Saturday, May 9, 2015

‎ராகா மாமா‬

அகாதமியில் சஞ்சய்யின் கச்சேரியில் பக்கத்து சீட்டில் ஒரு ’ராகா’ மாமா ஆம்ப்ட்டார். சாப்பிடாத பேசாத நேரங்களில் “தத்தரின்ன..ன்ன்னா....” என்று வாய்க்கு சங்கீத வேலை கொடுக்கும் யோக்யதாம்சம் நிரம்பியவர் என்று புரிந்துகொண்டேன். அசந்தால் ஐந்து நிமிஷத்தில் அப்போதே கச்சேரி செய்துவிடும் அவசரத்தில் இருப்பவரென்றும் சபாக்களின் வாசலில் பழியாய்க் கிடப்பவர் என்பதும் அவரது ஜதிபாடும் கண் ஜாடையில் தெரிந்தது. சரியாகக் கச்சேரி ஆரம்பிப்பதற்கு ஐந்து நிமிஷம் முன்னாடி “வயறு கிடந்து கத்தறது.. ஒரு வா காஃபி குடிச்சுட்டு ஓடி வந்துடறேன்.. சீட்டைப் பிடிச்சுக்கோங்கோ...” என்று எக்ஸிட்டைப் பார்க்க பின்னால் பாம் வைத்தது போல ஓடினார். 

அந்த சீட்டை நாலைந்து பேர் குறி வைத்து படிப்படியாக முன்னேற “வராங்க....ஹி..ஹி..” என்று எக்கிப் பார்த்தவர் வழுக்கி விழும்படி வாய்வார்த்தையாக வழிந்தோம். கொலைவெறியில் திரும்பினார்கள். பான்ட்டை மேலே தூக்கிவிட்டுக்கொண்டு பீமபலம் பெற்றுத் தெம்பாக நுழைந்தார். ஒரு பாட்டு முடிஞ்சு அடுத்த பாட்டு ஆலாபனைக்காக சஞ்சய் வாயைத் தொறந்தாலே சாம்சங்கைத் தொறந்து குச்சியால் இன்ன ராகமென்று ஆர்வி போல குறிப்பெடுத்தார். சஞ்சய் ஒரு வாய் ஜலம் குடிக்க வாயைத் தொறந்தா என்ன ராகம் எழுதுவாரோ என்று விசனப்பட்டேன்.

இப்படி ஒரு ராகவித்வத் நிரம்பின ஆசாமி பக்கத்துல வந்து உட்கார்ந்துட்டோமேன்னு எனக்கு ரொம்ப வெட்கமாப் போச்சு. தலையை சட்டைக்குள்ள விட்டுக்கலாம் போல பிடிங்கித் தின்றது. விஜய் தான் ஆபத்பாந்தவனாய் காப்பாத்தினான். என்னை விட்டு அவர்கிட்டே இது கேதாரமா கேளு. சிம்மேந்திரமாக் கேளுன்னு அப்பப்போ தூது விட்டமிச்சான். பலே..பலே.. ராகமெல்லாம் பாடாந்திரமா தெரியும் போல்ருக்குன்னு நினைச்சு கொஞ்சமா ஃபூஃபூன்னு சிரிச்சார். ஆனா, தத்துபித்துன்னு ஒரு பாட்டைக் கேட்டப்போ.. “ஊஹூம்... அது ஆபோகி...” என்று ஐயோ பாவி ரேஞ்சுக்கு என்னை பார்த்தார். அதோடு கண்ணை மூடி யோக நிலைக்குப் போய் ரசிக்க ஆரம்பிச்சுட்டார். சஞ்சய் கச்சேரி கண்ணை மூடி ரசித்தால் உவப்பாக இருக்காது. அவரது முகபாவங்களையும் சிக்ஸர் ஃபோர் காட்டும் அம்பயர் சிக்னல்களையும் கண்ணாறக் கண்டு களிக்கவேணும்.

பால்கனியில் இருந்த ஆர்வியின் அருகிலிருந்து கடைசி இரண்டு பாடல்கள் கேட்கலாம் என்று முன்வரிசையிலிருந்து மைக்கேல் ஜாக்சன் நடன அசைவுகளில் சீட்டிலிருந்து வெளியே வந்தேன். ராகா மாமா மூடிய கண்ணை திறக்காமல் காலை சுருக்கிக்கொண்டார். சஞ்சய்யால் எங்கேயே சஞ்சரித்துக்கொண்டிருக்கிறார் என்று உருவிக்கொண்டேன்.

கச்சேரி முடிஞ்சப்புறம் கான்டீன்ல ஒரு கச்சேரி வச்சோம். வல்லபா புக் ரிலீஸ். அப்புறம் ஈரோடு நாகராஜ் வார்த்தை விளையாடினார். தனியாவர்த்தனம். காதுக்கு சுகம். ஆர்வியும் ரங்கநாதன் கணேஷும் சத்விஷயங்கள் பேசினார்கள். வீகேயெஸ்ஸும் நானும் வேலையை கவனித்தோம். வாஷ் பேசின் ஓரமாக வெளிநாட்டவருடன் சம்பாஷித்துக்கொண்டிருந்த ஹிண்டு ராமிலிருந்து காது முடிந்து வயிற்றைக் ரொப்ப வந்த எங்களைப் போன்றவர்களுக்கும் சேர்த்து “தோசை மட்டும்ந்தான் இருக்கு...” என்று பேதமில்லாமல் போர்டை திருத்தினார் ஒரு கண்டிப்பான கான்டீன் ஆசாமி. சீக்கிரத்தில் அகாதமியை விட்டு வெளியே தள்ளி புண்ணியத்தைக் கட்டிக்கொண்டார் அவர்.

வீட்டிற்கு வந்து சேப்பாயியை ஷெட்டில் ஏற்றும் போது என் வயிறு கரடியாய்க் கத்தியது. ராகா மாமா பளிச்சென்று ஞாபகம் வந்தார்.

0 comments:

ஆடிய பிற ஆட்டங்கள்

Related Posts with Thumbnails