Sunday, October 22, 2017

ஐம்பது மேல் வந்த ஆசை

மன்னையிலிருந்து திருத்துறைப்பூண்டி செல்லும் சாலையில் எங்களுக்குக் கணிசமாக காணி நிலம் இருந்தது. ஆம். பராசக்தி அருளியது. காவிரிக்கரைகாரர்கள் பங்கு என்று சொல்வோம். ரோட்டை ஒட்டிய, மவுசு அதிகம் வாய்ந்த பங்கு. அவ்வப்போது நடவு அறுப்புக்கு நானும் சென்று வாய்க்கா வரப்பில் இறங்கி காலில் சேறு பூசிக்கொள்வது வழக்கம். நான்கு திக்கிலும் பச்சை தெரிய கண்ணுக்குள் ஜில்ஜில்.

அப்பா கழுத்து நீண்ட ஸுவேகாவை விற்று விட்டு புதுசாக டி.வி.எஸ் 50 (சிகப்புக் கலர்) வாங்கினார். ஒத்தைத் தெரு ஆனந்த விநாயகர் கோயிலில் பூஜை போட்டு அதன் கழுத்தில் போட்ட மாலை நார் நாராய் தொங்கியும் கழன்றாலும்... அதற்கு வலிக்காமலும்... பத்து நாட்கள் ஓட்டியிருந்தார். சம்பவத்தன்று... (என்ன சம்பவம்? மேலே படிக்கவும்...) புதுக்கருக்கு கலையாமல் வண்டி வாசலில் ஜம்மென்று நின்றிருந்தது. ஸில்வர் கலர் பொட்டி இணைத்திருந்ததில் அதன் மெருகு இன்னும் ஒரு படி கூடியிருந்தது. டிவிஎஸ் 50 என்பது அன்றைய காலத்தின் ஹார்லே டேவிட்சன். வெயிலுக்கு பத்து நிமிடம் மர நிழலில் ஒதுங்கினால் கூட பெட்டி திறந்து பனியன் க்ளாத்தால் சீட்டு, ஹாண்டில் பார், பெட்ரோல் டேங்க் என்று தூசி துடைப்பார் அப்பா. புது வண்டி பராமரிப்பிற்காக ஓரத்தில் ஒரு பொட்டுக் கிழிசல் விழுந்த புது பனியனை அப்பணிக்கு அர்ப்பணித்திருந்தார். வண்டியின் மேல் தீராத பக்தி. காதல். அன்பு. பாசம்.
சுந்தர்... இந்தப் பதிவின் படத்தில் இருப்பவர். (’ன்’னில்லாமல் ர் போட்டு எழுதியிருக்கிறேன்). “மாப்ள.. வண்டிய எடுத்துட்டு வா... பங்கு வரைக்கும் போய்ட்டு வருவோம்...” என்று இருசக்ரவாகன மோகத்தில் என்னை முடுக்கிவிட்டான். (ர் அன்னியோன்ய நட்புக்கு ஒத்து வராது என்று ஒரு வரி முடிவதற்குள் ’ன்’க்கு தாவி விட்டேன்).
“ப்பா.. பங்கு வரைக்கும் டிவியெஸ் 50ல போயிட்டு வரேன்...”
“அதெல்லாம் ஒண்ணும் வேணாம்... உன் சைக்கிள்ல போ...” என்று டிவிஎஸ் ஐம்பதை பாதுகாக்கும் பணியில் ஈடுபட்டார் அப்பா.
வாசலில் சுந்தர் கண்ணால் என்னைப் பார்த்துக் கெஞ்ச நான் உள்ளே பார்த்து ”ப்ளீஸ்...ப்ளீஸ்..ப்ளீஸ்...” என்று கெஞ்சியும் ஒத்தைக்காலில் நின்று அழிச்சாட்டியம் செய்தும் அதில் கிளம்பினோம்.
ஸ்டார்ட் செய்து உடனே ஆஃப் செய்து விட்டு ஸ்டாண்ட் போட்டேன்.
“ஏண்டா? என்னாச்சு? சீக்கிரம்.. உங்கப்பா மனசு மாறுறத்துக்குள்ள கெளம்பு.” என்று எக்கச்சக்கமாகப் பதறினான் சுந்தர்.
“மாப்ள.. ஒரு ட்ரே சில்வர்கப் வாங்கி ஃப்ரிஜ்ல அடிக்கிருக்காருடா... ரெண்டு எடுத்துப் போட்டுக்கிட்டு போவோம்...” என்றேன் நாக்கை தொங்கப்போட்டுக்கொண்டு. “ம்..ம்..” என்று அவனும் ஆசையாய் பூம்பூம் மாடு போல தலையாட்டினான்.
ஓசையெழுப்பாமல் பூனை போல உள்ளே சென்று இரண்டு ஆரஞ்சு சில்வர்கப் எடுத்து பொட்டியில் போட்டுக்கொண்டேன். சில்வர்கப் என்பது அந்தக்கால பெப்ஸி, கோக் பானமாக நாங்கள் பாவித்திருந்தோம். அருகிலிருக்கும் சாலியமங்கலத்தின் தயாரிப்பு. கிணற்றுத் தண்ணிருக்கு சர்க்கரைப்போட்டு கலர் தூவித் தந்தால் கூட புது ஃப்ரிஜ்ஜில் வைத்து ஸ்ட்ரா போட்டு உறிஞ்சியிருப்போம். அது கிடக்கு. தொடங்கிய சங்கதிக்கு வருவோம்.”
நான் ஓட்ட அவன் பில்லியனில் இரு கையையும் இயேசு நாதர் சிலுவையில் இருப்பது போல பிரித்து.. காற்றில் கேசம் கலைய... ஒரு காதலியைப் போல.. இருசக்கர ரைடை அனுபவித்துக் கொண்டிருந்தான். பங்கு வந்தவுடன் ஸ்டாண்டை நான் காலால் அழுத்த பின்னால் பிடித்து இழுத்து ஸ்டாண்ட் போட ஒத்தாசை செய்தான் சுந்தர். வரப்பிலறங்கி போர் செட் ரூம் வரை சென்றவுடன் சுந்தருக்கு ஞாபகம் வந்தது “மாப்ள.. சில்வர் கப் இருக்கே.. மறந்துட்டோமே..”. ரோட்டுக்கு ஓடினான். அவன் கையில் சாவியில்லை என்பது வண்டியை நெருங்கியவுடன் அவனுக்குத் தெரிந்தது. திரும்பி “ஆர்வியெஸ்” என்று என்னைக் கூவி அழைப்பதற்கு முன் நானும் அவன் பின்னால் சாவியோடு ஓடி அடைந்திருந்தேன்.
பொட்டியை ஆவலுடன் திறந்தோம். திறந்தவுடன் பொட்டிக்குள் சில்வர்கப் பாட்டில்கள் சுக்குநூறாக உடைந்து பொட்டியை ஈரப்படுத்தியிருந்தது குளிர்பானம். இருவரும் ‘ஞே’ என்று ஒருவரையொருவர் பார்த்துக்கொண்டோம்.
“மாப்ள.. வரும் போது பள்ளம் மேட்டுல சலக் சலக்னு சத்தம் கேட்டுச்சு... என்னடா சலங்கை சத்தம் மாதிரி கேட்குதேன்னு நெனைச்சேன். இதான் மேட்டரா...” என்று சீரியஸாக சிந்தித்தான். இனி என்ன பேசியும் பிரயோஜனமில்லை. போர்செட்டிலிருந்து வாளியில் தண்ணீர் கொண்டு வந்து பொட்டியைக் கழுவினோம். வண்டி ஓட்டிய சுகானுபவம் கொஞ்சம் கொஞ்சமாக மறைந்து போய் வீட்டுக்குப் போனால் அப்பாவுக்கு என்ன பதில் சொல்வது? டின் கட்டி விடுவாரே.. என்றெல்லாம் பயந்து இருவருக்கும் முகம் சுண்டிப்போனது.
“சரிடா வீட்டுக்கு கிளம்புவோம்” என்ற சுந்தர் டி.வி.எஸ். ஐம்பதின் ஹாண்டில் பாரைப் பிடித்திருந்தான். அதில் இன்னொரு வெடி இருக்கிறது என்று அப்போது எனக்குத் தெரியவில்லை.
“டேய்.. உனக்கு ஓட்டத் தெரியாதே.. நீ ஏண்டா கிளப்புறே” என்றேன் பீதியுடன்.
“மாப்ள.. எனக்கு சைக்கிள் ஓட்டத்தெரியும். ஹாண்டில் பாரை அட்ஜஸ்ட் பண்ணத் தெரிஞ்சா போதும்டா.. எதுவேணா ஓட்டலாம்..” என்று விமானமே ஓட்டுவதற்கு தகுதி சைக்கிள் ஓட்டத்தெரிவது என்ற பாணியில் நைச்சியமாக என்னிடம் பேசி இணங்க வைத்தான். பாவிப்பயல். சரியும் இல்லாமல் இல்லையும் இல்லாமல் மத்தியமாக தலையை ஆட்டும் போதே என்னை பின்னால் ஏறச்சொல்லி வண்டியைக் எடுத்தான்.
ஸ்ரீஹரிக்கோட்டாவில் ராக்கெட் லான்ச் செய்வது போல எடுத்தவுடன் டிவியெஸ் 50யின் காதை கண்டபடித் திருகி விரட்டினான். வண்டி அங்குமிங்கும் அலைமோதியபோது “சுந்தர்.. வேகத்தைக் குறைடா...” என்று அலறினேன்.
“மாப்ள.. பயப்படாதடா.. எப்டி ஜிங்குன்னு போவுது பாரு...” என்று இன்னமும் திருகினான். அதன் சப்தமே எனக்கு வினோதமாகப் பட்டது. இன்னும் கொஞ்ச நேரத்தில் அதன் ஜீவனை விட்டுவிடும் போல இருந்தது.
“டேய்.. வேகத்தைக் குறைடா..” என்று டிவியெஸ்ஸின் அலறலுக்கு மேலே நானும் கத்தினேன். ஊஹும். ஓட்டும் மோகத்தில் இருந்தான் சுந்தர். அவன் தரையில் இல்லை. வானத்தில் மிதப்பது போல சுகித்திருந்தான்.
அப்போது அந்த சம்பவம் நடந்தது.
பின்னால் இருந்து திருத்துறைப்பூண்டி சோழன் போ.கழக பஸ் ஒன்று “பாம்...” என்ற இரைச்சலுடன் எங்களைக் கடந்தது. சுந்தருக்கு தூக்கி வாரிப் போட்டிருக்க வேண்டும். முன்னால் வைக்கோல் ஏற்றிய ஒரு இரட்டை மாட்டு வண்டி. ப்ரேக் என்ற ஒன்றை மறந்து சுயநினைவை இழந்திருந்தான் சுந்தர். அந்த ஹார்ன் சப்தத்தில் முன்னால் போய்க்கொண்டிருந்த வண்டியின் இடது சக்கரத்தில் டிவியெஸ்ஸின் சக்கரத்தை உரசி எது திடமான வஸ்து என்று பார்த்துவிட்டான்.
கண்ணிமைக்கும் நேரத்தில் இருவரும் ரோட்டோர கால்வாயில் கிடந்தோம். அவ்வளவு அராஜக ட்ரைவிங்கிற்குப் பிறகும் டிவியெஸ் 50க்கு எங்கள் மேல் கருணை இருந்ததால் எங்களை விட்டு பத்தடி தள்ளிப் போய்க் கவிழ்ந்தது. மாட்டு வண்டிக்காரர் இறங்கி வந்து எங்களை தூக்கிவிட்டு “ஐயிரூட்டு பையனா.. ஏம்பா இப்படி வந்தே.. புதுசாக் கத்துக்கிறியா?’ என்றார். நான் சுந்தரைப் பார்த்தேன். கரகாட்டக்காரன் நாதஸ் செந்தில் போல தலையைக் குனிந்து கொண்டான் சுந்தர். எனக்கு வண்டிக்காரர் கேட்ட கேள்வியை விட அப்பாவுக்கு என்ன பதில் என்று தவித்தேன்.
வண்டிக்கு ஒன்றும் பெரிதாக ஆகவில்லை. திடகாத்திரமாக இருந்தது. பெட்ரோல் ஓவர்ஃப்ளோ ஆகி நாறியது. இரண்டு முறைக்கு நான்கு முறை பெடலை சுற்றியதில் ஸ்டார்ட் ஆனது. நான் தான் ஓட்டினேன். வீட்டுக்கு வந்துவிட்டோம். அப்பா வாசலில் காத்திருந்தார். ஸ்டாண்ட் போட்டோம். இந்த முறை டிவியெஸ் 50 ஸ்டாண்ட் போட சுந்தர் ஒத்தாசை செய்யவில்லை. பில்லியனிலிருந்து இறங்கியவுடன் வேட்டை நாய் துரத்தியது போல ஓடி தனது சைக்கிளை எடுத்துக்கொண்டு “அப்பா வரேன்.. ஆர்வியெஸ் வரேண்டா..” என்று தெருமுனை வரைக்கும் சொல்லிக்கொண்டு திரும்பிப்பார்க்காமல் பறந்துவிட்டான்.
நான் ஸ்டாண்ட் போட்ட போது அப்பாவுக்கு சந்தேகமில்லை. “தண்ணி குடிச்சுட்டு வரேன்.. ஸ்டாண்ட் போடு..” என்று உள்ளே சென்றார். அப்பா திரும்பவும் வாசலுக்கு வரும்போது நானும் அங்கில்லை என்று இங்கு எழுதவேண்டுமா என்ன?
பின் குறிப்பு: பல வருடங்கள் கழித்து இன்று ஆஃபீஸ் வந்திருந்தான் சுந்தர். பழைய நினைவுகளை இருவரும் கொஞ்சநேரம் கிளறிக்கொண்டிருந்தோம். ஃபோட்டோவுக்கு போஸ் கொடுத்துவிட்டு அவன் சென்றுவிட்டான். வீட்டுக்கு வந்து இன்னொரு முறை எண்பதுகளுக்குச் சென்று நான் இங்கே வ்யாசமாக எழுதிவிட்டேன்.

0 comments:

ஆடிய பிற ஆட்டங்கள்

Related Posts with Thumbnails