Saturday, May 9, 2015

கணபதி முனி - பாகம் 21: சுதந்திரத் தீ

பால் ஆதிசேஷய்யாவுக்கு பைபிளை வாசித்துக் காண்பித்தார் கணபதி முனி. பலமுறை என்னவெல்லாமோ பேச வாயெடுத்த பாலை திறக்கவிடாமல் பைபிளிலிருந்து வாசகங்களை வர்ஷித்து அசத்தினார். 

“மொத்த நகைப்பெட்டியே கை கொள்ளாமல் அள்ளக் கிடக்கும் போது எந்த முட்டாள் திருடனாவது ஒரேயொரு அட்டிகை போதும் என்று திருப்தியோடு திரும்புவானா?” என்று கேட்டார் கணபதி முனி. பால் ஆதிசேஷய்யாவுக்கு உடம்பெல்லாம் வியர்த்தது. கணபதியின் முகத்தை ஏறிட்டும் பார்க்கவில்லை. கூசிக் குறுகி நின்றார். 

“ஜாதிமதபேதமில்லாமல் நல்ல கருத்துகள் எதில் இருந்தாலும் அதை ஏற்றுக்கொள்வதே உத்தமம். அதுவே பண்பட்டவர்க்கு அழகு.” என்று பால் ஆதிசேஷய்யாவை நெறிப்படுத்தினார். ”மதம் மாறினாலும் அவர்களது தாய்மண் மாறுவதில்லை. அது இந்தியாதான்...” என்று அறுதியிட்டுக் கூறினார். ”அனைவரும் சுதந்திர தாகத்தை வளர்த்துக்கொள்ளுங்கள். மேலும் கண்ணியத்தோடு வாழ்வதின் மூலம்தான் அந்நியர்கள் நம்மை மதித்துப் போற்றுவார்கள்.” என்று ஹிந்துக்களுக்குப் பிரசங்கம் செய்தார். 

பஞ்சாப் மற்றும் பெங்கால் சுற்றுவட்டாரங்களில் தீவிரவாதம் தலைதூக்க ஆரம்பித்த காலம் அது. வேலூரில் பயிலும் மாணவர்களுக்கு இந்த செய்தி புதிய உத்வேகத்தைக் கொடுத்தது. பாரதத்தின் பல்வேறு மாகாணங்களில் பயிலும் மாணவர்களிடம் தொடர்பில் இருந்த சிலர் மெட்ராஸில் சுதான்வா தலைமையில் தீவிரமாக சுதந்திரப்போராட்டத்தில் ஈடுபட இருப்பதாகவும் எப்பாடுபட்டாவது சுதந்திரம் அடைந்தே தீருவது என்றும் முடிவெடுத்திருப்பதாக அறிந்தனர். அதில் முக்கால்வாசி பேர் கணபதியின் சீடர்கள். 

சுதான்வா ஒரு படையோடு வேலூருக்கு வந்தார். ”புரட்சிக்கு வித்திடும் செயலாக்கங்களை தீர்மானித்துவிட்டோம். உங்களுடைய ஆசி இந்த இயக்கத்துக்கு தேவை” என்று கணபதியிடம் வந்து தலை வணங்கினார்.
“இருகைகளால் அணைத்துக் கட்டிப்பிடித்தால் அடங்கும் அளவிற்கு இருக்கும் ஒரு யுவசேனையை வைத்துக்கொண்டு அதிகாரமிக்க ஒரு பெரிய சர்க்காரை எதிர்த்து வெற்றி காணலாம் என்று நினைப்பது அறிவீனம்” என்று புத்தி புகட்டினார் கணபதி.

“இளைஞர்களே சமயம் வரும் வரை அமைதியாகக் காத்திருப்போம். அதுவரையில் எதுவும் தேவையில்லாத போராட்டங்களிலும் அத்துமீறல்களும் செய்யவேண்டாம்” என்று சுதான்வாவும் கேட்டுக்கொண்டார்.

அன்று சாயந்திரம் தலைமையாசிரியர் பி.எஸ்.ராகவாச்சாரி தலைமையில் மாணவர்கள் கூட்டம் ஒன்று மஹந்த் ஹை ஸ்கூலில் நடைபெற்றது. கணபதி அர்த்தபுஷ்டியாகப் பேசினார். மாணவர்களை சரியான பாதைக்கு திருப்பும் தீவிர முயற்சியில் ஈடுபட்டார். “பொறுப்பில்லாமல் கண்ட வாசகத்தையும் சொல்லிப் பிரசாரம் செய்துகொண்டு திரிபவர்களிடம் மாட்டிக்கொள்ளாதீர்கள். அவர்களது மலிவான தேவைகளை நிறைவேற்றிக்கொள்ள உங்களை சாமர்த்தியமாக உபயோகப்படுத்துகிறார்கள். இந்தப் பருவத்தில் உங்களுக்குக் கல்விதான் பிரதானம். அறிவைத் தீட்டிக்கொள்வது அதிமுக்கியம். ”

கணபதியின் இந்த உணர்ச்சிகரமானப் பேச்சு அங்குக் குழுமியிருந்த பெரியவர்களுக்கும் மாணவர்களுக்கும் பரமதிருப்தியாக இருந்தது. சிலுப்பிக்கொண்டு கோதாவில் இறங்கிய மாணவர்களிடம் மனமாற்றத்தையும் போக்கிலும் வித்தியாசம் இருந்ததால் பெற்றோர்கள் மகிழ்ந்தார்கள். சிறுசும் பெருசுமாக நிறைய பேர் கணபதியிடம் ஆன்மிக வழிகாட்டுதலுக்கும் ஜப உபாசனையும் பெற கூடாரம் கொள்ளாமல் குவிந்தார்கள். 

மந்திர ஜபத்தின் மகிமையை சில மாணவர்கள் உணரவில்லை. கணபதியிடம் ஆன்மிக உபாசனையும் அதன் உபயோகமும் பற்றி ஜம்பமாகப் பேச ஆரம்பித்தார்கள். அப்போதுதான் ஜபம் முடிந்து அமர்ந்திருந்தார் கணபதி. 

“என்னைக் கொஞ்சம் ஓய்வெடுக்க அனுமதியுங்கள்...” என்று கேட்டுக்கொண்டுக் கண்ணை மூடி ஒரு ஓரமாக அமர்ந்துகொண்டார். ஜபமாலை அவர் காலருகே கிடந்தது. அவரது உதடுகள் ஏதோ மந்திரம் ஜெபிப்பது போல அசைந்தது. இரு நிமிடங்கள் அங்கே நிசப்தம் நிலவியது. திடீரென்று ஒரு அதிசயம் நடந்தது.

கணபதிக்கு எதிர்புறம் அமர்ந்திருந்த ஒரு மாணவன் சன்னதம் வந்தது போல வேத மந்திரங்களை சத்தமாக உச்சரிக்கத் துவங்கினான். கணபதி மூடிய கண்ணைத் திறக்கவில்லை. அந்தப் பையன் மந்திரம் உச்சரித்துக்கொண்டே இருக்கிறான். சுற்றி நின்றிருந்தவர்களுக்கு ஆச்சரியம் தாங்க முடியவில்லை.
சற்று நேரத்தில் கணபதி கண் விழித்துச் சிரித்தார். ஜபமாலையைக் கையில் எடுத்துக்கொண்டார். வெளி உலகே தெரியாமல் மந்திரம் சொல்லிக்கொண்டிருந்த அந்த மாணவன் படக்கென்று நிறுத்தினான். கண் விழித்தான். மலங்க மலங்க பார்த்தான். சுற்றி நின்று வேடிக்கை பார்த்துக்கொண்டிருந்த மாணவர்களுக்கு அவன் சொன்ன மந்திரங்களின் வார்த்தைகள் தெளிவாகப் புரியவில்லை. ஆனால் அது உச்சரிக்கப்பட்ட விதம் ஆச்சரியமளித்தது. வேதபாடசாலையில் பயின்று ஜபதபங்களில் கைதேர்ந்தவரால் மட்டுமே அதுபோல ப்ரவாகமாக மந்திரம் சொல்லமுடியும். கூட்டம் வாய் பிளந்தது. அதிர்ச்சியில் மௌனமாகத் திரும்பியது.

ஹெட்மாஸ்டர் ராகவாச்சாரி கடிகாசலத்திற்கு புண்ணிய யாத்திரையாகச் சென்று திரும்பினார். அங்கே தரிசித்த தெய்வங்களைப் பற்றி வர்ணித்துக்கொண்டிருக்கும் போது செவிக்கு இன்பம் அளிக்கும் வகையில் கடிகாசலத்தில் கோயில் கொண்டிருக்கும் இறையவர்களைப் பற்றி சில ஸ்லோகங்களை கணபதி பாடினார். “நீங்கள் எப்போது கடிகாசலம் சென்றிருந்தீர்கள்?” என்று கேட்டார் ராகவாச்சாரி. புன்னகை தவழும் முகத்துடன் “நீங்கள் கடிகாசல யாத்திரை பற்றி கதை சொல்லிக்கொண்டிருக்கும்போது மானசீகமாகச் சென்று வந்தேன்” என்றார். இப்படியாக சித்தூரில் அவர் ஆற்றிய அற்புதங்கள் ஏராளம்.

“வந்தே மாதரம்” போன்ற ஒரு இயக்கத்தை இல்லறத்துறவியான கணபதி முனி பண்டிட்டின் உறுதுணையோடு ஆரம்பித்து வெள்ளையரிடமிருந்து விடுதலை பெறலாம் என்று சிலர் எண்ணினார்கள். ”நீங்கள் ஒரு இயக்கத்தை ஆரம்பிக்கவேண்டும். உங்கள் தலைமையில் ஒரு தெய்வீகப் படையாக அணி திரள்வோம்.” என்று கை தூக்கி முழங்கினார்கள். மாணவர்களின் பொங்கும் சுதந்திர ஆர்வத்தை மெச்சினார் கணபதி. ஆனால் தனக்கு ஏற்படும் நட்சத்திர அந்தஸ்தைச் சுமையாக எண்ணினார். அவர்களின் சொல்லுக்கு செவிசாய்க்கவில்லையென்றால் தீவிரவாதத்திற்குள் அம்மாணவர்கள் நுழையும் வாய்ப்பிருப்பது கணபதிக்கு சர்வநிச்சயமாகத் தெரிந்தது. 

1906ம் ஆண்டு நாற்பது மாணவர்களோடு ஒரு சிறு இயக்கத்தை ஆரம்பித்தார். ஆங்கிலேயரின் அடிமைத்தனத்திலிருந்து விடுதலை பெற்றுத்தர இவ்வியக்கத்தின் மூலமந்திரம் என்ன என்று அவர்கள் கணபதி முற்றுகையிட்டபோது “உமாம் வந்தேமாதரம்” என்று துவக்கி வைத்தார். இந்த மந்திரம் அவர்களை இணைத்துக் கட்டிப்போட்டது. குபீர் உற்சாகம் ஏற்பட அபூர்வங்கள் சில நிகழவேண்டும் என்று சிலர் விரும்பினார்கள். மந்திரபலனை உடனே எதிர்பார்த்தார்கள். அனைவரும் பொறுமையைக் கடைபிடிக்கும்படி வேண்டிக்கொண்டார் கணபதி. முக்கியமான சில கடமைகளை ஆற்றும்படி தெய்வத்திடமிருந்து ரகசியச் செய்தி கிடைத்தது போல சிலர் அடங்காமல் ஆடினார்கள். 

பெரியவர்கள் மாணவர்களின் இத்தகைய அடாத செயல்களைக் கண்டு வருந்தினர். ஆரணியின் புகழ்பெற்ற காண்ட்ராக்டர் சுந்தர பாண்டியன். அவரது மகன்கள் ஸ்ரீநிவாசன் மற்றும் வெங்கட்ராமன் இருவரும் படிப்பைப் பாதியிலேயே உதறினர். அவர்களோடு சேர்த்து அவர்களின் மருமான் கிட்டாஜியும் படிப்புக்கு மூட்டைக் கட்டிவிட்டார். சுந்தரபாண்டியன் அவர்களை படிக்கும்படி அறிவுறுத்தி அழைத்தார். பலனில்லாமல் ஒரு நாள் மூவரும் வீட்டை விட்டு ஓடினர். ஓடும் போது கிட்டாஜி சில அரசியல் கோஷங்களை எழுப்பினார். இது சுந்தரபாண்டியனுக்கு அதிர்ச்சியளித்தது. ”இனிமேல் நீங்கள் பள்ளிக்கூடம் பக்கம் தலைவைத்துக் கூட படுக்க வேண்டாம்..” என்று சுந்தரபாண்டியன் சத்தியம் செய்தபின்னர் ஓடிய அனைவரும் பதவிசாக வீடு திரும்பினர். 

கணபதியால்தான் பசங்கள் கெட்டுப்போகிறார்கள் என்கிற எண்ணம் சுந்தரபாண்டியனுக்க்கு வலுத்தது. கணபதியின் சுந்தர குணங்களைப் பற்றி தெரிந்தவர்கள் எடுத்துரைத்தும் கேட்காமல் கிருஸ்துவ மிஷனிடம் கணபதியைப் பற்றிப் புகார் செய்தார் சுந்தரபாண்டியன். தலைமைப் பொறுப்பில் இருப்பவர் ரகசிய சோதனை செய்ய உத்தரவிட்டார். அச்சோதனையில் கணபதியினால் வகுப்புகளுக்குப் பங்கமில்லை என்று முடிவானது. 

சுந்தரபாண்டியனுக்கு இதில் லவலேசமும் நம்பிக்கையில்லை. பச்சைமிளகாயைக் கடித்ததுப் போல அவருக்கு எரிந்தது. மெட்ராஸ் கவர்னரை உடனடியாகச் சந்தித்து சர்க்காருக்கு எதிராக கணபதி ஒரு புரட்சி இயக்கத்தை ஆரம்பிக்க திட்டமிடுகிறார் என்று முறைகேடான புகார் ஒன்றை அளித்தார். வெடிச்சிரிப்பு சிரித்த கவர்னர் “பென்ஸிலும் பேனாவும் போன்ற அந்தக் குட்டிக் குட்டி குச்சி சிப்பாய்கள் எனது சீட்டை ஏறி வந்து பிடிக்கட்டும்” என்று கேலி செய்தார். டாக்டர் ரெங்கையா நாயுடு ரெங்கசாமி ஐயரிடம் “கணபதிக்கு ஏனிந்த விபரீத விளையாட்டு” என்று அங்கலாய்த்துக்கொண்டிருக்கும் போது அப்பு இடைமறித்தார். “மீனவர்களை முனிவர்களாக கிறிஸ்து மாற்றுவது போல கணபதி மாணவர்களை கதாநாயகர்களாக்குகிறார்” என்றார் அப்பு.

வேலூரில் வாத்தியார் உத்தியோகம் பார்த்ததில் மூன்று வருடங்கள் கழிந்தது. ஆசிரியப்பணியில் ஒரு வெறுப்பு ஏற்பட்டது. சொற்ப சம்பளம். ஈடுகட்ட ட்யூஷன் எடுக்கவேண்டியதாயிற்று. தபஸ்வியாகும் அவரது மனோரதம் எடுபடாமல் சமூகத்தை எதிர்க்கவும் வெறுப்பதுபோலவும் சூழ்நிலை நிலவியது. வேலூரில் நடந்த சில விஷயங்கள் அவருக்கு அழுத்தத்தைக் கொடுத்தன.

விசாலாக்ஷியின் உடல்நலமும் பாதித்தது. அவருக்கும் வேலூர் வாழ்க்கை கசந்தது. தவமியிற்றும் ஆவல் பொங்கிற்று. இந்நிலையில் அவருக்கு ஒரு தேவசெய்தி கிடைத்தது. ஃபிப்ரவரி 17, 1907ம் வருடம் அவரது கனவில் பத்ரகா தோன்றினார். “நான் எனது உடலை உதறிவிட்டேன். நீ விழித்திரு. இனிமேல் இச்சமுதாயம் உனது தவத்தால் எழுச்சியுரும்” 

கனவு கலைந்து உதறி எழுந்தார் கணபதி. இவ்வளவு நாட்களாக பத்ரகா ஏன் அவரது பூலோக இருப்பை தனக்குச் சொல்லவில்லை என்று வியப்பாக இருந்தது. இந்த ஆன்மிக தோழரின் மறைவு அவருக்கு வருத்தமளித்தது. பக்கத்தில் படுத்திருந்த அப்புவையும் துரைசாமியையும் உலுக்கி எழுப்பி இந்த செய்தியை சொன்னார். 

அதிகாலையில் ந்யூஸ்பேப்பர் வாங்கி வந்தார் துரைசாமி. அதில் படத்தோடு போட்டிருந்த ஒருவருடைய மரண அறிவிப்பால் மூவரும் திகைத்தனர். யாரவர்?

0 comments:

ஆடிய பிற ஆட்டங்கள்

Related Posts with Thumbnails