Saturday, August 20, 2016

ஆசைக் கயிற்றில் ஆடும் பம்பரம்

நான்கு நாட்கள் அப்பா ஆஸ்பத்திரியில் இருந்தார். அட்வான்ஸ் கட்டி அட்டண்டர் நாற்காலியில் அலர்ட்டாக அமர்ந்திருந்தோம். “ராமமூர்த்தி அட்டெண்ட்டர்...” என்று சந்தனக் கீற்று நர்ஸ் சேச்சி குரல் கொடுக்கும் போது பெடிக்ரீக்கு பாயும் டாமி போல ஓடவேண்டும். பக்கத்து இருக்கைகளில் உட்கார்ந்து வேயுறு தோளி பங்கன்.. படிப்பவர்களும் சஷ்டி கவசம் தியானம் செய்பவர்களும் சடுதியில் நெருக்கமாகிவிடுகிறார்கள்.
“எப்படி இருக்கு? பரவாயில்லையா? ஒண்ணும் ஆகாது.. இன்னும் ரெண்டு நாள்ல டிஸ்சார்ஜ்ஜுன்னு டாக்டர் சொல்லிடுவார் பாருங்க.. பயப்படாதீங்கோ.. அவன் மேலே பாரத்தைப் போடுங்கோ.. அவன் பார்த்துப்பான்.... ” என்று பரஸ்பர ஆறுதல்களும் க்ஷேம விஜாரிப்புகளும் அன்பு பொழியும் உலகத்திற்கு நம்மைக் கூட்டிச் செல்கின்றன. ”என் வீட்டு வாசல்ல ஏன் வண்டி நிறுத்தறே.. எடுய்யா..” என்று பாய்பவர்கள் கூட “அப்பாவுக்கு எப்படி இருக்கு?” என்று ஆதூரத்துடன் கை பிடிப்பார்கள்.
சோகங்களும், இடர்களும் மனிதர்களை ஒன்று சேர்க்கின்றன. “நான் போய் வாங்கிட்டு வரேன்.. நீங்க அப்பாவைப் பாருங்க...” என்று மருந்துச்சீட்டை வாங்கிக்கொண்டு ஃபார்மஸிக்கு ஓடுகிறார்கள். “இட்லிதான்.. பசிக்கும்.. ஒண்ணே ஒண்ணு...” என்று சிரித்துக்கொண்டே நீட்டுகிறார்கள். கையில் வைத்திருக்கும் மாலை மலரின் உள் ஷீட்டை கையில் கொடுத்து “படிங்க...” என்று நட்பாகச் சிரிக்கிறார்கள். உள்ளே படுக்கையில் இருக்கும் ஆசாமியின் நலம்தான் பிரதானம் என்று வீற்றிருக்கும் போது அந்தக் கவலையில் நொந்துபோகக்கூடாது என்கிற கவனமும் அக்கறையும் அபாரம்.
வெள்ளத்தில் சென்னை மிதந்தால் உடனே படை திரட்டிக்கொண்டு உதவி புரிய ஓடுகிறோம். சிசியூவுக்கு வெளியே காத்திருக்கும்போது கைகுலுக்கி நட்பாகி சோகத்தைப் பங்குப்போட்டு நிம்மதி அடைகிறோம். வாய்வார்த்தையான ஆறுதலில் ஆனந்தமடைகிறோம். மகிழ்ச்சியில் மமதையடையும் மனித இனம் சோகத்தில் சொந்தபந்தங்களைத் தேடுகிறது. சோகத்திலும் வருத்தத்திலும் கைகோர்க்க ஆளில்லாத மனிதனே செல்வமில்லாத சொத்தையாகிறான் என்பது புரிகிறது.
ஆசைக் கயிற்றில் ஆடும் பம்பரம்
சதுர்முக பாணன் தைக்கும் சட்டை
காமக் கனலில் கருகுஞ் சருகு
காற்றில் பறக்கும் கானப் பட்டம்
விதிவழித் தருமன் வெட்டுங் கட்டை
நீரிற் குமிழி நீர்மேல் எழுத்து

என்று பட்டினத்தார் புட்டுப்புட்டு வைத்து காயம் பொய், அநித்யம் என்று தெரிந்தும், பிறப்பெடுத்து வாழ்க்கையெனும் பாழும் கிணற்றில் விழுந்து பல கஷ்ட நஷ்டங்களில் அடி வாங்கினாலும், மனுஷ்ய ஜென்மத்தின் ஜீவன் மீதுள்ள தீரா ஆசை விந்தையிலும் விந்தையே!
“ஒண்ணுமில்லை.. ஹி இஸ் ஆல்ரைட்டுன்னு டாக்டர் சொல்லிட்டார்..” என்று முப்பத்திரண்டையும் காட்டிச் சிரிக்கும் போது வாழ்க்கையின் பிடிமானம் உறுதியாக வெளியில் தெரிகிறது. சேற்றுப் பாதையைக் கடக்க முயலும் புழுவிற்குக் கூட குதிரையின் குளம்புகளுக்குள் சிக்காமல் அதன் உயிரைக் காத்துக்கொள்ளப் போராடுவதைப் பற்றி மகாபாரதத்தில் வரும் கட்டம் சாஸ்வதமான உண்மை.

0 comments:

ஆடிய பிற ஆட்டங்கள்

Related Posts with Thumbnails