Sunday, October 22, 2017

ஆசையை அறுமின்

ரொம்ப நாள் கழித்து டிவியில் One Day Match பார்த்தேன். டாட்டா ஸ்கையில் ஸ்டார் சேனல்களுக்கு சப்ஸ்க்ரைப் பண்ணாததால் சாதா சேனலான தூர்தர்ஷனில் பார்த்தேன். ஹிந்தி பாஷை கமெண்ட்டரியாகச் சுலபத்தில் வரவேற்பறைக்குள் நுழைந்து அட்டானிக்கால் போட்டு அமர்ந்தது. மொஹீந்தர் அமர்நாத் வாயைத் திறக்காமல் மந்திரம் போலப் பேசினார். விக்கெட்டுக்கோ ஆறுக்கோ ரீப்ளே போடும் போது கட்டாயம் பார்க்க விடாமல் விளம்பரம் போட்டு சாகடித்தார்கள்.
கிரிக்கெட்டை விட்டு வெகுதூரம் வந்துவிட்டேன் என்பதற்கு சாட்சியாக டி வில்லியர்ஸ் தவிர்த்து தெ.ஆ அணியில் யாரையும் அடையாளம் காணத் தெரியவில்லை. டுமினி கேள்விப்பட்டிருக்கிறேன். ஆம்லாவைத் தாடியால் தெரியும். குச்சிமிட்டாயிலிருந்து நாப்கின் வரை கோலி அனைத்து விளம்பரங்களிலும் அதிகம் வருவதாலும் லொட்டைக் கையர்கள் ஷிகரையும் யுவியையும் ஏற்கனவே சில தடாலடி மாட்சுகளில் ரசித்ததாலும் இந்திய அணி வீரர்களைக் கண்டறிவதில் கஷ்டமில்லை. தோனி தெரியாது என்று நான் எசக்கேடாகச் சொன்னால் உடனே என்னை நாடுகடத்தினால்தான் இப்பாரதம் துலங்கும் என்று அரசாங்கத்திடம் முறையிட்டுக் கொடி பிடிப்பீர்கள்.
குறைவான ஓட்டங்கள் எடுத்த போட்டி என்பதால் நங்கூரம் பாய்ச்சி ஆடினார் கோலி. என்னுடைய நேரடிக் கருத்துகள் எனது பக்கத்தில் வரிசையாக இட்டிருக்கிறேன். பென்ச்சில் உட்கார்ந்தால் இந்தியர்கள் அவுட் ஆகிறார்கள் ஊஞ்சல் ஓரத்தில் ஒற்றை பிருஷ்டத்தை சொருகி உட்கார்ந்தால் ஆறும் நான்குமாக பறக்கிறது என்கிற பாழாய்ப் போற செண்டிமெண்டைக் காட்டி அண்ட்ராயர் வயசில் என்னை சிறைப்பிடித்திருக்கிறார்கள். “நாம இங்க இப்படி பண்றது எப்படிடா சின்னசாமி ஸ்டேடியத்துல விளையாடறவாளுக்கு உபயோகமா இருக்கும்” என்ற என் கேள்வியை மூர்க்கத்தனமாக உதாசீனப்படுத்திவிட்டு நான்கு பேர் சேர்ந்து தோளைப் பிடித்து அழுத்தி எழுந்திருக்கவிடாமல் பிடித்துக்கொண்டு தேசத்தொண்டு ஆற்றியுள்ளார்கள்.
குறை ஓட்ட போட்டி என்பதால் ஐந்து பேர் ஏறிய ஆம்னி பஸ் திருச்சிக்கு டிக்கெட் ஏறாதா என்ற நப்பாசையில் கிண்டியில் உருட்டுவது போல பாரத அணியினர் கட்டைப் போட்டு ஆடினார்கள். ரோஹித் அவசரத்தில் தன்வசமிழந்து விக்கெட்டை தூக்கிப் போட தவானும் கோலியும் நிமிர்த்தினார்கள். கடைசியில் யுவ்ராஜ் அனாயாசமான ஆறு ஒன்றை வானம் கிளப்பி இந்தியாவை செமி ஃபைனலுக்குள் தள்ளினார்.
பால்யத்தில் அரை நாள் ஸ்கூலுக்கு லீவு போட்டு கண்கொட்டாமல் பார்த்த கிரிக்கெட் இப்போது நேரமிருந்தால் பார்க்கலாம் என்ற இரண்டாம் தர நிலைக்கு வந்திருக்கிறது. அன்னிக்கி நெஞ்சத்தில் ஆசையாய்ப் பட்டது இன்னிக்கி இல்லை. இன்னிக்கி ஆசைப்படுவது நாளைக்கு இருக்குமா என்பதும் கேள்விக்குரிய விஷயம்.
ஆசையை அறுமின்! இந்தியா இறுதியில் வெல்லும் என்கிற ஆசையை அறுமின்!! 

0 comments:

ஆடிய பிற ஆட்டங்கள்

Related Posts with Thumbnails