Monday, October 23, 2017

நாராயணன் என்னும் நாமம்

இரவு ஒன்பதரைக்கு மேல் ஆகிவிட்டது. சாம்பு மாமாவும் கோபுவும் வெறிச்சோடிக்கிடந்த தெருவின் அமைதியைக் கிழித்துத் திண்ணையில் அமர்ந்து பேசிக்கொண்டிருந்தார்கள். கோபுவின் கையில் காது மடிக்கப்பட்ட மாத்ஸ் புத்தகம் இருந்தது. நாளைக்கு க்ளாஸ் டெஸ்டாம். சிறிது நேரத்தில் தெருமுனையில் நுழைந்த கடலை வண்டிக்காரன் இரும்பு சட்டியில் தோசைக் கரண்டியால் வாசிக்கும் "டட்டிட்டாங்.. டடாங்.." அவர்களது பேச்சுக்கு பின்னணி இசையாக அமைந்தது.

"உங்க க்ளாஸ்ல எவ்ளோ சரவணன் இருக்காங்க?"
"ரெண்டு பேர் மாமா..."
"ரெண்டு பேரும் உனக்கு முன்னாடி போய்க்கிட்டிருக்காங்க... நீ பின்னால நடக்கிற... சரவணா... அப்டீன்னு கூப்பிடறே... அப்ப யார் திரும்பி பார்ப்பா?"
"ரெண்டு பேரும்.."
"ஏன் ரெண்டு பேரும் பார்க்கணும்?"
"ரெண்டு பேரும் சரவணன்.."
"நான் சொன்ன கதையும் அந்த மாதிரிதான் கோபு.."
கோபு சமாதானம் ஆகாமல் தொடர்ந்து கேள்வி கேட்டுக்கொண்டிருந்தான்.
"கோபு லேட்டாச்சே! ஆத்துக்கு கிளம்பலை.. " என்று உள்காரியமெல்லாம் முடித்துக்கொண்டு வந்த ஜானகி மாமி கேட்டாள்.
"மாமா ஒரு கதை சொன்னார். எனக்கு சாமாதானம் ஆகலை.. அதான்..."
"என்ன கதை?" கேட்டுக்கொண்டே ஜானு மாமி திண்ணையின் அடுத்த தூணில் வந்து அக்கடான்னு சாய்ந்துகொண்டாள். வாசல் மாடத்தில் ஏற்றி வைத்திருந்த அகல் தீபம் காற்றில் ஆடியது.
"ஜானு... சொல்றேன் கேளு..." கதைக்கு இரண்டாவது நேயர் சேர்ந்து கொண்ட சந்தோஷத்தில் சாம்பு மாமா சுறுசுறுப்பானார்.
"அவன் ஒரு பாபி. கல்யாணம் பண்ணிண்ட பொண்டாட்டியை விட்டுட்டு பல துஷ்ட ஸ்த்ரீகள்கூட அவனுக்கு சகவாசம். பத்து பிள்ளை பெற்றுப்போட்டுவிட்டு இன்னொருத்தனோட பொண்டாட்டியை அபகரிச்சுண்டு போனவன்...”
“ணா.. ரொம்ப விகாரமான கதையா இருக்கே.. இதுவா கொழந்தைக்கு சொன்னேள்..”
“இல்லே. இவ்ளோ விஸ்தாரமா சொல்லலே... கேளு.. இப்படி ஆயுசு பூரா அற்ப சுகங்கள்ல கழிச்சவன் ஒருத்தனுக்கு பத்து புள்ளைக்கு அப்புறமும் ஒரு ஆண் குழந்தை பொறந்தது.... சும்பன், நிசும்பன்னு, சண்டன், கிண்டன்னு எல்லாக் குழந்தைக்கும் பேர் வச்சவன் கடைசியா பொறந்த ஆண் பிள்ளைக்கு அவனை அறியாமலேயே நாராயணன்னு பெருமாளோட பேரை வச்சான். அந்த கொழந்தை மேலே இவனுக்கு கொள்ளைப் பிரியம். எப்பப் பார்த்தாலும் நாராயணா.. நாராயணான்னு அதை மடில வச்சுக் கொஞ்சிண்டிருப்பான்... சாதம் ஊட்டுவான்... முட்டிப்போட்டு குனிஞ்சு அதை முதுகுல ஏத்திண்டு ”யானேயானே.. யானேயானே” விளையாடுவான். இப்படி நாட்கள் சௌகரியமா ஓடறது..”
“சமர்த்தாயிட்டானோ?”
”அந்தக் கொழந்தை கூட விளையாடிண்டு இருந்தப்ப.. ஒரு நாள் மூனு நாலு எமதூதர்கள்... குண்டு குண்டா.. கறுப்பு வஸ்திரத்தோட இவனை தூக்கிண்டு போக வந்துட்டா... இவன் பயந்துபோயி.. என்ன செய்யறதுன்னு தெரியாம... நாராயணா...ன்னு வாசல்ல விளையாடிண்டு இருந்த பையனை கூப்பிட்டு அலறினான். ஆனா கூப்ட மாத்திரத்தில விஷ்ணு தூதர்கள் நாலஞ்சு பேர் வைகுண்டத்துலேர்ந்து நேரா வந்து இறங்கிட்டா...எமதூததர்கள் பயந்து போய் ஓரமா ஒடுங்கி.. நீங்கல்லாம் ஏன் வந்தீங்க.. இந்தப் பாபியை நாங்க அழைச்சுண்டு போகணும். தடுக்காதீங்க..ன்னாங்களாம்..”
“அதானே... வாழ்நாள் முழுக்க கெட்ட காரியம் பண்ணிட்டு கடேசில நாராயணா சொன்னா போறுமா?”
“நீ கேட்கிறது சரிதாம்மா... ஆனா இப்ப இவன் நாராயணான்னு கதறினானே.. இதுக்கப்புறம் இவன் பாபம் செய்யறத்துக்கு அவகாசமில்லே... இவந்தான் சாகப்போறானே! தப்பு பண்ணி.. நாராயணா சொல்லி.. பாவக்கணக்கைத் தீர்த்துட்டு.. திரும்பவும் பாபம் பண்றத்துக்கு இவன் உயிரோட இருக்கமாட்டான். சாகற நேரத்துல பகவான் பேர் நியாபகம் வர்றத்துக்கே இவன் புண்ணியம் பண்ணியிருக்கணும்..”
“சாகற டயத்துல சங்கராவோ நாராயணாவோ சொன்னாப் போறும். என்ன வேணா பண்ணலாமா?”
“ச்சே...ச்சே.. இதுக்கு அர்த்தம் அது கிடையாது.... சாகற நேரத்துல நாராயணா சொல்றத்துக்கு வராது... நெஞ்சு கிடந்து பல ஆசாபாசங்களுக்கு அடிச்சுக்குமே தவிர தெய்வத்தோட நினைப்பே வராதாம். அது வந்துட்டதாலே விஷ்ணு தூதர்கள் வந்து காப்பாத்திட்டாளாம்.. நாராயணீயம் எழுதின பட்டத்திரி நாராயணனோட நாமத்தைச் சொல்லும்போது சகஸ்ரகோடி ஜென்மமா பண்ணின பாபமெல்லாம் கரைஞ்சுடும்ங்கிறார்...”
“கோபு கேட்டதையே நானும் கேட்கிறேன். நாராயணான்னு சொன்னதும் ஓடி வர்றானே பெருமாள்.. இவனோ பாபி.. இவன் கூப்பிட்ட உடனே ஏன் ஓடி வரணும்?”
தனக்கு சப்போர்ட்டாக மாமி பேசுவதைக் கேட்டதும் திண்ணை தூணுக்கு முட்டுக் கொடுத்து உட்கார்ந்திருந்த கோபுவிற்கு உற்சாகம் பிறந்தது. நிமிர்ந்து கொண்டான்.
“கோபுவும.. நீயும் லாஜிக் திலகங்கள். நல்ல கேள்வி.. பகவானோட நாமாவை பழிக்கற மாதிரி சொன்னாலும் சரி... பஜனையா சொன்னாலும் சரி... ரெண்டுமே அவனுக்கு ஒண்ணுதானாம்.. . எப்டீன்னா... இப்போ கொல்லேல வைக்கப்போர் பத்திண்டு திகுதிகுன்னு கொழுந்து விட்டு எரியறது.. நான் தெரியாம அதுகிட்டக்கே போயி கையை நீட்டிட்டேன்... சுட்டுடுத்து.. ஸப்பா.. நெருப்பு என்னை சுட்டுடுத்துன்னு அதும் பேர்ல யாராவது கம்ப்ளெயிண்ட் பண்ணுவோமா? மாட்டோம். ஏன்னா சுடறது அக்னியோட ஸ்வபாவமான குணம். அதுமாதிரி நாராயணான்னு கூப்பிட்டுட்டோம்னா காப்பாத்தறது அவனோட ஸ்வபாவம். நாம கூப்பிட்ட கணத்துலேர்ந்து அவன் ஓடி வந்து காப்பாத்துவானாம்.”
கோபுவும் மாமியும் சிரித்துக்கொண்டார்கள்.
“ம்..இப்போ கொஞ்சம் தெளிவா புரியறது.. அப்ப அந்த பாபி சாகவேயில்லையா?”
”அடுத்த பத்து நாள் கழிச்சு.. அதே விஷ்ணு தூதாள் கீழே வந்தா.. இந்த சரீரத்தை கங்கையில விட்டுட்டு.. நீ மட்டும் இந்த திவ்ய விமானத்துல ஏறி ஸ்வர்க்கத்துக்கு வந்துடுன்னு...அவனை அழைத்துக்கொண்டு போனார்கள்... ”
“அவன்..பாபின்னு சொல்றேளே தவிர.. அவன் யாருன்னு சொல்லலையே...”
“அவன் தான் அஜாமிளன். இது ஸ்ரீமத் பாகவத கதை....”
“மாமி.. நீங்க வந்து புரியவச்சேள்.. ரொம்ப தேங்க்ஸ்” என்று வீட்டுக்கு கிளம்பினான் கோபு.
திண்ணையிலிருந்து திருப்தியாக எழுந்து... சோம்பல் முறித்து... ”ஹே நாராயணா..” என்று கையிரண்டையும் வானத்தைப் பார்த்துத் தூக்கிச் சத்தமாகக் கூப்பிட்டார். நாலு வீடு தாண்டி வீட்டுக்கு நடந்து சென்றுகொண்டிருந்த கோபு நாராயணன் நாமம் கேட்டுத் திரும்பியவுடன் “குட் நைட்” என்று சிரித்தார் சாம்பு மாமா!

0 comments:

ஆடிய பிற ஆட்டங்கள்

Related Posts with Thumbnails