Friday, August 19, 2016

மூன்று புத்தகங்கள்

இன்று வாசலிலேயே நீலமும் வெள்ளையுமாய் பலூன்கள் கட்டி என்னை வரவேற்றது மெட்ரோ ர.நி. கண்ட்ரோல் ரூம் வாசலில் கலர்க்கலராய் ரங்கோலி கோலம் போட்டுக்கொண்டிருந்த யூனிஃபார்ம் மாதுவிடம் ”என்னம்மா? ஸ்டேஷன் இன்னிக்கி ஒரே தடபுடலா இருக்கே?:” என்று விஜாரித்தேன்.
“சியெம்மாரல் ஆரமிச்சு இன்னியோட ஒரு வருசம் ஆவுது சார்” என்று சொல்லிவிட்டு நெற்றியில் புரளும் முடியை பின்னால் தள்ளும் போது கையிலிருந்த சிவப்புப் பொடி கன்னத்தில் ஒட்டி ரூஜ்ஜேற்றியது. என்னமோ சிரித்துக்கொண்டே பூ வரையப் போயிற்று.
பெஞ்சுக்கு ஒருத்தர் அம்போ என்று உட்கார்ந்திருந்த, காற்று வாங்கிய ப்ளாட்பாரத்தில் என்னுடைய மெட்ரோ பயணத்தை அசைபோட்டேன்.
அச்சுதம் கேசவம் - இரா. முருகன்.
புத்ர - லா.ச.ரா
குறத்தி முடுக்கு - ஜி. நாகராஜன்.

பத்து நாட்களாக நான் பயணம் செய்யும் பொதுஜனப் போக்குவரத்து எனக்களித்த அருட்கொடை இவை.
மூன்றும் வாழ்வியலை மூன்று கோணத்தில் அலசியவை.
முதலாவது மேஜிகல் ரியலிஸம் என்கிற, தமிழுக்கு வித்தியாசமான வகையறா. முன்னோர்கள் கண் முன்னே வந்து கதகளி ஆடும் கதை. பரம்பரை பரம்பரையாக மனிதனின் கடும் பசிகளான காமம் மற்றும் தீனியைப் புரட்டிப் போட்டு அலசி அதை அரசூர், அம்புலப்புழா என்று சுற்றவிட்டு நம்மையும் கைப்பிடியாக அழைத்துக்கொண்டு பறக்கும் கதை. ஆங்காங்கே மயில் நடமிடுகிறது. தாழப்பறக்கிறது. ஏன் சில இடங்களில் செத்துக் கிடக்கிறது. மயிலோடு பல வர்ணங்களில் நம் முன்னே காட்சியாக விரிகிறது. எழுத்தாளர் இரா. முருகனின் வார்த்தை ஜாலத்தில் சொக்கிப்போகிறோம்.
இரண்டாவது லாசராவின் குடும்பக் கதை போல என்று சிலர் கூறுகிறார்கள். சிந்தாநதி ஒன்று இருக்கையில் இதுவும் அப்படியா என்று சந்தேகம் எழுகிறது. மாமியார் மாட்டுப்பெண்ணை சண்டைக் கோழிகளாக சித்தரிக்கும் பல கதைகளுக்கு நடுவில் தாயும் மகளுமாக பழகும் இரு பெண்மணிகள். குறத்திக்கு மகப்பேறு பார்க்கும் அந்த மாமியாரைப் படிக்கையில் ரோடில் குழியில்லாமலேயே எனக்கு உடம்பு குலுங்கியது. என்ன எழுத்து!!
மூன்றாவது ஜி. நாகராஜனின் குறத்தி முடுக்கு. விளிம்புநிலை மனிதர்களை மையமாக வைத்து எழுதுவது அவரது வாடிக்கை. நாளை மற்றுமொரு நாளேவில் நான் அவர் பரமரசிகனானேன். ஆடம்பரமில்லாத அலங்காரமில்லாத எழுத்து. ஆனால் எடுத்தால் கீழே வைக்கமுடியாத விறுவிறுப்பு. வாழ்க்கையில் சறுக்கி விழுந்த தங்கம், தேகசுகம் தேடும் ஒரு பத்திரிக்கையாளன், தங்கத்தை “தொழிலில்” தள்ளிய கணவன். மேனி விற்றுப் பிழைக்கும் பெண்களின் அன்றாட வாழ்வின் அவலங்கள் என்று களத்தில் கம்பெடுத்து சிலம்பம் சுழற்றிய எழுத்து.
இந்த மூன்றைப் பற்றியும் சுருக்கமாக ஒரு கட்டுரை வரையவேண்டும் என்பது என் நாக்கைத் தொங்கப்போட்ட அவா. என் பாணியில் சுருக்கமாக என்றால் எவ்வளவு நீளம் எவ்வளவு வார்த்தைகள் என்பது என் நண்பர்கள் அறிந்ததுதான். ஆகவே, கூடிய விரைவில்.... கபர்தார்

1 comments:

வெங்கட் நாகராஜ் said...

உங்கள் பாணியில் மூன்று புத்தகங்களைப் பற்றிய கட்டுரை படிக்க ஆவலுடன் நானும்.....

ஆடிய பிற ஆட்டங்கள்

Related Posts with Thumbnails