Saturday, October 6, 2012

செயக்கெடும்... செய்யாமையானும் கெடும்..

"செய்யவேண்டிய வேலையைச் செய். செய்யக்கூடாத வேலையைச் செய்யாதே. எதைச் செய்யணுமோ அதை செய்யலைன்னா கெட்டுப்போயிடுவே. எதை செய்யக்கூடாதோ அதை செஞ்சென்னா கெட்டுப்போயிடுவே."


மருத ஸ்டேஷன். ஒரே கூட்டங்க. ”டீஈஈ.. காப்ப்ப்பி.. வடே..வடே..” சத்தத்தோட சேர்ந்து ”மாப்ள... மெட்ராசு... சாக்கிரத..”. ”பத்திரமா போய்ட்டுவாம்மா”, “போய் மறக்காம ஃபோன் பண்ணுங்க”, “சேகரு அவ நிச்சியம் வருவாடா”, “புள்ளைங்கள உள்ள போவச்சொல்லு” என்று பொட்டி பொட்டியாக ஜனங்களின் வாய் ஓயாத விசாரிப்புகள். பாண்டியன் இன்னும் கொஞ்ச நேரத்தில கிளம்பப்போறான். பிஸ்லெரி பாட்டில் வாங்கிட்டு ஒருத்தர் ஓடறாரு. இதோ கார்டு பச்சை காமிச்சுட்டாரு. கொஞ்சகொஞ்சமா வண்டி நகர ஆரம்பிச்சுடுச்சு.

கடைசியா கோர்த்துவிட்டது அன்ரிஸர்வ்ட் கம்பார்ட்மெண்ட். ரொம்பி வழியுது. ஆம்பளை பொம்பளை வித்தியாசமில்லாம நெருக்கியடிச்சுக்கிட்டு சமதளமா தெரியற எல்லா இடத்திலையும் தன்னோட ’பேக்’கை நகர்த்தி உட்கார்ந்திருக்காங்க. பக்கத்துல யாராவது வஞ்சனையில்லாம வளர்ந்திருந்தா அவங்க தொடையைக் கூட சீட்டா நினைச்சுக்கிட்டு உட்கார்ந்த ஆளுங்களும் உண்டு. இவ்வளவு அமளிதுமளியிலையும் ரெண்டு பேர் திருப்தியா இருந்தாங்க. ஏன்னா அவங்க ரெண்டு பேருக்கும் ஜன்னலோரச் சீட்டுக் கிடைச்சிருந்தது. பொட்டிக்குள்ள பார்த்தா யாராவது வயசானவங்க முடியாதவங்க நின்னுக்கிட்டிருந்தாங்கன்னா அவங்களுக்கு உட்கார சீட் கொடுக்கும்படியாயிடும்னு கழுத்தை உள்பக்கமா திருப்பாம வெளியில பார்த்துகிட்டே வந்தாங்க.

ஒரு பக்கமா பார்த்து கழுத்து வலி கண்டு போய் ரெண்டு பேரும் நேருக்கு நேர் பார்த்துக்கிட்டாங்க. முதல்ல பல்லு தெரியாம சிரிச்சுக்கிட்டாங்க. அப்புறம் கொஞ்சம் கொஞ்சமா ஊரு பேருன்னு விசாரிச்சுக்கிட்டாங்க. ”அப்படியா! நம்ம பய ஒருத்தன் அங்கத்தேன் இருக்கான்”ன்னு ஒருத்தரும் “அட! இது தெரியாம போயிட்டுதுங்களே. முந்தாநேத்தி நா அங்கிட்டுதான் வந்துருந்தேன். நம்மூர்ல ஒரு பயலுக்கு அங்கதான் பொண்ணு எடுத்தோம்..”ன்னு எதிர்ல இருந்த ஆளும் ரொம்ப அன்னியோன்னியமாயிட்டாங்க. கொஞ்ச நேரத்திலயே ரயில் சிநேகிதம் பூத்துக் காயாகி பழமாகிட்டுது.

“இப்ப எங்க போறீங்க?”

“விளுப்புரம்”

“ம்.. நா மெட்ராஸ் போறேன்...”

“ஓ அப்டியா.. சந்தோசம்.... எனக்கு ரயில்ல வர்றதாயிருந்தா ஒரு சின்ன சிக்கல்”

“என்ன?’

“இல்ல.. ரயில் ஸ்டேசன விட்டு நவுந்த கொஞ்ச நேரத்தில எனக்குத் தூக்கம் வந்துடும்.”

“எனக்கு வேற விதமான சிக்கல்”

“என்ன?”

“கொஞ்சம் கூட தூக்கமே வராது. கொட்டக் கொட்ட முழிச்சுக்கிட்டிருப்பேன்”

“ஓ. எனக்குதான் பயமாயிருக்கு. இறங்காம தூங்கிடுவேனோன்னு..”

“நீங்க ஒன்னும் கவலைப் படாதீங்க.. நா எளுப்பி விடறேன்.. நல்லா தூங்குங்க..”

“இல்ல.. போற வேலை ரொம்ப முக்கியம். நிச்சயம் விளுப்புரத்தில இறங்கிரணும்”

“அட.. நான் சொல்றேன்ல.. நிம்மதியா தூங்குங்க.. நா எளுப்பி விடறேன்..”

“நிச்சியம் எளுப்பி விடுவீங்கல்ல. ரொம்ப முக்கியமான வேலை... அதான்...”

“என்னங்க நீங்க. நம்ப மாட்டேன்றீங்க.. நிச்சயம் எளுப்பி விடறேன்.. நீங்க எளும்பலைன்னு வச்சுக்குங்க.. அப்படியே உங்களை தரதரன்னு புடிச்சு இளுத்து ப்ளாட்பாரத்தில இறக்கிட்டுப் போயிடறேன். போதுமா?”

“ரொம்ப நல்லதுங்க..நன்றிங்க.. மறக்காம விளுப்புரத்தில இறக்கிவிட்ருங்க.. தயவுசெஞ்சு... சரிங்களா”

“கவலைப்படாம நல்லாத் தூங்குங்க.. நிச்சியமா இறக்கிவிடறேன்..”

****************

எக்மோர் ஸ்டேஷன். மருத மல்லி வாசனை மாறி கூவம் வாசனை. அலுங்கி குலுங்கி அன்ரிஸர்வர்ட்ல வந்த எல்லாரும் அலுப்போட இறங்கறாங்க. விழுப்புரத்தில இறங்கவேண்டியவனும் இறங்கறான் மெட்ராஸ்ல இறங்கவேண்டியவனும் இறங்கினான். பழி சண்டை. விழுப்புரத்தில இறங்கவேண்டியவன் இறக்கிவிடறேன்னு சொன்னவனைப் புடிபுடின்னு புடிச்சான்.

“நா உங்கிட்ட கேட்டேனா? விளுப்புரத்தில இறக்கிவுடுன்னு. கேட்டேனாய்யா? நீயாத்தானே சொன்னே.. ஏன்யா.. நீயாத்தானே சொன்னே.. ஏன்யா இப்படி பண்ணின.. நானா இறங்கிறதா இருந்தா விளுப்புரத்தில இறங்கலைன்னாகூட முன்னாடியே விருத்தாசலத்துல இறங்கி விளுப்புரம் போயிருப்பேன்..இல்லைனா அட்லீஸ்ட் செங்கல்பட்டுல வந்து இறங்கியிப்பேன்.. இந்நேரம் விளுப்புரத்தில இருப்பேன்.. இப்படிக் கெடுத்துப்புட்டியேயா...நீ நல்லாயிருப்பியா..” ரயில் சிநேகம் நாறிப்போயிருச்சு.

விழுப்புரத்தில இறக்கிவிடறேன்னு சொன்னாம் பாருங்க ஒரு பய அவன் வாயே தொறக்கலை. கம்முன்னு இருந்தான்.

அந்த விழுப்புரம் பார்ட்டி கன்னாபின்னான்னு திட்டிட்டு போயிட்டான். அப்புறமும் இறக்கிவிடறேன்னு சொன்னவன் ஆழ்ந்த சோகத்தில இருந்தான். அவன் பக்கத்தில இருந்தவன் கேட்டான் “ஏன்யா இன்னும் சோகமா இருக்கே. அவந்தான் திட்டிட்டு போயிட்டானே. போய் ஆக வேண்டிய வேலை எதாவது இருந்தா பாருயா”ன்னான். அதுக்கு அவன் சொன்னான். “இல்ல.. இவன்னு நினைச்சு விளுப்புரத்தில ஒருத்தனை தரதரன்னு இளுத்து ப்ளாட்பாரத்தில போட்ருக்கேன். அவன் என்னவெல்லாம் திட்டுவான்னு நினைச்சு வருத்தப்படறேன்”னானாம்.

இப்ப திரும்ப ஒருதடவ மொத பாராவைப் படிச்சுப் பாருங்க.. விளங்கும்...

#இந்தக் கதையை இலக்கியச் சுடர் த. இராமலிங்கம் ”செய்தக்க அல்ல செயக்கெடும் செய்தக்க செய்யாமை யானும் கெடும்” என்கிற குறளுக்கு எடுத்துக்காட்டாக சொன்னார். இப்படி விஸ்தாரமாக ”இளுத்து”ச் சொன்னது என் கை வண்ணம்.

பட உதவி: chanderifilm.com

17 comments:

சுந்தர்ஜி ப்ரகாஷ் said...

வே!கத பளசுன்னாலும் ஒம்ம பாச புதுசுல்லா. சவட்டி எடுத்திட்டீரே மக்கா!கண்ணுக்குள்ளாற நிக்கி ஒரு ரயில் பொட்டி!

இப்புடியே எளுதும் ஒம்ம பாட்டுக்கு!

ஸ்ரீராம். said...

ஹா...ஹா... சரிதான்!

திண்டுக்கல் தனபாலன் said...

ஹா... ஹா... நல்ல உதாரணம்...

Yaathoramani.blogspot.com said...

குறளுக்கு இப்படி விளக்கம்சொன்னால்தானே
குறளிலும் ஏதோ கருத்து இருக்கிறது போலத் தெரிகிறது
சொல்லிப் போனது சுவையாய் இருந்தது
இளுவையாகத் தெரியவில்லை
தொடர வாழ்த்துக்கள்

Yaathoramani.blogspot.com said...

tha.ma 4

RVS said...

@ சுந்தர்ஜி
நொம்ப டேங்க்ஸு பாத்துகிடுங்க.. :-)

RVS said...

@ஸ்ரீராம்.
ஹா..ஹா.. :-)

RVS said...

@திண்டுக்கல் தனபாலன்
நன்றி தனபாலன். :-)

RVS said...

@ Ramani
நன்றி சார்! :-)

Vetri said...

அண்ணா சூப்பர்! இப்படியே எல்லா குரலுக்கும் எழுதலாமே! காமத்துப்பால் தவிர !!!!!!!!!

இராஜராஜேஸ்வரி said...

விஸ்தாரமாக ”இளுத்து”ச் சொன்ன கை வண்ணம் அருமை! பாராட்டுக்கள்...

Unknown said...

நல்ல ஒரு சிரிப்பு கதை

சாந்தி மாரியப்பன் said...

ஹா..ஹா.. ஜூப்பர் :-))

RVS said...

@Vetri
ட்ரை பண்ணலாம் வெற்றி. நன்றி. :-)

RVS said...

@இராஜராஜேஸ்வரி
நன்றிங்க மேடம். :-)

RVS said...

@Gnanam Sekar
நன்றி. :-)

RVS said...

@அமைதிச்சாரல்
இப்படி ஜூப்பரு கேட்டு எவ்ளோ நாளாச்சு. :-)

ஆடிய பிற ஆட்டங்கள்

Related Posts with Thumbnails