Tuesday, May 17, 2011

இயற்கைவசப்பட்டு...

செண்பகாவில் நாங்கள் குளித்து முடித்து ஈரத் தலையை உதறிக் கரையேறும் சமயம் ஒரு வாலிபப் பட்டாளம் "ஹீய்.....உய்...ஏய்..." என்று வானர சேனையாய் அருவிப் பகுதியில் சூறாவளி போல களம் புகுந்தது. கொளுத்தும் வெய்யிலிலும் அருவியின் ஜில்லிப்பில் மெய்மறந்து சிலிர்த்துக்கொண்டு பட்டாளத்திடம் பயந்து செண்பகாவை விட்டு வெளியே வந்தோம். சட்டையை கழற்றி தலைக்கு மேலே விசிறி போல சுழற்றி வீசிக்கொண்டே அருவியின் இரைச்சலையும் மீறி "ஹோ..." என்று எக்காளமிட்டுக்கொண்டு ஓடிய ஒரு இளரத்தம் அருவிப் பொழிவின் நட்ட நடுபாகத்திற்கு வந்து ரப்பர் பந்து போல எகிறி முன்னால் தேங்கியிருந்த குட்டை போன்ற தண்ணீரில் செங்குத்தாக குதித்து முங்கி எழுந்து ஆட்டம் போட்டது. குதித்த வேகத்தில் எதிரருவி கிளம்பியது. பேரலைகள் சலசலத்து எழுந்து அமுங்கியது. இந்தப் பயமறியா இளங்கன்றுகளின் அதிரடி வரவால் அருவி சற்றே அடங்கியது போலத்தான் இருந்தது.

அருவியில் நீராடப் போகும்போது கொக்குக்கு அருவியே மதியென சென்றதால் வரும்போது செண்பகாதேவி அம்மனை தரிசிக்கலாம் என்று கோவில் உள்ளே சென்றோம். பூசாரியைக் காணவில்லை. கம்பி போட்ட கதவுக்குள் விளக்கேற்றி அம்மனை அடைத்து வைத்திருந்தார்கள். பிரகாரத்தில் யாரோ பக்தி மணம் கமழ ஏற்றிய அகல் விளக்கில் இருந்து திரி பொசுங்கிய தீஞ்ச வாசனை அடித்துக் கொண்டிருந்தது. வெளியே இருந்து கன்னத்தில் போட்டுக்கொண்டு வந்த வழி திரும்பினோம்.

"இன்னும் எவ்ளோ தூரம்?" என்று கேட்டுக்கொண்டே ஒரு டிராயர் போட்ட பொடிசும் தொங்கும் நரைத் தாடி வச்ச பெரிசும் ஏறினார்கள். அடர்ந்த தாடியின் பின்னே ஏதோ ஒரு சித்தர் ஒளிந்திருந்தார். ஏறும் போது ரொம்ப தூரமாக இருந்த வழிப்பாதை இறங்கும் போது அதில் அரையளவு குறைந்திருந்தது. மாங்காய்க் கடைக்காரருக்கு கஸ்டமர்கள் கணிசமாக அதிகரித்திருந்தனர். அஞ்சு பீஸ் பத்து ரூபாய்க்கு விற்றுக்கொண்டிருந்தார். சத்தியத்திற்கு கட்டுப் பட்டது போல குரங்குப் படை அவரை அணுகாமல் அலகாமல் ஒரு எல்லையில் நின்று நோட்டம் விட்டுக் கொண்டிருந்தது.

shenbagaway

காதலனை காற்றுப்புகா வண்ணம் ஆரத் தழுவிய பதினாறு வயது பருவக் காதலி போல மரத்தோடு இரண்டற பின்னிப் பிணைந்த இளந்தளிர் கொடிகளை தாண்டி வேகமாக இறங்கினோம். ஒரு சில இடங்களில் கரும் பாறைகளைக் கூட பல பசுங்கொடிகள் கட்டிப்பிடித்து கலப்பு மணம் செய்திருந்தன. உசரக்க ஏறுவதைக் காட்டிலும் கீழே இறங்குவதில் அதிக கவனம் தேவை என்பதை என் பெரியவளை சறுக்க வைத்து உணர வைத்தது சரளைக்கல் நிறைந்த அந்த மலைப்பாதை. உச்சிக் குளிர குளித்ததும் உடம்பில் இருந்து உஷ்ணம் பரிபூரணமாக விலகி பெரும் பசிப் பிணியை கிளப்பிற்று. மண்டபத்தில் "மத்தியான்னம் சாப்பாடு பேஷா உண்டே" என்று காலையிலேயே தொந்தி சரிந்த சட்டை போடாத குண்டு மாமா மூச்சு இறைக்க இறைக்க தோளுக்கு அங்கவஸ்த்திரம் போட்டிருந்த பல்லிபோல இருந்த ஒல்லி மாமாவிடம் சொல்லியது மூளையில் பளிச்சென்று ஃப்ளாஷ் அடித்தது. வயிறு "டிங்கிடிங்கி" என்று அவசர மணி அடிக்க பசித் தீ அணைக்க வேகமாக ஓடினோம்.

*

மாயாபஜார் எஸ்.வி.ரெங்காராவுக்கு கட்டை விரல் உயர்த்தி சவால் விடும்படியாக  காய்கறிகளுடன் சாப்பாட்டை மூக்கில் பருக்கை வர ஒரு கட்டு கட்டியபின்னர் மூன்றரை மணி சுமாருக்கு அச்சன்கோயில் ஆரியங்காவு திருத்தலங்களுக்கு பிரயாணித்தோம். மஹிந்திரா டூரிஸ்டர் வண்டியை மேலே ஒரு லகரம் கொடுத்து உள்ளே பிரமாதமாக ஜோடித்து மூலைக்கு மூலை பாக்ஸ் ஸ்பீக்கர் கட்டி 5:1 டிவிடி போட்டு அமர்க்களமாக வைத்திருந்தார் சக்திவேல். அவரே மொதலாளி அவரே தொழிலாளி. வேனில் குடும்பம் நடத்தலாம் போல அதி சுத்தமாய் இருந்தது. சென்னையில் எக்மோருக்கு ட்ராப் செய்த வேன் இதைப் பார்த்தால் தானாக திரிசூலம் மலை மேலே ஏறி தற்கொலை செய்து கொள்ளும். அஃறினை செய்து கொண்ட முதல் பிராணஹத்தி என்ற மங்காப்புகழ் பெற்றிருக்கும்.

achan1
அச்சன்கோயில் தென்காசியில் இருந்து மலை மார்க்கமாக கேரளா செல்லும் பாதையில் உள்ள சாஸ்தா கோயில். மலையில் ஏறியவுடன் டிரைவர் கை இரண்டும் பின்னிக் கொள்ளும்படி அமைந்த ஏழு கொண்டை ஊசி வளைவுகள் கடந்தவுடன் கேரளா செக் போஸ்டில் இருபது ரூபாய் கொடுத்தார். முறுக்கிக்கொண்ட கை காசு கொடுப்பதற்கு விடுதலை பெற்றது. மேலும் இரண்டு கொ.ஊசி வளைவு தாண்டி அச்சன் குடியிருந்த ஒரு பஹூத் அச்சா கோயிலை அடைந்தோம். மலைகள் சூழ்ந்த இடம் ஆதலால் பார்க்க ரொம்ப கவர்ச்சியாகவே இருந்தது. ஐந்து மணிக்கு தான் கோவில் நடை திறப்பார்கள் என்றார்கள். பேன்ட் சட்டையுடன் ஒரு பெண் தன் கிழத் தாயுடனும், நிறைமாதமாக கர்ப்பகாலத்தில் பெண்டாட்டி பட்ட கஷ்டத்தை vicarious suffering போல  இப்போது தன் மடியில் சுமந்த ஒரு நாற்பது வயது கணவர் பிள்ளைப் பாரம் இறக்கிய தன் மனைவியுடனும் கோவில் வாசலில் அமர்ந்திருந்தனர்.

கேரளக் கோவில்களின் இலக்கணத்தை துளிக்கூட மீறாமல் கே.ஜே. ஜேசுதாஸ் மலையாளத்தில் செண்டையுடன் தன் குரல் வளத்தால் போட்டியிட்டு பாடிய ஒரு பாடலை ஒலிக்கவிட்டு கதவு கிரீச்சிட திறந்தார்கள். திறக்கும்போதாவது நிச்சயம் பக்தர் கூட்டம் வந்து நம்மை நெட்டித் தள்ளும் என்ற எனது எண்ணத்தில் சாஸ்தா அரவணைப் பாயசம் அள்ளிப் போட்டார். எல்லோரும் உள்ளம் திருக்கோயில் ஊன் உடம்பு ஆலயம் என்று திருமூலத்தனமாக இருந்துவிட்டார்கள் போலிருக்கிறது. கிரீம் கலரில் சிகப்பு பட்டையடித்த கேரளா அரசாங்கத்தின் சோகையான பஸ்ஸில் வந்திறங்கிய சொற்ப பயணிகளில் ஒருவரும் கோவிலுக்கு வந்ததாக தெரியவில்லை. தாடி வைத்த மோகன்லால் டிரைவர் பீடியை வாயில் கடித்துக்கொண்டு சாயா குடிக்கப் போனார். கோவில் முகப்பில் மலையாளம் மற்றும் நல்ல தமிழில் போர்டு வைத்திருந்தார்கள். மரம் நிறைந்த மலை சூழ் இயற்கை எழில் கொஞ்சும் இடத்தில் சாஸ்தா நமக்கு அருள் புரிய வீற்றிருந்தார். வானுயர்ந்த மரத்தில் இருந்து பறவைக் கூட்டத்தின் "ஊ ..உய்.." என்ற கீதத்துடன் மனதுக்கு நிறைவான தரிசனம்.

திரும்பவும் தென்காசி வரும் வழியில் பயணித்து அடுத்த பக்கம் இருக்கும் இன்னொரு மலையில் ஏறி ஆரியங்காவு சென்றோம். "அண்ணே! எங்கயாவது டீக்கடை தென்பட்டா நிறுத்துங்க.." என்று நா வறட்சியில் கோரிக்கை வைத்த ஒட்டுமொத்த வேனையும் புறக்கணித்து அசராமல் வண்டி ஓட்டினார் முதலாளி. "அண்ணே!" என்று பத்து நிமிடம் கழித்து நினைவூட்டிய என்னிடம் "கோயில் சீக்கிரம் மூடிடுவாங்க. அதப் பார்த்துட்டு குடிக்கலாம்" என்று மலை ஏறும்போது மனதில் தோன்றியதை இப்போது என்னிடம் திருவாய் மலர்ந்தார். "அதுவும் சரிதான்" என்று வண்டியில் இருந்த பக்திப் பழமான நாலு பெரியோர்கள் கோரஸாக அவருக்கு "ஓ" போட்டார்கள்.

கொல்லம், சபரிமலை செல்லும் அந்த மலைரோடு முழுக்க சேர நாட்டு லாரிகளால் ஆக்கிரமிக்கப்பட்டிருந்தது. தார்ப்பாய் போர்த்தியும் bare பாடியோடும் சென்ற லாரிகளின் "டர்ர்ர்ர்..." என்ற டயர் சத்தம் பாறையில் மோதி நம் காதையும் அறுத்தது. வண்ண வண்ண கைலி அணிந்து பீடி வாயோடு ஆரியங்காவு கோவிலுக்கு பக்கத்து டீக்கடையில் லாரியை ஓரமாகப் பார்க் செய்துவிட்டு "எந்தானு?" என்று ராகமாக பறைந்து கொண்டிருந்தார்கள். கோவிலுக்குள் செல்வதற்கு நூறு படிகளாவது இறங்க வேண்டியுள்ள ஒரு பாதையை பேவர் ப்ளாக் போட்டு சறுக்குப் பாதையாக மாற்றி புண்ணியம் கட்டிக்கொண்டார்கள். அச்சன்கோவிலை விட இது சற்றே பெரிய கோவில். நிச்சயம் சாஸ்தா தரிசனத்திற்கு கூட்டம் இருக்கும் என்று நினைத்தேன். அச்சன்கோவிலில் எங்களுடன் பார்த்த அதே திருக்கூட்டம் தான் இங்கேயும்.

ஸ்வாமி பார்த்த கையோடு வெளியே பெட்டிக் கடை போட்டிருந்த முண்டணிந்த சேச்சியிடம் சாயா வாங்கி குடித்தோம். தலை விரிகோலமாக சந்தனப் பொட்டிட்டு அரைக்கை சட்டைப் பாவாடையில் இருந்த அவரின் பெண்குட்டி ஸ்லேட்டில் கணக்குப் போட்டு எங்களிடம் காசு வாங்கிக்கொண்டது. சேர நன்நாட்டிளம் பெண்கள்!

*

kaaraiyaaru1
மணிமுத்தாறு மற்றும் முண்டந்துறை செல்வதாக மறுநாள் கிளம்பினோம். சூரியன் தலைக்கு மேலே ஸ்ட்ரா போட்டு உற்சாகத்தை உறிஞ்சிக்கொண்டிருந்தான். நம்மை வதைப்பதாக இருந்தாலும் நாம் சொல்வது "நல்ல(!?) வெய்யில்!". மணிமுத்தாறு ரோடு வேலைகள் நடைபெறுவதாகவும் அங்கே செல்ல முடியாது என்றும் அந்தப் பக்கமாக பறந்து வந்த ஒரு பட்சி சொல்லிற்று. காரையாறு அணைக்கட்டு வரை போய் திரும்பலாம் என்று மொதலாளியை அழைத்துக்கொண்டு கிளம்பினோம். மலையேறும் அலங்கார வளைவில் செக் போஸ்ட் ஒன்று இருந்தது. அதன் பக்கத்தில் இருந்த குளிர்பானக் கடை பையன் வேனின் எல்லா ஜன்னலிலும் பின்வருமாறு மிரட்டல் விடுத்தான். "சாப்பிட, குடிக்க இங்கயே எல்லாம் வாங்கிக்குங்க. உள்ள ஒன்னும் இருக்காது".

இது ஒரு பயங்கர வனவாசம் போல இருக்குமோ என்று எண்ணம் எல்லோர் நெஞ்சிலும் எழ பயமூட்டினான். அவன் சொல்லுக்கு கட்டுப்பட்டு ஸ்ப்ரைட், கென்லே என்று குடிப்பதற்கு வாங்கிக்கொண்டு ஏறினோம். நல்ல காட்டுப் பிரதேசம். ஆங்காங்கே புலி வளர்ப்பு பற்றிய போர்டுகள். ஒரு மலைக்கிராமத்தில் வீட்டு வாசலில் வனமோகினிகள் போல இரண்டு பெண்கள் உட்கார்ந்திருந்தார்கள். ஜெகன்மோகினி படத்தில் வருவது போல முட்டிக்கு கீழ் வரை கார்மேகக் கேசம் வளர்ந்திருந்தது. காரையாறு அணைக்கு அரை கிலோ மீட்டர் முன்னாலையே வண்டிக்கு அணை போட்டார்கள். ஓரங்கட்டி நடந்து போகச் சொன்னார்கள். இந்த ஏழைக்காக பெரியபதவியில் இருக்கும் ஒரு சில நல்ல இதயங்கள் ஃபோன் போட்டு வன இலாகா அதிகாரிகளிடம் வண்டியோடு மேலே செல்ல பரிந்துரைத்தார்கள்.

kaaraiyaaru

தடுப்பை தாண்டி வண்டியில் செல்லும் எங்களை நடந்து சென்றவர்கள் உளமார சபித்தார்கள். அணைக்கட்டிற்கு வந்து பார்த்தால் அதல பாதாளத்தில் ஐயனார் குட்டை போல தண்ணீர் தேங்கி இருந்தது. படகு குழாம் சிறு கடுகு போல தெரிந்தது. நடந்தோ உருண்டோ கீழே இறங்குவது அவரவர் சாமர்த்தியம். அப்படி இறங்கி அந்தப் படகேறி எதிர்முனை சென்றால் அங்கே இருப்பது பான தீர்த்தம். கொளுத்தும் வெய்யிலில் படகில் பயணித்துப் போக பெருசுகள் ஆட்சேபிக்க சிறுசுகள் (என்னையும் சேர்த்துதான்) ஆர்ப்பரிக்க ஒரு சின்ன துவந்த யுத்தம் நடந்தது. கடைசியில் பெரியவர்கள் வென்றார்கள். சிறியவர்கள் மனஸ்தாபத்தோடு இறங்கினார்கள்.

manimuthaar

இறங்கி வரும் வழியில் அந்த அணைக்கட்டில் இருந்து ஓடை போன்ற ஒரு சிற்றாறு ஓடிக்கொண்டிருந்தது. ஓரிடத்தில் வண்டியை இரண்டு பெருமரங்களுக்கு இடையே நிறுத்தி சிறுசுகள் போய் குளித்தோம். ஒரு சிகப்பு நாய் நாக்கை தொங்கப் போட்டுக்கொண்டு வேடிக்கை பார்த்தது. விறகு பொறுக்கி தலை மேல் சுமந்து கொண்டு போன காட்டுச் சிறுக்கி ஒருத்தி சிரித்துக்கொண்டே ஒய்யாரமாக நடந்தாள். தண்ணீர் கொஞ்சமாகத் தானே ஓடுகிறது என்றெண்ணி காலை வைத்தால் முதலை போல வெடுக்கென்று இழுத்தது. நல்ல கரெண்ட். ஜாக்கிரதையாக அடி மேல் அடி வைத்து ஓடையின் நடுவே சென்று குளித்தோம். பான தீர்த்தம் போக முடியாத கோபத்தை ஓடையின் ஜில் அடித்து விரட்டியது. நுரைத்து ஓடிய தண்ணீரில் முகம் புதைத்து புத்துணர்ச்சி பெற்றோம்.

manimuthaar1

"நேரமாச்சு" என்று ஒரு பெரியவர் தார்க்குச்சி போட வேனில் ஏறினோம். அடுத்து நேரே நெல்லையப்பருக்கு சலாம் போட திருநெல்வேலி போவதாக ப்ளான். வழியில் அம்பையில் கௌரிஷங்கர் என்ற போர்ட் வெளுத்துப் போன (அ)உயர்தர சைவத்தில் புசித்தோம். சாப்பாட்டுக்கு உட்கார்ந்த நேரம் மின்சாரம் தடைப்பட்டு உழைத்து ஓடாய்த் தேய்ந்த சர்வர்கள் வேர்வையும் சேர்த்து எங்களுக்கு பரிமாறினார்கள். ஐயோடின் கலக்காத உப்பாக அதை பாவித்து உண்டோம். பாலம் ஏறி தக்குடு அவதரித்த புண்ணிய க்ஷேத்ரமான கல்லிடை வழியாக அவரை மனதார நினைத்துக் கொண்டு திருநெல்வேலி சென்றேன். காந்திமதியும், நெல்லையப்பரும் தம்பதி சமேதராக அற்புத தரிசனம் தந்து அருள்புரிந்தார்கள். நெல்லையப்பர் சன்னதி வாசலில் தூணைத் தட்டி இசை எழுப்ப முயன்றேன். ஓங்கி குத்தியதில் கை கன்னிவிட்டது.  ஸ்வாமி பார்த்துவிட்டு தூங்குவதற்கு நேரே மேலகரம் குபேரனை நோக்கி விரைந்தோம்.

*

முக்கியமான இரண்டு விசேஷங்களும் நடந்த நாள். மதியம் வரை இருந்து சாப்பிட்டோம். மாலை ஸ்ரீவில்லிப்புத்தூர். தமிழக அரசு சின்னத்தை அலங்கரித்த கோபுரத்தை கீற்று போட்டு மறைத்து வைத்திருந்தார்கள். உள்ளே "ஏன்?" என்று கேட்டதில் தங்கக் காப்பு போடுகிறார்களாம். அசந்துவிட்டேன். நேரே தாயார் சந்நிதி சென்றோம். எந்தத் தலத்திற்கும் இல்லாத சிறப்பாக பெருமாள் ரெங்கமன்னார் உடன் வலப்புறத்தில் ஆண்டாளும் இடப்புறத்தில் கருடாழ்வாரும் சேவை சாதித்தார்கள். கோபுரவாசலில் அழுக்குச் சட்டையுடன் துரத்தி வந்து அந்த சின்ன ஆண்டாள் விற்ற துளசி மாலையை சூடிக் கொடுத்த சுடர்க்கொடிக்கு சாற்ற கொடுத்தோம். "எந்த ஊர்லேர்ந்து வரேள்!" என்றார். என் அப்பா "ராஜ மன்னார்குடி" என்றும் நான் "சென்னை" என்றும் ஒருசேர பதிலளித்தோம். "களவாணி" என்று கூறி சிரித்தார் பட்டர். ஆண்டாள்  பெருமாளுடன் ஐக்கியமான ஆனந்தத்தில் எங்களை மன்னித்தாள். அப்புறம் ஆண்டாளை கண்டெடுத்த பிருந்தாவனத்தை பார்த்துவிட்டு வடபத்ரசாயி சந்நிதிக்கு சென்று சேவித்தோம்.

Tenkasi Temple
வந்ததிலிருந்து தென்காசி காசி விஸ்வநாதர் லோகநாயகி அம்மனை தரிசிக்கவில்லையாதலால் நேராக தென்காசிக்கு வண்டியை விட்டோம். வழியில் மடவார் விளாகத்தில் இருந்த வைத்தியநாதர் கோபுரம் சிவசிவா என்று அழைத்தது. ஹரியும் சிவனும் ஒன்னு. அறியாதவன் வாயில மண்ணு. தரிசனம் முடித்து தென்காசி விஸ்வநாதரை தரிசித்து விடலாம் என்ற நம்பிக்கையில் வண்டி ஏறிய எங்களை மொதலாளி பழிவாங்கினார். ஐம்பது தாண்டாமல் ஓட்டினார். ஆட்டோ காரருக்கு கூட வழிவிட்டு இடது புறம் ரசமட்டம் பிடித்தது போல சீராக ஓடினார். சின்னவளுக்கு பசியெடுத்தது. எப்படியும் போய் தென்காசியில் ஸ்வாமி பார்த்து சாப்பிடலாம் என்றால் ஒன்பது மணிக்கு கோயில் வாசலில் இறக்கி விட்டு சிரித்தார். தெய்வீக சிரிப்பு.

ஆளை அலேக்காகத் தூக்கும் காற்று அடித்தது. நம்மூர் பீச்சுக் காற்று பிச்சை வாங்க வேண்டும். கோயில் பூட்டி விட்டார்கள். எதிரே புராணா லாலா கடையில் சுடச்சுட ஹல்வா போட்டார்கள். சர்க்கரைவியாதிக்காரர்கள் காத தூரம் ஓடிப்போய்விடும் அளவிற்கு அந்தப் பகுதியில் காற்றே இனிக்கிறது. நூறு ஐம்பது என்று டாஸ்மாக் வாசலில் கட்டிங் அடிப்போர் போல அல்வா சுவைக்கும் கும்பல் வாழ்க. கணையம் நன்றாக சுரக்க தென்காசி விஸ்வநாதர் அருள்புரிவாராக! கொஞ்ச நேரம் காற்று வாங்கிவிட்டு குபேரனிடம் தஞ்சம் புகுந்தோம்.

*

ilanji koil

மறுநாள் காலையில் நேரே சித்திர சபை கண்ட குற்றாலநாதரை தரிசித்தோம். குரங்கையும் எங்களையும் தவிர்த்து கோவிலில் ஈ காக்காய் இல்லை. பத்து செண்பகப்பூ பத்து ரூபாய் என்று பேரம் பேசாமல் வாங்கி அர்ச்சனைக்கு கொடுத்தோம். சாஸ்தாவிர்க்கும் ஒரு அர்ச்சனை செய்தோம். வெயிட்டிங்கில் நின்ற ஆட்டோ ஏறி இலஞ்சிக் குமரன் கோவில் சென்றோம். குன்றிருக்கும் இடமெல்லாம் குமரன் இருப்பான். வள்ளி தெய்வானையுடன் கம்பீரமாக வேலேந்தி நின்றிருந்தார். பக்கத்தில் இருவாலுக ஈஸ்வரர் அருள் புரிந்தார். அம்மன் பெயர் இருவாலுகவர்க்கினியாள். அகஸ்த்தியர் வெண்மணலில் பிடித்து வைத்த லிங்கமாம். கொள்ளை அழகு.

ilanji scene
வாசலில் காத்திருந்த ஆட்டோ ஹாரன் அடித்து கூப்பிட்டார். கரும்புத் தோகைகளுடன் விளையாண்டுகொண்டிருந்த குட்டியானைக்கு ஒரு வணக்கம் போட்டு ஏறினோம். நேராக காசி விஸ்வநாதர் தரிசனம். நல்ல பெரிய மூர்த்தம். அம்பாளையும் வணங்கி வெளியே வரும் மதிய நேரத்திலும் காற்று சிலுசிலுவென அடித்தது. அதோடு சேர்ந்து பறந்துவிடமாட்டோமா என்றிருந்தது. வேகமாக வீசினாலும் மயிலிறகால் தடவுவது போல முகத்தில் தவழ்ந்தது அந்த சிறப்புக் காற்று.

மாலையில் அதே ஆட்டோவில் தென்காசி ஸ்டேஷன் வந்தடைந்தோம். கைலி விளம்பரப் பையன் மீண்டும் சிரித்தான். "ஹோ...." என்று இருந்தது பிளாட்ஃபாரம். செங்கோட்டையில் இருந்து சென்னைக்கு வந்த ரயிலில் ஏறும் போதே கரை வேட்டிகள் நிறைய ஏறினார்கள். "அண்ணே! அம்மா! தூள்!" போன்ற வாசகங்கள் பரவலாக காதில் விழுந்தது. ஐயாவிடமிருந்து அம்மாவசம் வந்த தமிழகத்தின் தலைநகரத்திர்க்கு ரயில் கூவி புறப்பட்டது.

காலை ஸ்டேஷனில் இருந்து வெளியே வரும் போது "ஐயே! கஸ்மாலம்" என்று ஒரு கிழவி கதறிய போது சென்னையின் வாசத்தை அறிந்தேன். திங்களில் இருந்து திரும்பவும் ஆபிஸ், சிக்னல், ட்ராபிக்.........

பின் குறிப்பு: இன்னமும் ஐந்தாறு பதிவுகள் எழுத சரக்கு உள்ளது. உங்களை ரொம்பவும் படுத்தாமல் இத்தோடு முடிக்கிறேன். நன்றி.

படக் குறிப்பு: அனைத்தும் அடியேன் க்ளிக்கியது.

-

46 comments:

பொன் மாலை பொழுது said...

எனக்கு உம்மீது கோபம் கோபமாய்த்தான் வருது மைனரே ! என்னையும் கூடிக்கொண்டு போயிருக்கலாமே என்று. படங்கள் அத்தனையும் அழகு. அதோடு சேர்த்து உம்முடைய வர்ணனையும் தான். சிலிக்கான் காதலி மாதிரி இது சலிக்க வில்லை,போரடிக்கவில்லை. தொடரட்டும்.

A.R.ராஜகோபாலன் said...

காதலனை காற்றுப்புகா வண்ணம் ஆரத் தழுவிய பதினாறு வயது பருவக் காதலி போல மரத்தோடு இரண்டற பின்னிப் பிணைந்த இளந்தளிர் கொடிகளை தாண்டி வேகமாக இறங்கினோம். ஒரு சில இடங்களில் கரும் பாறைகளைக் கூட பல பசுங்கொடிகள் கட்டிப்பிடித்து கலப்பு மணம் செய்திருந்தன.

இங்கே இங்கே தாண்டா மாப்புளே நீ நிக்கற, கலக்கலா போகுது கொஞ்சம் ஜில்லென்ற சாரலுடன்

நசரேயன் said...

ஊரு ஞாபகம் வந்திரிச்சி

Anonymous said...

உங்க தளத்தை பிடிக்க அரும்பாடு பட வேண்டியதா இருக்கு. என்ன பிரச்னை? இன்னிக்கிதான் லிங்க் ஒப்பன் ஆயிருக்கு.

Anonymous said...

தங்கள் முந்தைய சில பதிவுகளை தவற விட்டதால் நிறைய படிக்க வேண்டி உள்ளது. வார இறுதியில் படித்துவிட்டு கருத்து சொல்கிறேன் ஆர்.வி.எஸ்!
இந்த பதிவு வேற ரொம்ப சின்னதா இருக்கு. அவ்வ்!

ஸ்ரீராம். said...

படங்களும், விவரங்களும் பிரமாதம். நல்ல வெய்யில் வார்த்தைப் பிரயோகக் குறிப்பும் அழகு. உங்கள் தளம் (அவ்வப்போது) இரண்டு நாட்களாய் எனக்கு மணிக்கதவம் திறக்க மறுத்து சண்டி பண்ணியது.

வெங்கட் நாகராஜ் said...

”இன்னும் சரக்கு நிறைய இருக்கு, ஆனா தரமாட்டேன்னு” சொன்ன என்ன அர்த்தம் மைனரே… இது ஆவறதில்லை சொல்லிட்டேன். ஒழுங்கா எழுதுங்க. படிக்க நாங்க தயார் :)

எல் கே said...

//ஆரியங்காவுவை விட இது சற்றே பெரிய கோவில்///

அச்ச்சன் கோவிலை விட பெரியது என்று வரவேண்டுமோ ??

அப்பாதுரை said...

பதினாறு வயதில் காதல், காற்றுப் புகா வண்ணம் கட்டியணைப்பு - ம்ம்ம்.. பிள்ளைகள் அவசியம் படிக்க வேண்டிய ப்லாக். யாரங்கே, தணிக்கை குழு கிடையாதா? :)

புகைப்படங்கள் பிரமாதம். இலஞ்சி மனதையள்ளுகிறது.

தென்காசி எல்லா ஊர்களுக்கும் மையமோ? அங்கிருந்தே எல்லா இடங்களுக்கும் விசிட் அடித்திருக்கிறீர்களே?

அமைதி அப்பா said...

பதிவு அருமை. தங்களின் முதல் பதிவைப் படித்துவிட்டு ஒரு பதிவு எழுதி உள்ளேன்.


திருந்தவே மாட்டார்களா?!

நன்றி.

சமுத்ரா said...

good one R.V.S

Madhavan Srinivasagopalan said...

வழக்கம்போல வர்ணனைகளுடன், பிரமாதம்.

சுந்தர்ஜி ப்ரகாஷ் said...

ஸ்வாரஸ்யமான தெக்கத்திப் பயணம் முடிச்சு ஏண்டா சென்னைக்கு வந்தோம்னு இருக்கோ? காற்றும் நீரும் தமிழும் கலந்த புத்துணர்ச்சி பானம் அளித்த ஆர்விஎஸ் வாழ்க.

//ஆரியங்காவுவை விட இது சற்றே பெரிய கோவில்//

அச்சன்கோவில் என்று திருத்தவும்.


அதென்ன +1 படிக்கற பொண்ணு தன் காதலனைக் காற்றுப் புகாவண்ணம் தழுவினாளா? கொஞ்சம் டூ மச் ஆர்விஎஸ். அந்த வரில வயசை எடுத்துடுங்க.

Ponchandar said...

காரையாரும் போயிட்டு வந்திட்டீங்க போல... இலஞ்சி குமார கோயில் நாங்கள் தினமும் வாக்கிங் போகும் இடம். கோடையிலும் குளிரான காற்றுக்காகவே இங்கேயே இருக்கலாம்.

சக்தி கல்வி மையம் said...

நானும் டூருக்கு வந்த மாதிரியே இருக்கு,,

ரிஷபன் said...

அற்புதமான சொல்லாடல்.. பயணக் கட்டுரை திலகமே.. மிச்சமிருக்கும் சரக்கையும் அவ்வப்போது எடுத்து விடுங்கள்.. படித்து ஆனந்திக்க நாங்கள் ரெடி..

இளங்கோ said...

நீளமான டூர்.. :)
Photos super.

சிவகுமாரன் said...

கூடவே எங்களையும் டூர் அழைச்சுக்கிட்டுப் போயிட்டீங்க. நாங்களும் ரசிச்சோம் சேர நன்னாட்டிளம் பெண்களை.

பத்மநாபன் said...

தென்காசியை சுற்றி இவ்வளவு விஷயங்களா...எதோ ஸ்ரீ.வி..குற்றாலம அளவு மட்டும் தெரியும்... சுற்றுலா புதையலை படங்களாக எடுத்து பகிர்ந்தற்கு நன்றி....

மோகன்ஜி said...

ஆர்.வீ.எஸ்! உற்சாகமாய் ஊர் சுற்றிவிட்டு வந்த உங்களை எண்ணி பொறாமையாய் இருக்கு . விவரங்கள் ஏதும் ஒளிக்காமல் பதிவிட்டதால் கொஞ்சம் பொறாமை குறைந்திருக்கிறது. உம்ம வர்ணனையும் படமும்...நீர் ஒரு வலையுலக வஸ்தாது என்பதற்கு சாட்சி. இன்னமும் ரெண்டு பதிவாவது எதிர்பார்க்கிறேன்.. கோவில் பற்றிப் போட்டு புண்ணியம் தேடிக் கொள்ளும் கோமானே!

RVS said...

@கக்கு - மாணிக்கம்
மிக்க நன்றி மாணிக்கம். ;-))

RVS said...

@A.R.RAJAGOPALAN

Thank you Very Much Gopli. ;-)

RVS said...

@நசரேயன்
முதல் வருகைக்கும் கமென்ட்டிர்க்கும் நன்றி. மீண்டும் வருக. ;-)))

RVS said...

@! சிவகுமார் !
என்னடா சிவாவைக் காணுமேன்னு நினச்சேன். நன்றி. ;-))

RVS said...

@ஸ்ரீராம்.
நல்ல வெய்யிலை கண்டு கொண்டதற்கு ஒரு நன்னாரி சர்பத். நன்றி ஸ்ரீராம். ;-))

RVS said...

@வெங்கட் நாகராஜ்
தல எழுதறேன். நன்றி. ;-)

RVS said...

@எல் கே
நன்றி. திருத்திவிடுகிறேன் எல்.கே. ;-))

RVS said...

@அப்பாதுரை
ஆமாம் சார். தென்காசியில் இருந்து நிறைய ஊர்களுக்கு ஒரு மணிநேரத்தில் சென்று வரலாம். தென்காசி ஒரு அற்புதமான கிராமாந்திர நகரம். ப்ளாக் சென்சார்? பயமுறுத்தாதீங்க.... ;-))

RVS said...

@அமைதி அப்பா
நன்றி அ.அப்பா! பார்த்தேன். நல்ல பகிர்வு. ;-))

RVS said...

@சமுத்ரா

Thank you! ;-)

RVS said...

@Madhavan Srinivasagopalan

Thanks Madhavaa! ;-))

RVS said...

@சுந்தர்ஜி
திருத்திவிடுகிறேன்.

கொஞ்சம் அழுத்திச் சொன்னேன் ஜி! மறந்துடுங்க.. ;-))

RVS said...

@Ponchandar
முதல் வருகைக்கு நன்றி. முன்னாடியே தெரிஞ்சிருந்தா சந்திச்சிருக்கலாமோ? கருத்துக்கு நன்றி. மீண்டும் வருக. ;-)

RVS said...

@!* வேடந்தாங்கல் - கருன் *!

Thanks Karun! ;-)

RVS said...

@ரிஷபன்
பாராட்டுக்கு மிக்க நன்றி சார்! திலகம் எல்லாம் ஒன்னும் இல்ல சார்... திருஷ்டிப் போட்டு.. ;-)))

RVS said...

@இளங்கோ

Thanks Elango. ;-))

RVS said...

@சிவகுமாரன்
நன்றி சிவகுமாரன்! ;-))

RVS said...

@பத்மநாபன்
நன்றி பத்துஜி! ;-)

RVS said...

@மோகன்ஜி
வலையுலக வஸ்தாது.. அண்ணா உங்களால மட்டும் தான் இதுபோல யோசிக்க முடியும். ;-)))

Anonymous said...

மிகவும் அழகான புகைப்படங்கள். இந்த இடங்களை பார்க்காத குறையை தீர்த்தமைக்கு நன்றி.

சுவையான எழுத்து நடை.

வணக்கம்.

வித்யா சுப்ரமணியம் (Vidya Subramaniam) said...

பிரிக்க முடியாதது எது?. ஆர்விஎஸ்சும்
நகைச்சுவையும். சூப்பர்.

நான்கு வருடம் முன்பு பொதிகை மலை உச்சிக்கு மலையேறிச் சென்று அகத்தியரை வழிபட்டு வந்ததிலிருந்தே மேற்கு தொடர்ச்சி மலை மீது ஒரு காதல் வந்து விட்டது. உங்கள் பதிவு படித்ததும் ஏக்கம் அதிகரித்து விட்டது.
எனது பொதிகை மலை பயணத்தை பதிவில் கூட எழுதியுள்ளேன். முடிந்தால் படிக்கவும்.

RVS said...

@gardenerat60
முதல் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி. அடிக்கடி வாங்க.. நன்றி. ;-))

RVS said...

@வித்யா சுப்ரமணியம் (Vidya Subramaniam)
வாழ்த்துக்கு தன்யனானேன்! தங்களது பயணக்கட்டுரை படித்துப் பார்க்கிறேன். மலையேறுவதில் விருப்பம் உள்ளவர் நீங்கள் என்று நான் அறிவேன். நன்றி. ;-))

Unknown said...

என்ன சார்?ஸ்ரீவில்லிபுத்தூர் வரை வந்திருக்கீங்க.சொல்லவே இல்லை?

Unknown said...

குற்றால அருவிகளில் குளித்தது போன்ற உணர்வு.புகைப்படங்களும் கட்டுரையும் அருமை

தக்குடு said...

"பொதிகைமலைக்கு குடும்பத்துடன் வந்த மைனரே வருக! வருக!"னு கல்லிடை ஊர் எல்லைல வெச்சுருந்த கட்-அவுட்டை பத்தி சொல்லவே இல்லையே!!..:)))

ஆடிய பிற ஆட்டங்கள்

Related Posts with Thumbnails