Friday, September 16, 2016

கணபதி முனி - பாகம் 44 : பேயன் பழம்

நாயனாவின் மருமகள் வஜ்ரேஸ்வரி கலுவராயிலிருந்து திருவண்ணாமலைக்கு வந்துசேர்ந்த போது கருவுற்றிருந்தாள். மகப்பேறு அண்ணாமலையில்தான் என்று திட்டம். அந்தக் காலக்கட்டத்தில் கணபதி முனி வழக்கம் போல் தவத்தில் ஆழ்ந்திருந்தார். தவயோகத்திலிருந்து விழிக்கும் சில சமயங்களில் எழுதுவதில் முனைப்பாக இருந்தார். சிஷ்யர் குழு ஒன்று எப்போதும் அவரைச் சுற்றியே வந்தது. நேரம் கிடைக்கும் போதெல்லாம் கதை சொல்லிவந்தார். கதை சொல்லும் போது அப்படியே தங்குதடையில்லாமல் புத்தகத்தைப் படிப்பது போன்றோ அல்லது காட்சியை நேரே பார்ப்பது போலவோ ரசனையுடன் வர்ணிப்பார்.
"பூர்ணா" என் கிற அவரது ஒரு நாவலைத் தவிர மற்றவையெல்லாம் ஆவணப்படுத்த தவறிவிட்டார்கள். சாயங்கால வேளைகளில் தன்னைச் சந்திக்க வந்த பக்தர்களிடம் பகிர்ந்து கொண்ட கதை "பூர்ணா". வீரதீரத்துடன் அர்ப்பணிப்புணர்வுடன் பொதுஜனத்துக்காகப் போராடுவதே இக்கதையின் அடிநாதம். இக்கதையின் மூலமாக சமூக-அரசியல் அமைப்பை அலசிப் புதினம் படைத்திருந்தார் கணபதி முனி.
ஒரு நாள் இக்கதையை தனது மகன் மஹாதேவனிடமும் மற்றும் சில பக்தர்களிடமும் அருணாசலேஸ்வரர் கோயிலின் வெளிப்பிரகாரத்தில் அமர்ந்து விவரித்துக்கொண்டிருந்தார். காற்று தலைகோதிக்கொண்டிருந்தது. கேட்டுக்கொண்டிருந்தவர்கள் கணபதி முனியின் கதைசொல்லலில் லயித்திருந்தார்கள். அப்போது பெயர்தெரியாத யாரோ ஒருவர் அங்கே வந்தார். அவர் கையிலிருந்த தாம்பாளத்தில்வாழைப்பழங்கள் சீப்பு சீப்பாக இருந்தது.
இருகைகளால் அந்தப் பழங்களை கணபதி முனியின் காலடியில் வைத்தார். அது "பேயன்" பழம். அவரின் நடவடிக்கைகள் வித்யாசமாக இருந்தது. விழி உருட்டிப் பார்த்தார். சிரித்தார். பின்னர் விடுவிடுவென்று கிழக்கு கோபுர வாசல் நோக்கிச் சென்றார்.
"மஹாதேவா.. நீ சென்று அவர் எங்கே செல்கிறார் என்று பார்த்து வா..." என்று தனது மகனின் தோளைத் தட்டினார். ஓட்டமும் நடையுமாக மஹாதேவன் அந்த பக்தரைப் பின் தொடர்ந்து ஓடினார். சற்று நேரம் கழித்து மஹாதேவன் திரும்பினார்.
"கண்டுபிடித்தாயா? யாரென்று கேட்டாயா?" என்று கணபதி முனி வினவினார். உதடு சுழித்து "ஊஹும். அவரைப் பிடிக்க முடியவில்லை. நான் நெருங்கிவிட்டேன் என்று நினைக்கும் போது பேய்க் கோபுரம் வழியாக வெளியே சென்று மறைந்துவிட்டார்" என்று ஆச்சரியம் பொங்கும் விழிகளோடு சொன்னார்.
"இந்தப் பழத்திற்கான மகத்துவம் தெரியுமா?" என்று அங்கு கதை கேட்க அமர்ந்திருந்தவர்களிடம் கேட்டார். ஒருவருக்கும் புரியவில்லை. கணபதி முனி என்ன சொல்லப்போகிறார் என்று ஆர்வத்துடன் பார்த்தார்கள்.
"இந்த பேயன் வகை வாழைப்பழங்கள் டயேரியா என்னும் வயிற்றுப் போக்குக்கு நல்லது. திருவண்ணாமலைச் சுற்றுவட்டாரத்தில் கொஞ்ச நாட்களாக இது கிடைக்கவில்லை."
மஹாதேவனுக்கு இப்போது புரிந்தது. அவரது மனைவி வஜ்ரேஸ்வரி டயேரியாவினால் அவதிப்பட்டு வந்தார். பின்னர் கதை முடிந்து கலையும் போது மஹாதேவன் அதைச் சொல்ல அனைவரும் அசந்துபோனார்கள்.
**
மார்ச் 1926லிருந்து கணபதி முனியின் மனைவி விசாலாக்ஷிக்கு தேக அசௌகரியம் ஏற்பட்டது. என்னவென்று பார்த்ததில் ஜபதபங்கள் செய்யும் போது நெற்றிக்கு இட்டுக்கொள்ளும் விபூதியைக் கொஞ்சம் கொஞ்சம் வாயில் போட்டுக்கொண்டதால் வந்திருக்கலாம் என்று நினைத்தார்கள். நலம் குன்றிய போதும் அவரது ஸ்ரீவித்யா உபாசனை ஜபத்திற்கு குறைவேதுமில்லாமல் பார்த்துக்கொண்டதோடு குண்டலினி பாய்வதையும் அனுபவிக்கமுடிந்தது.
கோகரணத்தில் தீக்ஷித தத்தாத்ரேயா என்பவர் யாகம் ஒன்று நடத்துகிறார் என்று செய்தியனுப்பி கணபதி முனியை வரச்சொன்னார். விசாலாக்ஷியின் உடல்நிலையைக் கருத்தில் கொண்டு அந்த அழைப்பை மறுத்தார். தேவவிரதன் கோகர்ணத்தில் ஒரு ஆஸ்ரமம் அமைத்திருந்தார். கோரக்ஷணத்திற்காகவும் பிரம்மச்சாரிகளுக்கு வேதம் கற்றுக்கொடுப்பதிலும் தீவிரம் காட்ட உத்தேசித்தார்..
1925லேயே நாயனா இதற்கு ஒப்புதல் அளித்திருந்தார். இந்த ஆஸ்ரமத்தை கல்பகால ரிஷிகளின் ஆஸ்ரமங்களைப் போன்று அமைக்க எண்ணினார். கணபதி முனியை இந்த ஆஸ்ரமத்திற்கு அழைத்தார். அவரது வழிகாட்டுதலும் அறிவுரைகளும் இதை இன்னும் மேம்படுத்தும் என்று நம்பினார்.
”இந்த ஒரு ஆஸ்ரமம் மட்டும் போதாது. இது போல இன்னும் நிறைய ஆஸ்ரமங்கள் இதைப் பின்பற்றித் தொடங்கப்பட வேண்டும்” என்று தன்னுடைய ஆவலைத் தெரிவித்தார் கணபதி முனி. ஆகையால் தேவவிரதனையே அந்த ஆஸ்ரமத்திற்கு தலைமையேற்று நடத்தச் சொன்னார். "இது ஒரு முன்மாதிரியாக விளங்கி நாட்டில் பலர் இதுபோன்ற புண்ணியக் காரியத்தில் ஈடுபடவேண்டும்" என்று ஆசிகூறினார்.
பரதாழ்வார் ஸ்ரீராமனின் பாதுகைகளை வைத்து ஆட்சி புரிந்தது போல தேவவிரதன் கணபதி முனியின் பாதுகைகளைக் கேட்டு வாங்கி வந்து அவைகளை ஆஸ்ரமத்தலைமையாக ஏற்று நடத்தினார். மேலும் நந்தினி முத்ரனாலயா என்ற அச்சகத்தை வாங்கி அதில் தனது குருவின் புத்தகங்களை அச்சிட்டு வெளியிட்டார். தேவவிரதனின் சகோதரர் சீதாராம் பண்டாரி அந்த அச்சகத்தின் மேற்பார்வை பொறுப்பு ஏற்றார்.
விசாலாக்ஷியின் உடல் நிலைமை கொஞ்சம் கொஞ்சமாக மோசமடைந்துகொண்டிருந்தது. இருந்தாலும் ரமணாஷ்ரமம் சென்று வரும் வைராக்கியம் குறையவில்லை. ஸ்ரீவித்யாவைத் தோற்றுவித்தவரான தெக்ஷிணாமூர்த்தியே மனித உருக்கொண்டு பகவான் ரமணராக அவதரித்திருக்கிறார் என்று பரவசமாகக் கூறுவார். தக்ஷிணாமூர்த்தி என்பது "தக்ஷிண அம்ருதி" என்று விளக்கமெடுத்துக்கொண்டார்.
1926ம் வருடம் ஏப்ரல் மாதம் வஜ்ரேஸ்வரிக்கு இரண்டாவது குழந்தை பிறந்தது. அப்பு அந்தக் குழந்தையின் பெயர்சூட்டு விழாவிற்கு வராதது வினோதமாக இருந்தது. நாயனாவும் விசாலாக்ஷியும் சம்சார பந்தத்திலிருந்து வெளியேறி தபஸ் செய்துகொண்டிருந்த வேளையில் அப்புதான் வஜ்ரேஸ்வரியை எடுத்து வளர்த்தார். அவரது மனைவி காமாக்ஷியும் தம்பி கல்யாணராமனும் ரமணரையும் நாயனாவையும் தெய்வமாக மதித்தார்கள். வணங்கினார்கள். அப்பு வராது பெருங்குறையாக இருந்தது. தனக்கு இன்னவென்று தெரியாத வலி ஏற்படுவதாகவும் அதனால் ஏற்படும் உபாதைகளால் கலந்துகொள்ள முடியவில்லை என்று நாயனாவுக்குச் செய்தி அனுப்பினார்.
விசாலாக்ஷிக்கு இது ஆன்மிக யோக சாதகத்தினால் வரும் வலி என்று புரிந்தது. நாயனா உடனே செகந்திராபாத் கிளம்பிச் சென்று வலிக்கான தீர்வைப் பரிந்துரைத்தார். உடனே அம்பாளை அழைத்து அப்புவின் இந்தச் சங்கடத்தைப் போக்க வேண்டிக்கொண்டார்.
அஞான த்வான்தான்தான் அஸஹ்ய ரோகாக்னி
கீல ஸந்தப்தான்
பாஸுரா ஸீதலத்ருஷ்டிப்ரபயா
பரதேவதா வாதாதஸ்மான்
பொருள்: கேள்வியுறாத நோயினால் துன்பத்தில் தவித்து அறியாமை இருளில் குருடாகி அலையும் எங்களை அம்பாள் அவளது கருணை பொழியும் குளிர்க் கண்களால் பார்த்துக் காக்கட்டும்.
அடுத்த நாளே அப்புவிற்குப் பூரணமாகக் குணமானது. நாயனா திருவண்ணாமலைத் திரும்பினார்.
ஜுன் மாதத்தில் அண்ணாமலைப் பல்கலைக்கழகம் மாணவர் சங்கத்துக்காகப் பேச அழைத்தது. முதலில் அவர் தயங்கினாலும் பின்னர் விசாலாக்ஷி சிதம்பரம் போகவேண்டும் என்று வற்புறுத்தியதால் ஒத்துக்கொண்டார். இருபது வருடங்கள் தென்னகத்தில் வசித்தாலும் சிதம்பரம் போன்ற புனிதத் தலத்துக்கு விஜயம் செய்யாதது விசாலாக்ஷிக்கு குறையாக இருந்தது.
விசாலாக்ஷியின் தேக அசௌகரியங்களுக்ககு மத்தியிலும் சிதம்பரம் சென்று ஜூலை பதினெட்டு 1926ல் திரும்பினார்கள். திரும்பியவுடனேயே விசாலாக்ஷி மீண்டும் "ஸ்ரீ வித்யா"வை வெறும் நீராகாரமாகக் குடித்துவிட்டு ஒன்பது நாட்கள் சாதகம் செய்தார்.
உடல் நலம் குன்றியும் ஆகாரமில்லாமல் விசாலாக்ஷி செய்யும் தவத்தால் நாயனா வருத்தமுற்றார். விசாலாக்ஷி தெரிந்து குண்டத்தில் இறங்குவது அவருக்கும் புரிந்தது...
தொடரும்..

1 comments:

'பரிவை' சே.குமார் said...

அருமை...
கணபதி முனி பின்னால் பயணிக்கிறேன் அண்ணா...

ஆடிய பிற ஆட்டங்கள்

Related Posts with Thumbnails