Friday, August 19, 2016

உள்ளம் கவர் கள்வன்


புறவழிச்சாலைகளில்லாக் காலங்களில் சிதம்பரம், சீர்காழி போன்ற சிவத்தலங்களின் கோபுர தரிசனமாவது செய்யும் பாக்கியம் இருந்தது. இப்போது கடலூர் தாண்டினால் ஒரே மிதி.... சீர்காழி கடந்து புள்ளிருக்குவேளூர் மாயவரம் பாதையில் கொண்டு வந்து இறக்கிவிடுகிறது. சென்னையில் கிளம்பியதிலிருந்து "பெம்மான்" தரிசனம் செய்யவேண்டுமென்பது என் அவா. உள்ளம் கவர் கள்வனல்லவா!!

ஆக்ஸிலேட்டரிலிருந்து காலை எடுக்க மனமில்லாத, பரந்துவிரிந்து ஓடும் அகண்ட சாலையிலிருந்து சட்டென்று உதறி பிய்த்துக்கொண்டு சீகாழிக்குள் இறங்கிவிட்டேன். சட்டநாதஸ்வாமி கோயில் தருமையாதீனக் கட்டுப்பாட்டுக்குள் இருக்கிறது. ஒரே மதிலுக்குள் ஸ்வாமிக்கும் அம்மனுக்கும் இரு தனிப்பெரும் கோயில்கள். கொடிமரம் தாண்டி நுழையும் போது வரும் கோபுரவாசலில் 'தோடுடைய செவியன்... விடையேறி..... பிரமாபுரம் மேவிய பெம்மான் இவனன்றே..."வை வெள்ளைப் பளிங்கு கல்லில் செதுக்கி சுவரில் பார்வையாய் ஒட்டியிருந்தார்கள்.
சிவபெருமானை தோடுடைய செவியன் என்று பாடியது..... தனக்கு முலைப்பால் கொடுத்து இடப்பாகத்தில் அமர்ந்த அம்மனைப் புகழ்ந்துதான் சிவபெருமானையே பாடினாராம்... சக்தியின் சக்தி. எப்போதோ கேட்டது.
பிரதோஷமாக இருந்ததால் ஊரார் சிலர் அருகம்புல், பால், வில்வம் என்று கையில் யத்கிஞ்சிதங்களோடு நடமாடினார்கள். கிழக்கு பார்த்த சன்னிதி. கோபுரவாசலிலிருந்தே பிரமபுரீஸ்வரர் காட்சி தருகிறார். பிரம்மா பூஜித்த ஈசன். அரையிருட்டில் சிவத்யானத்தில் இருந்த நந்தியெம்பெருமானை கடந்து செயற்கை விளக்கொளியில்லாமல் சுடராடும் எண்ணெய் விளக்கில் மனசுக்கு இன்னும் நெருக்கமானார் பிரமபுரீஸ்வரர். திருவாசிக்குப் பின்னால் ஏற்றிய ஒற்றை அகலை கிரணங்களாக்கிக் காண்பிக்கும் அந்த சுடர்க் கண்ணாடியில் தீபம் நடமிட ஏகாந்த தரிசனம்.
"சார்... அர்ச்சனை சட்டநாதருக்கா? இல்ல பிரம்ம...."
"விசேஷம் யார்க்கு?"
"இங்க சட்டநாதருதான்... அவர்தான் வரப்பிரசாதி..."
"சட்டநாதருக்கே பண்ணுவோம்..."
உதவிக்கு வந்தவரும் ஒரு சட்டநாதர்தான். சீர்காழி ஆள். வலம் வந்த பின்பு பிரம்மபுரீஸ்வரர் சன்னிதிக்கு பின்புறம் மேலே மாடி ஏறினோம். ஒரு டிக்கெட் விலை ரூ. 5. என்று தகரபோர்டில் எழுதி மாடியேறும் பாதையை மூடியிருந்த கதவில் மாட்டியிருந்தார்கள். சிமென்ட் படிக்கட்டில் நிதானமாக ஏறும்போது ராஜாக்கள் காலத்தில் மரப்படி அமைத்திருப்பார்களோ.... பிற்காலத்தில் அது சிதைந்திருக்குமோ... என்ற எண்ணம் எழுந்தது.
இருபது முப்பது படிகள் ஏறினால் தோணியப்பர் சன்னிதி வருகிறது. கருவறைக்குள் பிரமாண்டமான உமாமஹேஸ்வர சிலா ரூபங்கள். பெரியநாயகர். பெரியநாயகி. தரிசனம் செய்பவர்கள் கண்டதும் உறைந்துவிடும் ஜாலம் மிகுந்த சிற்பங்கள்.
"இவர் தோணியப்பர்... உமா மஹேஸ்வர்.. சுதைச் சிற்பம்தான். அபிஷேகம் கிடையாது. இவர்தான் இங்கே குருமூர்த்தம்." என்றார் குருக்கள்.
தீபாராதனை. ஒத்திக்கொண்டோம்.
“குருமூர்த்தம்...”
“ஆமா.. ஜனங்களுக்கு உபதேசம் பண்ணுவார்... இந்த தலத்துக்கு ஒரு பெருமை இருக்கு.. தெரியுமோ?”
“என்ன மாமா?”
“பல கோயில்ல... ஒண்ணு குருமூர்த்தம் இருக்கும்... இல்ல.. சங்கம மூர்த்தம் இருக்கும்... லிங்க மூர்த்தம் எல்லா கோயில்லயும் இருக்கும்..... இங்கதான் மூன்று மூர்த்தங்களும் சேர்ந்தே இருக்கு....”
“........”
“கீழே லிங்க மூர்த்தம் பார்த்திருப்பேள்... பிரமபுரீஸ்வரர்... இப்போ இங்கே படியேறி வந்து குருமூர்த்தமா தோணியப்பரை தரிசனம் பண்ணிட்டேள்..இன்னும் மேலே போனா பார்க்கப்போறோமே... சட்டைநாதர்.. அவர்தான் சங்கம மூர்த்தம்.. சங்கம மூர்த்தம்னா... ஜனங்களோட இஷ்டகாம்யார்த்தங்களை பூர்த்தி பண்ணுபவர்.... வேணும்னு கேட்டா வரமருளும் வரப்பிரசாதி......”
அந்த குறு சொற்பொழிவில் சீகாழியின் சிறப்பு விளங்கியது. ஞானசம்பந்தர் திருமுலைப்பால் அருந்தியது ஒன்றே இத்தலத்து பெருமை என்று இதுவரை நினைத்திருந்தேன்.
"அர்ச்சனை சட்ட நாதருக்குதானே.... மேலே போங்க வரேன்..." என்று என் சிந்தனையைக் கலைத்தார்...
குறுகலான படிக்கட்டு இன்னும் ஒரு தளம் மேலே சென்றது. மேலே கடைசிபடியிலிருந்து ஒரு இரும்பு ஜன்னல் வழியாக அண்ணாந்து பார்த்தால்....நின்ற திருமேனியுடன் சட்டைநாதர் தெரிந்தார். எண்ணெய்க் காப்பு சார்த்தியதில் பளபளப்பாக ஜொலித்தார்.
"கூட்டமேயில்ல...." என்று அம்மாவிடம் சொல்லிக்கொண்டே படியேறினேன்.
“சட்டைநாதர் பைரவ சொரூபம். ஹிரண்ய வதம் பண்ணின நரசிங்கத்தை கிழிச்சு... அதோட முதுகெலும்பை கதையா வச்சுண்டிருக்கார்.... அதோட தோலை சட்டையா மாட்டிண்டிருக்கார்... அஷ்டமியெல்லாம் ரொம்ப விசேஷம்.. சுக்ரவாரங்கள்ல நடுராத்திரி பூஜை நடக்கும். கூட்டம் முட்டித்தள்ளும்.. மஹா நேவேத்யம் கிடையாது.. வடை பாயஸம்தான் நிவேதனம்.”
தளத்திலிருந்து சுற்றிப் பார்த்தால் கோயிலின் எழிலான சுற்று கோபுரங்கள் தெரிகின்றன. பழமை தொற்றியிருந்தது. பின்னால் குருக்கள் ஏறி வந்து "இதோ.. இந்த வழியா உள்ள போகணும்..." என்று காண்பித்து சென்று மறைந்த இடத்தில் என்னைப் போன்ற தேசலான தேகம் கொண்டவர்கள் மண்டியிட்டு குனிந்து உள்ளே நுழையுமளவிற்கு ஒரு துவாரம்.
"இங்க ஜாஸ்தி பேர் நிக்க முடியாதே?"
"அஞ்சஞ்சு பேரா உள்ள விடுவோம்..."
உள்ளே சென்று நிமிர்ந்தால் நம் தலைக்கு மேலே சட்டை நாதர் நிற்கிறார். பார்த்தவுடன் ஏனோ சிலிர்க்கிறது. பின்னால் உள்ளே நுழைந்த வினயாவை "தலையில பூ வச்சுண்டு உள்ளே வரப்படாதும்மா... கழட்டிடும்மா..." என்றார். பின்னர் என்னைப் பார்த்து... "இதெல்லாம் இங்கே ஐதீகம்... இதுமாதிரி இன்னும் நிறையா இருக்கு... உங்க கோத்ரம், நக்ஷத்திரம் சொல்லுங்கோ...." என்றார் அர்ச்சனைககு.
அர்ச்சனை முடிந்தது. அப்படியே நெய்வேத்யம் செய்தார்.
"தேங்காய் உடைக்கலையா?"
"ம்...இல்லை.. சொல்றேன்..அது ஒரு ஐதீகம்..." தீபாராதனை தொடர்ந்தார்.
"என்ன ஐதீகம்?"
"இங்கே அர்ச்சனைக்கு தேங்காயை உடைக்க மாட்டோம். அப்படியேதான் அர்ச்சனை. அந்த தேங்காயை ஆத்துக்கொண்டு போய் உடைச்சு அந்த இள நீரை கீழே விடாமல் குடிச்சுடணும். தேங்காயைத் துருவி வெல்லம் போட்டுச் சாப்பிடணும்..."
"ம்... சமைக்கக்கூடாதோ..."
"ஊஹும். அப்புறம் இன்னொரு முக்கியமான விஷயம்..."
நிறுத்தினார்.
அம்மா, சித்தி, வினயா, பக்கத்தில் நின்ற சட்டைநாதர் என்று அனைவரும் ஏதோ ஒரு தேவரகசியத்திற்கு உஷாரானார்கள்.
"அந்த வெல்லம் போட்ட தேங்காயை உங்க குடும்பத்துல இருக்கிறவா மட்டும்தான் சாப்பிடணும்...."
**
பிரதக்ஷிணம் செய்துகொண்டு வரும்போது நந்திக்கு பிரதோஷ அபிஷேகம் நடந்துகொண்டிருந்தது. பின்பு திருநிலை நாயகி தரிசனத்திற்காகச் சென்றோம். பச்சைக் கலரில் வேஷ்டியணிந்து கொண்டு சிவ தரிசனம் செய்ப்வர்கள் யார் என்று புரியவில்லை. ஒரு கூட்டமாக ஓங்கிச் சிரித்துக்கொண்டு வந்தார்கள். அம்மன் கோயில் முன்பு பெரிய குளம். ஞான சம்பந்தனுக்கு முலைப்பால் கொடுத்த இடம்.
" நாம தோணியப்பர் பார்த்தோமில்ல... அங்கின இருக்கிற பெரியநாயகி அம்மந்தான் பால் கொடுத்தது... இந்த அம்மனில்லை..." என்றார் கூடவே வந்த மனுஷ்ய சட்டைநாதர்.
"எந்த அம்மனென்றால் என்ன? இங்கேயும் அங்கேயும் எங்கேயும் நீக்கமற நிறைந்திருப்பது ஒரே சக்திதானே? லோகமாதா அவள்தானே?” என்ற என் தத்துவார்த்தமான கேள்விகளுக்கு கடனேன்னு ஒரு புன்னகை உதிர்த்து பேசாமல் முன்னேறினார்.
அம்மன் சன்னிதி வாசலில் இருவர் கையில் அர்ச்சனைத் தட்டோடு அமர்ந்திருந்தார்கள். நிசப்தம். நிசப்தம். எங்கும் நிசப்தம்.
"சாமி வருவாரு... உக்காருங்க..." சாதாரணமாகப் பேசியதே கூம்பு ஸ்பீக்கரில் பேசியது போலிருந்தது.
பிரகாரத்தில் தேர்வடம் ஒன்று மடங்கிய வாசுகியாய் நீண்டு கிடந்தது.
"அது என்ன தெரியுமா?"
"கயறு.. தேரெல்லாம் இழுப்பாளே..." என்றாள் வினயா பட்டென்று.
"அதுக்குப்பேரு தேர்வடம்..."
வெள்ளையும் வெள்ளையுமாய் பக்கத்தில் இருந்தவர்...
"அது பளசு... இப்போல்லாம் நைலான்ல வந்துட்டுது...அதுலதான் இளுக்கறோம்..."
"கையி வலிக்காதோ?"
"அதெல்லாமில்லை சார்.. நூறு பேர் இளுக்கறதுக்கு பதிலா அம்பது பேரு போதும்.... முன்னாடி டிராக்டர் கட்றாங்க... பின்னாடி பலகை கொடுத்து நெம்புறாங்க... அந்தக் காலமெல்லாம் மலையேறிப்போச்சுதுங்க...."
பேச்சின் நடுவில் க்ரீச்சிடும் சைக்கிளில் வந்திறங்கினார் குருக்கள். திருநிலை நாயகிக்கு என் அம்மா ஆறுமுழம் புடவை உடுத்தியிருப்பது போல கட்டியிருந்தார்கள். சாயந்திர வேளையில் அருள்வதற்கு தயாராக இருந்தாள். ”சர்வ மங்கள மாங்கல்யே....சிவே...” தீபாராதனை ஒத்திக்கொண்டு லோக க்ஷேமத்திற்கு வேண்டிக்கொண்டோம்.
அம்மன் சன்னிதி திருவலம் முடிந்த பின்பு ...
"ஞானசம்பந்தர் சன்னிதி...எங்கேயிருக்கு?" தேடினேன்.
"தோ...அங்கின.. ஆனா ரொம்ப பேரு சாமி அம்மனைப் பார்த்துட்டு வீட்டுக்குப் பறந்துடுவாங்க..."
"நாம போவோம்..."
ஞானசம்பந்தருக்கு தனிக்கோயில். நுழைவாயிலில் கணநாதர் இருந்தார். ரிட்டயர்டானவர்கள் வயதில் இருந்த பெரியவர்கள் ஐந்தாறு பேர் அங்கே கலந்து பேசி லோகபரிபாலனம் செய்து கொண்டிருந்தார்கள். உள்ளே நுழையும் போது இருக்கும் அர்த்த மண்டபத்தில் காலி அலமாரிகளோடு ஒரு புத்தக நூல் நிலையம் இருந்தது. ஞானசம்பந்தர் பெருமானுக்கு முன் லிங்க ரூபத்தில் சிவபெருமான் வீற்றிருந்தார். ஞானப்பால் குடித்து இறை இலக்கியம் செய்த பிரானை மனதாரத் துதித்துக்கொண்டு திருவலம் வந்தோம். “உள்ளம் கவர் கள்வன்” என்கிற பதத்தை அருளிய பெருமகனார்.
மீண்டும் ராஜகோபுர வாசல் கொடிமரத்தருகே நமஸ்கரித்து சேப்பாயியை வைதீஸ்வரன் கோயில் பக்கம் நகர்த்தினேன். அடுத்து...
படம்: தோணியப்பர் கோபுரம்.

0 comments:

ஆடிய பிற ஆட்டங்கள்

Related Posts with Thumbnails