Friday, August 19, 2016

தமிழ் மொழிக் கூடம்

தமிழ் பேசத்தெரியாத காதலியைக் கடத்திக் கொண்டு போய் “முடித்துவிட்டு” புதருக்குள் வீசியபின் நாலைந்து ஹிப்பிக்கள் சஞ்சலமில்லாமல் சிரித்துக்கொண்டே நடந்து போவது போல சினிமாக் காட்சிகள் எடுக்கத் தோதான இடம். டார்லிங்-3, ஹலோ நான் பிசாசு பேசறேன், மொட்டை முனி போன்ற கிச்சுகிச்சு மூட்டும் டரியல் வகையறாப் படங்களுக்கு அரை மணி நேரக் காட்சிகளை அசால்ட்டாக சுருட்டும் இடம். அப்படியொரு மயான அமைதியான பகுதியில் தனியாய் இருக்கிறது உலகத் தமிழாராய்ச்சி மையம். தரமணி பாலிடெக்னிக் பின்புறம். ஞாயிறென்பதால் அந்தப் பகுதி தனிமையின் அடர்த்தி சகஸ்ர விழுதுகளோடு நின்ற ஆலமரத்தில் கூடுதலாகத் தெரிந்தது. அசையும் பொருள் அனைத்தும் அசையாமல் நின்றுகொண்டிருந்தது.
ஸ்ரீநிவாஸ் பார்த்தசாரதி ”தமிழ் மொழிக் கூடம்” Thamizh Mozhi Koodam என்ற ஒன்றை தோற்றுவித்து தமிழ் வளர்த்து வருகிறார் என்கிற செய்தி இரண்டு நாட்களுக்கு முன்னர் தெரியவந்தது. பின்லாந்து, மேற்கிந்திய தீவுகள் போன்ற வாழைப்பழ வாக்கு அயலார்களும் உள்நாட்டிலேயே “எம் பையனுக்கு டமில் வராது. ஃபெல்லிங் மிஷ்டேக் நெறயா பண்ணுவான்..” என்று நுனிநாக்கு தமிங்கிலிஷ் பேசுபவர்களுடைய சிறார்களுக்கும் வகுப்பெடுக்கிறார்கள்.
”தமிழ் கற்கும் மற்றும் கற்பிக்கும் முறைகளைப் பற்றிய ஒரு சிறு கூட்டம் தரமணியில் நடக்கவிருக்கிறது. நேரமிருப்பின் அவசியம் வாருங்கள்.” என்பதால் அங்கு காலடி எடுத்துவைத்தேன். இல்லையேல் முறையாக தமிழ் கற்று பேசும், “ஐயா... வணக்கம்...” தாராளமாகப் புழங்கும் இடங்களுக்கும் எனக்கும் ஸ்நானப்ராப்தி கூட இல்லை. தெரிந்த தக்குனூண்டு தமிழில் ஜல்லியடித்தலே எமது ஆஸ்தான தொழில்.
காயத்ரி ஸ்ரீநிவாஸ் நிகழ்ச்சி தொகுப்பாளராக குழுமியிருந்த தமிழறிஞர்களை அறிமுகப்படுத்தினார். அவர்களோடு சமமாக ஆசனத்தில் அமரவே நான் கொஞ்சம் நெளிந்தேன். எல்லோரும் தமிழ்மொழியில் முழுகி முத்தெடுத்தவர்கள். தமிழ் மூச்சு விடுபவர்கள்.”வெள்ளிக்கிழமை சீரியல் முடிவில் காலிங் பெல்லை அழுத்தும் போது தொடரும் போடுவார்கள். ச்சே.. என்ன ஆகுமோ?” என்று பார்ப்பவர்களுக்கு ஒரு வாரம் முழுக்கத் தவிப்பு இருக்கும். கிரிக்கெட் போன்ற விளையாட்டுகளில் பந்து வீசிய பின்னர் என்ன வேண்டுமானாலும் நடக்கலாம். ஆறோ, நான்கோ அல்லது விக்கெட்டோ. என்ன நடக்கப்போகிறது என்கிற தீராத மர்மம் பார்வையாளர்களை ஆறேழு மணி நேரத்திற்குக் கட்டிப் போடுகிறது. இது போன்ற ஒரு வடிவ உத்தியை தமிழ் கற்பிப்பதில் புகுத்துவதே எங்களது முதற்கட்ட முயற்சி. அதில் இப்போது வெற்றியும் அடைந்துள்ளோம்..” என்று பேசிய ”கசடறக் கற்க ஆராய்ச்சி நடுவம்” திரு. இராஜேந்திரன் பாரட்டத்தக்கவர். எல்கேஜி வகுப்புகளை மொட்டு வகுப்பு என்று அவர் வகைப்படுத்தும் தமிழ் நெஞ்சைக் கொள்ளையடிக்கிறது.
நாடு தாண்டி அவரது கற்பிக்கும் முறை கடைபிடிக்கப்பட்டு நாளைக்கு பங்களாதேஷ் பறக்கவிருக்கிறார். ஜெமோ எஸ்ரா போன்றவர்களின் படைப்புகளையும் பிள்ளைகளுக்குப் படிக்கக் கொடுத்து அவர்களை அந்த எழுத்தாளர்களுக்கு கடிதம் எழுதச் சொல்லியிருக்கிறார். ஜெமோ அவரது பயிற்சிப் பட்டறைக்கு விஜயம் செய்ய விருப்பம் தெரிவித்திருக்கிறாராம்.
”பாடங்கள் அனைத்தும் கதை சொல்வது போல போகும். கடைசியில் கேள்வி கேட்கப்பட்டு மாணவர்கள் அதற்கு பதில் சொல்வது போல போகிறது. உதாரணத்திற்கு மதிவதினி என்கிற மாணவிக்கு ஒரு எறும்பின் நட்பு கிடைக்கிறது. மதிவதினியை பின்புறமிருந்து ஒரு மாணவன் தலையில் கொட்டுகிறான். அவன் யார் என்று அந்த எறும்பு அடையாளம் காட்டுகிறது. அவனக்கு நானொரு பாடம் கற்பிக்கிறேன் என்று மதிவதின்க்கு உதவிக் கரம் நீட்டுகிறது. ஐயோ அவன் பொல்லாதவன் உன்னைக் கொன்றுவிடுவான் என்று எச்சரிக்கை செய்கிறாள் மதிவதினி....” அவர் பிரவாகமாகச் சொல்லச் சொல்ல நமக்கே மழலைகளாகி தமிழ் கற்கும் ஆர்வம் பீறிடுகிறது.
சபை மிரள ஐந்து நிமிடங்கள் நானும் மைக் பிடித்தேன். கவிஞர் சொ.நா.எழிலரசு என்ற தொப்பி போட்ட மூத்த தமிழறிஞர் பாடிப் பேசி நடித்து இயலிசைநாடகமாகத் தமிழூட்டினார். இவையெல்லாம் இரண்டாவது பகுதியாக தொடரும்.... அதுவரை “கோழி எப்படி சாப்பிடுகிறது?” என்பதை அந்தப் படத்தில் இருப்பது போல வாக்கியங்கள் அமைத்து பின்னூட்டமிட்டு விளையாடிக்கொண்டிருங்கள்.


”அலகு..ன்னு அழகைப் பேசுறவங்களை எப்படி மன்னிப்பது?” என்று மதுரை மறத் தமிழர்கள் வீறு கொண்டு அருவாளோடு எழத்தூண்டும்படி பேசியவர் எழிலரசு ஐயா. ஆங்கிலம் தமிழ் இரண்டிலும் புலமை வாய்ந்தவர். உச்சரிப்பு பழக்குகிறார். ழகர முரசு. ழகரத்திற்காக ழாழ்பவர். ச்சே... வாழ்பவர்.
“தமிழ்..தமிழ்... என்று ஆறு முறை தொடர்ந்து சொன்னீங்கன்னா.... அமிழ்துன்னு வரும். அவ்ளோ சிறப்பு. அலகா இருக்கீங்கன்னு பேசலாமா... அலகுன்னா பறவையின் மூக்கு.”
மூச்சிரைக்க பேசுகிறார். நமக்கும் தமிழ்ச் சாமி ஏறிவிடுகிறது. நெஞ்சில் திருவள்ளுவரை குத்தியிருக்கிறார். ”திருக்குறளில் இல்லாதது எது?” என்று சிலாகிக்கிறார்.
“பசங்களுக்கு ஒரு சந்தேகம். சார்.. பிரச்சனைக்கு சின்ன ராவா.. இல்ல பெரிய ராவா..ன்னு ஒருத்தரு கிட்டே கேட்டானுங்க.. அவனுங்களுக்குப் பதில் சொன்னவரு பெரிய ஆளு... பிரச்சனை சின்னதா இருந்தா சின்ன ரா... பெருசா இருந்தா பெரிய ரான்னாராம்.” இது போன்று நகைச்சுவை ததும்ப பேசிவிட்டு ஏழு ஸ்வரங்களுக்குள் எத்தனை பாடல் மெட்டில் “இரண்டே வரிகளில் எளிய பாட்டு - எழில் ஏழே சீர்களில் கருத்துக் கூட்டு” என்று திருக்குறளின் பெருமையைப் பாடினார். ரெண்டு சொட்டு அமிழ்து காதுக்குள் இறங்கியது.
நண்பர் ஸ்ரீநிவாஸ் பேசும் போது “சுயப்பிரதாபங்களைப் பேசும் முகப்புத்தகம் போன்று” என்று ஓரிடத்தில் உபயோகித்திருந்தார். என்னைப் பேசச் சொல்லும் போது “இளைய சமுதாயம் பயனுற சமூக வலைத்தளங்களில் தமிழ் மொழிக் கூடத்தின் செயல்பாடுகளை பகிர வேண்டும். முடிந்தால் APPகள் உருவாக்கி இணையத்தில் உலவ விட வேண்டும். எடுத்தவுடனேயே காட்டமான இலக்கண இலக்கிய தமிழுக்குள் நுழையாமல் மென்மையாக ஆங்கிலத் துணையோடு இளைஞர்களை உள்ளே இழுத்துவிட்டு பின்னர் தமிழால் காட்டு காட்டு என்று காட்டினாலும் தாங்குவார்கள் என்றேன். சுயபிரதாபங்களுக்கு மட்டுமில்லாமல் நிறைய கருத்துகள் இம்மண் பயனுற சமூகவலைத் தளங்களில் பகிரப்படுகிறது என்பதையும் வலியுறுத்தினேன்.
இக்கால எஸ்ஸெம்மெஸ் சமுதாயத்திற்கு ஏற்றவாறு எழுதியது என்று சிலப்பதிகாரம் ஓர் எளிய அறிமுகத்துக்கு சொன்னது போலவும்.. நடாட்த்துகிறார்கள் என்று எழுதியவுடனே ஓடிவிடுவார்கள் என்று சொன்னதையும் அங்கே பேசினேன். எளிமையான தமிழைத் தந்து பின்னர் அவர்களை பாதை வழுவாமல் பார்த்துக்கொள்வது எளிது என்பது என் கருத்து.
ஆங்கிலத்தில் Spellbee போட்டிகள் போன்று “சொல்வி” என்று பன்முறை சுற்றுகள் கொண்ட போட்டிகள் நடத்தப்போவதாக அறிவித்தார் ஸ்ரீநிவாஸ்.
தமிழாராய்ச்சி நிறுவன இயக்குநர் முனைவர் கோ. விசயராகவன் நறுக்குத் தெறித்தார்ப்போல பேசினார். இதுபோன்ற முயற்சிகளை உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம் ஊக்கப்படுத்துவதோடு உறுதுணையாகவும் நிற்கும் என்று உறுதி கூறினார்.
தமிழமுதினை அனைவரும் பருகிக்கொண்டிருக்கும் போது எனக்கு வேறு அலைபேசி அழைப்புகள் வந்தது. வெளியில் வந்ததும் அண்ணாவின் போர்ட்ரெய்ட் தங்கச் (மாதிரி) சிலையிருக்கும் பகுதி கண்ணில் பட்டது. ”அந்தக் கலைக் கூடத்தைப் பார்த்துட்டுப் போங்க...” என்று ஸ்ரீநிவாஸ் ஏற்கனவே சொல்லியிருந்தார்.
தமிழகத்தை ஆண்ட சோழ சேர பாண்டியர்களின் வரலாறு, வேளாண்மை, வாழ்வியல் முறை, ஐவகை நிலங்கள், ஏர், மாட்டு வண்டி, கலப்பை, நெசவுத்தொழில், சுமைதாங்கி, கற்தூண், கலைநயமிக்க நிலைவாசல் கதவு, பாண்டிய மன்னனின் அரசவை, ராஜாக்களின் வெங்கலச் சிற்பங்கள், அந்தக்கால நகர அமைப்பின் மாதிரி என்று ஐந்து அரங்கங்களின் அழகாக அடுக்கியிருந்தார்கள். குளிரூட்டப்பட்ட அறைகளில் தமிழகத்தின் வரலாறு அழகாகயிருந்தது. கலைக்கூடத்திற்குள் திரையரங்கு ஒன்றும் தமிழின் அருமை பெருமைகளைப் பறைசாற்ற ஓடிக்கொண்டிருக்கிறது.
சுற்றிக் காண்பித்த குமார் என்ற பணியாளரிடம் “நிறையா பேரு வந்து பார்க்கிறாங்களா?” என்று கேட்டேன். ரெண்டு மாசம்தான் ஆவுது சார்.. இப்பவே கொஞ்சம் பேரு வர்றாங்க... இன்னும் வெளிய பிரபலமாச்சுதுன்னா நிறையா பேர் வருவாங்க..” என்றார். இந்தக் கோடை விடுமுறையில் குழந்தைகளை ஒருமுறை தரமணி உலகத் தமிழாராய்ச்சி மையம் கொண்டு போய் காட்டுங்கள். மொட்டுகள் வரலாறு அறியட்டும்.
பிற்சேர்க்கை: இந்தியாவில் பேசப்படும் மொழிகள் 325, இந்தியாவில் காணப்படும் சாதிகள் 4635, ஒரு நாளில் சராசரியாக நாம் பேசும் சொற்கள் 4300 என்று சில அரிய தகவல்களை ஐயா எழிலரது தனது நூலான “தமிழ்மலர்”ரில் தொடுத்துள்ளார்.

0 comments:

ஆடிய பிற ஆட்டங்கள்

Related Posts with Thumbnails