Saturday, May 9, 2015

சில்லறை வர்த்தகம்: பிவிஆர்

"சாதி இரண்டொழிய வேறில்லை சாற்றுங்கால்,
வர்த்தகர் சப்ளையர் இருவரிலே - பணிவுடன்
இட்டார் பெரியார், இடாதார் இழிகுலத்தார்,
வர்த்தகச் சந்தையின் சட்டப்படி”

ஔவை மூதாட்டி இருந்திருந்தால் பிவிஆரைப் போற்றிப் பாராட்டி வள்ளல் பெருமக்களிடம் இப்பாடலைப் பாடி புகழ் பரப்பியிருப்பார். வர்த்தகச் சந்தையின் முக்கிய பாத்திரங்களான வர்த்தகரையும் சப்ளையரையும் இணைக்கும் “நல்வழி”யாக இப்பாவை வடித்துள்ளார். நல்வழி மூலத்தின் பட்டாங்கில் உள்ளபடி ”சட்டப்படி”யாக எதுகையும் மோனையும் கலந்து அம்சமாக வந்திருக்கிறது.

நம்ம ஊரில் முக்குக்கு முக்கு இருக்கும் அண்ணாச்சி கடை போலவே வெளிநாடுகளில் இருக்கும் கடையை என்னவென்று சொல்வார்கள்? உங்களுக்குத் தெரியுமா? அதே கடையை வட இந்தியாவில் எப்படியென்று....? ஊஹும்.... தெரியாதவர்களுக்கு விடை கடைசியில் உள்ளது. யோசித்தால் விடை தெரியும் என்பவர்கள் மூளையின் பேக் க்ரௌண்ட் ப்ராஸஸில் ஒரு த்ரெட்டை தட்டிவிட்டு கீழே படிக்கவும். 

பொதுவாகவே எதாவது புத்தி புகட்டும் புத்தகம் என்றாலே “என்னடா இது கஷ்டகாலம்...” என்று பின்னங்கால் பிடறியில் அடிக்கக் காத தூரம் ஓடிவிடுவோம். இது சில்லறை வர்த்தகம் எனப்படும் ரீடெயில் மார்க்கெட் பற்றி அலசி ஆராய்ந்த புத்தகம். பக்கம் பக்கமாக கட்டுரை வரைந்து டீ போட்டு பக்கத்தில் வைத்து குடித்துக்கொண்டு மாங்குமாங்கென்று படிக்கும்படியான புத்தகம் என்று புரட்ட ஆரம்பித்தால் ஜிவ்வென்ற ராக்கெட் வேக மொழி நடையில் கட்டி இழுத்துக்கொண்டு செல்கிறார்.

ஒவ்வொரு அத்தியாத்தின் கடைசியிலும் டெய்ல் பீஸ் என்று பல்வேறு கம்பெனிகளில் பணியாற்றிய அவரது அனுபவங்களையும் சில்லறை வர்த்தகம் சார்ந்த முக்கிய விஷயங்களையும் சுவாரஸ்யமாக அடுக்குகிறார். சாம்பிளுக்கு ஒன்று.

படுத்த படுக்கையாகக் கிடக்கும் பாட்டிக்கு மருந்து வாங்கிக்கொண்டு வந்து கொடுக்கும் மருமகள். இப்போது இதில் மருந்துக்கடைக்கு யார் வாடிக்கையாளர்? வாங்கிக் கொண்டு வந்து கொடுத்தவரா? மருந்து சாப்பிட்டவரா? தல சுத்துதில்ல...

பீடி சிகரெட் விற்கும் பொட்டிக்கடை, சகலத்தையும் ந்யூஸ் பேப்பரில் பொட்டலம் கட்டும் அண்ணாச்சி கடை, ரகம் பிரிக்க முடியாத சாமான்களை விற்கும் ஃபேன்ஸி ஸ்டோர்ஸ், பேப்பர் மார்ட் போன்று பல்வேறு மார்க்கெட் வகையறாக்களைப் பற்றி அலசியிருக்கிறார். ஹைப்பர் மார்க்கெட், சூப்பர் மார்க்கெட் டிபார்ட்மெண்டல் ஸ்டோர்.. இத்யாதி...இத்யாதி... இவ்வளவு மார்க்கெட்டுகளைப் பார்த்து மலைப்படையும் வேளையில் நாம் ரொம்பவும் சிரமப்படாமல் எல்லாவற்றையும் ”மால்”லுக்குள் அடக்கிவிடுகிறோமோ என்று தோன்றுகிறது.

Principles of Marketing எழுதிய ஃபிலிப் கோட்லெரை சந்தைப்படுத்துபவர்கள் சிலாகிப்பார்கள். தலகாணி தலகாணியாக புஸ்தகம் எழுதித் தள்ளுபவர் கோட்லெர். அதற்கு இணையாக பத்து பன்னிரெண்டு பக்கங்களில் ரீடெயில் மார்க்கெட்டிங்கை கரைத்து ரசமாக சந்தை பயனுற ஒரு அத்தியாயம் எழுதியிருக்கிறார். Price, Place, Product, Promotion என்று நான்கு “P‘க்கள் சந்தைப்படுத்துதலில் முக்கியம். இதைப் படித்து முடிக்கும் போது ஐந்தாவது “P”யாக பிவியாரையும் சேர்த்துக்கொள்ளலாம்.

ஈ-டெயில் பற்றிய ஒரு அத்யாயம் இரா. முருகன் சாரின் ஒரு கட்டுரையைத் தேன் போலத் தடவி எழுதியிருக்கிறார். மின் வர்த்தகம் பற்றிய இரா. முருகன் சாரின் கட்டுரையில் நவீன தமிழ் வர்த்தக வார்த்தைகளுக்கு பஞ்சமில்லை. ஷாப்பிங் கார்ட்டை கடை வண்டியென்றும் இணையம் வழியாக பணம் கட்டுவதை இணையக் கல்லாவென்றும் ரசிக்கும்படி எழுதியிருக்கிறார். போர்ட்டல் எனப்படும் இணையதளங்களை தலைவாசல் என்று எழுதியிருக்கும் தமிழ் அமிழ்தாய் இனிக்கிறது.

எலெக்ட்ரிக் கெய்சர்களில் பயன்படுத்தப்பட்ட க்ளாஸ் வுல் (Glass wool) டெக்னாலஜியை சாகடித்த பஃப் (PUF - Polyurethane foam) பற்றி ஒரு பாராவில் எழுதி தொழில்நுட்பமும் பேசுகிறது இந்த புத்தகம்.

சப்ளை செயின் மேனேஜ்மெண்ட் பற்றிய அத்தியாயம் சிறப்பினும் சிறப்பு. தொழிற்சாலை லாபகரமாக இயங்க வேண்டுமென்றால் என்கிற சமாசாரத்தில் பர்சேஸ் மேனேஜர் கோபி சொல்லித்தந்த பாடமாக ஒரு படமும் நான்கு வரிகளும் வருகிறது. அபாரம்.

ராம்பால் நிறுவனத்தில் பாகம் தயாரிப்புக்கான மூலப் பொருட்கள் வாங்கும்போது கவனத்தில் கொள்ளவேண்டியவையாக கோபி சொல்லிக்கொடுத்த “சரியான” ஐந்து விஷயங்கள்.
சரியான இடம்.
சரியான பொருள்.
சரியான அளவு.
சரியான விலை.
சரியான நேரம்.

Customer is most important person, He is not dependent on us, We are dependent on him என்ற வாசகங்கள் பின்னணியில் கோட்டோவிய காந்தி வரைந்திருக்கும் வாசக ப்ளாஸ்டிக்கிற்குப் பக்கத்தில் பத்திரமாக வைக்க வேண்டியதைப் போல பன்னிரெண்டு புல்லட் பாயிண்டுகள் இந்தப் புத்தகத்தில் இருக்கிறது. ஒவ்வொரு விற்பனையாளரும் இதைப் பின்பற்றி நடந்து கொண்டால் அமோகமாக வெற்றி பெறுவார்கள். 

இக்கால இளைஞர்களிடம் இல்லாத ஒன்று என்று எல்லோரும் அங்கலாய்க்கும் ஒரு விஷயத்தை இப்புத்தகத்திலிருக்கும் “ஆச்சி” ஐஸக் பத்மாசிங்கின் பேட்டியிலிருந்து கீழே தருகிறேன். 

”உங்கள் பணியில் கற்றுக்கொண்ட மிக உன்னதமான ஒரு விஷயம் என்ன?

அயராமல், கடுமையாக உழை; பொறுமையாக, பலனுக்குக் காத்திரு.”

மதி நிலையம் நேர்த்தியாக வடிவமைத்து அழகாக வெளியிட்டிருக்கிறார்கள். 

படித்து முடித்ததும் நல்ல எக்ஸ்பீரியன்ஸ் கிடைத்த திருப்தியில் நீங்கள் ஒரு தொழில் தொடங்கினால் பிவியாருக்கு முதற்கண் நன்றி சொல்லி வாத்தியார் சம்பாவணை கொடுத்துவிடவும்.

மூன்றாவது பாராவில் கேட்ட கேள்விக்கான பதில்கள்: மாம்-பாப்-ஸ்டோர் மற்றும் கிரானா

0 comments:

ஆடிய பிற ஆட்டங்கள்

Related Posts with Thumbnails