக்கொண்டதைப் பார்த்தவுடனே குலுங்கிச் சிரித்துவிட்டேன். சம்பந்தமில்லாமல் சிரிக்கிறேன் என்று என் மனைவி புஜத்தில் இடித்து “இப்ப என்ன சிரிச்சாறது?” என்று ரகசியக் கண்டிப்பு மொழியில் காதோடு கேட்டார்கள். “இல்ல... திடீர்னு அம்புட்டு பேரும் கருப்புக் கண்ணாடில நின்னவுடனே.. சங்கர நேத்ராலயா ரிசப்ஷன்ல டாக்டர்ட செக்கப்புக்கு வந்தா மாதிரி தோணிச்சு...” என்று அடக்கிவாசித்தேன். மகிழ்ச்சி.
மலேசியா வீதிகளில் தீபாவளி கேப்பு வெடிப்பது போல சகஜமாக சுட்டுக்கொள்ளும் நிழலுக தாதாக்களை பொலீஸார் பிடிக்க வராதது ஆச்சரியம் என்று எனக்கே உரித்தான ஸ்டைலில் சொன்னேன். ”ரஜினி படத்தில் இதெல்லாம் பார்க்கக்கூடாது” என்று சட்டையைச் சொரிந்தார்கள் சங்கீதா மேடம்.  ”வில்லன் ஜேம்ஸ்பாண்ட் மாதிரி இருக்கான்ல..” என்று சகட்டுமேனிக்கு ஒரு பீட்டர் விட்டேன். “ச்சே..ச்சே...பாண்டுக்கு கண்ல குறும்புத்தனம் இருக்கும்.. இவனுக்கு ரௌடியிஸம் இருக்கு..” என்று அதையும் புறந்தள்ளி பல்ப் வாங்கவைத்தார்கள். மகிழ்ச்சி.
லிங்காவில் அடிபட்டதால் கபாலியைச் சரமாரியாகச் சந்தைப்படுத்தியிருக்கிறார்கள். ஏனைய நடிகர்கள் இதுபோன்ற கேங்க்ஸ்டர் படங்களில் நடித்தாலும் ரஜினிக்கு இதுபோன்ற படங்கள் எப்போதும் தோல்வியைத் தந்ததில்லை. இப்போதும் அவருக்கு வெற்றிதான். மகிழ்ச்சி.
(என்னது? இரஞ்சித்தைப் பற்றி விஸ்தாரமாச் சொல்லலையா? மெட்ராஸ்லயும் அட்டக்கத்தியிலயும் அவர்தான் டைரக்டர் எனக்குத் தெரியும். என்னது? இதுலயுமா?. மகிழ்ச்சி)
**
*நிலச்சுவான்தாரர்களுக்கும் கூலிவேலை செய்பவர்களுக்கும் இடையில் நடக்கும் போராட்டத்தைப் பின்னணியாக வைத்து எழுதப்பட்ட கதை. இதை எழுதிய தெலுங்கானா ப்ரொஃபஸர் சத்தியநாராயணா, தனது தந்தை மற்றும் தாத்தாவின் கஷ்டங்களை விவரித்து நாவலாக்கினார் என்பது கூடுதல் தகவல்.
பின் குறிப்பு: பொதுவாகவே சமூக வலைத்தளங்களில் ஒரு குழு மனப்பான்மை உண்டு. ஒரு போராளி “ச்சே.. படமா இது..... இழு..இழுன்னு இழுக்கறானுவ...” என்றால்...அடுத்த சில நிமிடங்களில் பல போராளிகள் ஃபேஸ்புக்கெங்கும் பிறப்பார்கள்.. “ஆமா..ஜவ்வா இழுக்கறானுங்க...” என்று கோரஸாக காயர் பாட ஆரம்பித்து கலாய்ப்பார்கள். இது சினிமா விமர்சனத்துக்கு மட்டுமல்ல என்று எல்லாமறிந்த ஃபேஸ்புக் ஞானிகள் பலர் அறிவார்கள்.
--சுபம்--

0 comments:

ஆடிய பிற ஆட்டங்கள்

Related Posts with Thumbnails