Saturday, May 9, 2015

உலகக்கோப்பை: இந்தியா Vs பாகிஸ்தான்

ஆர்வியெஸ்ஸாகிய நான் காலையிலிருந்து என்னுடைய ஃபேஸ்புக் வாலில் அப்டேட் செய்த இந்தியா-பாகிஸ்தான் உலகக்கோப்பை 2015 ஆட்டத்தின் தொகுப்பு. ஹைலைட்ஸ்ஸுன்னும் வெச்சுக்கலாம்.

**
ராஜாவுக்கு வெண் சாமரம் வீசுறமாதிரி தவானும் ரோஹித்தும் பேட்டை தூக்கி தூக்கி மூன்று ஓவர்கள் வீசினார்கள். கேலரியில் உட்கார்ந்திருந்தவர்களுக்கு ஏசி போட்டா மாதிரி இருந்தது. முதல் ஃபோர் ஷிகர் தவான் சொஹைல் கான் பந்தில் ஸ்கொயர் கட். விஜயில் தமிழ் கமெண்ட்டரி சகிக்கலை. நீங்களும் நானும் கூட திண்ணையில உட்கார்ந்து இதைவிட சுவாரஸ்யமா பேசுவோம். டிவிய பார்த்து கமெண்ட்டரி பேசினா காது கேளாதோருக்கு ந்யூஸ் படிச்சா மாதிரிதான் இருக்கும். ஸ்டார் ஸ்போர்ட்ஸ் ஹெச்டியில் கண்கள் கலராச்சு. இதை டைப்பிக்கிட்டே மேட்ச் பார்த்துக்கிட்டிருக்கேன். ரோஹித் ரெண்டு ஃபோர் அடிச்சாச்சு. ரெண்டுமே மிடில் ஆஃப் தி பேட். டாஸ் கெலித்தா பாதி ஜெயிச்சாப் போல.. ஷேவாக்கோ.. சச்சினோ இருந்தா ஸ்கோர் போர்டு மூவ் ஆகியிருக்குமோ.. ம்... இன்னும் இருக்கே...
இந்தியா 6 ஓவர்களில் 24 ரன்கள்... விக்கெட் நஷ்டமின்றி....
**
விராட் கோலியை கோலி விளையாடவேண்டாம் என்று பாரத மக்கள் சார்பில் வேண்டி விரும்பிக் கேட்டுக்கொள்கிறோம்.
**
சொஹைல் அரைக்குத்து. லட்டு மாதிரி வந்த பந்துக்கு கோலியின் முதல் நான்கு. ஆஃப் ஸ்டம்ப்க்கு வெளியே கோலியின் தர்மசங்கட ஸ்பாட்டை போட்டுப் போட்டுக் காண்பித்து.. அங்கே போட்டால் கோலி காலி... என்று அபசகுனமாக போட்டுக் காட்டுபவர்கள் பாகியிடம் காசு வாங்கியிருக்கலாம் என்று நம்புகிறேன். ரெஸ்ட் ரூம் போவதற்கு எழுந்த போது ரோஹித் சாய்ந்ததால் அடக்கிக்கொண்டு உட்கார்ந்திருக்கிரும் கிரிக்கெட் பக்தாஸை மட்டையப்பர் காப்பாற்றுவாராக...
அஃப்ரிடியையே அடிக்கலைன்னா வேற யாரைப்பா அடிப்பீங்க... கேலரியில பல பேர் தூங்க ஆரம்பிச்சாச்சு... இருநூற்றைம்பது அடிச்சா நாற்பது ஓவர்ல ஜோலியை முடிச்சுட்டு கிளம்பிடுவாங்க...
13.4 ல் 60க்கு ஒண்ணு.
**
பந்துக்கு வலிக்குமோ பேட்டுக்கு வலிக்குமோன்னு அடிச்சா நாலு போகாது திவான். கரப்பு கரண்டினா மாதிரி ஹேர் ஸ்டைல் வேற..
ஓடி ஓடி உழைக்கிறாங்கப்பா... ஒண்ணும் ரெண்டுமா பொறுக்கறாங்க...
அஃப்ரிடியெல்லாம் காவிய பௌலராக்கிட்டாங்கப்பா... பதினேழு ஓவர்ல 82 ஃபார் 1
**
சாஸ்திரியும் கவாஸ்கரும் வெஸ்ட் இண்டீஸோட விளையாடினாங்க... முப்பது ஓவருக்கும் மேலே கற்சிலையா உட்கார்ந்திருந்தோம். அடுத்த ஓவர் சாஸ்திரி சிக்ஸர் அடிப்பாண்டா... கவாஸ்கர் தூக்கி ஆடமாட்டான்.. நிச்சயம் தரையோட ஃபோர் பாரு... இப்படி பேசிக்கிட்டே நாற்பது ஓவர் வரைக்கும் கழிச்சோம்.... பச்சக் குழந்தை கூட தூக்கி அடிக்கும் பாலுக்கு ஔட் ஆகி ரெண்டு பேரும் க்ளௌஸை கழட்டி கக்கத்துல இடுக்கிக்கிட்டே பெவிலியனுக்கு ரெஸ்ட் எடுக்க போய்ட்டாங்க.. உட்கார்ந்து உட்கார்ந்து பிருஷ்ட பாகம் வலிச்சதுதான் பாக்கி...
இன்னிக்கி அதே மாதிரி பண்ணிடாதீங்கப்பு.. லீவு வேஸ்ட்டா போயிடும்.. ஏற்கனவே ஊக்கும்.. தோணி தான் வந்து சோறு போடப் போறான்னு சமையக்கட்டுலேர்ந்து சத்தம் வருது..
**
பளபளக்கும் திருப்பாச்சி அருவாளைத் தூக்கி கழுத்தை வெட்டினா மாதிரி ஒரு ஒரு ஸ்கொயர் கட் அடிச்சார் கோலி. ஆஃப் ஸைடில் புற்களை அறுத்துக்கொண்டே பௌண்டரிக்குப் போச்சு. தவான் ஐம்பத்துநாலில் ஐம்பது ரன்கள். பாராட்டுகள்.
இருபத்து இரண்டு ஓவர்களில் 115/1. ஷிகர் தவானும் முதல் வரியில் சொன்னா மாதிரி இன்னொரு ஃபோர். பந்துக்கு தலைவலி ஆரம்பிச்சிடுச்சு.
**
ரெய்னாவுக்கு இன்னும் சரியா கனெக்ட் ஆக மாட்டேங்குது. கொசு பேட் மாதிரி விசிறிகிட்டே இருக்கார். கோலிக்கோ சக வீரர்களை க்ரீஸை விட்டு ரன் ஆசை காட்டிக் கூப்பிட்டு விக்கெட்டைக் குடிக்கும் இரத்தக்காட்டேரி புகுந்திருக்கா. இதோ இப்பக்கூட ரெய்னா ஒரு ஃபோர். ஆளில்லா இடத்தில் பறந்து
விழுந்துச்சு. சேதாரம் இல்லை. பந்தைப் பார்.. அப்புறம் பௌண்டிரியைப் பார்.... smile emoticon
37.2 ஓவர்களில் 205/2.
**
ராமு சாருக்கு ஃப்ளிக் ஆடினா பிடிக்காது. கன்னாபின்னான்னு திட்டுவார். அஸார் விளையாடறானே சார்.. அப்டீன்னு கேஷுவலாக் கேட்டுடமுடியாது. பிட்ச்ல ஓடிவந்து பொடரியில தட்டுவார். இப்போ கோலி ஃப்ளிக்ல ஃபோர். எலிகண்ட்டா இருந்தது. ஷார்ட் ஸ்கொயர் லெக்ல ஆள் இருக்காங்க.. தரையை விட்டு லைட்டா ரெண்டு அடி தூக்கினா... அவ்ளோதான்.. ஆள் காலி.. ராமு சார் ரைட்டு. முன்னூறு அடிக்கலைன்னா டவண்டைதான்.
ஸ்டேடியம் முழுக்க ஆறும் நாலுமா மூன்று ஓவராவது வேணும். இப்படி தடவித் தடவி ரன் எடுத்தா பொழைக்க முடியாது.
39 ஓவர்ல 213/2.
**
செஞ்சுரிக்கு இன்னும் ஏழு ரன் இருக்கு. அப்புறம் பாரு வாணவேடிக்கையை.. இப்படி நிறையா தடவை நான் கோபால், கோப்லி எல்லோரும் கண்கொட்டாம மேட்ச் பார்க்கும்போது பினாத்திப்போம். கரெக்ட்டா நூத்தி ஒண்ணுன்னு ரன் மொய் எழுதினத்துக்கப்புறம் பேடையெல்லாம் கழட்டிட்டு பெவிலியன்ல உட்கார்ந்து ஜூஸ் குடிப்பாங்க...
நான் கோலியைச் சொல்லலை... smile emoticon
**
லெக் ஸ்டம்புக்கு வெளியே போனா வைட் பாலைக் கன்வர்ட் பண்றத்துக்கு ஹௌஸாட் கேட்பாங்க.... பாகிஸ்தான் எதுக்குமே ஓவராக் கத்துவாங்க.. அப்படியே இப்பவும் ரெய்னாவுக்கு அப்பீல். ஒரு பால் விட்டு அடுத்த பால் ஃபைன் லெக் பௌண்டரி. அடுத்த பந்து ஸ்ட்ரெயிட் பௌண்டரி. இன்னொன்னு ஸ்கையர் லெக் பௌண்டரி. போட்டுத் தாக்கு.
ரெய்னா இது ரன் ரெயினா? smile emoticon
**
ரெய்னாவை பத்து பால் நான்ஸ்ட்ரைக்கரா வச்சு வெறுப்பேத்தி அவுட் ஆக்கின பாவத்தை சிக்ஸ் அடிச்சுக் கழுவிக்கிறார் தோணியப்பர்.
292/4 48 ஓவர்களில்...
**
வாஹ்.. வஹாப்... நாற்பத்து ஒன்பதாவது ஓவரில் 1-1-1-1-1 கொடுத்து ஒரு W எடுத்த பௌலிங்...
மேட்ச்சிற்கு திருப்புமுனையான ஓவர்.
49 ஓவர்களில்....296/5
முன்னூத்தி பத்தாவது எடுக்கலைன்னா நாக்கைப் பிடிங்கிக்கலாம்.
**
அஷ்வினின் முதல் ஓவரே மெய்டன். அன்பே வா.. அருகே வான்னு அந்தக் காலத்துல ஸ்பின்னர்ஸ் ஃப்ளைட்டிங் டெலிவரியா போடுவாங்க. மனீந்தர் சிங் அப்பப்போ கொஞ்சம் முரட்டுத்தனம் காமிச்சு பயமுறுத்துவார். மீடியம் பேஸரா இருந்து ஸ்பின்னர் ஆன அனில் கும்ப்ளே, ஸ்பின்னர் வேடத்தில் உலவும் மீடியம் பேஸரா ரிட்டயர்ட் ஆனார்.
உலகமே இடிஞ்சு விழுந்தாலும் ரவி சாஸ்திரி குழந்தைகளுக்கு காட்ச் ப்ராக்டீஸ் குடுக்கிற வேகத்துல ஸ்பின் போடுவார். எழுந்து சமையல் உள்ளுக்குப் போய் பானையில் தண்ணீ குடிச்சுட்டு வர்ற வரைக்கும் பால் அந்தரத்தில் ஃப்ளைட் ஆகும். பகவானாப் பார்த்து அவுட் ஆக்கினாதான் உண்டு. இல்லைன்னா பேட்ஸ்மேனே வெறுத்துப் போய் “சீச்சீ... இது ஒரு பொழைப்பா...”ன்னு விக்கெட்டை துறந்து வீட்டுக்குப் போய்டுவார்.
க்ரீஸ்ல நிக்க முடியாம இறங்கி விளையாடப் போய் மக்கள் அவுட் ஆகும். இப்பொல்லாம் ஃப்ளாட் டெலிவரிதான். ஷேன் வார்ன் காலம் வரைக்கும் கூட காற்றில் நளினமாக பறந்து வரும் ஸ்பின் பந்துகள் பார்த்தோம்.
இந்த நேரத்துல ஒரு விக்கெட் விழணும்.
16 ஓவர்ஸ் 72/1
**
மிஸ்பா அஷ்வினின் முதல் பந்தையே பெறுக்கி விளையாடறார். சாரைப் பாம்பு மாதிரி பேட்ல பட்டுக் கையில ஏறி கீப்பர்ட்டே போய்டும். எப்பவுமே நம்ம பசங்களுக்கு ரன் அவுட்டுக்கு த்ரோ பண்ணுங்கடான்னா விக்கெட் கீப்பரை கழைக்கூத்தாடி மாதிரி டான்ஸ் ஆடவிட்டு பாலை அனுப்புவாங்க. பச்... கைக்கு பந்தை எறிஞ்சிருந்தா மூணாவது விக்கெட். இப்போ அதே புள்ளையாண்டான் ஃபோர் ஃபோரா அடிச்சி நிமிர்த்துறான்.
**
ஃபீல்ட்ல ஒவ்வொருத்தருக்கும் பெருக்கல் குறி மாதிரி நாலு நிழல் விழ ஆரம்பிச்சாச்சு. உமேஷ் யாதவ் ஹிந்தி பட ஸ்டண்ட் நடிகர் மாதிரி இருக்கார். ஒரே ஓவர்ல ரெண்டு விக்கெட்டுக்கு டிக்கெட் கொடுத்துட்டார். சோம்பலா வந்து பௌலிங் போடற ரவீந்தர ஜடேஜாவுக்கும் ஒண்ணு விழுந்தாச்சு. ஜெயிக்கிற மாதிரி வெளிச்சம் தெரியுது. பார்ப்போம்.
பாக்: 25 ஓவர்களில் 105/5
**
அஷ்வின் ரெண்டாவது மெய்டன். பாக்கிற்கு கொஞ்சம் ப்ரஷர் ஏத்திவிட்டார். அஃப்ரிடி கர்லா கட்டை சுத்தறா மாதிரி மோஹித் ஷர்மாவுக்கு சுத்த ஆரம்பிச்சாச்சு. இலக்கை நோக்கி மிடில் குச்சியைச் சுடறா மாதிரி மோஹித் வீசறார். ஒத்தையும் ரெட்டையுமா பொறுக்கி மனசைத் தேத்திக்கிறாங்க... லைன் அண்ட் லெங்க்த் கீப்பப் பண்ணினா அஃப்ரிடியாவது மிஸ்பாவாவது...
29 ஓவர்களில் 123/5
**
இப்போ மிஸ்பாவுக்கு புள்ளி வெச்சுட்டாப் போதும். லோக்கல் மேட்ச்சுல கடைசி ரெண்டு விக்கெட் இருந்து நிச்சயம் தோல்வின்னு முடிவாயிட்டா... “டேய்.. அவுட்டாகாதே... அட்லீஸ்ட் அம்பது ஓவர் விளையாட்டிட்டு வா...”ன்னு அறிவுரை பகர்வார்கள். எதுக்குன்னா.. நாம அம்பது ஓவர் பௌலிங் போட்டு காஜி கொடுத்துருக்கோம். அதனால நாம்பளும் அம்பது ஓவர் விளையாடி அவனை பெண்டு நிமிர்த்தணுமாம். என்னே ஒரு இலட்சியம்!
மிஸ்பாவுக்கு அல்வாவா போட்டுக் கொடுத்து ”அடிடா ராசா”ன்னு பௌலிங் கைங்கர்யம் செய்துகொண்டிருக்கிறார்கள்.
NEED 120 IN 78 BALLS
**
தோத்துடுவோம்னு ஆயிடிச்சுன்னா ஆளில்லா ரயில்வே ஸ்டேஷன் மாஸ்டர் எக்ஸ்ப்ரஸ் ரயிலுக்குப் பச்சைக் கொடி காட்டறா மாதிரி மட்டையை சுழற்ற ஆரம்பிச்சுடுவாங்க.
1. மூணு குச்சியையும் விட்டுட்டு பிட்சுக்கும் தமக்கும் சம்பந்தமே இல்லாத மாதிரி பப்பரக்கான்னு நிக்கறது.
2. பேதி புடிங்கினா மாதிரி பிட்ச்ல இறங்கி ஓடிவர்றது.
3. வலக்கை பேட்டை இடக்கைக்கு மாத்தி படகு ஓட்டறது.
4. பௌலர் ஓடி வரும்போது கண்ல தூசி விழுந்தா மாதிரி ஒதுங்கி வெறுப்பேத்தறது....
பாக்கிற்கு 66 பந்துகளில் 113 தேவை.
**
ஸொஹயில் கான் பிட்ச்சுல படுத்துகிறாமாதிரி நிக்கறார். நம்மாட்கள் அரைக்குத்து போட்டு ஃபோர் அடிக்க வைக்கிறாங்க. வைடும் நோபாலும் ரெண்டு ஓவர் எக்ஸ்ட்ரா. இடுப்புக்கு மேலே பந்து எழும்பினாலேயே நிஞ்சா படத்துல சண்டை போடறத்துக்கு முன்னாடி குனியறா மாதிரி செய்யறார் ஸொஹயில். இதுக்கு பேர்தான் மட்டையா மடங்கறதோ?!?!
பாக்கிற்கு 30 பந்துகளில் 81 தேவை.
**
ஸொஹயில் கான் மூன்று தென்னை மரம் உசரத்துக்குத் தூக்கி அடிச்சு மோஹித் ஷர்மா பந்துவீச்சில் உமேஷ் யாதவிடம் காட்ச் கொடுத்து வெளியேறினார். உலக்கோப்பை கிரிக்கெட் போட்டியில் பாகிஸ்தானுக்கு எதிராக இந்தியா வெற்றி. செஞ்சுரி அடித்த விராட் கோலி ஆட்டநாயகன். இத்துடன் இன்றைய கிரிக்கெட் வர்ணனை நிறைவுபெறுகிறது. இணைந்திருந்த அனைவருக்கும் நன்றி.
காலையிலிருந்து களைப்பின்றி வர்ணனையில் ஓடியாடி பங்கேற்ற @vijay krishnaவுக்கு விசேஷ நன்றி.

0 comments:

ஆடிய பிற ஆட்டங்கள்

Related Posts with Thumbnails