Wednesday, May 16, 2012

வைகல்


”வைகல் இன்னும் எவ்வளவு தூரம்?”

திருநீலக்குடி தாண்டி புளிய மர நிழலில் தள்ளுவண்டியில் சாத்துக்குடி ஜுஸ் கடை போட்டிருந்தவரிடம் கேட்டபோது ஹிஸ் அடித்தக் கீச்சுக் குரலில் “நேரா மேக்கால போங்க.. ஒரு பாலம் வரும்.. அதில தெக்கால கொஞ்ச தூரம் போனா வைகல் வரும்” என்றார். ”ஸ்ட்ரெயிட்டா போய் ஃபர்ஸ்ட் ரைட் அப்புறம் செகண்ட் லெஃப்ட்” என்று இதுகாரம் வழியறிந்த என் வாரிசுகள் ”தெக்கால மேக்கால” என்று திசையில் வழிகேட்டு திக்குமுக்காடிப்போனார்கள்.

அவர் சொன்ன மேற்கால போய்க்கொண்டே இருந்ததில் வலதில் ஒரு பழையப் பாலம் வந்தது. பாலத்துக்குப் பக்கத்தில் தென்னக கிராமங்களில் ஒட்டிப் பிறந்த ஒரு டீக்கடையும் இருந்தது. கொடிமரங்கள் நிறைந்த அந்தப் பகுதிதான் ஒரு பேருந்து நிறுத்தமாகவும் செயல்பட்டு வந்தது. அங்கே டவுனுக்குப் போக கையில் பாலிதீன் பேக்குடன் காத்திருந்த ஒரு சிகப்புக் கண்ணாடி வளையல் அம்மாளிடம் “வைகல் இப்படிப் போலாங்ளா?” என்று கேட்டதற்கு

“இப்டியே நேரா நாட்டார் வாய்க்கால் தாண்டி போனீங்கன்னா ஒரு கிலோ மீட்டர்ல வரும்” என்று சொல்லிவிட்டு ஜன்னல் எட்டிப் பார்த்த என் இளையவளைப் பார்த்து கடைவாய்ப் பல் தெரிய சிரித்தாள் அந்தம்மா. கன்னம் சிவக்கும் வெட்கத்தில் தலையை உள்ளுக்கு இழுத்துக்கொண்டாள் என் பெண்.

அவர் கைகாட்டிய திக்கில் ஒரு சிங்கில் பெட் ரோடு. சரசரவெனப் பிடித்தால் இரண்டு கி.மீட்டரில் சாகுபடி முடிந்த வயற்வெளிகளுக்கிடையில் மேய்ந்துகொண்டிருந்த மாடுகளுக்கிடையில் ஏதோ ஒரு குக்கிராமம் போலவும் நடுவே ஒரு சில தலைகளும் தெரிந்தன. துள்ளிக் குதித்த தாய் ஆடு தனது குட்டிகளுடன் நுழைந்த முள்வேலியில் பார்டர் போட்ட வீட்டைக் கடந்தவுடன் அந்தக் கிராமத்தில் மொத்தமாகவே இரண்டு தெருக்கள் இருந்தது. அதிக பட்சமாக புழுதி பறக்க நாங்கள் பயணித்து வந்த அந்த செம்மண் “மெயின்” ரோட்டையும் சேர்த்து மூன்று ராஜ வீதிகள். ஊருக்குள் நுழையும் இடத்தில் ஓரமாக அரசாங்க செலவில் ஒரு அடிபைப் போட்டிருந்தார்கள். தேகம் துருப் பிடித்திருந்த அந்த இரும்புப் பைப்பின் கைப்பிடி பளபளவென்று இருந்ததில் அவ்வூரில் இருந்த பத்து குடும்பத்திற்கு வாரி வாரி தண்ணீர் தரும் பைப் என்று தெரிந்தது.

வைகல் ஒன்றும் பெரிய கோவில் இல்லை. ராஜகோபுரம் கிடையாது. பெரிய மதிற் சுவர்கள் கிடையாது. மூலவர் சுயம்பு. ஒரு காலத்தில் செண்பகாரண்யமாக இருந்த இடம். கோச்செங்கட் சோழன் கட்டிய யானை ஏறாக் கோயிலெனப்படும் மாடக்கோயில் வகையறாவில் ஒன்று.

”குருக்கள் வருவாருங்களா?” பக்கத்து குட்டையிலிருந்து ப்ளாஸ்டிக் குடம் ஏந்தி குனிந்து வந்த பெண்மணியிடம் கேட்டேன்.

“தோ வாரேன்!” என்று பக்கத்தில் உதயசூரியன் போட்ட சிமெண்ட் ஜன்னல் வீட்டிலிருந்து கோயில் சாவி எடுத்து வந்தார். டிராயரை அரணாக் கயிரில் சொருகிய சட்டையில்லாத ஒரு பையன் எட்டிப் பார்த்தான்.

“மெய்க்காவல்...” என்று இழுத்த என்னிடம் “நாங்கதான்” என்றார்.

”ஆடுதுறையிலிருந்து தான் வரணும். தெனமும் ஒரு வேளை பூசைக்குதான் ஐயிரு வருவாரு” என்று குறைப்படும் தொனியில் பேசினார் அந்த அம்மணி.

கதவைத் திறந்துவிட்டு சந்நிதி வரை கூட வந்தார். தீபாரதனைத் தட்டை கொடுத்து “நீங்களே காமிங்க”. என்னுடைய மயில்கண் வேஷ்டியும் நெற்றியில் பட்டையாய் தரித்திருந்த விபூதியும் நான் அதற்கு தகுதியான ஆள் தான் என்று அவருக்கு தோன்றியிருக்கக்கூடும். நான் பாக்கியம் பெற்றவனானேன். சுயம்பு லிங்க மூர்த்திகளை சேவிப்பதற்கே புண்ணியம் செய்திருக்கவேண்டும் என்பார்கள். தீபாராதனை காண்பிப்பது என்றால் எவ்வளவு பெரிய பேறு!

”நமஸ்தே அஸ்து பகவன்” என்று ருத்ரத்திலிருந்து ஒரு ஸ்லோகம் செய்து வழிபட்டு “தென்னாடுடைய சிவனே போற்றி.. எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி”யுடன் ஒரு ஆரத்தி எடுத்து மகிழ்ந்தேன்.

கையில் கொண்டு போயிருந்த தேவாரத் திருத்தலங்கள் புத்தகத்திலிருந்து கீழ்கண்ட தேவாரப்பாடல் படித்தது ஞாபகத்திற்கு வந்தது.
துளமதி யுடைமறி தோன்று கையினர்
இளமதி யணிசடை யெந்தை யாரிடம்
உளமதி யுடையவர் வைக லோங்கிய
வளமதி தடவிய மாடக் கோயிலே


துள்ளும் மானை கரத்தில் ஏந்தியவனும், பிறைச் சந்திரனை சடையிலணிந்தவனுமான என் தந்தை சிவபிரானை வணங்கும் மதி நிறைந்தவர்கள் தொழும் வைகல் கோயிலானது வானத்தில் வளரும் நிலவை தொடும் மாடக்கோயிலே என்று சம்பந்தர் பாடியிருக்கிறார்.

துளமதி, இளமதி, உளமதி, வளமதியை மதிநுட்பத்தோடு எழுதியிருக்கும் ஞானப்பால் குடித்த சம்பந்தன் நமக்களித்த தமிழ்ப்பால் அந்த தேவாரப்பாடல்.

மதி நிறைந்தவர்கள் தொழும் வைகலை இக் குறைமதியோனும் தொழுதேன்!

#தீர்த்தயாத்திரைக் கதைகள் வளரும்...

17 comments:

Unknown said...

படிப்பவர்களுக்கு சுவை தரும் இயல்பான நடை! நன்று!

புலவர் சா இராமாநுசம்

Unknown said...

எத்தனை பேருக்கு
இந்த அரும் பாக்கியம் எல்லாம் கிடைக்கும்
வாழ்க மைனர் வாள்.
அருமையான புகைப்படம்
இன்னும் நகரம் புகா கிராமங்கள் இருப்பது கண்டு சந்தோசமே

மனோ சாமிநாதன் said...

யாத்திரை அனுபவம் மிக அருமை! நம் மாவட்டத்தில் இடை இடையே காணப்படும் சிறு சிறு ஊர்கள் இப்படித்தான் இன்னும் இருக்கின்றன! அதை அப்படியே படம் பிடித்திருக்கிறீர்கள்!

சுசி said...

ஓ....மிக நன்று ! இறைவன்,இறைவி நாமங்கள் என்ன சார்? கோவிலையும் படம் பிடித்து இணைத்திருக்கலாமே. மேலும் படங்கள் இருந்தால் இன்னமும் நன்றாக இருந்திருக்கும்.

raji said...

அட!இது எப்போ?

தீபாராதனையும் செய்து தொழும் தரிசனமா? வேட்டியால் வந்த விசித்திரம்.நீறு தந்த நிறைவு.
என்ன பாக்கியம்!!

நகர வாடை படாத நிகரற்ற அழகு கொஞ்சும் கிராமங்கள் இன்னும் சில உண்டு.அந்த படத்தை அள்ளித் தந்தமைக்கும் வைகல் பதிவை தேவாரத் தமிழோடு அளித்தமைக்கும் நன்றி

RVS said...

@புலவர் சா இராமாநுசம்
பாராட்டுக்கு நன்றிகள் ஐயா! :-)

RVS said...

@Siva sankar
ஏதோ கொஞ்சம் புண்ணியம் பண்ணியிருக்கேன்னு நினைக்கிறேன். நன்றி! :-)

RVS said...

@மனோ சாமிநாதன்
கருத்துக்கும் பாராட்டுக்கும் மிக்க நன்றி மேடம். :-)

RVS said...

@Thanai thalaivi
இதை ஒரு தல புராணமாக எழுதாமல் அனுபவமாக எழுதினேன். அதனால் அது மாதிரியான விபரங்கள் தரவில்லை.

இறைவன்: வைகல்நாதர்
இறைவி: வைகலாம்பிகை

நன்றி! :-)

RVS said...

@raji
இந்த முறை ஒரு ஏழெட்டுக் கோயில்களுக்குச் சென்றேன். ஒவ்வொன்றாக பதிகிறேன்.
நன்றி! :-)

இராஜராஜேஸ்வரி said...

சுயம்பு லிங்க மூர்த்திகளை சேவிப்பதற்கே புண்ணியம் செய்திருக்கவேண்டும் என்பார்கள். தீபாராதனை காண்பிப்பது என்றால் எவ்வளவு பெரிய பேறு!

வாழ்த்துகள் !

தக்குடு said...

நேரா நாங்களும் போயிட்டு வந்த மாதிரி இருக்கு. அம்பாளோட பேர் மனசுல ஒலிச்சுண்டே இருக்கு 'வைகலா' 'வைகலா'........:)

சாந்தி மாரியப்பன் said...

அமைதியும் அழகும் போட்டி போடுது ...

படம் ரொம்பவே அழகா வந்துருக்கு..

RVS said...

@இராஜராஜேஸ்வரி
நன்றி மேடம்! :-)

RVS said...

@தக்குடு
ரொம்பவும் அமைதியான கிராமம். தூரத்திலிருந்து க்ரீச் க்ரீச் சத்தம் கேட்கிறது. ரசித்ததற்கு நன்றி தக்குடு!

RVS said...

@அமைதிச்சாரல்
உங்களை மாதிரி ஃபோட்டோகிராஃபர்களின் ஊக்குவிப்பு மகிழ்ச்சியாக இருக்கிறது மேடம்! :-)

சிவகுமாரன் said...

மண்ணில் நல்ல வண்ணம் வாழலாம் - வைகலும் எண்ணில் நல்ல கதிக்கு யாதும் ஓர் குறைவிலை" - இந்த தேவாரப் பாடல் தான் நினைவுக்கு வந்தது.
இது போன்ற பதிவுகளைப் படித்தாலே - மண்ணில் நல்ல வண்ணம் வாழலாம் .

ஆடிய பிற ஆட்டங்கள்

Related Posts with Thumbnails