Tuesday, January 22, 2013

பாடலாத்ரி

திருமண நாளில் பாடலாத்ரி ந்ருஸிம்ஹப் பெருமாளைத் தரிசித்தது மனஸுக்குப் பரம திருப்தியாக இருந்தது. பாடலாத்ரி நரசிம்மர் க்ஷேத்திரம் எதுவென்று ஸ்ரீவைஷ்ணவர்களில் பலருக்குக் கட்டாயம் தெரிந்திருக்கலாம். எனக்கு சிங்கபெருமாள் கோயில் நரசிம்மர் என்றுதான் கோயிலுக்குள் காலடியெடுத்து வைக்கும் வரை தெரியும்.

உக்ர நரசிம்மராக சிவந்த (பாடலம்) இம்மலையில் (அத்ரி) தோன்றியதால் பாடலாத்ரி நரசிம்மர். தொண்டை நாட்டில் சிற்பக்கலையில் சிறந்து விளங்கிய பல்லவர்களின் சாம்ராஜ்யத்தில் குடையப்பட்ட குடைவரைக் கோயில். இக்கோயில் குடைந்த காலத்தில் இந்தப் பிரதேசம் முழுவதும் குன்றாகவோ மலையாக இருந்திருக்கவேண்டும்.

“நரசிம்மருக்கு தொளசி மால வாங்கிக்கப்பா” என்று ஒரு தொள்ளைக் காது ரவிக்கையில்லாப் பாட்டியும் “சார்! துள்சி மாலே” என்று டப்பாக் கட்டு கட்டிய வேட்டிக்காரரும் கோயில் வாசலில் நமக்கு மாலை சார்த்துவது போல நெருங்கினார்கள். உள்ளே நுழைந்து சந்நிதிக்கு செல்லும் வழியில் பிரசாத கவுண்டர் பரபரப்பாக இருந்தது. சொற்ப மக்கள் மண்டபத்து தரையிலெல்லாம் புளியோதரையைச் சிந்திச் சாப்பிட்டுக்கொண்டிருந்தார்கள். வெளியே புளியோதரை சாப்பிட்டுக்கொண்டிருந்தவர்களை விட உள்ளே சந்நிதியில் பக்தர்கள் எண்ணிக்கை குறைவாகத்தான் இருந்தது. தள்ளுமுள்ளில்லாமல் தரிசிக்கலாமென்றால் காலை மிதித்து அவசரமாய்ப் பாய்ந்து சென்றார் ஒருவர். எங்களுக்கு முன்னால் பாய்ந்தவரும் நாங்களும் நான்கடி வித்தியாசத்தில் ஒருசேர ஸ்வாமி பார்த்தோம்.

நெய் தீபாராதனைக் காண்பிக்கும் போது நரசிம்மரின் நெற்றியில் வெள்ளைச் சிவப்புக் கற்கள் டாலடித்த அலங்கார நாமத்தை அசால்டாய் விலக்கி மூன்றாவது கண்ணைக் காண்பிக்கிறார் பட்டர்பெருமான். பெரிய மூர்த்தம். வல இடப் புறங்களில் தேவிமார்கள். ”எல்லோரும் நன்னா ஸேவிச்சுக்கோங்கோ....இந்த க்ஷேத்திரத்தில மட்டும்தான் நரசிம்மர் வலது காலை மடிச்சுண்டு இடது காலை தொங்க...” என்பது வரை சன்னமாகக் காதில் விழுந்தது. கண்ணத்தில் போட்டுக்கொண்டோம். தீர்த்தம் சாதித்தார். மீண்டும் துளசிக்கு கையேந்தினால் “தோ...” என்று சந்நிதிக் கோடியில் கிடந்த டேபிளைச் சுட்டினார். வாசலில் தொ.காது பாட்டியும் ட.வேஷ்டியும் விற்றவைகள் புனிதப்பட்டு மூலையில் கிடந்தன. ”மாமா...சடாரி...” என்ற என் இழுவைக்கு “திருமஞ்சனத்துக்கப்புறம்தான்..” என்று வெளியே வழி காண்பித்து ஜருகண்டியைச் வாயால் சொல்லாமல் விழியால் சொன்னார்.

திருவலம் வர முடியாதபடி பாறைகள் சூழ்ந்த சந்நிதி. அஹோபிலவல்லித் தாயாரை வழிபடும் போது “தாயாரைப் பார்த்துட்டுதான் பெருமாளைப் பார்க்கணும். வேளுக்குடி கிருஷ்ணன் சொல்லிருக்கார்.” என்றேன். மூளைக்குள் வேளுக்குடியின் குரல் கேட்டது. தாயார் சந்நிதி பட்டர் ஆமோதிப்பது போல் சிரித்தார். “ஏன்?” உரக்க எட்டூருக்குக் கேட்கும்படியாக சந்தேகம் கேட்டாள் பெரியவள். ”தாயார்தான் ரொம்பவும் இளகின மனஸுக்காரி. தன்னண்ட வந்த பக்தாளுக்கு கடாக்ஷம் பண்ணச் சொல்லி அவ ரெக்கமெண்ட் பண்ணினா ஒடனே பெருமாள் ஒத்துண்டுடுவார்”ன்னு ஒரு ப்ரவசனத்துல சொல்லிக் கேட்டிருக்கேன்-னேன். குங்குமம் வாங்கித் தரித்துக்கொண்டு மிச்சத்தை தூணில் கொட்டாமல் டெய்லி ஷீட்டில் மடித்துக்கொண்டு நகர்ந்தோம்.

பத்துப் பனிரெண்டு படியேறி ப்ரதக்ஷினம் வந்தோம். ஸ்வாமிக்கு பின்புறம் இருந்த பாறைக்கருகில் இருந்த மரத்தைச் சுற்றி அணிந்திருந்த வஸ்திரத்திலிருந்து நூல் உருவிப் போடச் சொல்லியும் அதற்குண்டான பலாபலன்களையும் அப்பாறையில் எழுதி வைத்திருந்தார்கள். சுடிதாரில் எந்த இடத்திலிருந்து நூல் இழுப்பது என்று ஒரு ஜோடி துணி நாடி பார்த்துக்கொண்டிருந்தது. கொடிமரத்துக்கருகில் நமஸ்கரித்து எழுந்ததும் ஜெர்ரியை இழுக்கும் பாலாடைக்கட்டித் துண்டுபோல புளியோதரை வாசனை எங்களையும் அகலவிடாமல் சுண்டி இழுத்தது. ஒரு தொன்னை பத்து ரூபாய்க்கு விற்றார்கள். நங்கை ஆஞ்சு கோயிலில் இதேயளவு ப்ரசாதம் ஃப்ரீயாகவும் சூடாகவும் வழங்குவார்கள். இரண்டு வாங்கி நான்கு பேரும் ஆளுக்கு பாதி தரையிலிடாமல் வாயில் போட்டுக்கொண்டு எங்களின் புளியோதர ஆசையை நிவர்த்தி செய்துகொண்டோம்.

துவஜஸ்தம்பத்துக்கு சமீபத்தில் கோயில் சுவற்றில் கருப்புக் கலர் ஆயில் பெயிண்ட்டில் கட்டம் கட்டியிருந்தார்கள். வெள்ளையில் ஜாபாலி ரிஷிக்கு பிரதோஷ வேளையில் காட்சி கொடுத்த ஸ்தல புராணம், மூர்த்தியின் பெயரெல்லாம் எழுதியிருந்தது. படித்துக்கொண்டே கண்கள் தரைதொடும் இடத்தில் கருப்பில் நஞ்சை 35 ஏ, புஞ்சை 75 ஏ என்று நுணுக்கி நுணுக்கி எழுதி ஆண்டு வருமானம் பத்து எழுதி அடித்து பதினைந்து எழுதி அடித்து ரெண்டும் கலந்து என்னவென்று புரியாத சில லட்சங்கள் என்று தெளிவாக எழுதியிருந்தார்கள். அவ்ளோ சொத்துள்ள கோயில் போலத் தெரியவில்லை. துளசிமாலையணிந்த நரசிம்மரும் செல்வந்தராகத் தெரியவில்லை. பூஸ்திதியிருந்தும் புராதனத்தைக் காப்பாற்றும் வகையில் மராமத்துப் பணிகள் செய்கிறார்கள் என்று மனசுக்குள் சமாதானம் சொல்லிக்கொண்டேன்.

வெளியேரும் இடத்தில் பெருமாளுக்கு நெய்வேத்தியம் செய்த பச்சக்கற்பூரம் தட்டிப் போட்ட பானகம் ஒரு டம்ப்ளர் கொடுத்தார் ஒரு ப்ரார்த்தனை செய்துகொண்ட அம்மணி. தேவாமிர்தமாக இருந்தது. கார் பார்க்கிங்கிற்கு நடந்து செல்லும் போது சன்னதித் தெருவின் கடைக்கோடி வீட்டு வாசலில் ட்யூஷன் ஜரூராக நடந்துகொண்டிருந்தது. அந்திப் பொழுதில் அக்காவும் தம்பியுமாக பொடிசுகள் வாய் விட்டுப் பாடம் படித்துக்கொண்டிருந்தார்கள். மாலை முழுவதும் படிப்பு. தூரத்திலிருந்து நரசிம்மர் பார்த்துக்கொண்டிருந்தார். சூரியன் அடிவானத்தில் மறைவதற்கு தயாராய் இருந்தான். சின்னவள் காதில் மாட்டியிருந்த ரிங் மாஸ்டர் வளைய சைஸ் தோடுகளைப் பார்த்து அலங்காரப் ப்ரிய அக்கா மாணவிகள் வாய் பொத்திச் சிரித்துக்கொண்டார்கள். டீச்சரும் தான்.

வண்டியைக் கிளப்பியபோது கார்க் கண்ணாடிக்கெதிரே மேல் உத்தரீயமும் பஞ்சகச்சமும் நெற்றி நிறைய திருமண்ணுமாக மீண்டும் வேளுக்குடியார் சூட்சும சரீரமாய்த் தெரிந்தார்.

“மொத்தம் மூணு நரசிம்மர் இருக்காராம்” என்றேன்.

“மூணா? என்ன பக்கத்தாத்து நரசிம்மமூர்த்தி மாமா மாதிரி இன்னும் உங்களுடைய ஃப்ரெண்ட்ஸ் ரெண்டு பேரைச் சேர்த்துச் சொல்றேளா?”

”ஊஹூம். ஒவ்வொரு நரசிம்மராச் சொல்றேன். வேளுக்குடி கிருஷ்ணன் ஸ்வாமிகள் சொன்ன அதே வரிசையில.. எனக்குச் சொல்லத் தெரிஞ்ச வரையில...”

கோரஸாக மூன்று “ம்..” காருக்குள்ளிருந்து கேட்டது.

“ஹிரண்யகஸிபுகிட்டேர்ந்து பக்த பிரஹ்லாதனுக்கு அனுக்கிரஹம் பண்ணினது நர சிம்மம். இரண்டாவதா இராகவ சிம்மம் ஒன்னு உண்டு. ராவணாதிகள் கூட சண்டை போடும் போது கொழந்தேள்கிட்ட விளையாடற மாதிரி அம்பு போட்டுண்டிருந்தானாம் ராமன். கடைசியில பரம பக்தனான ஆஞ்சநேயர் மேல அம்பு போட்டு அவரை ஹிம்சிச்சதும் இராகவ சிம்மம் கொதிச்சு எழுந்து அவனை ஒரே அம்புல சம்ஹாரம் பண்ணித்தாம். அப்பறம் யாதவ சிம்மம். குருக்ஷேத்தரத்தில் பீஷ்மர் உக்ரமா சண்டை போடறார். எதிர்த்தாப்ல யாராலையும் நிக்க முடியலை. கிருஷ்ணன் மேலேல்லாம் அம்பைப் பொழியறார். அவனுக்கே ரத்தமா கொட்றது. கடைசியா தன் பக்தன் பார்த்தன் மேலே கொல்றதுக்கு பீஷ்மர் அம்பு போட ஆரம்பிச்சதும், பகவான் பதறிப்போய்ட்டார். ஆயுதம் ஏந்த மாட்டேன்னு சொன்னவர் சக்கரத்தைத் தூக்கிண்டு பீஷ்மரைக் கொல்லக் கிளம்பிட்டார். அப்புறமா அர்ஜுனன் வந்து சமாதானம் பண்ணி அழைச்சுண்டு போனான். நர சிம்மம், இராகவ சிம்மம், யாதவ சிம்மம்ன்னு மூணு சிம்மமுமே பக்தனுக்கு எதாவது பாதகம் வந்துடுத்துன்னா பொருக்கமாட்டா”

“பாம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்” கேட்பவர் காதையும் காற்றையும் கிழித்துக்கொண்டு லோடேற்றிய லாரி சிம்மங்கள் மெயின் ரோடில் பறந்தன.

சிங்கபெருமாள் கோயில் சிக்னலுக்கு நிற்காத அடங்காப்பிடாரி பஸ்கள் போகவிட்டு, சாஸ்திரத்திற்கு அங்கு நின்ற போலீஸின் உதவிக்கரத்தை எதிர்பார்க்காமல் “ஈஸ்வரோ ரக்ஷிது” என்று தெய்வபலத்தில் ஜியெஸ்டி ரோடு எதிர்புறம் தாண்டி தாம்பரம் பக்கம் ஸ்டியரிங்கைத் திரும்பினேன்.

“நேரா ஆத்துக்காப்பா... “ என்ற சின்னவளின் கேள்விக்கு..

“ஊஹும்.. அடியவருக்கு அமுது படைத்த ஆண்டவனின் தலத்துக்கு.....” என்றேன்.

“எங்க?”

சிரித்தேன்......

(தொடரும்)

15 comments:

Yaathoramani.blogspot.com said...

சமீபத்தில்தான் அந்த ஆலயம் போய்வந்தேன்
தங்கள் பதிவு முழுதும் படித்துப்
பின் ஒருமுறை போக ஆசை
தொடர வாழ்த்துக்கள்

Yaathoramani.blogspot.com said...

tha.ma 2

ஸ்ரீராம். said...

சமீபத்திய அவசர மதுரைப் பயணத்தின் வழியில் இந்தக் கோவில் ஸ்டாப்பிங் கண்டதும்' இன்னமும் பார்க்கலையே' என்று தோன்றியது. இன்னும் ஒரு வருடம் எந்தக் கொவிலுமே போக முடியாத நிலையில் உடனடி உங்கள் இதே கோவில் குறிப்புகள் சிலிர்க்க வைக்கிறது.

ADHI VENKAT said...

புதிதாக ஒரு கோவிலை பற்றி தெரிந்து கொள்ள முடிந்தது. அடுத்து என்ன கோவில் என்று ஆவலுடன்...

பத்மநாபன் said...

பாடலாத்ரி ஒவ்வொருமுறையும் தவறாமல் குறைந்தது இருமுறையாவது செல்லும் ஸ்தலம்...அதனால்
வர்ணனைகள் அனைத்தும் மிக நெருக்கமாக இருந்தது... அடிக்கடி அழைக்கும் அகோபிலவல்லி நாயகன்...
அடுத்த தடவை செல்லும் பொழுது, இடப்புறத்தில் ஆண்டாள் சந்நிதி குடைவரைக் கோவிலின் அற்புதத்தை தரிசித்து வரவும் ...

சனி..ஞாயிறுகளில் பொடிஎண்ணையோடு மிளகு தோசை பிரசித்த பிரசாதம் ...

இராஜராஜேஸ்வரி said...

பாடலாத்ரி விவரிப்புக்குப் பாராட்டுக்கள்.

வெங்கட் நாகராஜ் said...

நல்லதோர் தல வரலாறு - மைனரின் டச்சோடு!

அடுத்த கோவில் எதுவென தெரிந்து கொள்ளும் ஆர்வத்துடன்...

மாதேவி said...

பாடலாத்ரி தர்சனம் பெற்றோம்.

புதிய பல கோயில்கள் பற்றி அறிந்து கொள்ளக் கிடைத்தது.

RVS said...

@Ramani
அமைதியான சூழலில் அழகான கோயில். திருப்தியாக இருந்தது. கருத்துக்கு நன்றி சார். :-)

RVS said...


@ஸ்ரீராம்.
நன்றி ஸ்ரீராம். விவரம் அறிந்தேன். வருந்துகிறேன்.

RVS said...

@கோவை2தில்லி
எழுதிட்டேன். நன்றி சகோ! :-)

RVS said...

@பத்மநாபன்
ஆண்டாளைப் பற்றி எழுயிருக்கவேண்டும். நன்றி ரசிகமணி அவர்களே! :-)

RVS said...


@இராஜராஜேஸ்வரி
நன்றி மேடம். :-)

RVS said...@வெங்கட் நாகராஜ்
நன்றி தலைநகரமே! அடுத்து திருக்கச்சூர். :-)

RVS said...

@மாதேவி
கருத்துக்கு நன்றிங்க.. :-)

ஆடிய பிற ஆட்டங்கள்

Related Posts with Thumbnails