Friday, August 19, 2016

ஓடும் பேருந்தில் ஏறாதே!

தொழில்முறை நூறு மீட்டர் ஓட்டக்காரன் போல ஓடி வந்து ஏறினான் அந்தப் பையன். கல்லூரிப் படிக்கவேண்டிய வயசு. ஒரு காதில் பட்டன். தலையை அழிச்சாட்டியமாகக் கலைத்துப் போட்டிருக்கிறான். பாண்ட் பாக்கெட்டிலிருந்து இரு செவிக்கும் ஒயர் ஓடி அவனை ஒலிகொடுத்து உயிர்த்திருக்கச் செய்திருந்தது.
“இம்மா நேரம் நின்னுக்கிட்டிருந்தேன். வண்டியை எடுக்கும் போது பொசுக்குன்னு வந்து ஏற்ரியே” சுள்ளென்று ஆரம்பித்தார் எம்டிசி பஸ் ஓட்டுனர். அத்துமீறி ஏறிய பையனை அறைந்து சாத்துவது போல அடுத்த கியரை அடித்து மாற்றினார். சாயந்திரம்தான் வண்டி மாற்றியிருப்பார் என்பது அவரது அழியாத சந்தனக் கீற்றில் புரிந்து கொள்ள முடிந்தது.
”சாரிண்ணா..” என்று சொல்லிவிட்டு எனக்கு முன்னால் காலியாய் இருந்த சீட்டில் அமர்ந்து பின்னால் திரும்பிப் பார்த்தான்.
“ஒன் அம்மா அப்பால்லாம் திரும்பி வூட்டுக்கு வருவேன்னு நம்பிதானே வெளில அனுப்பறாங்க?” அவருக்கும் இன்னும் அடங்கவில்லை.
“சரிண்ணா. விடு...” என்று சட்டென்று சொன்னான் அந்தப் பையன். கொஞ்சம் எரிச்சலடைந்திருந்தான்.
“என்ன விடு... என்ன விடுங்கறேன்... அடிபட்டு போய்ட்டன்னு வையி... அப்ப விடுன்னு சொல்ல முடியுமா? ம்.. உன்னால சொல்ல முடியுமா? சொல்லு...” அவருக்கு ஏகத்தும் ரேங்கிவிட்டது.
“அதான் சாவலயில்ல.. உன்னாண்ட பேசிக்கிட்டுதானே இருக்கேன்.. ச்சும்மா போவியா...” பையன் பேச்சில் வால்யூம் ஏற்றினான்.
இந்த சந்தர்ப்பத்தில் பஞ்சாயத்து பண்ண யாராவது உள்ளே வர வேண்டுமே என்று காத்திருந்தேன். அறுபது வயசில் குடும்ப பாரம் தாங்கும் பெரியவர் ஒருவர் கியர் பாக்ஸுக்கு தள்ளி கம்பிக்கு ஒரு கையும் கைப்பையுக்கு ஒரு கையுமாக தள்ளாடிக்கொண்டே உள்ளே நுழைந்தார்.
“ஏம்ப்பா... உன் நல்லத்துக்கு தானே சொல்றாரு... இப்படி துடுக்கா பேசிறியே”
இப்போது ட்ரைவருக்கு இன்னும் ஏறிக்கொண்டது.
“இதெல்லாம் திருந்தாதுப்பா... எங்கினியாவது வீலுக்குள்ளாற போயிடும்.. வாயைக் கட்டி வயித்தைக் கட்டி துட்டு போட்டு அப்பன் ஆயி படிக்க வச்சதெல்லாம் வீணாப் போயி.. அவனுங்களும் ரோட்டுக்கு வந்து.. இவனும் மேலப் போயிருவான்... அப்புறம்..”
ட்ரைவர் ஓய்வதாகத் தெரியவில்லை. சாலையின் பள்ளங்களும் பக்கத்து ஓட்டிகளின் அலறும் ஒலிப்பான்களும் அவருடைய உபதேசத்தை ஒழுங்காகக் கேட்க விடவில்லை. ட்ரைவரின் தீராக் கோபம் வண்டியின் விலுக்கென்று இழுவையிலும் நச்சென்று சடனாகக் குத்தும் ப்ரேக்கிலேயும் உணர்ந்துகொள்ள முடிந்தது. அவரிடம் வசவு வாங்கிக்கொண்டிருந்த பையன் பின்னாலிருந்து சம்மன் இல்லாமல் ஆஜரான பெருசை பார்வையாலேயே எரித்து பஸ்பமாக்கிவிடுவான் போலிருந்தது.
”இப்போ இவ்ளோ கோச்சிக்கிறியே.. கை கால் முறிஞ்சு வூட்ல காலை நீட்டி படுத்துக்கிட்டேன்னு வச்சுக்க.... அப்ப என்னாத்த பண்ணுவ? தோ இவரை முறைப்பியா.. இல்ல என்னை வந்து முறைப்பியா? ம்.. என்ன பண்ணுவே?”
இரு பெருசுகள் அணி சேர்ந்து தன்னை தாக்குவதை அறவே வெறுத்தான் அப்பையன். பின்னால் திரும்புவதும் முன்னால் பார்ப்பதுமாக பிராணாவஸ்தையில் நெளிந்தான். இதற்கு ஒரு முடிவு கட்டுவது போல விருட்டென்று எழுந்திருந்தான். பின்னால் நின்றிருந்த பெருசு அலர்ட் ஆகியது. முதுகு தொங்கு பையிலிருந்து முழங்கையளவு உருட்டுக் கட்டை எடுத்து ”உள்ளத்தை அள்ளித் தா” போல நடு மண்டையில் நச்சென்று போட்டுவிடுவானோ என்று மிரண்டது.
”மச்சான்... இங்கே ஒரே அலும்பா இருக்குடா... ரெண்டு பெருசு என்னை வச்சு செய்யறாய்ங்க...இதுக்கு ஒங்கடியே பரவாயில்ல போல்ருக்கு..” என்று சத்தமாக சொல்லிக்கொண்டே பின்னால் வேகமாக நகர்ந்தான்.
ட்ரைவர் அதற்குபின்னர் எதுவும் பேசவில்லை. கடமையில் கண்ணாயிருந்தார். படியில் நிற்பவர்களை “உள்ள வா.. உள்ள வா...” என்று பேச்சால் இழுத்துப் போட்டார். அவரது தோரணையே மாறிப்போனது. நிறுத்தத்துக்கு நிறுத்தம் பலர் ஏறினர், சிலர் இறங்கினர். வண்டியின் மொத்தக் கொள்ளளவு குறையாமல் வண்டி சென்றுகொண்டிருந்தது.
கிண்டி எஸ்டேட். வண்டி நிறுத்தப் போவதற்குள் முன் படிக்கட்டிலிருந்து இறங்க எத்தனித்தான் அந்த பையனும் அவனது நண்பனும்.
“ஏறுப்பா.. இதோ நிறுத்தப்போறேன்...” டிரைவர் ஆரம்பித்தார்.
படியில் பக்கத்தில் நின்றவன் காதில் சொல்லி இருவரும் ஹெஹ்ஹே என்று சிரித்துக்கொண்டார்கள்.
”தம்பி... உன் வயசுல எனக்கொரு மவன் இருந்தான். படு சுட்டி. இதுபோல வண்டி மாறி வண்டி ஏறியிறங்கி ஓடுற வண்டியில சாகசம் காட்டித் திரிஞ்சான். ஜீன்ஸ் பேண்டு கால்ல தடுக்கி ஒரு சனிக்கிழமை வீலுக்குப் போயிட்டான். கூழாப் போன பாடியை தூக்கிட்டுவந்து கொடுத்தாங்க.... இனிமே உன் இஷ்டம்..” என்று கருணாரசத்தோடு சோகம் பிழிய மினி ப்ரசங்கள் செய்தார் ட்ரைவர்.
அந்தப் பையனுக்கு ஏதோ குறுகுறுவென்று இருந்தது. தப்பு செய்கிறோமோ என்று அப்போதுதான் அவனுக்கு உரைத்தது. படிக்கட்டிலிருந்து சடசடவென்று ஏறி மேலே வந்தான். ட்ரைவர் பின்னால் வந்து நெருங்கி நின்று “நெசம்மாவே சாரிண்ணா... அவசரத்துல ஏறிட்டேன்.. இனிமே செய்ய மாட்டேன்.... நானும் எங்க வீட்டுக்கு ஒரே பையந்தான்....”
நடத்துநர் இருமுறை “கிளம்பலாம்” விசில் கொடுத்தும் நகராமல் இருவரும் பேசிக்கொண்டார்கள். வேடிக்கைப் பார்த்துக்கொண்டிருந்த எனக்கு நிம்மதி. மெதுவாக கீழே இறங்கிச் சென்றான். ஓட்டுநர் கண்ணில் தூசி விழுந்துவிட்டது போல. புறங்கையால் கண்களைத் துடைத்துக்கொண்டு வண்டியைக் கிளப்பினார்.
இவருக்கு திட்டவேண்டும் என்றும் அவனுக்கு எகிறவேண்டும் என்றோ மனதில் கிடையாது. அந்த சூழ்நிலைக்கு இருவரும் காரசாரமாகப் பேசிக்கொண்டார்கள். வயதில் பெரிய ட்ரைவரினால் அந்தப் பையனுக்கு இரண்டு நிமிடத்தில் புத்தி புகட்டி திருத்த முடிந்தது. இனிமேல் ஜென்மத்துக்கும் அந்தப் பையன் ஓடிப்போய் பஸ் ஏற மாட்டான். நிச்சயம்.

1 comments:

வெங்கட் நாகராஜ் said...

ஓட்டுனர் பாவம். அவர் சொல்வதில் இருக்கும் நியாயம் இளைஞனுக்கு புரியவில்லை. கடைசியிலாவது புரிந்ததே....

ஆடிய பிற ஆட்டங்கள்

Related Posts with Thumbnails