Monday, September 19, 2016

கணபதி முனி - பாகம் 45 : மாயமான சன்னியாசி

விசாலாக்ஷி அனுஷ்டிக்கும் "ஸ்ரீ வித்யா"வின் எட்டாம் நாள். நாயனாவும் ஏனைய குழுமியிருந்த பக்தர்களும் கலங்கினார்கள். விசாலாக்ஷி இந்த முறை தனது உடல் நலத்தைக் கருத்தில் கொண்டு இத்தோடு நிறுத்துவார் என்று எதிர்பார்த்தார்கள். நாயனா நெருங்கிய போது...
"நான் விரும்பியதை அடைந்துவிடுவேன் என்று நினைக்கிறேன். நீங்கள் பரம சந்தோஷமடைவீர்கள்" என்று சிரித்துக்கொண்டே நாயனாவை நமஸ்கரித்தார். அவருடைய உடல் நிலைமையை உத்தேசித்து அவரது பக்தர்கள் வரிசை வரிசையாக வந்து ஆசீர்வாதம் பெற்றுச் சென்றார்கள். அவர் குரு பத்னி. அவருடன் சேர்ந்து தவமியற்றிய தபசகி. இருவருடைய ஆன்மிக எண்ணமும் உருவேறிய ஒன்றே. பக்தர்களிடம் அவர் காட்டும் அன்னையின் பரிவும் வாத்சல்யமும் அலாதி.
அவரது அமைதி ததும்பும் முக தரிசனமே அவரது பக்தர்கள் ஆன்மிக நிலையில் உச்சம் தொட வைத்தது. அவர்கள் விசாலாக்ஷியை அன்னபூரணி அம்மனான வழிபட்டார்கள். அவர் தனது வாழ்வின் மூலம் குடும்ப வாழ்க்கையில் உழன்றாலும் கணவனுக்கும் கடவுளுக்கும் சேர்த்து வழிபாடு செய்ய இயலும் என்பதற்கு எடுத்துக்காட்டாக விளங்கினார்.
கணபதி முனியும் விசாலாக்ஷியும் புராதன காலத்து ரிஷிகளின் வாழ்வியல் முறையை வாழ்ந்து காட்டினார்கள். குடும்ப பந்தத்திலிருந்து விடுபடாமல், சமூகத்திலிருந்து விலகாமல் கடவுளை அடையும் வழியைக் காட்டினார்கள்.
விசாலாக்ஷிக்கு அப்போது வயது 45. 1926. ஜூலை மாதம் 26ம் தேதி. (ஆஷாட கிருஷ்ண த்வீதிய, தனிஷ்ட நக்ஷத்திரம்). பூதவுடலை விட்டு உயிர் பிரிந்தது. அவரது உயிர் பிரியும் போது ரமணாஸ்ரமத்தில் தீபாராதனை நடந்து கொண்டிருந்தது. ஸ்ரீரமணர் அதை ஒற்றிக்கொள்ள உள்ளங்கை நீட்டியபோது ஆரத்தி அனைந்தது. விளக்கு மறைந்தது.
**
விசாலாக்ஷியின் மறைவுக்குப் பிறகு நாயனா சன்னியாசியாகிவிடுவார் என்று பலர் எதிர்பார்த்தனர். ஸ்ரீ ரமணர் கடைசி வரையில் நைஷ்டிக பிரம்மச்சாரியாக அரையில் வெறும் கௌபீணத்தோடு கடைசி வரையில் இருந்தார். நாயனாவும் பூணூலோடும் காதி ஆடைகளுடனும் அப்படியே வாழ்ந்தார். தெரிந்தவர்களுக்கு அவர் ஞானி. தெரியாதவர்களைப் பற்றி அவர் கவலைப்படுவதில்லை.
விசாலாக்ஷி மேலுலகம் சென்ற பிறகு கணபதி முனிக்கும் உடம்பு படுத்தியது. மனைவியின் சமையலை மட்டுமே சாப்பிட்டு ஜீவனம் செய்தவர்க்கு அதனால் படுத்துகிறதோ என்று அவரது மகள் வஜ்ரேஸ்வரியும் மருமகள் ராஜேஸ்வரியும் பக்கத்தில் இருந்து பார்த்துக்கொண்டார்கள். ஊஹும். பிரயோஜனமில்லாமல் அவரது உடல் நலம் குன்றத்தொடங்கியது.
ஒரு நாள் நாயனாவின் மருமகன் சோமயாஜுலு வீட்டின் திண்ணையில் உட்கார்ந்திருந்தார். அப்போது வேஷ்டியும் சட்டையுமாக ஒருவர் படியேறி...
" நாயனா இருக்கிறாரா?"
சோமயாஜுலு இவர் யார்? என்று யோசிக்க ஆரம்பித்த போது அவர் மீண்டும் தொடர்ந்தார்.
"இருந்தாரென்றால் கன்னியாக்குமரியிலிருந்து ஒரு சன்னியாசி வந்திருக்கிறேன் என்று சொல்லுங்கள்". முகத்தில் புன்னகை அரும்பியது. சோமயாஜுலுவுக்கும் சிரிப்பு வந்தது. கஷாயமில்லை, கையில் கமண்டலமில்லை சன்னியாசி என்று சொல்கிறாரே என்று சிரித்துக்கொண்டே உள்ளே சென்றார்.
திரும்பி வந்தால் அங்கே அந்த சன்னியாசியைக் காணவில்லை. ஆச்சரியமாக இருந்தது. நீண்ட தெருவின் இருமருங்கும் பார்த்தார். சன்னியாசி கண்ணில் தென்படவில்லை. கணபதி முனியிடம் அதைச் சொல்லலாம் என்று உள்ளே வந்தால் அடுத்த ஆச்சரியம் காத்திருந்தது.
உடல் முடியாமல் படுத்திருந்த கணபதி முனி எழுந்து உட்கார்ந்திருந்தார். சட்டென்று அவரது நோய் பறந்துபோயிருந்தது. நாயனா மீண்டும் சுறுசுறுப்படைந்தார்.
செகந்திராபாத் சென்றார். முழுமூச்சாக தனது எண்ணற்ற சிஷ்யர்களைச் சந்தித்தார். முன்னைவிட மும்முரமாக இயங்கினார். பல்வேறு கூட்டங்களில் பலதரப்பட்ட விஷயங்களைப் பற்றிப் பேசினார். வகைவகையான மனிதர்கள் கலந்துகொண்டார்கள். இலக்கியம், சமூக சீர்திருத்தம் ஆன்மிகம் என்று தங்கள் விருப்பத்திற்கேற்ப நடக்கும் சொற்பொழிவுகளில் மூழ்கினார்கள்.
ஸ்ரீ கிருஷ்ணதேவராயா ஆந்திர பாஷா நிலையம். ஹைதிராபாத்தின் பிரசித்திபெற்ற நூலகத்தின் வெள்ளி விழா விமரிசையாக நடைபெற்றது. அங்கே காவ்ய கண்ட கணபதி முனி ஸ்ரீரமணரின் அருளுரைகள் என்ற தலைப்பில் ஆற்றிய உரை வெகுசிறப்பாக அமைந்தது. வாழ்வின் பல அடுக்குகளில் உள்ளவர்களும் வெவ்வேறு மொழி பேசுபவர்களும் பகவான் ஸ்ரீ ரமணரைப் பற்றி அறிந்துகொள்ள இக்கூட்டம் உதவியது. இந்தப் பிரபல உரையானது ராஜிதோத்ஸவ சஞ்சிகா என்று 1926ம் வருடம் வெளியிடப்பட்ட இன்னூலக புத்தகத்தில் இடம்பெற்றுள்ளது.
பாக்யா ரெட்டொ என்பவர் முன்னணி ஹரிஜனத் தலைவர். அவரும் பால்கிஷன் ராவ் என்ற சமூக சீர்திருத்த இயக்க தலைவரும் பேராசிரியர் வீரபத்ருடுவுடன் சேர்ந்து பெரிய மாநாடு ஒன்றை நடத்தினார்கள். அதில் கணபதி முனி சிறப்புப் பேச்சாளர். குழுமிய தோழர்களுக்கு இன்ப அதிர்ச்சி. வேதிய முறை வாழ்வையும் சமூக விடுதலையையும் இணைத்துப் பேசி வெளுத்து வாங்கினார் கணபதி முனி. மாநாட்டில் சில பண்டிதர்கள் சில மூடப் பழக்கங்களை பொட்டில் அறைந்தது போல கணபதி முனி சாடியதை விரும்பவில்லை. ஆனால் அறிவுசார் பெரியவர்களும் சமூக சேவகர்களுக்கும் கணபதி முனியின் பேச்சு அமிர்தமாகவும் தெம்பூட்டும் விதமாகவும் அமைந்தது. அவர்களது ப்ரியத்தையும் நன்றியையும் காட்டும் விதமாக "முனி" என்ற பட்டத்தை வழங்கி மகிழந்தார்கள்.
சாதிகளைக் கடந்து எவ்வித பேதமுமில்லாமல் எவர் வேண்டுமானாலும் ஆன்மிக சாதனை செய்யலாம் என்ற அவரது பேச்சில் கவரப்பட்டு பலர் அவருக்கு சிஷ்யர்களாக சேர்ந்தார்கள். ஏழை, தனவந்தர்கள், படித்தவர்கள், படிக்காதவர்கள், அரசாங்க அலுவலர்கள் என்று வசிஷ்ட கணபதி முனியின் வீட்டில் தேனியாய் மொய்த்தார்கள். ஆசி வாங்கவும் தீட்சை பெறவும் முண்டியடித்தார்கள்.
ஓய்வொழிச்சலில்லாமல் ஹைதராபாத்திலும் செகந்திராபாத்திலும் சேவையில் ஈடுபட்டு திருவண்ணாமலை திரும்பினார். நேரே மாமரக் குகையில் சென்று அமர்ந்தார். ஆறு மாதங்கள் தடங்கலின்றி தவமியற்றினார். அப்போது சென்னையிலிருந்து ஒரு அழைப்பு வந்தது.
சென்னையின் வர்ணாஸ்ரம சங்கம் நாடெங்கிலும் வசிக்கும் பண்டிதர்களை அவர்களது மாநாட்டில் கலந்து கொள்ள அழைப்பு விடுத்தது. தேசிய காங்கிரஸின் "தீண்டாமை ஒழிப்பு"க்கு எதிராக தீர்மாணம் எழுப்ப முடிவு செய்தார்கள். அச்சங்கத்தின் செயலாளருக்கு பண்டிட் மதன் மோகன் மாளவியா அந்த சந்தர்ப்பத்தில் சென்னையில் இருப்பதாக செய்தி கிடைத்தது. மாளவியாவிற்கு அழைப்பு விடுத்தார்கள். மாளவியாவும் கணபதி முனியும் அணுக்கமான ஸ்நேகிதர்கள். அவரைக் கூப்பிட்டு இவரைக் கூப்பிடாவிட்டால் பிசகு என்று கணபதி முனிக்கும் அழைப்பு அனுப்பினார்.
அவருக்கு கணபதி முனியின் முன்னேற்றக் கருத்துகளும் அதற்கான அவரது மேடை முழக்கங்களும் நன்கு தெரியும். இருந்தாலும் என்ன ஆகிறது பார்ப்போம் என்று கூப்பிட்டார்... அப்போது...
தொடரும்..

0 comments:

ஆடிய பிற ஆட்டங்கள்

Related Posts with Thumbnails