Monday, May 21, 2012

திருநல்லம்


தரிசனம் முடித்து வெளிவருகையில் வைகலில் மொத்தமிருந்த மூன்று தெருக்களும் அலம்பித் துடைத்து விட்டாற் போல இருந்தது. விபூதி மணக்க கோயில் படி தாண்டி வந்து "கோனேரிராஜபுரம் இப்படி போலாங்களா?” கதவு திறந்து கோயில் காண்பித்த அந்த வைகல் அம்மாளிடம் கேட்டதற்கு “தோ.. இந்த மெயின் ரோடு திரும்பி நேரா ஒரு கிலோமீட்டர் போனா வந்துரும்” என்று அனுப்பிவைத்தார்கள்.

வண்டி கிளம்பியவுடன் அந்த அரணாக்கயிரில் ட்ராயர் சுற்றிய பையன் வாயில் எதையோ சப்பிக்கொண்டு கழுத்தில் கருப்புக்கயிற்றில் தொங்கிய முருகன் டாலருடன் கொஞ்ச தூரம் ஓடி வந்தான். வைகல்நாதர் ஏகாந்தியாகிவிட்டார். வைகல்நாதரைப் பார்க்க அன்றைய தினத்தில் அதற்கு மேல் யாரும் வருவார்கள் என்று தோன்றவில்லை. சேவார்த்திகளையும் குருக்களையும் சேர்த்துதான் சொல்கிறேன்.

டயர் மண் சரசரக்கவும் ஒரு ப்ளாக்கி தெருநாய் துரத்தவும் கொஞ்ச தூரம் போனதும் வைகல் ஊர் எல்லையில் ஒரு மாருதி ஆம்னி ஓரமாக தனியாளாய் நின்றுகொண்டிருந்தது. அது நின்ற கோலம் போட்ட வாசலில் “இங்கு ஜோதிடம் பார்க்கப்படும்” என்று அட்டை போர்டு தொங்கியது. ஆரூடம் பார்ப்பவரின் தரிசனத்திற்காக ப்ளாஸ்டிக் சேரில் ஒரு ஐந்தாறு பேர் எதிர்காலத்தை கையில் பிடித்துக்கொண்டு உட்கார்ந்திருந்தார்கள். “பொத்தி வச்ச மல்லிகை மொட்டு” கேட்டுக்கொண்டிருந்தவரிடம் “கோனேரிராஜபுரம் இப்படிப் போலாங்களா?” என்றதற்கு “இந்தப் பக்கம் போய் அப்படிப் போங்க” என்று சைகையில் வீசிக் காட்டிவிட்டு “நாளானதே... ரொம்ப நாளானதே”ன்னு விட்டதை கேட்கப் போய்விட்டார்.

இடம் வலதாய் சுற்றிலும் பசுமையாய் பச்சைப் பாய் விரித்த நிலத்தைப் பார்த்துக்கொண்டே சரியாக தப்பாகப் போனேன். வண்டியகலம் இருந்த ஒரு இடுக்குத் தெருவில் போய் சந்தேகத்தில் “கோனேரிராஜபுரம்...” என்று இழுத்தவுடனேயே ”அது தெக்கால போணும்” என்று மீசைக்கு நடுவில் கொஞ்சூண்டு முகம் தெரிய இருந்த ஒரு பெரியவர் கை காட்டினார். அவரது நெஞ்சாங்கூட்டை ஒரு கிழிசல் துண்டு மூடியிருந்தது.


முற்றிலும் தென்னை ஓலைக் குடிசையையே பார்க்காத என் பெண்கள் இருவரும் ஆர்வத்தோடு எட்டிப் பார்த்தனர். இதுபோன்ற செம்மண் ரோடும், பெஞ்சு போட்ட டீக்கடையும், அடிபைப்பும், ஆட்டுக்குட்டியும் இருக்கும் குக்கிராமங்களுக்குள் சுற்றும் போது என்னுடைய காரின் கதவுகளை முழுவதும் திறந்துவிடுவது என் வாடிக்கை. புதுசாய் நாற்று நட்ட வயலிலிருந்து வரும் மண்வாசம் மனதைக் கொள்ளைகொண்டு போகும். அடுத்த வருட விசிட் வரை அதுதான் வாயு ரூப தெம்பு டானிக். பெரியவரின் பக்கத்தில் எட்டிப் பார்த்த பையன் காரின் அருகில் வந்து உள்ளே பார்த்தான். சின்னவளின் கையில் இருந்த சாம்சங் டேப்லட்டைப் பார்த்து “லேப்டாப்டா” என்று பல்லைக்காட்டி பக்கத்தில் குச்சி ஐஸ் சப்பிக்கொண்டிருந்தவனிடம் சொன்னான்.

ஜன்னலருகில் ஸ்நேகமாய் சிரித்தவனிடம் “உஹும். இது பேட்” என்றாள். முன்னும் பின்னுமாய் ஆட்டி ஸ்டியரிங்கை மாக்ஸிமம் டார்க் வளைத்து அதேயிடத்தில் திருப்பினேன். வழியில் ஒரு பாசனக் கால்வாயின் ஓரத்தில் சென்றுகொண்டிருந்தபோது வாத்துக்கூட்டம் ஒன்று அதில் நீந்தி எழுந்து குஞ்சுகுட்டிகளுடன் கரையேறி ”க்வாக்..க்வாக்..” என்று ஓடியது. சுற்றுவட்டாரத்தில் குச்சியோடு ரஞ்சிதா வருகிறாரா என்று எட்டிப்பார்த்தேன். நல்லவேளை இல்லை!
   
ஒதுங்க வழியில்லாமல் ஏர்கலப்பை ஏற்றிப்போய்க்கொண்டிருந்த இரட்டை மாட்டு வண்டியை ஹார்ன் அடித்துக் கிளப்பாமல் பின் தொடர்ந்தோம். கண்ணுக்கு குளிர்ச்சியான பச்சைப் பசேல் வயல்வெளி, மாட்டுவண்டி, சிறு குற்றாலமாக நீர் பொழியும் போர் செட்டு என்று அங்கே ஒரு ரம்மியமான சூழ்நிலை நிலவியது. கையில் வைத்திருந்த தேவாரப் புத்தகத்திலிருந்து சம்பந்தர் பாடிய ப்
”குளிரும் மதிசூடிக் கொன்றைச் சடைதாழ
மிளிரும் மரவோடு வெண்ணூல் திகழ்மார்பில்
தளிருந் திகழ்மேனித் தையல் பாகமாய்
நளிரும் வயல்சூழ்ந்த நல்லம் நகரானே.”

என்ற பாடலை ஒரு முறை படித்துப் பார்த்தேன். இருபதாம் நூற்றாண்டிலும் நளிரும் வயல் சூழ்ந்திருப்பது நாம் செய்த புண்ணியமே!
 

மாட்டுவண்டி கோயிலுக்குப் பக்கத்தில் வேறு ஒரு அகலத் தெருவில் பிரிந்தவுடன் திருத்தலத்தை அடைந்தோம். இராஜகோபுரமில்லை. வாசலில் இரண்டு பிச்சைக்காரர்கள் பேசிக்கொண்டு இருந்தார்கள். முற்பகல் நேரத்தில் சிவன் கோயிலுக்கேயுரிய ஒரு மயான அமைதி வாசலில் தெரிந்தது. இங்கேயும் குருக்கள் இருப்பார் என்ற நம்பிக்கை எனக்கில்லை.

கொடிமரத்தருகில் ஐந்தாறு பேர் உதிரியாய் உட்கார்ந்திருந்தார்கள். அதற்கு வலதுபுறம் ஸ்டாண்ட் இத்துப் போன ஒரு டிவிஎஸ் ஐம்பதை தூணில் சாய்த்து முட்டுக்கொடுத்து நிறுத்தியிருந்தார்கள். அதிகாரி போன்ற ஜாடையில் வெள்ளையுடையில் தூய கருப்பாக இருந்தவரிடம் “குருக்கள் இருக்காருங்களா?” என்று கேட்டேன். முகத்தை ஏற்றி “என்னாத்துக்கு?” என்று வினவியது சற்று இடறியது. ”சாமி பார்க்கதான்” என்று தழைந்தேன். “ப்ராகாரம் சுத்தி வாங்க.. காமிக்கிறேன்” என்றார் கொஞ்சம் அலுப்போடு.
   
உலகிலேயே மிகப்பெரிய சுயம்பு நடராஜர் என்று ஊர் எல்லையில் போர்டு வைத்திருந்தார்கள். நடன சபாபதி பக்கத்தில் சிவகாமி நிற்க கிரில் கதவுக்குப் பின்னால் ஆடிக்கொண்டிருந்தார். சிவசிவாவென்று உட்பிரகாரத்தை ஒரு முறைச் சுற்றி வந்தோம். திருவலம் முடித்தும் யாரும் வந்தபாடில்லை. வேஷ்டியை மடித்துக் கட்டிக்கொண்டு வெளியில் வந்துபார்த்தபோது கனிசமாய் மக்கள் கூடியிருந்தார்கள். உச்சிகாலப் பூஜை முடிந்தவுடன் அன்னதானத்திற்காக காத்திருக்கிறார்கள் என்பது அவர்களின் பசிக் கண்களில் தெரிந்தது.

கையில் கொத்துச்சாவியுடன் அந்த மத்திம வயது கரியமேனி மெய்க்காவல் “வாங்க..” என்று நடராஜர் சன்னதி நோக்கி நகர்ந்து வந்தார். கொடிமரத்துக்கு வலதுபுறம் அவர் ஜாகையிருக்கிறார் என்று நினைக்கிறேன். அவரது மனைவி ஈரத்தலையுடன் வெளியே தூணருகில் சாய்ந்து கொண்டு துண்டால் கேசத்தை தட்டிக்கொண்டிருந்தார்.

கற்பூரார்த்தி காண்பித்து ”சோழ ராஜா சிற்பியை பஞ்சலோகத்தில் மிகப்பெரிய நடராஜர் சிலை வடிக்கச் சொல்றார். சிற்பி எவ்வளவு தடவை செஞ்சாலும் அதுல ஒரு பங்கம் வந்துடுது. நாள் நெருங்க நெருங்க சிற்பிக்கு பயம் வந்துடுது. ராஜா ”இன்னும் ரெண்டு நாள்ல சிலை தயாரா இல்லைனா உங்க தலையை எடுத்துடுவேன் “ன்னு சொல்லிட்டான். ஒரு நாள் வாசல்ல ஒரு சிவனடியார் வந்து தாகத்துக்கு தண்ணி கேட்குறார். சுடுதண்ணியா இருந்தா தேவலாமென்கிறார். சிற்பிக்கு கோவம் வந்து ”தலையே போவப்போவுது இதுல உங்களுக்கு சுடுதண்ணியா? வேணுமின்னா பஞ்சலோகம் கொதிச்சுக்கிட்டு இருக்கு. போய் எடுத்துக் குடிங்க”ன்னு சொல்லிட்டு உள்ள போயிடறாரு.

சிவனடியார் அங்க பக்கத்துல கொதிச்சுக்கிட்டு இருக்கிற பஞ்சலோகக் குழம்பை எடுத்து குடிச்சுடறாரு. சிவனடியாரை திட்டிட்டோமேன்னு பதபதைச்சு வெளிய வாசலுக்கு ஓடி வந்துபார்த்த சிற்பிக்கு அதிர்ச்சி. வாசல்ல ஒரு நடராஜர் பஞ்சலோக சிலை இருக்கு. அதுக்கு மேலயும் அவருக்கு ஒரு அதிர்ச்சி என்னான்னா.. மார்ல ஒரு மரு. அந்த மருல ஒரு முடி. இந்த அடையாளங்கெல்லாம் அந்த சிவனடியாருக்கும் இருந்தது.” என்று சுயம்பு நடராஜரைப் பற்றிய உண்மைக் கதையைச் சொன்னார். மெய் சிலிர்த்தது! ”ஆடிக்கொண்டார் அந்த வேடிக்கை காணக் கண் ஆயிரம் வேண்டாமோ” என்று நித்யஸ்ரீ மனசுக்குள் பக்தி சுரக்கும் கானமழை பொழிந்தார்.
 
 
மீண்டும் ஒரு முறை திருவலம் வந்தோம். வெளிப்பிரகாரத்தில் அம்மன் சந்நிதி தனிக்கோயில் போல அமைந்துள்ளது. அங்கேயே வைத்தியநாதர் சந்நிதியும் வடிவேலன் சந்நிதியும் எதிரெதிராய் அமைந்துள்ளது. “இது ரொம்ப விசேஷம். பூர்வஜென்மத்தில புண்ணியம் செஞ்சிருந்தாதான் இங்க வந்து தரிசனம் பண்ண முடியும்னு பெரியவங்க சொல்லியிருக்காங்க. சர்வ ரோக நிவாரணியாக இந்த வைத்தியநாதர் இருக்காரு” என்றார். பட்டனில்லாத சட்டையும் ஜிப்பில்லாத அரை டிராயருடனும் ஐந்தாறு பொடியன்கள் கால் சுடச்சுட ”உஸ்..உஸ்”ஸென்று எங்களுடன் வெளிப்பிரகாரம் சுற்றினார்கள். கூடவே பாவாடை சட்டையுடன் அவர்களின் அக்கா தங்கைகளும்தான்...

நிறைவான தரிசனம். கொடிமரம் அருகில் இருக்கும் சுவர்களில் ஓவியங்கள் வரைந்திருந்தது. அவற்றின் வண்ணத்தில் அதன் காலம் பிரதிபலித்தது. அவை பழங்காலத்தவை என்பதில் சிறிதும் ஐயமில்லை. அதில் சிவபெருமான் குடும்பமாக ஊர் சுற்றிக்கொண்டிருந்தார்.இப்போது சாப்பிடத் தயாராக அனைவரும் வரிசையாக உட்கார்ந்திருந்தார்கள். ஓடியோடி பிரதக்ஷினம் சுற்றிய வாண்டுகளும் இலைக்கு வந்து உட்கார்ந்துவிட்டார்கள். மஹேஸ்வரனை நமஸ்கரிக்கும் போது எங்களை காந்தமாய்ப் பார்த்த அந்தப் பையனின் விழி ஈர்ப்பில் நான் விழுந்துவிட்டேன். பூர்வ ஜென்ம புண்ணியத்தால் இந்த க்ஷேத்திரத்தில் பிறந்த அந்தப் பையனையும் ஈஸ்வரன் ரக்ஷிப்பாராக!!
 
-


20 comments:

தக்குடு said...

வெரிகுட்! மூஞ்சி புஸ்தகத்துல போய் வெட்டி அரட்டை அடிக்காம இந்த மாதிரி எந்த கோவிலுக்கு போனாலும் இங்க வந்து எழுதனும் புரிஞ்சதா? :))

Unknown said...

கடைசி பாரா அருமை

கோவில் பயண கட்டுரை
புதிய அனுபவம்
நன்றி மைனர் வாள் அண்ணா

சாந்தி மாரியப்பன் said...

//புதுசாய் நாற்று நட்ட வயலிலிருந்து வரும் மண்வாசம் மனதைக் கொள்ளைகொண்டு போகும். அடுத்த வருட விசிட் வரை அதுதான் வாயு ரூப தெம்பு டானிக்//.

எரியுற தீயில் ஒரு லிட்டர் பெட்ரோலை ஊத்துறீங்களே.. நியாயமா?.. (என்னா விலை விக்குது பெட்ரோல்!!!)

இங்கே தலோஜா பகுதியிலும் டானிக் கிடைச்சுட்டிருந்தது, இப்ப அதெல்லாத்தையும் அழிச்சு ware houses கட்டினதுல டானிக் காலாவதியாகிருச்சு ;-(

சுசி said...

நல்ல பதிவிற்கு நன்றி சார் !

அப்ப்பா ! அம்மையும் ஐயனும் அற்புத தரிசனம் உங்களால்.

எப்படி சார் சின்ன சின்ன டீடேல்ஸ் கூட விடாமல் நோட் பண்ணி ஞாபகமா எழுதறேள் !!!!

ஸ்ரீராம். said...

சுஜாதா கதையில் கேள்விப் பட்ட ஊர்! எங்கே போக முடிகிறது? இப்படிப் போய் வந்த பக்தர்கள் எழுதினால் ரசிக்க முடிகிறது...அவ்வளவுதான்! வர்ணனையில், நேரில் போய் வந்த திருப்தியைக் கொடுத்து விட்டீர்கள்.

அப்பாதுரை said...

அந்த மருவும் மயிரும் - அடடா! எப்பேற்பட்டத் திருவிளையாடல்! கையைப் பாருங்க... மயிர்கூச்செறியுது.. பக்தில மூழ்கிட்டீங்க போலிருக்கே?
ஒவ்வொரு பதிவுலயும் உபரி விவரங்கள் வாடைக் காற்றின் இதம்.

அப்பாதுரை said...

clickography நல்லா இருக்கு.

RVS said...

@தக்குடு
ஓக்கே ஆபீசர்!!
மூஞ்சி புஸ்தகத்துல அரட்டை அடிக்கிறானா இந்த ஆர்.வி.எஸ்? நன்றாகப் பார்த்துச் சொல் நண்பனே!! :-))

RVS said...

@Siva sankar said...
ஒவ்வொன்றும் வித்தியாசமான அனுபவம் தான் சிவா!தொடர் வாசிப்பிற்கு நன்றி.

RVS said...

@அமைதிச்சாரல்
நம்ம பக்கம் வந்துட்டு போங்க. இந்த டானிக் ரொம்ப எஃபெக்டிவ் மேடம். :-)

RVS said...

@Thanai thalaivi

எனக்குப் பிடித்த இடங்களுக்குப் போனால் சீன் சீனாய் மனதில் பதிகிறது. பாராட்டுக்கு நன்றி மேடம். :-)

RVS said...

@ஸ்ரீராம்.

கோனேரிராஜபுரம் எந்தக் கதையில் வருகிறது?
கோயில் வலம் வந்ததற்கும் பாராட்டுக்கும் நன்றி! :-)

RVS said...

@அப்பாதுரை

பாஸ்! உங்க பக்தியோகத்தைப் பற்றி எனக்கு நல்லாத் தெரியும். எக்ஸ்ட்ரா மட்டும்தான் உங்களுக்குப் பிடிக்கும்னும் தெரியும். Clickographyஐ கண்டுபிடித்து பாராட்டியதற்கு ஒரு ஸ்பெஷல் நன்றி!! :-)

சிவகுமாரன் said...

தேவாரத் திருவுலாவில் அடியேனையும் பங்கேற்க வைத்ததற்கு நன்றி.
அப்பாத்துரைக்கு வேண்டுமானால் திருவிளையாடல் கேலியாய் இருக்கலாம். நம்மைப் போல் சிவபக்தர்களுக்கு காதார கேட்பதே பெரும்பேறாய்த் தோணுகிறது. பகிர்வுக்கு மிக்க நன்றி.
தொடருங்கள் RVS

Rathnavel Natarajan said...

அற்புதமான பதிவு.
உங்களுடன் நாங்களும் தரிசனம் செய்தோம்.
இந்த நல்ல பதிவை எனது முகநூல் பக்கத்தில் பகிர்ந்திருக்கிறேன்.
நன்றி சார்.

அப்பாதுரை said...

கேலியா? கோவிக்காதீங்க சிவகுமாரன்.. மருவும் மயிரும் கேட்டு முடிக்கூச்செறியுதுனு தானே சொன்னேன்? திருவிளையாடல்கள் என்றைக்குமே திரு தான். நிசமாத்தான்.

raji said...

repeat for thakkudu thambiyar :-))

RVS said...

@சிவகுமாரன்
நானொரு பழங்கோயில் ரசிகன். ராஜாக்கள் கட்டிய கற்கோயில்களும் நால்வர்களால் பாடல் பெற்ற கோயில்களும் என்னை ஈர்ப்பவை. இதுவரை 120க்கு மேல் தரிசித்திருப்பேன் என்று நினைக்கிறேன். :-)

RVS said...

@Rathnavel Natarajan

பாராட்டுக்கு நன்றி சார்! :-)

RVS said...

@raji

தக்குடுக்கு அளித்த பதில் ரிப்பீட்டோய்!! :-)

ஆடிய பிற ஆட்டங்கள்

Related Posts with Thumbnails