Monday, October 23, 2017

தெப்போற்சவம்


இன்று கோபாலனுக்கு ஹரித்ராநதியில் தெப்பம். பிரத்யேகமாக மன்னையை ஆளும் மன்னவன், ஸ்ரீகோபாலன், ஆனி மாசத்தில் பத்து நாள் அவன் கோபிள கோபிரளய முனிவர்களுக்கு தனது 32 சேவைகளையும் நிகழ்த்திக்க்காட்டிய ஹரித்ராநதி கரைக்கு ஹாயாக வந்துவிடுவான். அங்கு கோபியர்களுடன் ஜலக்ரீடை கூட நிகழ்த்திக் காட்டினானாம்.
தெற்குத் தெரு மண்டபத்தில் அலங்காரம் ஆகி நான்கு கரையும் வலம் வந்து திருமஞ்சன வீதி வழியாக கோயிலில் பள்ளிக்கொள்ள செல்வான் அந்த அழகன். பாட்டியும் பாட்டியின் ஸ்நேகித பாட்டிகளும் வாசல் படியில் ஊர்வம்பு பேசிக்கொண்டு தவம் கிடப்பார்கள். வடக்குத்தெரு மூலையில் மணி டீக்கடை தாண்டும் போது பவானி சித்தி நடுரோட்டில் தண்ணீர் தெளித்து கோலமிடுவாள். தினமும் கோபாலனுக்கு தேங்காய் பூ பழத்தோடு வீட்டு வாசலில் ஒரு அர்ச்சனை.
தீவட்டி வெளிச்சத்தில் சிரிக்கும் கோபாலனைப் பார்க்கும் போது நாம் அவனுடன் ஸ்வர்க்கத்தில் இருப்பது போல இருக்கும். காற்றடித்து தீவட்டியில் பொறி பறக்கும் போது பாட்டி தன்னிலை மறந்து வலம் வருவாள். “கோபாலன் இருக்கும்போது இத்துணூண்டு தீவட்டிப் பொறி என்னடா செய்யும்?”. பின்னால் வேத பாராயணமும் முன்னால் கோஷ்டியும் வருவார்கள். சில நாட்களில் பெட்ரோமாக்ஸ் விளக்கும் வரும். பாதி நாள் அது முழுவதும் பத்திக்கொண்டு சரியாக எரியாமல் ஓரத்தில் பழுது பார்த்துக்கொண்டிருப்பார்கள். “தீவட்டி வெளிச்சத்துலதாண்டா கோபாலான் கொள்ளை அழகு” என்று சாரதா பாட்டி சமாதானப்படுத்திக்கொண்டு சிலாகிப்பாள்.
ஆனி மாச பௌர்ணமி தெப்பம். முதல் நாளிலிருந்து தகர டின்களும் மூங்கிலும் கொண்டு வந்து தென்கிழக்கில் போட்டு தெப்பம் கட்டுவார்கள். வணிகர் சங்க மண்டகப்படி. தெப்பத்தன்று முன்மாலைப் பொழுது மூன்று மணியிலிருந்து வளவிக் கடையும், சொப்பு பாத்திரங்களும், மண் பொம்மைகள், பொரிகடலை, ஜவ்வு மிட்டாய் என்று வீதியில் விரித்திருப்பார்கள். ஏதாவது சிறப்புக் கச்சேரிகள் ஏற்பாடு செய்யப்பட்டிருக்கும். காளையர்கள் கன்னியர்களை எதிர்பார்த்து நான்கு கரையையும் சுற்றிச் சுற்றி வருவர். ஏதோ ஒரு தெப்போற்சவத்தின் போது ஈசான்ய சிவன் கோவில் வாசலில் இருகுழுக்கள் இடையே அடிதடி நடந்தது. புஜபலம் மிக்கவர்கள் ஜெயித்தார்கள். தோற்றவர்கள் வேஷ்டி அவிழ அரை அம்மணமாய் ஓடினார்கள். “அடிச்சான் பாருடா..” என்று விடிகாலை வரை பேசிக்கொண்டார்கள்.
சீரியல் விளக்குகள் மாட்டி ஜிகுஜிகுவென்றிருக்கும் தெப்பம். ஜெனரேட்டர் ஒன்றை உபரியாகச் சின்னத் தெப்பத்தில் இணைப்பாக கட்டி இழுத்துவருவார்கள். ருக்மிணி சத்யபாமா சமேத ஸ்ரீவித்யா ராஜகோபாலன் கிருஷ்ணர் அலங்காரத்தில் சேவை சாதிப்பார். கொள்ளைச் சிரிப்போடு. மொத்தம் மூன்று சுற்று. ஒரு தடவை நடுவளாங்கோயிலுக்கு சென்று வருவர். தெப்பத்தின் உள்ளேயே கச்சேரி நடக்கும். மங்கம்மா படித்துறைக்கு முன்னால் பிள்ளையார் கோயில் படித்துறையில் நானும் பாட்டியும் பவானி சித்தியும் ஏறுவோம். தென்கிழக்கு மூலையில் இறங்கிக்கொள்வோம். முன்னதாக தெப்பத்தில் பெருமாள் ஏறும்போதே ஒரு முறை தரிசித்துவிட்டு வீட்டிற்கு வருவோம். சுற்றுப்புற கிராமத்திலிருந்து தெரிந்தவர்கள் நண்பர்கள் வீடுகளுக்கு வருவார்கள். “தொப்பம் பார்க்க வந்தோம்...” என்று ஆதிச்சபுரம் மரியதாஸ் ஒரு முறை பெரிய வாழைத்தாரோடு வந்திறங்கினார். மறுநாள் சீப்புசீப்பாகத் தெருமுழுக்க விநியோகித்தாள் பாட்டி.
தெப்பத்தன்று மட்டும் இராத்திரி பத்து மணி வரைக்கும் ஆத்தில் சுடச்சுட ஃபில்டர் காஃபி கிடைக்கும். விருந்தாளிகள் வந்தவண்ணம் இருப்பதால் ஒன்றுக்கு மேல் ஒன்றாக காஃபி இறங்கும். ஐந்தாறு முறை டிகாக்ஷன் இறக்கி இறக்கி.....ஆஹா.. நண்பர்கள் கோஷ்டி வீதியிலேயே திரிவார்கள். நிறைய வீடுகள் விடிய விடிய திறந்திருக்கும்.
இன்றைய தெப்பத்தை Vijay Ram நேரலையாக ஃபேஸ்புக்கில் காட்டினார். தொழில்நுட்ப வளர்ச்சியால் வர்ச்சுவலாக தெப்பத்தில் மிதந்தேன். மிக்க நன்றி. இத்துடன் இணைத்திருக்கும் ராஜகோபாலன் படம் இன்றைய தெப்பத்தில் அந்த அழகனின் அலங்காரம். பட உதவி மற்று அலங்காரம் Sriramman Sriraman. நண்பன் Rajagopalan Rengarajanஐ காணலை! கோஷ்டியில் இருப்பான் என்று நம்புவோமாக!! 

0 comments:

ஆடிய பிற ஆட்டங்கள்

Related Posts with Thumbnails