Friday, August 19, 2016

வெந்து தணிந்த காடுகள்

வெற்றியில் சிகரம் தொடுவது ஒன்றே இலக்கு என்கிற லட்சியவெறி கொண்ட பர்ஸ் பெருத்த இளைஞன் அருண். தனது கெட்டிக்காரத்தனத்தால் உலகமே தன் காலடியில் என்கிற மமதை. அந்தஸ்தில் குறைந்த அழகி ஒருத்திக்கு தாலிகட்டி 'இல்லத்தரசி'யாக்கிக் கொள்கிறான். பார்வைக்கு சௌந்தர்யமாய் படுக்கைக்கு போகப்பொருளாய் பெருமைக்கு படித்தவளாய் அவனுக்கு அடங்கி வீட்டோடு பெண்டாட்டியாய் விம்மி. அவளது ஆசாபாசங்களைக் கண்டு கொள்ளாது தொழில் ஒன்றே கதியென்று பழியாய்க் கிடக்கிறான்.
அருண் அலுவலகத்தில் அவனுக்குக் கீழ் வேலை பார்க்கும் ராதிகா சாதுர்யமான பெண். சிகரெட் புகைத்து குடி விருந்துகளில் “சியர்ஸ்” என்று கோப்பைத் தூக்கும் “ஆணுக்கு பெண் நிகர்” சிந்தாந்தம் பேசும் மாடர்ன் கேர்ள். எந்த வம்புதும்புக்கும் போகாமல், ராதிகா யாரோடு எப்போது வீட்டுக்குள் நுழைந்தாலும் கேள்வி கேட்காத கணவன் ரமேஷ். இவர்களுக்கு அப்நார்மல் அறிவோடு இருக்கும் சைல்ட் ராகுல். “ஹீ வாஸ் ஜஸ்ட் எ கலர்லெஸ் பர்ஸன்” என்று அப்பாவைத் திட்டும்போது “மை மதர் இஸ் டெட். வாஸ் இட் டுடே ஆர் எஸ்டர்டே?” என்று அம்மாவை காமு எழுதிய நாவலிலிருந்து மேற்கோள் காட்டும் இடங்களில் அருண்-விம்மிக்கு குழந்தைச் செல்வமில்லை என்கிற பெருங்குறை தவிர ஏனைய செல்வங்கள் கொட்டிக் கிடக்கிறது.
ஒரு துரதிர்ஷ்டமான சந்தர்ப்பத்தில் அருண்-விம்மி ஜோடியிடையே வாக்குவாதம் ஏற்பட்டு “கெட் அவுட். .கெட் லாஸ்ட்” சொல்லிப் பிரிகிறார்கள். அதே சமயத்தில் ராதிகா-ரமேஷ் தம்பதிக்குள்ளும் சண்டை. ரமேஷ் சொல்லாமல் கொள்ளாமல் ஒரு நாள் சூட்கேஸோடு பரதேசம் கிளம்பிவிடுகிறான். விம்மியின் உள்ளே சுடர்விட்டுக் கொண்டிருந்த ஆர்ட்டிஸ்ட், தாமோதரன் என்ற அவலட்சணமான, லக்ஷணமான படங்கள் வரையும், இளைஞனால் கொழுந்து விட்டு எரிகிறது. அருணைப் பிரிந்து வந்து ஆறு வருஷத்தில் காலரி வைக்குமளவிற்கும் ந்யூஸ் பேப்பரில் பேட்டிகள் வருமளவிற்கு வளர்ந்துவிடுகிறாள் விம்மி. ஆதரவிற்காக விம்மி போய் ஒதுங்கிய இடம் தாமோதரன் வீடு. கடைசியில் அவனும் சராசரி ஆண் வர்க்கம்தான். அவள் பக்கத்தில் வந்து ஒருநாள் படுத்துக்கொண்டு இளித்தவனை “நம்முடைய உறவை இப்படிக் கொச்சைப்படுத்த வேண்டுமா?” என்று விம்மி கேட்டதற்கு பின்னர் அவளை வெறுக்க ஆரம்பித்து கடைசி பத்து பக்கத்தில் அவனும் சராசரி என்று நிரூபிக்கப்படுகிறது. காடுகள் வெந்து தணிகிறது.
இவர்கள் இண்டலெக்சுவல்ஸ். ஆனால் இவர்கள் அனைவருமே உளவியல் ரீதியாகக் குதறப்பட்டவர்கள். இவர்களைச் சுற்றி அழகாகப் பின்னப்பட்டக் கதை. கத்தியின் கூர்முனை போல படித்தால் குத்திக் கிழிக்கும் வசனங்கள். பார்த்துப் பார்த்துச் செதுக்கியவை.
“வாத்சாயனர் பெண்களை வகைவகையாய்ப் பிரிக்கிறாரே, ஏன் ஆண்களைப் பிரிச்சுக் காட்டலை? ஆண்களுக்கு வேண்டிய போகப் பொருள் பெண்கள். அவர்கள்லே இத்தனை வெரைட்டி இருக்கு. ஆண்கள் தெற்ந்தெடுக்கலாம். அவர்களுக்கு விருப்பமானதை..... அப்படின்னுதானே இதுக்கு அர்த்தம்? ஏன், பெண்கள் அவர்களுக்கு விருப்பமானதைத் தேர்ந்தெடுக்கக்கூடாது? திருக்குறள் படிச்சிருக்கீங்களா? ‘வாழ்க்கைத் துணை நலம்”னு மனைவி எப்படி இருக்கணுங்கிறாரே வள்ளுவர், கணவன் எப்படி இருக்கணும்னு ஒரு அதிகாரம் பாடியிருக்கலாம் இல்லையா?”
ஆண் பாத்திரங்களில் அநேகம் பேர் பாக்கெட் உருவி பற்ற வைத்துப் பக்கத்துக்குப் பக்கம் சிகரெட் நெடி. 81ல் முதல் பதிப்பு என்று போட்டிருக்கிறார்கள். வெண்குழல் ஊதுவது அப்போது ஃபேஷனாக இருந்திருக்கக் கூடும்.
கதையின் சீரான போக்கிற்கு இடையில் வரும் சில வசனங்கள் நம்மையறியாமல் புன்னகைக்க வைக்கின்றன.
“என் சமையலைச் சாப்பிடறவங்க, நான் பெயிண்டர்ங்கிறாங்க, என் படங்களைப் பார்க்கிறவங்க, நல்ல சமையல்காரங்கிறாங்க..”
“மனித சுபாவத்தை இது இப்படித்தான் என்று வரையறுத்துச் சட்டம் போட்டு ஃப்ரேம் பண்ணி மாட்டிவிட முடியாது...” லட்சத்தில் ஒரு வரி!
ஒரு பாலச்சந்தர் ஃபார்முலா படம் எடுக்க சர்வலக்ஷணங்களும் பொருந்திய கதை. எடுத்திருக்கிறார்களா? இல்லை யாரும் இன்னும் துணியவில்லையா?

1 comments:

வெங்கட் நாகராஜ் said...

நல்லதொரு வாசிப்பனுபவம்.....

ஆடிய பிற ஆட்டங்கள்

Related Posts with Thumbnails