Friday, August 19, 2016

திருப்பனங்காடு‬

”இன்னமும் அர்த்தராத்திரி வேளேல கோட்டை முனீஸ்வரர் வந்து இந்த ஸ்வாமிக்கு பூஜை பண்றார்ங்கிறது ஐதீகம்”
“ஐதீகமா.. இல்ல நடக்கறதா?”
“ஊர்ல சிலபேர் பார்த்துருக்கா... மூனீஸ்வரர் சித்த புருஷராச்சே... ரிஷிகள் சித்தர்களெல்லாம் ராத்திரிதான் சிவபூஜைக்கு வருவா.. அவர் பூஜை பண்ணின லிங்கத்தைதான் அகஸ்தியர் எடுத்து பூஜை பண்ணினார். அவர்தான் தாலபுரீஸ்வரர்.”
“மூனீஸ்வரரை ஊர்க்காரவங்கப் பார்த்திருக்காங்களா?”
“ஆமாம்.. பல தடவை கோயிலுக்குள்ள போன கால்தடமே இருக்குமே... ஒரு தடவை புடவை கட்டிண்டு ஊர்க்குள்ள போய்ட்டு... அப்புறமா இதோ.. எதிர்த்தார்ப்பல இருக்கிற பனைமரத்துலேர்ந்து பனம் பழம் பறிச்சு பூஜை பண்ணிட்டுப் போயிருக்கார்... மூனீஸ்வரரெல்லாம் சிரஞ்சீவி.. எல்லாக் காலத்திலேயேயும் இருப்பா...”
கழுத்தில் சிகப்புக் கல்லால் கோர்த்த மாலையும், சிரிக்கும் முகமாக அற்புதமாக கதை சொன்னார் வன்பார்த்தான் பனங்க்காட்டூர் என்றழைக்கப்பட்ட திருப்பனங்காடு க்ஷேத்திர தேவராஜ சர்மா குருக்கள்.
“முனீஸ்வரரைத் தர்சனம் பண்ணிட்டுதான் இங்க இருக்கிற சிவ மூர்த்தங்களை வழிபடணும்ங்கிறது இங்கே ஒரு சம்பிரதாயம்.. பனம் பழம் நேவேத்யம் பண்ணிட்டு சாப்பிட்டா குழந்தை பாக்கியம் கிடைக்கும்ங்கிறதும் காலம் காலமா இருக்கிற நிதர்சனம்... ”
**
வாலாஜாவிலிருந்து காஞ்சியின் சுற்றுப்புற தடதடக்கும் ரோடுகள் வழியாக ஐயங்கார் குளம் தாண்டுங்கள். அவ்வூர் எல்லையில் சாலை ஓர மரங்களின் ஊடே நூறு மீட்டர் தூரத்தில் ஒரு புராதன காலக் கற்றளி கோயில் தெரிகிறது. வண்டியை நிறுத்திவிட்டு உள்ளே நுழைய மனசுக்குத் தூண்டில் போடுகிறது. சிவதரிசனத்துக்காக திருப்பனங்காடு ஓடுகிறோம்.
மாலை ஐந்து மணிக்கு அடங்கும் வெய்யிலே தாங்கமுடியவில்லை. கண்ணுக்கெட்டிய தூரம் வரை நீளும் அந்த வெண்பாக்கம் ரோட்டில் வரும் ஒரே வலதுபுற சாலையில் வண்டியைத் திருப்புங்கள். அரை கிலோமீட்டருக்குள் ஸ்ரீசுந்தரர் தீர்த்தம் என்ற பெயர்ப்பலகை காட்டுமிடத்தில் ஒத்தையடிப் பாதை ஒன்று தெரிகிறது. அதென்ன சுந்தரர் தீர்த்தம் என்று புருவம் சுருக்குவோர் இன்னும் கொஞ்ச நேரம் இந்த வ்யாசத்தைப் படிக்க வேண்டும். புராணம் இருக்கிறது.
கோயிலுக்கு ராஜகோபுரமில்லை. ஊர்க்கோடியில் இருந்த சௌகரியத்தால் வயலிலிருந்து அறுத்த கதிர்களை அடித்து நெற்மணிகளைக் குவித்திருந்தார்கள். விஸ்வரூபமாய் எழுந்து முனீஸ்வரரைப் போன்று நின்றிருந்த அரச விருட்சமும் அதன் கீழ் இருந்த கோட்டை முனீஸ்வரர் கோயிலும் ஆயிரமாயிரம் கதை சொல்லின. கோவிலுக்கு ஐம்பது பாகை இடதுகைப் பக்க சாய்மானத்தில் பெரிய குளம் இருக்கிறது. அல்லி மண்டியிருக்கிறது. தண்ணீர்ப் பார்க்காத எந்த சென்னைக்காரனும் எட்டிப் பார்க்குமிடம்.
**
“வர்ற வழியில சுந்தரர் தீர்த்தம்னு போட்டிருந்ததே.. அது... ”
“மாசி மாசம் வர்ற பிரம்மோற்சவமப்ப அந்த தீர்த்தக்கரையில பெரிய திருவிழா நடக்கும்... “
“என்ன கதை?”
“காஞ்சீபுரம் ஏகாம்பரேஸ்வரரைத் தர்சனம் பண்ணிட்டு சுந்தரர் பனங்காட்டூருக்கு வரார்... அனல்வீசும் கோடைக்காலம். அப்போ அவருக்கு பயங்கர பசி வேற ஏறிப் போச்சு.. வெய்யில் பிச்சுப்புடுங்கறது.... கண்ணை இருட்டிண்டு கிர்ர்ருன்னு தலை சுத்தி மயக்கமா வருது... அப்போ வயோதிகர் ஒருத்தர் வயல் ஓர வரப்புல தேமேன்னு உட்கார்ந்திருக்கார். இவரைப் பார்த்ததும்... இந்தான்னு... ஒரு பட்டை தயிர்சாதம் நீட்றார்.. வயித்துக்கு சாப்பாடு கிடைச்சாலும்... இவ்ளோ வெய்யில் அடிக்கிறது.. சாதம் மட்டும் போதுமா.. தண்ணீ கிடையாதா?ன்னு... நீரில்லா இடந்தன்னில் நீர் அமுதளித்தல் நீதியோ...ன்னு சுந்தரர் அதிகாரமாக் கேட்ருக்கார்... அதுக்கு அந்த பெரியவர் நீர் வந்த இடந்தன்னில் நீர் இன்றிப் போகுமோ...ன்னு பொடி வச்சுப் பேசிட்டு... காலால தரையைக் கீறி விடறார்.. ஒரு ஊத்து கிளம்பி தண்ணி குபுகுபுன்னு வருது.. சுந்தரருக்கு ஆச்சரியம்.. அப்போ.. சுந்தரா ... நான் வன்பார்த்தான் பனங்காட்டூரை உடையவன்...ன்னு சொல்றார்... எங்கேயோ திரும்பிப் பார்த்துட்டு சுந்தரர் அந்தப் பக்கம் பார்க்கிறார்...கொஞ்ச தூரத்தில துரிதகதியில் போயிண்டிருக்கார் அந்தப் பெரியவர்... சுந்தரர் மேல்மூச்சு கீழ்மூச்சு வாங்க ஓடிப்போறார்..... “
கோயில் சன்னிதி வாசலில் நின்று தலபுராணம் கேட்பது ஒரு சுகானுபவம். அவர்கள் சொல்லும் சம்பவங்களில் நாமும் ஒன்றிப்போய் சுந்தரரையோ.. சம்பந்தரையோ... பக்கத்தில் நின்று பார்த்ததுபோல ஒரு திருப்தி.
"ரெண்டு அம்பாள்.. ரெண்டு ஸ்வாமி... எல்லாமே ப்ளஸ் டூவாயிருக்கே...."
"ஹா..ஹா.. அகஸ்தியர் பூஜை பண்ணின தாலபுரீஸ்வரர்... அப்புறமா அவரோட சிஷ்யர் புலஸ்தியர் ஒரு லிங்க பிரதிஷ்டை பண்ணி கிருபானாதீஸ்வரர்னு வழிபட்டார். அதனால ரெண்டு.. ரெண்டு இப்படியிருக்கலாமான்னு சில பேர் கேட்டப்ப... இதுக்கு திருஷ்டாந்தமா ராமேஸ்வரத்தைச் சொல்வா...சீதா மணலால பிடிச்சு வச்சு ராமர் பூஜை பண்ணின ராமலிங்கமும் ராமரோட பிரதான சிஷ்யர் பொஷிசன்ல இருந்த ஆஞ்சநேயர் கைலாஸத்துலேர்ந்து தூக்கிண்டு வந்து பூஜை பண்ணின விஸ்வலிங்கமும் இருக்கும்... அது மாதிரிதான்..."
"மனுஷா சிலையெல்லாம் இருக்கே... அந்த செட்டியார்தான் இந்தக் கோயிலை எடுத்துக் கட்டினாரா?"
"ஆமாம்.. அவர் பேர் ஏகப்ப செட்டியார். அவரோட கேஸ் ஒண்ணு கோர்ட்ல இருந்தது. அது ஜெயிச்சா அந்த முப்பதாயிரம் ரூபாய்லயும் இந்த பனங்காட்டூர் தலத்தோட திருப்பணிக்கு தர்றதா வேண்டினார். கேஸ் இவர் பக்கம் ஜெயிச்சு.. அந்த முப்பதாயிரத்துக்கு மேலேயே காசு போட்டு திருப்பணி நடத்தி... 1916ல கிராமத்தார்களிடமிருந்து சுதந்திர உரிமை வாங்கிண்டு 1928ல கும்பாபிஷேகம் பண்ணினார். அவா குடும்பத்தினர்தான் இன்னமும் அறங்காவலர்களா இருக்கா..."
**
கோயில் சுத்தமாக இருக்கிறது. நகரத்தார் திருப்பணிக் கோயில்களின் அழகே அதன் சுத்தமும் சுகாதாரமும்தான். திருவலம் வருகையில் ஸ்தல விருட்சமான பனை மரத்தின் எழில் கொஞ்சும் சிலா ரூபமிருக்கிறது. கோவிலுக்கு வெளியேயும் உள்ளேயும் ஆண்பனை பெண்பனை மரங்கள் ஜீவனோடு பனங்காட்டுக்குச் சாட்சியாக நிற்கிறது. இரண்டு தெக்ஷிணாமூர்த்திகளில் ஒருவர் மேதா தெக்ஷிணாமூர்த்தி. காலடியில் ரிஷபம் இருக்கிறது. வீகேயெஸ்ஸின் தகவல் இது. சுப்ரமண்யர், நடராஜர் சன்னிதிகள் கடந்து வந்து அம்பாள் சன்னிதிகளின் வாயிலில் நின்றால் தூண்களின் புடைப்புச் சிற்பங்கள் நம் கண்களைக் கவர்கின்றன. அதில் விசேஷமாகச் சொல்வதென்றால் இராமயண காதையின் "வாலி வதம்". அம்பாள் சன்னிதி வாயில் தூணில் வாலியும் சுக்ரீவனும் துவந்த யுத்தம் புரியும் சிற்பம். வெளியே வாசல் தாண்டி வில்-அம்பும் கையுமாக ஸ்ரீராமன் நிற்கிறான். மானசா ஓடிப்போய் ராமன் தூண் அருகே நின்று "ம்... வாலி சுக்ரீவன் சண்டை போடறது தெரியறது..." என்று பார்த்துவிட்டு உள்ளே நுழைந்து துவந்த யுத்தம் செதுக்கியிருக்கும் தூணருகே நின்று பார்த்தால் ராமனைக் காண முடியவில்லை. "இங்கேர்ந்து ராமர் தெர்லப்பா..." என்று விழிவிரிய ஆச்சரியப்பட்டாள்.
**
"எங்கண்ணாவுக்கு வர்ற மாசில சதாபிஷேகம். அவர்க்கு மூணு வயசாகும் போது கண்ல பூ பட்டு தெரியாமப் போய்டுத்து.... டாக்டர்லெல்லாம் ஒண்ணும் பண்ண முடியாதுன்னு கையை விரிச்சுட்டா.. எங்கப்பாம்மாவுக்கு வருத்தம். ஸ்வாமியை நினைச்சுண்டே ஆத்துக்கு வர்ற போது... ரெண்டு பண்டாரம் 'நல்லான் சிவபெருமான் நம்மை வருத்துவது கொல்லான் கூற்றுவனை வெல்வதற்கே'ன்னு பேசிண்டே போயிருக்கா...
எங்கப்பாவும் தாலபுரீஸ்வரரை அனுதினமும் வழிபட்டார். என்னோட மூத்த தமையனார்.. அதாவது பர்வதராஜன்னு கண்ணு தெரியாமப் போனவரோட அண்ணா.. அவர்.. தினமும் இந்த தலத்து மாரியம்மனுக்கு மலர்மாலைக் கட்டிப் போட்டு வழிபட்டார். என்னோட அப்பாவும் தினமும் ஒரு பாடலாகப் பாடி தாலவனேசப் பெருமானை வழிபட்டார். அப்போ சித்தர் போல வந்த ஒருவர் ஆமை ஓட்டைத் தேய்த்து எம் தமையனார் இமையில் தடவினார். ஒன்றிரண்டு நாள்ல கண்ணு திறக்க ஆரம்பிச்சு பார்வை முழுக்க வந்துடுத்து. அப்புறம் அவர் படிச்சு.. பாரீ கம்பெனி வேலை பார்த்து ரிட்டயர்ட் ஆயிருக்கார். அவருக்குதான் சதாபிஷேகம். கலியில நாங்க பிரத்யட்சமா பார்த்த தாலபுரீஸ்வரரின் அருள்.,..."
**
குருக்கள் கோயில் மகிமைகளை அடுக்கிக்கொண்டே போகிறார். நமக்கு ஆச்சரியமாக இருக்கிறது. திரும்பவும் வாலி வதம் பற்றிய பேச்சு வருகிறது. " நீங்க நல்லா கதை சொல்றேள்.." என்றேன். "சுத்துப்பட்டு கிராமத்து திருவிழாக்கள்ல ராமாயணம் மகாபாரதம் கதையெல்லாம் சொல்றேன்.. அப்பப்போ.." என்றார்.
"இந்த வாலியை குரங்கு வாலி , மனித வாலி, தெய்வ வாலி என்று தரம்பிரிச்சு . அ.சா. ஞானசம்பந்தம் சொல்லியிருப்பார். சுக்ரீவன் பொண்டாட்டியைக் கவர்ந்தப்போ குரங்கு வாலி, ராமன் மறைந்து பாணம் போட்டப்பா... ராமன்ட்டே நீ அம்புவிட்டத்து தப்புன்னு ஆர்க்யூ பண்ணினான்.. அப்போ மனுஷ வாலி... கடைசில தன்னோட தப்பை உணர்ந்து ராமன் கிட்டே... என் தம்பி சுக்ரீவன் எதாவது தப்பு பண்ணினான்னா... அவன் மேலே பாணம் போட்டுடாதேன்னு கேட்டப்ப தெய்வ வாலிம்பார்.." என்றேன். அதை ஆமோதித்து மேலும் பேச ஆரம்பித்தார்.
என்னோடு வந்த நண்பர்கள் தரிசனம் முடித்து அடுத்த கோயிலுக்கு கிளம்பத் தயாராயினர். "திருமுக்கூடல் நடை சார்த்திடப்போறா..." என்று அவசரப்படுத்தினார் அக்கௌன்ட்ஸ் வெங்கட் ராமன் சார். இன்னும் குருக்கள் கூட பேசினால் நிறையா விஷயதானம் பெறலாம். திருவாளர் காலத்தை கடிந்து கொண்டு புறப்பட்டோம்.
வரும் வழியில் பனங்காட்டூர் பச்சை வயல் வரப்போரம் குழு புகைப்படம் எடுத்துக்கொண்டோம். மூன்று கார்களும் திருமுக்கூடல் திசையில் சீறின. பாதி வழியிலேயே கோயில் நடை சார்த்திய விவரமறிந்தோம்.
"வாலாஜாபாத்-சுங்குவார்ச்சத்திரம் ரோட்டுல ஒரு ரெண்டு கி.மீட்டர்ல கட்டவாக்கம்னு ஒரு இடம். அங்கே விஸ்வரூப நரசிம்மர்... அவரை தர்சனம் பண்ணிட்டுப் போய்டுவோம்...” என்று மௌனம் கலைந்தார் அக்கௌண்ட்ஸ் வெங்கட்ராமன் சார்.
விண்ணுக்கும் மண்ணுக்குமாய் பதினாறு அடி நரசிம்மர். மடியில் லக்ஷ்மி பத்ம கமலத்தோடு. நரசிம்மரின் கால் நகமும் கை நகமும் நகாசு வேலைப்பாடானது. அற்புதமான மூர்த்தம்.
“சிங்கம் போல பிடரி மயிறு... தெத்திப் பல்லு... நீள நீளமா நகமாம்... ஆஜானுபாகுவான சரீரமாம்... பக்தனான ப்ரஹ்லாதன்.. எந்த தூணைக் காமிச்சானோ.. அதே தூணைப் பிளந்துண்டு... ஆஹாஹா... என்னோட பக்தனையாடா படுத்தினே.. இதோ வந்துண்டேண்டா...ன்னு கர்ஜிஜ்ச்சிண்டே இரண்யகசிபுவைப் புடிச்சு...” என்று சேங்காலிபுரம் பிரம்மஸ்ரீ அனந்தராம தீக்ஷிதரின் பாகவத உபன்யாசம் மனதில் வந்து போனது.
புளியோதரைப் பிரசாதம் பசியில் முணுமுணுத்த வயிற்றைத் தட்டிச் சாந்தப்படுத்தியது. ஸ்நேகிதர்கள் அனைவரும் கொஞ்ச நேரம் மனம் விட்டுப் பேசிக்கொண்டிருந்தோம். வானத்தில் தோன்றும் நட்சத்திர மண்டலங்களை தனது மொபைல் அப்ளிகேஷன் மூலமாக தொடர்பு கொண்டு “இதோ பாருங்க. இதுதான் ஜூபிடர்... குரு பகவான்...” என்று கன்னத்தில் போட்டுக்கொள்ளச் செய்தார் வீகேயெஸ்.
குருவையும் ஹரனையும் ஹரியையும் தரிசித்த திருப்தியில் மனம் குதூகலித்துக்கொண்டிருந்தது. சேப்பாயி நான் வழி சொல்லாமலே வீடு கண்டடைந்து என்னை இறக்கிவிட்டது. இந்த ஸ்நேகிதர் குழாமுக்கு என்ன புண்ணியம் செய்திருக்கிறேன் என்று மகிழும் போது வன்பார்த்தான் பனங்காட்டூர் பதிகத்தில் சுந்தரர் பாடியவையாக கோயில் வாசலில் நீலத்தி
ல் வெள்ளையாய் எழுதியிருந்தது நினைவில் எட்டிப் பார்த்தது. ஆரூரன் அருட்பணி அறக்கட்டளை என்கிற காவேரி டெல்டா திருவாரூர்ப் பெயர் பாலாற்று திருப்பனங்காட்டு அறக்கட்டளைக்கு எப்படி வாய்த்தது என்பதற்கும் பதில் கிடைத்தது. சுந்தரரின் அந்தப் பதிகம்.
பாரூரும் பனங்காட்டூர்ப் 
பவளத்தின் படியானைச் 
சீரூருந் திருவாரூர்ச் 
சிவன்பேர்சென் னியில்வைத்த 
*ஆரூரன் அடித்தொண்டன் *
அடியன்சொல் அடிநாய்சொல் 
ஊரூரன் உரைசெய்வார் 
உயர்வானத் துயர்வாரே

படம்: தாடியுடன் சிரிப்பவர் திருப்பனங்காடு சிவாச்சாரியார் தேவராஜசர்மா. மொபைல்: 9843568742
மேலும் படங்களுக்கு திருவாளர் வீகேயெஸ் மற்றும் எழுத்தாளர் வித்யா சுப்ரமண்யம் அவர்களது நேரக்கோட்டில் பார்க்கவும்.

0 comments:

ஆடிய பிற ஆட்டங்கள்

Related Posts with Thumbnails