Sunday, October 22, 2017

சமூக வலைத்தள அடிமைகளுக்கு.....

வீட்டிற்கு அடங்காமல் இராப்பகல் அகோராத்திரியாக கண்கள் ஜிவ்வென்று பழுக்கப் பழுக்க; சொல்பேச்சு கேளாமல் அழிச்சாட்டியமாக ஃபேஸ்புக், ட்வீட்டர், வாட்ஸாப் என்று பேய்த்தனமாக மேய்வோர் கட்டாயம் தயாராய் வைத்திருக்க வேண்டிய 11 பொருட்களின் பட்டியல் ஒன்று என்னிடம் உள்ளது. அதை இங்கே நண்பர்களிடம் பகிர்வதில் அகமகிழ்கிறேன். அவையாவன.
1. மூன்று முழு செங்கல் (சுட்டது)
2. ஒரு இலுப்பச்சட்டி (அலம்பியது)
3. ரெண்டு பச்சை மிளகாய் (பழுக்காதது)
4. அரைக்கிலோ ரவை (புழு இல்லாதது)
5. கொஞ்சம் கடுகு (குப்பையில்லாமல்)
6. தேவையான அளவு உப்பு (ஐயோடைஸ்டு உத்தமம்)
7. வாட்டர் பாட்டில் (கென்லேதான் என்று அவசியமில்லை)
8. கிண்டில் (ரொம்ப அவசியம். இராப்பொழுது கடக்க)
9. தீப்பெட்டி (ஸ்மோக்கர்கள் பாக்கெட்டில் எப்போதுமிருப்பது)
10. துண்டு (கீழே விரிக்கும்படி கொஞ்சம் பெரிதாக. பழைய அழுக்கு வேஷ்டி இருந்தாலும் பரவாயில்லை)
11. ந. எண்ணெய் (செக்கெண்ணய்தான் வேண்டுமென்பதில்லை)

ஒரு அர்த்தராத்திரி ரோதனை தாங்காமல் உங்களை வீட்டை விட்டு அடித்து விரட்டிவிட்டால் தவிக்க வேண்டியதில்லை. ரோடில் குச்சிப் பொருக்கி, மூன்று செங்கலை ஆடி மாதம் அம்மன் கோயில் வாசலில் பொங்கல் வைப்பது போல அடுப்பாக்கி ஒரு ரவா உப்புமாவாவது கிளறி சாப்பிட்டுவிட்டு எங்கேயாவது ஒரு தெரு விளக்கு ஓரத்தில் உட்கார்ந்து கிண்டில் படிக்கலாம்.
”ஜட்ஜ் முத்துஸ்வாமி ஐயர் ஸ்ட்ரீட் லைட்லதான் உட்கார்ந்து படிச்சாராம்” என்று என் பாட்டி அடிக்கடி சொல்வாள். நாமும் தற்காலிக ஜ.மு.ஐ ஆகலாம். ”பொழச்சுக் கிடந்தா பார்க்கலாம்” என்கிற என் பாட்டியின் ஃபேமஸ் வசனத்தின் படி மறுநாள் காலையில் எதுவும் நடக்கலாம். ஏன் அடித்து விரட்டியதற்கு மன்னிப்புக் கேட்டு உங்களை மறுபடியும் வீட்டிற்குள் சேர்த்துக்கொள்ளலாம். எவர் கண்டார்?
இது போன்ற ஆக்கப்பூர்வமான ஆலோசனைகள் உங்களிடம் ஏதேனும் இருந்தால் இங்கே பகிரும்படி கும்பிட்டுக் கேட்டுக்கொள்கிறேன். ரா முழிக்கும் ஆந்தையர்களுக்குப் பிரயோஜனப்படும்!
சர்வ ஜன சுகினோ பவந்து!! 

0 comments:

ஆடிய பிற ஆட்டங்கள்

Related Posts with Thumbnails