Friday, August 19, 2016

மன்னை விஜயம்


அம்மாவுடன் மன்னைக்கு ஒரு நாள் சூறாவளி சுற்றுப்பயணம் மேற்கொண்டேன். சென்னை-திண்டிவனம்-பாண்டிச்சேரி-கடலூர்-சிதம்பரம்-சீர்காழி-மாயவரம்-கும்பகோணம்-மன்னார்குடி. வழியில் முத்துச்சட்டை நாதர்... தோணியப்பர்... பிரமன் வழிபட்ட பிரம்மபுரீஸ்வரர் என்று ”த்ரவிட சிசு” சம்பந்தன் ஞானப்பால் குடித்த ஊரான சீர்காழியில் தரிசனமும், தையல்நாயகி... முத்துக்குமார ஸ்வாமி... நோய் தீர்க்கும் வைதீஸ்வர தரிசனமும் ஆனது. அதுபற்றி பின்னர் தனி பதிவு.
அகாலத்தில் கும்மோணம் வெங்கடரமணா ஊழியர்களை நச்சு செய்யவேண்டாம் என்று மாயூரத்திலிருந்து குடந்தைக்குள் நுழையும் சாலையின் நுனியில் இருக்கும் முராரியில் இரவுச் சிற்றுண்டியை முடித்துக்கொண்டோம். "மஷ்ரூம் புலாவ், பட்டர் நான், பாவ் பாஜி, காஷ்மீரி புலாவ்....." என்று வடக்கிந்திய உணவுகள் அனைத்தையும் அஷ்டோத்ர சத நாமாவளியாய் ஒப்பித்துவிட்டு "என்ன வேணும்?" என்று ஆர்டராய்க் கேட்ட சர்வரிடம் தென்னிந்திய வகையறாவான "ரெண்டு ஆனியன் தோசை... . ரெண்டு இட்லி..." கேட்டு ஏக்கமாகப் பார்த்தேன்.
சிரித்துக்கொண்டே உள்ளே சென்றார். இரவு ஒன்பதரை மணிக்கு சொற்ப கூட்டம் இருந்தது. கண் மேய்ந்த மேஜைகளிலெல்லாம் வடக்கின் ஆதிக்கம் ஓங்கியிருந்தது. புலாவ், நான், பிரியாணிகள் பரவலாய் ஆக்கிரமித்திருந்தன. சாப்பிட்டு கை அலம்பி வரும் போது மூச்சு முட்டக் குடித்திருந்த இளம் கிழவர் ஒருவர் தண்ணீர் ஜக்குகளை தள்ளியபடி தள்ளாடி அமர்ந்தார். "எந்திரிங்க.." என்று விரட்டும் தோரணையில் வந்த சந்தனப் பொட்டு சர்வரிடம் "வாழ்ந்தி எழுக்கமாழ்ழேன்...சழ்த்தியமாஆ..." என்று தடுமாற்றத்துடன் மேஜையில் ஓங்கி அறைந்து சத்தியம் செய்தார். ஹோட்டல் குலுங்கியது. இடுப்பில் வேஷ்டி நழுவியது. ஷேம் ஷேம் பப்பி ஷேம் வேடிக்கையெல்லாம் பார்க்க நேரமில்லை.
கும்மோணம் மன்னை சாலையில் ஓட்டுனர் தூங்கிவிடுவார் என்பதற்கு பயப்படதேவயில்லை. ஆயிரமாயிரம் கொக்கி வளைவுகள் கொண்ட தடதடக்கும் தார்ச் சாலை. 'தல' அஜீத்குமாரே அறுபதில்தான் போகமுடியும். ஸ்டியரிங் திருப்பித் திருப்பிக் கையிரண்டும் பின்னிக்கொள்ளும் அபாயமுண்டு. நவக்ரஹ குரு ஸ்தலமான ஆலங்குடிக்கு முன்னர் "ஞானபுரீ" என்று போர்டு ஒளிர்கிறது. நங்கை நல்லூர், பஞ்சவடி போன்ற இடங்களில் விஸ்வரூப ஆஞ்சநேயர் கோயில்களை நிர்மாணித்த ரமணி அண்ணாவுடைய கைங்கர்யத்தில் இக்கோயில் எழும்புகிறது.
வலங்கைமான் பாடைகட்டி மாரியம்மன் கோயில் வாசல் பிரகாரத்தில் சுருட்டிக்கொண்டு சில பக்தர்கள் படுத்திருந்தார்கள். மங்கலான வெளிச்சத்துடன் அரைதூக்கத்துடன் முன்னால் சென்ற பஸ்ஸிலிருந்து மாரியாத்தா பொறுக்கிக்கொள்ள பாதி தூக்கத்திலிருந்து எழுந்து காசு எறிந்தவரின் புசுபுசு ரோமக் கை மட்டும் தெரிந்தது. ஆந்திராவின் கலுவராயியில் பிறந்த கணபதிமுனியின் முன்னோர்கள் வலங்கைமான் வாசிகள். (கணபதி முனி ரமணரின் பக்தர். ரமண கீதை எழுதியவர். இவரது வாழ்க்கை வரலாறு எழுதிவருகிறேன்.) நிர்ஜனமான தெருக்களின் ஊடே சேப்பாயி ஊர்ந்து செல்லும்போது எந்த வீடாக இருக்கும் என்ற கேள்வி காரின் சக்கரம் போல மனசுக்குள் சத்தமில்லாமல் மெதுவாக ஓடியது. மசூதியில் ஏதோ சொற்பொழிவு.
நீடாமங்கலத்தில் ரயில்வே கேட் விழுந்திருந்தது. வேளாங்கண்ணி மார்க்கத்திலிருந்து பஸ்வரிசை நீண்டு.. பஸ்ஸுக்கு பஸ் இடைவெளியில் பொட்டுப் பொட்டாய் சிகரட் தலையின் தீயும் புகையும் எழுந்துகொண்டிருந்தது. ஓரத்தில் வண்டியை நிறுத்தி விளக்கணைத்து கதவு திறக்கக் காத்திருந்தேன். "ஒனக்கு எவ்ளோ குடுத்தான்?" என்ற கேள்வி கார் ஜன்னலைத் திறந்தவுடன் கேட்டது. மூடிய உரக்கடை வாசலில் இருவர் ஆடியபடி கையில் கரன்சியோடு பேசிக்கொண்டிருந்தார்கள். பக்கத்தில் நின்ற போலீஸ் அசுவாரஸ்யமாய் இதைக் கடந்து போயிற்று.
பூவனூர், ராயபுரம் என்று பழகிய பாலங்கள் கடந்து சென்றுகொண்டிருந்தோம். சேப்பாயியின் முகப்பு விளக்கொளியில் இருபுறமும் புளியமரங்கள் சாமரம் வீசிக்கொண்டிருந்தது. "மன்னார்குடி எப்பப்பா வரும்?" வினயாவின் கேள்விக்கு "அதோ... அந்தப் பக்கம் வானத்துல பார்த்துண்டே வா.. பெரியகோயில் கோபுர விளக்கு பிரகாசமாத் தெரியும். அப்புறம் மேலப்பாலம், ஹரித்ராநதி வந்துடும்". கட்சிக்காக ஓட்டு வேட்டை நடத்திய சில தொண்டர்கள் கரை வேஷ்டி துண்டுடன் களப்பணி ஆற்றி களைப்புடன் வீடு திரும்பிக்கொண்டிருந்தார்கள்.
மணி டீக்கடை தாண்டி ஊருக்குள் நுழைந்தேன். ஹரித்ராநதி உறங்கிக்கொண்டிருந்தது. மனசுக்குள் நினைவுகள் விலுக்கென்று விழித்துக்கொண்டது.

0 comments:

ஆடிய பிற ஆட்டங்கள்

Related Posts with Thumbnails