Saturday, May 9, 2015

2015 புத்தகக் காட்சி

*வம்சி
- புள்ளிகள் கோடுகள் கோலங்கள் - பாரதி மணி
- அறம் - ஜெயமோகன்
*கிழக்கு
- இரண்டாவது காதல் கதை - சுஜாதா
- அமெரிக்க உளவாளி - அ. முத்துலிங்கம்
*அருணோதயம்
- ஆசை முகம் மறந்தாயோ - வித்யா சுப்ரமணியம்
*அல்லயன்ஸ்
- மல்லாரி ராவ் கதைகள் - தேவன்
*டிஸ்கவரி புக் பேலஸ்
- காதுகள் - எம்.வி.வி
*சாகித்ய அகாதமி
- இரண்டாம் இடம் - எம்.டி. வாசுதேவன் நாயர்
- தேர்ந்தெடுக்கப்பட்ட ஆனந்தரங்கப்பிள்ளை நாட்குறிப்பு - தொகுப்பு சுபாசு
*சந்தியா பதிப்பகம்
- சிந்தா நதி - லா.ச.ரா
*அம்ருதா
- முத்துக்கள் பத்து - இரா. முருகன்
- ரெண்டாம் ராயர் காப்பி கிளப் - இரா. முருகன்
*ஐந்திணை பதிப்பகம்
- தி.ஜானகிராமன் படைப்புகள் சிறுகதைகள் தொகுதி 1 - தி.ஜா
- உயிர்த்தேன் - தி. ஜா
- செம்பருத்தி - தி. ஜா
2015 புத்தகக் காட்சியில் மேற்கண்ட புஸ்தகங்களை வாங்கிய வ்யாசம் கீழே எழுதியிருக்கிறேன். மெனக்கட முடியாதவர்கள் இதோடு தப்பிப்பீர்களாக! சிரமப்பட வேண்டாம். பகவான் உங்களை அனுக்கிரஹக்கிட்டும்.

*

”நா பார்த்தேன்... உங்க பொண்ணு அறத்தை எடுத்துக் காண்பிச்சாங்க...” என்றவரிடம் "நீங்க குடும்பத்தோட விக்கிறீங்க... நான் குடும்பத்தோட வாங்கறேன்...” என்றேன். பிள்ளைகள் மனைவி சகிதம் வம்சியில் உட்கார்ந்திருந்த Bavachelladurai Bava சிரித்தார். இந்த புத்தகக் காட்சியில் முதலில் வாங்கியது Bharati Mani யின் புள்ளிகள் கோடுகள் கோலங்கள்தான். பழுத்த வேலை நாளில் வெளியீட்டு விழாவிற்கு பாட்டையாவின் பிரத்யேக அழைப்பிற்கிணங்க போகாத குறையை இன்று போக்கிக்கொண்டேன். ஏற்கனவே அறம் இருந்தாலும் இன்னொரு முறை அறம் வாங்கினேன். அறத்துக்கு ஏது அளவு? Sudhakar Kasturiயின் 6174, 7.83 ஹெர்ட்ஸ் வம்சியின் அலமாரியில் பளபளத்தது. ஒரு பையன் கையிலெடுத்து புரட்டுகையில் சுதாவின் குறுந்தாடி சயின்டிஸ்ட் முகம் என் அகக்கண்ணில் தெரிந்தது. பொங்கல் சாப்பிட்டு உண்ட மயக்கத்தில் அனைவரும் உறங்குவார்கள் என்றெண்ணி இரண்டு மணிக்கு ஃபேர் பிரவேசம் செய்தேன். இருந்தாலும் புத்தகக் காதலர்கள் கனிசமாகக் குழுமியிருந்தார்கள்.

உள்ளே நுழைவதற்கு முன்பே டிஸ்கவரியில் எம்.வி.வியின் காதுகள் வாங்கி வைத்திருந்த தம்பி Ag Sivakumar நந்தனம் பஸ்ஸ்டாப்பில் கொண்டு வந்து கொடுத்தார். ”புத்தகத்திற்கு காசு வேண்டாம் ஈடாக பெ.முவின் மாதொருபாகம் வாங்கிக்கொடுங்க” என்று இலக்கிய உலக அடிதடியில் எனக்குக் கிடுக்கிப்பிடி போட்டுவிட்டு மாயமாய் மறைந்துவிட்டார். கடன்பட்டிருக்கிறேன். வட்டியுடன் திருப்பவேண்டும்.

பவாவிடமிருந்து நகர்ந்தால் காவ்யாவில் கேஜிஜ ( கே ஜி ஜவர்லால் ) தம்பதி சமேதராய் காட்சியளித்தார். மூன்று மணி நேரத்திக்குப் பிறகு இங்கே இருக்க முடியவில்லை என்று குறைப்பட்டுக்கொண்டார். அப்போதுதான் நுழைந்த என்னை அப்பவே உஷ்ணம் லேசாக அனத்தத் தொடங்கியது. மேடம் @Duraisamy Duraisamy Subbulakshmi வினயா வரைந்த புல்லுக்கட்டு தூக்கிக்கொண்டு போகும் ஒரு பெண் சித்திரத்தை மனமாரப் பாராட்டினார். ஃப்ரேம் பண்ணி வீட்ல மாட்டுங்க என்று இருவரும் பரிந்துரைத்தனர். வினயாவிற்கு புத்தகக் காட்சியில் கிடைத்த எனர்ஜி ட்ரிங்க்.

நேரே கிழக்கை நோக்கி நகர்ந்தேன். சுஜாதா வாங்கவில்லையென்றால் புக்ஃபேருக்குப் போய் என்ன பலன்? வாத்யாரின் இரண்டாவது காதல் கதை வாங்கினேன். அங்கதம் பொங்க எழுதும் அ.முத்துலிங்கம் A.muthulingam எனக்குப் பிடித்த எழுத்தாளர்களில் ஒருவர். அவரெழுதிய அமெரிக்க உளவாளி வாங்கினேன். இப்போதே உள்ளுக்குள் பெருஞ் சூட்டை உணர்ந்தேன். கண்களை அடைத்த புத்தகங்கள் என்னை குளிர்ச்சியாக்கியது. மொத்தமும் சோர்ந்து அரைக்கண் சொருகிய நிலையில் சாய்ந்திருந்த Badri Seshadri யை எழுப்பி ஸ்நேகமாய்ச் சிரித்தேன். கை குலுக்கினேன். ”மொபைல்ல விளையாடிக்கிட்டிருந்தேன்” என்றார். பத்ரியின் தூக்கத்தைக் கலைத்த நிம்மதியில் அடுத்த இடத்துக்கு மூவினேன்.

காலச்சுவட்டில் பெருமாள் முருகனுக்கு ஆதரவாக கையெழுத்து வேட்டை நடக்கிறது. கருத்துச் சுதந்திரம் காப்போம் என்று போஸ்டர் கதறுகிறது. உஞ்சவிருத்தி போல ஒரு ரவுண்ட் அடித்துவிட்டு வெளியே வந்தேன். ஊட்டி வறுக்கி கண்ணில் படவில்லை. ஏதோ ஒரு ஸ்டாலில் பிருஹு சம்ஹிதையை ஒரு முறை திருப்பிப் பார்த்தேன். கட்டம் கட்டி சிம்மத்தில் குரு எங்கே எப்போது இருப்பான் என்று எழுதியிருந்தது. பயந்து போய் மூடிவிட்டேன். இப்பவும் பல சைஸ்களில் பொன்னியின் செல்வன் எங்கும் கிடைக்கிறது. புத்தக வீதிகளில் நடக்கும்போது காதுக்கு அருகில் “சுக்குக் காஃபி சார்..” என்று ரகசியமாகக் கேட்ட கேன் சுமக்கும் மகானுபாவரின் கண்களில் அநியாயத்திற்கு அப்பாவித்தனம்.

அல்லயன்ஸில் தேவனின் மல்லாரி ராவ் கதைகளும் அருணோதயத்தில் Vidya Subramaniam ம்மின் ஆசை முகம் மறந்தாயோ?வும் வாங்கிக்கொண்டேன். இப்போது மேனியெங்கும் ஆறாய் வியர்த்து வழிந்தது. சில இடங்களில் டிஸ்கோ ஆடவைத்து மகிழ்ந்த தரையை வெகு ஜாக்கிரதையாக கவனித்துக்கொண்டு நகர ஆரம்பித்தேன்.

ஐந்திணையை எட்டிப்பார்க்காமல் எனது புக்ஃபேர் விசிட் எப்போதுமே நிறைவடையாது. தி.ஜா எவ்வளவு படித்தாலும் திகட்டாது. காவிரிக்கரை ஆள். சுழித்து ஓடும் காவிரியை ரசித்து எழுதுவார். வேஷ்டியோடு நாமும் இறங்கி ஒரு முறை அந்த எழுத்தில் ஸ்நானம் செய்வோம். இந்த முறை உயிர்த்தேன், சிறுகதைகள் தொகுப்பு மற்றும் செம்பருத்தி எடுத்துக்கொண்டேன். யாரோ ஒரு அம்மாவிற்கு குழந்தைப் பாடல்கள் தொகுப்பை விளக்கிக்கொண்டிருந்தார்கள். அந்தப் பெண்மணி தெலுங்கு கலந்த தமிழில் சுந்தரத் தமிழாக “இதி புஸ்தகமுதான் வேணும்” என்று பாடலாகப் பகர்ந்தார்கள்.

”பாண்டிச்சேரி கவர்மெண்ட்தான் ஆனந்தரங்கப்பிள்ளை நாட்குறிப்புகளை முழுமையாக போட்டிருக்கிறார்கள் இங்கே கிடைப்பதெல்லாம் ச்சும்மா அதிலிருந்து லவலேசம் எடுக்கப்பட்டவை” என்று பத்ரி சொன்னார். சாகித்ய அகாதமி போகவேண்டும் என்றும் சங்கல்பித்திருந்தேன். போன முறை நானெடுத்திருந்த “தமிழ்க் கட்டுரை களஞ்சியம்-இரா மோகன்” தொகுப்பை அழகான கட்டிளம் வடிவமாக்கியிருந்தார்கள். கழுத்தில் செகப்பு தாலி கட்டியிருந்த அந்தக் கடை பையனிடம் “போன தடவை முதல் கட்டுரை சங்கராபரணம் நரசய்யர் படிச்ச உடனே அந்த கட்டுரை மட்டும் புக்கிலிருந்து கழண்டு விழுந்திடிச்சு.. ஒவ்வொரு கட்டுரை முடிக்கும் போதும் அதெல்லாம் புக்கிலிருந்து பிச்சிக்கிறமாதிரி புது டிசையன் போல்ருக்குன்னு நினைச்சுக்கிட்டேன். இப்போ நல்லா பண்ணிட்டீங்க...” என்றவுடன் என்னைப் பார்த்து மௌனமாக சிரித்தான்.

பீமனே கதை சொல்வது போல அமைந்த மகாபாரதக் கதையான “இரண்டாம் இடம்”, எம்.டி. வாசுதேவன் நாயரின் மலையாள மூலத்திலிருந்து குறிஞ்சிவேலனின் தமிழ் மொழிபெயர்ப்பு. எடுத்துக்கொண்டு திரும்பியவனுக்கு ஒரு இன்ப அதிர்ச்சி. தேர்ந்தெடுக்கப்பட்ட ஆனந்தரங்கப்பிள்ளை நாட்குறிப்பு கிடைத்தது. தொகுப்பு சுபாசுவாம். சபாசு.

EraMurukan Ramasami சாரை அழைத்து சிந்தாநதி கிடைக்குமிடத்தை விஜாரித்தேன். விருட்சம் சந்திரமௌளியைக் கேளுங்க சொல்வாரு என்றார். அடுத்த வருஷம் நானே போட்ருவேன். இப்ப சந்தியாவுல கேளுங்க என்று சந்திரமௌளி மடைமாற்றி திருப்பிவிட்டார். சந்தியாவில் பழ. கருப்பையா ஜம்மென்று அமர்ந்திருந்தார். தமிழ்ச் சொற்களைப் பற்றி ஊடே புகுந்த ஒருவர் வகைதொகையில்லாத சந்தேகங்களை அள்ளித் தெளித்தார். பழ. கருப்பையாவின் கண்களில் பீதி தெரிந்தது. சிந்தாநதியோடு திரும்பிப்பார்க்காமல் சடுதியில் திரும்பினேன்.

அம்ருதாவில் இரா. முருகன் சாரின் ரெண்டாம் ராயர் காப்பி கிளப்பும் முத்துக்கள் பத்தும் வாங்கிக்கொண்டேன். முத்துக்கள் பத்து அட்டையில் முருகன் மோகனமாகச் சிரிக்கிறார். Pvr P V Ramaswamy யின் சில்லறை வர்த்தகத்தின் பதிப்பகத்தை மறந்துவிட்டேன். நானென்ன சஞ்சீவி பர்வதத்திற்கு மூலிகை தேடிக்கொண்டு வந்து, மறந்துபோய் மலையையே பெயர்த்துக் கொண்டு போன ஆஞ்சநேய ஸ்வாமியா? சில்லறை வர்த்தகத்திற்காக புத்தகக் காட்சியின் ஸ்டால்கள் அனைத்தையும் வீட்டிற்குத் தூக்கிப் போக! அவரது மொபைல், நெட்வொர்க்கில் ஆம்படாமல் ஒளிந்துகொள்ள உடனே பேசி வாங்க முடியாமல் போனது.

லிஃப்கோ, தமிழ் புத்தகாலயம், தமிழினி, நற்றிணை, விசா போன்றவைகளை ஒரு எட்டுப் பார்க்கவேண்டும். இன்னொரு முறை செல்ல சரஸ்வதி கடாக்ஷம் வேண்டும். ஜவர்லால் போன்றவர்கள் பாஸ் எடுத்து வைத்துக்கொண்டு தினமும் செல்வதாகக் கேள்வி. பார்க்கலாம் நமக்கு இன்னொரு முறை செல்ல அதிர்ஷ்டம் இருக்கிறதா என்று!

எந்தப் புத்தகத்தை முதலில் எடுப்பது என்று இங்கி பிங்கி பாங்கி போட்டுக்கொண்டிருக்கிறேன். கீழே சிந்தா நதியாக காதுகளை எடுப்பேனா?
இவ்வருடத்திய கடமை முடிந்தது!

‪#‎புத்தகக்_காட்சி_விஜயம்‬

0 comments:

ஆடிய பிற ஆட்டங்கள்

Related Posts with Thumbnails