Saturday, May 9, 2015

வீதிராமர்கள்

காலையில் காரைத் துடைத்துக் கொண்டிருக்கும்போது காதுக்கு ருசியாக ஒரு குரல். இல்லையில்லை. குரல் ருசியைவிட நாம ருசி அபாரம். தெருக்கோடியில் இருவர் அட்டை க்ரீடம் தரித்துக்கொண்டு பட்டு அங்கவஸ்தரம் தரையில் புரள ராமர் கலரில் வந்துகொண்டிருந்தார்கள். வீடுதோறும் வாசலில் நின்று “ஜானகிராமா... சீதாராமா.. ரகுகுலதிலகா.. ரகுவீரா.. ஸ்ரீராமச்சந்திரமூர்த்திக்கு.... ஜெய்..” போன்ற திருநாமங்களை பாடல் சாயலில் கோஷமிட்டார்கள். ராமநவமிக்காக திடீரென்று முளைத்த அவசர ராமர்கள். அசோகவனத்தில் ஜானகி சிறையிலிருக்கும் போது இராவணன் ராமன் வேடத்தில் வந்து அவளை வசியப்படுத்த எண்ணினானாம். ஆனால் வேடமேயானாலும் ராமன் உருக்கொண்டதால் பிறன்மனையாளை வசப்படுத்தும் எண்ணம் அறவே எழவில்லையாம்.“புருடா விடாதே.. ஆதாரம் காட்டு.. “ என்று கையில் அரைச் செங்கல் தூக்காதீர்கள். செவிவழிக் கதை. நீதி பெரிசு.



என்னமோ வீதிராமர்கள் மேலே ஒரு அலாதி பிரியம் ஏற்பட்டது. என் வீட்டு வாசலில் ராமநாமாக்களை அவர்கள் பொழிந்தபோது நீங்கள் இதோடு பார்க்கும் இந்தப் புகைப்படம் எடுத்தேன். யத்கிஞ்சிதம் கொடுத்து வழி அனுப்பும்போது ஒரு மனுஷ ஆஞ்சநேயர் நியாபகம் வந்தார். கொசுவர்த்திச்சுருள் உங்கள் கண்ணெதிரே வட்டம் போட ஆரம்பித்தாலே உங்களை மன்னையைவிட வேறு எந்த ஊருக்கு அழைத்துச்செல்வேன். ம்.. வாருங்கள்.. 

இதோ தேரடி. மதிலழகு மிக்க மன்னை ராஜகோபாலஸ்வாமி திருக்கோயில். சொர்க்கவாசல். ருக்மணி சத்யபாமா சமேத ஸ்ரீவித்யா ராஜகோபாலனை யானைப் பிளிறலோடு சொர்க்கவாசல் மண்டபத்தில் தரிசித்துவிட்டு வெளியே வரும் போது.. அதோ.. அந்த புன்னை மரத்தடி தாண்டி... ஆஞ்சநேயர் மாமா நின்றுகொண்டிருப்பார். உதட்டைச் சுற்றி சிகப்புக்கலர் சாயம். கதாயுதம். அரையில் ஜிகினா பதித்தத் துண்டு. ”ரெண்ட்ரூவா தாளா இருக்குபார்... அதைக் குடு..” என்று பாட்டி கை காண்பிப்பாள். குனிந்து பவ்யமாகக் கொடுத்தவுடன் கதாயுதத்தால் செல்லமாகத் தலையில் தட்டி ஆசீர்வாதம் செய்வார். ரொம்பநாள் அந்த கதையை எடுத்துச் சுழற்ற ஆசைப்பட்டிருக்கிறேன். சொர்க்கவாசல்கள் கடந்துபோயின. ஒரு சொர்க்கவாசலில் ஆஞ்சுத்தாத்தாவை காணவில்லை. எங்கே போனார் என்றுதெரியவில்லை. ஆனால் இன்று பத்துவீடு தள்ளி இந்த ராமர்கள் செல்லும்போது அவர்கள் பின்னாலேயே அதே ஆஞ்சுத் தாத்தா போவது போலிருந்தது. 

நிறைய வீடுகளில் யாரும் வெளியில் வந்து காசுபோட்டதாகத் தெரியவில்லை. நாமம் கேட்டார்களோ.. இல்லையோ.. தியாகைய்யர் ராமஸ்மரணையிலேயே முக்தியடைந்தார். 

புறவேடமிட்டிருந்தாலும் அகவேடமில்லாத வெள்ளந்தி மனிதர்கள். ஸ்ரீராம் ஜெய்ராம் ஜெயஜெயராம்.....

0 comments:

ஆடிய பிற ஆட்டங்கள்

Related Posts with Thumbnails