Monday, October 23, 2017

ஜுரக் கனா

ஜுரம் உச்சத்தில் இருந்தால் வாய் பிதற்றும். கண் திறந்தபடி இருக்க திடீர்க் கனாக்கள் வரும். சில்க், அனுராதா, டிஸ்கோ சாந்தி தோன்றி ஜிகுஜிகு அண்ட்ராயரில் மிரட்டும் இன்பக்கனா அல்ல. (எண்பதுகளில் வயசுக்கு வந்தவர்களான இப்போதைய பெருசுகளுக்கு மேற்கண்ட உதாரணம் சமர்ப்பணம்) ஜுரமடித்தால் சலனமே இல்லாமல் ஜடம் போல கிடப்பது சிலருக்கு அபூர்வமாய் வாய்க்கும். புண்ணியம் செய்த பிரகிருதிகள். என்னுடையது இரண்டாவது வகை. கனா. அதைக் கனா என்று சொல்லமுடியாது. ஏதோதோ காட்சிகள் தோன்றித் தோன்றி மறையும்.
சில காட்சியில் யாருமே இல்லாத நெடும் சாலையில் தனியே மொட்டை வெயிலில் நடந்துகொண்டிருப்பேன். சில காட்சியில் மரங்கள் சூழ் அடர்காட்டில் சொட்டச் சொட்ட நனைந்துகொண்டிருப்பேன். சிலவற்றில் கூட்டத்தில் சிக்கி முழி பிதுங்கி திருவிழாவில் காணாமல் போன பையன் போல விழித்துக்கொண்டிருப்பேன். சிலது ரொம்ப கொடூரம்...ஏதோ ஒரு சிகரத்தின் உச்சியில் இருந்து தலைகீழே வேகமாய் விழுந்துகொண்டிருப்பேன். தலை நச்சென்று தரையில் பட்டு சிதறுகாயாக உடையும் இடம் வந்ததும் மேனி மொத்தமும் தூக்கிப் போடும்.
இந்த முறை ஜெகதாம்பாள் சிரார்த்தத்தின் போது என்னுடைய அம்பாள் பாட்டிகள் நினைவில் உருகியிருந்தேனல்லவா... இரு கிழவிகளும் புகையாய்க் கிளம்பி பக்கத்தில் வந்துவிட்டார்கள். அதிலும் அந்தச் சாரதாக் கிழவி என் கன்னத்தில் இடித்துக்கொண்டே “இத்துனூண்டு கண்டந்திப்பிலி... அரிசித்திப்பிலி.. ஓமம்...துளசி ரெண்டு...சுக்கு.. ரெண்டு கும்மோணம் வெத்தலை..செத்த மிளகும் சேர்த்துக்கோ.. நன்னா அரைச்சு கொதிக்க வச்சு.. நீர்க்க ஒரு டம்ளர் குடிக்கக் குடு.. சரியாப்போயிடும்.. ஊர் சுத்தியிருப்பன்.. கண்டதைத் தின்ருப்பான்.. படுவா...” என்றாள்.
எப்போதும் போல ஜெகதா “டாக்டரைப் பார்த்தியோடா.. ஊசியும் ரெண்டு மாத்திரையும் வாங்கிப் போட்டுக்கோ.. கார்த்தாலே ரெண்டு இட்லி சாப்பிட்டா எல்லாம் சரியாப்போயிடும்... தெம்பு வந்துடும்..” என்று தலையைக் கோதி ஆறுதல் கூறினாள். இருவரும் தலைமாட்டில் உட்கார்ந்து தொடர்ந்து வசவசவென்று பேசிக்கொண்டிருந்ததால் நடக்கவே முடியாத நிலையிலும் மாடியிலிருந்து இறங்கி என் அம்மா அலமேலம்மாவைப் பார்த்து விட்டு “என்னடா?”.. “ச்சும்மாம்மா...” “ரொம்ப சுடறதா?” “இல்லேம்மா..” சொல்லிவிட்டு தூத்தம் குடித்துவிட்டு மேலே வந்தேன்.
சென்னையில் வசிப்போருக்கு ஞாயிற்றுக்கிழமை நோவு வந்துவிடக்கூடாது என்று தன்வந்திரி பகவானை வேண்டிக்கொள்கிறேன் அன்று லோக்கல் மருத்துவர்களுக்கு விடுமுறை. பாவம் அவர்களுக்கும் குடும்பம் குட்டி உண்டே! லேசான ஜுரம் என்றால் கூட ”ஆளைக் கண்டதும் அட்மிஷன் போடு” ஸ்லோகனுடன் இயங்கும் கார்ப்பரேட் ஆஸ்பத்திரிகளுக்குதான் போக வேண்டும். எனக்கு அடிப்பதோ காட்டு ஜூரம். தெர்மாமீட்டர் பாதரசம் வெளியில் வந்து ஊற்றும் அளவிற்கு காட்டு காட்டு என்று காட்டுகிறது.
ஊபர் வரச்சொல்லி போகலமா என்று எண்ணும் போது ஹாஸ்பிடல் அட்மிஷன் பயம் வந்தது. பேசாமல் பாராசிடமால் மற்றும் தொண்டைக் கரகரப்பு இருந்ததால் அஸித்ரோமைஸின் வாங்கிப் போட்டுக்கொள்ளலாம் என்று சுயமருத்துவத்துடன் பக்கத்து மருந்துக்கடையில் வாங்கிப் போட்டுக்கொண்டேன். அரை மணிக்கொரு தரம் மிதமான வெந்நீர் முன்னூறு மி.லி லோட்டாவில் தொடர்ந்து குடித்துக்கொண்டிருந்தேன். பாவம் சங்கீதா. கால் பிடித்து தண்ணீர் கொடுத்து ஒன்றரை மணி வரை கண்கொட்டாமல் எனக்கு சிஷ்ருஷை. இப் பாவிக்கு கிடைத்த பாக்கியம்.
இரண்டு மணி. நெற்றியில் வேர்த்துவிட்டது. கால் இரண்டும் ஜில்லிட்டுப்போய் வெலவெலவென்றாகி ஷுகர் லெவல் இறங்கியது தெரிந்தது. தூரத்தில் அது சொர்க்கமா நரகமா என்று தெரியாத ஒரு மேலோக ஊர் மசமசவெனத் தெரிந்தது. இரண்டு தேக்கரண்டி சர்க்கரைப் போட்டு ஹார்லிக்ஸ் கலந்து குடித்து... சாக்கோஸ் ஒரு கப் மென்று தின்று... அரை மணியில் மீண்டு திரும்பவும் பூலோகம் வந்தடைந்தேன். ஃபேஸ்புக் கடமையாற்ற வேண்டியிருக்கிறதே!
ஜூரம் விட்டதற்கு அந்த மாத்திரைகள் மட்டும் காரணமல்ல. என்னுடைய நண்பர்களாகிய உங்களுடைய “Get Well Soon" மெசேஜ்ஜுகளும், பிரார்த்தனைகளும், அக்காக்கள் அண்ணாக்கள் தம்பிக்களின் பிரத்யேக செல் அழைப்பு விஜாரிப்புகளும் மற்றும் உங்களுக்கும் எனக்கும் இடையே இனம் காண முடியாத அன்பின் பிணைப்பும் துரிதகதியில் வேலைக்குத் திரும்பும் திராணியைக் கொடுத்திருக்கிறது.
என்னுடையது அன்பு சூழ் உலகு. ஃபேஸ்புக் எனக்களித்த வரமான ஸ்நேகிதர்களின் பிரியத்தின் சக்தி இது. அனைவருக்கும் பிரத்யேகமாக நன்றி சொல்லமுடியாததற்கு மன்னித்தருளும்படி வேண்டிக்கொண்டு............
என்றும் அன்புடன் ஆர்.வி.எஸ்.

0 comments:

ஆடிய பிற ஆட்டங்கள்

Related Posts with Thumbnails