Friday, August 19, 2016

நீ யாரு?

கீழவாழக்கரை. நாகை மாவட்டம். குக்கிராமம். கிராமராஜர் படங்களில் நடிக்கும் புகழ்பெற்ற கிராமங்களைப் போலவே வயலோர பஸ் நிறுத்ததில் இறங்கி, காற்றில் தலைகலைய வரப்புகளில் ஆடியாடி நடந்து, கடந்தால் ’டமடம’க்கும் மரப்பாலமேறி நுரைத்து ஓடும் வாய்க்கால் தாண்டினால் அமைதியான ஊர். ஒரு டீக்கடை, திண்ணை மரத்தூணோடு பண்ணை வீடு, சேப்பு கலர் டிராக்டர், மலைபோல வைக்கப்போர், தலைவிரித்த அரசமரம், கடந்து ஓடும் குட்டிகளுடன் ஆடு, கொண்டைச் சேவல், “ம்மா...” கத்தும் பசுமாடு என்று மாதிரி கிராமத்தின் சகல கல்யாணகுணங்களையும் கொண்ட கிராமம்.
அண்ட்ராயர் பருவத்தில் நான் அங்கே சரஸ்வதி பள்ளிக்கூடத்தில் கொஞ்ச நாட்கள் திருதிருவென்று விழித்திருந்தேன் என்று சொன்னால் எனக்கு நெருக்கமான மன்னையர்களே “என்னாடா கத வுடறான்?” ஆச்சரியத்தில் புருவம் சுருக்குவார்கள். “நீ பக்கா மன்னார்குடிக்காரன். உனக்கு அங்கே என்ன வேலை?” என்று நீங்கள் சுட்டு விரல் நீட்டும் முன்... சொல்லிவிடுகிறேன்.
நீலா சித்திக்கு கீழவாழக்கரை சரஸ்வதி பள்ளிக்கூடத்தில் ஒன்றாம் வகுப்பு ஆசிரியையாக பணி நியமனம் கிடைத்தது. ஆம்பிளைத் துணையாக என்னையும் அழைத்துக்கொண்டு கிளம்பிவிட்டாள். எல்கேஜி யூகேஜி போன்ற குழந்தைப்பருவ கொலைக்களன்கள் உருவாகாத காலம். தினமும் நீலா சித்தி ஒன்றாம் வகுப்புக்கு அ ஆ சொல்லித்தரும்போது நாற்காலி பக்கத்தில் உட்கார்ந்துகொண்டு கோரஸாக ராகம்பாடி படிப்பவர்களை வெறித்துக்கொண்டிருப்பதுதான் அன்றாட பணி.
தாளாளர் மற்றும் தலைமையாசிரியர் திரு. கங்காதரன் பக்கத்து வீட்டுக்காரர். ஐந்தாறு கட்டு கொண்ட பெரிய வீடு. வாசல் திண்ணையில் ஐம்பது பேருக்கு தலைவாழை இலை போட்டு சாப்பாடு போடலாம். அவ்ளோ பெரிசு. அவர்களுக்கு நான், கன்னம் பிடித்துக் கிள்ளி “சமத்துக்குட்டிடா...” என்று கையிரண்டையும் என் கன்னம் வழித்து பொட்டில் அழுத்தி விரல்கள் க்ளுக் க்ளுக்க திருஷ்டி கழிக்கப்படும் செல்லம்.
“சின்னத்தம்பி... “என்று இடைவேளைகளில் என்னை வாஞ்சையாய் அழைத்து அவரது மனைவியார் எனக்கு பருப்புசாதம் ஊட்டுவார்கள். முழு நிலா அப்பளத்தோடு. என்னுடைய நெடுநாளைய கெட்டப்பழக்கம், அப்பளம் நொறுங்காமல் சாப்பிட ஆரம்பிக்க வேண்டும். இல்லையேல் சாதம் தொடமாட்டேன். ”ஏன்டாம்பி... நொறுக்கித்தானே தொட்டுக்க தரப்போறேன்.. இப்போ என்ன?” என்று கேட்டால் வாயைத் திறந்து பப்பு மம்மு வாங்கிக்கொள்ளமாட்டேன். அடம். அழிச்சாட்டியம். புதுசாக அப்பளம் பொறித்து ஊட்டுவார்கள். அவர்களது முகவரி இப்போது நானறியேன். இப்பதிவு கொண்டு வந்து சேர்க்கிறதா பார்க்கலாம்.
அது ஒரு மாரிக்காலம். கண்ணெதிரே பச்சை வயற்காடு இருண்டு போகும்படி மேகங்கள் அணியாய்த் திரண்டு ஊரும் இருட்டிவிடும். அரைமணி ஒருமணி இடைவிடாமல் பொத்துக்கொண்டு கொட்டும். அலுத்த மேகக்கூட்டம் தூரம் போக பாதி வானம் பளிச்சென்று நீலம் காட்டிச் சிரித்து நம் மேனி குளுகுளுக்கும். இதுதான் வாடிக்கை. ஆனால் திடீரென்று ஒருநாள் புயல்சின்னம் உருவாகி தொடர் மழை. நாகப்பட்டிணத்தில் புயல் திருவிழாவுக்கு கொடியேற்றி துவஜாரோகணம் நடந்து விவித பாரதியில் “24 நேரத்திற்கு பலத்த மிக பலத்த மழையுடன் சூறைக்காற்று அடிக்கும்... மீனவர்கள் கடலுக்குள் மீன் பிடிக்க செல்ல வேண்டாம் என்று எச்சரிக்கப்படுகிறார்கள்” காலையும் மாலையும் ஒலித்துக்கொண்டிருந்தது. பொட்டு இடம் கூட இல்லாமல் மொத்த கிராமம் சொட்டச் சொட்ட நனைந்திருந்தது. கால்நடைகள் கொட்டகை தாண்டவில்லை.
பள்ளி எதிரே ஓடிய வாய்க்கால் கரையைத் தொட்டு காலை நனைத்தது. பள்ளிக்கு விடுமுறை அளித்து அந்தப் பிரதேசத்தில் ஈ காக்கா இல்லை. பள்ளிக்கு அடுத்த பக்கத்தில் அந்தக்கால பழைய வீடு. காம்பௌண்ட் சுவற்றிலும் சமையல்கட்டின் ஒரு மூலையில் ஓடு திறந்திறந்த பகுதியிலும் வேப்பங்கன்று துளிர்விட்டிருந்தது. மற்றபடி நல்ல விஸ்தாரமான ஓட்டு வீடு. பலமான உத்திரங்கள். நீலா சித்தியுடன் மகாலெக்ஷ்மி டீச்சரும் அங்கேதான் தங்கியிருந்தார்கள். நாங்கள் மூன்று பேர். நான் தான் அந்த இரண்டு லேடீஸுக்கும் காவல். மகாலெக்ஷ்மி டீச்சருக்கும் மன்னைதான்.
அன்று காலையிலிருந்து காற்று பலமாக வீசியது. நாகை கடற்கரை பக்கத்தில் இருப்பதால் காற்றின் வேகம் அதன் “ஊ..ஊ..ஊ” என்ற ஓலத்தில் பயமுறுத்தியது. காஃபியோ டீயோ போட்டுக்குடித்துவிட்டு ஜன்னலை எல்லாம் சார்த்திவிட்டு வீட்டுக்குள்ளேயே மடங்கிக் கிடந்தோம். மின்சாரம் என்றைக்கு போனது என்று தெரியாது. என்றைக்கும் வருமென்றும் தெரியாது. எதிராள் மங்கலாகத் தெரியும் மசமச இருட்டிலிருந்து சுத்தமாக மறையும் கும்மிருட்டு வந்தால் இருட்டிவிட்டது என்று அர்த்தம். அந்த இரவு வந்தது. வெளியே மழை நின்றபாடில்லை. அரிக்கேன் விளக்கு ஏற்றிவைத்துவிட்டு மோர்சாதமாக ஏதோ சாப்பிட்டோம். சமையற்கட்டில் ”சொர்ர்ர்ர்ர்ர்”ரென்று ஒரு திடீர் அருவி முளைத்திருந்தது.
கை கழுவி விட்டு பாயை விரித்து உட்கார்ந்திருக்கிறோம். வெடவெடவென்று குளிர ஆரம்பிக்க போர்த்திக்கொள்கிறோம். எதிரே மூலையில் அரிக்கேன் விளக்கிலிருந்து ஒளி சன்னமாகக் கசிந்துகொண்டிருக்கிறது. மகாலெக்ஷ்மி டீச்சர் ஏதோ ஊர்க்கதை சொந்தக்கதை பேசிக்கொண்டிருக்கிறார்கள். வெளிச்சம் எங்களைக் கடந்த போது பின்னால் சுவற்றில் கறுப்பு நிழலாகப் பூதாகாரமாக வரைந்திருந்தது. நீலா சித்தி அசையாமல் கதைக் கேட்டுக்கொண்டிருந்தாள். பக்கத்தில் கால்களை மடக்கி தாவாங்கட்டைக்கு முட்டுக்கொடுத்து நானும் சுவாரஸ்யமாகக் கேட்டுக்கொண்டு அமர்ந்திருக்கிறேன்.
கதை சொல்லிக்கொண்டிருந்த மகாலெக்ஷ்மி டீச்சரின் வாய் சட்டென்று திக்குகிறது. “டீ..ச்ச்....ச்ச்...ச்ச்” என்று “ர்” முடிக்காமல் உத்தரத்தையே வெறித்துப் பார்த்துக்கொண்டிருந்தார்கள். எங்களுடைய கண்களும் அங்கே சரேலென்று திரும்பியது. தலைக்கு மேலே உத்தரத்தில் ஐந்தாறு முறை ஸ்ப்ரிங்போல மேனியைச் சுருட்டிக்கொண்டு ஒரு நீளமான பாம்பு தலை தூக்கிப் படமெடுத்துக்கொண்டிருந்தது. அந்த அரைகுறை அரிக்கேன் விளக்கு வெளிச்சத்திலேயே பளபளக்கும் அதன் மேனி வெள்ளியில் கைப்பிடியளவு காத்திரமான செயின் உத்தரத்தில் தொங்கவிட்டது போலிருந்தது. அவ்வப்போது மின்னல் வெட்டி எங்களை அந்தப் பாம்புக்கு அடையாளம் காட்டி எட்டப்பன் வேலை செய்துகொண்டிருந்தது. மின்னலில் அதன் மேனி கண்ணைப் பறித்தது.
நீலா சித்தியை இடுப்போடு கட்டிக்கொண்டு பாம்பிலிருந்து கண்ணெடுக்காமல் மிரண்டுபோயிருந்தேன். உத்தரத்தில் அது நர்த்தனம் ஆடியது. இறங்கி கீழே வருமா.. இல்லை ஓட்டுக்கும் சுவருக்கும் மத்தியில் இருக்கும் இடைவெளியில் பதவிசாக வெளியே போகுமா? விதிதான் நிர்ணயிக்கும் என்கிற நிலை... மூவரும் அதையே கண்ணெடுக்காமல் பார்த்துக்கொண்டிருந்தோம். அறையில் பேச்சு நின்றுவிட்டது. நாங்கள் பாம்பின் முழுக்கட்டுப்பாட்டில் இருந்தோம். அப்போது................

...உத்தரத்தில் உல்லாசமாக ஊஞ்சலாடிக்கொண்டிருந்த பாம்பு அயர்ந்து போய் கீழே இறங்கத் தயாரானது. சுருட்டியிருந்த மேனியை நேர்கோடாக்கி சோம்பல் முறித்து மெதுவாக நீயா பட ஸ்ரீப்ரியா போல வளைந்து ஊர்ந்தது. நீலா சித்திக்கு அந்த மழையிலும் வியர்த்தது. நான் இன்னமும் சித்தியை இறுக்கிகொண்டு அந்த கோரக் காட்சியை பார்க்காமல் மடியில் முகம் புதைத்துக்கொண்டேன். "நாகராஜா... கண்ணுல படாம மண்ணுல மறைஞ்சு போ....நாகராஜா...நாகராஜா.. மறைஞ்சு போ... " என்று நடுநடுங்கும் குரலில் நீலா சித்தி அதனிடம் கெஞ்சி பேச்சுவார்த்தை நடத்திக்கொண்டிருந்தாள். அது பிரார்த்தனையா? வேண்டுகோளா? சமாதானமா? என்று ஒன்றும் புரியவில்லை.
மஹாலக்ஷ்மி டீச்சர் கொஞ்சம் தைரியமானவர். அவருக்கொன்றும் ஓடுகிற பாம்பை ஓடிப் பிடிக்கும் வயதில்லைதான். ஆனால் ஏதோ யுக்தி கண்டுபிடித்தது போல விருட்டென்று எழுந்து அறை மூலைக்குச் சென்றார். என்ன நடக்கிறது என்பதை அரைக்கண்ணால் பார்த்துக்கொண்டிருந்தேன். துடைப்பக் கட்டையை எடுத்துக்கொண்டு வந்து எங்களுக்கு முன்னால் கட்டாந்தரையில் பளார்...பளாரென்று ஓங்கி அறைந்தார். தரையில் இறங்கியிருந்த பாம்பு இரண்டு முறை அலட்சியமாகத் தலையைத் திருப்பிப் பார்த்துவிட்டு, நாங்களொன்றும் அது தீண்டும் அளவிற்கு கொலைபாதக எதிரிகளல்ல என்று மெதுவாகக் கொல்லைப் பக்கம் சென்றுவிட்டது.
மூவருக்கும் அன்று இரவு தூக்கமில்லை என்று எழுதுவேன் என்று எதிர்பார்ப்பீர்கள். எப்போது தூங்கினேன் என்று தெரியாமல் ஆம்பிளைச் சிங்கம் காலையில் எழுந்திருந்தேன். மழை தூறல் தூறலாகக் குறைந்து போனது. வெய்யில் அடித்தது. நாட்கள் ஓடின. சரஸ்வதி பள்ளிக்கூடத்திலிருந்து மன்னைக்கு வந்து சின்ன கான்வென்டில் சேர்ந்து...... நேஷனலில் படித்து.... காலேஜ் முடித்து... வேலைக்குப் போய்... கல்யாணம் பண்ணிக்கொண்டு... குழந்தைகள் பெற்று... காலம் கரைபுரண்டு ஓடிவிட்டது.
இந்த ரீவைன்ட் காட்சியை இதோடு நிறுத்திவிட்டு நிகழ்காலத்திற்குள் நுழைவோம்.
**
சென்ற வாரத்தில் மன்னைக்கு மஸ்டர் டேக்காகச் சென்றேன். சென்னையிலிருந்து சேப்பாயியில் போகும் போதே தி.ஜா வின் "துணை" கதை நினைவுக்கு வந்து படுத்தியது. சின்னக் குழந்தை என்ற எழுதுபகளின் இறுதியில் இருக்கும் ஒரு கிழவரையும் அவருடைய தகப்பனார் லேடி கிழவரையும் மஸ்டர் டேக்கு பென்ஷன் ஆஃபீஸ் அழைத்துச் சென்று திரும்பும் "துணை"ப் பையனாய் என்னை உருவகப்படுத்திக்கொண்டேன். தி.ஜாவின் நகைச்சுவை ததும்பும் சிறுகதை அது. கடைசியில் வண்டி குடை சாய்ந்து கீழே விழுந்து அடிபட்டுக்கொண்ட அந்தப் பையனுக்கு கிழவர்கள் துணையாக வீடு வந்து சேர்வார்கள்.
தி.ஜாவின் கதையில் கிழவர்கள் போல நான் தாய்க் கிழவியுடனும் சித்திக் கிழவியுடனும் சென்றேன். கூடவே உள்ளூரில் என் சாரதா பாட்டியின் தோழியாகிய தொன்னூற்று மூன்று தொண்டுவையும் அவரது மாப்பிள்ளையாகிய லேட்டஸட்டாக பென்ஷன் பெறும் இளங்கிழவரும் உடன் வந்தார்கள். சேப்பாயியையும் என்னையும் தவிர்த்துப் பார்த்தால் அகில இந்திய முதியோர் மாநாட்டுக்கு ஆட்கள் ஏற்றிக்கொண்டு போவது போல இருந்தது. அனைவரும் பாசமாக “என்னடா தம்பி” கூப்பிடும்போது இன்னும் பத்துப் பதினைந்து வயசு குறைந்து போய் வாலிபம் வளமாக ஏறிக்கொண்டது.
"இப்பவே போய்டுவோமா?" என்று அம்மா கேட்டபோது காலை ஒன்பதரை. வயதானாலே எட்டு மணிக்கு ரயில் என்றால் ஆறரைக்கே ஸ்டேஷனுக்கு போணும் என்று அடம்பிடிப்பது அதிகமாகிவிடுகிறது. "பத்து மணிக்குதான் வருவா" என்று வாசலில் ஹரித்ராநதி ரசித்துக்கொண்டே குரல் கொடுத்தேன்.
"கூட்டமாயிடப் போறது.. ஊருக்கு வேற திரும்பணும்... போலாம்..." என்று குச்சி போட ஆரம்பித்தார்கள்.

பஞ்சாயத்து யூனியன் ஆஃபீஸுக்குப் பின்னால் போலீஸ் ஸ்டேஷன், சப்-கோர்ட் மற்றும் தாலுகா அலுவலகங்கள் என்று கையும் மெய்யுமாக அரச ராஜ்ஜியம் நடந்துகொண்டிருக்கும் இடம். ஒன்பது ஐம்பத்தைந்திற்கு அலுவலர்கள் வருவதற்குள் இரண்டு மர பென்ச் நிரம்பி வழிந்து முதுபெரும் பென்ஷனர்களுக்கு இடம் கொடுத்து இளைய கிழவர்கள் வாசலில் ஓய்வு வாழ்க்கையின் சாதக பாதகக் கதைகளைப் பேசிக் கொண்டு நிற்குமளவிற்கு கூட்டம்.
"பாதி பேர் ரிட்டயர்ட் டீச்சர்ஸ்... அவா க்ரௌட் தான் ஜாஸ்தி..." என்றாள் ஆசிரியையாகப் பணி ஓய்வு பெற்ற பவானி சித்தி. அதில் ஒரு பெருமை. பட்டதாரியொருவரின் டீக்கடையில் வியாபாரம் சுடச்சுட ஆகிக்கொண்டிருந்தது. சென்னையில் பரவலாகக் காணப்படும் மெதுவடையில்லாமல் க.கொண்டைக் கடலை சுண்டல் விற்றார். தேங்காய்ப்பூ தூவி... பார்த்ததும் இழுத்தது.
"ஏஜுடு பர்சனுக்கு நல்லதுங்க..." என்று டீக்கு நின்ற என்னிடம் விற்பனையை எதிர்பார்த்தார். ஏஜுடுன்னு என்பதற்குப் பிறகு "ரிட்டயர்டு ஆளாடா நீ" என்று வாங்குவதற்கு ஒரு மனம் வீம்பாகத் தடுத்தும் "மணமா இருக்கு.. வாங்கி வாய்ல போடுடா" என்று சிபாரிசாய் இன்னொரு மனமும் சுண்டல் பறிக்கும் குரங்காகக் கூத்தாடியது. அடக்கிக்கொண்டேன்.
எதேச்சையாக உள்ளே பெஞ்சுகளில் அமர்ந்திருந்தவர்களைப் பார்த்தபோது ... அட.. இவங்களை மாதிரி இருக்கே.. என்று மஸ்டர் கையெழுத்துக்காக நின்றிருந்த சில பெருசுகளைக் கடந்தேன். ஆமாம்... அவங்கதான்..
“என்னைத் தெரியுதா?” என் நெஞ்சில் கைவைத்துக் கேட்டேன்.
“நீ யாரு?” எதிர் கேள்வியில் மிரண்டு போனேன்.
“யாரா? இன்னுமா தெரியலை?” காதலர்கள் போல முகத்துக்கு முகம் வைத்துக் கேட்டேன்.
“யாரு நீ?” என்று கேள்வி புரண்டு வந்தது.
“அலமேலு தெரியுமா?”
“அலமேலக்கா என் தெய்வம். என்னை வேலைக்குச் சேர்த்ததுவிட்டுச்சு..”
தனது பேட்ச் மெட் யாரிடமோ பேசிக்கொண்டிருந்த பவானி சித்தி விறுவிறுவென்று பக்கத்தில் வந்து “இப்படித்தாண்டா பேசறா...” என்றாள்.
”இது யாரு?” என்று பவானியைக் காட்டினேன்.
“யாரு?” ஆயிரமாயிரம் கேள்விகள் அந்தம்மாவின் கண்களில்.
“ஒண்ணுமே தெரியலைடா... நம்மாத்துல அவளும் அப்படியிருக்கா.... இவளும் இப்படி ஆயிட்டாளேடா” என்று அங்கலாய்த்தாள் பவானி சித்தி.
மீண்டும் முன்னால் நின்றேன். கனைத்துக்கொண்டேன்.
கனைப்பில் மிரண்டுபோய் பார்த்தார்கள்.
“சின்னத்தம்பி.. தெரியலையா? கீழவாழக்கரை நியாபகம் இருக்கா?”
“கீழவாழக்கரை... ஆமாம்.. நீ சின்னத்தம்பியா? சரி..சரி...”
பக்கத்தில் யாரையோ வினோதமாக பார்த்தார்கள். மீண்டும் என்னைப் பார்த்தார்கள். அவர்களுக்கு மொத்த உலகமே கேள்வியாய் இருந்தது. கண்களில் கேள்விகள் அணைக்கட்டு நீர் போலத் தேங்கி நின்றது அவரது பார்வையில் தெரிந்தது. உள்ளேயிருந்து “மீனாட்சி... தனபாக்கியம்.... வஜ்ரவேலு....” பெயர்கள் வரிசையாக ஒலித்துக்கொண்டிருந்தது.
“மஹாலெக்ஷ்மி”
“.....”
“மஹாலெக்ஷ்மி”
”....”
பென்சிலிருந்து எழுந்திருக்காமல் “யாரைக் கூப்பிடறாங்க?” என்று கேள்வியாய் என்னைப் பார்த்தபோது எனக்கும் துக்கம் தொண்டையை அடைத்தது. அழக்கூடாது என்று முடிவாய் இருந்தேன். கீழவாழக்கரையில் துடைப்பக்கட்டையை எடுத்து சர்ப்பம் விரட்டிய மஹாலெக்ஷ்மி டீச்சரா இது? பஸ்ஸிலிருந்து இறங்கி விடுவிடுவென்று வரப்பில் சென்ற ஆளா இது? “சின்னத்தம்பி ஒரு கிளாஸ் குடுங்க....” என்று டீ நீட்டியவரா இப்படி? இரக்கமில்லாத வியாதிகள். பக்கத்தில் அவரது கடைசிப் பெண் அமர்ந்திருந்தார்கள்.
“டாக்டர்ஸ் என்ன சொல்றாங்க?” என்று கமறலுடன் கேட்டேன்.
“டிமென்ஷியா... கொஞ்ச நேரத்துக்குப்புறம் எதுவுமே நினைவுல தங்க மாட்டேங்குது.. ”
“எங்க அம்மாவும் வந்திருக்காங்க... அலமேலு.... டீச்சர் பார்த்தாங்களா?”
“ம்....பார்த்தாங்க... அப்பவும்... அலமேலக்கா என் தெய்வம்... அப்படீங்கறாங்க.. ஆனா எதிர்த்தார்ப்ல நிக்கிறது அலமேலக்கான்னு தெர்ல...”
கொடுமை. நீலா சித்திக்கும் டிமென்ஷியா. மஹாலெக்ஷ்மி டீச்சர் நடமாடிக்கொண்டே டிமென்ஷியாவில். நீலா சித்தி பசி சொல்ல முடியாமல், வலி சொல்ல முடியாமல், தாகமெடுத்தால் தண்ணீர் கேட்கமுடியாமல், படுத்த படுக்கையாய்....கண்கள் உருட்டிப் பார்த்து.... டிமென்ஷியாவில்...
மன்னையை விட்டு சேப்பாயியில் கிளம்பியாயிற்று. “நீ யாரு?நீ யாரு?நீ யாரு?நீ யாரு?நீ யாரு?நீ யாரு?......” மட்டும் விடாமல் காதில் ரீங்காரம் செய்துகொண்டிருந்தது. அதன் ஓசை பேரிரைச்சலாக வளர்ந்துக்கொண்டே வந்து காரின் எதிரே தெரியும் ரோடு முழுக்க “நீ யாரு? நீ யாரு?” என்கிற வார்த்தை வெள்ளையாய்ச் சிதறிக்கொண்டே வந்தது. கார்ச் சக்கரத்தில் அரைபடும் ஒவ்வொரு “நீ யாரு?”களால் மஹாலெக்ஷ்மி டீச்சரின் “நீ யாரு?” சொஸ்தமாகிவிடாதா என்ற நப்பாசை. கீழவாழக்கரை.. சரஸ்வதி பள்ளி... வயல்.. கடல்... காற்று... பாமணியாறு.. மன்னை.... இதோ கும்மோணம்... மாயவரம்... கொள்ளிடம்... சிதம்பரம்.. சென்னை... என்று எல்லா காணும் இடங்களிலும் ஆக்கிரமித்த “நீ யாரு?” என்னை விட்டுக் களைவது எப்போது?
இப்போதும் என்னுள்ளே ஒரு விஸ்வரூப “நீ யாரு?”

0 comments:

ஆடிய பிற ஆட்டங்கள்

Related Posts with Thumbnails