Thursday, May 17, 2012

இலும்பையங்கோட்டூர்

யோக தக்ஷிணாமூர்த்தி

”தம்பிக்குதான் இதுமாதிரி இடமெல்லாம் கிடைக்கும்” என்று நடுங்கிய என் சித்தியின் பயத்தில் நியாயம் இருந்தது.

சுற்றிலும் மை பூசின கும்மிருட்டு. எங்கோ தொலைந்து போன நிலா. எந்நேரமும் மழை பொழியலாம் என்று உறுமும் வானம். வழியோரத்தில் புதர் புதராக கருவேலம் முள் காடு. முன்னால் செல்லும் எங்கள் வாகனத்தின் ஒளியைத் தவிர வெளிச்சமே இல்லை. தொடுவானத்தில் எங்கேயோ மெயின் ரோட்டில் போகும் பஸ்ஸின் ஒளித்தீற்றல்கள். கண்ணாடி வழியாக உற்றுப் பார்த்தால் தூரத்தில் உருவங்கள் நிற்பது போன்ற பிரமையேற்படுத்தும் செடி கொடிகள். எட்டு மணியைத் தாண்டி காட்டிய பச்சையில் ஒளிரும் ரேடியம் வைத்த கைக்கடிகாரம் ”நேரமாகிவிட்டது” என்று எச்சரித்தது.

அந்த கிராமத்திற்கு போகும் உட்சாலையிலிருந்து ஒரு ஒற்றை விளக்கு எங்களது குவாலிஸ்ஸை விடாமல் பின் தொடர்கிறது. கண்ணுக்கெட்டிய தூரம் வரை முன்னாலும் பின்னாலும் வேறு நடமாட்டமே கிடையாது. நாங்கள் ஆக்ஸிலேட்டரிலிருந்து காலெடுத்தால் அதுவும் நிற்கிறது. நாங்கள் விரட்டினால் அதுவும் விரட்டுகிறது.

“தம்பி! பயமா இருக்குடா” என்றார்கள்.

“ஸ்வாமி பார்க்க போறோம். ஓன்னும் ஆகாது” என்று உதடுகள் தைரியம் சொல்ல உள்ளம் கொஞ்சம் நடுங்கத்தான் செய்தது. இருந்தாலும் அந்தப் பரமனை நினைத்துக்கொண்டு நெஞ்சுரத்தோடு முன்னேறினோம்.

கிராமத்தின் பிரதான வீதியை அடைந்ததும் ஆங்காங்கே ஒன்றிரண்டு தெருவிளக்குகள் மங்கலாக எரிந்தன. பின்னால் வந்த எம்.80 சரேலென எங்களை முந்திச் சென்றது. பின்னால் திரும்பியதில் அதன் பற்கள் தெரிந்தது. நட்பாகச் சிரித்தார். அப்புறம்தான் இருட்டில் பாதுகாப்பாக எங்கள் பின்னால் வந்தார் என்று புரிந்தது. அவரிடமே கோயிலுக்கு வழிகேட்டோம்.

“ரைட்ல போங்க.. இந்நேரம் திறந்திருப்பாங்களா தெரியலையே” என்றார்.

நான், என்னுடன் வயதான இரண்டு சித்திகள், குழந்தைகள் மனைவி என்று ஏழெட்டுப் பேர் ஒரு சனிக்கிழமை திருத்தல யாத்திரையாக சென்னைக்குப் பக்கத்தில் தொண்டை நாட்டுத் தலமான இலும்பையங்கோட்டூருக்கு விஜயம் செய்தோம். படாளம் கூட் ரோடிலிருந்து கிளைச்சாலையில் பிரிய வேண்டும். எலுமியன்கோட்டூர் என்று மக்கள் வழக்கில் இருக்கும் கிராமம் அது.

அந்த ஓரத்திலிருந்து கசிந்த வெளிச்சத்தைப் பார்க்கையில் கோயில் திறந்திருந்தது போலத்தான் இருந்தது. பக்கத்தில் வந்தும் கதவடைத்துவிடப்போகிறார்கள் என்று பதைத்தேன். நல்லவேளை திறந்திருந்தது. நாலைந்து அந்தணச் சிறுவர்கள் பட்டை பட்டையாய் திருநீறணிந்து உள்ளே உலவிக்கொண்டிருந்தார்கள்.

ஒரு ஜான் அளவிற்கு குடுமி வைத்த சிறுவன் ஒருவன் நாலு முழத்தை எட்டு முழம் போல இடுப்பில் சுற்றிக்கொண்டு அதற்கு மேலே சிகப்புக் காசித்துண்டு கட்டி ருத்ராட்ச கழுத்தோடு அழகன் முருகன் போல நின்றான்.

“நடை சார்த்திருக்குமோன்னு பயந்துட்டேன்” என்றேன்.

“இனிமே தான் அர்த்த ஜாமம் ஆகப்போறது” என்ற அந்தப் பையனை உற்றுப்பார்த்தேன். நல்ல தேஜஸாக இருந்தான்.

”நீங்கெல்லாம் யாரு“ என்றேன்.

“பக்கத்தில வேத பாடசாலை இருக்கு. அங்க வேதம் கத்துக்கறோம்” என்று அவன் சொல்லும்போதே உச்சரிப்பில் வேதம் வழிந்தது.

“அர்ச்சனை இருக்கா?” என்று கேட்டேன்.

“இல்ல. தீபாராதனை போதும்” என்றேன்.

குறைந்த வெளிச்சத்தில் கணீரென்று ஸ்ரீருத்ரம் சொல்லி அந்தப் பையன் காட்டிய தீபாராதனையில் சிவபெருமான் நேரே வந்து காட்சிகொடுத்தது போலிருந்தது. கற்பூர ஆரத்தியில் ஈஸ்வரன் ஜொலித்தார்.

சிவ வழிபாடு முடிந்து திருவலம் வருகையில் கோஷ்டத்தில் சின் முத்திரையுடன் இருக்கும் யோக தக்ஷிணாமூர்த்தியின் எழில் காணக் கண்கோடி வேண்டும்.

இரம்பை பூஜித்த தலம் அரம்பையங்கோட்டூர். திருஞானசம்பந்தர் பாடல் பெற்ற தலம். அரம்பேஸ்வரர் கனக குஜாம்பிகையுடன் அருள் புரிந்து வருகிறார். மூலவர் தீண்டாத் திருமேனி. வெளிர் செம்மண் நிற சிவலிங்கத் திருமேனி. பெரிய ஆவுடையார். யாருமே மூலவரைத் தொட்டு பூசை செய்வதில்லை. நல்ல பெரிய மூர்த்தம். அம்பாள் சந்நிதியில் மஹா பெரியவாள் சக்கரப் பிரதிஷ்டை செய்து ஒரு மண்டலம் தங்கியிருந்து வழிபட்டிருக்கிறார்.

குருர் ப்ரம்மா குருர் விஷ்ணு: குருர் தேவோ மஹேச்வர: | குரு: சாக்ஷாத் பரம்ப்ரம்மா தஸ்மை ஸ்ரீ குரவே நம

நிறைவான தரிசனம். வரும்போதும் ஒரு இருசக்கரம் பின் தொடர்ந்தது. ஆனால் இப்போது பயமில்லை!

10 comments:

Srividhyamohan said...

Thirugnaana sambandar in paadal petra sthalam

RVS said...

@Srividhyamohan
நன்றி! குறிப்பிட மறந்துவிட்டேன்!! :-)

இராஜராஜேஸ்வரி said...

அம்பாள் சந்நிதியில் மஹா பெரியவாள் சக்கரப் பிரதிஷ்டை செய்து ஒரு மண்டலம் தங்கியிருந்து வழிபட்டிருக்கிறார்.

நிறைவான குரு தரிசனம்..பாராட்டுக்கள்..

ஸ்ரீராம். said...

சுவாரஸ்யமான இடமா இருக்கும் போல...! மிரட்டும் சுவாரஸ்யம்!

raji said...

எங்கயா இருந்தாலும் கொஞ்சம் பொழுதோட போயிட்டு வரப் படாதோ?


//“பக்கத்தில வேத பாடசாலை இருக்கு. அங்க வேதம் கத்துக்கறோம்” என்று அவன் சொல்லும்போதே உச்சரிப்பில் வேதம் வழிந்தது.//

ஞான சம்பந்தம்

சாந்தி மாரியப்பன் said...

மை பூசிய கும்மிருட்டில் கொஞ்சம் மின்மினிப்பூச்சிகளும் பறந்துருந்தா இன்னும் ஜூப்பரா இருந்துருக்கும்.. இல்லையா. அதென்னவோ சில கோயில்கள் இருட்டியபின்னும் ஒரு தனியழகோட இருக்குது.

RVS said...

@இராஜராஜேஸ்வரி

நன்றி மேடம்! :-)

RVS said...

@ஸ்ரீராம்.

போன நேரம் அப்படி. இருட்டுவதற்கு முன் போயிருந்தால் அந்த இடம் இன்னும் எழிலாக இருந்திருக்கலாம். :-)

RVS said...

@raji
அன்னிக்கு டைட் வேலை. இருந்தாலும் போகாமலிருக்கக் கூடாது என்று சங்கல்பம் செய்துகொண்டு புறப்பட்டேன். ஆமாம் அந்தப் பையன் சம்ஸ்கிருத ஞான சம்பந்தம்! :-)

RVS said...

@அமைதிச்சாரல்

ஒற்றை விளக்கில் ஸ்வாமி தரிசிப்பது எனக்கு இஷ்டமான ஒன்று மேடம்.மின்மினிப்பூச்சிக்கு அன்று விடுமுறை போலிருக்கிறது. :-)

ஆடிய பிற ஆட்டங்கள்

Related Posts with Thumbnails