Sunday, October 22, 2017

பிரார்த்தனை செய்வோம்

ஊர் சோம்பலாக விடிந்திருக்கிறது. ஆறு நாட்கள் பயணப்பட்டுப் பணி செய்து மேனி களைத்தவர்கள் சற்றுக் கூடுதல் ஓய்வாகப் படுக்கையில் சுருண்டிருக்கும் ஞாயிறின் முன்காலைப் பொழுது.
நானும் சின்னவளும் இருசக்கர வாகனத்தில் தலைகோதும் இளங்காற்றில் போய்க்கொண்டிருந்தோம். சவாரி இல்லாத ஆட்டோ ஊர்ந்து செல்லும் பத்து கி.மீ வேகத்தில் எங்கள் ஸ்கூட்டி சாலைக்கு வலிக்காமல் ஊர்ந்துகொண்டிருந்தது. மகளுடன் அப்படிச் செல்வதில் ஒரு அலாதி ஆனந்தம் இருக்கிறது. அங்கொன்றும் இங்கொன்றுமாக சில வாகனங்கள் சென்றுகொண்டிருந்தன. ஆப்பில் இயங்கும் வாடகைக் கார் ஒன்று எங்களை முந்திச் சென்றது. எதிர் திசையில் ஒரு வயோதிக மாநகரப் பேருந்து ஊரை எழுப்பும் பேரொலியுடன் தடதடவென ரோட்டு ரயிலாய்க் கடந்தது. படுத்து எழுந்து வித்தை காட்டாமல் சில டூவீலர்கள் சர்ர்ர்ர்ர்ர்ர்ரென்று மிதமான வேகத்தில் டுர்ர்ர்ர்ர்ர்ர்ரிக்கொண்டிருந்தார்கள்.
சில நொடிகளில் கண்ணுக்கெட்டிய தூரத்தில் ஒரு கூட்டம் சட்டென்று கூடியது. அக்கம் பக்கம் சென்றவர்கள் அவசராவசரமாகக் குழுமிவிட்டார்கள். கொஞ்ச நேரத்துக்கு முன்னால் அங்கே யாருமில்லை. என்னவோ அசம்பாவிதம் போலிருந்தது.
“அப்பா... ஏதோ ஆக்ஸிடெண்ட்...”
சின்னவள் கண்களில் மிரட்சி. சம்பவ இடத்துக்குப் பக்கத்தில் சென்றேன். இருசக்கர வாகனத்தின் பின்னால் உட்கார்ந்திருந்த வயதான அம்மணி மல்லாக்க சரிந்துவிட்டார்கள். யாரும் இடிக்கவில்லை. யானைப் பள்ளம் வெட்டிய ரோடு சதி செய்துவிட்டது. சக்கரம் சுழல வாகனம் தரையில் ஆகாயம் பார்க்கப் படுத்திருந்தது. வண்டி ஓட்டியவர் கைலி தொடைக்கு மேலேற முன்னால் கவிழ்ந்திருந்தார். அவர்களது துரதிர்ஷ்டத்திலும் அதிர்ஷ்டம் என்னவென்றால் சற்று முன்னால் சென்ற மாநகரப் பேருந்தின் சக்கரத்திலிருந்து தப்பித்ததுதான்.
நாங்கள் இறங்கும் முன் இளைஞர் இருவர் வண்டியைப் போட்டுவிட்டு ஓடிப்போய் தூக்கினார்கள். பின் மண்டையை வலது கையால் பொத்திக்கொண்டு எழுந்திருந்தார் அந்த அம்மா. பொத்திய விரல்களுக்கிடையில் நெளிந்த கோடாய் இரத்தம் தாராளமாக வழிந்தது. ஒரு வருடத்திற்கு முன்னால் இதே போல இருசக்கரவாகனத்தில் மல்லாக்க விழுந்து மண்டையில் அடிபட்டு என் சித்தி அகால மரணமடைந்ததும் அரசு ஆஸ்பத்திரி பிணவறையும் மின்னல் வேகத்தில் மூளையில் படம் படமாகப் பளிச்சிட்டது. மூக்கில் பினாயில் நாற்றம் வரை வந்துவிட்டது.
“ச்சோ..ச்சோ.. அப்பா.. ரத்தம்பா.. பாவம்ப்பா...” பதறினாள் சின்னவள்.
“ம்... என்ன செய்யலாம்?” கவலை தோய்ந்த முகத்துடன் கேட்டேன்.
“ஆம்புலன்ஸ் கூப்பிடலாமா?”
நினைத்துக்கொண்டிருக்கும் போதே இன்னொருவர் டயல் செய்தார். அந்த வண்டியில் வந்த இருவருக்கும் வயது ஐம்பதுக்கு மேல் இருக்கும். கைத்தாங்கலாக அந்த அம்மாவைக் கொண்டு போய் ஒரு கடை வாசலில் உட்காரவைத்தார்கள். யாரோ வாட்டர் பாட்டில் திறந்து தண்ணீர் பருகக் கொடுத்தார்கள். இந்த இங்க் ஃபில்லர் ட்ராப் மழைக்கெல்லாம் காரணம் இதுபோல் சிலர் பரோபகாரியாக இருப்பதுதான் என்று நினைத்துக்கொண்டேன்.
நிலைமை கட்டுக்குள் இருப்பது போல இருந்தது.
“சரி.. நாம போலாமா?”
“ம்... போலாம்...”
வழிநெடுக சின்னவள் வாயைத் திறக்கவில்லை. விபத்தும் வழிந்த இரத்தமும் கொடுத்த அதிர்ச்சியின் காரணமாக இருக்கலாம். சென்ற காரியத்தை முடித்துக்கொண்டு அடுத்த பதினைந்து நிமிடங்களில் இருவரும் அதே வழியில் திரும்பினோம். இருபது நிமிடங்களுக்கு முன்னால் அங்கே அப்படி ஒரு சம்பவம் நடந்ததற்கான தடயமே இல்லை.
“அங்க யாரும் இருக்காளாப்பா?”
“இல்லை.. எழுந்து போயிட்டாங்க.. இருந்தாலும் இரத்தம் வந்திருக்கு.. டாக்டர்ட்டே போகணும்..”
“நான் ப்ரே பண்ணினேன் தெரியுமா? அதான் ஒண்ணும் ஆகலை.. ”
சின்னவள் சொன்னதும் “சின்னத்துக்கு தெரிஞ்சது.. நமக்கு தெரியலையே..” என்ற குற்ற உணர்ச்சி மேலோங்கியது ...
“என்னன்னு ப்ரே பண்ணினே?”
“சாமியே.. காப்பாத்து..அவங்களுக்கு ஒண்ணும் ஆகக்கூடாது... அவ்ளோதான்...”
“சூப்பர்டி குட்டி...”
“ஸ்கூலுக்குப் போயிட்டு பஸ்ல வரும்போதெல்லாம் அட்லீஸ்ட் ஒரு நாளைக்கு ஒண்ணு ரெண்டு ஆம்புலன்ஸ் பாம்..பாம்..னு கத்திண்டே போகும்.. அப்பெல்லாம் கூட நான் வேண்டிப்பேன்..”
நெகிழ்ந்துபோனேன். ஆச்சரியமாக இருந்தது. வீட்டில் படு சுட்டி. விஷமத்தனம் அதிகம். ஒன்றும் பேசாமல் ஒரு நூறு மீட்டர் வந்திருப்போம். திரும்பவும் சின்னவளே பேசினாள்.
“ப்பா.. ஆத்துல நான் விஷமம் பண்றதைத்தானே நீ நினைக்கிறே .. இன்னமும் நீ என்னைப் புரிஞ்சுக்கணும்ப்பா...”
ஏதோ பெரிய மனுஷி போல பேசினாள். உள்ளூர சிரிப்பாக வந்தது. ஆனால் நான் பதில் ஏதும் சொல்லவில்லை. இப்போது வரை திரும்பத்திரும்ப அவள் ப்ரே பண்ணினேன் என்றதும் என்னைப் புரிஞ்சுக்கணும்ப்பான்னு சொன்னதும் திரும்பத் திரும்ப ஸ்க்ராட்ச் ஆன சிடிபோல காதுகளில் கேட்டுக்கொண்டிருக்கிறது.
இன்று கற்றுக்கொண்டது, பிறருக்காக பிரார்த்தனை செய்வோம். எப்போதும். எங்கேயும்.

0 comments:

ஆடிய பிற ஆட்டங்கள்

Related Posts with Thumbnails