Friday, August 19, 2016

பஸ்ஸுக்கு காசு

"சார்... என் பேரு நாகராஜன்" தாழ்மையுடன் 'என் மேல் இரக்கம் காட்டுங்களேன்.. ப்ளீஸ் ' என்று குழைந்த தொணியில் ஒரு குரல் தோள் பக்கத்தில் கேட்டது. பஸ்ஸுக்காக நின்று கொண்டிருந்தேன். பின் காலை வெயில். பள்ளிக்கூட நேரமெல்லாம் முடிந்து ரிட்டயர்ட் ஆனவர்களும் மதிய சாப்பாடு இனிமேல் தான் சமைக்க வேண்டும் என்று முடிவெடுத்த நைட்டி அம்மணிகளும் மட்டும் தெருவில் சுதந்திரமாக நடமாடிக்கொண்டிருந்தார்கள்.
"ம்... சொல்லுங்க...". லேசான கண்டிப்புடன் கேட்டேன். பரிவுடன் கேட்டால் பர்ஸ் பறிபோய்விடுமோ என்கிற ஜாக்கிரதை உணர்வு.
"உங்க கிட்ட ஒரு உதவி கேட்கலாமா?"
கையில் ஏதோ துணிக்கடையில் கொடுத்த ஜிப் வைத்த ட்ராவலர் பேக். நெற்றியில் குங்குமத் தீற்றல். வாமன ரூபம். வேஷ்டி. நீலக் கலர் சட்டை. காலர் இறங்கும் இடத்தில் புழுதி படிந்திருந்தது. தூக்கிக் கையில் பிடித்த வேஷ்டி நுனியிலும் ஏதோ அழுக்கு. இவ்வளவற்றையும் ஓரிரு வினாடிகளில் கண் படம் பிடித்து மூளைக்கு அனுப்பி தரம் பிரித்து சேகரம் செய்துகொண்டது.
"என்ன?"
"எனக்கு ஊரு சுசீந்திரம்"
"சரி..."
" நானு ஆசாரி"
"ம்.." கொட்டினேன். ஆசாரி என்று சொல்லும் போது குரலில் வருத்தம் கலந்த பிசிறடித்தது.
"இங்க மகாலிங்கம் ஆசாரியைப் பார்க்க வந்தேனுங்க..."
பஸ் இன்னும் வரவில்லை. இந்தக் கதை கேட்கும் அளவிற்கு நேரமிருக்கிறதா என்று வாட்சைப் பார்த்துக்கொண்டேன். மன்னார்குடி பஸ் ஸ்டாண்டில் தஞ்சாவூர் பஸ்ஸில் அமர்ந்திருக்கும் போது மடியில் ஒரு துண்டுச் சீட்டைப் போட்டுக்கொண்டே அழுக்குச் சட்டையுடன் செல்லும் ஆள் நினைவுக்கு வந்தார். மடியில் விழுந்த சீட்டுகளை திரும்ப எடுக்கும் போது சில்லறைக் கையை முகத்து நேரே ஆட்டுவார்கள். அசந்தால் அரை ரூபாய் காயின் மூக்கைப் பேத்துவிடும். சென்னையிலிருந்து மன்னைக்குப் பாய்ந்த நினைவுகளில் மூழ்கியிருக்கும்போது....
"கோவிச்சுக்காதீங்க... உங்களுக்கு விருப்பம் இல்லைன்னா கிளம்பறேன்..."
"பரவாயில்லை... சொல்லுங்க...". ஏதோ பாவமாக இருந்தது. இழுத்து நிறுத்தி கதை கேட்க ஆரம்பித்தேன்.
"அவரு ஊர்ல இல்லீங்க..."
"அதுக்கென்னங்க? என்ன வேணுமோ சட்டுபுட்டுன்னு கேளுங்க... எனக்கு பஸ் வந்துரும்....." ரொம்பவும் இடம் கொடுக்கிறோம் என்பதை மறைக்க இப்படியொரு துரிதப்படுத்துதல் தேவைப்பட்டது.
அவருக்குள் ஏதோ சங்கடம். நெளிந்தார். சொல்ல வாயைத் திறக்கிறார் மீண்டும் மௌனமாக என்னைப் பார்க்கிறார். உண்மை விழிகள் என்று இன்னும் ஸ்திரமாக முடிவெடுக்க முடியவில்லை. மீண்டும் "நானு..." என்று இழுத்துவிட்டு குனிந்து தரையைப் பார்க்கிறார். பொதுவாக இதுபோல உதவி என்று ஆரம்பிப்பவர்கள் பணம்தான் கேட்பார்கள். தெரிந்த சங்கதிதானே.
"நானு திருவொற்றியூருக்கு வந்தேனுங்க... "
"ஏங்க திருவொற்றியூர் வடசென்னை.. இது தென்சென்னை.. இங்க மகாலிங்க ஆசாரியைப் பார்க்க வந்தேன்னு சொன்னீங்க... இப்ப திருவொற்றியூர்னு சொல்றீங்க... மாத்தி மாத்தி சொல்றீங்களே"
சடசடவென்று பொரிந்து தள்ளிவிட்டேன். பின்னர் பாவம் பொத்துக்கொண்டு வந்தது. சமாதானமாகி...
“ம்.. மேலே சொல்லுங்க...”
“தாம்பரத்துக்கிட்டே வண்டி மாறணும்னு ஏறினேங்க.. எனக்கு ப்ரஸ்ஸரு இருக்குங்க...”
“என்னது?” என்று நெற்றியைச் சுருக்கினேன். புரியவில்லை.
புஜத்தை அமுக்கிவிட்டுக்கொண்டார். கையில் சிவப்பும் கறுப்புமாக இரண்டு முடிகயிறு சுற்றியிருந்தார். மணிக்கட்டருகில் சுவற்றில் நச்சிய சின்ன பூரான் மாதிரி ஒரு தழும்பு.
“ப்ரஸரு... “
“ஓ! ப்ரஷர்.. ப்ளட் ப்ரஷர்?”
“ஆமாங்க... அதனால கீள விளுந்து எந்திரிச்சதுல... பாக்கெட்டுல இருந்ததெல்லாம் காணாப் போச்சு...” உதடு பிதுக்கினார்.
“நீங்க ஏன் திருவொற்றியூர் போகணும்?” பிரதான கேள்விக்கு வந்தேன். துப்பறிதலில் முக்கிய திருப்பத்திற்கு வந்துவிட்டதாக ஒரு உள்ளுணர்வு திருப்தியடைந்தது.
”திருவொற்றியூர் கோயில் தேரை செப்பனிடணும்னு...”
“முழு தேரை நீங்க ஒரு ஆளா....”. கோபமாகக் கேட்டேன். என் நெத்தியில கேணையன்னு ஒட்டியிருக்கா? என்று மனசுக்குள் இன்னொரு ஆர்வியெஸ் தர்க்கம் பேசினான்.
“இல்லீங்க... எல்லாம் செஞ்சுட்டோங்க... தேரு நிறுத்துற செட்டுல ஏதோ சின்ன ரிப்பேருன்னு சொன்னாங்க...”.
இந்த பதிலும் எனக்கு சமாதானமாக இல்லைதான்.
இதற்குள் ஒன்றிரண்டு தெரிந்த முகங்கள்... “என்ன சார்.. எதாவது பிரச்சனையா?” என்று நெருங்கி விசாரித்தார்கள். சிரித்துக்கொண்டே இல்லையென்றேன். சோதனையாக இன்று பேருந்து வர லேட்டானது. தெருநாய் ஒன்று தரையை முகர்ந்துவிட்டு நாகராஜ ஆசாரியின் காலையும் மோப்பம் பிடித்தது. அந்தப் பையில் என்ன இருக்கிறது என்று கேட்க ஆசை. இன்னும் அவருக்கு பண ஒத்தாசை செய்யப்போகிறேனா என்று தெரியாது... ஏன் அனாவசியமாக இதில் இறங்கவேண்டும் என்று மனசு சந்தேகத் தூளி ஆடியது.
“சாருக்கு எம்மேல நம்பிக்கையில்லை...” என்று பெருமூச்சோடு கேட்டார்.
இல்லையென்று சொல்ல மனசு வரவில்லை. என் முகத்திலும் அவர் முகத்திலும் என் சந்தேகம் ஒளிபரப்பாகிக்கொண்டிருந்தது. ஆமாம் உம்பேர்ல நம்பிக்கையில்லை என்று முகத்தில் அடித்தது போல சொல்வதற்கும் தைரியம் இல்லை. உனக்கு எளகின மனசுடா ஆர்வியெஸ்.
”இதைப் பார்த்தா நம்புவீங்களா?” என்று பையிலிருந்து இரண்டு அட்டைகளைக் காட்டினார். ஒன்று ஆதார் அட்டை. இரண்டாவது வாக்காளர் அட்டை. வாக்காளர் அட்டையில் முகத்தில் தாரொழுக நிழலாய் இருந்தார். ஆதார் அட்டை படமும் அவரது முகமும் எழுபத்தைந்து சதவிகிதம் ஒத்துப்போனது. சண்முகம் ஆசாரி என்று அவரது தந்தையின் பெயரும், பிறந்த தேதி அறுபத்து ஒன்பதாம் வருஷமும் காட்டியது.
இதற்கு மேல் அவரை குறுக்கு விசாரணை செய்ய வேண்டாம் என்று பர்ஸை திறந்து ஐம்பது ரூபாய் கொடுத்தேன். “இந்த காசுல நீங்க திருவொற்றியூர் போயிடலாம்.... ”. கையில் வாங்கிய பிறகு நன்றி சொன்னாரா என்று நினைவில்லை.
மெதுவாக நடக்க ஆரம்பித்தார். மெடிக்கல்ஸ் தாண்டினார். காய்கறிக் கடை கடந்தார். திரும்பிப் பார்ப்பாரா? என்று அவருடைய முதுகை கண் ஈட்டியால் குத்திக்கொண்டிருந்தேன். தோளில் அந்த ட்ராவலர் பை ஆட ஆட நேரே சென்றுகொண்டே இருந்தார். இஸ்திரி கடைக்கு அப்பாலும் சென்றுவிட்டார். “யாராவது நம்பளை ஏமாத்தினா அது போன ஜென்மத்துக் கடன்னு நினைச்சுக்கணும்... அவாள்ட்ட கடன் வாங்கிட்டு அடைக்கலைன்னு அர்த்தம்” என்று சிறுவயதில் நான் ஏமாந்தபோது பாட்டி பேசிய வியாக்யானம் நினைவுக்கு வந்தது. “பாம்...” என்று காதைக் குடையும் ஹார்ன் சப்தம் கேட்டவுடன் பஸ் வந்துவிட்டது என்று சுதாரித்துக்கொண்டு எதிர்ப்பக்கம் ஓடிப்போய் ஏறினேன்.
பஸ்ஸுக்குள் ஏறியவுடன் ஆசாரியை விட்ட இடத்தில் போய் தேடியது என் விழிகள். காணவில்லை. “இது நேர் ரோடுதானே? எங்கே போயிருப்பார்?” என்பதன் மர்மம் விளங்கவில்லை.பஸ் பிள்ளையார் கோயில் தாண்டும் போது, பெரியதொரு மேஜையில் அந்த ட்ராவலர் பை கண்ணில் தட்டுப்பட்டது. குலுங்கிச் செல்லும் பஸ்ஸின் ஜன்னல் வழியாக குனிந்து பார்த்துக்கொண்டே சென்றேன்.
நாகராஜ ஆசாரி இட்லியுடன் சட்டினியையும் சாம்பாரையும் குழைத்து வாயில் திணித்துக்கொண்டிருந்தார். கண்களில் நிலைகொண்டிருந்த பசி மறையும் மாலைச் சூரியன் போல இறங்கியது கணநேரத்தில் தெரிந்தது. ஐம்பது ரூபாய்க்கும் இட்டிலி சாப்பிட்டுவிட்டு ”திருவொற்றியூர் போவணும்.. நா சுசீந்திரத்துலேர்ந்து வரேன்..”ன்னு மறுபடியும் கையை நீட்டினால் காசு போடுவதற்கு நாம் அங்கில்லையே என்று இதயக்கேணியில் எண்ணம் ஊறி அடிநாக்குவரை இனித்தது.

1 comments:

வெங்கட் நாகராஜ் said...

இப்படியும் சிலர்!....

ஆடிய பிற ஆட்டங்கள்

Related Posts with Thumbnails