Sunday, October 22, 2017

பாடை கட்டி மாரியம்மன்


”அப்பா... டெட் பாடி போகுது.. மெதுவாப் போ... ஹார்ன் அடிக்காதே.. ”
முன்னால் பூ அலங்காரப் பாடையில்... நான்கு பேர் தூக்க.... கொள்ளி போட முன்னால் ஒருவருடன் சென்றுகொண்டிருந்தார்கள். சுற்றிலும் திருவிழாக் கடைகள். ஜேஜே என்று பக்தர் கூட்டம்.
“கோயில் திறந்திருக்கும்போதே டெட் பாடி அதுவழியாப் போகுமா?”
”ச்சே..ச்சே.. இது டெட் பாடி இல்லே... இதுக்கு பாடைக் காவடின்னு பேரு... வலங்கைமான் மாரியம்மனோட பேரே பாடைக்கட்டி மாரியம்மன். சீதளாதேவி மஹா மாரியம்மன்..”
“ஏன் இப்படி பண்றாங்க?”
“தீராத வியாதி குணமாயிடிச்சுன்னா... உயிர்ப்பிச்சை கொடுத்த மாரியம்மனுக்கு... பாடையில... பிரேதம் மாதிரியே தலையைக் கட்டி.. நெத்தியில காசுப் பொட்டு வச்சு... கால் கட்டைவிரல்... கைக் கட்டைவிரல்.. ரெண்டுத்தையும் ஒண்ணாக் கட்டி.... கொள்ளி போடறவர் முன்னாடி போக... மாரியம்மன் சன்னிதிக்கு எதிரே இறக்கிடுவாங்க.... பூசாரி வந்து தண்ணி தெளிச்சு.. துண்ணூறு பூசி விட்டதும்...பாடையில இருக்கிறவர் எழுந்துடுவாரு... இது ஒருவித நேர்த்திக்கடன்... ”
“funny ஆ இருக்குப்பா..”
“ஊஹும்... ஜனங்களோட நம்பிக்கை... நெறையா பேருக்கு உடம்பு சரியாயிடுத்து.... வருஷா வருஷம் பங்குனி மாசம் இரண்டாவது ஞாயிற்றுக்கிழமை இந்த விழா... ரோகிணியோட சோனி அக்காவுக்கு இப்படி சரியாயிடுத்துன்னு பாட்டி சொல்லுவா... அம்மன் ரொம்ப சக்தி வாய்ந்த அம்மன்.. பல பேருக்கு குலதெய்வம்..”
பாடையின் பின்னாடியே சென்றுகொண்டிருந்த போது இருபுறமும் திருவிழாக் கடைகளில் கூட்டம் அம்மியது. வலங்கைமானிலிருந்து மாடாகுடி பாலம் வரையில் சாலையின் இருமருங்கும் கடைகள். வாண்டுகளின் கையில் பலூன். நீர்மோர்ப் பந்தல். வளவி கடை. அருக்கஞ்சட்டி, அரிவாள்மனை, இரும்பு அடுப்பு தொங்கும் Hardware shop. பஞ்சுமிட்டாய். பானி பூரி. டாடா ஏஸின் பின் கதவு திறந்து பிரியாணி விநியோகம்.
“இன்னொரு அடிஷனல் இன்ஃபர்மேஷன் சொல்லட்டா?”
சேப்பாயிக்குள் இருந்த அனைவரும் மௌனமாக என்னையே பார்த்தனர். கண்களால் கேள்வி கேட்டனர்.
“காவ்ய கண்ட கணபதி முனியின் முன்னோர்களின் ஊர் வலங்கைமான் தான். இங்கிருந்து புலம் பெயர்ந்து ஆந்திரா சென்றவர்கள்.”
வெண் தாடியில் ரோடு க்ராஸ் செய்தவர் கணபதி முனி போலவே தெரிந்தார்.

0 comments:

ஆடிய பிற ஆட்டங்கள்

Related Posts with Thumbnails